செவ்வாய், 24 மார்ச், 2020

புதியதல்ல...புதுமையுமல்ல...

கல்வி நல்ல சிந்தனைக்கு அத்திவாரம் போட வல்லது. அதற்காகஇ கல்வியை மட்டுமே வைத்துக்கொண்டு நன்றாகச் சிந்தித்துவிடலாம் என்று கொண்டுவிடக் கூடாது.
 கற்றவர்களாய்க் காண்பவர்களும்

இயங்குமெதற்கும் சக்தி வேண்டும். அந்த சக்தியானது சரியாகப் பயன்படுத்தப் படாதபோது
பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது அல்லது பலனே கிடைக்காமல் போய்விடுகிறது.

எண்ணெய் இன்றி விளக்கெரியாது. அதற்காக எண்ணெய்யை மட்டுமே வைத்துக் கொண்டு விளக்கில்லாமல் ஒளியேற்றல் சாத்தியமா?  அதுபோலத்தான் கல்வியும்.

கல்வி நல்ல சிந்தனைக்கு அத்திவாரம் போட வல்லது. அதற்காக கல்வியை மட்டுமே வைத்துக்கொண்டு நன்றாகச் சிந்தித்துவிடலாம் என்று கொண்டுவிடக் கூடாது.

சிந்தனை செய்வதற்கும் அனுபவம் தேவை. அதற்கர்த்தம் எவருமே சிந்திப்பதற்குத் தகுதி அற்றவர்களென்பதல்ல. சரியாகச் சிந்திப்பதற்கே அனுபவம் உதவுகிறது.

நம்மில் பலரும் நம்மை எவரும் புகழ்ந்துவிட்டால் நம்பிவிடுகிறோம். உண்மையில் அவர்கள் நம்மைப் புகழ்கிறார்களென்றால் அது எதற்காக அது சரிதானா என்பதையெல்லாம் ஆராயாமல்
ஏற்றுக் கொண்டால் நம்மை நாம் ஏமாற்றிக் கொள்கிறோம் என்பதே பொருள்.

சிலரிடம் சில வித்தியாசமான குணங்களுண்டு.
சிரித்துக் கொண்டே கதைப்பார்கள். நட்புறவை வலியுறுத்தியே கதை இருக்கும். அதே சமயம்....
மற்றவர்களுடன் நமக்கு இருக்கக் கூடிய நட்பு தொடர்பு நல்லபிப்பிராயம் கெடத்தக்கதாகப் பக்குவமாக அவர்களைப் பற்றி நம் மனதில் தப்பபிப்பிராயங்களை விதைத்துக் கொண்டிருப்பார்கள்.

நாம் அவர்களை அடையாளம் கண்டுவிடக் கூடாது என்பதற்காக நம்மை அடிக்கடி புகழ்ந்து கொண்டிருப்பார்கள். அவதானமின்றி அவர்கள் கதைகளை நம்பி நாம் மற்றவர்களைப் பற்றிய
நமது கருத்தை மாற்றிக் கொண்டால் அவர்கள் வென்று விடுவார்கள்.

ஆகவே சொல்வார் கதைகளின் உள்நோக்கை உணர முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும். „எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு!“ அல்லவா?

                                                    …............................................

மனிதத்துவத்தை மதிக்காதவன் மனிதர்களுக்குக் காட்டக்கூடடிய பாதை இருளாகவே இருக்கும்.
பக்தனுக்கும் பகல்வேடக்காரனுக்கும் வித்தியாசம் மனிதத்துவத்துக்கு அவன் கொடுக்கும் மதிப்பை வைத்துக் கண்டுபிடிக்கக் கூடியதாயிருக்கும்.

                                                          …......................................

விமரிசிக்கும் கலையைச் சரியாகச் செய்வதற்கு -  மற்றவர் கருத்தைப் பிரதிபலிக்காமல் சொந்தக் கருத்தைத் தக்க நியாயத்துடன் எடுத்துச் சொல்லி விமர்சிக்கப்படுபவரின் சிந்தையைத் தொடத் தெரிய வேண்டும்.

சரியான விமரிசனங்கள் சரியான சிந்தனையின்றி செயய்யப்பட முடியாது. தேர்ந்த வைத்தியர்
அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தும் அதே கத்தியை  அனுபவமற்ற சாதாரண மனிதனால் அதே பணிக்குப் பயன்படுத்துவது எப்படி அசாத்தியமோ...அதுபோலவே இதுவும்.

                      …...................................
கண்ணைக் கல்விக்கு ஒப்பிட்டதற்குக் காரணம் பார்வை தோற்றப்படுவதில் மட்டுமல்ல தோற்றப் படாதவற்றிலும் ஆழ்ந்திருக்க வேண்டுமென்பதை வலியுறுத்தத்தான்.

தொட்டிக்குள் நீந்தும் மீனுக்கு அதுவே சமுத்திரம்.அதன் அனுபவத்தையிட்டு அது பெருமைப்படலாம். ஆனால் அதில் அனுதாபத்தின் தேவை பிரதிபலிக்கின்றதே!

கொடுக்கும் வரையில் நண்பனாயிருப்பவன்  கேட்டதும் பகைக்கிறானே! ஏன்?
வேண்டியவனைப் புகழும் வரையில் சிரிக்கிறான்.பிழையைச் சுட்டினால் பகைக்கிறானே! ஏன்?

ஒரே பதில்:  பொய் முகங்கள். சரியா பிழையா? உங்கள் அனுபவத்தையே சொன்னேன்.