ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

சும்மா சில வரிகள் 5







62. தானாக அனுபவித்து உணராதபடிக்கு இறை நம்பிக்கையை
   வற்புறுத்திப் போதித்தலை மதவாதிகள் கடைப்பிடிப்பதால்தான்
   நம்பிக்கைகள் அனைத்துமே பலவீனமடைந்து கொண்டிருக்கின்றன.

63. திருப்தியைப் பணத்திலே தேடுகின்ற மனிதன் இறுதியில்
   சோர்ந்து போவான். திருப்தியைப் பகிர்வதில் தேடுகின்ற மனிதன்
   இறுதியில் திருப்தியை உணர்வான்.

64. எந்தச் சுகமுமே தற்காலிகமானதுதான் என்பது சரியாகப்  
   புரியாதபடியினால்தான் மனிதர்கள் எப்போதுமே திருப்தியற்று
   அலைகின்றார்கள்.

65. பகைமை உணர்வு வளருகையில் உலகம் ஒரு புது மடையனை
   வரவேற்க தயாராகின்றது.

66. சகல குற்றச் செயல்களுக்கும் அடிப்படையாக பணத்தினை  
   வைத்து மனிதரை மதிக்கும் தவறான கொள்கைதான் பெரிய
   இடத்தைக் கைப்பற்றிக் கொண்டிருக்கின்றது.

67. திரையை விலக்காமல் புகுந்தோடத் துவங்காதே! பின்னால்
   கதவிருக்கலாம். திட்டமின்றித் தீவிரமாகச் செயலில் இறங்காதே!
   தோல்வி வரும் வாய்ப்பிருக்கலாம்.

68. நல்ல கல்வியை வழங்காத பள்ளியால் மாணவர்க்குப் பயனில்லை.  
   நல்ல சமூகத்தை வளர்க்காத கல்வியால் நாட்டுக்குப் பயனில்லை

69. என்றுமே தீராத பசியாக நமக்கார்வம் கல்விமேல் இருக்க
   வேண்டும். காண்பதில் கேட்பதில் கற்பது எப்படி என்பதும் தெரிய
   வேண்டும்.

70. மதிப்பது என்பது அங்கீகாரத்தின் அடிப்படையில் வருவதாகும்.
   அது பயத்தினடிப்படையில் வந்தால் அதன் பெயர் கோழைத்தனம்.
   அங்கீகாரமல்ல.

71. ஏழு மலையேறி இறைவனைத் தொழுதாலும் அதன் பயன்
   பூச்சியம்தான். ஏழை சில பேரின் உயிர் வாழ உதவி செய். அது
   கோடி புண்ணியந்தான்.

சனி, 14 செப்டம்பர், 2013

புரிய வைத்தல் பெரிய வேலை





பக்குவம் ஆகவும் சத்தியம் போலவும்
பகைகொண்ட தீயவர் திரிபுசெய்து பேசுவார்
திக்கிலே எங்கணும் தீமைக்கு நன்மையாய்
திசைமாற்றிக் கதைகட்டிக் கயமையைக் காட்டுவார்

மக்களுக் காகவே செய்கிறேன் என்பதாய்
மக்களை வாட்டியும் வதைத்துமே ஆளுவார்
நீதிக்காய்க் குரல்எழின் தேசத்து ரோகமாய்
நீலிக்கண் ணீர்விட்டு உ லகுக்கவர்  காட்டுவார்

பயிர்நிறை வயலினை அறுவடைக் கேற்பவே
பயன்வரும் காலத்தில் கொள்ளைசெய் கள்ளராய்
வயிற்றுக்கும் இன்றியே பொதுமக்கள் வாடவே
வழிசெய்து அவருயர்ந் ததில்பொருள் தேடுவார்

கழுதைக்குக் குதிரையின் அலங்காரம் செய்வதால்
கழுதையும் குதிரையாய் எங்குமே மாறுமா?
சனநாய கம்என்று சனக்கொள்ளைக் கூட்டமே
சதிசெய்து வெல்லநாம் இடமிடல் நியாயமா?

முன்னுக்குப் பின்னாக உண்மையை மாற்றுவார்
முன்னாளும் இந்நாளும் தீயரே ஆகுவார்
என்னாளும் அவர்பின்னே தலைமைக்கு நம்பியே
பின்னோடல் நாட்டுக்கு என்றென்றும் தீமையாம்

நாட்டுக்குத் தலைவரைத் தேர்ந்திடும் போழ்திலே
வீட்டுக்குள் உணரராமல் நாம்செய்யும் தவறினால்
காட்டேறிக் கூட்டங்கள் நாடாளல் தவிர்த்திடில்
நாட்டுக்கும் நலம்சேரும் மக்களும் வாழுவார்

சூழ்நிலைக் கஞ்சியே தீமைக்கு இடம்விடின்
பாழ்பட்டுப்போவதே தேசத்துக் காகிடும்
வாழ்வுக்கு நல்லதாய்ச் சுதந்திரம் நாடிடேல்
வாழ்வர்த்தம் என்றைக்கும் பொருளற்றல் ஆகிடும்

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

சிந்தனைக் கூறுகாய் 19









181.மண்ணில் பிறந்து, மண்ணில் வளர்ந்து, மண்ணில் மறைந்தோர்                              மனிதரென்பார்.
      மண்ணில் மலர்ந்து,  மண்ணில் மறைந்தும்  உயிராய் நிலைப்பரை                           தெய்வமென்பார்              

182.மடைமையை விதியென ஏற்பதும் மடைமை விதியதை மடைமையாய்ச்            சொல்வதும் மடைமை.
      உண்மையை உணரார் பொய்யெனல் மடைமை உண்மைக்குப் பொய்யுரை       போடலும் மடைமை.

183.தேசத்தின் உயர்வும் விடுதலை உணர்வும் இதயத்தில் உள்ளவனைத்                     தேசத்தின் தலைவன் ஆகவே கொள்பவர் அனைவரும் பாக்கியரே!

184.சத்தியநெறியை இதயத்தில் கொள்ளா நரிகளின் தலைமையினை                            புத்தியில்லாரும் புல்லரும் ஏற்கும் தேசத்துக் கழிவுவரும்

185 எதிர்வினை இல்லா தெதுவுமே இயற்கையில்  இல்லையென்பதே                          நிசமாகும்
       எதிர்வினையாகநம் பாவமும்; பழிகளும் பரம்பரை சுமப்பதே  விதிஆகும்

186.மரமதன் தன்மை, பெறுமதி அதுதரும் பழத்தினைப் பொறுத்திருக்கும்                    மனிதனின் திண்மை அவன்செல் திசையின் உறுதியில் தெரிந்திருக்கும்

187.வார்த்தையும் செயலும் சத்தியம் சுமந்தால் வாய்மையின் தரம் கிடைக்கும்       போர்வையைப்போலே பொய்யதில் கலந்தால் தோல்வியின் குழிதிறக்கும்

188.  வழிகாட் டிடவழி  தெரியார் வழிபுகின் கேடது கூடவரும்                                                வழிகாட் டிடவரும் போதகர் தவறெனில் வாழ்வழி கெட்டுவிடும்.

