ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

பசப்பு வார்த்தைகளைப் பாசமென நம்பாதே!




கரையான்கள் அயர்ந்திருந்தால் பாம்பின்புற்று  ஆகிவிடும்
தலைமைகள் பலம்குறைந்தால் அந்நியர்கள் பலம் பரவும்
முறையில்லா விதமமைந்தால் சோலைபுதர்க் காடாகும்
வரைவகுக்கும் அறம் சோர்ந்தால் அநநியர்வசம் நாடாகும்

கண்திறந்தே துயிலுபவர் பொதுமக்கள் எனஇருந்தால்
மண்பறிக்கும் தீயவர்கள் அடக்கியாள மனம்வகுப்பார்
மண்சாரா வெளிமகனை மரியாதைக் கிழுத்துநின்றால்
மண்பிடித்து நினையாண்டு உன்மண்ணைப் பறித்திடுவான்

பொதுமக்கள் சேவையினைப் பணம்பண்ணும் கயவரிடம்
பொதுமக்கள் தற்காலச் சிறுவுதவிக் கடகுவைத்தால்
பொதுமக்கள் எந்நாளும் பொறுக்குவராய் ஆகிடுவார்
பொதுமக்கட்: குரிதனைததும் அவர்பறித்தே உயர்ந்திடுவார்

ஆட்சியொன்றை அமைப்பதிலே அறிந்துணர்ந்து செயல்படலே
மாட்சிமைக்கு வழியமைக்கும் மக்களாட்சி மலரவைக்கும்
காட்சிவைத்துக் கவர்ச்சிசெய்தும் கலகம்செய்தும் வெல்லவரின்
வீழ்ச்சிக்கான வழியுனக்கு வருகுதென்று தெளிந்திருப்பாய்!

அள்ளியள்ளித் தருவதுபோல் அரசுபணம் தருவதுவும்
அள்ளியதைக் கொண்டதிகம் செய்கிறதாய் எண்ணுவதும்
நஞ்சுணரா துணவருந்தும் நமையிழக்கும் மூடத்தனம்
பஞ்சுபோன்ற பசப்புவாhத்தை பாசமன்று – கயமைத்தனம்

புதன், 13 பிப்ரவரி, 2019

கண்ணுறங்கில் கல் நசுக்கும்! கவனம்!





உலகைச் சூழ்கிற அத்தனையும் வருமொருகாலம் கற்பனைதான்!
உலகைச் சூழ்கிறஆபத்துக்கள்  காலத்தின்பக்கத்தில் கற்பனைதான்!
உலகைப் படைத்த சக்தியெதோ அதுவும் ஒருநாள் கற்பனைதான்!
உலகை அழிக்கும் மனிதகுல விஞ்ஞானம்அதும்; கற்பனைதான்!

கனவுஎன்னும் ஒன்றினையன்றி உற்றதுணைநமக் கெதுவுமில்லை
கனவுகள்கண்ட மனிதர்கள்வாழ்வே வரலாறாயின வேறுஇல்லை
கனவுகள்என்பன கற்பனைச்சிதறல்கள் படைக்கும் ஒருவித ஓவியம்தான்!
கனவுஎன்பது இல்;லையென்றே லிந்த வையகமே வெறும் பூச்சியம்தான்!

இறைவன் வீட்டில் இடம்பிடித்திடவே இருக்கும்வீட்டை இடிப்பவர்தாம்
இறைவன் பேரில் மதம் பலபிடித்தே ஒற்றுமைதடுத்திட மோதுகின்றார்
இறைவன் உண்டு இல்லை என்று கானலில் தாகம் தீர்;ப்பவரோ
இறைவன் பற்றிய பயன்இல் கதைகளால் காலம்கரைக்கும் கயவர்களோ?

மாபெரும் மந்தை சிறுவெடிக்கஞ்சிப் பதறிச் சிதறிடும் காட்சியதாய்
மாபெரும் உலகம் பாதகர் சொற்பதம் கேட்டே அஞ்சும் அவலமதாய்
மாபெரும் உண்மைகள் நீதிகள்கழுமரம்ஏறுதல் கண்டும் தளர்ந்திருந்தால்
மாபெரும் அழிவும் தீமையும் உலகின் நியதியாய் மாறிடும்! விழித்திருப்பாய்!

மனமே வாழ்வின் ஆணிவேர்!





மனதில் அமைதி வேண்டுமென்றால் தனிமைதனை நீ நாடு!
மனதில் அமைதி கெடுவதற்கும் தனிமைதனை நீ நாடு!
மனதில் நன்மைக் கிடம்கிடைக்கத் தனிமைதனை நீ நாடு!
மனதில் தீமைகூடவேண்டின் அதற்கும் தனிமையை நீ நாடு!

மனதில் தோன்றும் கோடிகளில் தேடிஒன்றை நீ நாடு!
மனதில் தோன்றும் அத்தனையிலும் தேர்ந்தெடுத்து நீ நாடு!
மனதில் தோன்றும் நல்லவையில் சிறந்ததையே நீ தேடு!
மனதில் பக்குவம் வந்ததன்பின் எந்நிலையிலும் அதை நாடு

மனதில் நலனாய் இல்லாமல் நல்லவன்போல்நீ நடிப்பவனா?
மனதில் தெளிந்த நல்லவன்தான் எனநினைஉணர்நதே இருப்பவனா?
மனதில் பிறரை மன்னிப்பனாய் மனிதம் பேணும் நல்லவனா?
மனதில் பிழையைப் படரவிடாது நேர்மை உறுதியைக் கொண்:டவனா?

மனதிpல் எதுவும் தோன்றுகையில்; சோர்வுடனே தளர்ந்திருந்தால்
மனதில் கறைகள் படிந்துன் நிழலும் அச்சம்தரல் நடந்திடலாம்
மனதில் உறுதி ;படிப்படியாய் வளர்க்கும் விதத்தில் முயன்றுவரின்
மனதில் தளர்நிலை மறைந்து ;ஒளிபடரல் உணர்ந்திடலாம்.





செவ்வாய், 13 நவம்பர், 2018

கொஞ்சம் செவிமடப்பா!



அறிவதன் ஆழம் குறைந்திடும்போது
அழிவதில் ஆடும் திசைமனம் நாடும்
புரிதலில் ஆழமும் தெளிவதும் காணின்
சரிபோல் வலம்வரும் பிழைதெளி வாகும்

கரங்களுள் பொருள்பணம் திணிப்பவர் கூட்டம்
ஏய்ப்பதில் திருடிடும் கயமையில் நாட்டம்
பரமனின் பெயரிலும் பாவத்தைச் செய்தே
நெய்பூசி நஞ்சூட்டும் அரசியல் கூட்டம்

கள்வரைப் பொய்யரைக் கபடரைச் சேர்த்தே
கள்ளமாய்ப் பணம்வீசி வாக்குகள் கொய்தே
வெள்ளமாய்க் கண்ணீரை ஏழைகள் கொட்ட
ஆள்பவர் மட்டுமே வாழ்கிறார் நன்றே!

இல்லாத கதைகளால் வெறியூட்டும் தீயர்
இல்லாத கட்சிகள் இல்லாத நாடு
இல்லையே எனவாடி எதும் காணல் ஏது
பொல்லாமை தனைமனம் மறுத்தலென் றின்றி?

அற்பங்கள் மக்கள்முன் முக்கியம் பெற்றால்
அற்பர்கள் ஆள்கின்றார் எனஅறி.  நன்று!
செய்திகள் கவர்ச்சிக்கே முக்கியம் தந்தால்
பொய்சொல்லித் திசைமாற்றும் தந்திரம்உண்டு!

மக்களின் நலம்விழை நல்லவர் தம்மை
மக்களின் முன்பரப்பப் பயப்படும் ஏடுகள்
மக்களின் எதிரியாய் இயங்கிடும் ஆட்சியை
மக்களின் நன்மையாய்க் காட்டிடல் கேவலம்

அத்தியா வசியங்கள் அநியாய மாக
அலட்சியப் படுத்தலும் அகற்றலும்தானே
பத்திரிகை தர்மமாய்ப் பதிந்திடும் காலை
சத்தியம் வாழுமா தேறுமா? கூறு

வெள்ளி, 2 நவம்பர், 2018

தெளிந்த நீர்



சரியான பாதை தெரியாத போது பிழையான பாதை சரியாகத் தோன்றும்
சரியான அறிவுரை புரியாத போது தவறான வழிகளும் சரியாகத் தோன்றும்
சரியான வழியுரை நூல் தவிர்க்கும்போது சரியான பாதையே தெரியாது போகும்
சரியான துணைதனைத் தெரிந்திடாபோது வாழ்க்கையே திசைமாறும் ஆபத்துசேரும்

புரியாத விடயத்தில் பொறுப்பேற்கும்போது சிறுதவறும்தெரியாமல் தடுமாற நேரும்
புரியாத விதங்களில் நண்பரைத்தேர்ந்தால் பின்னாளில் மனம்நொந்துதடுமாற நேரும்
புரியாத நன்மைகள் பலவீனர் தீயவர்கட்கு எந்நாளும்உதவாது வீணாகிப் போகும்
புரியாத கருத்துக்கள் தெளிவாகாநிலைகளில் எடுக்கின்ற முடிவுகள் பிழையாகக்கூடும்

வரிசையை அமைத்ததில் ஒழுங்கினைச் சேர்த்தால் அணிவகுப்பில் அழகுசேரும்
வரிகளை வரைகையில் ஓவியன் திறனிணைந்தால் கலைக்குஒரு செல்வம் சேரும்
வரிகளை நம்பியே அரசுகள் இயங்கினால் தேசத்துள்வறுமையும் துயரும் கூடும்
வரித்திடும் இலட்சியம் மக்களுள் பதிந்திடேல் எதிர்காலம் தீய்ந்தே போகும்

சரித்திரம் என்பது வாழ்ந்ததன் பலன்கண்ட முன்னவர் அமைத்திட்ட பாதையாகும்
சரித்திரம் என்பது எதிர்காலச் சந்ததிக் கெழுதிநாம் வைத்திடும் பாடமாகும்
சரித்திரம் என்பது முற்கால இக்கால எதிர்காலவரலாற்றின் முக்கியம் சொல்வதாகும்
சரித்திரம் அறியாமல்புரியாமல் இருப்பவர் எங்கணும் நடைப்பிணம் என்பராகும்

திங்கள், 29 அக்டோபர், 2018

தலையைச் சுற்றுதே ...சாமி!




வறுமையை அலட்சியம் செய்கின்ற நாடும்

கல்வியில் பதவியில் விளையாட்டில் சாதனையில் திறமையில் பாகுபாடு தேடும் நாடும்

விவசாயிகளையே பஞ்சத்துள் தள்ளி வஞ்சிக்கும் நாடும்

கல்வியில் வெற்றிக்குத் தடையிடும் சட்டங்களை விதிக்கும் நாடும்

ஏற்றத் தாழ்வில் தாமுயரும் பாதகர்களிடம் சிக்கிய நாடும்

பத்திரிகைச் சுதந்திரம் பறிக்கப்படும் நாடும்

உண்மைகளைத் திரித்து வழங்கி மக்கள் மனதில் பொய்யை மெய்யெனப் பதித்து ஆட்சியமைக்கும் தீயவர்கள் நிறைந்த நாடும்

ஒன்றைச் சொல்லி வந்துவிட்டு மற்றொரு வழியில் தந்திரமாய் நாட்டைக் கொள்ளையடிப்போர் ஆட்சியைக் கொண்ட நாடும்

உண்ணவும் உடுக்கவும் தன் விதத்தில் ஒழுகவும் இடம்தர மறுத்துத் தாம் நினைத்தபடியே மக்கள் வாழ வற்புறுத்தி வதைக்கும் நாடும்

மத நல்லிணக்கத்தைக் குலைப்பதே மக்கள் பணியாக நினைக்கும் பிற்போக்காள் நிறைந்த நாடும்

வெறித்தனமே ஆள வேண்டும் மனிதம் பணிந்தே இருக்க வேண்டும் எனச் சிறுமதியினர் நடனமாட அனுமதிக்கும் நாடும்

வன்கொடுமைகள் அத்தனைக்கும் சாதி வைத்து முக்கியத்துவம் தரும் தொடர்பணியிலிருக்கும் பத்திரிகைகளே சனரஞ்சகமாக இருந்து வரும் நாடும்

பணத்துக்காகப் பாதகங்கள் செய்பவரும் கையூட்டலே வாழ்க்கையில் வெல்லும் வழியென நம்பும் பாமரரும் இணைந்தே இயக்கும் நாடும்

கையறு நிலையில் நல்லவரும் கோழையராய் தயங்கி இயங்கி வரும் நாடும்.....

இந்த உலகப் பந்தில் எங்கெங்கெல்லாம் உள்ளன எனத் தேடினேன். ஓன்றிரண்டு மூன்று நான்கு கொண்ட பல நாடுகளைக் கண்டேன். ஆனால் எல்லாமும் கொண்ட ஒரு முழுமை நாடும் வந்தது கண்ணெதிரில். அது...


கண்ணைச் சுற்றுதே சாமி. கவலை தள்ளுதே சாமி!  

சனி, 27 அக்டோபர், 2018

மனவளத்தின் ஆணிவேர்




விண்வெளிக்கு அழகு கிரகங்களும் விண்மீன்களும்போல்
மண்ணுக்கு அழகு இயற்கையமைப்பும் உயிரின வடிவுகளும்போல்
தண்ணீர்க்கு அழகு அதனுள் வதியும் மீனினங்களும் தாவரங்களும்போல்
மனிதர்க்கு அழகு மனதைக் கண்ணியத்துள் இருத்திச் சிந்தித்தல்தான் எனலாம்.

இன்றைய உலகின் அனைத்து நிம்மதியின்மைகளுக்கும் அத்திவார வேர்களாகப் பரவிக் கிடப்பவை தனக்கே அல்லது தமக்கே என எண்ணங்களை வளர்க்கும் சுயநலமும் தன்னொப்பப் பிறர் வாழ அல்லது உயர மனமொப்பா இழிமனமும்
பிறர் நலம் கெடுத்தாகில் தான் முன்னேற மனதில் இடமளிக்கும் பலவீனங்களும்
பார்வைகளிலெல்லாம் பிறர் குறை தேடல் பிறர் நலன் காணப் பெறுக்காமல் பொறாமை கொளல் சரியென நம்பும் தாழ்வு மனப்பான்மை இப்படிப் பலப்பல விதங்களில் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கின்றன.

புpறர் குறை சுட்டிக் காட்டத் தயங்காத நமக்கு நம் குறையைச் சுட்டிக் கொள்ளும் அறிவும் தட்டிக் கேட்கும் துணிவும் குறைந்தே இருந்து வருகின்றது. இந்த மனநிலைதான் தரங்குறைந்த பிறர்பற்றிக் குறைசொல்லும் புரணிக் கதைகளில் கற்பனைச் சுவையுணர்ந்து அவற்றைத் தேடித்தேடி அலைய வைக்கின்றது.

இதனால்தான் பணம் பண்ண விழையும் பத்திரிகைகள் அத்தகைய தரங்குறைந்த செய்திகளை வைத்தே பிரபலந்தேடி வளர்ந்து கொண்டிருக்கின்றன. தரம் எது தாழ்வெது என்பதைத் தெரிவதில் தவறிழைக்கும் மனதிற்குக் கவர்ச்சியில் ஈடுபாடு காட்டுமளவிற்கு கண்ணியத்திலும் நியாயத்திலும் நீதிசார் சிந்தனைகளிலும் ஈடுபாடு
காட்டும் பக்குவம் இருக்காது.

இதுதான் இன்றைய பொதுமக்களில் பெரும்பாலாரை சிந்தனை பலவீனர்களாக எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளிலும் வைத்துக் கொண்டிருக்கின்றது.

இவர்களை வைத்துத்தான் இன்றைய சனநாயகக் கோட்பாடு பொய்யர்களாலும் பித்தலாட்டக்காரர்களாலும் மத மொழி வெறியர்களாலும் பணம் பண்ணவென்றே வரும் அரசியல் அயோக்கியர்களாலும் நாற்சக்கரங்களும் காற்றற்ற வாகனமாத் தடுமாற- அதைத் தள்ளித்தள்ளி நகர வைக்கும் அப்பாவிக் கூலிகளாகப் பொதுமக்களால் தள்ளப்பட்டுக் கொண்டு வருகின்றது.

பசியிலும் வறுமையிலும் தாழ்த்தப்பட்ட நிலைகளிலும் வழிதெரியாது தவிக்கும் பெரும்பான்மை மக்கள் ஏமாற்றப்பட்டு பணபலத்தால் விலைக்கு வாங்கப்பட்டு
வாக்கின் அருமையை உணராதவர்களால் அயோக்கியர்கள் கைகளில் அகப்பட்டுக் கடைசியில் பசி அறியாதவனும் பசி உணராதவனும் தரம் தெரியாதவனும் தறுதலைகளுமாக சனநாயக சிம்மாசனத்தைக் குரங்குகளே எங்கும் ஆக்கிரமமிக்கும் நிலையினால் உலக சனநாயகம் உனமுற்று துடித்துக் கொண்டிருக்கின்றது.

ஓன்றிரண்டில் வேண்டுமானால் தவிர்ப்பிருக்கலாம். இது நிர்வாண சபையில் ஆடையுடன் நின்று அவமதிக்கப்படுவதைப் போன்ற கவலை தரும் நிலையல்லவா? தலைவிதி!

கண்ணியமாக வாழ்வதற்கு முதலில் வாழ்வினடிப்படையை உணர்ந்திருக்க வேண்டும்.
அதற்கு முதலில் கொடுத்தாலன்றிப் பெற முடியாத சில விடயங்களைத் தெரிந்திருக்க வேண்டும்.

மரியாதை: ஒரு புன்னகையால் - ஒரு வார்த்தையால் - ஒரு சைகையால் 
        ஒரு நற்செயலால் மற்றவர்களிடமிருந்து இதனைப் பெற்று விடலாம்.
        இதிலெதுவும் உங்களுக்கு திரும்பி வரும்போது நீங்கள் கற்பீர்கள்
        கண்ணியமான நடத்தையின் பிரதிபலிப்பை. நீங்கள் உயர நீங்கள்
        கொடுத்தவையே பயன் தரும் ஏணிப்படிகளாய் எதிர்வழிகளாய் முன்
        தெரிவதை உணருவீர்கள்.
        இச் செயல்கள்பிழையான பாதிப்பைத் தந்தால்? அதிராதீர்கள்.
        முத்தினைத் தெரியாமல் பன்றிகள் முன் வைத்துவிட்டோம் என
       உணர்ந்த எச்சரிக்கையுடன் ஆனால் விடாது தொடருங்கள்.          
      
       சிம்பன்சிக் குரங்கு பல்லை இளித்தால் அது சிரிப்பல்ல அதன்
        கோபத்தின் வெளிப்பாடு. சில சமயங்களில் நாயிலும் இதை
        உணர்ந்திருப்பீர்கள். ஆக மனித முக வெளிப்பாடுகளில் பரவலாக
        இருக்கும் கபடத்தனம் புரிகிறதல்லவா?   

கோபம்
:  இது நம் எல்லாரிடமும் எப்போதும் உறவாடிக் கொண்டிருக்கும்
        மிக நல்   நண்பனாகவும் ஆபத்தான விரோதியாகவும் இருக்கும் ஒரு
       குணமாகும்.
      
     ஆத்திரத்தை அடக்கினால் ஆபத்துக்களைத் தவிர்க்கலாம். நட்புறவைக்
        காத்துக் கொள்ளலாம். வீண் பகை தவிர்க்கலாம்.

மன்னிப்பு : அத்தனை நல்ல குணங்களிலும் மேலானதும் மனதில் நிரந்தர
        அமைத நிலவ உத்தரவாதத்துடன் உதவி செய்ய வல்லதும் இதுதான்.
        இதைத்   தவிர்த்தால் இதயத்தின் நல்ல இடங்களிலெல்லாம்
        பொய்மைகளும   பொறாமைகளும் வெறுப்புணர்வுகளும் தொற்றிக்
       கொண்டுவிட பெரும் வாய்ப்பு உண்டு.
    
        மன்னித்தல் என்பது மிகமிக இலகுவானது ஆனால் அதற்கு ஏற்ப
         மனதை வளர்ப்புது கடினமானது. மனதார உங்களுக்குத்
         தீங்கிழைத்தவர்களையும் எதிராக நடப்பவர்களையும் ஏன் உங்களை
         ஏய்ப்பவர்களையும் கூட மன்னிக்கும் துணிவை நீங்கள் பெற்றால்
         நிம்மதி
         கதவைத் திறந்து கொண்டு உங்கள் இதயத்தில் குடியேறுவதையும்
         மிக இலகுவாக இழப்புக்கள் அலட்சியமாவதையும் புரிந்து கொள்வீர்கள்.

இன்னும் பலப்பல விடயங்களில் வாழ்க்கை இலகுபட மார்க்கங்களுண்டு. என்றாலும் மிகமிக இலகுவாக அனைத்தையும் எப்போதும் இப்படிப் புரிந்து கொள்ள சிந்தித்து முடிவெடுங்கள்.

வருகையில் வெறுமனே வந்த நாம் வாழும்போது ஆக்குமெதுவும் சேர்க்குமெதுவும் அமைக்குமெதுவும் அவை எத்தகைய முக்கியத்துவமாகப் பட்டாலும் அனைத்துமே நிலையற்று காலத்தால் மலர்ந்து வளர்ந்து உதிர்ந்து காய்ந்து போகின்றவையே!
 

நாம் கடைப்பிடிக்கும் நல்ல குணங்கள் படிப்பினை சார்ந்த அனுபவங்கள் இவையே நமக்குப் பின் நமது சந்திதகளுக்கும் சமுதாயத்திற்கும் நற்காற்றென நலம் சேர்க்கும்