திங்கள், 29 அக்டோபர், 2018

தலையைச் சுற்றுதே ...சாமி!




வறுமையை அலட்சியம் செய்கின்ற நாடும்

கல்வியில் பதவியில் விளையாட்டில் சாதனையில் திறமையில் பாகுபாடு தேடும் நாடும்

விவசாயிகளையே பஞ்சத்துள் தள்ளி வஞ்சிக்கும் நாடும்

கல்வியில் வெற்றிக்குத் தடையிடும் சட்டங்களை விதிக்கும் நாடும்

ஏற்றத் தாழ்வில் தாமுயரும் பாதகர்களிடம் சிக்கிய நாடும்

பத்திரிகைச் சுதந்திரம் பறிக்கப்படும் நாடும்

உண்மைகளைத் திரித்து வழங்கி மக்கள் மனதில் பொய்யை மெய்யெனப் பதித்து ஆட்சியமைக்கும் தீயவர்கள் நிறைந்த நாடும்

ஒன்றைச் சொல்லி வந்துவிட்டு மற்றொரு வழியில் தந்திரமாய் நாட்டைக் கொள்ளையடிப்போர் ஆட்சியைக் கொண்ட நாடும்

உண்ணவும் உடுக்கவும் தன் விதத்தில் ஒழுகவும் இடம்தர மறுத்துத் தாம் நினைத்தபடியே மக்கள் வாழ வற்புறுத்தி வதைக்கும் நாடும்

மத நல்லிணக்கத்தைக் குலைப்பதே மக்கள் பணியாக நினைக்கும் பிற்போக்காள் நிறைந்த நாடும்

வெறித்தனமே ஆள வேண்டும் மனிதம் பணிந்தே இருக்க வேண்டும் எனச் சிறுமதியினர் நடனமாட அனுமதிக்கும் நாடும்

வன்கொடுமைகள் அத்தனைக்கும் சாதி வைத்து முக்கியத்துவம் தரும் தொடர்பணியிலிருக்கும் பத்திரிகைகளே சனரஞ்சகமாக இருந்து வரும் நாடும்

பணத்துக்காகப் பாதகங்கள் செய்பவரும் கையூட்டலே வாழ்க்கையில் வெல்லும் வழியென நம்பும் பாமரரும் இணைந்தே இயக்கும் நாடும்

கையறு நிலையில் நல்லவரும் கோழையராய் தயங்கி இயங்கி வரும் நாடும்.....

இந்த உலகப் பந்தில் எங்கெங்கெல்லாம் உள்ளன எனத் தேடினேன். ஓன்றிரண்டு மூன்று நான்கு கொண்ட பல நாடுகளைக் கண்டேன். ஆனால் எல்லாமும் கொண்ட ஒரு முழுமை நாடும் வந்தது கண்ணெதிரில். அது...


கண்ணைச் சுற்றுதே சாமி. கவலை தள்ளுதே சாமி!  

சனி, 27 அக்டோபர், 2018

மனவளத்தின் ஆணிவேர்




விண்வெளிக்கு அழகு கிரகங்களும் விண்மீன்களும்போல்
மண்ணுக்கு அழகு இயற்கையமைப்பும் உயிரின வடிவுகளும்போல்
தண்ணீர்க்கு அழகு அதனுள் வதியும் மீனினங்களும் தாவரங்களும்போல்
மனிதர்க்கு அழகு மனதைக் கண்ணியத்துள் இருத்திச் சிந்தித்தல்தான் எனலாம்.

இன்றைய உலகின் அனைத்து நிம்மதியின்மைகளுக்கும் அத்திவார வேர்களாகப் பரவிக் கிடப்பவை தனக்கே அல்லது தமக்கே என எண்ணங்களை வளர்க்கும் சுயநலமும் தன்னொப்பப் பிறர் வாழ அல்லது உயர மனமொப்பா இழிமனமும்
பிறர் நலம் கெடுத்தாகில் தான் முன்னேற மனதில் இடமளிக்கும் பலவீனங்களும்
பார்வைகளிலெல்லாம் பிறர் குறை தேடல் பிறர் நலன் காணப் பெறுக்காமல் பொறாமை கொளல் சரியென நம்பும் தாழ்வு மனப்பான்மை இப்படிப் பலப்பல விதங்களில் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கின்றன.

புpறர் குறை சுட்டிக் காட்டத் தயங்காத நமக்கு நம் குறையைச் சுட்டிக் கொள்ளும் அறிவும் தட்டிக் கேட்கும் துணிவும் குறைந்தே இருந்து வருகின்றது. இந்த மனநிலைதான் தரங்குறைந்த பிறர்பற்றிக் குறைசொல்லும் புரணிக் கதைகளில் கற்பனைச் சுவையுணர்ந்து அவற்றைத் தேடித்தேடி அலைய வைக்கின்றது.

இதனால்தான் பணம் பண்ண விழையும் பத்திரிகைகள் அத்தகைய தரங்குறைந்த செய்திகளை வைத்தே பிரபலந்தேடி வளர்ந்து கொண்டிருக்கின்றன. தரம் எது தாழ்வெது என்பதைத் தெரிவதில் தவறிழைக்கும் மனதிற்குக் கவர்ச்சியில் ஈடுபாடு காட்டுமளவிற்கு கண்ணியத்திலும் நியாயத்திலும் நீதிசார் சிந்தனைகளிலும் ஈடுபாடு
காட்டும் பக்குவம் இருக்காது.

இதுதான் இன்றைய பொதுமக்களில் பெரும்பாலாரை சிந்தனை பலவீனர்களாக எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளிலும் வைத்துக் கொண்டிருக்கின்றது.

இவர்களை வைத்துத்தான் இன்றைய சனநாயகக் கோட்பாடு பொய்யர்களாலும் பித்தலாட்டக்காரர்களாலும் மத மொழி வெறியர்களாலும் பணம் பண்ணவென்றே வரும் அரசியல் அயோக்கியர்களாலும் நாற்சக்கரங்களும் காற்றற்ற வாகனமாத் தடுமாற- அதைத் தள்ளித்தள்ளி நகர வைக்கும் அப்பாவிக் கூலிகளாகப் பொதுமக்களால் தள்ளப்பட்டுக் கொண்டு வருகின்றது.

பசியிலும் வறுமையிலும் தாழ்த்தப்பட்ட நிலைகளிலும் வழிதெரியாது தவிக்கும் பெரும்பான்மை மக்கள் ஏமாற்றப்பட்டு பணபலத்தால் விலைக்கு வாங்கப்பட்டு
வாக்கின் அருமையை உணராதவர்களால் அயோக்கியர்கள் கைகளில் அகப்பட்டுக் கடைசியில் பசி அறியாதவனும் பசி உணராதவனும் தரம் தெரியாதவனும் தறுதலைகளுமாக சனநாயக சிம்மாசனத்தைக் குரங்குகளே எங்கும் ஆக்கிரமமிக்கும் நிலையினால் உலக சனநாயகம் உனமுற்று துடித்துக் கொண்டிருக்கின்றது.

ஓன்றிரண்டில் வேண்டுமானால் தவிர்ப்பிருக்கலாம். இது நிர்வாண சபையில் ஆடையுடன் நின்று அவமதிக்கப்படுவதைப் போன்ற கவலை தரும் நிலையல்லவா? தலைவிதி!

கண்ணியமாக வாழ்வதற்கு முதலில் வாழ்வினடிப்படையை உணர்ந்திருக்க வேண்டும்.
அதற்கு முதலில் கொடுத்தாலன்றிப் பெற முடியாத சில விடயங்களைத் தெரிந்திருக்க வேண்டும்.

மரியாதை: ஒரு புன்னகையால் - ஒரு வார்த்தையால் - ஒரு சைகையால் 
        ஒரு நற்செயலால் மற்றவர்களிடமிருந்து இதனைப் பெற்று விடலாம்.
        இதிலெதுவும் உங்களுக்கு திரும்பி வரும்போது நீங்கள் கற்பீர்கள்
        கண்ணியமான நடத்தையின் பிரதிபலிப்பை. நீங்கள் உயர நீங்கள்
        கொடுத்தவையே பயன் தரும் ஏணிப்படிகளாய் எதிர்வழிகளாய் முன்
        தெரிவதை உணருவீர்கள்.
        இச் செயல்கள்பிழையான பாதிப்பைத் தந்தால்? அதிராதீர்கள்.
        முத்தினைத் தெரியாமல் பன்றிகள் முன் வைத்துவிட்டோம் என
       உணர்ந்த எச்சரிக்கையுடன் ஆனால் விடாது தொடருங்கள்.          
      
       சிம்பன்சிக் குரங்கு பல்லை இளித்தால் அது சிரிப்பல்ல அதன்
        கோபத்தின் வெளிப்பாடு. சில சமயங்களில் நாயிலும் இதை
        உணர்ந்திருப்பீர்கள். ஆக மனித முக வெளிப்பாடுகளில் பரவலாக
        இருக்கும் கபடத்தனம் புரிகிறதல்லவா?   

கோபம்
:  இது நம் எல்லாரிடமும் எப்போதும் உறவாடிக் கொண்டிருக்கும்
        மிக நல்   நண்பனாகவும் ஆபத்தான விரோதியாகவும் இருக்கும் ஒரு
       குணமாகும்.
      
     ஆத்திரத்தை அடக்கினால் ஆபத்துக்களைத் தவிர்க்கலாம். நட்புறவைக்
        காத்துக் கொள்ளலாம். வீண் பகை தவிர்க்கலாம்.

மன்னிப்பு : அத்தனை நல்ல குணங்களிலும் மேலானதும் மனதில் நிரந்தர
        அமைத நிலவ உத்தரவாதத்துடன் உதவி செய்ய வல்லதும் இதுதான்.
        இதைத்   தவிர்த்தால் இதயத்தின் நல்ல இடங்களிலெல்லாம்
        பொய்மைகளும   பொறாமைகளும் வெறுப்புணர்வுகளும் தொற்றிக்
       கொண்டுவிட பெரும் வாய்ப்பு உண்டு.
    
        மன்னித்தல் என்பது மிகமிக இலகுவானது ஆனால் அதற்கு ஏற்ப
         மனதை வளர்ப்புது கடினமானது. மனதார உங்களுக்குத்
         தீங்கிழைத்தவர்களையும் எதிராக நடப்பவர்களையும் ஏன் உங்களை
         ஏய்ப்பவர்களையும் கூட மன்னிக்கும் துணிவை நீங்கள் பெற்றால்
         நிம்மதி
         கதவைத் திறந்து கொண்டு உங்கள் இதயத்தில் குடியேறுவதையும்
         மிக இலகுவாக இழப்புக்கள் அலட்சியமாவதையும் புரிந்து கொள்வீர்கள்.

இன்னும் பலப்பல விடயங்களில் வாழ்க்கை இலகுபட மார்க்கங்களுண்டு. என்றாலும் மிகமிக இலகுவாக அனைத்தையும் எப்போதும் இப்படிப் புரிந்து கொள்ள சிந்தித்து முடிவெடுங்கள்.

வருகையில் வெறுமனே வந்த நாம் வாழும்போது ஆக்குமெதுவும் சேர்க்குமெதுவும் அமைக்குமெதுவும் அவை எத்தகைய முக்கியத்துவமாகப் பட்டாலும் அனைத்துமே நிலையற்று காலத்தால் மலர்ந்து வளர்ந்து உதிர்ந்து காய்ந்து போகின்றவையே!
 

நாம் கடைப்பிடிக்கும் நல்ல குணங்கள் படிப்பினை சார்ந்த அனுபவங்கள் இவையே நமக்குப் பின் நமது சந்திதகளுக்கும் சமுதாயத்திற்கும் நற்காற்றென நலம் சேர்க்கும்

திங்கள், 22 அக்டோபர், 2018

தமிழர் கனவு நனவாக தமிழர் மனதுள் தெளிவூட்டு!




மக்கள் மனத்துள் பதிய வேண்டியதைச் சரியாய் நாம் பதித்தால்
மக்கள் தெளியத் தாமதித்தாலும் காலம்அதனைச் சரி செய்யும்
மக்கள்தேவை இன்றைக்கென்ன என்பதைத் தெளிவாய் நாம் விளக்கி
மக்கள் அவைக்கு நாங்கள்வென்றால் அவற்றைத் தருவோம் என விளக்கு

இருளில் தவிக்கும் மக்களுக் கெங்கும் ஒளியின்  விளக்கம்; வீணாகும்
இருளில் ஒருசிறு விளக்கினைக் கொடுத்தால் அதுவே உண்மையில் பலனாகும்
உணவும் நீரும் உயிரொப்ப கல்வியும் உறையுள் மற்றும் வீதிகளை
உங்களின் அரசினில் பங்கெடுப்பவராய்ப் பங்குறச்செய்தே தந்திடுவோம்

கந்தல் உடைகளும் அவையுமில்லாமையும் இல்லாதொழித்தே காத்திடுவோம்
கதருடை அணிவோம் நம்நெச வாளர் தொழில்வளர்ந்துயர்ந்திட உதவிடுவோம்
இயற்கையின் அணைப்புடன் வாழ்ந்திடும வாழ்க்கையைப்பற்றிப் பற்றிவளர்ந்திடுவோம்
செயற்கையின் பின்னே ஓடிடும்மாயை செய்கிற எத்தரை விரட்டிடுவோம்

கல்வி இலவசம் மருத்துவம் இலவசம் அருந்திடும் நன்னீர் இலவசமாம்
கல்வியில் தமிழே தலைமையில் நிற்கும் பிறபல மொழிகளும் உடனிருக்கும்
வாழ்வின் அடிப்படை அறிவில் முதலிடம் எதிலும் திறமை முதலிருக்கும்
தாழ்நிலை வீழ்ந்தோம் சரித்திரம் மறந்து எழுவோம் எழுதுவோம் நம்சரிதம்

தமிழர்கள் அனைவரும் தமிழர்ஆலயம் அனைத்திலும் வணங்கிட வழிவகுப்போம்
தமிழரை ஏய்த்தே பிழைக்கும் கயவர்கள் கனவினைத் தகர்த்தெமைக் காத்திடுவோம்
தமிழர் தனித்தனியாகவும் அணியென இணைந்தும் எழுநிலை தோற்றிடுவோம்
தமிழர்நாமே இம்மண்மைந்தர் இதனைஆள்பவர் இனிமேல்  எம்மவரே!


          

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

அவதானம் அறிவு வளர அவசியம்




இறைவன்என்ற நம்பிக்கையைக் கதைகள்கட்டிக் காப்பவர்
இறைவன்பெயரில் பொய்யைவைத்துத் தம்மைவளர்க்கும் கீழ்மகர்
தரையில் நின்று வானை விளித்து இறையைத்தேடும் மூடர்கள்
தரையும் உருண்டை வடிவுக்குள் அடக்கம் எனஉணராத மூடர்கள்

கறைபடியாத மனமதனோடு அறிவினில் தெளிவினை ஊட்டுதல்
நிறைவினை நன்மைகள் செய்வதில் உணரும்வழிதனைப் பிறர்க்குக் காட்டுதல்
இறையைநம்பும் மனங்களுக்குள்ளே உண்மைபதிந்திடற் குதவிடின்
பறையறைந்தும் பலரழைத்தும் அவர்புகழ் பரப்பல்கூட நல்லதே!

அன்புஎன்ற ஒன்றில் மட்டும் இறைவன் உண்டு என்பவன்
அன்புதன்னைப் பலபெயர்வைத்துப் பேதம்செய்யும் மார்க்கமாய்
பண்புஅற்று ஏற்றத்தாழ்வில் அடிமைத்தளத்தை ஆக்கினால்
அன்புகொன்று தீமைவளர்க்கும் தீயவரே ஆளுவார்

அமைதிதன்னைத் தேடிஅன்று அமைக்கபபட்ட மதங்களால்;
அமைதிகெட்டு உலகம்எங்கும் கொலைகள் பரவக் காரணம்
அமைதிகெடுத்துத் தம்மைவளர்க்கும் சுயநலப்பேயர் கூட்டமே!
அமைதிதேடி அவரைநம்பின் எவர்க்கும்தொடரும் தீமையே!


சனி, 20 அக்டோபர், 2018

நாமே நாடத்தகு நல்ல அனுபவங்கள்



மதங்களினாலே நன்மைவரும்என மனதினுள்உண்மையில் நீநினைத்தால்
மதபேதம் எனும் நச்சினைக் கொண்ட மனதுடன் கொடுவழி இறங்காதே!
இதம்தரும் வார்த்தை பதந்தரும்பண்பு இதரர்க் குதவிடும்; கருணையுடன்
நிதமுனைநீயே வழிசெல்லவைத்தால் உன்வழிஉன்மதக் குறளாகும்

தெரியாவிதங்களில் நீதியின்சக்தி இயங்குதல் இலகுவில் புரியாது
புரியாவிடயங்கள் இலையென மறுப்பது எதனிலும்ம்சரியாய் இருக்காது
சரியாய்ச் சரியைப் புரிந்திட முயலின் தாமதமிருப்பினும் தவறாது
மரியாதையினை மனிதருள் பகிர்ந்தால் இறைவனை உணர்வோம் தவறாது


கரும்பதன் சுவையை சரியாய் உணரக் கடித்தததை (உ)ருசித்தல் சரியாகும்
விரும்பிடும் விதமதில் இறைவனை உணர இதயத்தின்ஈரமே சரியாகும்
வறுமையை இயலாநிலைதனைக் கொண்டவை அனைத்திலும் நீ உணர்ந்தால்
சிறுசிறு வகையிலும் பசியுடன்கல்வி வழிவகை வகுத்தலும் சரியாகும்

எவரது துன்பமும் நினதெனநினைத்திடும் பக்குவ மதைமனம் பெறவேண்டும்
எவரது துயரமும் களைவதில் உன்மனம் உண்மையில்ஆர்வம் கொளவேண்டும்
எவரது உயர்விலும் உன்மனம் நிறைவுறும் உத்தமம் உன்னுள் எழவேண்டும்
எவரது வாழ்விலும் நன்மையே சேர்ந்;திட விழைமனம் உன்னுள் வரவேண்டும்

வெள்ளி, 19 அக்டோபர், 2018

பாலியல் சகதியில் நொண்டிக் குதிரைகள்

பாலியல் சகதியில் நொண்டிக் குதிரைகள்

அமெரிக்காவிலிருந்து ஆரம்பமாகிப் படிப்படியாக உலகெங்கும் பரவிவிட்டிருக்கும் இந்த “நானும்தான் அல்லது எனக்கும்தான்” எனும் பொருள்பட நடிகையர்களால்  அயோக்கியர்களுக்கு எதிராகத் திரையுலகத் திரைமறைவுப் பாலியல் வன்வகைத் திருவிளையாடல்கள் வெளிவந்ததன் பின்னால் இதர பல துறைகளின் பின்னணிகளிலுமிருந்தும் தைரியமிக்க பெண்கள் முன்வந்து தமக்கு நிகழ்ந்த கடந்தகால சம்பவங்களை வெளிப்படுத்தி இன்று தமது இரண்டாந்தர ஆணாதிக்க மதிப்பு நிலையைத் தகர்க்க முயன்று படிப்படியாக அதில் பல நாடுகளில் வெற்றியும் நாட்டி வருகின்றார்கள். முpக மிகப் பாராட்டத்தக்க விடயம் இது.

ஆனால் அதன் தொடர்ச்சி இந்தியாவைத் தொட்ட போதுதான் சக்திமிக்கதான அந்த இயக்கம் சகதி மிக்கதான ஒரு அருவருப்பு நிலைக்குள் சிக்கி விட்டதோ என்ற சந்தேக சூழ்நிலையை உருவாக்கியிருப்பதுபோல உருமாறித் தெரியத் துவங்கியிருக்கின்றது.

குற்றமே செய்யாத படுசுத்தமான மனிதப்புனிதர்கள் பலர் புற்றினின்று வெளிவரும் கறையான்களாக முகநூலிலும் “வாட்ஸ்ஆப்” பிலும் “யூட்யூப்” பக்கங்களிலும் மேடைகளிலும் கெட்ட கேட்டிற்கு அரசியல் மற்றும் ஆன்மீகக் களங்களிலும்கூட இந்த “மீற்டூ” ட்விட்டர் பரபரப்புக்களினால் நாடே அதிலும் தமிழ் நாடே மிகுந்த பரபரப்பாக நாறிக்கொண்டு வருகின்றதுபோல் தெரிகின்றது.

ஏழைகளையும் கோழைகளையும் தனிமையிலிருக்கும் தளிர்களையும் பச்சைக் குழந்தைகளையும் கூட விட்டு விடாத காமுகக் கயவர்களும் தனக்கு நடந்த பாதிப்புக்கு நீதி கேட்டுச் செல்பவளைக்கூடத் தம் காமப்பசிக்குப் பங்கு போடும் காவலர்களும் ஆண்டவனின் பெயரால் ஆங்காங்கே காமக் களியாட்டம் நடத்தும் ஆ...ஆசாமிகளும் நடைபாதையிலும் பயண வேளையிலும்கூட கைநீட்டிச் சுகம்தேடும் கைங்கர்யத்தில் கைதேர்ந்தவரும் கடமை செய்ய வந்தவரைத் தமது காமத்திற்குக் கையிழுக்கும் அதிபர் நிலை அயோக்கியர்களும் அமைச்சர்களும் ஏன் ஆளுநரும்கூட இதற்குள் சிக்கி நிற்பது பெரிய அவமானமாக இருக்கின்றது.

இதனிடையே தம்மைத்தாமே உயர்வாகத் தம்பட்டமடித்துக் கொண்டும் தம்மையே உணராது தமது கருத்துக்களால் தாமே தாழ்ந்தவர் என சுயஅடையாளப்படுத்திக் கொண்டு பெரியவராக நடமாட முயலும் அறிவுத் திருநங்கைகட்கும் குறைவில்லை போலத் தெரிகின்றது.

தன் கண்ணை அடைத்து மறைக்கும் ஒட்டடையை உணராமல் மற்றவர் கண்ணில் துரும்பகற்ற முயலும் விதத்தில்தான் இந்தப் பாடகி பாடலாசிரியர் பாலியல் கதையும்  இப்போது ஓடிக்கொண்டிருக்கின்றது.

பாடகி சின்மயியின் முறைப்பாடு உண்மையோ பொய்யோ அதனை வைத்து தனிநபர்
நற்பெருக்குக் களங்கம் கற்பிக்கவும் அவரை அப்படியே அடித்தளம் நோக்கித் தள்ளிப் புதைத்துவிடவும் என்று ஒரு சதிக்கூட்டமே பின்னிருந்து இயங்குவதுபோல அல்லது இயக்குவது போலத்தான் பக்க சார்பற்று சிந்தித்தால் புரிகிறது.

சில வேலைகளில் வேகமிருக்கும் விவேகமிருக்காது. சில வேலைகளில் விவேகமிருக்கும.; நேர்மை இருக்காது. சில வேலைகளில் நியாயம் இருக்கும்.
ஆனால் அணுகுமுறைத் தவறால் அது தோற்றுப்போகும்.

ஆனால்.....
நியாயத்தை நம்புபவர்கள் சுய வளர்ச்சிக்காhகச் சந்தர்ப்பந் தேடி வீழ்த்த முயல மாட்டார்கள். மாறாகஎவரையும் எதற்காகவும் எதிர்க்கத் தயங்காமல் தம்மவரைக் கொண்டோ தமக்காக வருபவரைக் கொண்டோ உடனடியாகவே தட்டிக் கேட்பார்கள்.

வசதி வாய்ப்புக்கள் இல்லாத ஏழைகள் அனாதைகள் தாழ்த்தப்பட்ட மக்களாக சமுதாயத்தில் நியாயங்கள் மறுக்கப்படுபவர்கள் இவர்களை இதற்குள் சேர்க்க முடியாது. 

ஆனால் பிரபல்ய பலமிருந்தும் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளவோ அல்லது வேறு சுயநலக் காரணங்களுக்காகவோ தனக்குப் பாதிப்பை ஏற்படுத்தியரை வெளியுலகிற்கு உயர்வாக விட்டுக் கொடுத்து தாமும் உயர தம்முடன் தொடர தொழில் வகையில் இடமளித்து விட்டு அதை வைத்து உயர்ந்தும் விட்டு காலங்கடந்து களங்கம் கற்பிப்பதன் பின்னணிக் காரணமாக சொல்லப்படும் காரணங்களே மிகவும் பலவீனமாக இருக்கின்றன.


சின்மயி தனது வாழ்க்கையில் தான் பாலியல் தவறுகளே செய்தறியாதவர் போலவும் பாலியல் தவறுகள் தமக்கு நடந்ததே இல்லை என்பது போலவும் காட்டிக் கொள்ள முனைவதைக் கவனித்தால் அவர் திருமணமான பின் கணவரை விளித்து சம்பவத்தை விளக்கிய பின் அவரை வைத்தே கவிஞர் வைரமுத்துவை விசாரித்திருக்கலாமே!அல்லது சட்டத்தரணியை உடன் வைத்தே கூட விசாரித்து அவரை எச்சரித்தோ ஏற்ற நடவடிக்கை எடுத்தோ முடித்திருக்கலாமே!

இத்தனை பெரிதாக இதை வைத்துத் தத்தம் சமுதாய நலனுக்காக மணிக்கணக்கில் உரையாற்ற ஓடி வருகிற இத்தனை பெண்ணியல் பெரியார்களும் இதைக் காட்டியே தமக்குக் கூட்டம் சேர்க்கும்  தொலைக் காட்சிகளும் பத்திரிகைகளும் தத்தமது மனசாட்சியைத் தட்டிச் சொல்லட்டும்:

நாங்கள் பாலியல் தவறுகளைச் செய்ததே இல்லை. எமக்கும் எவராலும் அப்படி நடந்ததே இல்லை. தனியாகவோ இணையாகவோ குழுவாகவோ எதுவிதத்திலும் அதில் ஈடுபடவோ ஈடுபாடு கொண்டதுவோ இல்லை- கொள்வதுமில்லை அல்லது கொள்ளப் போவதுமில்லை என்று சொன்னால் அவரை அல்லது அவளை ஒன்றில் தடிகொண்டு அடிக்க வேண்டும் இன்றேல் தீவைத்துக் கொளுத்த வேண்டும்.

ஏனெனில் எந்த ஒரு மனிதப் பிறவியும் முழுமை பெற்ற பிறவியல்ல. நல்லதும் கெட்டதும் கலந்தவர்தான். தமது உண்மையை மறைக்கப் பலரும் தோற்றங்களை மேம்படுத்தி மறைந்து நிற்பதுதான் உண்மை.

அகப்படாதவரையில் அத்தனை அயோக்கியர்களும் உத்தமர்கள்தான். அதுபோல  நாம் காணும் சந்திக்கும் பழகும் அத்தனை பேருக்குள்ளும் அயோக்கியமும் யோக்கியமும் கலந்தேதான் உள்ளன. புடம்போட்டால் நிமிரலாம்.தடம் தவறின்
தடுக்கி விழலாம். அவ்வளவுதான்.

குற்றம் உண்மையெனில் தண்டனைக்கு வழி தேடவேண்டும். குற்றமில்லையெனில்
குற்றஞ சாட்டுபவரை அவதுர்று வழக்கில் இழுத்து வாலை நறுக்க வேண்டும்.
ஆவ்வளவுதான்.

இடையில் புரணி கூறிப் புகழ் தேடும் நொண்டிக் குதிரைகளுக்கு மட்டும் ஒன்று தெளிவாகத் தெரிய வேண்டும்.

உங்களின் உள்ளங்கை சொல்கிறது:

நடுநிலையில் உன் பெருவிரல்நான் சொல்கிறேன்.

எவரை நோக்கியும் நீ என் ஆள் காட்டி விரலை நீட்டுகையில்
இதர மூன்று விரல்களும் உன்னை முதலில் சுட்டுவதை நினைவில் வைத்திரு.

ஊரைத் திருத்த உன்னைத் திருத்து. அதுவே மருந்து.

வெள்ளி, 5 அக்டோபர், 2018

நிழலை நம்புமுன் நிஜத்தைத்தேடு






ஆழ்சிந்தனை அற்றிருப்பமை மடைமைவிதைக் கத்திவாரம்
கீழ்சிந்தனைக் கடிபணியும் ஆபத்ததன் அத்திவாரம்
கீழ்சிந்தனை நிறைந்தவர்க்கு இணைசேர்க்கும் அத்திவாரம்
கீழ்நினைவை மேல்நினைவாய் தவறிழைக்கும் அத்திவாரம்

பாழ்செய்து பதவிதனைக் காத்திடற்குத் துடிக்கிறவன்
வாழ்நாளில் நன்மையெனத் தீமைதனை ஏற்றிருப்பான்
காழ்ப்புணர்வை கண்ணியன்போல் மக்களிடை விதைப்பதனை
வாழ்வளிக்கும் நற்செயல்போல் நம்பவைக்க முயன்றிடுவான்

செய்யவிழை பாதகங்கள் புண்ணியம்போல் தெரிவதற்கு
செய்யவிழை சதிதனக்கு மதம் சாதி இழுத்திடுவான்
பெய்யவிழை மழைதனுக்கும் மற்றவரைப் பழிக்கிழுத்து
மெய்யைவிழை மக்களுக்கும் பாதகங்கள் விதைத்திடுவான்

முள்ளைக் காட்டி ரோசாதன்னை வெறுக்கவைக்க இழிக்கிறவன்
கள்ளத் தனத்தால் ரோசாதன்னைத் தனக்கென்றாக்க நினைக்கிறவன்
கள்ளம்கொண்ட அன்னியனொருவன் கயமைநீயும் அறியாவண்ணம்
உள்ளம்கவர்ந்திpட முயல்வான்அவனை உணரேல்அழிவே நிச்சயம்திண்ணம்!