வெள்ளி, 12 ஏப்ரல், 2013

ஈரமிருந்தால் போதுமே!

 தவ வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே.... அதுவும் புண்ணியம்தான்.

பலன் கருதா நற்பணிகள்
பயன் தராவிடினும் புண்ணியம்தான்.

பிறர் நன்மை விழைவதனால் வரும் துன்பம்கூட புண்ணியம்தான்.

கோவில்களும் யாத்திரைகளும் வழிகாட்டிகளேயன்றி வாழ்க்கையல்ல. இறைவனைத் தேடிப்போக கோவிலை நாடினால் சிலையாகக் காணும் நம் கண்களுக்கு.... அவனே நேரில் காட்சி தருவது நமது மற்றவர்களுக்கான நேர்மையான சேவைகளில் தான்.

பெரிய தவமோ ஒறுத்தலோ உபவாசமோ செய்து தரமுடியாத பெரும்பலனை ஓர் ஏழையின் உய்வுக்காய் உண்மையாய் உதவிடுதல் பெற்றுத் தந்துவிடும்.

இது வேதப் புத்தகத்தைக் கையிலெடுத்துக் கொண்டு ஓதும் ஒருவனது பிரசங்கமல்ல. அந்தப் புண்ணியத்தின் பலனை அனுபவித்த உண்மையைச் சத்தியமாய் சொல்பவனின் வார்த்தைகள்.

மதம் மாறிப் பயனில்லை. மனம் மாற வேண்டும். மனிதம் வாழ வேண்டும். அதைச் செய்யும் கலையே மதமாக வேண்டும்.

சில சமயங்களில் நாம் செய்யும் மிகச் சிறிய உதவியேகூட பெரிய சாதனையாக அல்லது அதனைப் போல அமைந்து விட இடமுண்டு.

சுமார் இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னால்  நடந்த  சம்பவம் இது. அப்போது நான் இலங்கையின் தலைநகர் கொழும்பு மாநகரில் வசித்து வந்தேன்.

ஓவ்வொரு வெள்ளியன்றும் கடை கடையாக எறும்பு வரிசைபோல பிச்சைக்காரர்கள் படையெடுப்பதும் அவர்களுக்கு சில்லறை போடுவதே அன்றைய முக்கிய வேலைகளிலொன்றாக இருப்பதும் வழமை அப்போது.

நான் பணி புரிந்த அலுவலகத்திற்கும் இப்படையெடுப்பு தொடரும்.
அன்றொரு நாள் வெள்ளியன்று நான் சில்லறையை எடுத்து வழங்கிக் கொண்டு இருந்தேன்.
அப்போது..

பலராகத் தெரிந்த பிச்சைக்காரர் கூட்டத்துக்கு நடுவே சற்று.. அல்ல அல்ல முற்றிலுமே வித்தியாசமான உருவம் ஒன்று நின்று கொண்டிருந்ததை நான் அவதானிக்க நேர்ந்தது. வாடி நிற்கும் வாழையாக ஒரு பெண்மணி தலைகுனிந்தவாறு நின்று கொண்டிருந்தார்.

அந்தப் பெண்மணியின் உருவத்தில் பிச்சைக்காரத் தோற்றமிருக்கவில்லை. ஏழ்மையான ஆனால் கண்ணியமான பெண்மணியாக அவர் தெரிந்தார்.

முகத்தில் ஏதோ தாங்கிக் கொள்ளவே முடியாத வேதனையும் ஏதோ அவமானப்படுவது போன்ற திகைப்புணர்வும்  சித்திரவதை உணர்வும்  புலப்பட்டுக் கொண்டிருந்தன.

ஏனோ அவருடன் பேச வேண்டும் போல் தோன்றவே அவரை விடுத்து மற்றவர்களுக்கெல்லாம் சில்லறையை வழங்கிக் கொண்டிருந்தேன்.

கூட்டத்தோடே நின்ற போதும் அவர் என்னை நெருங்கி வரத் தயங்குவது எனக்குப் புரிந்தது.

வேகமாக நகர்ந்து கொண்டிருந்த கூட்டத்தின் நடுவில் நின்ற அந்த அம்மாவைப் பார்த்து

 «  அம்மா நீங்கள் கொஞ்சம் தள்ளி அந்தப் பக்கமாக வந்து நில்லுங்கள் »; என்றேன்.

ஏனைய பிச்சைக்காரர்களுக்கு நான் ஏதோ அவருக்கு அதிகமாகப் போடப் போகிறோனாக்கும் என்ற நினைப்பு எழுந்ததை அவர்களின் முகங்களில் எழுதிக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

கொழும்பு நகரத் தெருவோரங்களில் சின்னச் சின்ன டீக்கடைகள் அப்போது நிறைய இருக்கும். இப்போது எப்படியோ தெரியவில்லை. என் அலுவலகத்துக்கு அருகிலும் அப்படியொன்று இருந்தது.

நான் திரும்பி அக்கடைக்காரருக்கு சைகை காட்டினேன். அவர் அந்த அம்மாவை அவரது பெட்டிக்கடைக்குள் அழைத்து இருக்கச் சொல்லிவிட்டார்.

தமக்குக் கிடைக்கவேண்டியது கிடைத்துவிட்டாலும் மற்றவர்க்குக் கிடைப்பதில் மனம் கொதிக்கும் சாதாரண ஏழைகளின் மன பலவீனத்தை நகர்ந்து கொண்டிருந்த இதர பிச்சைக்காரர்களின் முகங்களில் வாசித்துவிட்டு அவர்கள் அகன்றதும் அந்த அம்மாளின் அருகில் சென்றேன்.

அந்தத் தாய் என்னைக் கண்டதும் கூனிக் குறுகி நிற்பதைக் காண எனக்குக் கவலையாக இருந்தது.
« ஏனம்மா இதுநாள்வரைக்கும் நீங்கள் இப்பிடி இந்தப்  பக்கம் வந்ததாகவே தெரியல்லையே இன்னிக்கித்தான் மொதத் தடவையா வாறீங்களா.. அல்லது ... ? »

நான் முடிக்குமுன் அந்தத் தாய் விக்கி விக்கி அழத் தொடங்கிவிட்டார். நான் சட்டென்று அலுவலகத்துள் சென்று பதினைந்து நிமிட விடுதலை கேட்டுவிட்டு மீண்டும் திரும்பி வந்தேன்.

அந்த அம்மா சொன்ன கதையில் நமது சமுதாயத்தின் பலவீனமும் திமிரும் மதமும் பேதைமையும் பொய்மையும் வெள்ளைச் சேலையில் கொட்டிய கறுப்பு மைச் சிதறலைப் போல பளிச்சென்று தெரிந்தன.

கதை இதுதான் :
அந்தம்மாவின் கணவர் ஒரு வெற்றிலை வியாபாரி. மிகச் சிறிய தொழில் மிக அளவான வருமானம். மூன்று பிள்ளைகள். இரு சிறுமியர். ஒரு மகன். மூவருக்குமே வயது எட்டுக்கும் குறைவு.

இந்நிலையில் அந்த ஏழைத் தகப்பன் மூன்று மாதங்களுக்கு முன்பாக வெற்றிலையை விற்பனைக்காக வாங்கிக் கொண்டு வரும் வழியில் பின்னோக்கித் திரும்பிய ஒரு லாரியினடியில் சிக்கிச் சிதைந்து போனார்.

அவரது திடீர் மறைவினால் குடும்பம் அல்லோலகல்லோலப்பட்டது. அந்த அம்மா அதிகம் படிக்காதவர். எந்த உலக அனுபவமும் இல்லாதவர். தலைவன் இறந்ததும் தான் ஏழ்மையின் தாக்கத்தையே சரியாக அவர் உணர்ந்தார்.

சவ அடக்கத்துக்கும் கூட செப்புக் காசில்லாத கொடிய நிலை. ஓருவர் கொடுத்துதவிய கடனால்தான்  ஏதோ செய்ய முடிந்;திருக்கிறது.

அதன் பிறகு ஊரே விலகிக் கொண்டது.
கைம்பெண் அல்லவா ! அதனால் உறவுகளும் விலகிக் கொண்டன.
ஓரிரு பக்கத்துக் குடும்பங்கள் ஓரிருநாள் கஞ்சிக்குக் கடன் கொடுத்துவிட்டு அவையும்  கையை விரித்துவிட்டன.

இந்நிலையில் பிள்ளைகளின் பசியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்தத் தாய் தன் கணவரின் அடக்கத்துக்குக் கடன் தந்தவரிடமே கொஞ்சம் மேலதிகக்கடன் கேட்டிருக்கிறார்.

இந்த இடத்தில்தான் இடி விழுந்த அந்தக் கதையைச் சொன்னார் அந்தத் தாய்.
காசு இல்லையென்று சொல்லலாம். பரவாயில்லை. ஆனால் அவன் என்ன சொல்லியிருக்கிறான் தெரியுமா ?

« இனியும் காசு தேவையென்றால் மருதானைக்குப்போய் நில்லு. நன்றாய் சம்பாதிக்கலாம். அல்லது பிச்சையெடு »  என்றிருக்கிறான் அந்தப் பாவி.

மருதானை ?
அது விபச்சாரிகள் தெருவோரம் நின்று வாடிக்கைதேடும் கொழும்பு நகரின் ஒருபகுதியாகக் கணிக்கப்பட்டுவந்த காலமது.

இந்த அன்னை அப்படியே துடிதுடித்துப் போயிருக்கிறார்.கேட்கவே எனது இரத்தம் கொதித்தது. நான் கேட்டேன்.                    

 „இது எப்போ நடந்தது அம்மா ?“

அந்த அன்னையின் பதறும் உதடுகள் உதிர்ந்தன. பதிலிறுத்தார் :

“நேற்றுதாங்க.”

நேற்றுக் கேட்ட அந்த வார்த்தைகள் ஒரு கண்ணியமிக்க குடும்பப் பெண்ணை இன்றைக்குப் பிச்சையெடுக்க வைத்துவிட்ட அந்தக் கொடுமையை இன்று எழுதும்போதுகூட என் இரத்தம் கொதிப்பதை உணர்கிறேன்.

“என்ன செய்யலாம்?” என்று நினைத்தவன் அந்த அம்மாவைக் கடைக்குள்ளேயே இருக்கும்படி சொல்லிவிட்டு டீக்கடைக்காரரிடம் அவருக்குப் பலகாரமும் டீயும் கொடுக்கச் சொன்னேன்.

அடுத்து என் அலுவலகத்துக்குள் சென்று எனது சக ஊழியர்களிடம் விஷயத்தை விளக்கினேன்.

முதலில் அவர்கள் சிரித்தார்கள்.

“ஊரெல்லாம் ஆயிரம் இப்படித்தானிருக்கும். எல்லாருக்கும் கொடுக்க நாம் எங்கே போவது?”
எங்கள் கேஷியர் தத்துவம் கக்கினார்.

“ஏன் மிஸ்டர் பிள்ளை! இதுவரை ஒருத்தருக்காவது இப்படி நீங்கள் ஏதாவது செய்ததுண்டா? செய்யாவிட்டால் சும்மா ஒதுங்கியிருங்கள். மற்றவர்கள் மனதைக் கெடுத்து பாவத்தைக் கட்டிக் கொள்ளாதீர்கள். நாளைக்கு உங்கள் மகளுக்கும் கூட காலம் மாறி இது மாதிரி ஏதாவது நடக்கலாமில்லையா!?”

அவர் அத்துடன் கப்சிப்.

நான் அந்த அம்மாவுக்கான உதவித் திட்டத்தைச் சொன்னேன். உதவி தற்காலிகமானதாக இல்லாமல் நிரந்தரமாகப் பயன்தர வேண்டுமென்றால் அப்பெண்மணி தன்காலில் நிற்கும் தகுதி முக்கியம் என்பதை விளக்கிச் சொன்னேன். ஏற்கனவே ஓர் ஏழைக்கு உதவியது நற்பலனளித்ததைக் கண்ட அனுபவம் எனக்கிருந்தது.

சில நிமிட கலந்துரையாடலின் பின் எல்லாரும் சேர்ந்து ஒத்துழைப்பதாக வாக்களித்தார்கள் எங்கள் காஷியரைத் தவிர. ஒரே எரிச்சல் அவர்மேல் எனக்கு. இருந்தாலும் பொறுத்துக் கொண்டேன்.

நான் மீண்டும் வெளியே வந்து அந்த அம்மாவிடம் அவர்களின் விலாசத்தைக் கேட்டேன். அவர் மிகவும் தயங்கினார். அதன் அர்த்தம் எனக்குப் புரிந்தது.

எலும்பில்லா நாக்குகள் எதையும் பேசும் ஆனால் அதையே உண்மையென்று தொற்றிக் கொண்டு பாடும் சமூகமல்லவா நமது சமூகம்! தன் மானம் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற அந்தப் பயந்தான் அவரைத் தடுமாற வைக்கின்றது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

நல்லதைச் செய்யக்கூட அஞ்சி அஞ்சித் தடுமாறும் ஒரு நிலைமையா?
வேடிக்கை மிகுந்த சமுதாயச் சம்பிரதாயங்கள்!

எனது மனம் கனத்தது.
நான் சொன்னேன்.

“அம்மா இந்த டீக்கடை நானாவும் நானும் இன்று மாலை வந்து பார்க்கிறோம். நீங்கள் இனி பிச்சை எடுக்க வேண்டாம். நீங்கள் சம்மதித்து சரி என்றால் உங்கள் கணவரின் கடையை நீங்களே நடத்த ஏற்பாடு செய்ய முடியுமா என்ற பார்க்கிறோம். என்ன சொல்கிறீர்கள்?”

மகிழ்ச்சியா?

அதிர்ச்சியா?

வியப்பா?
எதுவென்றே சொல்லவியலாதவொரு உணர்ச்சியுடன் நன்றி கலந்த பார்வை. எனது உள்ளம் நெகிழ்ந்து விட்டது.

அந்த அம்மா ஒரு பலகாரப் பொட்டலத்துடனும் ஐந்து ரூபா காசுடனும் வீட்டுக்குத் திரும்பிப்போனார்.  நான் மாலை எப்போது வரும் என்று காத்திருந்தேன்.

மாலை வந்ததும் டீக்கடை ரகீம் நானா சொன்னபடி வந்து நின்றார். பேசிக் கொண்டே போகையில் அவர்  சொன்னார் :

“சாச்சா! நானும் ஏழைதான் ஆனா நீங்க நடந்துக்கிட்டதைப் பாத்த பொறவு பொறந்தும் பயனில்லாமல் மவுத் ஆவுறதவிட நல்லத செஞ்ச திருப்தியோட ஒண்ணுமே இல்லாம மவுத் ஆனாலும் அல்லா கைவிடமாட்டான்னு நல்லாவே புரிஞ்சுது. நானும் உதவி செய்கிறேன் சரியா?” என்றாரே பார்க்கலாம்.

நான் எவரெஸ்ட்டின் உச்சிக்கே போய்விட்டேன்.

சுடர்விளக்குகள் பலவும் தூண்டுகோல் இல்லாமல்தான் ஒளிராமல் இருக்கின்றனவோ?

புன்முறுவலுடன் ஆமோதித்தவாறே நான் நடந்தேன்.

அந்த அம்மாவின் வீட்டைச் சென்றடைந்தோம்.

அந்தச் சின்னஞ் சிறிய வீட்டின் மின்மினி விளக்கொளியில் மூன்று பிஞ்சு விளக்குகள் மின்னிக் கொண்டிருந்தன.

எனக்கும் சொல்லாமல் டீக்கடை நானா தான் ஒளித்துக் கொண்டுவந்திருந்த மிட்டாய்ப் பொட்டலத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டுச் சிரித்துக் கொண்டார். வெறுங்கையுடன் சென்ற எனக்கே பெரிய வெட்கமாய்ப் போய்விட்டது.

“என்ன நானா! என்னையே தோக்கடிச்சிட்டீங்களே!” என்று நான் ஜோக்கடித்தேன்.

அவர் என்ன சொன்னார் தெரியுமா?

“சாச்சா! இது நான்  கொடுத்ததில்ல நாம கொடுக்கிறது. இந்த நாடு உருப்பட வேணும்னா நல்ல மனங்கள்ளாம் முன்னுக்கு வரணும். அதுக ஒதுங்கி இருக்கிற வரைக்கும் லாம்பை குழிக்குள்ள பொதைச்சு வச்சுப்போட்டு  வெளிச்சத்துக்காக இருட்டிலே சந்திரனைத் தேடுறதுபோலத்தான் இருப்பாங்க. அல்லாட கண்முன்னுக்கு எல்லாரும் ஒண்ணுதானே!”

அடி சக்கை!
நல்ல தத்துவமொன்றைச் சொல்லிவிட்ட திருப்தியில் நானாவின் பல்லெல்லாம் சினிமாஸ்கோப் திரைவடிவில் ஒரே..
“டூத்பேஸ்ட் விளம்பர பளீச்.”

எனக்கும் பெரிய மகிழ்ச்சியும் பரம திருப்தியுமாக இருந்தது.

எனது திட்டத்துக்கு எதிர்பார்த்ததற்கும் மேலாகவே நிதி சேர்ந்துவிட்டதால் மீதியை அந்த அம்மாவிடம் கொடுத்து அதிமுக்கிய தேவையான சிறிய மண்ணெண்ணெய் குக்கர் ஒன்றை வாங்க வைத்தேன்.

மூன்று கல் வைத்து பொறுக்கிய விறகையும் பேப்பரையும் நம்பி சமைத்தது போதும்.

சவஅடக்கக் கடன் மட்டும் ரூயா 500ற்கும் மேல். எப்படி சமாளிப்பார் இந்த அம்மா என்று தலையைக் குடைந்தது.

அடுத்த நாள் காலை ஆபீசில் நிலைமையை விபரித்தேன். உடனடியாக எதுவும் நடக்கும்போல் இல்லை. எல்லாருமே மாதச் சம்பளக்காரர்தானே!

ஆனால் பிற்பகல் மூன்று மணியளவில் காஷியர் பிள்ளை என்னைத் திடீரென அழைத்துக் காதில் குசுகுசுத்தார்.

“தம்பி நான் 500 ரூபா தர்றேன். மாசம் மாசமா வட்டியில்லாமே திருப்பித் தந்திடச் சொல்லு. முன்னப்பின்னே பிந்தினாலும் பரவாயில்ல. முடியாமலே போயிட்டின்னாலும் பரவாயில்ல. எதுக்கும் அப்படிச் சொல்லிக் குடுக்கிறதுதான் நல்லது பாரு!”

அட மனித மனங்களுக்குள் தெய்வம்தான் எப்படியெல்லாம் குடி கொண்டிருக்கின்றது ! 
புதையுண்டிருக்கும் நல்ல எண்ணங்களை நல்ல சந்தர்ப்பங்களல்லவா வெளியிலெடுத்துப் போடுகின்றன!

யாருக்கு நன்றி சொல்ல? கடவுளுக்கா அல்லது திருவாளர் பிள்ளைக்கா? தெரியவில்லை எனக்கு.
“மிஸ்டர் பிள்ளை உங்களுக்கே பெரிய சம்பளம் இல்லியே..இதிலே..இவ்வளவு பெரிய தொகையை எப்படி...”
நான் இழுத்தேன்.

அவரே விளக்கினார்.
„தம்பி நான் காலையிலே மொதலாளிய சந்திச்சி என் பேரிலே இதுக்காக லோன் கேட்டேன். அவரு சரின்னுட்டார்.“

„ஓதவி செய்யன்னு சொல்லியா கேட்டீங்க?“

„சே..சே.. செய்றது தர்மம். அத பறையடிச்சிக்கிட்டா செய்வாங்க? என் தேவைக்குன்னுதான் கேட்டேன்“
அந்த நல்ல உள்ளத்தின் தூய வார்த்தைகளால் நான் தூசியாகி உதிர்ந்தே போனேன். எனது மனம் நெகிழ்ந்தே போனது.

நன்றி சொல்ல வார்த்தையின்றி நான் தடுமாறுவதை அவர் உணர்ந்திருப்பார் போலும். ஒரே புன்னகை மூலம் « ஓகே » பண்ணிவிட்டாh.;

இந்த நல்ல உள்ளங்களின் முன் நான் எம்மாத்திரம்? வெறும் தூசு மட்டுமே! அல்லவா?
என்னையே நான் உணர்ந்து கொண்டேன்.

இரு நாட்கள் கழித்து அந்த அம்மாவையும் அழைத்துக் கொண்டு வெற்றிலைக் கடை பசாருக்குப் போனேன். பலர் அத்தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். எல்லாருமே ஏழைகள்தாம். ஆனால் அந்த அம்மாவின் நிலைமையை நன்றாகவே உணர்ந்திருந்தர்கள்.

என் திட்டத்தை சொன்னதும் அவர்களே ஆன உதவிகளைச் செய்வதாகவும் காலையில் கடைக்கு வந்து அமர்ந்திருந்தாலே போதுமென்றும் தங்களுக்கு வெற்றிலை வாங்கிவரும்போது தாங்களே அவர்களுக்கும் வாங்கி வந்து கொடுப்பதாகவும் தாங்களே இயன்ற விதத்தில் ஒத்துழைத்து விற்றுக் கொடுத்து உதவுவதாகவும் சொன்னார்கள்.

இந்த சமுதாயத்தில் எல்லாத் திசைகளிலும் சம்மனசுக்களே நிறைந்திருக்கின்றன. ஒரு சில பசாசுகளால்தான் அவை தம் சுயநிலையை உணராமல் இருக்கின்றன என்று என் மனது எனக்குத் தெளிவுபடுத்தியது அப்போது.

அதன்பிறகு அடிக்கடி விஜயம் செய்து அந்த அம்மாவின் வர்த்தக முன்னேற்றத்தை அவதானித்து வந்தேன்.

படிப்படியாகக் கடனில்லாமல் முன்னேறிய அவர் இயன்றவிதத்தில் தமக்குதவிய இதர வியாபாரிகளுக்குச் சிறுசிறு கடன்கள் வழங்கும் அளவுக்கு முன்னேறியிருந்தார்.

அவ்வப்போது கொஞ்சம் வெற்றிலை வாங்கப் போவதாகக் காட்டிக் கொண்டு அந்தத் தாயின் முன்னேற்றத்தை அவதானித்து வந்தேன்.

எங்கள் பக்கத்து வீட்டுப் பாட்டிக்கும் இதனால் பெரிய லாட்டரிச் சீட்டு விழுந்து விட்ட மகிழ்ச்சி. இரண்டு நாளைக்கொருதடவை பெரிய கட்டு வெற்றிலை வீடு தேடி வருகிறதென்றால் சும்மாவா!
„மவராசன்..என் தங்கம்“; என்று ஒரு ஐஸ்கட்டியை அவ்வப்போது என் தலையில் வைத்து „அடே பயலே! இதை ஏன் சொல்கிறேனென்றால் நீ வெற்றிலை சப்ளையை திடீரென்று நிறுத்திவிடக் கூடாதென்பதற்காகவாக்கும்“ என்று மறைமுகமாக எச்சரித்துக் கொண்டிருந்தார்.

ஒருபக்கம் புண்ணியம். மறுபக்கம் பாட்டியிடம் ஒரு மாட்டு. என்றாலும் அதிலிருந்த சந்தோஷம் மகத்தானதாக இருந்தது எனக்கு. இப்போதும் கூட அந்த மகிழ்ச்சியின் ஆழத்தை உணர்ந்து மகிழ்கிறேன்.

நாம் செய்தது சிறிய தர்மம்தான் என்றாலும் பெரிய சாதனையல்லவா!? எனது சின்ன மனம் என்னைப் பாராட்டிக் கொண்டிருந்தது.

இன்றைக்கும் எனது சின்ன நல்லெண்ணத்தினால் ஒரு நல்ல ஏழைக் குடும்பத்தைக் காப்பாற்றிய செயலில் எனது மனம் நிறைகின்றது. நிறைந்து கொண்டே இருக்கின்றது.

இதை வாசிக்கும் என் அன்புச் சகோதரரே! சகோதரியரே!
உங்களுக்குள் இருக்கும் சுடர்விளக்கை தயவு செய்து எடுத்து வெளியே வையுங்கள்.

அதன் ஒளி அதற்குரிய அளவுக்குள் இந்தப் பாழ்பட்டுப் போயிருக்கும் சமுதாயத்துக்கு உதவினாலே போதும். எத்தனையோ புத்தம் புது விளக்குள் ஒளிரத் துவங்கிவிடும் நல்ல காலம் பிறந்துவிடும்.

இருளுக்குள் கிடக்கும் மனங்களை ஒளிர வைக்க நீங்கள்தான் முடிவெடுத்து முன்னுக்கு வர வேண்டும்.
இதற்கு சாதனையல்ல முக்கியம். தயங்காது ஒத்துழைக்க நினைக்கும் நல்ல மனந்தான் முக்கியம்.

அது உங்களிடமும் அப்படியே இருக்கின்றது. உங்கள் ஒவ்வொரு சின்ன நல்ல செயலும் ஒரு மலையொப்ப கட்டிடத்தை அமைக்கப் பதிக்கப்படும் அடிக்கற்கள் என்பதை தயவு செய்து மறந்து விடாதீர்கள்.

நாளைய நல்லுலகமே இன்றைய கனவாக நமக்கிருந்தால்தான் நம்மாலே நன்மைக்கான சுடர்களை ஏற்றிவிடல் சாத்தியமாயிருக்கும்.  தயவு செய்து.. ..  தயவு செய்யுங்கள்.

இதுபோல எத்தனை இதயங்கள் எங்கெல்லாமோ சொல்ல முடியாக் கதைகளைச் சுமந்து கொண்டிருக்கின்றனவோ!
கண்டு உதவ முடிந்தால் அதைவிடவும் புண்ணியந்தரும் அதிர்ஷ்டம் உண்டா?

இதற்கெல்லாம் தேவை ஒரேயொரு தகுதி மட்டும்தான். உங்கள்; உள்ளங்களில் சிறிதளவு….

              ஈ ர மிரு ந் தா ல் போ து மே !



            காரிருளும் தனைத் துறக்கும் கையிலொரு விளக் கெரிந்தால்!
             பாரினிலே துயர் மறையும் பரந்த மனம் நமக்கிருந்தால்!
             போரிடையும் பகை இருவர் உயிர் பிரியும் நிலை இருந்தால்
             ஒரு குவளைத் தண்ணீரை அருந்தி இணைந் திறந்திடலாம்
             பாரினிலே நல்லவையும் நல்லவரும் நிறைந்திருந்தும்
             பார்ப்பதற்கு யாருமின்றி அன்பு சோர்ந்து சாயுதென்றால்
             நேர்மையுடன் மற்றவரை நினைப்பதையே செய்வதற்கு
             நேர்மையுடன் வழியுணர்த்தத் தவறியதே காரணமாம்!