வெள்ளி, 20 நவம்பர், 2015

    நம்பித் தயங்குதலும் ஆபத்தே!



Image result for suspicious minds



எத்தனை தடவைதான் இனிப்பினைச் சேர்த்தாலும்
எத்தனை அளவினிலும் பலசுவைகள் சேர்த்தாலும்
அத்தனை சுவைகளையும் விஞ்சிஉயிர் தனைபறிக்கும்
அத்தனைச் சுவைகளுக்குள் சிறிதளவும் நஞ்சிருந்தால்

இனிமையான வார்த்தைகளால் வர்ணித்தால், பரிந்துரைத்தால்
இனியுமிலை யெனுமளவில் சலுகைகளை அனுமதித்தால்
இனிநமக்குத் துன்பமிலை எனநினைக்கும் மூடமனம்
இனிஇலையாய் தமதுஇனம் இழிந்துவிடும், உணரல்நலம்

தமதுரிமை தாம்விழைதல் மனிதர்களின் இயல்உரிமை
தமதுஇனம் மட்டுமெனத் தலைதெறித்தல் இயல்பின்குறை
தமதுஎனும் சுயநலத்தை மறைக்கும் வழி தொடர்நிலைமை
தமதுகுறி தனைத்தவறாய் பிறர்விளங்கிடச் செய்கயமை

சிந்தனைகள் திசைதிரும்பும் சரிவழியில் மனம்தளர்ந்தால்
சிந்தனைக்குள் சரிபிழைபோல் தளம்பல்வரும் அறிவகன்றால்
நண்பர்போலும் நல்லவராய்க் காட்டிக்கொண்டும் வரும்கயவர்
நம்பிக் காட்டிக் கொடுப்பதற்கும் நெஞ்சம்நாடும் சுயமிழந்தால்

ஓடுகின்ற ஓடைநீரை நம்பிஅள்ளிக் குடித்திடலாம்
ஓடுகின்ற சாக்கடைக்குள் அள்ளிஎதை அருந்திடலாம்?
ஆடுபோல கத்திஓநாய் நெருங்குகையில் அதன்குரலை
தேடுதற்குக் கூடநம்பின் ஆடுஉயிர் தப்பிடுமா?

24 July 2009
அறிந்தென்ன?புரிந்தென்ன? இருந்தென்ன? தொலைந்தென்ன?



Image result for thinking with angry cartoon pictures



வெள்ளமாய் நீரேறி வீடினை இழந்தால்
  விரைவிலே புதுவிட்டைக் கட்டியே விடலாம்
கள்ளமாய் மனமேய்த்தல் நடக்கின்ற தென்றால்
  உள்ளத்தின் துயரையெவ்வண் நாம்போக்கி விடலாம்?
துள்ளிநில் உண்மையுள் நல்மனிதர்க  ளுக்கு
  துயரூட்டற் கிலகுவாய்ச் சட்டங்கள் இருக்கையில்
கள்ளமாய் அரசினில் சதிராடும் குள்ளர்கள்
  கடைக்குணம் வெல்லலை எவ்வண்ணம் தவிர்க்கலாம்?

நல்லதைச் சொல்வதும் செய்வதும் குற்றமாய்
  நாடுகள் சட்டங்கள் செய்துமே தடுப்பதால்
நல்லவர் கள்கூட தீயராய் மாறிடும்
  நாசம்சேர் நிலைவரல் எவ்வண்ணம் தடுக்கலாம்?
பொல்லாத மக்களே ஆட்சிகள் செய்வதால்
  பொய்யாக வேநீதி தடுமாறித் தவிக்கையில்
எல்லாரும் சேர்ந்தாலும் முடியாத சூழலில்
  தனிநபர் திருந்தாமல் தரணியும் திருந்துமா?

மண்விட்டு விண்தாவி விஞ்ஞானம் வளர்ந்துமிம்
  மண்மீது நிம்மதிக் கெனஒன்றைத் தந்ததார்?
விண்முட்டக் கட்டிடம்இகோபுரம் உயர்வதால்
  வறுமையில் லாததோர் நிலையெங்கும் வந்ததா?
புண்பட்டுத் துன்பத்தில் வாடிடும் மாந்தரில்
  புவிதனில் புதிதாகப் பிறந்தசிறு பாலரும்
குண்டுகள் வீழவே துண்டுதுண் டாவதும்
  கருகியே அழிவதும் அவர்செய்த பாவமா?

செந்நீரில் அப்பாவி மக்களே சாகையில்
  செய்விக்கும் கொடியரோ தலைவராய் மிளிர்கிறார்
கண்ணீரைத் தடைப்பவர் எவரென்று அணுகினால்
  கண்தேடும் அவர்களே ஆயுதம் கொடுக்கிறார்
மண்மீது நிம்மதி வரவேண்டும் என்பதில்
  மனிதாபி மானமே முதலிலே என்பதை
கண்ணுள்ள குருடராய் மறுப்பரும் மறைப்பரும்
  கருங்கல்லா? கடைத்தனக் குணங்களின் விதைகளா?

  .2008
தடம் பதிக்குமுன் பாதையைப் பார்!



Image result for cautious walk





கெட்டவர்கள் ஒன்றுகூடி சங்கமென்று ஒன்றைவைத்துக்
கெட்டவர்கள் மற்றவர்கள் என்று பாடக் காணின்
எட்டிநின்றுகூட அந்தப் பக்கம் பார்த்தி டாதே!
தடடிவிட்டு வெட்டியோடுஇ பக்கம்சென்றி டாதே!

கள்ளருக்குக் களவுசெய்தல் தேவையாகத் தோன்றும்
குள்ளபுத்திக் கேடருக்குத் தீமைதேவை என்றும்.
பள்ளம்தோண்டிப் பிறரைவீழ்த்தும் பாத கர்க்குநீதி
உள்ளமதில் இல்லையதால் நீதிக் கென்றும் தீது!

எள்ளளவும் பாவம்தன்னில் நாட்டம் கொண்டி டாதே!
எள்ளளவே படிப்படியாய் உன்னை ஆழ்த்தி வீழ்த்தும்.
இருளினுக்குள் மனம்விரும்பிப் பிழைவழியார் செல்வார்
வருமுறவார் அறிதலின்றி இணைவர்துயர் சுமப்பார்

இருதயத்தினுள் இருளிருந்தால் பகலதுவும் இருளே!
இரக்கமது அதிலிருந்தால் தகைமையில்நீ விளக்கே
கருத்ததனில் பிழைதிருந்தப் பிறர்மனதை வகுத்தால்
இருந்துவரும் வாழ்க்கையிலும் இறைமகனாய் ஒளிர்வாய்!

துளித்துளியாய்த் தானும்..




Image result for guiding light



தனியொருவன் பயணித்த வள்ளமே பின்னால்
பலநுாறு பேர்செல்லும் கப்பலாய் ஆச்சு!
தனிமனிதர் சிந்தித்த உண்மைகள் பின்னால்
பலகோடிப் பேருக்கும் வழிகாட்ட லாச்சு!

ஒருமனிதர் உள்ளத்தில் உருவான கொள்கை
ஓருலகம் முழுவதும் பரவிட்ட காட்சி
ஒவ்வொரு மதமதன் அடிப்படைக்குள்ளே
ஒப்புயர்வில்லாத உயர்ச்சியாய்ப் போச்சு!

ஒற்றுமை தன்னையே உருவாக்கு தற்காய்
கற்றவர் பலபேரும் வழிகாட்ட வந்தார்
கற்றவர் இடையில்வாழ் கயவர்க ளாலே
கறைசேர்ந்து அனைத்துமே குறையாகிப் போச்சு!

துளித்துளி யாகவும் நல்லதைச் சேர்த்தால்
விழிமுதல் கால்வரை நல்லவர் ஆவோம்
வழிசொல்லும் முன்நாமே வழிநின்று கண்டால்
வழிகாட்டும் பணிகளில் வெற்றியும் காண்போம்

புதன், 18 நவம்பர், 2015

 நீ நீதி சார்ந்திருந்தால் நதிமீதும் நடந்திடுவாய்!



Image result for powerful images


சிதறிச் சிதறிநீ தெருத்தெருவாய்த் திரிந்தாலும்
உதவிக்கு வழியின்றி ஊர்ஊராய் அலைந்தாலும்
இதயத்தின் உறுதியை இழக்காமல் இருந்தனையோ
எதனாலும் நன்நோக்கம் தளராமல் தடுத்திடலாம்

உன்மண்ணை உன்எதிரி ஏமாற்றிப் பறித்திடலாம்
உன்மக்கள் தீயரெனப்  பொய்பகர்ந்து ஏய்த்திடலாம்
நன்நோக்கம் நின்மக்கள் நல்வாழ்வே எனநம்பின்
என்றைக்கும் தோற்காதந் நினைவெனவே நம்பிடுவாய்!

யூதர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாய் ஏதிலிகள்
பாதகர்கள்இ கொடியவர்கள் எனப்பட்டம் சுமந்தவர்கள்
வாழவே வழியின்றி வாழ்நாளில் சிதைந்தாலும்
வாழநாம் வழிகாண்போம் எனவுறுதி எடுத்தவர்கள்

உலகெல்லாம் கைவிட்டும் அவர்தமக்குள் இணைந்திருந்தார்
கலங்காமல் தம்கனவை நனவாக்கப் பணிதொடர்ந்தார்
இலட்சங்கள் பலவெனவே தம்மக்களை இழந்தாலும்
கலங்கவே கலங்காமல் இலட்சியம்தனில் நின்றார்

எப்படியோ தம்மண்ணில் காலூன்றி அமைத்தவர்கள்
அப்படியே ஓயாமல் அதைவளர்த்து உயர்ந்தனரே!
ஒப்பிடவே முடியாத பலமிக்க ஒருநாடாய்
இப்பொழுது இசுரேலியர் எனவுயர்ந்து விட்டனரே!

உன்மண்ணும் இவர்போல உன்இனத்தால் உனதாகும்
உண்மையான கனவுடனே தொடர்ந்துழைத்தால் அதுஆகும்
என்றுந்தன் உள்ளமதுள் தொடர்கனவாய்க் கொள்கைஎடு
என்றைக்கும் நீதியது சாவதில்லை என்று இரு

சேற்றில் நனைந்திருந்தால் அதைக்கழுவிச் சுத்தம்பெறு
உற்றவர் போலிருந்தார் கெட்டரெனில் தவிர்த்துவிடு
காற்றுக்கு அசைதுணியாய் சந்தர்ப்ப வாதியரோ
கீற்றாகக் கூடஅவர் தொடர்புதவிர்இ கொள்கையில் நில்.

முடியாத தென்றொன்றும் உழைப்பார்க்கு இருந்ததில்லை
படியாத மனவுறுதி தகர்ந்தாயும் கதையில்லை
நீசாரும் கொள்கையது உண்மையிலே நீதியெனில்
நீநடக்க முடிவெடுத்தால் நதிமேலும் நீநடப்பாய்
கானலை நம்பினால் மானுக்குக்கேடு
  பாவத்தை நம்பினால் மாந்தர்க்குக் கேடு



Image result for mirage and a deer





என்னதான்  சொன்னாலும் எவ்வண்ணம்  சொன்னாலும்
எந்நாளும் மெய்யதாய்  பொய்மாறல் துர்லபம்
தண்ணீரைக் கொண்டு  நீசுட்டிடலாம் ஆயினும்
தண்ணீரால் தீயணைத்தல் அன்றி வே றாகுமா?

என்னதான்  செய்தாலும் எவ்வண்ணம் செய்தாலும்
நின்நீதி  பொய்யெனில் நீதியாய்  மாறுமா?
நல்லாரை இல்லாராய்  ஆக்கலும் அடக்கலும்
பொல்லார்க்கு இலகுதான் நிரந்தரமாய் வெல்லுமா?

தின்மைவிழை பெரும்பான்மை எவ்விதம் முயலினும்
தின்மைதான்  நன்மையாய் சரித்திரத்தில் ஆகுமா?
மென்மைதான்  நாவென நச்சினைநீ பரப்பினால்
நன்மையா பரவிடும்? நெஞ்சைத்தொட்டுச் சொல்வையா?

என்னதான்  மறைத்தாலும் எவ்வண்ணம்  மறைத்தாலும்
தண்ணீருக்குள் புதைபந்தால்  உள்தங்கல் இயலுமா?
புண்மேலே  புனுகுபோல் தீமைமேல் நன்மைபோல்
கண்மறைத்  தேசெய்யும் பாவங்கள் மறையுமா?


நிழலுணர்ந்தால்தான் நிம்மதியுண்டு


Image result for mind peace



தாகத்தைத் தீர்த்திடும் நீரதும் கூட
தாக்கியே  உயிர்கொல்லும் வெள்ளமாய்  மாறின்
இனிப்பினும் இனிப்பான நன்நட்பும் கூட
இதயத்தை உடைத்திடும்  தீநட்பை நாடின்

மிகநல்ல கல்விகள்இ பயிற்சிகள் கூட
மிகப்பெருந் தீமைகள் உருவாக்கல் கூடும்
உதவிக்குப்  பயன்படும் கத்தியும் கூட
உயிருக்கே ஆபத்தாய் மாறிடல் கூடும்

வார்த்தைகள் இனிமையில் மிதந்திடும்  போது
வார்த்தைக்குள்  கபடங்கள் மறைந்திடில் தீது
நேர்மையாய்  நடந்திடும் நிலையிலும் நம்மை
நேர்மைபோல் கவிழ்ப்பரை உணராமை தீமை

பத்தோடு  பதினொன்று என்றொன்று இல்லை
பத்தின்பின் பதினொன்று என்பதே உண்மை
எங்குமே நடப்பவை  தானே என்றின்றி
எங்குமே தவறினைத் தவிர்ப்பதே வெற்றி