வியாழன், 20 செப்டம்பர், 2018

சும்மா சில வரிகள் 6

72. கற்களின் குவியலில் அமர்ந்திடப் பார்ப்பான் கலையுணர்வு
   இல்லாதவன். கற்களைச் சேர்த்ததில் அழகுருவம் செய்வான்
   கலையார்வம் மிக்க கலைஞன்.

73. குற்றங்களைச் செய்வதற்கு தைரியம் தேவையில்லை.
   குற்றங்களை ஏற்றுக் கொள்ளத்தான் தைரியம் தேவை.
74. கற்பனை என்பது மனதின் ஆழத்தில் பதிந்து வளர்ந்து,
   மறைந்தவாறே உறுத்திக் கொண்டிருந்து விட்டு, வெளிப்படுத்தும்
   ஆற்றல் வரும்போது உடைப்பெடுத்துக் கொண்டு பாயும்
   மனஆழத்திலுள்ள உண்மைகளேயாகும்.

75. மனந்திறந்து பேசாத வரைக்கும் பகைமைகள் என்பனதொடர்கதைகளாகவே இருக்கும். ஆனால் அதுவே பேச
   முடிவெடுக்கும்போது சிறுகதையாகக் குறுகி, தீர்வு காண்கையில் சிறிய நகைச்சுவைத் துணுக்காக சிறுத்துவிடும்.

76 குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கவைக்கும் மிகச்சிறந்த நகைச்சுவையும் திரும்பத் திரும்பக் கேட்டுவரின் கடும் அலுப்பைத் தந்துவிடும். அளவுக்கு மிஞ்சி மிகத் தொடர்ந்தால் அறிவுரைகளும் அப்படித்தான்.

77. நேரத்தின் முக்கியமே வேகத்தின் தேவைக்கு வித்தானது. பாரத்தின் முக்கியமே வாகனத்தின் தேவைக்கு வித்தானது. தரமான வாழ்க்கையின் முக்கியமே சான்றோர்களின் வரவுக்கு வித்தானது.

78. குற்றஞ்சாட்டித் தண்டிக்க வழிவகுக்க ஏற்றதாக சட்டங்கள் அமையின் அங்கே குற்றவாளிகள் தப்பிக்க வழியமைக்கும் பலவீனமும் பிறந்துவிடும்.

79. நிலையற்ற வாழ்விதில் நிரந்தரம் என்று சொல்ல எதுவுமே எதிலுமில்லை. எனினும் தற்காலிகமானவை அனைத்திலும் நிரந்தரம் தேடுவோர்க்கும் குறைவு இல்லை. இதனால்தான் எங்குமே நிம்மதியுமில்லை.

80. கடலுக்கஞ்சாது கண்டுபிடிக்க விழைந்த மனித அறிவு நாவாய்களையும் மீன் வள பரமாணஙஆகளையும் கற்றுத் தேறி இன்று கடலுக்குள்ளிருக்கும் வெளியுலகினுக்கொப்ப அல்லது அதற்கும் மேலான பல்வேறு வளங்களையும் அரியனவான பலதையும் கண்டுபிடித்துத்தந்து மனித குலத்தை உயர்த்தி வைத்திருக்கிறது.
வானையும் அப்படித்தான் அது அளந்து உயர்ந்து அண்டத்தில் ஊரமைத்து வாழ முற்படுமளவுக்கு முன்னேறியதாக பீற்றியும் கொள்கிறது. ஆனால் என்னே பரிதாபம்!நிம்மதியை அழித்து நிம்மதி தேடும் மடைனையுள்தான் அது எங்கணும் முழுவதுமாக அமிழ்ந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக