ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

விழி மூடிடின் விழி போய்விடும்



புண்ணியம் எனநம்பி நீநுழை பாதைகள் பலதிலும் பொய்யுண்டு கேள்!
எண்ணியும் பாராமல் நீசெய்யும் காரியம் எத்துணை வீண்என்று பார்!
கண்காணும் காட்சிகள் பலநூறு கண்முன்னே “கானலாய்ப்” பொய்யாவதேன்?
வெண்புறா அமைதியின் சின்னமெனக் காட்டுவோன் அழிவினைச் செய்கின்றதேன்?

மதங்களின் பெயரினால் மூலைமுக்கெங்கணும் பணம்பண்ணும் கூடங்கள்காண்!
;மதவாதி கள்கூடி ஆட்சியில் அமரவே படுகின்ற பாடுகள் பார்!
மதவாதி சொல்கின்ற கற்பனைப் பொய்களுள் மக்களைப் பிரிப்பதைப் பார்!
மதங்கொள்ளா தொற்றுமை யாகவே வாழநீ இடமின்றி அடைப்பதைப்பார்!

மக்களுள் ஒற்றுமை குலையவே வழிவகை செய்கின்ற தீய வர்கள்
மக்களுள் அவர்களின் மைந்தாபோல் நடிப்பதில் நரிகளாவர்
மக்களின் மனங்களுள் வதிந்திடும் இறைவனை இழிவுசெய் தீயராவர்
மக்களின் கவனத்தைக் கலக்கியே உயர்வுக்கு வழிதேடும் கயவராவர்

தெளிவில்லா அறிவுடன் இருப்பவர் இவர்கட்கு இலகுவாய் இரையாகுவார்
தெளிந்தவர் ஆழமாய் சிந்தித்து நிற்பவர் சுடுகின்ற நெருப் பாகுவார்
வழியெங்கும் நெளிகின்ற நாகமாய் நாசஞ்செய் மனிதர்கள் எங்கும்இன்று
வழிமாற்றி உனைஏய்க்கும் பேய்களாய் வருகிறார் தெளிவுடன் எதிர்த்து நில்லு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக