வியாழன், 20 செப்டம்பர், 2018

கற்று ஒற்றி வெற்றி தேடு!



உற்றுஉற்றுப் பார்க்கமட்டும் கற்றுத் தெளிந்தால்
கற்றுத்தேறும் கலையுள்ளுன்னை நீயுமிழுப்பாய்
பற்றை வைத்து நீதிதன்னில் பேதம்விளைத்தால்
பற்றைபோன்று நீயும் தகைமை அற்று தொலைவாய்

வெற்றிவாகை சூடஉள்ளம் உன்னுள் நினைத்தால்
கற்றிருக்கும் அனைத்தினுள்ளும் பகுத்துத் தரம்பார்
சுற்றியுள்ள மற்றதற்குள் தலையை நுழைத்தால்
பற்றியுள்ள நல்லதையும் இழந்து துடிப்பாய்

கற்றவனாய் நீயிருந்தால் நினைவில் பதிப்பாய்
கற்ற மற்றர் தந்ததையே நீயும் அறிந்தாய்
கற்றதை நீமற்றவர்க்கும் பகிரும் வழிதான்
கற்ற நல்லஅனைத்துடனும் நீயுமிருந்தால்

சொல்லில் மட்டும் உத்தமரே எங்கணும் உள்ளார்
சொல்லிச் சென்ற மூத்தவர்கள் முதுமொழியெல்லாம்
சொல்லிச் சொல்லி புகழ்பொறுக்கும் கயவர்கள் உள்ளார்
சொல்லும்செயலும் இணைந்தவர்தாம் அரிதென ஆனார்

உண்டு இல்லை என்று வெல்லச் சண்டை போடுவர்
உண்டு எங்கும் ஆத்திகராய் நாத்திக ராக
உண்டுவாழ வழிகளற்ற ஏழைகள் வாழ
உண்டுமா இவர்சண்டைகளுள் நல்வழி? சொல்லு!

போதிப்பரே கூடி ஆடும் உனது சூழலை
சாதிப்பராய்த் தேடிக்கூட்ட நேரம் தேடிடு
பாதிப்புற்ற மக்களாலே உலகம் வாடுது
நாதியற்ற சூழல் மாற்ற எழுந்து நின்றிடு!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக