வெள்ளி, 14 செப்டம்பர், 2018

நரிகளின் நாட்டியக் களம் : சனநாயகம்

நரிகளின் நாட்டியக் களம் :  சனநாயகம்


நமக்கென உள்ளதோ ஒரே ஓர் உலகம்தான். அதில் இருக்கும் மனித இனமும் ஒன்றே ஒன்றுதான்.

ஆனால் சுவாத்திய நிலைக்கு ஏற்ப அந்த இனத்தில் உடலியல் ரீதியாகச் சில வேறுபாடுகள் இருப்பதால் தோல் நிறங்களும் கண் போன்ற சில உடல் உறுப்புக்களின் நிறங்களும் அமைப்புக்களும் மாறி அமைந்திருக்கின்றன.

எனினும் இந்த மனித அமைப்பு மட்டும் எல்லார்க்கும் பொதுவான ஒன்றாகவே அமைந்திருக்கின்றது. ஒரு மனிதனின் இரத்தம் இரத்தக் குழக்கேற்ப மற்ற எந்த மனிதனுக்கும் பொருந்தும்.

ஆனால் இந்த மாறுபட்ட மனித உருவங்கள் தத்தமக்குள் உருவாக்கிக்கொள்ளும் தனிப்பட்ட அகந்தை உணர்வுகளினாலும் ஆதிக்க உணர்வுகளினாலும் சுயநல பதவிவெறிகளினாலும் ஒன்றையொன்று அடக்கி வைத்துக் கொள்ள முற்படும் போதுதான் சகல பிரச்சினைகளுக்கும் அத்திவாரம் போடப்பட்டு விடுகின்றது.

மதங்களும் கலாச்சாரங்களும் நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் அவரவர் சார்ந்த சூழ்நிலையுடன் இயங்கிவரும்போது பாதகம் குறைந்த பயனை அளிக்கத்தக்கனவாக இருக்கின்றன.

அதே வேளையில் அவற்றைத் தனித் தனியாக முன்வைத்து மற்றவர்களை தமக்கேற்ப அதற்குக் கீழ் அடக்கி வாழ்க்கையில் பலாத்கார திணிப்புமுறையை அமைத்துக் கொள்ள முற்படுகின்ற பிழையைக் கைக்கொள்ளும் போதுதான் வாழ்வு வளர உதவும் அந்த அத்திவாரங்களே வாழ்வுகள் அழியவும் சிதைவுறவும் வழிகளை அமைத்து விடுகின்றன.

கல்வியும் நாகரீகமும் வளர வளர மனிதன் கூட்டு வாழ்க்கைக்கு ஏற்ற ஒரு நல்ல வழியாகக் கண்டு பிடித்த இந்த ஜனநாயக வாழ்வு முறையும் அப்படித்தான் இப்போது ஆகிக்கொண்டு வருகின்றது..

நல்ல நோக்கத்துக்காக என்று எழுந்துவிட்டு படிப்படியாக ஆதிக்க மனப்பான்மை மிக்க மனிதர்களால் இனநாயக வாழ்வு முறைக்குள் தள்ளப்பட்டு இன்று சமாதானம் தேடி மூச்சு விட முடியாமல் அது திக்குமுக்காடிக் கொண்டு கிடக்கிறது.

அளிக்கும் வாக்குக்குள் பொய்பொதிந்து ஏமாற்றும் அர்த்தமாற்றிகளே ஆட்சிகளை
அமைக்கின்ற இந்த அவலமான வழிமுறையால்தான்…

பொய்யரும் பித்தலாட்டக்காரரும் கள்ளரும் கயவரும் எத்தரும் எமாற்றுக்காரருமே பெரும்பாலும் ஆளும் பலம் பெற்றவர்களாக பெரிய பலம் கொண்ட அரசியல்வாதிகளாக எழுந்து நின்று கொண்டிருக்கின்றார்கள். இதனால் இவர்களால் ஆள்கலை இன்று கீழ்நிலைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இவர்களால்தான்; ஜனநாயகம் என்ற புனிதமான வழிமுறை அவர்கள் சார்ந்த இனத்துக்கான அல்லது மதத்துக்கான அல்லது தகடுதத்தங்களுக்கான முதன்மையைத் தேடும் இனநாயகமாக பசுத்தோலணிந்த நரியாக அலங்கார வேடமணிவிக்கப்பட்டு நாடகமாடும் நிலைக்குள் தவித்துக் கொண்டிருக்கின்றது.

உலகின் பாரிய ஜனநாயக நாடுகளைப் பாருங்கள். மக்கள் தலைமை என்று பொருள்படும் இந்த ஜனநாயகத்தை அவை எவ்வளவு துணிவாக துர்ப்பிரயோகம் செய்கின்றன?

ஒரு மதத்தையோ அல்லது ஒரு மொழியையோ அல்லது சுயநலத்தையோ மட்டும் முன்வைத்து நாட்டை ஆள முற்படுகின்ற அனைவருமே இப்படித்தான் உலகமெங்கும் மக்களுக்காக என்று சொல்லி மக்களை அழிப்பதை ஒரு தர்மமாகக் கடைப்பிடிப்பதாகக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

உண்மையின் அர்த்தங்கள் மாற்றப்பட்டுக் காட்டப்படுகின்றன. நீதிக்கான கொள்கைகள் தீவிரவாதங்களென்றும் தட்டிக்கேட்கும் உரிமைகள் பயங்கரவாத செயற்பாடுகள் என்றும் சத்தியத்தைச் சொல்பவர்களும் சுமப்பவர்களும் கலகக்காரர்களென்றும்
பொருள்திpத்து அடையாளம் காட்டப்பட்டு இணைந்து செயற்படவே எவரையும் அனுமதி;க்க மறுக்கும் அராஜகத்துககே இன்று ஜனநாயகம் என்ற போர்வை போர்த்தப்படுகின்றது.

இதற்கெல்லாம் அடிப்படையான ஆழமான ஒரு திட்டமாக மக்களுக்கான அடிப்படைத் தேவைகளனைத்தையும் வர்த்தகங்களாக்கி அவர்களைக் கல்வியிலிருந்து கானலை நோக்கி நகர்த்தும் அரச பயங்கரவாதங்களும் மத பயங்கரவாதங்களும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன.

நியாயம் விழையும் நீதியை விழையும் மக்கள் விழிப்புணர்வை விழையும் புதிய சந்ததி இப்போதே பொதுமக்களின் சிந்தனையைத் தட்டி எழுப்ப எழும்பிவர வேண்டும்.

இளந்தலைமுறை எழுந்து வரும்போது பழந்தலைமுறை சோர்ந்து இருக்கக்கூடாது
சேர்ந்து இயஙக பக்குவப்படுத்தப்பட வேண்டும். ஆண்டாண்டுக்காலங்களாகக் கல்வி மறுக்கப்பட்டும் அதனவசியம் அறியும் வாய்ப்புக்கள் தவிர்க்கப்பட்டும் இன்று தள்ளாடுகிற பழந் தலைமுறையினர் முட்டாள்களல்லர்.

சரியான வழியறியாதலால் தடுமாறுபவர்கள். அதனை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும். இன்றைய கல்வியை அறுதியிடும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் அறிவியல் உதவி சாதனங்களும் இல்லாத காலையில் வாழ்ந்த வள்ளுவரை நினைத்துப் பார்த்தால் படிப்பும் அறிவும் ஒன்றுக்கொன்று தொடர்புடைத்து தவிர இரண்டும் ஒன்றன்று என்பது புரியும்.

அப்போதே நாவாய் கட்டிக் கடல் கடந்து வணிகம் செயத நம் முனனோர்களும் யானைப் படைகளையே தோணிகளில் எற்றிச் சென்று பல நாடுகளை வென்ற நம்மவர்களும் இவர்களின் வால்களிலா தொங்கியவர்கள்? இல்லையே!

அவர்கள்....

தம்மை உணர்ந்தார்.. தாமே எழுந்தார்
நம்மை உணர்த்திடக்.. காவியங்கள் தந்தார்
நம்மை வளர்த்திட வழிபல தந்தார்
நம்மையே காத்திடத் திருக்குறள் தந்தார்.

எல்லாம்அவர் தந்திருந்தும் தந்திரத்தால் நமையிழந்தோம்
பொல்லாரின் பின்சென்று அவர்வழியால் தரமிழந்தோம்
கல்லாராய் இருந்தாலும் எல்லாரும் உயர்ந்தரென
எல்லாரும் உணர்ந்தால்தான் நம்மினத்தின் கதிஉயரும்.

கண் திறப்போமா?
மண் காப்போமா?
கண்ணொப்ப தாய்வடிக்கும்
கண்ணீர் துடைப்போமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக