புதன், 27 ஜூன், 2012

கறுப்பு ஜூலைப் பிரசவங்கள் (கட்டுரை)

ந்த நாட்களை இன்று மீண்டும் அருகில் இழுத்து அசை போட்டுப் பார்க்க முனைகிறேன்.


தெருக்களெல்லாம் சவச்சாலைகளாகவும்
காப்பகங்களெல்லாம் கொலைக்களங்களாகவும்
மீட்பகங்களெல்லாம் மிதிப்பகங்களாகவும்ஆட்சியின் அத்திவாரமானது முழுமையான அராஜகமாகவும்,
மந்திரிகள் பலரும் சுயமிழந்த மந்திகளாகவும்,
மனிதர்களின் ஒரு பகுதி வெறும் வெறி பிடித்த ஓநாய்களாகவும்,
பிக்குகள் புத்தம் மறந்து பித்துப்பிடித்த பைத்தியக்காரர்களாகவும்,
நாட்டுக்குத் தலைவனான சனாதிபதியே தலையிழந்த முண்டமாகவும்,
தேசமே சனநன்மையை மறந்த சரித்திரக் கறையாகவும் மாறிப்போயிருந்த அந்த அந்தகார நாட்கள் என்னை மருட்டிப் பயமுறுத்துவதை உணர்கின்றபோது என் உள்ளம் ஒருவிதமான உணர்த்த முடியாத பயத்தில் தனக்குள் உதைத்துக் கொள்வதை உணர முடிகின்றது என்னால்.

அனாதைகளாக, அகதிகளாக, அடுத்து வேளை உணவுக்கே கையேந்துபவர்களாக எண்ணற்ற தமிழ்க் குடும்பங்கள் சில மணி நேரங்களுக்குள்ளாகவே தங்களின் அனைத்து உடைமைகளையும் வீடு, வாசல்களையும் இழந்துவிட்டு, கோவில்களிலும் விழா மண்டபங்களிலும் அறிந்த தெரிந்த, அயலவர்களிடமும் தஞ்சமடைந்து தவித்துக் கொண்டிருந்தமையை நேரில் கண்ட காட்சிகளை மீட்டுப் பார்க்கிறேன்.

எத்தனை ஆயிரம் உயிரழிப்புக்கள். எத்தனை ஆயிரம் கற்பழிப்புக்கள். எத்தனை ஆயிரம் கொள்ளையடிப்புக்கள். எத்தனை ஆயிரம் கொலைகள். எத்தனை ஆயிரம் குடும்பங்களின் எதிர்காலப் பாழடிப்புக்கள்.எத்தனை ஆயிரம் நாச வேலைகள். எத்தனை ஆயிரம் இரக்கமே இல்லாத மனித விலங்குகள்.

என்னை இன்றைக்கும் அடித்து, இழுத்து யாரோ கொல்லக் கொண்டு போவதைப் போன்ற பயம் என்னைச் சூழ்ந்து கொள்வதை உணர்கிறேன்.

சட்டங்களும் ஒழுங்குகளும் காடையர்களின் சொந்தமாகிப் போன அந்த நாட்கள் நம்பவே முடியாத மனிதாபிமானத்துக்கெதிரான நாசவேலைகளின் அத்திவாரங்களாகி நின்றவை.

தாங்களே இழந்தவர்களாகி நின்ற தமிழ் முதலாளிமார் பலர் எனக்கு அறிவித்து வரச் சொல்லிவிட்டு, நான் சென்றபோது 'தம்பி, மிச்சமிருக்கும் இவற்றையும் அந்த நாய்கள் வந்து கொள்ளையடிக்கும் முன்பு எடுத்துக் கொண்டு போய்விடுங்கள். அகதிகளுக்குக் கொடுத்து உதவுங்கள்' என்று மனந்திறந்து தங்கள் கதவுகளைத் திறந்து, புடைவை வகைகளையும் ஆடை வகைகளையும் உணவு வகைகளையும் அப்படியே முழுக் கடையோடு கையளிக்க முன்வந்ததைக் கண்ட அனுபவமானது இன்றும் எனக்குள் தகிக்கின்ற நெருப்பாக எரிந்து கொண்டே இருக்கின்றது.

அவர்களின் விரக்தியான நிலையையும் அந்த வேளையில் என் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையையும் நினைத்துப் பார்க்கின்றேன். என் கண் மட்டுமல்ல, இதயமும் கலங்குகின்றது. அழ முடியாத ஆனால் அழாமலும் இருக்க முடியாத அதிதுயரகரமான அனுபவங்கள் அவை.

ஒரு முதலாளி என் அருகில் வந்து சொன்னார்: 'தம்பி, இவற்றைக் கொண்டு செல்லும்போது உங்களிடம் எந்தச் சிங்களாவனாவது கேட்டால் அல்லது ஆமி கேட்டுக் கட்டாயப்படுத்தினால் உடனடியாக எல்லாவற்றையும் எரித்துப் போடுங்கள்.'

அப்படிச் செய்தால் அதன் விளைவு, எதிர்விளைவு என்பன எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய அறிவு பூர்வ சிந்தனையல்ல, அவரது மனதில் சிங்கள இனவாதத்திற்கெதிரான கடும் வைராக்கியம் மட்டுமே நிறைந்து அப்போது இருந்ததை நான் உணர்ந்தேன்.

இலேசாக சிரித்தபடியே சொன்னேன்: 'முதலாளி தீ வைக்க பெட்ரோல் இப்போது அவர்களிடம்தானே இருக்கிறது? நான் எப்படித் தீ வைப்பது?'

நான் கேலியாகத்தான் அப்போதும் சொன்னேன். ஆனால் அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

'தம்பி, என் வேனில் ஒரு கேன் நிறையப் பெட்ரோல் இருக்கிறது. அதை அப்படியே எடுத்துக் கொண்டு போங்கள்.'

நான் அதிர்ந்து போனேன். அருகிலிருந்த இன்னொரு முதலாளிதான் வந்து நிலைமையை மாற்றினார்.

'நீங்கள் உதவி செய்யப் போகிறவர்களையும் ஆபத்தில் மாட்டி விடப் பார்க்கிறீர்களா? சும்மா இருங்கள்' என்றவர், என் பக்கமாகத் திரும்பி,
'தம்பி இவர் கண்டியிலேயும் இங்கேயுமாக மூன்று கடைகளை இழந்திருப்பதால் மிகவும் கொதித்துப் போயிருக்கிறார். ஆகவே நீங்கள் தயவு செய்து பெரிது படுத்திக் கொள்ளாதீர்கள்' என்றார்.

சொன்னவரும் ஒரு பாதிக்கப்பட்ட முதலாளிதான். இன்றைக்கும் ஒரு திரைப்படமாக அந்த முகங்கள் என் மனக்கண் முன் வந்து தெரிகின்றன. கவலை என்னை வளைப்பதை உணர்கிறேன்.

ஓரிடத்தில் வைக்கப்பட்டு இருந்த அகதிகளுக்காக பொருட்களை சேகரித்து ஒரு வண்டியில் கொண்டு போய்க்கொண்டிருந்தோம். என்னுடன் இன்னும் மூன்று இளைஞர்கள். ஒரு தெரு வழியாக நாங்கள் கடந்து கொண்டிருந்தோம்.

திடீரென ஒரு ஜீப் வந்து நின்றது. மடமடவென்று மூன்று நான்கு இராணுவத்தினர் இறங்கினார்கள். எங்களை மறித்து நின்று விசாரித்தார்கள். நான் அவர்களுக்கு அவர்களின் மொழியில் அகதிகளுக்காக எடுத்துச் செல்வதை விளக்கினேன்.

ஒருவன் ஒருவித சத்தத்துடன் சிரித்தான். 'அவர்களை விடவும் கஷ்டமான நிலையிலிருக்கிறவர்கள் வெளியிலே இருக்கிறார்கள்.'

எனக்கு அதிர்ச்சி. இவன் என்ன சொல்கிறான்?

ஒன்று புரிந்தது. அவன் ஏதோ சாட்டொன்றைச் சொல்லி, சிங்கள ஏழைகளுக்கு என்று வண்டியை வேறொரு பக்கமாக இழுத்துவிடப் பார்க்கிறான் என்று புரிந்தது.

'மஹாத்தயா, இது தமிழ் ஆட்களிடமிருந்து மட்டுமே தமிழ் அகதிகளுக்காக சேகரித்த பொருட்கள். சிங்களவர்களிடமிருந்து நாங்கள் எதையும் சேகரிக்கவில்லை.'

தைரியமென்றோ, புத்திசாலித்தனமென்றோ நினைத்து நான் பெரிய தவறு செய்து விட்டதை அடுத்த விநாடியே உணர்ந்தேன்.

சடசடவென ஓலையில் நடக்கையிலெழுகின்ற ஓசையைப் போல ஓரிருவர் கத்தினார்கள். ஓருவன் மிகவும் தெளிவாகவே சொன்னான்:
'பறை நாய்களுக்குப் பறை நாய்கள்தானே உதவும்? பறைத் தமிழ் நாய்களுக்கு நாங்களா உதவ வேண்டும்?'

'நாங்கள் உங்களிடம் உதவி கேட்டு வரவில்லையே!'

அடுத்த கணமே எனக்கு பதில் கிடைத்தது. வார்த்தைகளாலல்ல.

கண் இமைப்பதற்குள் என் முதுகில் தீப்பற்றியதைப் போன்ற கடும் வேதனை. ஒரு இராணுவ வெறியனின் துப்பாக்கிப் பிடி எனது முதுகைப் பலமாகத் தாக்க நான் குப்புற விழுந்துவிட்டேன்.

'இவனுக்குப் பெரிய வாய்.'

சப்பாத்துக் கால்களால் இரு பக்கமும் உதைகள் விழ நான் நிலைகுலைய, எனது அதிர்ஷ்டம், அதற்குள் இன்னொரு ஜீப் வந்து நின்றது. யாரோ ஓர் அதிகாரி போலும். ஏதோ விசாரித்தார். சில விநாடிகளுக்குள். என்னை எழும்பிப் போகச் சொன்னார்கள்.

என் கூட வந்த இளைஞர்களுக்கும் கடும் அதிhச்சி. என்ன செய்வது? பேசாமல் நகர்ந்து அகன்றோம். மனிதர்க்கு உதவ மனிதனே விடாது தடுத்த கொடுமையான நாட்கள் அவை.

அன்று இருந்த அந்த வெறி மனப்பான்மையிலிருந்து இன்றும் சிங்கள இனவாத அரசியல்வாதிகள் மாறவில்லை என்பதையும் மேலும் மேலும் தந்திரமாகவும் நயவஞ்சகமாகவும் பாதைகளை மாற்றி மாற்றிக் காட்டிக் காட்டி, சாவதேசத்தை ஏமாற்றித் தமிழர்களையும் அவர்களின் உரிமைகளையும் தாய் மண்ணையும் கபளீகரம் செய்து விடுவதில் மட்டுமே அதீத அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றார்கள் என்பதையும் காண்கையில் பாவத்தின் துணை செல்லும் பாதகத்தைப் பாதுகாக்கக் கைகொடுக்கும் சுயநலமிக்க உலக நாடுகளை நம்புவது தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில் எத்துணை கடினமானது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது என்னால்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச் சாத்திடப்பட்டபோதே இது சரிவராதென்பது தெரிந்துதான் இருந்தது. காரணம், ஒரு சுதந்திரப் போராளியும் ஒரு அரசியல்வாதியும் சமநிலையில் என்றுமே வைக்கப்பட முடியாதவர்கள் என்பதுதான். ஒருவர் எண்ணெய் என்றால் மற்றவர் தண்ணிர். இணைய முடியவே முடியாத இவ்விரு திரவங்களும் இணைவு காண்பதாகக் காட்டப்படுவது அசாதகம் மட்டுமல்ல, அசாதாரணம் மட்டுமல்ல, அபத்தமும் கூட. அல்லவா?

அதனால்தால் சுதந்திர இயக்கத்தை அந்தக் காலத்திலே பிளவுபடுத்தி வெல்ல ரணில் முயன்ற கதை நடந்தது. இன்று? ஒரு தீவிர இனவெறியரும் இன்னோர் அதிதீவிர இனவெறியரும் இரு அணிகளாக இரு பிரிவுகளுக்குத் தலைமை தாங்கி நிற்க, சகல இனவெறியர்களும் கூட்டமாக அடிக்கும் கூத்துத்தான் தென்னிலங்கையில் அரசியலாக அரங்கேறிக் கொண்டு இருக்கின்றது. இதற்குள் தத்தமது வயிற்றைக் கழுவ அலையும் அரை நிலை, குறை நிலை சிறுபான்மை சுயநலக் கும்பல்களின் பக்கதாளமும் வேறு நடந்து கொண்டு இருக்கின்றது.

இலங்கையை வாட்டி வறுத்த அந்த ஜூலை தந்த நெருப்பு அணைக்கப்பட வேண்டும் என்றால் நெருப்பை அகற்றி நீரை நிறைக்க வேண்டும்.

நீரென்ற பெயரில் எண்ணெய்யும் அமைதிக்கென்ற பெயரில் யுத்தமும் அழுத்தம் என்ற பெயரில் பொய்க் கவலைகளும் ஒருதலைப்பட்ச கண்ணோட்டங்களும் சுற்றிச் சூழ நின்று நடினமாடி வருகின்ற இலங்கைத் தீவின் அரசியலில் காக்கப்பட வேண்டியது நீதிதான் என்பது உண்மையிலேயே உண்மையென்றால் அது தமிழ் மக்களின் முற்று முழுதான சுதந்திரத்துக்கான வழித் திறப்புத்தான் என்பதே தெளிவான, ஐயந்திரபற உணரப்படுகின்ற உண்மையாகும்.

அது நடக்காத வரைக்கும் கறுப்பு ஜூலை இன்னும் பல குட்டிகளைப் பிரசவித்துக் கொண்டுதானிருக்கும். உண்மையா, பொய்யா? சனநாயக நீரோட்ட நீச்சல் வீரர்களே! பதில் சொல்லுங்களேன் பார்ப்போம்.

பாவப் பிரசவம் தொடராதிருக்கக் கருத்தடை செய்ய வேண்டும்
வகுப்புக் கலவரம் தொடராதிருக்க விடுதலை கிடைக்க வேண்டும்
சனநாயக அரசியல் சரியாய் நடக்க சுயநலம் களைய வேண்டும்
ஆள்கின்ற அரசுகள் சரியாய் இருக்க அடிப்படை திருந்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக