அன்றைக்கு நான் பட்டுத் துடிதுடித்த துன்பந்தன்னை
இன்றைக்கு நினைத்தாலும் மனம்நொந்து துடித்தலுண்டு
அன்றைக்கு என்னினத்தை அவர்செய்த துவம்சம் தன்னை
இன்றைக்கு நினைத்தாலும் இதயமது பதைப்பதுண்டு.
பச்சைக் குழந்தையோடு நிறைவயிற்றுத் தாயைக்கூட
பிச்சையை மட்டும் நம்பி வாழ்ந்திட்ட ஏழையைக்கூட
அச்சமே அறியாதிருந்த பச்சிளஞ் சிறுவரைக்கூட
பச்சையாய்க் கொன்றே தின்ற ஜூலையை நினைக்கின் றேன்நான்.
கொடுவெய்யில்மங்கிப் போச்சு கொடுமனம் வைத்த தீயால்
குளிர்காற்றும் சுட்டதன்று கொடியர் வைத்த தீக்குழம்பால்
உடைமைகள் அழிந்து போச்சு உயிர்மதிப்பே தொலைந்து போச்சு
ஊராளும் மன்றம்கொள்ளைக் காடையர் மடமும் ஆச்சு.
படித்தவன் என்றிருந்த அன்றைய நண்பனெல்லாம்
பிடிக்காத சனியன்போலே எனைவெறுத்து ஒதுக்கக் கண்டேன்
வடித்தெடுத்த இனவெறியும் வற்றாத பகைமொழியும்
படித்தமந் திரிகள்வாயால் மந்திரமாய்ப் பரவக் கண்டேன்.
நார்நாராய் உடல் பிய்த்தே நம்தமிழர் உயிர் துடிக்க
தார்ஊற்றி அதில்களித்த தறுதலைகள் தெருவிலெல்லாம்
ஊர்எங்கும் படுகொலைகள், கற்பழிப்பு, வழிப்பறிகள்
யார் எங்கே எவரிடத்தில் உயிர்காத்தல் என்ற நிலை.
நாடாண்ட தலைவனவன் நாடழிக்கத் தூண்டிநின்றான்
நாடாளு மன்றமதன் மந்திரியும் பகை வளர்த்தான்
கூடாக்கிச் சிறைக்குள்ளே தவிக்கவைத்த தமிழரையும்
கூடாத காடையரே கொன்றொழிக்கத் தூண்டிவிட்டான்.
அன்றைக்குத் தமிழ்மக்கள் கொடுத்தவிலை கொஞ்சமல்ல
இன்றைக்கும் அதன்வழியில் கொடுப்பதுவும் கொஞ்சமல்ல
என்றைக்கும் கொடுமைகளின் நிரந்தரமும் நியதியல்ல
இன்றைக்கோ, நாளைக்கோ வரும் விடிவு பொய்யுமல்ல.
ஜூலையில் அன்றங்கு தமிழரினம் கொடுத்த விலை
நாளைக்கு வரவிருக்கும் தாயகத்துக் கானவிதை
உலகெல்லாம் பரந்திருக்கும் மக்களினம் இணைந்துஅதை
நலமாக்கித் தமிழீழம் எனப்பதிதல் உண்மைநிலை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக