செவ்வாய், 13 நவம்பர், 2018

கொஞ்சம் செவிமடப்பா!



அறிவதன் ஆழம் குறைந்திடும்போது
அழிவதில் ஆடும் திசைமனம் நாடும்
புரிதலில் ஆழமும் தெளிவதும் காணின்
சரிபோல் வலம்வரும் பிழைதெளி வாகும்

கரங்களுள் பொருள்பணம் திணிப்பவர் கூட்டம்
ஏய்ப்பதில் திருடிடும் கயமையில் நாட்டம்
பரமனின் பெயரிலும் பாவத்தைச் செய்தே
நெய்பூசி நஞ்சூட்டும் அரசியல் கூட்டம்

கள்வரைப் பொய்யரைக் கபடரைச் சேர்த்தே
கள்ளமாய்ப் பணம்வீசி வாக்குகள் கொய்தே
வெள்ளமாய்க் கண்ணீரை ஏழைகள் கொட்ட
ஆள்பவர் மட்டுமே வாழ்கிறார் நன்றே!

இல்லாத கதைகளால் வெறியூட்டும் தீயர்
இல்லாத கட்சிகள் இல்லாத நாடு
இல்லையே எனவாடி எதும் காணல் ஏது
பொல்லாமை தனைமனம் மறுத்தலென் றின்றி?

அற்பங்கள் மக்கள்முன் முக்கியம் பெற்றால்
அற்பர்கள் ஆள்கின்றார் எனஅறி.  நன்று!
செய்திகள் கவர்ச்சிக்கே முக்கியம் தந்தால்
பொய்சொல்லித் திசைமாற்றும் தந்திரம்உண்டு!

மக்களின் நலம்விழை நல்லவர் தம்மை
மக்களின் முன்பரப்பப் பயப்படும் ஏடுகள்
மக்களின் எதிரியாய் இயங்கிடும் ஆட்சியை
மக்களின் நன்மையாய்க் காட்டிடல் கேவலம்

அத்தியா வசியங்கள் அநியாய மாக
அலட்சியப் படுத்தலும் அகற்றலும்தானே
பத்திரிகை தர்மமாய்ப் பதிந்திடும் காலை
சத்தியம் வாழுமா தேறுமா? கூறு

வெள்ளி, 2 நவம்பர், 2018

தெளிந்த நீர்



சரியான பாதை தெரியாத போது பிழையான பாதை சரியாகத் தோன்றும்
சரியான அறிவுரை புரியாத போது தவறான வழிகளும் சரியாகத் தோன்றும்
சரியான வழியுரை நூல் தவிர்க்கும்போது சரியான பாதையே தெரியாது போகும்
சரியான துணைதனைத் தெரிந்திடாபோது வாழ்க்கையே திசைமாறும் ஆபத்துசேரும்

புரியாத விடயத்தில் பொறுப்பேற்கும்போது சிறுதவறும்தெரியாமல் தடுமாற நேரும்
புரியாத விதங்களில் நண்பரைத்தேர்ந்தால் பின்னாளில் மனம்நொந்துதடுமாற நேரும்
புரியாத நன்மைகள் பலவீனர் தீயவர்கட்கு எந்நாளும்உதவாது வீணாகிப் போகும்
புரியாத கருத்துக்கள் தெளிவாகாநிலைகளில் எடுக்கின்ற முடிவுகள் பிழையாகக்கூடும்

வரிசையை அமைத்ததில் ஒழுங்கினைச் சேர்த்தால் அணிவகுப்பில் அழகுசேரும்
வரிகளை வரைகையில் ஓவியன் திறனிணைந்தால் கலைக்குஒரு செல்வம் சேரும்
வரிகளை நம்பியே அரசுகள் இயங்கினால் தேசத்துள்வறுமையும் துயரும் கூடும்
வரித்திடும் இலட்சியம் மக்களுள் பதிந்திடேல் எதிர்காலம் தீய்ந்தே போகும்

சரித்திரம் என்பது வாழ்ந்ததன் பலன்கண்ட முன்னவர் அமைத்திட்ட பாதையாகும்
சரித்திரம் என்பது எதிர்காலச் சந்ததிக் கெழுதிநாம் வைத்திடும் பாடமாகும்
சரித்திரம் என்பது முற்கால இக்கால எதிர்காலவரலாற்றின் முக்கியம் சொல்வதாகும்
சரித்திரம் அறியாமல்புரியாமல் இருப்பவர் எங்கணும் நடைப்பிணம் என்பராகும்

திங்கள், 29 அக்டோபர், 2018

தலையைச் சுற்றுதே ...சாமி!




வறுமையை அலட்சியம் செய்கின்ற நாடும்

கல்வியில் பதவியில் விளையாட்டில் சாதனையில் திறமையில் பாகுபாடு தேடும் நாடும்

விவசாயிகளையே பஞ்சத்துள் தள்ளி வஞ்சிக்கும் நாடும்

கல்வியில் வெற்றிக்குத் தடையிடும் சட்டங்களை விதிக்கும் நாடும்

ஏற்றத் தாழ்வில் தாமுயரும் பாதகர்களிடம் சிக்கிய நாடும்

பத்திரிகைச் சுதந்திரம் பறிக்கப்படும் நாடும்

உண்மைகளைத் திரித்து வழங்கி மக்கள் மனதில் பொய்யை மெய்யெனப் பதித்து ஆட்சியமைக்கும் தீயவர்கள் நிறைந்த நாடும்

ஒன்றைச் சொல்லி வந்துவிட்டு மற்றொரு வழியில் தந்திரமாய் நாட்டைக் கொள்ளையடிப்போர் ஆட்சியைக் கொண்ட நாடும்

உண்ணவும் உடுக்கவும் தன் விதத்தில் ஒழுகவும் இடம்தர மறுத்துத் தாம் நினைத்தபடியே மக்கள் வாழ வற்புறுத்தி வதைக்கும் நாடும்

மத நல்லிணக்கத்தைக் குலைப்பதே மக்கள் பணியாக நினைக்கும் பிற்போக்காள் நிறைந்த நாடும்

வெறித்தனமே ஆள வேண்டும் மனிதம் பணிந்தே இருக்க வேண்டும் எனச் சிறுமதியினர் நடனமாட அனுமதிக்கும் நாடும்

வன்கொடுமைகள் அத்தனைக்கும் சாதி வைத்து முக்கியத்துவம் தரும் தொடர்பணியிலிருக்கும் பத்திரிகைகளே சனரஞ்சகமாக இருந்து வரும் நாடும்

பணத்துக்காகப் பாதகங்கள் செய்பவரும் கையூட்டலே வாழ்க்கையில் வெல்லும் வழியென நம்பும் பாமரரும் இணைந்தே இயக்கும் நாடும்

கையறு நிலையில் நல்லவரும் கோழையராய் தயங்கி இயங்கி வரும் நாடும்.....

இந்த உலகப் பந்தில் எங்கெங்கெல்லாம் உள்ளன எனத் தேடினேன். ஓன்றிரண்டு மூன்று நான்கு கொண்ட பல நாடுகளைக் கண்டேன். ஆனால் எல்லாமும் கொண்ட ஒரு முழுமை நாடும் வந்தது கண்ணெதிரில். அது...


கண்ணைச் சுற்றுதே சாமி. கவலை தள்ளுதே சாமி!  

சனி, 27 அக்டோபர், 2018

மனவளத்தின் ஆணிவேர்




விண்வெளிக்கு அழகு கிரகங்களும் விண்மீன்களும்போல்
மண்ணுக்கு அழகு இயற்கையமைப்பும் உயிரின வடிவுகளும்போல்
தண்ணீர்க்கு அழகு அதனுள் வதியும் மீனினங்களும் தாவரங்களும்போல்
மனிதர்க்கு அழகு மனதைக் கண்ணியத்துள் இருத்திச் சிந்தித்தல்தான் எனலாம்.

இன்றைய உலகின் அனைத்து நிம்மதியின்மைகளுக்கும் அத்திவார வேர்களாகப் பரவிக் கிடப்பவை தனக்கே அல்லது தமக்கே என எண்ணங்களை வளர்க்கும் சுயநலமும் தன்னொப்பப் பிறர் வாழ அல்லது உயர மனமொப்பா இழிமனமும்
பிறர் நலம் கெடுத்தாகில் தான் முன்னேற மனதில் இடமளிக்கும் பலவீனங்களும்
பார்வைகளிலெல்லாம் பிறர் குறை தேடல் பிறர் நலன் காணப் பெறுக்காமல் பொறாமை கொளல் சரியென நம்பும் தாழ்வு மனப்பான்மை இப்படிப் பலப்பல விதங்களில் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கின்றன.

புpறர் குறை சுட்டிக் காட்டத் தயங்காத நமக்கு நம் குறையைச் சுட்டிக் கொள்ளும் அறிவும் தட்டிக் கேட்கும் துணிவும் குறைந்தே இருந்து வருகின்றது. இந்த மனநிலைதான் தரங்குறைந்த பிறர்பற்றிக் குறைசொல்லும் புரணிக் கதைகளில் கற்பனைச் சுவையுணர்ந்து அவற்றைத் தேடித்தேடி அலைய வைக்கின்றது.

இதனால்தான் பணம் பண்ண விழையும் பத்திரிகைகள் அத்தகைய தரங்குறைந்த செய்திகளை வைத்தே பிரபலந்தேடி வளர்ந்து கொண்டிருக்கின்றன. தரம் எது தாழ்வெது என்பதைத் தெரிவதில் தவறிழைக்கும் மனதிற்குக் கவர்ச்சியில் ஈடுபாடு காட்டுமளவிற்கு கண்ணியத்திலும் நியாயத்திலும் நீதிசார் சிந்தனைகளிலும் ஈடுபாடு
காட்டும் பக்குவம் இருக்காது.

இதுதான் இன்றைய பொதுமக்களில் பெரும்பாலாரை சிந்தனை பலவீனர்களாக எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளிலும் வைத்துக் கொண்டிருக்கின்றது.

இவர்களை வைத்துத்தான் இன்றைய சனநாயகக் கோட்பாடு பொய்யர்களாலும் பித்தலாட்டக்காரர்களாலும் மத மொழி வெறியர்களாலும் பணம் பண்ணவென்றே வரும் அரசியல் அயோக்கியர்களாலும் நாற்சக்கரங்களும் காற்றற்ற வாகனமாத் தடுமாற- அதைத் தள்ளித்தள்ளி நகர வைக்கும் அப்பாவிக் கூலிகளாகப் பொதுமக்களால் தள்ளப்பட்டுக் கொண்டு வருகின்றது.

பசியிலும் வறுமையிலும் தாழ்த்தப்பட்ட நிலைகளிலும் வழிதெரியாது தவிக்கும் பெரும்பான்மை மக்கள் ஏமாற்றப்பட்டு பணபலத்தால் விலைக்கு வாங்கப்பட்டு
வாக்கின் அருமையை உணராதவர்களால் அயோக்கியர்கள் கைகளில் அகப்பட்டுக் கடைசியில் பசி அறியாதவனும் பசி உணராதவனும் தரம் தெரியாதவனும் தறுதலைகளுமாக சனநாயக சிம்மாசனத்தைக் குரங்குகளே எங்கும் ஆக்கிரமமிக்கும் நிலையினால் உலக சனநாயகம் உனமுற்று துடித்துக் கொண்டிருக்கின்றது.

ஓன்றிரண்டில் வேண்டுமானால் தவிர்ப்பிருக்கலாம். இது நிர்வாண சபையில் ஆடையுடன் நின்று அவமதிக்கப்படுவதைப் போன்ற கவலை தரும் நிலையல்லவா? தலைவிதி!

கண்ணியமாக வாழ்வதற்கு முதலில் வாழ்வினடிப்படையை உணர்ந்திருக்க வேண்டும்.
அதற்கு முதலில் கொடுத்தாலன்றிப் பெற முடியாத சில விடயங்களைத் தெரிந்திருக்க வேண்டும்.

மரியாதை: ஒரு புன்னகையால் - ஒரு வார்த்தையால் - ஒரு சைகையால் 
        ஒரு நற்செயலால் மற்றவர்களிடமிருந்து இதனைப் பெற்று விடலாம்.
        இதிலெதுவும் உங்களுக்கு திரும்பி வரும்போது நீங்கள் கற்பீர்கள்
        கண்ணியமான நடத்தையின் பிரதிபலிப்பை. நீங்கள் உயர நீங்கள்
        கொடுத்தவையே பயன் தரும் ஏணிப்படிகளாய் எதிர்வழிகளாய் முன்
        தெரிவதை உணருவீர்கள்.
        இச் செயல்கள்பிழையான பாதிப்பைத் தந்தால்? அதிராதீர்கள்.
        முத்தினைத் தெரியாமல் பன்றிகள் முன் வைத்துவிட்டோம் என
       உணர்ந்த எச்சரிக்கையுடன் ஆனால் விடாது தொடருங்கள்.          
      
       சிம்பன்சிக் குரங்கு பல்லை இளித்தால் அது சிரிப்பல்ல அதன்
        கோபத்தின் வெளிப்பாடு. சில சமயங்களில் நாயிலும் இதை
        உணர்ந்திருப்பீர்கள். ஆக மனித முக வெளிப்பாடுகளில் பரவலாக
        இருக்கும் கபடத்தனம் புரிகிறதல்லவா?   

கோபம்
:  இது நம் எல்லாரிடமும் எப்போதும் உறவாடிக் கொண்டிருக்கும்
        மிக நல்   நண்பனாகவும் ஆபத்தான விரோதியாகவும் இருக்கும் ஒரு
       குணமாகும்.
      
     ஆத்திரத்தை அடக்கினால் ஆபத்துக்களைத் தவிர்க்கலாம். நட்புறவைக்
        காத்துக் கொள்ளலாம். வீண் பகை தவிர்க்கலாம்.

மன்னிப்பு : அத்தனை நல்ல குணங்களிலும் மேலானதும் மனதில் நிரந்தர
        அமைத நிலவ உத்தரவாதத்துடன் உதவி செய்ய வல்லதும் இதுதான்.
        இதைத்   தவிர்த்தால் இதயத்தின் நல்ல இடங்களிலெல்லாம்
        பொய்மைகளும   பொறாமைகளும் வெறுப்புணர்வுகளும் தொற்றிக்
       கொண்டுவிட பெரும் வாய்ப்பு உண்டு.
    
        மன்னித்தல் என்பது மிகமிக இலகுவானது ஆனால் அதற்கு ஏற்ப
         மனதை வளர்ப்புது கடினமானது. மனதார உங்களுக்குத்
         தீங்கிழைத்தவர்களையும் எதிராக நடப்பவர்களையும் ஏன் உங்களை
         ஏய்ப்பவர்களையும் கூட மன்னிக்கும் துணிவை நீங்கள் பெற்றால்
         நிம்மதி
         கதவைத் திறந்து கொண்டு உங்கள் இதயத்தில் குடியேறுவதையும்
         மிக இலகுவாக இழப்புக்கள் அலட்சியமாவதையும் புரிந்து கொள்வீர்கள்.

இன்னும் பலப்பல விடயங்களில் வாழ்க்கை இலகுபட மார்க்கங்களுண்டு. என்றாலும் மிகமிக இலகுவாக அனைத்தையும் எப்போதும் இப்படிப் புரிந்து கொள்ள சிந்தித்து முடிவெடுங்கள்.

வருகையில் வெறுமனே வந்த நாம் வாழும்போது ஆக்குமெதுவும் சேர்க்குமெதுவும் அமைக்குமெதுவும் அவை எத்தகைய முக்கியத்துவமாகப் பட்டாலும் அனைத்துமே நிலையற்று காலத்தால் மலர்ந்து வளர்ந்து உதிர்ந்து காய்ந்து போகின்றவையே!
 

நாம் கடைப்பிடிக்கும் நல்ல குணங்கள் படிப்பினை சார்ந்த அனுபவங்கள் இவையே நமக்குப் பின் நமது சந்திதகளுக்கும் சமுதாயத்திற்கும் நற்காற்றென நலம் சேர்க்கும்

திங்கள், 22 அக்டோபர், 2018

தமிழர் கனவு நனவாக தமிழர் மனதுள் தெளிவூட்டு!




மக்கள் மனத்துள் பதிய வேண்டியதைச் சரியாய் நாம் பதித்தால்
மக்கள் தெளியத் தாமதித்தாலும் காலம்அதனைச் சரி செய்யும்
மக்கள்தேவை இன்றைக்கென்ன என்பதைத் தெளிவாய் நாம் விளக்கி
மக்கள் அவைக்கு நாங்கள்வென்றால் அவற்றைத் தருவோம் என விளக்கு

இருளில் தவிக்கும் மக்களுக் கெங்கும் ஒளியின்  விளக்கம்; வீணாகும்
இருளில் ஒருசிறு விளக்கினைக் கொடுத்தால் அதுவே உண்மையில் பலனாகும்
உணவும் நீரும் உயிரொப்ப கல்வியும் உறையுள் மற்றும் வீதிகளை
உங்களின் அரசினில் பங்கெடுப்பவராய்ப் பங்குறச்செய்தே தந்திடுவோம்

கந்தல் உடைகளும் அவையுமில்லாமையும் இல்லாதொழித்தே காத்திடுவோம்
கதருடை அணிவோம் நம்நெச வாளர் தொழில்வளர்ந்துயர்ந்திட உதவிடுவோம்
இயற்கையின் அணைப்புடன் வாழ்ந்திடும வாழ்க்கையைப்பற்றிப் பற்றிவளர்ந்திடுவோம்
செயற்கையின் பின்னே ஓடிடும்மாயை செய்கிற எத்தரை விரட்டிடுவோம்

கல்வி இலவசம் மருத்துவம் இலவசம் அருந்திடும் நன்னீர் இலவசமாம்
கல்வியில் தமிழே தலைமையில் நிற்கும் பிறபல மொழிகளும் உடனிருக்கும்
வாழ்வின் அடிப்படை அறிவில் முதலிடம் எதிலும் திறமை முதலிருக்கும்
தாழ்நிலை வீழ்ந்தோம் சரித்திரம் மறந்து எழுவோம் எழுதுவோம் நம்சரிதம்

தமிழர்கள் அனைவரும் தமிழர்ஆலயம் அனைத்திலும் வணங்கிட வழிவகுப்போம்
தமிழரை ஏய்த்தே பிழைக்கும் கயவர்கள் கனவினைத் தகர்த்தெமைக் காத்திடுவோம்
தமிழர் தனித்தனியாகவும் அணியென இணைந்தும் எழுநிலை தோற்றிடுவோம்
தமிழர்நாமே இம்மண்மைந்தர் இதனைஆள்பவர் இனிமேல்  எம்மவரே!


          

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

அவதானம் அறிவு வளர அவசியம்




இறைவன்என்ற நம்பிக்கையைக் கதைகள்கட்டிக் காப்பவர்
இறைவன்பெயரில் பொய்யைவைத்துத் தம்மைவளர்க்கும் கீழ்மகர்
தரையில் நின்று வானை விளித்து இறையைத்தேடும் மூடர்கள்
தரையும் உருண்டை வடிவுக்குள் அடக்கம் எனஉணராத மூடர்கள்

கறைபடியாத மனமதனோடு அறிவினில் தெளிவினை ஊட்டுதல்
நிறைவினை நன்மைகள் செய்வதில் உணரும்வழிதனைப் பிறர்க்குக் காட்டுதல்
இறையைநம்பும் மனங்களுக்குள்ளே உண்மைபதிந்திடற் குதவிடின்
பறையறைந்தும் பலரழைத்தும் அவர்புகழ் பரப்பல்கூட நல்லதே!

அன்புஎன்ற ஒன்றில் மட்டும் இறைவன் உண்டு என்பவன்
அன்புதன்னைப் பலபெயர்வைத்துப் பேதம்செய்யும் மார்க்கமாய்
பண்புஅற்று ஏற்றத்தாழ்வில் அடிமைத்தளத்தை ஆக்கினால்
அன்புகொன்று தீமைவளர்க்கும் தீயவரே ஆளுவார்

அமைதிதன்னைத் தேடிஅன்று அமைக்கபபட்ட மதங்களால்;
அமைதிகெட்டு உலகம்எங்கும் கொலைகள் பரவக் காரணம்
அமைதிகெடுத்துத் தம்மைவளர்க்கும் சுயநலப்பேயர் கூட்டமே!
அமைதிதேடி அவரைநம்பின் எவர்க்கும்தொடரும் தீமையே!


சனி, 20 அக்டோபர், 2018

நாமே நாடத்தகு நல்ல அனுபவங்கள்



மதங்களினாலே நன்மைவரும்என மனதினுள்உண்மையில் நீநினைத்தால்
மதபேதம் எனும் நச்சினைக் கொண்ட மனதுடன் கொடுவழி இறங்காதே!
இதம்தரும் வார்த்தை பதந்தரும்பண்பு இதரர்க் குதவிடும்; கருணையுடன்
நிதமுனைநீயே வழிசெல்லவைத்தால் உன்வழிஉன்மதக் குறளாகும்

தெரியாவிதங்களில் நீதியின்சக்தி இயங்குதல் இலகுவில் புரியாது
புரியாவிடயங்கள் இலையென மறுப்பது எதனிலும்ம்சரியாய் இருக்காது
சரியாய்ச் சரியைப் புரிந்திட முயலின் தாமதமிருப்பினும் தவறாது
மரியாதையினை மனிதருள் பகிர்ந்தால் இறைவனை உணர்வோம் தவறாது


கரும்பதன் சுவையை சரியாய் உணரக் கடித்தததை (உ)ருசித்தல் சரியாகும்
விரும்பிடும் விதமதில் இறைவனை உணர இதயத்தின்ஈரமே சரியாகும்
வறுமையை இயலாநிலைதனைக் கொண்டவை அனைத்திலும் நீ உணர்ந்தால்
சிறுசிறு வகையிலும் பசியுடன்கல்வி வழிவகை வகுத்தலும் சரியாகும்

எவரது துன்பமும் நினதெனநினைத்திடும் பக்குவ மதைமனம் பெறவேண்டும்
எவரது துயரமும் களைவதில் உன்மனம் உண்மையில்ஆர்வம் கொளவேண்டும்
எவரது உயர்விலும் உன்மனம் நிறைவுறும் உத்தமம் உன்னுள் எழவேண்டும்
எவரது வாழ்விலும் நன்மையே சேர்ந்;திட விழைமனம் உன்னுள் வரவேண்டும்

வெள்ளி, 19 அக்டோபர், 2018

பாலியல் சகதியில் நொண்டிக் குதிரைகள்

பாலியல் சகதியில் நொண்டிக் குதிரைகள்

அமெரிக்காவிலிருந்து ஆரம்பமாகிப் படிப்படியாக உலகெங்கும் பரவிவிட்டிருக்கும் இந்த “நானும்தான் அல்லது எனக்கும்தான்” எனும் பொருள்பட நடிகையர்களால்  அயோக்கியர்களுக்கு எதிராகத் திரையுலகத் திரைமறைவுப் பாலியல் வன்வகைத் திருவிளையாடல்கள் வெளிவந்ததன் பின்னால் இதர பல துறைகளின் பின்னணிகளிலுமிருந்தும் தைரியமிக்க பெண்கள் முன்வந்து தமக்கு நிகழ்ந்த கடந்தகால சம்பவங்களை வெளிப்படுத்தி இன்று தமது இரண்டாந்தர ஆணாதிக்க மதிப்பு நிலையைத் தகர்க்க முயன்று படிப்படியாக அதில் பல நாடுகளில் வெற்றியும் நாட்டி வருகின்றார்கள். முpக மிகப் பாராட்டத்தக்க விடயம் இது.

ஆனால் அதன் தொடர்ச்சி இந்தியாவைத் தொட்ட போதுதான் சக்திமிக்கதான அந்த இயக்கம் சகதி மிக்கதான ஒரு அருவருப்பு நிலைக்குள் சிக்கி விட்டதோ என்ற சந்தேக சூழ்நிலையை உருவாக்கியிருப்பதுபோல உருமாறித் தெரியத் துவங்கியிருக்கின்றது.

குற்றமே செய்யாத படுசுத்தமான மனிதப்புனிதர்கள் பலர் புற்றினின்று வெளிவரும் கறையான்களாக முகநூலிலும் “வாட்ஸ்ஆப்” பிலும் “யூட்யூப்” பக்கங்களிலும் மேடைகளிலும் கெட்ட கேட்டிற்கு அரசியல் மற்றும் ஆன்மீகக் களங்களிலும்கூட இந்த “மீற்டூ” ட்விட்டர் பரபரப்புக்களினால் நாடே அதிலும் தமிழ் நாடே மிகுந்த பரபரப்பாக நாறிக்கொண்டு வருகின்றதுபோல் தெரிகின்றது.

ஏழைகளையும் கோழைகளையும் தனிமையிலிருக்கும் தளிர்களையும் பச்சைக் குழந்தைகளையும் கூட விட்டு விடாத காமுகக் கயவர்களும் தனக்கு நடந்த பாதிப்புக்கு நீதி கேட்டுச் செல்பவளைக்கூடத் தம் காமப்பசிக்குப் பங்கு போடும் காவலர்களும் ஆண்டவனின் பெயரால் ஆங்காங்கே காமக் களியாட்டம் நடத்தும் ஆ...ஆசாமிகளும் நடைபாதையிலும் பயண வேளையிலும்கூட கைநீட்டிச் சுகம்தேடும் கைங்கர்யத்தில் கைதேர்ந்தவரும் கடமை செய்ய வந்தவரைத் தமது காமத்திற்குக் கையிழுக்கும் அதிபர் நிலை அயோக்கியர்களும் அமைச்சர்களும் ஏன் ஆளுநரும்கூட இதற்குள் சிக்கி நிற்பது பெரிய அவமானமாக இருக்கின்றது.

இதனிடையே தம்மைத்தாமே உயர்வாகத் தம்பட்டமடித்துக் கொண்டும் தம்மையே உணராது தமது கருத்துக்களால் தாமே தாழ்ந்தவர் என சுயஅடையாளப்படுத்திக் கொண்டு பெரியவராக நடமாட முயலும் அறிவுத் திருநங்கைகட்கும் குறைவில்லை போலத் தெரிகின்றது.

தன் கண்ணை அடைத்து மறைக்கும் ஒட்டடையை உணராமல் மற்றவர் கண்ணில் துரும்பகற்ற முயலும் விதத்தில்தான் இந்தப் பாடகி பாடலாசிரியர் பாலியல் கதையும்  இப்போது ஓடிக்கொண்டிருக்கின்றது.

பாடகி சின்மயியின் முறைப்பாடு உண்மையோ பொய்யோ அதனை வைத்து தனிநபர்
நற்பெருக்குக் களங்கம் கற்பிக்கவும் அவரை அப்படியே அடித்தளம் நோக்கித் தள்ளிப் புதைத்துவிடவும் என்று ஒரு சதிக்கூட்டமே பின்னிருந்து இயங்குவதுபோல அல்லது இயக்குவது போலத்தான் பக்க சார்பற்று சிந்தித்தால் புரிகிறது.

சில வேலைகளில் வேகமிருக்கும் விவேகமிருக்காது. சில வேலைகளில் விவேகமிருக்கும.; நேர்மை இருக்காது. சில வேலைகளில் நியாயம் இருக்கும்.
ஆனால் அணுகுமுறைத் தவறால் அது தோற்றுப்போகும்.

ஆனால்.....
நியாயத்தை நம்புபவர்கள் சுய வளர்ச்சிக்காhகச் சந்தர்ப்பந் தேடி வீழ்த்த முயல மாட்டார்கள். மாறாகஎவரையும் எதற்காகவும் எதிர்க்கத் தயங்காமல் தம்மவரைக் கொண்டோ தமக்காக வருபவரைக் கொண்டோ உடனடியாகவே தட்டிக் கேட்பார்கள்.

வசதி வாய்ப்புக்கள் இல்லாத ஏழைகள் அனாதைகள் தாழ்த்தப்பட்ட மக்களாக சமுதாயத்தில் நியாயங்கள் மறுக்கப்படுபவர்கள் இவர்களை இதற்குள் சேர்க்க முடியாது. 

ஆனால் பிரபல்ய பலமிருந்தும் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளவோ அல்லது வேறு சுயநலக் காரணங்களுக்காகவோ தனக்குப் பாதிப்பை ஏற்படுத்தியரை வெளியுலகிற்கு உயர்வாக விட்டுக் கொடுத்து தாமும் உயர தம்முடன் தொடர தொழில் வகையில் இடமளித்து விட்டு அதை வைத்து உயர்ந்தும் விட்டு காலங்கடந்து களங்கம் கற்பிப்பதன் பின்னணிக் காரணமாக சொல்லப்படும் காரணங்களே மிகவும் பலவீனமாக இருக்கின்றன.


சின்மயி தனது வாழ்க்கையில் தான் பாலியல் தவறுகளே செய்தறியாதவர் போலவும் பாலியல் தவறுகள் தமக்கு நடந்ததே இல்லை என்பது போலவும் காட்டிக் கொள்ள முனைவதைக் கவனித்தால் அவர் திருமணமான பின் கணவரை விளித்து சம்பவத்தை விளக்கிய பின் அவரை வைத்தே கவிஞர் வைரமுத்துவை விசாரித்திருக்கலாமே!அல்லது சட்டத்தரணியை உடன் வைத்தே கூட விசாரித்து அவரை எச்சரித்தோ ஏற்ற நடவடிக்கை எடுத்தோ முடித்திருக்கலாமே!

இத்தனை பெரிதாக இதை வைத்துத் தத்தம் சமுதாய நலனுக்காக மணிக்கணக்கில் உரையாற்ற ஓடி வருகிற இத்தனை பெண்ணியல் பெரியார்களும் இதைக் காட்டியே தமக்குக் கூட்டம் சேர்க்கும்  தொலைக் காட்சிகளும் பத்திரிகைகளும் தத்தமது மனசாட்சியைத் தட்டிச் சொல்லட்டும்:

நாங்கள் பாலியல் தவறுகளைச் செய்ததே இல்லை. எமக்கும் எவராலும் அப்படி நடந்ததே இல்லை. தனியாகவோ இணையாகவோ குழுவாகவோ எதுவிதத்திலும் அதில் ஈடுபடவோ ஈடுபாடு கொண்டதுவோ இல்லை- கொள்வதுமில்லை அல்லது கொள்ளப் போவதுமில்லை என்று சொன்னால் அவரை அல்லது அவளை ஒன்றில் தடிகொண்டு அடிக்க வேண்டும் இன்றேல் தீவைத்துக் கொளுத்த வேண்டும்.

ஏனெனில் எந்த ஒரு மனிதப் பிறவியும் முழுமை பெற்ற பிறவியல்ல. நல்லதும் கெட்டதும் கலந்தவர்தான். தமது உண்மையை மறைக்கப் பலரும் தோற்றங்களை மேம்படுத்தி மறைந்து நிற்பதுதான் உண்மை.

அகப்படாதவரையில் அத்தனை அயோக்கியர்களும் உத்தமர்கள்தான். அதுபோல  நாம் காணும் சந்திக்கும் பழகும் அத்தனை பேருக்குள்ளும் அயோக்கியமும் யோக்கியமும் கலந்தேதான் உள்ளன. புடம்போட்டால் நிமிரலாம்.தடம் தவறின்
தடுக்கி விழலாம். அவ்வளவுதான்.

குற்றம் உண்மையெனில் தண்டனைக்கு வழி தேடவேண்டும். குற்றமில்லையெனில்
குற்றஞ சாட்டுபவரை அவதுர்று வழக்கில் இழுத்து வாலை நறுக்க வேண்டும்.
ஆவ்வளவுதான்.

இடையில் புரணி கூறிப் புகழ் தேடும் நொண்டிக் குதிரைகளுக்கு மட்டும் ஒன்று தெளிவாகத் தெரிய வேண்டும்.

உங்களின் உள்ளங்கை சொல்கிறது:

நடுநிலையில் உன் பெருவிரல்நான் சொல்கிறேன்.

எவரை நோக்கியும் நீ என் ஆள் காட்டி விரலை நீட்டுகையில்
இதர மூன்று விரல்களும் உன்னை முதலில் சுட்டுவதை நினைவில் வைத்திரு.

ஊரைத் திருத்த உன்னைத் திருத்து. அதுவே மருந்து.

வெள்ளி, 5 அக்டோபர், 2018

நிழலை நம்புமுன் நிஜத்தைத்தேடு






ஆழ்சிந்தனை அற்றிருப்பமை மடைமைவிதைக் கத்திவாரம்
கீழ்சிந்தனைக் கடிபணியும் ஆபத்ததன் அத்திவாரம்
கீழ்சிந்தனை நிறைந்தவர்க்கு இணைசேர்க்கும் அத்திவாரம்
கீழ்நினைவை மேல்நினைவாய் தவறிழைக்கும் அத்திவாரம்

பாழ்செய்து பதவிதனைக் காத்திடற்குத் துடிக்கிறவன்
வாழ்நாளில் நன்மையெனத் தீமைதனை ஏற்றிருப்பான்
காழ்ப்புணர்வை கண்ணியன்போல் மக்களிடை விதைப்பதனை
வாழ்வளிக்கும் நற்செயல்போல் நம்பவைக்க முயன்றிடுவான்

செய்யவிழை பாதகங்கள் புண்ணியம்போல் தெரிவதற்கு
செய்யவிழை சதிதனக்கு மதம் சாதி இழுத்திடுவான்
பெய்யவிழை மழைதனுக்கும் மற்றவரைப் பழிக்கிழுத்து
மெய்யைவிழை மக்களுக்கும் பாதகங்கள் விதைத்திடுவான்

முள்ளைக் காட்டி ரோசாதன்னை வெறுக்கவைக்க இழிக்கிறவன்
கள்ளத் தனத்தால் ரோசாதன்னைத் தனக்கென்றாக்க நினைக்கிறவன்
கள்ளம்கொண்ட அன்னியனொருவன் கயமைநீயும் அறியாவண்ணம்
உள்ளம்கவர்ந்திpட முயல்வான்அவனை உணரேல்அழிவே நிச்சயம்திண்ணம்!

சனி, 29 செப்டம்பர், 2018

வழி காட்ட வருமுன்பு உன்னை நீ வடிகட்டு




சரியைநீ சரியாகச் சொல்கின்ற மனிதனெனில்
சரியாக நடக்கின்ற சரியான மனிதன்நீ!
சரியைநீ சரிபோலச் சொல்பவனாய் இருந்தனையேல்
சரியாகச் சரிபுரியா தடுமாறி எனக் கொள்வேன்

பிழையைநீ சரிபோல உருமாற்றி உரைக்க வந்தால்
பிழைசார்ந்து சரிஏயக்க வருகின்ற நரியன்நீ!
பிழையைநீ பிழைதானென பயமின்றி முன்எடுத்தால்
பிழைவிழையா தரம்கொண்ட தலைமகனாய் நான்கொள்வேன்

தரம்இல்லா சொற்களைநீ உன்பேச்சில் முன்வைத்தால்
தரம்கெட்டக் குளத்தினின்று தவளைதுப்பும் படமுணர்வேன்
தரமானபேச்சுடனே தரமான நடத்தையுமேல்
தரமான மனிதன்நீ எனஉன்னை மதித்திடுவேன்

பலமிருக்கும் திமிரினிலே தரமிழக்கும் மனிதனெனில்
சலம்வழியும் புண்நக்கும் சொறிநாயாய் இனங்காண்பேன்
பலவழியும் மனங்கவரும் சரிவழிநில் நேர்மையனேல்
பலவிதமும் வழிகாட்டும் தரம்மிக்கோன் என மதிப்பேன்


புதன், 26 செப்டம்பர், 2018

மனந்துணிந்தியங்கின் வாழ்வது சிறக்கும்



உன்னிலே உண்மை உண்மையில் இருந்தால்
உன்னிலே நீயே நம்பிக்கை வைப்பாய்!
உன்னுள்ளே உண்மையது இல்லையேல் நீயே
உன்னுள்ளே நீவாழும் பிணமென் றுணர்வாய்!

பார்வைக்குப் பிறரின்முன் பரிசுத்தன் போலவும்
சேவைக்கே பிறந்தவன் என்பதைப்போலவும்
யாவையும் வேடமே ஆகநீ வாழ்ந்திடின்
தேவையே இல்லைஅவ் வாழ்க்கையே- செத்திடு!

ஏய்ப்பதைப் பெரியதொரு கலைபோலக் கொண்டவன்
தாய்க்குலத் தின்சாபப் பேய்போல வாழ்கிறான்
கண்ணொப்ப கடமைகளை இலஞ்சத்தால் கெடுப்பவன்
மண்ணின் தின்னும் புழுவொப்ப தரத்தினுள் தாழ்கிறான்

வெற்றிக்கு வழிதேடிப் பிழைவழி செல்பவன்
கற்றென்ன இலையென்ன கடைமகன் கீழ்மகன்
பெற்றிடும் நலம்யாவும் நன்வழி தந்ததேல்
வெற்றியின் உண்மையை அவன்மட்டும் காண்கிறான்

வாழ்தலின் அர்த்தமே உண்மையாய் வாழ்ந்திடல்
தாழ்தலின் அடிப்படை மனங்கெட்டு வாழ்ந்திடல்
வாழலும் தாழலும் நீதிசார்ந் திருந்திடின்
வாழ்தலின் அர்த்தமது முழுமையாய் இருந்திடும்.

திங்கள், 24 செப்டம்பர், 2018

விழிப்பாயிரு! விழித்துக் கொண்டேயிரு!



கடவுளைக்கூட கயவனாய் மாற்றும் சதியர்கள் வாழ்கின்ற காலம்
கடவுளின் பெயரால் ஏய்ப்பதும் கொள்ளை அடிப்பதும் இலகுவில் ஆகும்
கடவுளை வைத்தே கற்பனைக்கெட்டா கொடுமைகள் வளர்கிற காலம்
கடவுளின்மேலே இருக்கிற மக்கள் நம்பிக்கை தகர்கின்ற காலம்

எங்கணும் மக்களின் பிணங்களின் மேலே இறைவனின் ஆசியைக் கேட்போர்
எங்கணும் பிறனைக் கொலைசெய் அதுவே புண்ணியம் எனப்போ திப்போர்
கங்கணங் கட்டியே வெறிக்கதை பரப்பிடும் சுயநரிவெறியரின் பெற்றோர்
தாங்களும் கெட்டு சூழலும் கெட்டு நாடதும் அழியட்டும் என்போர்

மக்களில்பலவீ னத்தை நிறுத்தி அதிலே உயர்ந்திடும் தீயோர்
மக்களின் ஒற்றுமை தகர்த்ததில் தம்மை உயர்த்திட சதிவரை தீயோர்
மக்களின் தகுதியை சாதியிலிருத்தி ஒழுக்கத்தைச் சிதைத்திடும் தீயோர்
மக்கள்முன் உத்தமசீலராய் வலம்வர உதவவும் இருக்கிறார் தீயோர்

பள்ளங்களிருந்தால் பலகைகள் போட்டுக் கடந்திடல் அறிவதைச் சாரும்
கள்ளங்கள் கொண்டார் நமக்கிடை புகந்தால் அலட்சியம் ஆபத்தில் சேர்க்கும்
உள்ளங்கள் கள்ளத்தால் ஊறியோர் ஊராள இடம்விடின் சேதமே சேரும்
உள்ளங்கள் தூய்மையாய் தீமையை எதிர்த்திடின் மட்டுமே நாடுகள்மீளும்

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

விழி மூடிடின் விழி போய்விடும்



புண்ணியம் எனநம்பி நீநுழை பாதைகள் பலதிலும் பொய்யுண்டு கேள்!
எண்ணியும் பாராமல் நீசெய்யும் காரியம் எத்துணை வீண்என்று பார்!
கண்காணும் காட்சிகள் பலநூறு கண்முன்னே “கானலாய்ப்” பொய்யாவதேன்?
வெண்புறா அமைதியின் சின்னமெனக் காட்டுவோன் அழிவினைச் செய்கின்றதேன்?

மதங்களின் பெயரினால் மூலைமுக்கெங்கணும் பணம்பண்ணும் கூடங்கள்காண்!
;மதவாதி கள்கூடி ஆட்சியில் அமரவே படுகின்ற பாடுகள் பார்!
மதவாதி சொல்கின்ற கற்பனைப் பொய்களுள் மக்களைப் பிரிப்பதைப் பார்!
மதங்கொள்ளா தொற்றுமை யாகவே வாழநீ இடமின்றி அடைப்பதைப்பார்!

மக்களுள் ஒற்றுமை குலையவே வழிவகை செய்கின்ற தீய வர்கள்
மக்களுள் அவர்களின் மைந்தாபோல் நடிப்பதில் நரிகளாவர்
மக்களின் மனங்களுள் வதிந்திடும் இறைவனை இழிவுசெய் தீயராவர்
மக்களின் கவனத்தைக் கலக்கியே உயர்வுக்கு வழிதேடும் கயவராவர்

தெளிவில்லா அறிவுடன் இருப்பவர் இவர்கட்கு இலகுவாய் இரையாகுவார்
தெளிந்தவர் ஆழமாய் சிந்தித்து நிற்பவர் சுடுகின்ற நெருப் பாகுவார்
வழியெங்கும் நெளிகின்ற நாகமாய் நாசஞ்செய் மனிதர்கள் எங்கும்இன்று
வழிமாற்றி உனைஏய்க்கும் பேய்களாய் வருகிறார் தெளிவுடன் எதிர்த்து நில்லு!

புல்லை நட்டு நெல்லை விழையாய்!



அன்பைத் தொடுத்து இணைத்தலை விடுத்து
அம்பைத் தொடுத்து இணைவினை ஒழிக்கும்
பண்பே இல்லா பாதகர் கூட்டம்
கண்மண் தெரியா தியங்குதல் என்னே!

நல்லதைச் செய்யும் நல்லலவர் நோக்கம்
நல்லவர் போன்றே ஏய்ப்பவர் கையில்!
நல்லவர் கண்டே கொதித் ததைஎதிர்த்தால்
நல்லவர் தீவிரர் எனச்சிறைக் கூண்டில்.

சிறியவர் பெரியவர் எவரதும் வெற்றி
சரிவழியன்று பிழைவழி போதல்
அறிவினைக்கூடப் பணத்தினை வீசி
சரிக்கட்டிப் பட்டம் பதவியை வாங்கல்

மக்களை நம்பியே வாக்குகள் கேட்போர்
மக்கள்முன் சரிவழி காட்டிடும் போது
மக்கள்வி ரோதிகள் பணத்தினைக் கொட்டி
மக்கள் மனங்களைக் கெடுத்தென்ன ஆட்சி?

வறுமையை முன்வைத்து மக்களை ஏய்த்தல்
பெருமைபோல் துணிகின்ற அரசியல் வாதி
உருப்படல் வழிதேடி புரிகின்ற பாவம்
உருப்படும் வழியற்ற பரம்பரை ஆக்கும்

நீதியைக் கையேந்தும் பாதையில் செல்வார்
பீதியே அற்றராய்க் களம்புக நிற்பார்
வீதியில் ஆதரவு அற்றவர் ஏய்ப்பார்
நீதியால் நிச்சயம் தெருவிலே நிற்பார்

இயற்கையின் நியதியை உற்றுநீ கண்டால்
இயங்குதற் கேற்பவே அதுபலன் சேர்க்கும்
இயங்கிடும் அனைத்துமே இயற்கைக் குள்ளாகும்
இயங்கையில் பிழைசெய்யின் அதேபலன் ஆகும்

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

பட்டதில் தொட்டு உணர்ந்திடல் நன்று




பட்டுப் பட்டுப பட்டுப் பட்டுப் படித்த பாடங்கள் தம்மைப்
பிட்டுப் பிட்டுப் பகிரின் அவற்றுள் எத்தனை அனுபவங்கள்!
தொட்டுத் தொட்டு அவற்றில் தேடிப் பகிரும் அவசியங்கள்
தட்டித் தட்டிச் சொல்லிக் காட்டும் சமூகக் கடமைகளை!

எட்டிடும் பொருளை எட்டி எடுப்போம் எட்டாப் பொருளதனை
எட்டியே எடுத்திட ஏற்றவொரு துணையாய் ஏணியை இழுத்திடுவோம்
காட்டினுள்கூட உடன்துணையிருந்தால் துணிவுடன் நுழைந்திடுவோம்
நாட்டினுள் யாரை எப்படி ஏற்றால் நன்றாய் இருந்திடுவோம்?

சுட்டிடுமுண்மை சுட்டிடும்என்றே பொய்தனை நம்புகிறோம்
பட்டினிகிடந்தே பரமனின் இல்லம் புகவழி தேடுகிறோம்
பட்டினி கிடக்கும் மக்களை மறப்போம் கோவிலில் கொட்டிடுவோம்
தட்டிநம் பிழையைச் சுட்டிடின் அவரை வெறுப்புடன் ஒதுக்கிடுவோம்

பட்டநல் லறிவை முன்னவர் முன்பே நமக்கென பகிர்ந்தளித்தார்
பட்டங்கள் பெறவும் அகம்திமிர் கொளவும் இன்றிவர் அதைவகுத்தார்
எட்டிடும் எதையும் நல்மனத்தோடே பிறருடன் பகிர்வதில்தான்
எட்டாஉயரத்தில் தேடிடும் இறைவன் நம்முள்உடனிருப்பான்

வியாழன், 20 செப்டம்பர், 2018

கற்று ஒற்றி வெற்றி தேடு!



உற்றுஉற்றுப் பார்க்கமட்டும் கற்றுத் தெளிந்தால்
கற்றுத்தேறும் கலையுள்ளுன்னை நீயுமிழுப்பாய்
பற்றை வைத்து நீதிதன்னில் பேதம்விளைத்தால்
பற்றைபோன்று நீயும் தகைமை அற்று தொலைவாய்

வெற்றிவாகை சூடஉள்ளம் உன்னுள் நினைத்தால்
கற்றிருக்கும் அனைத்தினுள்ளும் பகுத்துத் தரம்பார்
சுற்றியுள்ள மற்றதற்குள் தலையை நுழைத்தால்
பற்றியுள்ள நல்லதையும் இழந்து துடிப்பாய்

கற்றவனாய் நீயிருந்தால் நினைவில் பதிப்பாய்
கற்ற மற்றர் தந்ததையே நீயும் அறிந்தாய்
கற்றதை நீமற்றவர்க்கும் பகிரும் வழிதான்
கற்ற நல்லஅனைத்துடனும் நீயுமிருந்தால்

சொல்லில் மட்டும் உத்தமரே எங்கணும் உள்ளார்
சொல்லிச் சென்ற மூத்தவர்கள் முதுமொழியெல்லாம்
சொல்லிச் சொல்லி புகழ்பொறுக்கும் கயவர்கள் உள்ளார்
சொல்லும்செயலும் இணைந்தவர்தாம் அரிதென ஆனார்

உண்டு இல்லை என்று வெல்லச் சண்டை போடுவர்
உண்டு எங்கும் ஆத்திகராய் நாத்திக ராக
உண்டுவாழ வழிகளற்ற ஏழைகள் வாழ
உண்டுமா இவர்சண்டைகளுள் நல்வழி? சொல்லு!

போதிப்பரே கூடி ஆடும் உனது சூழலை
சாதிப்பராய்த் தேடிக்கூட்ட நேரம் தேடிடு
பாதிப்புற்ற மக்களாலே உலகம் வாடுது
நாதியற்ற சூழல் மாற்ற எழுந்து நின்றிடு!



சும்மா சில வரிகள் 6

72. கற்களின் குவியலில் அமர்ந்திடப் பார்ப்பான் கலையுணர்வு
   இல்லாதவன். கற்களைச் சேர்த்ததில் அழகுருவம் செய்வான்
   கலையார்வம் மிக்க கலைஞன்.

73. குற்றங்களைச் செய்வதற்கு தைரியம் தேவையில்லை.
   குற்றங்களை ஏற்றுக் கொள்ளத்தான் தைரியம் தேவை.
74. கற்பனை என்பது மனதின் ஆழத்தில் பதிந்து வளர்ந்து,
   மறைந்தவாறே உறுத்திக் கொண்டிருந்து விட்டு, வெளிப்படுத்தும்
   ஆற்றல் வரும்போது உடைப்பெடுத்துக் கொண்டு பாயும்
   மனஆழத்திலுள்ள உண்மைகளேயாகும்.

75. மனந்திறந்து பேசாத வரைக்கும் பகைமைகள் என்பனதொடர்கதைகளாகவே இருக்கும். ஆனால் அதுவே பேச
   முடிவெடுக்கும்போது சிறுகதையாகக் குறுகி, தீர்வு காண்கையில் சிறிய நகைச்சுவைத் துணுக்காக சிறுத்துவிடும்.

76 குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கவைக்கும் மிகச்சிறந்த நகைச்சுவையும் திரும்பத் திரும்பக் கேட்டுவரின் கடும் அலுப்பைத் தந்துவிடும். அளவுக்கு மிஞ்சி மிகத் தொடர்ந்தால் அறிவுரைகளும் அப்படித்தான்.

77. நேரத்தின் முக்கியமே வேகத்தின் தேவைக்கு வித்தானது. பாரத்தின் முக்கியமே வாகனத்தின் தேவைக்கு வித்தானது. தரமான வாழ்க்கையின் முக்கியமே சான்றோர்களின் வரவுக்கு வித்தானது.

78. குற்றஞ்சாட்டித் தண்டிக்க வழிவகுக்க ஏற்றதாக சட்டங்கள் அமையின் அங்கே குற்றவாளிகள் தப்பிக்க வழியமைக்கும் பலவீனமும் பிறந்துவிடும்.

79. நிலையற்ற வாழ்விதில் நிரந்தரம் என்று சொல்ல எதுவுமே எதிலுமில்லை. எனினும் தற்காலிகமானவை அனைத்திலும் நிரந்தரம் தேடுவோர்க்கும் குறைவு இல்லை. இதனால்தான் எங்குமே நிம்மதியுமில்லை.

80. கடலுக்கஞ்சாது கண்டுபிடிக்க விழைந்த மனித அறிவு நாவாய்களையும் மீன் வள பரமாணஙஆகளையும் கற்றுத் தேறி இன்று கடலுக்குள்ளிருக்கும் வெளியுலகினுக்கொப்ப அல்லது அதற்கும் மேலான பல்வேறு வளங்களையும் அரியனவான பலதையும் கண்டுபிடித்துத்தந்து மனித குலத்தை உயர்த்தி வைத்திருக்கிறது.
வானையும் அப்படித்தான் அது அளந்து உயர்ந்து அண்டத்தில் ஊரமைத்து வாழ முற்படுமளவுக்கு முன்னேறியதாக பீற்றியும் கொள்கிறது. ஆனால் என்னே பரிதாபம்!நிம்மதியை அழித்து நிம்மதி தேடும் மடைனையுள்தான் அது எங்கணும் முழுவதுமாக அமிழ்ந்திருக்கிறது.

தாங்கும் சக்திக்குத் தரம் இருக்க வேண்டும்

தாங்கும் சக்திக்குத் தரம் இருக்க வேண்டும்



மரஉளிகொண்டு கற்சிலை வடிக்கும் மடைமையைப் புரியா மூடர்களே
பரமனை எண்ணிப்பரம்பரையழிக்கும் பாதகவழிக்குள் நுழைகின்றார்
கரபலம்தன்னை மட்டுமேநம்பி இரும்பினை உடைத்திடும் முயற்சியில்தான்
தரமதைத் தெரிந்தும் அலட்சியம் செய்யும் தவறுக்குள் மனிதர் நுழைகின்றார்

பொய்களின்மேலே பொய்களை அடுக்கிக் கட்டிடமமைக்கும் போலிகளால்
மெய்களும்கூட பயந்திடும்சூழல் பரவிவரும்நிலை பார்ப்பவர்யார்?
செய்:திடும் தீமை மக்களுக்கான தேவையின்பால்தான் எனஉரைப்பார்
செய்திடும் பாவம்புண்ணியமாக தெய்வத்தை அணுகுதல் யார்உணர்வார்?

வறுமையும் சிறுமையும் நோய்களும்எங்கணும் ஏழைகள்உயிர்களைப் பறிப்பதிலும்
பெருமையும் உயர்நிலை அமைப்புகள்இடங்களும் உள்ளவர்க்கென்றே இருப்பதிலும்
ஒருதுளியேனும் நியாயமேஇன்றி தீயவர் வஞ்சகர் வகுத்ததுவே
அரசியல்வடிவில் நாடுகள்எங்கும் வாழ்வியல்வழியாய் மாறியதேன்?

நம்;பிக்கையெல்லாம் மதங்களின்சுயநல வழிகளால் எங்கணும் தடம்புரண்டே
நம்பிடும் கடவுளும் பணத்தினைவைத்தே பலன்தருமென்பது போலமைந்தே
பாவங்கள்செய்தே பணந்தனைச்சேர்ப்பான் ஒருசிறுபங்கைக் கோவிலிலே
பாவங்கள் தீரக்கொட்டிடும நிலையால் கோவிலும்தீதுஎன் றானதுவே!

முயற்சியின்அடிப்படை இயலாநிலையிலும் இயன்றதில்வெற்றியை அமைப்பதுவே!
முயற்சிpயின்தடமெனப் பிழைவழிதேர்தல் எதனிலும் பிழைதனைச் சேர்த்திடுமே!
பயிற்சியும் முயற்சியும் நேர்மையிலிணைந்தால் கடும்உழைப்பும் சுகம்தந்திடுமே!
பயிரினுக்கேற்ப விளைச்சலைப்போலே ஓழகிடும்விதமதில் தரம் வருமே!

புதன், 19 செப்டம்பர், 2018

கொத்தும் கருவிகொண்டு குழிமூடும் மூடர்கள்

கொத்தும் கருவிகொண்டு குழிமூடும் மூடர்கள்



உலகமதை ஆளும் எந்தத் தலைவனையும் கண்டால் - அவனிவ்
வுலகமதை மாற்றிவிடும் சக்தியுள்ளன் என்பான்
உலகமதில் நீதி நேர்மை அமைதி வேண்டும் என்றால் - அவனே
உலகமதில் தன்வழியே அதைஅமைக்கும் என்பான்

நல்வழியைக் காட்டவரும் மதங்களுக்குள் சென்றால் - எங்கும்
கள்வர்களும் பொய்யர்களும் கடையருமே நிற்பார்
சொல்வதிலும் செய்கையிலும் சரிவழியில் நின்றால்  - அவரை
பல்வகையும் பெயர்கெடுக்கும் கடையர்சூழு கின்றார்

சொத்தும் சுகமும் மட்டும் சேர்த்தல் இலட்சியமாய் வந்தார் – எங்கும்
தொத்தித் தொத்தி இடம்பிடிக்கும் பல்லியராய் நின்றார்
கத்திக் கத்திபொய்யை மெய்யாய் மாற்றுவரே எங்கும்     - இன்று
செத்தும் கெடுக்கும் அழுகியராய் அரசியலில் நின்றார்

கல்வியில்லா மடையராக ஏழை வைக்கவென்றும் - அவர்க்கு
சொல்லிநீதி கேட்கஉரிமை விதியிலில்லை என்றும்
தெய்வம்விதித்த விதியதென்றும் மாற்றலில்லை என்றும் - அந்த
தெய்வம்நம்பி இயங்கும்ஏழை எழுதல்தடுத்தல் நன்றோ?

சுயநலத்தைக் கொண்டசிலர் தாங்கள் உயர்ந்து வாழ – மக்கள்
சுயசிந்தனை தனைத்தடுக்க மதஉருவைத் தந்தார்
பேதங்களும் உரிமையற்ற அடிமைநிலையும் மட்டும் - என்றும்
வேதமாகப் பதிய வைத்துத் தம்மை உயர்த்தி நின்றார்.

புரிந்திடாது தொடருமெதும் அழிவைநோக்கிச் செல்லும் - என்று
புரிந்திடாது வாழும்மக்கள் காக்கப்படல் வேண்டும்
புதிய இளந் தலைமுறைக்கு உண்மைதெளிதல் வேண்டும். - இன்றேல்
புதியதான தட்டினிலும் நச்சுணவே சேரும்

திங்கள், 17 செப்டம்பர், 2018

உணர மறுப்பின் உதிர்வது திண்ணம்

உணர மறுப்பின் உதிர்வது திண்ணம்


நடக்கும் எதற்கும் எதிரென் றொன்று
நடப்பதே இயற்கையின் மார்க்கம் - அதுவே
இணைந்து நின்று இயங்கிடும்போது
பிணைந்து பலனினைக் காட்டும்.

தென்றலும் புயலும் ஒன்றிலிருந்தே
தென்படும் இருவகை மாற்றம் - அதுபோல்
குளுமையின் இன்பம் கடுங்குளிராயின்
குருதியின் உறுதியை; மாற்றும்

வார்த்தைகளின்றி உலகி னியக்கம்
யாவரி னாலே கூடும்? - எதிலும்
வார்த்தையின் சக்தி ஆக்கிடும் மாற்றம்
ஆக்கலும் அழித்தலும் கூடும்.

மனித முன்னேற்றம் இயற்கையை மீறும்
மமதையில் செய்கிற மாற்றம் - உலகின்
அழிவுக்கு மட்டும் உதவிடும் என்றே
அழிவுகள் வரும்விதம் காட்டும்.

செய்பவை எல்லாம் சரிவழி என்றால்
செய்பவவை வெற்றியில் சாரும் - திமிரில்
அறிவினை வைத்து இயற்கையை மிதித்தால்
அழிவதே இறுதியில் ஆகும்.

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

நரிகளின் நாட்டியக் களம் : சனநாயகம்

நரிகளின் நாட்டியக் களம் :  சனநாயகம்


நமக்கென உள்ளதோ ஒரே ஓர் உலகம்தான். அதில் இருக்கும் மனித இனமும் ஒன்றே ஒன்றுதான்.

ஆனால் சுவாத்திய நிலைக்கு ஏற்ப அந்த இனத்தில் உடலியல் ரீதியாகச் சில வேறுபாடுகள் இருப்பதால் தோல் நிறங்களும் கண் போன்ற சில உடல் உறுப்புக்களின் நிறங்களும் அமைப்புக்களும் மாறி அமைந்திருக்கின்றன.

எனினும் இந்த மனித அமைப்பு மட்டும் எல்லார்க்கும் பொதுவான ஒன்றாகவே அமைந்திருக்கின்றது. ஒரு மனிதனின் இரத்தம் இரத்தக் குழக்கேற்ப மற்ற எந்த மனிதனுக்கும் பொருந்தும்.

ஆனால் இந்த மாறுபட்ட மனித உருவங்கள் தத்தமக்குள் உருவாக்கிக்கொள்ளும் தனிப்பட்ட அகந்தை உணர்வுகளினாலும் ஆதிக்க உணர்வுகளினாலும் சுயநல பதவிவெறிகளினாலும் ஒன்றையொன்று அடக்கி வைத்துக் கொள்ள முற்படும் போதுதான் சகல பிரச்சினைகளுக்கும் அத்திவாரம் போடப்பட்டு விடுகின்றது.

மதங்களும் கலாச்சாரங்களும் நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் அவரவர் சார்ந்த சூழ்நிலையுடன் இயங்கிவரும்போது பாதகம் குறைந்த பயனை அளிக்கத்தக்கனவாக இருக்கின்றன.

அதே வேளையில் அவற்றைத் தனித் தனியாக முன்வைத்து மற்றவர்களை தமக்கேற்ப அதற்குக் கீழ் அடக்கி வாழ்க்கையில் பலாத்கார திணிப்புமுறையை அமைத்துக் கொள்ள முற்படுகின்ற பிழையைக் கைக்கொள்ளும் போதுதான் வாழ்வு வளர உதவும் அந்த அத்திவாரங்களே வாழ்வுகள் அழியவும் சிதைவுறவும் வழிகளை அமைத்து விடுகின்றன.

கல்வியும் நாகரீகமும் வளர வளர மனிதன் கூட்டு வாழ்க்கைக்கு ஏற்ற ஒரு நல்ல வழியாகக் கண்டு பிடித்த இந்த ஜனநாயக வாழ்வு முறையும் அப்படித்தான் இப்போது ஆகிக்கொண்டு வருகின்றது..

நல்ல நோக்கத்துக்காக என்று எழுந்துவிட்டு படிப்படியாக ஆதிக்க மனப்பான்மை மிக்க மனிதர்களால் இனநாயக வாழ்வு முறைக்குள் தள்ளப்பட்டு இன்று சமாதானம் தேடி மூச்சு விட முடியாமல் அது திக்குமுக்காடிக் கொண்டு கிடக்கிறது.

அளிக்கும் வாக்குக்குள் பொய்பொதிந்து ஏமாற்றும் அர்த்தமாற்றிகளே ஆட்சிகளை
அமைக்கின்ற இந்த அவலமான வழிமுறையால்தான்…

பொய்யரும் பித்தலாட்டக்காரரும் கள்ளரும் கயவரும் எத்தரும் எமாற்றுக்காரருமே பெரும்பாலும் ஆளும் பலம் பெற்றவர்களாக பெரிய பலம் கொண்ட அரசியல்வாதிகளாக எழுந்து நின்று கொண்டிருக்கின்றார்கள். இதனால் இவர்களால் ஆள்கலை இன்று கீழ்நிலைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இவர்களால்தான்; ஜனநாயகம் என்ற புனிதமான வழிமுறை அவர்கள் சார்ந்த இனத்துக்கான அல்லது மதத்துக்கான அல்லது தகடுதத்தங்களுக்கான முதன்மையைத் தேடும் இனநாயகமாக பசுத்தோலணிந்த நரியாக அலங்கார வேடமணிவிக்கப்பட்டு நாடகமாடும் நிலைக்குள் தவித்துக் கொண்டிருக்கின்றது.

உலகின் பாரிய ஜனநாயக நாடுகளைப் பாருங்கள். மக்கள் தலைமை என்று பொருள்படும் இந்த ஜனநாயகத்தை அவை எவ்வளவு துணிவாக துர்ப்பிரயோகம் செய்கின்றன?

ஒரு மதத்தையோ அல்லது ஒரு மொழியையோ அல்லது சுயநலத்தையோ மட்டும் முன்வைத்து நாட்டை ஆள முற்படுகின்ற அனைவருமே இப்படித்தான் உலகமெங்கும் மக்களுக்காக என்று சொல்லி மக்களை அழிப்பதை ஒரு தர்மமாகக் கடைப்பிடிப்பதாகக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

உண்மையின் அர்த்தங்கள் மாற்றப்பட்டுக் காட்டப்படுகின்றன. நீதிக்கான கொள்கைகள் தீவிரவாதங்களென்றும் தட்டிக்கேட்கும் உரிமைகள் பயங்கரவாத செயற்பாடுகள் என்றும் சத்தியத்தைச் சொல்பவர்களும் சுமப்பவர்களும் கலகக்காரர்களென்றும்
பொருள்திpத்து அடையாளம் காட்டப்பட்டு இணைந்து செயற்படவே எவரையும் அனுமதி;க்க மறுக்கும் அராஜகத்துககே இன்று ஜனநாயகம் என்ற போர்வை போர்த்தப்படுகின்றது.

இதற்கெல்லாம் அடிப்படையான ஆழமான ஒரு திட்டமாக மக்களுக்கான அடிப்படைத் தேவைகளனைத்தையும் வர்த்தகங்களாக்கி அவர்களைக் கல்வியிலிருந்து கானலை நோக்கி நகர்த்தும் அரச பயங்கரவாதங்களும் மத பயங்கரவாதங்களும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன.

நியாயம் விழையும் நீதியை விழையும் மக்கள் விழிப்புணர்வை விழையும் புதிய சந்ததி இப்போதே பொதுமக்களின் சிந்தனையைத் தட்டி எழுப்ப எழும்பிவர வேண்டும்.

இளந்தலைமுறை எழுந்து வரும்போது பழந்தலைமுறை சோர்ந்து இருக்கக்கூடாது
சேர்ந்து இயஙக பக்குவப்படுத்தப்பட வேண்டும். ஆண்டாண்டுக்காலங்களாகக் கல்வி மறுக்கப்பட்டும் அதனவசியம் அறியும் வாய்ப்புக்கள் தவிர்க்கப்பட்டும் இன்று தள்ளாடுகிற பழந் தலைமுறையினர் முட்டாள்களல்லர்.

சரியான வழியறியாதலால் தடுமாறுபவர்கள். அதனை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும். இன்றைய கல்வியை அறுதியிடும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் அறிவியல் உதவி சாதனங்களும் இல்லாத காலையில் வாழ்ந்த வள்ளுவரை நினைத்துப் பார்த்தால் படிப்பும் அறிவும் ஒன்றுக்கொன்று தொடர்புடைத்து தவிர இரண்டும் ஒன்றன்று என்பது புரியும்.

அப்போதே நாவாய் கட்டிக் கடல் கடந்து வணிகம் செயத நம் முனனோர்களும் யானைப் படைகளையே தோணிகளில் எற்றிச் சென்று பல நாடுகளை வென்ற நம்மவர்களும் இவர்களின் வால்களிலா தொங்கியவர்கள்? இல்லையே!

அவர்கள்....

தம்மை உணர்ந்தார்.. தாமே எழுந்தார்
நம்மை உணர்த்திடக்.. காவியங்கள் தந்தார்
நம்மை வளர்த்திட வழிபல தந்தார்
நம்மையே காத்திடத் திருக்குறள் தந்தார்.

எல்லாம்அவர் தந்திருந்தும் தந்திரத்தால் நமையிழந்தோம்
பொல்லாரின் பின்சென்று அவர்வழியால் தரமிழந்தோம்
கல்லாராய் இருந்தாலும் எல்லாரும் உயர்ந்தரென
எல்லாரும் உணர்ந்தால்தான் நம்மினத்தின் கதிஉயரும்.

கண் திறப்போமா?
மண் காப்போமா?
கண்ணொப்ப தாய்வடிக்கும்
கண்ணீர் துடைப்போமா?

வியாழன், 6 செப்டம்பர், 2018

இரத்தமும் நீராகலாம்!

இரத்தமும் நீராகலாம்!

 Image result for tsunami



ணனியின் முன் அமர்ந்திருந்த அமலனின் கண்களுக்கு அதன் திரையில் இருந்த செய்திகளோ படங்களோ தெரியாதபடிக்கு விழிநீர் தடுத்துக் கொண்டிருந்தது. தனது மனம் கனப்பதையும் துயரம் வந்து அதனை அழுத்துவதையும் தாங்குவது சிரமமாக இருந்தது அவனுக்கு.

காலத்தால் தடுக்க முடியாத சில உடன் தொடர் உணர்வுகளும் இருக்கத்தான் செய்கின்றன.

விழிகளில் நிறைந்த நீர் இளஞ்சூடாகக் கன்னத்தில் வழிந்தது. இரு கர ஆள்காட்டி விரல் நுனிகளாலும் அதைத்துதடைத்துக் கொள்ள முயன்றான். விழி எரிவது போலிருந்தது. ஆனால்….

மனதின் பாரத்தைத் தாங்க இயலாமல் போகும்போது இயற்கை வழங்கும் ஆறுதலுக்கான பன்னீரல்லவா இந்தக் கண்ணீர்! எத்தனையோ கோடானுகோடி உயிர்களை அன்றும் இன்றும் என்றும் ஆறுதல் படுத்தவென்று இருக்கும் அந்த வற்றாத ஆறுதல் நதி மட்டும் தொடராமல் நின்றிருந்தால் ஒருவேளை இந்த உயிர்கள் அனைத்துமே முற்றுமுழுதாக துயரங்களால் அலைக்கழிந்து போயிருந்திருக்குமோ என்னவோ!

ஏதோ ஒரு கோமாளித்தனமான கற்பனை போல வந்து குறுக்கிட்ட அந்த நினைப்பு அமலனை அந்த வேளையிலும் சற்று முறுவலிக்க வைத்தது.

பசிக்கு உணவு, தாகத்துக்கு நன்னீர், நோய்க்கு மருந்து, கல்விக்கு ஆசான், அறிவுக்கு நன்னூல், உறவுக்கு குடும்பம், நட்புக்கு நேர்மை, எழுத்துக்கு உண்மை, வெற்றிக்கு உழைப்பு, உழைப்புக்கு ஒத்துழைப்பு, வாழ்க்கைக்கு ஒழுக்கம், புகழுக்குப் பயிற்சி என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்று இருந்தாலும் அனைத்துக்கும் உச்சமாக உயிர்களுக்கு ஒன்றின் தேவைதான் எப்போதுமே மிகமிகமிக அவசியாக இருந்து கொண்டே வந்தது, வருகின்றது, வரவும் போகின்றது என்று அமலனின் சிந்தனை நீண்டது.

எல்லா உயிர்களுக்கும் எல்லாம் இருந்தாலும் எல்லாம் கிடைத்தாலும் என்றுமே தீராத தாகமாக ஏங்க வைத்திடும் பாசம் என்ற ஒன்று இருக்கிறதே! அதில்தானே இறைவனின் முழு அசைவுமே அமிழ்ந்து போய் இருக்கின்றது என்று அவன் நினைத்தான்.

வந்த நாள்முதல் மறையும் நாள்வரை அதுதானே நம்மோடே நிரந்தரமாக, இரகசியமாக, உண்மையாக ஒட்டிக் கொண்டே வருகின்றது!

அமலனின் இதழ்கள் மீண்டும் முறுவலில் நெளிந்தன. „இறைவா, உனது தனிமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல்தான் நீ இந்த „பாசம்“ என்ற புரிந்து கொள்ள முடியாத புத்துணர்ச்சி உணர்வை உயிர்கள் மத்தியில் பரவ விட்டுக் கொண்டிருக்கிறாயா?“

மனம் சற்று தேறி, ஆறுதலடைவது தெரிந்தது. ஒரு கதை போல வந்த அவனது கடந்த கால நினைவுகளில் அவன் மூழ்கிப் போனான்.

                                              ……………………

ம்மா, அம்மா அங்கே பாருங்கள். பொன்கலனும் ரெக்சும் சண்டை போடுகிறார்கள்“ அமலனின் சத்தத்தைக் கேட்ட அம்மா குசினிக்குள்ளிருந்து பதில் சொன்னார்கள்.

„ஏய், ரெண்டு பேரும் சும்மா சண்டை போடாமல் விளையாடுங்கள்“

„அவர்கள் சண்டை போட்டுத்தானம்மா விளையாடுகிறார்கள்“
அமலனின் தம்பிமாரின் அறைக்குள்ளிருந்து குரலொன்று வந்தது.

„அம்மா நாங்கள் அலிபாபா விளையாடுகிறோம். சண்டை போடவில்லை. அண்ணன்தான் பயந்து வருகிறானில்லை“

அம்மா சிரிப்பது கேட்டது. அமலனை வெட்கம் பிடுங்கித் தின்றது. என்னை கோழையென்றல்லவா சொல்கிறான் தம்பி, பாவி ரெக்ஸ்?

„டேய் அமலா, நீயும் போய் அவர்களுடன் „வாள் ஃபைற்“ பண்ணு. பொன்கலன்தான் எம்.ஜி.ஆராக இருப்பான். கவனம்.“

அம்மா சிரித்ததுடன் அவர்களின் கவனம் சமையலுக்குள் நுழைந்து விட்டது புரிந்தது. மெதுவாக அமலன் அவர்களின் அறைக்குள் நுழைந்தான்.

அவனைக் கண்டதும் அங்கே ஈர்க்கில் குச்சி வாட்சண்டையில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த எம்.ஜீ.ஆரும் வீரப்பாவும் ஒரேயடியாகத் திரும்ப, எம.ஜீ.ஆர். பொன்கலன் கத்தினான்.

„டேய் ரெண்டு பேரும் சேர்ந்து அண்ணனை வெளுப்போம். வாடா“

அவ்வளவுதான் சண்டை போட்டுக் கொண்டிருந்த எதிரிகள் இருவரும் ஒன்றாகவே அமலனின் பக்கம் திரும்பிக் கொண்டார்கள். அமலன் எடுத்தான் ஓட்டம்.

அவன் அம்மாவின் பக்கம் சென்று ஒளியவும் வீரப்பா அட்டகாசமாகச் சிரித்தார்.
„அலிபாபா கள்ளன் பயந்தோடி அம்மாவுக்குப் பின் ஒளிகிறான். ஹாஹாஹா! ஏய் கையைத் தாக்கு. இல்லையேல் குத்திக் கொன்று விடுவோம். ஹாஹாஹா“

அலிபாபாவும் வீரப்பாவும் தங்களின் வாள்களை நீட்டிக் கொண்டே நெருங்க, அமலன் அம்மாவின் முதுகுக்குப் பின்னால் பதுங்கினான். அம்மாவே அமைதிப் பேச்சுக்கு முன் வந்தார்கள்.

„ஐயா வீரர்களே! இந்த ஆள் ரொம்ப பயந்து போய்விட்டார். இப்போ நீங்கள் மட்டும் சண்டை போடுங்கள். கொஞ்சம் பொறுத்து வீரத்தை எடுத்துக் கொண்டு அவர் வருவார்.“

வீரப்பாவும் எம்.ஜீ.ஆரும் போட்ட அட்டகாசச் சிரிப்புச் சத்தத்தில் குசினி அதிர்ந்தது. அமலனின் மானமே போய்விட்டது.

„நான் இவன்களோடே விளையாடப் போக மாட்டேனம்மா. என்னைத் தனியாக விட்டு விட்டு இருவரும் சேர்ந்தே அடிக்க வருகிறான்கள்;“

அமலனின் அழாக்குறையான மன்றாட்டை இரசித்த அம்மா, அமலனிடம் ஒரு வெங்காயத்தைக் கொடுத்துத் தோலுரிக்கச் சொன்னதும் அமலன் உடனே கீழ்ப்படிந்து கொண்டான். குச்சிவாள் குத்தை விடவும் குசினி வேலை பாதுகாப்பானது என்றவன் எண்ணிக் கொண்டான்.

                             …........................................................
த்தனை வருடங்களுக்குப் பிறகும் தனது பசுங்கால நினைவு
தந்த அந்தப் பாசத்தின் அனுபவத்தின் சுகம் மேகம் தாங்கிச் சுமப்பதைப்போன்ற ஒரு கற்பனைச் சுகானுபவத்தைத் தருவதை உணர்ந்த அமலனுக்குள் அதுவே ஒரு பயங்கர துயரத்தையும் கலக்கவிடுவதைத் தாங்குவதே கடினமாக இருந்தது. அந்தச் சம்பவம் நடந்து இரண்டே மாதங்களுக்குள் இளைய தம்பி பொன்கலன் மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்து போனான். மற்ற தம்பி அமலன் நாடு கடந்து வாழத் தொடங்கிய பின் இளவயதில் மாரடைப்பால் மறை;து போனான். வுpழிநீர் நிறைவது புரிந்தது.

பரவாயில்லை.

காலம் எதற்காகவும் எவர்க்காகவும் தன் கடமையைக் கைவிடுவதில்லை.எல்லா உயிர்களும் அதற்குள் அடங்கித்தான் ஆகவேண்டும்.

அருகில் வாழும்போது அன்பின் அருமையை அறிந்துகௌ;ளாத அல்லது புரிந்து கொள்ளாத உறவுகள் பிரிந்துபோக நேர்ந்து அதுவே தொடர்ந்து போக நேர்ந்தால் பதறுவதும் ஏங்குவதும் ஆதங்கப்படுவதும் இயல்புதானே!

புலம் பெயர் வாழ்க்கைக்குள் எரிந்துகொண்டிருக்கின்ற இத்தகைய துயரமிகு மெழுகுவர்த்திகள்தான் எத்தனை இலட்சங்கள்?

பாவம் இவர்கள் பரிதாபத்துக்குரிய மனித நடைப்பிணங்கள்.


                ….....................

மார்கழி மாதம். எங்கணும் கடுங்குளிரும் ஆங்காங்கே பனிமழையுமாக
ஐரோப்பா வெடவெடத்துக் கொண்டிருந்தது. நத்தார் பண்டிகைக்காலம் நெருங்குவதால் அதன் களிப்பால் பலரும் உற்சாக மிகுதியுடன் செயல்பட்டுக் கொண்டிருந்த நேரம்.

அன்று மாலை அமலனின் தொலைபேசி திடீரென அலறியது. அதை எடுத்துத் தனது காதில் வைத்த அமலனின் மனைவியும் அலறினாள்.

„ஐயோ என் தம்பி போயிட்டானா? ஐயோ ஐயோ!„

முழுக் குடும்பமும் அதிர்ச்சியில் திகைக்க அமலன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரமறிந்து கொண்டான்.

கோழும்பிலிருந்து மலையகம் நோக்கிப் பயணித்த ஓர் இசைக்குழுவில் அறிவிப்பாளனாகக் கலந்து கொள்ள அமலனின் மனைவியின் தம்பி ராஜாவும் குழவினருடன் இணைந்து சென்றபோது எங்கோ ஒரு மலைச் சரிவில் அவர்கள் சென்ற பேருந்து வழுக்கித் தடம்புரண்டு ஒரு பள்ளத்தில் விழுந்ததில் ஓரு பாரமான இசைக்கருவி ராஜாவின் தலையை மிகப் பலமாகத் தாக்கிவிட அதனால்அவன் மட்டும் துரதிட்டவசமாக மரணிக் நேர்ந்து விட்டதுவாம் என்ற துயரச் செய்தியால் அனைவரும் கலங்கி நின்றார்கள்.

ராஜா அங்கே பிரபலமான ஒரு நடிகனாகவும் சிறந்த நிகழ்ச்சி அறிவிப்பாளனாகவும் இருந்தான். நல்ல குணசாலி. அத்துடன் கலகலப்பாக எல்லரிடத்திலும் எப்போதும் பழகி நல்ல பெயரெடுத்தவன்.

தனது மூத்த மகனை மட்டும் வீட்டைப் பொறுப்புடன் கவனிக்க வைத்துவிட்டு மற்ற இரு பிள்ளைகளுடன் அமலனின் குடும்பம் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளப் புறப்பட்டது.

இது இப்படி இருக்க அமலனின் சிந்தனை தனது சொந்தக் குடும்பத்தையும் அப்பொழுது இழுத்து நின்றது. கிட்டத்தட்ட பதினாறு ஆண்டுகள் கழித்து முதல் தடவையாகத் தனது உறவுகளையும் அதிலும் விசேடமாகத் தனது தந்தையையும் சந்திக்கப் போகும் நினைவு அவனுககுள்; குடைந்து கொண்டிருந்தது.

ஆழ் கடல் கடந்து அயல்நாடு வந்த பின் தந்தையுடன கொண்டிருந்த மடல் தொடர்பு திடீரென நின்றதும் அதற்குக் காரணம் தந்தையின் பார்வை சக்தி மறைந்து போனதும் பிறகு நீரழிவு நோய் காரணமாக அவரது ஒரு கால் முழங்காலுடன் துண்டிக்கப்பட்ட செய்தியும் அவர் அந்நிலையிலும் தனது பெயரையே எப்போதும் சொல்லிச் சொல்லிப் புலம்புவதாகவும் தனது சகோதரியின் மூலமறிந்த செய்தியும் அவனுள் சுட்டுக் கொண்டிருந்த நெடுநாளைய புண்கள்.

இந்த சந்தர்ப்பம் அதற்கு ஓர் ஆறுதல் பெற்றுத்தருமென்ற நம்பிக்கை ஒருவித மகிழ்ச்சியை அவனுக்குள் நுழைப்பதை அவனால் தடுக்க முடியவில்லை.

         …............................................................

பூமிப் பந்தை விட்டு விரைந்தோடிப் பறந்துவிடப் பெருமுனைப்புடன் போராடி அதில் வென்று விட்ட திருப்தியில் அமைதியான ஒரு பறவையைப்போல அடித்துப் புரணடு கொண்டு ஓடுதளத்தில் பதறி ஓடிப் பாய்ந்து பறந்த விமானம் இப்போது அமைதியாகப் பெருமூச்சு விட்டபடி பறப்பதைப்பேல ஒரு வித அமைதியுடன் பறந்து கொண்டிருந்தது.

ஏப்பொமுதுமே நடித்து நடித்Nது வாழ்க்கைய ஓட்டிக் கொண்டிக்கும் மனி குலத்தின் கூட்டம்.
தத்தனது அகத்தின் உண்மை அழகைக் காட்ட விரும்பாத பல முகங்கள்.
மலர்ந்த முகங்கள்
தளர்ந்த முகங்கள்
இரண்டு; கெட்டான் முகங்கள் என்று அத்தனையும் பொய்முகங்கள்தான். அதிலும் சில முகங்களில் தற்பெருமைச் சேறு வேறு வழிந்து கொண்டிருப்பதை உணர முடிந்தது.

ஏதோ ஒரு திரைப்படப் பாடல் கெட்பது போன்ற உணர்வு...ர்hர்வையொன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா...?
எவனோ எதற்காகவோ பாட அதை அமலனின் மண்டைக்குள் பாடிக்காட்டிய மனக்கண்ணை நினைத்து அவன் முறுவலித்துக் கொண்டான அப்போது.

தனது தந்தையின் கவி ஆற்றல் - சிறந்த பாடல் பாடும் குரல் வளம் - கம்பீர இளந்தோற்றம் -புத்தியும் தைரியமும் கலந்த அவைக்கஞ்சாமை -அடித்துச் சொல்லும் ஆற்றல் இவைகளையெல்லாம் காலப் புல்வெளியிலிருந்து பிய்த்துப் பிய்த்து எடுத்து அமலனின் மனம் அசை போட்டுக் கொண்டிருந்தது.

ஏத்தனை துயரங்களுக்குள்ளும் அயராத மகிழ்ச்சியுடனிருந்த நல்ல குடும்பத்தில் அம்மா என்ற அடித்தளத் தூண் சரிந்தால் நிலைமை எப்படித் தலைகீழாகும் என்பதைத் தனது சொந்த அனுபவத்தில் உணர்ந்திருந்த அமலனுக்குள் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் உணர்ச்சியும் காலச் சுழற்சியின் காட்சியுமாகப் பல திரைப்படங்களாக
நினைவலைகள் ஓடத் தொடங்கின.

எத்தனை அனுபவங்கள் பாடங்கள் வழிகாட்டுதல்கள் சுய கண்டுபிடிப்புக்கள் என ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கைக்குள்ளும்
உண்மைகள் உழன்று கொண்டிருக்கின்றன!

இவற்றை முறைப்படித் தொகுத்தால் எத்தனை ஆயிரம் கதைகளை எழுதலாம் எத்தனை உயிர்களுக்கு உதவலாம் என்றெல்லாம் அமலனின் சிந்தனைக் கயிறுகள் முடிச்சிடத் தொடங்கி விட்டன எனலாம்.

காலம் இந்த ஞாலத்தை நடத்தப் போகும் விதம் தெரிந்தால் என்ன நடக்குமோ தெரியாது ஆனால் அதை அது ஒரு புதிராகவே நடத்துகிறதால்தால் வாழ்க்கையில் மனிதருக்குள்ள பிடிப்பு வலுக்கிறது என்பது மட்டும் புரிகிறது.

               
இலங்கைத் தீவின் பசுமையையும் அற்புதமான அதன் அழகையும் வானத்தில் இருந்து பார்த்த அமலனின் நெஞ்சமும்  விழிகளும்
ஒருங்கே நிறைந்து கொண்டிருந்தன.



                 …................................

றுதிச் சடங்கில் கலந்து முடித்தபின் தனது தந்தையிடம் சென்று சந்தித்துப் பேசிடவும் அவரது ஆசியைப் பெற்றிடவும் மனம் நிறைந்த கனவோடே தனதில்லம் நோக்கி நடந்த அமலனுக்குத் தனது கழுத்திலே ஒரு கோடரி கொத்தக் காத்திருப்பது அப்போது தெரிந்திருக்கவில்லை.

அதுதான் இந்தக் காலதேவனின் திருவிளையாடல்.

தான் பிறந்து வளர்ந்த தனது வீடு பலவித மாற்றங்களுடனும் மாடியுடனும் முற்றிலும் மாறியிருந்தது. அவனது சகோதரியர் அவனை வரவேற்றார்கள்.

முதலில் அப்பாவைப் பார்த்து விடுவோம்.

„அப்பா எங்கே?“

அவரைக் காட்டிய திசையில் அவர் ஒரு நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்தார்.மலன் அவரை நெருங்குகையில் ஒரு தங்க அமலனை நெருங்கிச் சொன்னாள்.

„அண்ணன் அப்பா அதையிதைச் சொன்னால் அலட்டிக் கொள்ள வேண்டாம். சும்மா சிரித்துச் சமாளித்துவிடுங்கள்“

அமலனுக்குப் பெரிய அதிர்ச்சி.

„ஏன்ன சொல்கிறாய்? புரியவில்லையே!“

„முதலில் கிட்டப்போய் பேசுங்கள்“ அவளிடம் தெரிந்தது ஒருவித.. பதட்டமா அல்லது நடக்ககூடியதை உணர்ந்த தீர்க்கதரிசன உணர்வா?

புரியவில்லை அமலனுக்கு. நேராக அப்பா அருகில் சென்று அமர்ந்து கொண்டு

„அப்பா நான்தானப்பா மகன் வந்திருக்கிறேன்“  என்றான்.

காலதேவனின் கோடரி உயர்ந்தது.

„நகர்ந்து நில்லடா முதலில். யாருக்கோ பிறந்த எவனோ ஒருவன் என்னிடமே வந்து என் பிள்ளை என்று சொன்னால் நான் நம்புமளவுக்கு மடையனா என்ன?

„என் மகனின் குரலை என்னை விடவும் சரியாக உணரத்தக்கதாக உன்னால் எப்படியடா சொல்ல முடியும்? புதிதாக வந்திருக்கிறானாம். என் பிள்ளையுடன் தினசரி பேசுபவன் நான். என்னையே ஏமாற்றப் பார்க்கிறாயா? ஏய் யார் அங்கு இருக்கிறீர்கள் முதலில் இவனை வெளியேற்றுங்கள் அல்லது நான் பொல்லாதவனாகி விடுவேன்.“

காலதேவனின் கோடரி விழுந்து தலைதுண்டிக்கப்பட்ட துயரத்தில் அமலனின் இதயம் துடிதுடித்தது.அவனே விறைத்துப் போய் விக்கித்து நின்றான்.

அமலனின் தங்கை அவனை சைகை செய்து அழைத்தாள்.  மௌனமாக அவளை நெருங்கினான் அமலன்.

„அண்ணன் அப்பாவுக்கு பார்வை போன பிறகு உங்களிடமிருந்து கடிதங்கள் வருவதும் நின்றபடியால் அப்பா சதா உங்களை நினைத்து பேர் சொல்லி அழைத்து அழைத்து அரற்றி அழுதுகொண்டே இருந்தார்கள். அதனால் நாங்கள் யோசித்து நமது சேகரை நீங்கள் என்று சிறிது காலம் குரல் மாற்றிப்பேச வைத்தோம். முதலில் ஏற்க மறுத்தவர் தினசரி அவன் அவருடன் பேசப்பேச அந்தக்குரலை உங்கள் குரலென நம்ப ஆரம்பித்தார். அதனால்தான் இப்படி நடந்துவிட்டது.“

சேகர் என்னால் எங்கள் வீட்டி; வளர்ப்பு மகனான எனது நண்பன்.
விளக்கம் சரியோ பிழையோ அமலனின் தந்தை தன் மகனை இழந்துவிட்டார் என்று மட்டும் அவனுக்குள் புரிந்தது. இனி என்றைக்கும் இதுவாகவே நிலை இருக்கும்.


அமலன் தனது தங்கையைப் பார்த்து ஒரு பிணம்போலச் சிரித்தான். உள்ளுக்குள் அவனது இருதயம் இரத்தக் கண்ணீர் வடித்துத் துடித்துக் கொண்டிருந்தது.

பிறப்பதன் பெறுமதி இறக்குமுன் போய்விடின் இருந்தென்ன இறந்தென்ன?
உறவதன் பெறுமதி உயிர்முன்னே உடைந்திடில் உறவதன் நிலையென்ன?
இரக்கமே இல்லானாய் இருப்பவன் இறையெனில் இருந்தென்ன மறைந்தென்ன?
சுரக்கின்ற இரத்தமே தண்ணீராய் மாறுமேல் இதயத்தில் நலனென்ன பயனென்ன?

திறந்துபார்! தெரிந்துவிடும்!

Bildergebnis für deep thinker bild




பிழைவழி என்தெரிந்தும் அதன்வழி ஒழுகுபவன்
பிழைவழி உயரல்சரி எனஅதனில் ஒட்டுகிறான்
பிழையதுவும் இயலபுஎனத் தனக்கதனில் துணைவிழைவான்
பிழையுடனே பிழையிணைத்தே அதனுடனே மாட்டுகிறான்

மதமதனை மட்டும் வைத்து மனிதமதை மிதிப்பதனை
மதமதனின் தந்திரத்தால் பாதுகாப்பு பெற்றவனே
மதவெறியின் சுயநலத்தை மக்கள்அழி தந்திரத்தை
மதம்குறிக்கும் கடவுளனின் சித்தமென்றும் நம்புகின்றான்

பலவிதமாய் வண்ணங்களை இயற்கைதரும் வியப்புதனை
சிலசுயநல மனிதர்களே உயர்வெனவும் தாழ்வெனவும்
பலப்பலவாய் தரம்விதித்துப் பழிபுகுத்திப் பலனடைந்தார்
பலமுணரா மந்தைகளாய் மானிடரும் பணிந்திருந்தார்

கண்திறக்கப் பயந்திருந்தால் இருட்டுஎன்றும் தொடர்ந்திருக்கும்
கணப்பொழுதே திந்திருந்து சிந்தைதனை இயங்கவிட்டால்
மனப்பயங்கள் அகன்றுவிடும் மததந்திரம் புரிந்துவிடும்
சினம்புகுத்தி இனமவகுத்து மனம் தளர்த்தல் தெரிந்துவிடும்

நல்விரலும் நற்கரமும் நல்லுளியும் சுத்தியொன்றும்
கல்மலைக்குள் கலைகளையும் பயன்படுநல் பொருட்களையும்
நல்விதமாய் ஆக்கிவிடும் என்பதனைப் புரிந்துகொண்டு
நல்லிதயம் நல்வழிகள் வகுத் துலகைக் காத்திடுவாய்!

திங்கள், 3 செப்டம்பர், 2018

நாமாக்கின் நமதாகும்



Image result for bilder muontain beauty


எதிர்பார்ப்பு எதுவுமின்றி உறுதியுடன் நாமிருந்தால்
ஏமாற்றம் என்பதற்கு இடமெதிலும் இருந்திடாது.
பதில்பார்த்து உதவிசெய்யும் மனப்பான்மை வளர்ந்திருந்தால்
பதிலிந்த உலகமதில் கானலன்றி வேறிராது.

நட்புக்குள் உறவுக்குள் பாசத்துள் சுயநலத்தால்
நல்வாழ்க்கை பலபேர்க்கு நரகமதாய் ஆனதுண்டு
முட்செடியாய் இருந்தாலும் ரோசாவின் இல்லம்அது
கெட்டவர்போல் தெரிவரிலும் நல்லவர்கள் இருப்பதுண்டு

நாற்புறமும் மலையமைந்தால் நல்லசுகக் குளிரிருக்கும்
நாலுநல்ல உறவிருந்தால் நமதுமனம் குளிர்ந்திருக்கும்
நல்ல கெட்ட என்று எதிலும் வேவு பார்த்தல் தவிpர்த்துவந்தால்
நல்லதாக நமது மனம் தனித்துவமாய்க் வளர்ந்;திருக்கும்

எந்தநிலை வந்திடினும் நல்லதையே நினைப்பதுவும்
எந்த செயல் செய்தினும் நல்லநோக்கம் சேர்ப்பதுவும்
எந்தநிலை வந்தபோதும் தீமைதன்னைத் தவிர்ப்பதுவும்
எந்த நாளும் நமதுமனத் தூய்மைதனுக் குதவிவரும்.