வெள்ளி, 8 மார்ச், 2019

நோக்கம் சரியெனில் சிறிதும் பெரிதேயாகும்!




உள்ளத்துள் துளிர்க்கின்ற உண்மையான எண்ணங்கள்
உள்ளத்துள் நன்மைக்காய் உருவாகும் உருவங்கள்
கள்ளமில் லாதுநம் மனம் காட்டும் பாதைகள்
நல்லவற் றின்விதை விதைப்பதாய்  அமைபவை

செல்வம்எனும் சொல்சொல்லும் செல்வோம்நாம் என்பதாய்!
தரித்திரம் சொல் பொருளோ  தரித்திரோம் என்பதாய்!
சிறுதுளியே ஆனாலும் மருந்தெனில் நன்மைபோல்
சிறுசெயலே ஆனாலும் நற்செயலேல் நன்மையே!

ஏதாகில் சிறியதாய் ஏழைக்கு உதவிடல்
ஏதாகில் இயன்றதாய் நற்செய்தி பகிர்ந்திடல்
ஏதாகில் நன்மையாய் எவருக்கும் செய்திடில்
ஏதாகில் புண்யமாய் எல்லார்க்கும் சேர்க்குமே!

பார்காண பேர்சேர்க்க புண்ணியம் செய்திடேல்!
யார்கண்ணும் காணாமல் உண்மையாய் நன்மையே
யார்எங்கு எவர்கட்கும் எளிமையாய்ச் செய்திடில்
பார்செய்த பரமனுக் கதுஇன்பம் செய்யுமே!

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

பசப்பு வார்த்தைகளைப் பாசமென நம்பாதே!




கரையான்கள் அயர்ந்திருந்தால் பாம்பின்புற்று  ஆகிவிடும்
தலைமைகள் பலம்குறைந்தால் அந்நியர்கள் பலம் பரவும்
முறையில்லா விதமமைந்தால் சோலைபுதர்க் காடாகும்
வரைவகுக்கும் அறம் சோர்ந்தால் அநநியர்வசம் நாடாகும்

கண்திறந்தே துயிலுபவர் பொதுமக்கள் எனஇருந்தால்
மண்பறிக்கும் தீயவர்கள் அடக்கியாள மனம்வகுப்பார்
மண்சாரா வெளிமகனை மரியாதைக் கிழுத்துநின்றால்
மண்பிடித்து நினையாண்டு உன்மண்ணைப் பறித்திடுவான்

பொதுமக்கள் சேவையினைப் பணம்பண்ணும் கயவரிடம்
பொதுமக்கள் தற்காலச் சிறுவுதவிக் கடகுவைத்தால்
பொதுமக்கள் எந்நாளும் பொறுக்குவராய் ஆகிடுவார்
பொதுமக்கட்: குரிதனைததும் அவர்பறித்தே உயர்ந்திடுவார்

ஆட்சியொன்றை அமைப்பதிலே அறிந்துணர்ந்து செயல்படலே
மாட்சிமைக்கு வழியமைக்கும் மக்களாட்சி மலரவைக்கும்
காட்சிவைத்துக் கவர்ச்சிசெய்தும் கலகம்செய்தும் வெல்லவரின்
வீழ்ச்சிக்கான வழியுனக்கு வருகுதென்று தெளிந்திருப்பாய்!

அள்ளியள்ளித் தருவதுபோல் அரசுபணம் தருவதுவும்
அள்ளியதைக் கொண்டதிகம் செய்கிறதாய் எண்ணுவதும்
நஞ்சுணரா துணவருந்தும் நமையிழக்கும் மூடத்தனம்
பஞ்சுபோன்ற பசப்புவாhத்தை பாசமன்று – கயமைத்தனம்

புதன், 13 பிப்ரவரி, 2019

கண்ணுறங்கில் கல் நசுக்கும்! கவனம்!





உலகைச் சூழ்கிற அத்தனையும் வருமொருகாலம் கற்பனைதான்!
உலகைச் சூழ்கிறஆபத்துக்கள்  காலத்தின்பக்கத்தில் கற்பனைதான்!
உலகைப் படைத்த சக்தியெதோ அதுவும் ஒருநாள் கற்பனைதான்!
உலகை அழிக்கும் மனிதகுல விஞ்ஞானம்அதும்; கற்பனைதான்!

கனவுஎன்னும் ஒன்றினையன்றி உற்றதுணைநமக் கெதுவுமில்லை
கனவுகள்கண்ட மனிதர்கள்வாழ்வே வரலாறாயின வேறுஇல்லை
கனவுகள்என்பன கற்பனைச்சிதறல்கள் படைக்கும் ஒருவித ஓவியம்தான்!
கனவுஎன்பது இல்;லையென்றே லிந்த வையகமே வெறும் பூச்சியம்தான்!

இறைவன் வீட்டில் இடம்பிடித்திடவே இருக்கும்வீட்டை இடிப்பவர்தாம்
இறைவன் பேரில் மதம் பலபிடித்தே ஒற்றுமைதடுத்திட மோதுகின்றார்
இறைவன் உண்டு இல்லை என்று கானலில் தாகம் தீர்;ப்பவரோ
இறைவன் பற்றிய பயன்இல் கதைகளால் காலம்கரைக்கும் கயவர்களோ?

மாபெரும் மந்தை சிறுவெடிக்கஞ்சிப் பதறிச் சிதறிடும் காட்சியதாய்
மாபெரும் உலகம் பாதகர் சொற்பதம் கேட்டே அஞ்சும் அவலமதாய்
மாபெரும் உண்மைகள் நீதிகள்கழுமரம்ஏறுதல் கண்டும் தளர்ந்திருந்தால்
மாபெரும் அழிவும் தீமையும் உலகின் நியதியாய் மாறிடும்! விழித்திருப்பாய்!

மனமே வாழ்வின் ஆணிவேர்!





மனதில் அமைதி வேண்டுமென்றால் தனிமைதனை நீ நாடு!
மனதில் அமைதி கெடுவதற்கும் தனிமைதனை நீ நாடு!
மனதில் நன்மைக் கிடம்கிடைக்கத் தனிமைதனை நீ நாடு!
மனதில் தீமைகூடவேண்டின் அதற்கும் தனிமையை நீ நாடு!

மனதில் தோன்றும் கோடிகளில் தேடிஒன்றை நீ நாடு!
மனதில் தோன்றும் அத்தனையிலும் தேர்ந்தெடுத்து நீ நாடு!
மனதில் தோன்றும் நல்லவையில் சிறந்ததையே நீ தேடு!
மனதில் பக்குவம் வந்ததன்பின் எந்நிலையிலும் அதை நாடு

மனதில் நலனாய் இல்லாமல் நல்லவன்போல்நீ நடிப்பவனா?
மனதில் தெளிந்த நல்லவன்தான் எனநினைஉணர்நதே இருப்பவனா?
மனதில் பிறரை மன்னிப்பனாய் மனிதம் பேணும் நல்லவனா?
மனதில் பிழையைப் படரவிடாது நேர்மை உறுதியைக் கொண்:டவனா?

மனதிpல் எதுவும் தோன்றுகையில்; சோர்வுடனே தளர்ந்திருந்தால்
மனதில் கறைகள் படிந்துன் நிழலும் அச்சம்தரல் நடந்திடலாம்
மனதில் உறுதி ;படிப்படியாய் வளர்க்கும் விதத்தில் முயன்றுவரின்
மனதில் தளர்நிலை மறைந்து ;ஒளிபடரல் உணர்ந்திடலாம்.





செவ்வாய், 13 நவம்பர், 2018

கொஞ்சம் செவிமடப்பா!



அறிவதன் ஆழம் குறைந்திடும்போது
அழிவதில் ஆடும் திசைமனம் நாடும்
புரிதலில் ஆழமும் தெளிவதும் காணின்
சரிபோல் வலம்வரும் பிழைதெளி வாகும்

கரங்களுள் பொருள்பணம் திணிப்பவர் கூட்டம்
ஏய்ப்பதில் திருடிடும் கயமையில் நாட்டம்
பரமனின் பெயரிலும் பாவத்தைச் செய்தே
நெய்பூசி நஞ்சூட்டும் அரசியல் கூட்டம்

கள்வரைப் பொய்யரைக் கபடரைச் சேர்த்தே
கள்ளமாய்ப் பணம்வீசி வாக்குகள் கொய்தே
வெள்ளமாய்க் கண்ணீரை ஏழைகள் கொட்ட
ஆள்பவர் மட்டுமே வாழ்கிறார் நன்றே!

இல்லாத கதைகளால் வெறியூட்டும் தீயர்
இல்லாத கட்சிகள் இல்லாத நாடு
இல்லையே எனவாடி எதும் காணல் ஏது
பொல்லாமை தனைமனம் மறுத்தலென் றின்றி?

அற்பங்கள் மக்கள்முன் முக்கியம் பெற்றால்
அற்பர்கள் ஆள்கின்றார் எனஅறி.  நன்று!
செய்திகள் கவர்ச்சிக்கே முக்கியம் தந்தால்
பொய்சொல்லித் திசைமாற்றும் தந்திரம்உண்டு!

மக்களின் நலம்விழை நல்லவர் தம்மை
மக்களின் முன்பரப்பப் பயப்படும் ஏடுகள்
மக்களின் எதிரியாய் இயங்கிடும் ஆட்சியை
மக்களின் நன்மையாய்க் காட்டிடல் கேவலம்

அத்தியா வசியங்கள் அநியாய மாக
அலட்சியப் படுத்தலும் அகற்றலும்தானே
பத்திரிகை தர்மமாய்ப் பதிந்திடும் காலை
சத்தியம் வாழுமா தேறுமா? கூறு

வெள்ளி, 2 நவம்பர், 2018

தெளிந்த நீர்



சரியான பாதை தெரியாத போது பிழையான பாதை சரியாகத் தோன்றும்
சரியான அறிவுரை புரியாத போது தவறான வழிகளும் சரியாகத் தோன்றும்
சரியான வழியுரை நூல் தவிர்க்கும்போது சரியான பாதையே தெரியாது போகும்
சரியான துணைதனைத் தெரிந்திடாபோது வாழ்க்கையே திசைமாறும் ஆபத்துசேரும்

புரியாத விடயத்தில் பொறுப்பேற்கும்போது சிறுதவறும்தெரியாமல் தடுமாற நேரும்
புரியாத விதங்களில் நண்பரைத்தேர்ந்தால் பின்னாளில் மனம்நொந்துதடுமாற நேரும்
புரியாத நன்மைகள் பலவீனர் தீயவர்கட்கு எந்நாளும்உதவாது வீணாகிப் போகும்
புரியாத கருத்துக்கள் தெளிவாகாநிலைகளில் எடுக்கின்ற முடிவுகள் பிழையாகக்கூடும்

வரிசையை அமைத்ததில் ஒழுங்கினைச் சேர்த்தால் அணிவகுப்பில் அழகுசேரும்
வரிகளை வரைகையில் ஓவியன் திறனிணைந்தால் கலைக்குஒரு செல்வம் சேரும்
வரிகளை நம்பியே அரசுகள் இயங்கினால் தேசத்துள்வறுமையும் துயரும் கூடும்
வரித்திடும் இலட்சியம் மக்களுள் பதிந்திடேல் எதிர்காலம் தீய்ந்தே போகும்

சரித்திரம் என்பது வாழ்ந்ததன் பலன்கண்ட முன்னவர் அமைத்திட்ட பாதையாகும்
சரித்திரம் என்பது எதிர்காலச் சந்ததிக் கெழுதிநாம் வைத்திடும் பாடமாகும்
சரித்திரம் என்பது முற்கால இக்கால எதிர்காலவரலாற்றின் முக்கியம் சொல்வதாகும்
சரித்திரம் அறியாமல்புரியாமல் இருப்பவர் எங்கணும் நடைப்பிணம் என்பராகும்

திங்கள், 29 அக்டோபர், 2018

தலையைச் சுற்றுதே ...சாமி!




வறுமையை அலட்சியம் செய்கின்ற நாடும்

கல்வியில் பதவியில் விளையாட்டில் சாதனையில் திறமையில் பாகுபாடு தேடும் நாடும்

விவசாயிகளையே பஞ்சத்துள் தள்ளி வஞ்சிக்கும் நாடும்

கல்வியில் வெற்றிக்குத் தடையிடும் சட்டங்களை விதிக்கும் நாடும்

ஏற்றத் தாழ்வில் தாமுயரும் பாதகர்களிடம் சிக்கிய நாடும்

பத்திரிகைச் சுதந்திரம் பறிக்கப்படும் நாடும்

உண்மைகளைத் திரித்து வழங்கி மக்கள் மனதில் பொய்யை மெய்யெனப் பதித்து ஆட்சியமைக்கும் தீயவர்கள் நிறைந்த நாடும்

ஒன்றைச் சொல்லி வந்துவிட்டு மற்றொரு வழியில் தந்திரமாய் நாட்டைக் கொள்ளையடிப்போர் ஆட்சியைக் கொண்ட நாடும்

உண்ணவும் உடுக்கவும் தன் விதத்தில் ஒழுகவும் இடம்தர மறுத்துத் தாம் நினைத்தபடியே மக்கள் வாழ வற்புறுத்தி வதைக்கும் நாடும்

மத நல்லிணக்கத்தைக் குலைப்பதே மக்கள் பணியாக நினைக்கும் பிற்போக்காள் நிறைந்த நாடும்

வெறித்தனமே ஆள வேண்டும் மனிதம் பணிந்தே இருக்க வேண்டும் எனச் சிறுமதியினர் நடனமாட அனுமதிக்கும் நாடும்

வன்கொடுமைகள் அத்தனைக்கும் சாதி வைத்து முக்கியத்துவம் தரும் தொடர்பணியிலிருக்கும் பத்திரிகைகளே சனரஞ்சகமாக இருந்து வரும் நாடும்

பணத்துக்காகப் பாதகங்கள் செய்பவரும் கையூட்டலே வாழ்க்கையில் வெல்லும் வழியென நம்பும் பாமரரும் இணைந்தே இயக்கும் நாடும்

கையறு நிலையில் நல்லவரும் கோழையராய் தயங்கி இயங்கி வரும் நாடும்.....

இந்த உலகப் பந்தில் எங்கெங்கெல்லாம் உள்ளன எனத் தேடினேன். ஓன்றிரண்டு மூன்று நான்கு கொண்ட பல நாடுகளைக் கண்டேன். ஆனால் எல்லாமும் கொண்ட ஒரு முழுமை நாடும் வந்தது கண்ணெதிரில். அது...


கண்ணைச் சுற்றுதே சாமி. கவலை தள்ளுதே சாமி!