செவ்வாய், 24 மார்ச், 2020

புதியதல்ல...புதுமையுமல்ல...

கல்வி நல்ல சிந்தனைக்கு அத்திவாரம் போட வல்லது. அதற்காகஇ கல்வியை மட்டுமே வைத்துக்கொண்டு நன்றாகச் சிந்தித்துவிடலாம் என்று கொண்டுவிடக் கூடாது.
 கற்றவர்களாய்க் காண்பவர்களும்

இயங்குமெதற்கும் சக்தி வேண்டும். அந்த சக்தியானது சரியாகப் பயன்படுத்தப் படாதபோது
பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது அல்லது பலனே கிடைக்காமல் போய்விடுகிறது.

எண்ணெய் இன்றி விளக்கெரியாது. அதற்காக எண்ணெய்யை மட்டுமே வைத்துக் கொண்டு விளக்கில்லாமல் ஒளியேற்றல் சாத்தியமா?  அதுபோலத்தான் கல்வியும்.

கல்வி நல்ல சிந்தனைக்கு அத்திவாரம் போட வல்லது. அதற்காக கல்வியை மட்டுமே வைத்துக்கொண்டு நன்றாகச் சிந்தித்துவிடலாம் என்று கொண்டுவிடக் கூடாது.

சிந்தனை செய்வதற்கும் அனுபவம் தேவை. அதற்கர்த்தம் எவருமே சிந்திப்பதற்குத் தகுதி அற்றவர்களென்பதல்ல. சரியாகச் சிந்திப்பதற்கே அனுபவம் உதவுகிறது.

நம்மில் பலரும் நம்மை எவரும் புகழ்ந்துவிட்டால் நம்பிவிடுகிறோம். உண்மையில் அவர்கள் நம்மைப் புகழ்கிறார்களென்றால் அது எதற்காக அது சரிதானா என்பதையெல்லாம் ஆராயாமல்
ஏற்றுக் கொண்டால் நம்மை நாம் ஏமாற்றிக் கொள்கிறோம் என்பதே பொருள்.

சிலரிடம் சில வித்தியாசமான குணங்களுண்டு.
சிரித்துக் கொண்டே கதைப்பார்கள். நட்புறவை வலியுறுத்தியே கதை இருக்கும். அதே சமயம்....
மற்றவர்களுடன் நமக்கு இருக்கக் கூடிய நட்பு தொடர்பு நல்லபிப்பிராயம் கெடத்தக்கதாகப் பக்குவமாக அவர்களைப் பற்றி நம் மனதில் தப்பபிப்பிராயங்களை விதைத்துக் கொண்டிருப்பார்கள்.

நாம் அவர்களை அடையாளம் கண்டுவிடக் கூடாது என்பதற்காக நம்மை அடிக்கடி புகழ்ந்து கொண்டிருப்பார்கள். அவதானமின்றி அவர்கள் கதைகளை நம்பி நாம் மற்றவர்களைப் பற்றிய
நமது கருத்தை மாற்றிக் கொண்டால் அவர்கள் வென்று விடுவார்கள்.

ஆகவே சொல்வார் கதைகளின் உள்நோக்கை உணர முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும். „எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு!“ அல்லவா?

                                                    …............................................

மனிதத்துவத்தை மதிக்காதவன் மனிதர்களுக்குக் காட்டக்கூடடிய பாதை இருளாகவே இருக்கும்.
பக்தனுக்கும் பகல்வேடக்காரனுக்கும் வித்தியாசம் மனிதத்துவத்துக்கு அவன் கொடுக்கும் மதிப்பை வைத்துக் கண்டுபிடிக்கக் கூடியதாயிருக்கும்.

                                                          …......................................

விமரிசிக்கும் கலையைச் சரியாகச் செய்வதற்கு -  மற்றவர் கருத்தைப் பிரதிபலிக்காமல் சொந்தக் கருத்தைத் தக்க நியாயத்துடன் எடுத்துச் சொல்லி விமர்சிக்கப்படுபவரின் சிந்தையைத் தொடத் தெரிய வேண்டும்.

சரியான விமரிசனங்கள் சரியான சிந்தனையின்றி செயய்யப்பட முடியாது. தேர்ந்த வைத்தியர்
அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தும் அதே கத்தியை  அனுபவமற்ற சாதாரண மனிதனால் அதே பணிக்குப் பயன்படுத்துவது எப்படி அசாத்தியமோ...அதுபோலவே இதுவும்.

                      …...................................
கண்ணைக் கல்விக்கு ஒப்பிட்டதற்குக் காரணம் பார்வை தோற்றப்படுவதில் மட்டுமல்ல தோற்றப் படாதவற்றிலும் ஆழ்ந்திருக்க வேண்டுமென்பதை வலியுறுத்தத்தான்.

தொட்டிக்குள் நீந்தும் மீனுக்கு அதுவே சமுத்திரம்.அதன் அனுபவத்தையிட்டு அது பெருமைப்படலாம். ஆனால் அதில் அனுதாபத்தின் தேவை பிரதிபலிக்கின்றதே!

கொடுக்கும் வரையில் நண்பனாயிருப்பவன்  கேட்டதும் பகைக்கிறானே! ஏன்?
வேண்டியவனைப் புகழும் வரையில் சிரிக்கிறான்.பிழையைச் சுட்டினால் பகைக்கிறானே! ஏன்?

ஒரே பதில்:  பொய் முகங்கள். சரியா பிழையா? உங்கள் அனுபவத்தையே சொன்னேன்.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

புதியதல்ல...புதுமையுமல்ல...

சிந்தனையும் நமது பங்களிப்பும்

நமது மனங்களுக்குள் சிக்கியுள்ள சிந்தனைக்குரிய உண்மைகளை உணர்ந்து கொள்ள வேண்டும்.

நமது சிந்தனையைச் சோர்வடைய விட்டுவிடக்கூடாது. உடல் சோர்ந்தால் எழுந்துவிடலாம். உளம் சோர்ந்தால்?

படித்தவர்களெல்லாம் சிந்திக்கத் தக்கவர்களென்றில்லை.மாபெரும் மேதைகளில் பலர் பள்ளிக்கூட  நிழலைக்கூட மிதிக்காதவர்களாக இருந்திருக்கிறார்கள்.

ஆகவே...நீங்கள் ஒவ்வொருவருமே மேதைகள்தாம்  அறிஞர்கள்தாம்.
ஆனால் தீட்டப்படாத வைரங்களாகப் பொலிவற்றிருப்பதால் அதாவது உங்களை நீங்களே உணர்ந்துஇ தெளிவு பெறாதிருப்பதால்தான் சாதாரணமானவர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.அந்த நிலை மாற வேண்டும் நீங்களதை மாற்ற வேண்டும்.


                  …............................................

எப்படியும் வாழலாம் என்பவர்கள் காக்கைக் கொப்பானவர்கள்.
இப்படியும் வாழலாம் என்பவர்கள் பாம்பைப் போன்றவர்கள்.
இப்படித்தான் வாழ வேண்டும் என்பவர்களே மனிதர்கள். வாழ்க்கையின் இலக்கணமே இவர்களால்தான் எழுதப்படுகிறது.

மங்கிய மனங்களைத் துலக்கிடுங்கள். அதைச் செய்ய விடாமல் தங்கள் சுயநலத்திற்காகப் பிழைவழி நடத்தும் சமுதாய சந்தர்ப்பவாத சர்ப்பங்களை அடையாளங்கண்டு தப்பி நின்று தனித்துவம் காத்து சிறந்து உயர்ந்து வாழுங்கள்.

                 ….........................................

சிந்தித்தல் என்பது ஓர் அரிய கலை. அதனைச் சரியாகச் செய்யத் தெரிந்து கொள்வதோ அதைவிடப் பெரிய கலை.

அதனை நாம் சரியாகப் பழகிக் கொண்டால்தான் நம் கண்முன்னே நடமாடும் போலித்தனத்தின் பிரதிபலிப்புக்களை நம்மால் சரியாக அடையாளம் கண்டு கொள்ள உதவியாக இருக்கும்.

                  …......................................

குயில் வேடம் போடும் காகங்கள் -  மயில் நடை போடும் வாத்துக்கள்- சீவகாருண்யம் பற்றிப் போதிக்கும் சிறுத்தைகள் - பொதுநலப் பூச்சுடன் நடமாடி வரும் சுயநலம்- பாசத்தைப் பணத்திற்காகவும் வீண் சொகுசிற்காகவும் விற்றுவைக்கும் பண்பின்மை இவை மனித உருவில் நம்மைச் சுற்றி வளைத்து நமது வாழ்க்கையின் நிம்மதியையும் அமைதியையும் கலைத்து- சமுதாயத்தையே ஒருவித கொந்தளிப்பில் நிரந்தரமாக வைத்திருக்கின்றன.

அவற்றை நாம் நமது சுயசிந்தனையால் சரியாக அடையாளம் கண்டுவிட்டால் மட்டுமே நமது தகுதியை நாம் உணர்ந்து- சமுதாயத்திற்கு நமது பங்களிப்பை ஏற்ற விதத்தில் நல்க முடியும். 
                  …..........................................
                  
தன்னைப் படித்தவனாக மற்றவர்கள் முன் காட்டிக் கொள்வதற்காகப் பட்டங்களைச் சுமந்து திரிபவனும் சுமக்க அலைபவனும் பயன்தரத்தக்க மரங்களல்லர்.சமுதாயம் காய்கையிலே நிழல் தரப் பயன்படாமல் சமுதாயக் குடைக்கு உள்ளே சுகம் தேடும் சந்தர்ப்பவாதிகள் அவர்கள்.     


சனி, 1 பிப்ரவரி, 2020

புதியதல்ல...புதுமையுமல்ல...,

சூழ்நிலையின் கைதிகள்....

நம்மைச் சுற்றிலும் ஆட்கொண்டுள்ள சூழ்நிலையானது, நம் மன வளர்ச்சியிலும் அறிவு வளர்ச்சியிலும் பெருமளவு பங்கெடுத்து விடுகின்றது.

நமது சிந்தனை ஆழமாக இருக்காவிடில் சூழ்நிலையானது நமது தனித்துவத்தின் உரிமையைப் பறித்துவிடுவதைத் தவிர்க்கவே முடியாது.

சரியாகச் சிந்திக்கும் ஆற்றலில்லாத மனிதன், சூழ்நிலையின் கைதியாகிவிடுகிறான்.

அவனது பக்குவமற்ற மனநிலையானது அவனை „சூழ்நிலைக்கேற்ப ஆடாவிட்டால் வாழ்வது இயலாது“ என்ற பிழையான முடிவிற்கு வர வைத்து விடுகின்றது.

ஆதனால் அவன் சூழ்நிலையை அனுசரித்துப் போவதாக நினைத்துக் கொண்டு, பிழையான வழிமுறைகளைப் பின்பற்றுவதைச் சரி என்று எண்ணி விடுகிறான்.

இந்தப் பக்குவமற்ற நிலைப்பாடு உண்மையில் அனுதாபத்திற்குரியது.

நல்ல மக்கள் பலரும் வறுமையின் கொடுமை தாளாமல் அல்லது தமது எதிர்காலம் தகர்ந்து போய்விடும் என்ற நிலையில் பிழை செய்தாவது தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயல்வதை நாம் அவதானிக்க வேண்டும்.

சமுதாயம் அவர்களைக் காப்பாற்ற வேண்டும். ஓவ்வொரு தனிமனிதனும் தனது அயலானின் வீழ்ச்சியைத் தடுக்க வைராக்கியம் கொண்டால் ஒரு சமுதாயத்தின் வீழ்ச்சியை நிச்சயம் தடுத்துவிட முடியும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

                   …..............................

தன்னம்பிக்கை இல்லாதவன் தன்னிலும் மற்றவன் உயர்கையில் தன்னால் அது சாத்தியம் இல்லை என்ற உள்மன உந்துதல் காரணமாக ஒரு வித எரிச்சலுணர்வைப் பெறுகிறான்.

அதன் அரிப்பானது கூடக்கூட அது அழுக்காறாக ஆழமாக வேர்விடத் தொடங்குகிறது.

அதை விளங்கிக் கொள்ளாமல் அவனது சுயசிந்தனைத் திறனின்மை அவனை அதில் ஊற விட்டுவிடுகிறது. அது, அவனது பலவீனத்தை வளர வைக்கிறது.

இதன் பிரதிபலிப்பாக பகைமை உணர்வு உண்டாகிறது. காரணமற்ற கோபத்துடனே அவன் தனது அயலவனை அவதானிக்கத் துவங்குகிறான்.

அவன் புதுச் சட்டை போட்டால் இவனுக்கு முதுகு எரியும். ஆவனுக்கு ஏதாவது நடக்கக் கூடாதா பிரச்சினைகள் வரக்கூடாதா எனக் காரணமின்றி இவன் ஏங்கத் தொடங்கிவிடுகிறான். இந்த பலவீனமானது நம்மில் இருந்தால் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் அதை எதிhகொண்டு வெல்ல வேண்டும். அதற்கு...

நாம் செய்யும் எதற்கும் பலனை எதிர்பாராத மனப்பக்குவம் நமக்கு வர வேண்டும். உதவி என்பது வேறு, கொடுக்கல் வாங்கல் என்பது வேறு. சரியாகப் புரிந்து கொள்க!









வியாழன், 23 ஜனவரி, 2020

புதியதல்ல.. புதுமையுமல்ல..




நீங்கள் …. பவரா?



நீங்கள் நீதியை நேசிப்பவரா?
அப்படியானால்...
பிறரை திருப்திப்படுத்துவதற்காக அநீதியை அங்கீகரிக்க மாட்டீர்கள்.

நீங்கள் நியாயத்தை மதிப்பவரா?

அப்படியானால்...

சந்தர்ப்பவாதிகளின் சலசலப்புகளினால் மனமுடைந்து போகமாட்டீர்கள்.
அவர்களால் உங்கள்மீது அநியாயமான பழிகள் சுமத்தப்பட்டாலும் பயப்படமாட்டீர்கள்.

நீங்கள் மனச்சாட்சியை மதிப்பவரா?

அப்படியானால்...

குற்றவாளிகளை மன்னித்து விடுவீர்கள். ஆனால் குற்றங்களை ஒருபோதும் அங்கீகரித்துவிட மாட்டீர்கள்.

நீங்கள் உண்மை நடபைத் தேடுபவரா?

அப்படியானால்...

உங்களைத் திருத்துவதை விரும்புவீர்கள்.
அவர்களின் பிழைகளைச் சுட்டிக் காட்டி அவர்கள் பிழை செய்து விடாமல் தடுக்க முயல்வீர்கள்
பணத்திற்காக- பதவிககாக – வசதிக்காக நட்பைக் கைவிட மாட்டீர்கள்

நீங்கள் புகழை விரும்புபவரா?

அப்படியானால்...

உங்கள் தகுதிக்கேற்ற புகழை மறுக்காதீர்கள். ஆனால் உங்களைச் சாராத – நீங்கள் பங்களிக்காத காரியங்களால் புகழ் வந்தால் அதற்குரியவரை அப்புகழ் சேர வழி செய்யுங்கள்                 

நீங்கள் நடுநிலை நிற்க விழைபவரா?

அப்படியானால்...

எதற்கும் தீர்ப்பெடுக்குமுன் அடிப்படையை ஆராயுங்கள். சம்பவங்களல்ல-
சம்பவங்களின் நோக்கங்களே பல பிரச்சினைகட்கும் அடிப்படை. காட்சியைக் காட்டி, சாட்சியம் சேர்ப்போர் பலரும் பொய்யை மெய்யாய்க் காட்டி, குற்றங்களைச் சரிபோல் மாற்றி, சமுதாயத்தில் தங்களைத் தப்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மனித உருவங்களுள்ளுள்ள வஞ்சகத்தை விளங்காமல் நியாயத்தைக் காப்பாற்ற முடியாது.




புதியதல்ல..புதுமையுமல்ல..

    பொறுக்கிப் பார்த்தால்.......

கருத்துக்கள் சிந்தனைக் கிணற்றினின்று – சொந்த
விருப்பத்தை மீறியும் உண்மை சொல்லும்.

விருப்பில் லையென்ற காரணத்தால் - நல்ல
கருத்தினை மறுத்திடல் நல்லதல்ல.

தருணத்திற் கேற்பவே உருவைமாற்றும் - பொய்சொல்
திருடனே உண்மையை எதிர்த்து நிற்பான்.

பிறப்பதும் இறப்பதும் ஒருமுறைதான் - அதனைச்
சிறப்பாக்கும் நேர்மையும் ஒழுக்கமும்தான்.

விரும்பிடும் அனைத்தையும் அனுபவித்தார் – என்றும்
திருப்தியாய் வாழ்ந்தவர் என்றுமுண்டா?

ஆழுக்காறு இதயத்தில் ஒட்டிக்கொண்டால் - என்றும்
பழுக்காத இலவதாய் இதயம் மாறும்.

எழுத்தாளன் என்றுநீ ஆகவேண்டின் - உண்மை
எழுத்ததன் ஆளுமை உணர வேண்டும்.

பணம் என்ற ஒன்றையே பெரிது என்பார் – அந்தப்
பணத்தையே பசித்திடில் புசிப்பராமோ?

கணப்பொழுதே காணுமுன்றன் வாழ்க்கை ஓய!  - அந்தக்
கணப்பொழுதுள் ஒருநன்மைசெய்து பாரேன்!

துன்பத்தைக் கண்டுநீ துவண்டுவிட்டால் - என்றும்
இன்பத்தில் நிமிர்ந்துநீ நிற்க மாட்டாய்.

கண்ணியம் தெரியாத மக்களுக்கு – எந்தப்
புண்ணியம் சொல்லினும் புரிந்திடாது.

நல்லதை அள்ளிநாம் கொட்டினாலும் - என்றும்
நல்லவர்க் கில்லையேல் தீமை கிட்டும்

கறி ஆக்க உதவிற்றே என்பதற்காய் - நீயும்
எரிகின்ற பிழம்பினை விழுங்குவாயோ?

எல்லாரும் நல்லவர் என்று கொண்டால் - கொடிய
வல்லூறும் கிளியென்று கூறிக் கொள்ளும்

„கல்லிலே கடவுளைக் காணல் நன்று“  - அர்த்தம்
கல்லையே கடவுளாய்க் காணல் அன்று!







புதியதல்ல...புதுமையுமல்ல...

உங்களுடன் சில நொடிகள்...


பேச்சில் தெளிவும் கருத்தில் ஆழமும் உரையில் இனிமையுமாக இருவர்களுக்கிடையில் உரையாடல் நடைபெற்று அது முடிவுற்ற பின் அடிக்கடி அதுபற்றி நினைவு கொள்கையில்; மனம் நிறைதல் ஒரு பேறு என நினைத்தால் அதில் தவறில்லை என்பது எனது எளிய கருத்து.

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு மலேசியாவிலிருந்து செருமனிக்கு வந்திருந்த பேராசிரியர் இர.ந.வீpரப்பன் ஐயா அவர்களை நான் சந்தித்துப்
பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவர் சில நாட்கள் எனதில்லத்தில் தங்கியிருந்தபோது எங்களுக்கிடையில் நடந்த கலந்துரையாடலகளால் அவரல்ல, நான்தான் அதிகம் பலனடைந்தேன் எனலாம்.

அந்த அறிவுச் சமுத்திரத்தின் பேச்சுக்களில் வழிந்த மனிதாபிமான உணர்வுகள், தமிழனத்தின் மேல் இருந்த ஆழந்த அக்கறையின் வெளிப்பாடுகள், உலக சுற்றுலாக்களால் அவரடைந்த அனுபவங்களின் பாடங்கள் இப்படிப் பலவிதங்களிலும் அவரை மிக மென்மையான ஆனால் வலுமிக்க தங்கக் கம்பியாக நானுணர்ந்து வியந்தேன்.

பேச்சுக்கிடையில் அவர் அடிக்கடி ஒன்றைச் சொன்னார். „எழிலன் நீங்கள் பேசுவதை எல்லாம் எழுத்தில் வடியுங்கள்“ என்றார் அவர். நான் ஏற்கனவே பல ஏடுகளில் எழுதிவருவதையும் பேச்சுக்களில் பங்கேற்பதையும் அவர் அறிந்திருந்தாலும் பேச்சுக்களின் போது நம்மை அறியாமலே நாமுதிர்க்கக் கூடிய நல்ல கருத்துக்களையும் எண்ணஙகளையும் நூல் வடிவில் பதிப்பதையே அவர் அப்படி அறிவுறுத்தினார்.

நான் சலனமின்றி தயங்குவதை உணர்ந்த அவர் என்னை வற்புறுத்தினார்.
அதன் வெளிப்பாடாக நானெழுதிய முதல் நூல்தான் இந்தப் புதியதல்ல...புதுமையுமல்ல..

இது வெளிவந்த ஆண்டு சென்னை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா என்ற
வங்கி நடத்திய சிறந்த நூல்களுக்கான போட்டியில் இதனை, இந்நூலைப் பதிப்பித்து எனக்காக வெளியிட்ட இளம்பிறை பதிப்பக உரிமையாளரும் முன்னாள் இளம்பிறை பத்திரிகையாசிரியருமான எழுத்தாளர் எனது பதிப்புமிகு இளம்பிறை ரகுமான் அவர்களே அனுப்பி பங்கெடுக்க வைத்திருந்தார்.

அங்கே இதற்கு இரண்டாம் பரிசுக்கான தெரிவு கிடைத்தது. நானும் நேரில் பங்கெடுத்தேன். இந்த நூல் பல நல்ல இதயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தினதால் மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் இதை அறிமுகஞ் செய்து வரவேற்றது தமிழ் கூரு நல்லுலகம் என அறிந்து ஆறுதலாக இருந்தது.

இப்போது என் கைவசம் ஒரேயொரு பிரதிதானிருக்கின்றது. ஆகவே உடல் மிகத் தளருமுன் எனது பதிவேடான „எழில்தமிழ்“ வளவில் இதைப் பதிந்திட விரும்புகிறேன்.
என்னை இணையத்தளத்தில் பலரும் அறிய உதவிசெய்த நான் நேருக்கு நேர் ஒரே முறைதான் சந்தித்தவரும் அமரராகி விட்டவருமாகிய எனது இதயம் கொண்ட அமரர் தம்பி இராஜன் முருகவேல் (சோழியான்) அவர்களுக்கும் இதனை இத்தடவை நான் அர்ப்பணிக்கிறேன். அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் கூட இயலாதபடிக்கு நான் உடல்நலம் பாதிக்கப் பட்டிருந்த வேளையில் அவர் மறைந்தமை எனது துரதிட்டம்தான்.

நாட்கணக்கில் மணிக்கணக்கில் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்த எங்களால் ஒருமுறையாவது நேரில் சந்திக்க இயலாதபடிக்கு இயங்கை தடுத்துவிட்ட கொடுமை தரும் மனவலி மிகவும் வேதனையைத் தருகின்றது.

ஆக்கங்களை மட்டுமே இத்துடன் இதில் பதிகிறேன்.

எழிலன்




       சமர்ப்பணம்


எனது இந்த நூலை......

சத்தியத்தை நேசித்தவர்க்கும் நேசிப்பவர்க்கும்
நீதியை மதித்தவர்க்கும் மதிப்பவர்க்கும்
உண்மைக்காய் உழைத்தவர்க்கும் உழைப்பவர்க்கும்
அன்பையே தெய்வமாய் ஏற்றவர்க்கும் ஏற்பவர்க்கும்
மற்றவர்க்காய் வாழ்ந்தவர்க்கும் வாழ்பவர்க்கும்
சுதந்திரத்தை விழைந்தவர்க்கும் விழைபவர்க்கும்
மனிதத்துவத்தை மதித்தவர்க்கும் மதிப்பவர்க்கும்
சிந்தித்துச் செயலாற்ற முனைந்தவர்க்கும் முனைபவர்க்கும்
நடுநிலை பிறழாது வாழ்ந்தவர்க்கும் வாழ்பவர்க்கும்
தமிழன்னைக்குண்மையாய்ப் பணிபுரிந்தார் புரிவார்க்கும்
வாழவைக்க வழிதேடும் உத்தமர்கள் அனைவர்க்கும்
எனதுள்ளத்துள் தமிழுணர்வை ஊட்டிட்ட
என் தாய்க்கும் காணிக்கையாகச் சமர்ப்பிக்கும் அதே வேளையில்
அமரர் ஐயா இர.ந.வீரப்பனார் அவர்களையும்
என்னினிய நண்பர்  அமரர் இராஜன் முருகவேல் (சோழியான்)
இணைத்துக் கொள்கிறேன்.

எழிலன்


புதன், 8 ஜனவரி, 2020

இயற்கை எச்சரிக்கும்

தடங்களில் திரும்பினால்...5



„ஆவ் ஆவ் அம்மா இன்று பளபளவென்று மின்னுகிறார்கள்“

புது வருடப் பிறப்புக்கான நடுநிசி வழிபாட்டிற்காகப் புறப்பட்டுக் கொண்டிருந்த எங்கள் குடும்பத்தில் நிலவிய கலகலப்பிற்கு மத்தியில் அம்மா அன்று உடுத்தியிருந்த நாவல் நிறப் பட்டுச் சேலையும் அதனில்  படர்ந்திருந்த வெள்ளி அலங்காரப் பதிப்பின் அமைப்பும் சில அணிகலன்களேயாகினும் அவற்றின் மனதைக் கவர்ந்த மெருகும் அதற்கு மேலும் அழகூட்டிய அம்மாவின் புன்னகை தவழ்ந்த முகத்தின் குளுமையும் அப்பப்பா!  நான் அம்மாவின் அழகில்  மயங்கியே போயிருந்தேன்.

எல்லாருமே புத்தாடையில் இருந்தாலும் அம்மா அன்று தனித்துவமாக அழகுடன் இருந்ததாக எனக்குப் பட்டது. அது ஏன்? தெரியவில்லை.

நடுநிசிக்குச் சற்று முன்னதாகவே துவங்கிவிட்ட திருப்பலி ஆராதனையின் நடுவே சரியாகப் பன்னிரண்டு மணிக்குப் புதிய ஆண்டு பிறந்துவிட்டதைத் திருத்தந்தையான குருவானவர் nதிவித்தபோது ஆலயத்துள் பெரும்பான்மையோர் மிகுந்த பக்தியுடன் புத்தாண்டில் தத்தமது குடும்ப மற்றும் உறவுகள் பற்றியும் அவர்களின் நலன் பற்றியும் இறைவனிடம் உருக்கமாக மன்றாடுவதும் அதே சமயம் வெளியே செவி அதிர வெடிகளும் வாண வேடிக்கைகளுமாக நகர் இருளகற்றி ஒளி படர்ந்து வண்ணங்களும் புகையும் மருந்து மணமுமாக கலகலப்பதை கோவில் சன்னல்கள் வழியாக ஒரு பகுதி இரசித்துக் கொண்டும் இருக்க பலி பூசை தொடர்ந்தது.

பூசை முடிய மக்கள் வெளியில் ஒருவருக்கொருவர் வாழ்த்துவதும் கைகுலுக்குவதும் „ஸ்தோத்திரம்“ என்று பெரியவர்களிடம் ஆசி பெறுவதும்  நடந்தபின் குடும்பங்கள் வீடு திரும்பின.

எங்கள் குடும்பம் வீட்டுக்கு வந்ததும் வழமைபோல எல்லாரும் மீண்டும் ஒரு முறை சிறிய குடும்ப செப ஆராதனையில் ஈடுபட்டு விட்டு ஒரு சிறிய உணவருந்தலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கையில் உடை மாற்றச் சென்ற அம்மா ஓர் அதிர்ச்சியுடன் கண்கலங்க வந்து நின்றார்கள்.

எல்லார் முகங்களிலும் அதிhச்சி
„என்னம்மா! என்னது?“

„எனது கால் கொலுசுகளில் ஒன்றைக் காணவில்லை. கோவிலில் கழன்று விழுந்து விட்டது போல் தெரிகிறது“

அம்மாவின் கண்களிலிருந்த ஆழமான கவலை என்னை என்னவோ செய்ய
தம்பியை அழைத்துக் கொண்டு நான் கோவிலுக்கு ஓடினேன்.

கொஞ்சப் பேர் இன்னும் இருந்தபடியால் கோவில் திறந்திருந்தது. எங்கள் குடும்பம் இருந்த இடம் மற்றும் திரும்பிய வழி போதாதென்று முழுக் கோவிலையுமே சுற்றிச்சுழன்று தேடியும் கிடைக்கவில்லை. எனவே வருகிற வழியெல்லாம் தேடித்தேடி அலைந்தோம்.

ஓரு மணி நேரமளவு தேடுதலின் பின் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினோம்.
அம்மாவின் கவலையைப் போக்க எனக்குத் தெரிந்த ஒரு கருத்தைச் சொன்னேன்.

„வெள்ளிக் கொலுசுதானே! பழசைக் கொடுத்துவிட்டு புதிதாக ஒரு சோடி வாங்கி விட்டால் போச்சு. நாளைக்கு அல்லது நாளை மறுநாள் வாங்கி விடலாம். கவலையை விடுங்கள்“

அப்பாவும் அம்மாவுக்கு ஆறுதல் சொல்லி அமைதியாக இருக்கவும் கவலைப்பட எதுவுமில்லை என்றும் அனைவரும் தூங்கலாமென்றும் காலையில் நேரத்துக்கு எழும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ள அனைவரும் துயிலப் போனோம். ஆனால் ஏனோ இலகுவாக அந்த வருட முதல் நாளில் எங்களுக்குத் உறக்கம் வருவதில் பெரும் சிரமமிருந்தது.

எல்லார் மனங்களும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டிருந்தது. நானும் தம்பியும் கொலுசைத் தேடிச் சென்ற வேளை வீட்டில் பலவிதமாகக் கருத்துப் பரிமாற்றம் நடந்திருந்தது போலவும் தெரிந்தது. ஏனோ எல்லார் மனங்களும் மிகவும் புண்பட்டு இருந்தன.

               ….........................................

பொழுது மலர்ந்ததும் பக்கத்துவீட்டு உறவினர்கள் அயலவர்கள் எனப் பலரும் வந்து வந்து வாழ்த்தவும் நாங்களும் கலக்கவும் வீட்டிலிருந்து பிற மத அயலவர்களுக்குப் பலகாரம் சாப்பாடு நாங்கள் எடுத்துப்போக அவர்களில்ல வகைகள் இங்கு வர இப்படி அன்புச் சம்பிரதாயங்களில் மூழ்கி ஊறிய எல்லாரும் முந்திய இரவு அதிhச்சியை கிட்டத்தட்ட மறந்தே போனோம்.

மத்தியானம் சரியாகப் பன்னிரண்டு மணிக்கு எல்லாரும் போட்டி போட்டுக் கொண்டு வெடி கொளுத்துவது நடந்தது. சில வீடுகளில் வெடி இருக்கும் பற்ற வைக்க ஆளிருக்காது. அந்தப் பெரியவர்கள் சார்பாக உதவும் பாவனையில் இளவட்டங்கள் நாங்கள் அவற்றைக் கொளுத்தி அவர்களையும் எங்களையும் திருப்திப்படுத்திக் கொண்டோம். நானும் எனது பங்கைச் செய்த பின் வீட்டுக்குள் நுழைய எல்லாரும் சாப்பிட ஆயத்தமாகி இருந்தார்கள்.

அப்போதுதான்  அம்மாவின் முகத்தில் இன்னும் களை குறைந்திருந்ததைக் கவனித்தேன். புன்முறுவல் இருந்தது ஆனால் புண்பட்ட முறவலாக இருந்தது.

சரிதான்! அம்மாவுக்கு இன்னும் கொலுசின் கவலை அப்படியே இருக்கிறது போலும். சிறிது கழித்து அம்மாவிடம் பேசுவோம்.

நான் முடிவெடுத்துவிட்டு மூன்று மூன்றரை மணியளவில் வெளி சன்னல் இருந்த அறையில் அம்மா தனியாகப் பாதையைப் பார்த்தபடி இருப்பதைக் கண்டுவிட்டு நெருங்கினேன்.

தற்செயலாகக் கவனித்தேன். அம்மாவின் காலிலிருந்த தனிக் கொலுசைக் காணவில்லை.

„அம்மா கொலுசைக் கழற்றி விட்டீர்களா?“
அம்மாவின் கண்கள் வீட்டில் இருந்த சிறிய சுரூப கூடு எனப்படும் சுவரில் தொங்கிய இயேசுவின் சொரூபம் இருக்கும் இடத்தைக் காட்டியதும் நான்
திரும்பிப் பார்த்தேன். அச்சுரூபத்தின் பாதத்தில் கொலுசு மடங்கிக் கிடந்தது. அம்மாவின் கண்களிலிருந்து மளமளவென்று கண்ணீர் வழியவும் நான் பதறி விட்டேன்.

„அம்மா இந்த சின்ன விடயத்துக்கு இப்படிப் பதற வேண்டியதில்லையே! நாளைக்கே புதிது வாங்கினால் எல்லாம் சரியாகிவிடுமே!“

„இல்லைய்யா! எனக்கென்னவோ ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிடும் போல மிகவும் பயமாக இருக்கிறது“

எனக்குக் கோபமே வந்துவிட்டது.
„என்னம்மா இந்த நாகரீகமான காலத்திலும் இப்படி மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கொண்டு..... யாரும் கேட்டால் சிரித்துவிடப் போகிறார்கள்“

அம்மா தனது விழிவழிந்த நீரைத் துடைத்துக் கொண்டவர்  மிகவும் நிதானமாகவும் தெளிவாகவும் என்னிடம் பேசினார்கள்.

„மகன் இயற்கை எதையுமே சொல்லாமல் செய்வதில்லை. அதனை உணர்ந்த நம் முன்னோர்கள் பலதையும் பல விதங்களில் பாமர மக்களுக்ப் புரியும் விதமாகச் சொன்னைதை அரைகுறையாகப் புரிந்து கொள்வது சரியல்ல.
அம்மா எதைச் சொல்கிறார்கள்?
நான் முழிப்பது அவர்களுக்குப் புரிந்தது தெரிந்தது.

„இன்றைய நமது அறிவாளிகளெல்லாருமே தாம் மற்றவர்களிடமிருந்து கற்றவற்றை மாற்றிச் சொல்லிப் புகழ் தேடுபவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் நமது மூதாதையர்கள் தாம் கண்டு அனுபவித்துப் பெற்ற பட்டறிவு உண்மைகளைத்தான் சொல்லித் தந்திருக்கிறார்கள். உனக்கு நான் சொல்வது புரியக் கடினமாயிருக்கிறதல்லவா? கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா!“

பாய்ந்தோடிச் சென்று தண்ணீர்ச் சொம்புடன் திரும்பினேன். மடக்மடக்கென்று அருந்தியவர்கள் சற்று நிதானமாக மாறியது தெரிந்ததும் பெரிய ஆறுதல் எனக்கு.

அம்மாவிடமும் எனது சீயானிடமும் (தாத்தா) கற்றவற்றை எனது நண்பர்களிடத்தில் அவிழ்த்துவிட்டு பெரிய அறிவாளியாக நாடகமாடிய எனது சின்ன வயது கலையைத்தான் அம்மா சொல்வது போல எனக்குள்ளேயே ஒரு வெட்க உணர்வு. பொறுமையைத் தவிர வேறு வழி?

„கவனமாகக் கேள் மகன்;. மனிதரைத் தவிர மற்ற உயிர்கள் அனைத்துமே இயற்கையை எப்போதும் மதித்து நடப்பதால் அவற்றுக்கு இயற்கையின் எச்சரிக்கைகள் இலகுவாகப் புரிந்துவிடும் சக்தி இருப்பதும் மனிதர்கள் அதை மீறி நடப்பதும்; அதன் எச்சரிக்கையை அலட்சியம் செய்வதும்தான் நம்மிடம் எதையும் புரிந்து கொள்ளாமல் தவறாகக் கணித்துவிடும் பலவீனத்தையும் வளர்த்திருக்கிறது.“

„ அப்போ பகுத்தறிவுக் கருத்துக்கள் பொய்யா?“
„புரியாமைகள் பகுத்தறிவு அல்ல“
நான் தடுமாறுவது அம்மாவுக்குப் புரிந்தது தெரிந்தது.

„கவனமாகக் கேள்! நாம் வளர்க்கும் ஆடு மாடு கோழி பூனை நாய் மட்டுமல்ல காட்டிலேயே வசிக்கும் விலங்குகள்கூட இயற்கை அனர்த்தம் வரப்போகுதென்றால் முன்கூட்டியே அதை உணர்நது அலறியடித்துக் கொண்டு தப்பியோட முனைவதும் அதைக் கண்டுதான் மனிதர்களில் அறிந்தவர்கள் பாதுகாப்பைத் தேடுவதும்தான் எங்கும் நடக்கிற உண்மை தெரியுமா?“ அது எனக்குப் புதிய செய்தி.

பெரும் புயலோ பூகம்பமோ இயற்கை அனர்த்தமோ வரப்போகுதென்றால்
நமது வீட்டு விலங்குகளும் கூட அதை உணர்ந்து கொள்ளும் தெரியுமா?“

„அப்படியா?“ புதிய பாடமொன்று கற்ற மாதிரி ஒரு நிறைவு எனக்கு.

„அதற்கும் கொலுசுக்கும் என்ன சம்பந்தம்? அதை நம்புவது மூடத்தனம்தானே!“

முதல் தடவையாக அம்மா வாய்விட்டுச் சிரித்தார். அப்பாடா என்றிருந்தது எனக்கு.

அப்படி இருக்கவேண்டும் என்பதுதான் எனக்கும் உள்ளுக்குள் இருக்கும் உணர்வு. ஆனால் கொலுசு வெள்ளியல்லவா அதுவும் அது ஓர் இயற்கைப் பொருளல்லவா? அதனால்தான் உள் மனம் அச்சப்படுகின்றது“

„வெள்ளிக்கு உயிரில்லையே!“

„சரிதான் ஆனால் அதுதானே அழகையும் மதிப்பையும் மரியாதையையும் தருகின்றது? அப்படியென்றால் அதனுள் ஏதோ சக்தி உண்டென்று நம்பலாமா கூடாதா?“

அம்மா தொடர்ந்தார்.“ இயற்கையால் வந்த எதுவுமே உருமாறுமே தவிர அழிவதில்லை. நாமும்தான். இதை நீ வளர வளர புரிந்து கொள்வாய். இப்போதைக்கு இது குருவி தலையில் பனம் பழத்தை வைக்கிற கதை. ஆகவே விட்டுவிடுவோம்.“

அட்சர கணித ஆசிரியரிடம் அகப்பட்டுக் கொண்ட அப்பாவி மாணவனைப்போல நான் நின்றேன். அம்மா கடைசியாக ஒரு சின்ன விளக்கம் தந்தார்கள்.

„இந்த நல்ல சகுனம் அபசகுனம் என்பதில் பல nhபாய்களுமிருக்கலாம் சில உண்மைகளும் இருக்கலாம். நீ என்ன நினைக்கிறாய்?“

„இது நியாயமான சிந்தனை என்று நினைக்கிறேன்.“

„அப்படியென்றால் நீ ஆண்டவரிடம் ஆபத்தேதும் நம் வீட்டுக்கு வந்துவிடாமல் கேட்டு மன்றாடு மறக்காதே! அவரது சித்தத்தின்படி நடப்பது நடக்கட்டும்.“

இது நடந்த ஆண்டு ஒரு லீப் வருடம் மாசி மாதம் 29 வரை நீளும் வருடம். சரியாக ஆறு நாடகள் கடக்கையில் அம்மா திடீரென்று கடும் வயிற்றுவலிக்காளானார்கள். பல சிகிச்சைகளும் பயனின்றி பதினைந்தாம் நாள் ஓர் அறுவை சிகிச்சையுடன் உலகை விட்டு மறைந்தார்கள்.

அம்மா முன்னுணர்ந்த உணர்வு இயற்கையா மூட நம்பிக்கையா தற்செயலா எதையுமே என்னால் உணரவோ விளக்கவோ முடியாத நிலையில் கார்மேகத்தில் தாகந்தீர்க்க நீர் தேடிப்  புகுந்தலைந்த ஒரு பறவைபோல அர்த்தமில்லா முயற்சிகளுடன் அன்றிலிருந்து இன்றுவரையும் கூட அவர்களின் நினைவில் உங்களில் பலரையும் போல் நானும் வாடிக் கொண்டுதான் இருக்கிறேன்.

இந்தக் கால கட்டத்தில் ஒரு நாள் என் அலுவலகத்துக்குள் வந்த எனது அதிபரின் தம்பி என் முன் வந்து அமர்ந்தார். நல்ல நகைச்சுவை ததும்பும் மனிதராவர்.

„ஆமாடே! நீ கவிதை எல்லாம் எழுதுவியாமே!“
„அங்க்கிள் நக்கலடிக்காதீங்க!“
„இல்லேப்பா நானொரு மெட்டு சொன்னா டக்குன்னு ஒரு பாட்டு எழுதித் தருவியா?“
„டக்குடக்குடக்குன்னு எழுதினா போதுமா?“
இது போட்டி. முடியுமா முடியாதா?“
„உங்களுக்கு சரியா பாட முடீயுமா முடியாதான்னு முதலில் பார்ப்போம்“

அருமையான குரலில் ஒரு மிகப்பழைய இந்திப்பாடலை முணுத்தார்.(அது அப்போதே மிகப் பிரபலமாகியிருந்தது)~

„ஹாயேகா..ஹர்யேகா..“ என்று வரும்                                          மிகப் பழைய லதா மங்கேஷ்கர் பாடிய பாடலது.

இருவருக்கும் இந்தி தெரியாது.ஆனால் இராகத்தை அவர் முணுமுணுக்க் நான் மடமடவென்று எழுதி முடித்தேன். அவர் மெட்டை நிறுத்த நான் பாடலை எழுதி முடித்து நீட்டினன்.

அவர் மகிழ்ச்சியில் அதிர்ந்து போனார். ஆனால் எனது சிரமமின்னைக்கு அதிமுக்கிய காரணம் அது என் அம்மாவை மனதில் வைத்து நான் எழுதியதால்தான்.

இதை வாசித்தால் நிச்சயம் அழுவார். ஏனெனில் அதனை அவரே அதே மெட்டில் தமக்குள் முயன்று பாடியபின் அழுதுவிட்டார்.

„என் ஆத்தாவை (தாயாரை) நினைக்க வைத்து விட்டாயடா நீ“ எனறு அமைதியாகக் கண்ணீர் விட்டார் அந்த நல்ல மனிதர்..

அதன்பிறகு அந்தப்பாடல் என் இதயத்திலும் பதிந்து விட்டது.
கூகுளில் தேடினால் இந்தப் பாடல் உடனே வரும். தாயை இழந்த எந்தச் சகோதரமும் வயது வித்தியாசமின்றிப் பாடிப் பாருங்கள்.

அது நம் குரலாகவே ஒலிக்கும் என நம்புகிறேன்.

அந்தப் பாடல் வரிகள் இவைதாம்.

அன்னையே.. அன்னையே...உன்னையே
அம்மா என்றே அழைத்தேன்  இல்லையே இல்லையே இல்லையே

என்ஊன் உயிர்நீ என்றே – உன்
உறவில் உல..கில் வந்..தேன்
தாய்நீ இல்லாமல் இருந்..தால்
வாழ்வே இல்லாது இருந்திருப்பேன்
அன்பே என்னாசை அம்மா..
வருமா அந்நாட்கள் மீண்டும்
மரணம் வந்தாலும் நெஞ்சம்
மறக்காது தன்னில் வைக்கும்.. (அன்னையே...அன்னையே...)

சில வரிகள் - சில சொற்கள் -  சில கருத்துக்கள் _ சில சமயங்கள் வாழ்வின் நிழலாகித் தொடர்வதே இயற்கையின் இனிய விதி என நம்பலாமா?

எச்சரிக்கை எதுவென்று அடையாளம் காணுதற்கு
எச்சரிக்கும் முன்நடக்கும் உவர்க்கின்ற சம்பவங்கள்
எச்சறுக்கும் மண்வழியில் வருவதற்கு முன்னுணரும்
எச்சரிக்கை இயற்கையுடன் இணைவருக்கே நின்றுதவும்

பட்டறிவில் பதம்நிறைத்துப் பக்குவமாய்ச் சொன்னவர்கள்
தொட்டவற்றில் பதிந்துணரும் தெளிவுதனைப் பெற்றவர்கள்
பட்டதெதோ கண்ணருகில் அதைமட்டும் உண்மையெனப்
பட்டுணரா அறிவுஉளார் பகுத்தறிவாய்ப் பரப்புவர்கள்

கண்ணுக்கே தெரியாமல் நமைச்சுற்றிப் பலகோடி
கண்முன்னே இயங்கிடினும் இலையென்பர் பலகோடி
மண்ணிற்கு மேல்நின்றும் மண்ணின்உள் முழுதறியார்
விண்ணினையும் வளைத்திடலாம் எனநினைப்பின் அவர்பேடி

படைத்தவனின் சித்திரங்கள் வகைவகையாய் இயற்கையதாய்
படைப்;புகளின் செயல்வழியில் எதிரெதிராய்ப் பலன்தருதாய்
இடைவிடாது இயங்குவதை இயன்றவரை தெளிந்துணர்ந்தால்
நடைபெறுமெச் சம்பவமும் விதமமைந்த தெனஉணர்வாய்!