189. நன்மையைச் செய்பவர் நற்பெயர் கெடுத்திடும் இழிபுத்தி மாந்தரெல்லாம்            நன்மையைச் செய்வராய் நம்பிடும் அறிவிலார் சிறுபுத்தி மாந்தரேதாம்

190. அடுத்தவர்க்குதவிடும் நற்பண் பினைநாம் குழந்தைக்கு ஊட்டுகையில்                  கெடுப்பவர் வேடம் பற்றியும் புரிந்திட வைத்தால் பின்னா ளவர்கையில்

சிந்தனைக் கூறுகாய் 18



                                                                 



171.பஞ்சதும் கல்சுற்றி எறிந்திடில் கல்போன்று பலம் சேர்ந்து சேதம் செய்யும்
      நெஞ்சதில் நீதிகொள் தலைவனைச் சார்ந்துநில் மக்களும் படைகளாகும்

172.ஊதஊதப்பெருகியே பெரியதாய் ஆவதால் பலூன் பலம் பெறுவதில்லை    
       ஊதிஊதிப் பிரிவனை இனத்துக்குள் வளர்ப்பவர் உயர்நிலை                                        அடைவதில்லை

173.கழுதையும் குட்டியில் அழகுதான் என்பதால் குதிரையோடிணைத்து                        விட்டால்
      கழுதையை அதனாலே உயர்த்திடல் இயலாது, தீயவர் தொடர்பும் அதுதான்

174.எளிமையை மதிக்காது இழிமையாய்ப் பேசுவோன் எவனுமே                                       இழிமகன்தான்
        எளிமையை மதித்ததன் பெருமையை உணர்த்துவோன் எவனுமே                           உயர்மகன்தான்

175.வசதிகள் வாய்ப்புக்கள் அளவுக்கு மிஞ்சினால் மனதுக்குள் நோய்கள் வரும்
       வசதிகள் வாய்ப்புக்கள் உழைப்புக்கு ஏற்பவே அமைந்திடில் நன்மை  வரும்

176.பிறருக்கு உதவிசெய் உயர்குணம் இல்லையேல் மனிதா!நீ செத்தல் நன்று
       பிறரிலும் பிழைநிறை கொடியரை உணர்ந்திடேல் மனிதா!நீ இருத்தல்                  என்று?

177.உறவாக நெருங்கிடும் அனைவரும் நல்லவர் எனநம்பி ஏற்று நின்றால்
      கீரையாய்ப் புல்லையும் சேர்த்துண்டு வலிவந்து துடிப்பதே நடந்திடும்பார்!

178.வடிவுடல்  மட்டுமே நம்பிடும் புணர்வுணர் வென்றுமே அன்று காதல்
       வடிவுக்கு  அன்பதே இலக்கணம் என்பதை உணர்வதேஉண்மைக் காதல்

179.விலங்குகள் மனம்இணைஇனத்துடன்இணைந்துதான் வாழ்ந்திடல் இயல்பு        எங்கும்
       கலங்கவே இணைந்துவாழ் உறவுகள் கெடுத்ததில்உயர்வதே மனிதர்கள்              இயல்பு எங்கும்

180.கடலோடே மிதந்தோடி கரைகாண வழிதேடி ஓயாது அலைதல் காமம்
       கடலோடே இணைந்துள்ள அலைபோல அசைந்திணைந்திருப்பதே                         உண்மைக்காதல்

இனிக்கும் கடுக்காய


                                                                         




கேட்கும் போது கடுமையாக இருக்கும் சில விடயங்களைப் பற்றி நாம் நிதானமாக சிந்திக்கும் போது, அவை அவசியமானவையாகப் படுவதுண்டு.

சில உண்மைகள் நம்மிடம் சுட்டிக் காட்டப்படும்போது அவை நம்மைச் சுடுவதுபோல் இருந்தால் நமக்குள் ஆத்திரம் எழுவது இயற்கைதான்.

சில விடயங்களை யாராவது சுட்டிச் சொல்லும்போது, கேட்கும்  நமக்குக் கோபம் வருவதுண்டு. ஆனால் சிறிது பொறுமையாக, தாமதமாக, ஆறுதலாக சிந்தித்துப் பார்த்தால், அதுவும் நியாயந்தானே  என்ற விதமாக நமது மனதுக்குப்படும்.

அப்போது நமக்குள் எழுந்திருந்த ஆத்திர உணர்வும் கோபமும் அடங்கி வருவதும் மனம் தணிவடைவதும் புரியும்.

இந்த அனுபவம் நம் தினசரி வாழ்க்கையில் மிக மிக அடிக்கடி வருவதுதான் என்றாலும் நாம் இதைப்பற்றி அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் விட்டு விடுவதால்தான் அடிக்கடி நமக்கு “டென்ஷன்”ஏறுவதும் இறங்குவதும் ஓர் இயல்பான வழக்கம் போலவே இருந்து வருகின்றது எனலாம்.

அனாவசியமான தற்பெருமை என்ற குணம் பொதுவாக குடும்பத் தலைவர்கள் பலரிடமும் பரந்து காணப்படுவதால் அடிக்கடி பல குடும்பங்களில் சிறு சிறு பட்டாசுகளாகப் பிரச்சினைகள் வெடித்து வெடித்து இந்த “டென்ஷன் மாமா” பெருங்குதிகுதித்துக் கொண்டிருப்பது கவனிக்கப்பட வேண்டும்.

“இவள் யார் எனக்குச் சொல்ல?” என்று தலைவரும் “இவர் சொல்லி நானென்ன கேட்பது?”என்று தலைவியும் அவசியமற்றதோர் அதிகாரக் கேள்வியைத் தமக்குள் தேவையில்லாமல் நினைத்துக் கொள்வதனால் அடம் பிடிப்பதில் ஏதோ வெற்றி இருப்பதாகத் தப்புக் கணக்குப் போட்டுக் கொள்கிறார்கள்.

இந்த வேடிக்கையான அனுபவம் எனக்கும் நிறைய உண்டு என்பதாலும் நீங்களும் அதை அனுபவித்துத்தானிருப்பீர்கள் என்று நம்புவதாலுமே உங்களுடன் மனம் விட்டு இதைச் சொல்கிறேன்.

கோபப்படுங்கள். ஆனால் சரியான காரணத்துக்காகக் கோபப்படுங்கள். எதிர்த்து நில்லுங்கள். ஆனால் நியாயமான காரியத்தைச் சார்ந்தே எதிர்த்து நில்லுங்கள்.

நம் உடலை ஒருவர் தொடும்போது நொந்தால், தொட்டவர் மேல் ஆத்திரப்படலைத் தவிர்த்து, தொட்டதும் வலிக்கும்படியாக நமது உடம்பில் ஏதோ தவறிருக்கிறதே என்று உணர்ந்து, அதை நிவர்த்திப்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அப்போது நிச்சயமாக நமக்கு நாமே பாதி மருந்து வழங்கிவிட்டதாக ஆகிவிடும்.

அதனால் ஆத்திரமும் கோபமும் தங்களுடன் கூடவே கூட்டிக் கொண்டு வரும் கெட்ட நண்பனான பகைமையின் அறிமுகத்துக்கு இடமே இல்லாமல் போய்விடும்.

குடும்பங்கள் பலவற்றுக்குள்ளும் இருக்கும் மிகச் சாதாரணமான உட்சச்சரவுகளும்கூட சில கெட்ட மனிதர்களுக்கு முழுநேர உணவாகப் பயன்பட்டு விடுவதுண்டு. ஜாக்கிரதை!

உங்களின் குடும்பத்துக்குள் இருக்கும் பிரச்சினைகளை ஆளை அறியாமல், ஆறுதலை விழைந்து அவிழ்த்துவிட்டீர்களோ, பிறகு ஆழமறியாமல் சேற்றுக் குழிக்குள் இறங்கி விட்டுத் தத்தளிக்கும் நிலைதான் தோன்றும். பட்டாசுக்களை வெடி குண்டுகளாக மாற்றி, வெடிக்க வைத்துக் குடும்பங்களைச் சிதற வைப்பதில் சுகம் அனுபவிக்கும் ஜாம்பவான்கள் பலர் நம்மைச் சூழவும் இருக்கிறார்கள். ஜாக்கிரதை!

பசாசுகள் எங்கேயும் மறைந்திருந்து கொண்டு, இரவில் மட்டும் நடமாடுபவை என்று நம்பாதீர்கள். பட்டப்பகலிலும் கூட, அவைதான் பெரும்பாலும் நம்மைச் சுற்றிலும் நமது நண்பர்கள் போலவும் உறவினர்கள் போலவும் அயலவர்கள் போலவும் மிக மிக அதிகமாகவே எங்கணும் பரவலாக நிறைந்திருக்கின்றன.

நம்மிடையிலே அவைகளின் இருப்பின் தொகையைப் பார்த்து அவை இருக்க வேண்டிய நரகமே இப்போது வெறுமையாகிப் போய் இருக்குமோ என எனக்கு அச்சமாயிருக்கிறது. தீயதுகளின் புகை மண்டலம் அப்படி மண்டிக் கிடக்கின்றது எங்கும்.

அந்தளவுக்கு அவற்றை  என் வாழ்வில் புற்றுக்குள் நிறைந்து வழியும் கறையான்களாகச் சந்தித்தும் சந்தித்துக் கொண்டும் இருக்கிறவன் நான். அவற்றின் ஆற்றலை இலேசாக எடை போட்டு, ஏமாந்து உதை பல பட்டு பாடம் படித்தவன் நான்.

பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்றதேனென்று நினைக்கிறீர்கள்? பிழையாகப் பிச்சை போட்டால் வாங்கிய பேய் பிச்சைப் பாத்திரத்தாலேயே உன்னை அடித்துவிட்டுப் போய்விடும் என்று எச்சரிக்கத்தான்.

நாகத்துக்கு ஏன் நல்ல பாம்பென்று பெயர் வைத்தார்கள்? நிச்சயமாக இவர்களை அடையாளமாக அனுபவித்தபடியினால்தான் என்பேன் நான்.

பார்க்கவும் கேட்கவும் இனிப்பவைகளில் பல நஞ்சுள்ளவை என்பதை மறக்காமல் நினைவில் வைத்து வந்தாலொழிய, அடிபட்டு வருந்த நேருவதை அந்த ஆண்டவனாலேயே கூட தவிர்த்துக் கொள்ள இயலாது. ஏனெனில் அவனை வைத்தே ஏமாற்றும் பட்டாளமும் இவர்களுக்குள்தான் இருக்கின்றது.

சமுதாயத்தில் நம்மை நாம் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு நம் முன்னோர்கள் சொல்லித் தந்த அறிவுரைகள், பழமொழிகள், கட்டளைகள், சட்டங்கள் எல்லாமே இன்று வரைக்கும் தொடர் தேவைகளாக இருந்து வருவதன் பின்னணியில் நல்லவர்களில் பெரும்பாலானோர் ஏமாளிகளாக இருப்பதுவே காரணமாக இருந்து வருகின்றது எனலாம்.

கெட்டவர்கள் திருந்தமாட்டார்கள். கெட்டுப் போனவர்களே திருந்த முடியும். அதாவது தீமையின் தன்மை தெரியாமல் அல்லது புரியாமல் அதனை ஏற்றுப் பிழை வழியில் நடப்பவர்கள் சரியை உணர்ந்தால் திருந்துவது சாத்தியம்.ஆனால் தீமையே தன்மையானவர்கள் அவர்களாகவே இருப்பார்கள். காரணம்,அது அவர்களின் இயற்கை நிலை.

இதையேதான் முன்னொரு தடவை என் நூலொன்றில் வெள்ளையைக் கறுப்பாக மாற்றலாம். ஆனால் கறுப்பை வெள்ளையாக மாற்றல் முடியாது என்று நான் குறிப்பிட்டிருந்தேன்.

ஒழுக்கம் தவறிவிட்ட ஒரு நல்ல பெண், அதை உணர்ந்து, வருந்தி, உள்ளத்தால் திருந்துவது சாத்தியம். ஆனால் அதனை விரும்பி உழைப்பில் பயன்படுத்தும் ஒரு விபச்சாரி அதனை நியாயப் படுத்தத்தான் பல்வேறு காரணங்களை முன்வைப்பாளே தவிர,திருந்த முயலமாட்டாள். காரணம், அதைத்தொழிலாய்க் கொள்ள அவள் அதைச் சரியாய் ஏற்றமையே ஆகும். அல்லவா?

வறுமையால் பிள்ளையை விற்றுவிடும் ஒரு தாயின் உள்ளம் படக்கூடிய கடுந்துயரைச் சொல்லி விளக்க முடியாது. அவளது தாங்காமையை அவள் தான் படும் கஷ்டமின்றித் தன் பிள்ளையாவது வாழுமே என்றுதான் தனக்குள் சொல்லி ஆறுதலடையப் பார்ப்பாள். ஆனால் அது தற்காலிக ஆறுதலாக மட்டுமே இருந்து வரும். தாய்மையின் தூய்மை அத்தகையது.

ஆனால் தான் பெற்ற மகளையே தன் தொழிலுக்குள் தள்ளிப் பணம் படைக்க முற்படும் ஒரு பேயும் தாய்தானே என்றால்?

இவ்விடத்தில்தான் நியாயத்தையும் நீதியையும் மதிக்க வேண்டிய கடமையை நாம் முன்வைத்து சிந்திக்க வேண்டும். அப்படிச் சிந்திக்க மனம் வைத்தால் தான் நாம் பார்க்கும் அல்லது கேட்கும் செய்திகளில் மருந்துடன் குத்தப்படும் ஊசி எது, நஞ்சு தடவிக் குத்தப்பட பயன்படுத்தும் கத்தி எது என்பது நமக்குப் புரியும்.

நீரானது தனது தனித்துவத்தை இழந்து விடாமல் இருந்து வர வேண்டும் என்றால் நீரானது தன்னைத் தனிப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். மாறாக, தீயுடன் அது கூட்டு சேர நேர்ந்தால் படிப்படியாக அதுவும் தீயை ஏற்று, சூடாகி தீ செய்யும் அதே செயலான சுட்டுவிடும் நிலைக்கு அது மாறிவிடும்.

சட்டிக்குள் நீர் இருந்தால்தான் தீயினால் அதனைச் சூடாக்கி அதனைத் தனது நிலைக்கே மாற்றிவிட முடிகின்றது. அதுவே தொடர அனுமதித்தால் நீரானது தன்னையே இழந்ததாகி, வற்றி வற்றி  இறுதியில் இல்லாமலே அழிந்தும் போகும்.

ஆனால்...  அந்தச் சூடான நிலையிலும் அதைத் தீயின் மேல் ஊற்றினாலோ அது அந்தத் தீயை அணைத்துப் போடுமே தவிர தீயோடு தீயாகச் சேர்ந்து எரிந்து போகாது.

இந்த நிலையைத் தான் தீயவர்களிலும் தீயவர்களின் நட்புக்களினால் கெட்டுப்போகின்ற நல்லவர்களிலும் நாம் கண்டு கொள்ள முயல வேண்டும்.
தீயவர்களால் கெட்டுப் போன எத்தனையோ நல்ல உள்ளங்கள் நமது மத்தியில் இந்த கொதிக்கும் நீர் போல சுயநிலை இழந்தவர்களாக இருந்து கொண்டிருக்கின்றன.

அவற்றைக் கண்டு பிடிக்கவும்  மீட்டெடுக்கவும் நல்லவர்கள் தயங்கக் கூடாது. இதில் தவறிழைத்தால் தீயவர்களே நிறைந்த நிரந்தரமான ஒரு நரகமாக உலகம் உருவாகி விடுவதைத் தவிர்க்க இயலாமலே போய்விடலாம்.

துணிந்து சரி பிழைகளைச் சிந்திக்கத் துணியாத மனிதர்களால் இதனைச் செய்யவே முடியாது. சமுதாய நன்மையை விழைபவர்கள் இதனைச் செய்யாதபடியினால்தான் நல்ல நோக்கங்களுக்கென இணைந்து சங்கங்கள் அமைத்து நாசக்காரர்களின் நடவடிக்கைகளால் மனமுடைந்து போகிறார்கள்.

ஆசிரியமும் ஆலயமும் இயக்கங்கள் பலவும் கூட இந்த மாதிரி தீயொப்ப ஆசாமிகளால்தான் அர்த்தமிழந்து போய்க் கொண்டிருக்கின்றன.

இதனை அலட்சியப்படுத்தாமல் அமைதியாக ஆய்ந்து, உணர்ந்து சிந்திப்பவருக்கு சரியான பாதையை மலைமேலிருந்து காண்பதுபோலத் தெளிவாக அனைத்தும் விளங்கும்.

அப்போதுதான் நமக்கு, கல்வி வேறு அறிவதென்பது வேறு,அறிந்திருப்பது வேறு புரிந்து கொள்வதென்பது வேறு என்பது தெளிவாகும் சாத்தியம் உருவாகும்.

தனிப்பட்ட வாழ்க்கையும் பொது வாழ்க்கையும் வெவ்வேறானவையாக ஒழுக்கத்தில் இருந்தால் அவ்விடத்தில் மனித உருவில் ஒரு விலங்குதான் இருக்கும். படித்துப் புலமை பெற்றுத் தேறிய பெருமனிதனாக இருந்தாலும் வெறும் உக்கி நிற்கும் மரமாகவே அவனிருப்பான்.

இதைத் தெளிந்து கொண்டு, பொறுமையுடன், எவர் சொன்னாலும் அதை ஆராய்ந்து பார்த்துவரும் பழக்கத்தைக் கடைப்பிடிப்பது மட்டும்தான் கண் விழித்த குருடர்களுக்கும் நமக்கும் இடையிலே இருக்கிற வித்தியாசத்தை நாமே கண்டு பிடித்துக் கொள்ளப் பயன்படும் பூதக்கண்ணாடியாக நமக்கு உதவி செய்யும்.

செலவில்லாத, சிரமமில்லாத இதைச் செய்துவர இனியும் ஏன் தயக்கம்?

கடுக்காய் துவர்க்கும் என்பார்க்கும் அதுவே இனிக்கும் என்பார்க்குமிடையிலான அடிப்படை வித்;தியாசம் இதுதான்.

கசடன் கடிதலை வெறுப்பான்.
கண்ணியன் திருத்தலை ஏற்பான்.


சனி, 13 ஜூலை, 2013

சும்மா சில வரிகள் 4







50. தீமைக்குத் திட்டமிடும் நேரத்தை நன்மையில் செலவிடும்போது
   புண்ணியங்களின் வாசல்கள் தாமாகவே திறந்து இடம்
   விடுகின்றன.

51. உரிய இடத்தில் இருத்தினால்தான் பொருளின்சரியான பெறுமதி தெரியும்.
   உரிய விதத்தில் எடுத்துரைத்தால்தான் உண்மைகளில் தாக்கம் உரிய விதத்தில் இருக்கும்.

52. வாய் சிலரிடம் மட்டும் பேசும். பத்திரிகை ஊரெல்லாம் பேசும்.
   உண்மைகளோ உலகமெல்லாம் பேசும்.

53. மனிதனின் வளர்ச்சி உடலிலல்ல, பொருளிலல்ல, உள்ளத்தின்
   தெளிவிலேயே அறிவதன் வெளிப்பாடாக வருவது உறுதியாகின்றது.

54. குடும்பத்துக்காக உழைப்பவன் சாதாரண மனிதன், மக்களுக்காக
   உழைப்பவன் நல்ல மனிதன், தன் தேசத்தைக் காப்பதற்காக   உழைப்பவனே மாமனிதன்.

55. முழுமை பெறுமுன் பிறக்கும் உயிர்களுக்கு ஆபத்துண்டு.
   முழுமையான தெளிவில்லாத திட்டங்களுக்கும் அப்படித்தான்.

56. வரிசையாய் அமைந்த அணிவகுப்புக்களின் அழகு தனித்துவமாகத்
   தெரியும். ஒழுங்கான, நேர்மையான மனிதர்களின் வாழ்க்கை
   முறைகளிலும் பாடம்  இருக்கும்.

57. உலகைச் சுற்றிவரப் பணமில்லையெனக் கவலை வேண்டாம்.
   நூலகங்களில் அதை இலகுவாகச் சுற்றி வரலாம்.

58. பாத்திரத்தில் துளையிருந்தால் நீர் சேர்த்துப் பயனில்லை.
   நோக்கமதில் தவறிருந்தால் படிப்பதிலே பயனில்லை.

59. ஒரு வண்ணம் கலப்படைந்தால் புதுப்புது வண்ணங்களுள் நுழைய
   முடியுமே தவிர, என்றைக்குமே தன் தனித்துவ நிறத்துக்குத்
   திரும்ப முடியாது. ஒழுக்க இழப்பும் அப்படித்தான்.

60. குதிரையின் சுதந்திரம் கடிவாளத்தைத் தவிர்க்குமேல் அதில்
   பயணிப்பவன் ஆபத்துக்குள்ளாவான். தேசத்தின் இறைமையுள்ள
   இனங்களைப் பிரித்தால் அந்நாடு ஆபத்துக்குள்ளாகும்.

61. கன்னியரின் எதிர்காலத்தை விபச்சாரிகளிடம் ஒப்படைப்பதும்
   தேசங்களின் எதிர்காலத்தைச் சுயநலவாதிகளிடம் ஒப்படைப்பதும்
   சுயசவக்குழிகளைத் தோண்டலுக்கு ஒப்பாகும்.


செவ்வாய், 25 ஜூன், 2013

சும்மா சிலவரிகள் 3



41. விவாத அரங்கத்தில் வெல்வதில் திறமையே முக்கியம் சரிபிழை
   என்பதல்ல.ஆனால்.. நீதியை வெல்வதில் நேர்மையே முக்கியம் ஆள்
   பார்த்தல் என்பதல்ல.

42. கடவுளைக் காணாமல் தேடியே அலைகின்ற மனிதனைக் கடவுளே
   நேரில் வந்து பார்த்தால் "என்னை நேரில் கண்டுமேன் என்னையவன் கவனியாமல் போகின்றான் என்று வியப்பினால் மலைத்துப் போவான்.

43. ஒரு நாட்டின் பணத்தினை அது எதுவென்று புரியாதார் குப்பைக்குள்
   எறிந்துவிடக்கூடும். சுய அறிவு இல்லாத மடையர்கள் அறிஞர்களை
   இகழ்ந்து அதில் மகிழ்வு கொள்வதுவும் அப்படித்தான்.

44. அறிவினைச் சேர்ப்பது மிகமிகக்கடினம். அதனைப் பிறருக்காகப்  
   பயன்படுத்தலோ மிகமிக இலகு.

45. வண்ணத்தின் அழகு குழைப்பதில் கூடும். எண்ணத்தின் அழகு
  உழைப்பதில் கூடும்.

46 தேய்க்கத் தேய்க்கப் பொன் பொலிவுறும். எழுத எழுத அறிவு
   வலிவுறும். பார்க்கப் பார்க்க அறிவு விரிவுறும். கேட்கக்  கேட்க
   அறிவு தெளிவுறும்.

47. ஆழமில்லா குளத்திலே கப்பல் ஒடாது. ஆழமில்லா அறிவினால்
   நன்மை வராது.

48. ஆற்றலுக்கு ஆயுதம் தொழிலாளி. ஆற்றலின்மைக்கு அதுவே
   எசமான்.

49. நாற்பது நல்ல உரைகளை விடவும் ஒரு நல்ல செயல் பெறுமதி
   கூடியது

50. நன்னீர் மலர் காக்கும். வெந்நீர் அதை அழிக்கும்.
   இலட்சியங்களும் அப்படித்தான்.

ஞாயிறு, 23 ஜூன், 2013

கண்மூடி நடந்தால் காலம் கைவிரிக்கும்









பிறருக்கு நலம்செய்யும் விதமதைப்போல்
குரல்தந்து உலகேய்க்க விழைந்திடாதே!
முதல் செய்த செயலெல்லாம் பின்புஒருநாள்
முதல்சேர்த்த பலனாகும் மறந்திடாதே!

தற்போதைக் குனதுவாழ் வுயரல்வேண்டி
தற்போது செய்பாவம் மறைந்திடாது
முட்களை விதைத்துநீ தோட்டம்போட்டு
முளைவிட்டுப் பலன்தரல் நடந்திடாது

மண்மேட்டில் நின்றுநீ மழையை வென்று
மழைவெள்ளம் அள்ளாமல் தப்பவீடு
அதனுயரத்  தைநம்பி அமைத்துவைத்தால்
அதன்பிழைப் பொறுப்புயார்? நீயா, ஊரா?

ஆற்றுமணற் கொள்ளையினை வர்த்தகம்என்று
ஏற்றுச்செய்யும் வஞ்சகத்தால் நீரின்றிநாடு
வற்றிவாடித் தவிப்பததன் பாதகத்தாலே
சுற்றிவாழும் மக்கள்துயர் உன்பழியாகும்

ஞாலமதன் இயக்கமென்ப தெதிர்விளைவுதான்
காலமொன்றில் ஒன்றைவைப்ப தென்பதுண்மைதான்
செய்வினையின் நன்தைீமை வகுத்து இயங்கிடேல்
கைவிரித்துக் காலம்விடும்! நடக்கும் உண்மைதான்



சும்மா சில வரிகள் 2





21. வேதனையைத் தாங்கிக்கொள். அது இதயத்தை இலகு படுத்தும்.
   வேதனையைப் பிறருடன்  கலந்து கொள். பாடம் கிடைக்கும். பொய்யாகச் சூழுகின்ற நண்பர்களை இழப்பாய்.

22. புகையிலையின் நட்பு மரணத்துக்கு அழைப்பு. தீயவரின் நட்பு
   பாவத்துக்கு அழைப்பு.

23. தவறுகளை மறுக்கும் துணிவின்மையை மறைக்கத்தான் மனிதன்
   மனம் பலவீனமானது என மழுப்புகிறான்.

24. அழகாக எழுதுவதற்கு மொழி அறிவு வேண்டும். அழகாகத்
   தோன்றச் செய்ய கலையறிவு வேண்டும். அழகாக 
   வாழ்வதற்கு நல்லொழுக்கம் வேண்டும்.

25. இரு முறை நாம் ஒன்றை வலியுறுத்த நேர்ந்தால் முன்னிற்பவர்
   ஒன்றில் செவிடர் அன்றில் பாமரர் என்று பொருள். மும்முறை
   முயன்றால் ஒன்றில் முன்னிற்பவர் குருடர் அன்றில் மடையர் என்று
   பொருள். அதற்குமேலும் முயன்று தோல்வி வந்தால் முன்னிற்பவர் வெறுந்தலைக்கனமுள்ள முட்டாள் என உணர்ந்து விலகுங்கள்.

26. வாய்க்கு இரண்டு உதடுகள், வாழ்க்கைக்கு இரண்டு உயிர்கள்,
   காலத்துக்கு இரண்டு பிரிவுகள் ஏன்? இரண்டின்றி ஒன்றென்று 
   ஒன்றில்லை என்பதால்தான்.

27. வறுமையென்பது பொருளிலல்ல, மனதிலேயே வடிவமைகிறது.
   இதயம் இளகினால்தான் வறுமையை ஒழிக்கும் வழி பிறக்கும்.

28. ஒரு நாளென்பது எல்லார்க்கும் பொதுவென்றாலும் அதுவே
   சுறுசுறுப்பானவனுக்கும் சோம்பேறிக்கும் வித்தியாசப்படுகின்றது.

29. கணனியால் உலகம் கைக்குள் வந்தும் அறிவின் தேடல்
   குறையவில்லை. தாகந்தீரத் தீர ஓடும் வேகம் கூடுகின்றது.

30. ஆத்மீகம் ஒரு மாதுளை. அதன் முத்தான வித்தில் சத்துண்டு.
   தோலிலும் மருந்துண்டு.

31. வயதேறத் துவங்குகையில் மகிழ்வூட்டும் பிறந்த நாள் வயதேறி   
   வருகையில் பயமூட்டுகின்றதை மறைத்து முறுவலிப்பவர்களே
   முதிய மனிதர்கள்.

32.; கடவுளுக்குக் காணிக்கை செலுத்தி;த் தங்களுக்கு ஏற்ப
   காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம் என்று மக்கள் நம்பும்
   வரைக்கும் கடவுளிடம் ஏமாற வேண்டியதுதான்.

33. தேவையில்லாததை அளவுக்கதிகமாகச் சேர்ப்பது குப்பைத்
   தொட்டி. தேவைக்குமேல் சேர்த்து அதில் அமிழ்பவன் பணக்காரன்.

34. ஒரு நல்ல விளக்கிருந்தால் காரிருளை வென்றிடலாம். ஒரு
   நேர்மையான, நல்ல உறவிருந்தால் துன்பத்திலும் மகிழ்வோடு
   வாழ்ந்திடலாம்.

35. அர்த்தமின்றிப் புகழ்கிறவர் அடிக்கடி நம் அருகில் வந்தால்
   ஆபத்து நெருங்குகின்றதென்று பொருள்.

36. அளவாக இருவார்த்தை அறிவோடு பேசினால் அறிவான பல
   மாந்தர் நட்புக்கு அது உறுதி. அளவுக்கு அதிகமாய் உதடுகளை
   விரித்தால் அருகில் வருபவர்கள் அகன்றோடுவது உறுதி.

37. பணம் தேட மட்டும்நீ தொழிலுக்கு ஓடினால் வாழ்வின் சுவை
   கெட்டுப் போகும். மனம்ஈடு படும்வண்ணம் தொழில் தேடி ஓடினால்
   வாழ்வின் வழி உயர்ச்சி காணும்.

38. பத்தும் பத்தும் சேர்ந்தாலும் பூச்சியம் ஒன்றாய்த் தானிருக்கும்.
   அதுபோல சரியான இலட்சியத்தைப் பற்றி நிற்பாரின் பன்மையும்
   ஒருமையாய்த்தானிருக்கும்.

39. பழிவாங்கும் எண்ணம் நம் உள்ளத்தில் வந்தால் முடிவெடுப்பதை
   உடனடியாகவே ஒத்தி வைப்பது நல்லது. காரணம், அவ்வுணர்வு
   பிழைகளைச் சரிபோலக் காட்டவல்லதாகும் என்பதுதான்.

40. கோழைக்கு இருட்டினைக் கண்டாலே பயம் வரும். அதனாலே
   விளக்குடன் போ. ஏழைக்குச் சிறுஉதவி என்றாலும் பயன்தரும்.
   அதனால்நல் இதயத்துடன் போ.

செவ்வாய், 18 ஜூன், 2013

சும்மா சில வரிகள் 1





1.  பத்து மலர்ச் செடிகளுக்கு நடுவிலும் ஒரு வாழை அதிக பலன் தரும்.
   பத்து பணக்காரர்கள் நடுவிலே ஒரு நன்னடைத்தையுள்ளவனால்
   அதிக நன்மை கிடைக்கும்.

2.  நட்புறவை அதிகம் வளர்ப்பது உறவு. நண்பர்களை அளவாய்த்
 தெரிவது அறிவு. நுண்பரைச் சரியாய் உணர்த்துவது அனுபவம்.

3.  தனித்தே பெருகுதல் மரங்களின் இயற்கை. இணைந்தே பெருகுதல்
 மனிதரின் இயற்கை.

4. காண்பதை நம்புபவன் பாமரன். காரணத்தை உணர்பவன் அறிஞன்.
  கேட்பதை ஏற்பவன் பாமரன்.கேட்டதில் தக்கதை ஏற்பவன் அறிஞன்.

5. அயல் வீட்டு விருந்தின் சுவையை விடவும், சொந்த வீட்டின்
  சாதாரண உணவே நிரந்தர சுவையைக் கொண்டதாக இருக்கும்.

6. நாலிலிருந்து நாற்பதுவரை நூல்களும் நாற்பதன் பின் 
  அனுபவங்களும் மனிதர்களின் நம்பிக்கைக்குரிய நண்பர்களாவர்.

7. கடலில் முத்தும் உண்டு கால் பறிக்கும் விலங்கும் உண்டு.
  சூழலிலும் அப்படித்தான்.

8. சக்திக்கு மீறிய துன்பங்கள் இறைவன் தருவனவல்ல, நாமே
  இழுத்துக் கொள்வன.

9. மூவேளை உணவை ஒன்றாய் உண்ணலும் எல்லாம் அறிந்து
  முழுமையுறுதலும் இயலாமையினால் ஏமாற நிற்கும் மனித
  பலவீனத்தின் அடையாளங்களாகும்

10. இதயத்தை சுத்தமாக வைத்திருக்காத காரணத்தால்தான்  
   இறைவனை ஆலயங்களில் தேடி ஓட வேண்டிய தேவை
   மனிதர்களுக்கு ஏற்படுகின்றது.

11. மதங்களின் அடிப்படை உட்செய்தி ஒன்றுதானென்று உணராத
   வரைக்கும் மதபேத மோதல்கள் ஒழிய மாட்டா.

12. வாசித்தல் நல்ல பழக்கம். நல்லவற்றைத் தேடி வாசித்தல் மிக 
   நல்ல பழக்கம். நட்புறவு நல்ல பழக்கம். நல்லவர்களுடன் நட்புறவு
   மிக நல்ல பழக்கம்.

13. கடினப்பட்டு உருவாக்கிய பத்திரிகையைக் கண்டபடி
   விமர்சிப்பவர்கள் கண்ணுள்ள குருடர்களே!

14. உழைப்பை மதிக்க உயர்ந்த உள்ளம் வேண்டும் என்பதையே 
   அதில் தோல்வியுறுபவர்கள் பாடமாக உணர்த்துகின்றார்கள்.

15. நமக்கு வேண்டியவர்களின் குற்றங்களைப் பொறுப்பது சரியென்றால்
   வேணடாதவர்ளின் பிழையை பொறுக்க மறுப்பதில் நியாயமில்லை.

16. நீதிக்குத் துணிவு அழகு. துணிவுக்குச் சாதனை அழகு. அறிவுக்கு
   ஆற்றல் அழகு. ஆற்றலுக்கு விவேகம் அழகு.

17. பாட்டு இசையின்றி எடுபடாது. நற்கருத்து உண்மையின்றேல்
   எடுபடாது.

18. முத்தின் பெறுமதி நகையினில் தெரியும். நட்பின் பெறுமதி
   கஷ்டத்தில் புரியும்.

19. பணத்தினால் விளையாத நல்லவைகள் நல்ல வழிகாட்டலில்
   விளைவதுண்டு.

20. கருமிகள் சேர் செல்வம் கண்டவர்களிடமும் உழைப்பவர் செல்வம்
   உரியவர்களிடமும் அடைதலே வினைப்பயனாகின்றன.

சனி, 15 ஜூன், 2013

சிந்தனைக் கூறுகாய் 17






161.உடலிலே தொடங்கி உடலதில் இணைந்தும் உயிரின்றி இருப்பது? காமம்.
       உடலிலே தொடங்கி உள்ளத்தில் இணைந்து உயிரோடு கலப்பது காதல்

162.வாழ்வதன் அர்த்தத்தை வழங்கிடும் தூயதோர் இலக்கணம் ஆகும் காதல்
       வாழ்வதன் அடிப்படைக் குதவாது போகையில் அர்த்தமே அற்றுப்போகும்

163  அடுத்தவர்க்குதவிடும் நற்பண்பைக் குழந்தைகள் உள்ளத்தில்                      
         ஊட்ட  வேண்டும்
         கெடுப்பவர் நல்வேடம் பற்றியும் புரியும்வண் சரியாகக் காட்ட வேண்டும்

164.அநியாயம் செய்பவர் கைகட்குத் தீயவர்ஆயுதம் தற்காலிக பலம் தரலாம்
       அநியாயம் அதனாலே வெல்லாது அடிபட்டு அழிவுறல் நிச்சயம் எனச்             சொலலாம்

165.போர்வீரர் எனப்போர்வை போர்த்திட்ட போலியர் போர்முனை நின்று              வெல்லார்
யார்யாரோஅப்பாவி எனத்தேடி அவர்கொன்று போர்வென்றோம் எனப் புகல்வார்

166.பொதுமக்கள் உரிமையைப் பறித்ததில் ஆள்பவன் ஆட்சியொரு சாபக்கேடு
      அதுகண்டும் அவன் பின்னே அணிதிரள் கூட்டமோ மனிதத்தின் பாவக்கூடு

167.துறவியும் மனிதனே மனப்பல வீனனே என்பதை மறந்து செல்லின்
       திறமையாய் ஆண்டவன் பெயரிலே அவன்பிழை செய்தலைத் தடுத்தலென்று?

168.பாவத்தால் உயரவே முயலுவன் தண்டனை காலத்தால் அவனைச் சேரும்
      ஆபத்து சூழினும் அதிராதநீதிசார் மக்களைத் தவறாது வெற்றி சேரும்

169.வெல்லாமல்நீதியை அடக்கிடும் தீயவர் இறுதியில் விழுந்திடல்தான்
எல்லாரும் இறுதியில் கண்டவோர் உண்மையாய் வரலாறு சொல்லுதையா!

170. வேண்டும் சுகம் வேண்டும் என்பதற்காகவே தீமைசெய் மனிதர்கள்தம்
குணமற்ற நிலையதால் உயிர்வாழும் மனிதவுரு விலங்குகள் மட்டுமேதான்

புதன், 29 மே, 2013

சிந்தனைக் கூறுகாய் - 16











151.   கடவுளைக் காண்பேனோ இல்லையோஇதயத்தில் நிச்சயம்                             வைத்திருப்பேன்
         இடமின்றி இதயமது வெறுமையாய் ஆவதை அதில்நானும் தவிர்த்திருப்பேன்

152. கறைகொண்ட கைகளால் கழுவியே சுத்தம்செய் போலித்த னத்தைத்தான்
       இறைவனின் பெயரிலே மனிதத்தை அழிப்பவர் சேவையாய்க் காட்டுகின்றார்

153.  உடற் சுத்தம் நோயின்றி தப்பிடற்குதவாது, உடலுக்குள் சுத்தம்வேண்டும்
         கடவுளைக் கும்பிட்டுப் புண்ணியம் சேராது, மனிதத்திற் குதவவேண்டும்

154. எழுதுவர் விரல்களில் இதயத்தின் நாடியும் நாளமும் இருக்க வேண்டும்
       பழுதுள்ள குருதியேல் அதுதரும் நோய்கேடு. எழுதுவோர் உணர வேண்டும்

155.   காதலைக் கவர்ச்சியாய் உணர்ச்சியாய் மட்டுமே கவிஞர்கள் காட்டும்போது
         காலத்தின் தாக்கத்தைத் தாங்கிடும் ஆற்றலை காதலர்க் களிப்பதேது?

156.காலத்தின் வேகத்தில் கவர்ச்சியும் உணர்ச்சியும் கானலாய் ஆகிப்போகும்
       காலத்தை மீறியே அன்பெங்கே ஆழமோ அங்குதான் அது காதல் பதிவு   ஆகும்

157.கடவுளைத்தேடி-யெ வருவதைப் போலவும் களவதைச் செய்வதெது?
      உடலுக்குள் எழுந்து, பின் உள்ளத்தில் நிறையும் உண்மைக் காதலது

158.   இறைவனைக் காதல் என்றுரைப்பதிலும் உண்மையே உண்டு என்பேன்
         இகமதை இயக்கும் படைப்பதன் அடிப்படை அதனிலே இருக்குதென்பேன்

159.நாளெல்லாம் தேடியும் நீர்கிடைக் காவிடின் உடல்சோரும். தாங்கிடலாம்
       நாளெல்லாம் பழகியும் நல்நட்பு கிடைத்திடேல் எவ்வண்தான் தாங்கிடலாம்?

160.வெள்ளத்தைக் கண்டுநான் அஞ்சமாட்டேன் அதிலென்னால் நீந்தியே தப்பமுடியும் -குள்ள
       உள்ளத்தைக் கண்டுதான் அஞ்சிநிற்பேன் அதற்குள் ஆபத்தும் கலந்திருக்கும்

செவ்வாய், 28 மே, 2013

எண்ணங்கள் பண்ணிசைத்தால்....








உண்மையைஉரைக்க நீ அதற்காக உனக்கான
உண்மையில் உறுதியைக் கொள்!
கண்ணொப்ப நுன்னுயிர் துச்சமே  எனஉந்தன்
எண்ணத்துள் நிறைந்தென்றும் நில்!

திண்மையின் தன்மையை உடலல்ல எண்ணத்துள்
உண்மைசார் உள்ளம் காட்டும்
எண்ணற்ற படைகளும் கொடுமனச் செய்கையும்
உண்மைமுன் தோற்றே தீரும்!

வண்ணங்கள்  கிண்ணத்துள் விதங்களாய் நிறைந்தாலும்
எண்ணத்துள் ஓவியம் இன்றேல்
வண்ணங்கள்  சித்திரக் கருவாகும் படைப்புதன்
நுண்மையை இழந்துபோகும்

உண்மையாய்ப் பொய்மையை இனங்காட்டும் பேராற்றல்
உண்மையைக் கொன்றதுண்டா?
மென்மையாய் நடந்தாலும் திண்மையில் தளர்ந்ததாய்
என்றுமெங்கும் நடந்ததுண்டா?

பண்பற்ற பாதகர் கைகளால் சனநாய கம்இன்று
புண்பட்டுத் துடிப்ப துண்மை!
கண்கெட்ட குருடரால் தடுமாறும் உலகைநாள்
கண்மீட்டுக் காக்கும் உண்மை!

எண்ணங்கள் பண்ணிசைத்தால் இதயமதுமிணைந் ததனுள்
உண்மைகள் உயிர்மை கொள்ளும்!
எண்ணங்கள் எழுவதுபோல் விரிவாதற் குதவுவமேல்
எண்ணங்களும் நனவு காணும்!

வெள்ளி, 17 மே, 2013

குறுமனக் குருவிகள்



                                                                  





வானத்தில் பறப்பவை எவை என்று யாராவது நம்மைக் கேட்டால் உடனே பறவைகள் என்று பதிலளித்து விடுவோம். ஆனால் வெளவாலும் பறக்கிறதே, அதுவும் பறவையா என்று மறு கேள்வி வந்தால் பதிலளிப்பது சற்று சிரமமாகவே இருக்கும். அதற்குக் காரணம்,  வெளவாலுக்கு பறவைகளினின்றும் மாறுபட்ட இயல்புகளே அதிகமாக இருப்பதுதான்.
எல்லாப் பறவைகளுக்கும் சிறகுகளாலான இறக்கைகளே உண்டு. வெளவால்களுக்கு அவை தோலினால் ஆனவையாக இருக்கின்றன.

புறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. இவையோ குட்டிகளை ஈனுகின்றன.

பறவைகள் இரை தேடிக் குஞ்சுகளுக்குக் கொடுக்கும். ஆனால் இவையோ பாலூட்டியே வளர்க்கும். 

பறவைகளுக்குச் சொண்டுகளுண்டு. அவை கொத்தித் தின்னும். இவற்றிற்குப் பற்களுண்டு. கடித்துத்தான் தின்னும்.

சாதாரண பறவைகள் வானத்தில் வெளிச்சத்தில் காற்றில் மிதந்து பறக்கும். இவையோவெனில் இருட்டில் சந்து பொந்துகளுக்குள்ளும் குகைகளுக்குள்ளும் எதிரொலியின் தொல்லியத்தில் “ராடார்” விளையாட்டு செய்து பறக்கும்.

சுருங்கச் சொன்னால் பறத்தல் என்ற ஒன்றைத் தவிர, வேறெதிலுமே ஒத்துவராத பிரத்தியேகத் தன்மையைக் கொண்டதாகவே வெளவால் இருக்கின்றது

ஆதலால்தான் அது ஒரு பறவை என்று பதிலிறுப்பதில் கடினம் இருக்கின்றது.

இதைப் போலவே தோற்றத்திற்கு மனித உடம்பை மட்டும் கொண்டிருந்து, மனிதத்திற்கேற்ற நற்குணங்களிலெதுவுமே அற்றிருக்கும் ஒரு வகை இரண்டுங் கெட்டான் வகையிலான வெளவால் மனிதர்கள் நம்மைச் சூழ இருக்கின்றார்கள்.

இவர்களின் நடவடிக்கைகள் சில சமயங்களில் இவர்கள் எப்படி மனிதர்களாக இருக்க முடியும் என்ற ஆதங்கத்தை எழுப்புவதை வைத்தே இவர்களை நாம் சரியாக அடையாளம் கண்டு கொள்ள முயல்கையில் ஐயமாக இருக்கின்றது.

தான் கள்வனெனின் பிறனை நம்பான் என்று சொல்வார்கள்.

அதாவது ஒருவன் தனது மனவளர்ச்சிக்கு ஏற்பத்தான் மற்றவர்களைக் கணிக்கின்றான்.

ஆனால் இதனை அப்படியே நம்பிக் கொண்டு, சரியாகச் சிந்திக்காமல் பிழைகளைக் கண்டு பிடித்துத் தவிர்க்க வழி சொல்பவர்களையும் பிழையானவர்களைப் பற்றி எச்சரித்து உதவுபவர்களையும் தவறாகக் நாம் கணித்துவிடக் கூடாது.

வள்ளுவன் சொல்லும் மெய்ப் பொருள் காணும் மனப்பக்குவத்தை இதில்தான் சரியாக நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒரு களவை அல்லது கொலையைத் துப்புத் துலக்கிக் குற்றவாளியைக் கைது செய்யும் அதிகாரிக்கு நிச்சயத்திலும் நிச்சயமாகக் குற்றச் செயல்களின் அனைத்துத் திக்குதிசைகளைப் பற்றியும் ஆழமான அறிவு இருந்தாக வேண்டும்.

ஆனால் அதனை ஆதாரமாக வைத்து நாம் அந்த அதிகாரி கள்ளனை விடவும் பெரிய கள்ளன் என்று பொருள் கொண்டுவிட முடியாது.

ஆனால் சாதாரண பொதுமக்களிடையே உணவில் கலந்துள்ள பதார்த்தங்களைப் போலக் கலந்து கிடக்கின்ற இந்தக் குறுமனக் குருவிகளையும் வஞ்சக வெளவால்களையும் அப்படியான அபிப்பிராயத்துக்குள் அடக்கிவிட முடியாது.

உறவுக்கு உதவா கபடர்களையும் நட்புக்கு உதவா வஞ்சகர்களையும் இணைவுக்கு உதவா துரோகிகளையும் சமமாக வைத்து நல்ல சிந்தனையுடனான மக்களைத் தரத்தில் தாழ்த்திவிடக் கூடாது.

ஒரே இனப் பறவைகளுக்குள்ளும் கூட பலவிதமான தனிப்பட்ட அமைவு வித்தியாசங்கள் உண்டு. விலங்குகளுக்குள்ளும் அப்படித்தான்.

பல வகை விலங்குகளும் பறவைகளும் தத்தனது இனத்துக்கு ஒத்த பிற இன விலங்குகளை இனங்கண்டு உணர்ந்து மட்டுமே இணைந்து வாழ்கின்றன என்பதன் இயற்கை அறிவுத் தன்மையை நாம் கவனமாகக் கவனிக்க வேண்டும்.

ஆனால் மிகவும் துரதிர்ஷ்டவசமாக நமது மனித இனத்துக்குத்தான் அனைத்து உயிரனங்களினதும் ஆபத்தான குணநலன்களை மனித நல்ல இயல்புகளுடனே இயற்கை கலந்து விட்டு வேடிக்கை பார்க்கின்றது.

மனிதர்க்குக் கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு. ஆனால் பார்வைகள்? கேள்விகள்? நமக்கே அதிர்ச்சியைத் தருகின்ற ஆச்சர்யங்களல்லவா இவை?

குடும்பங்களுக்குள், அலுவலகங்களுக்குள், நண்பர்களுக்குள், சந்திப்புக்களுக்குள் அத்தனையிலும் நம்பிக்கையின்மையும் உண்மையின்மையும் நேர்மையின்மையும் தூய்மையின்மையும் இப்படி மலிந்து கிடப்பதனால்தானே அமைதியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் கிடைப்பதில் இத்துணை சிரமமாக இருக்கின்றது?

அறிஞன் என்று வருகிறான் ஒருவன். பெரிய பெரிய நூலாசிரியர்களின் உயர்ந்த கருத்துக்களையும் தத்துவங்களையம் அள்ளி அள்ளிக் கொட்டுகிறான். கேட்கின்ற சமுதாயம் தனது மூக்கின் மேல் விரலை வைத்து மலைக்கின்றது.

ஆனால் மற்றவர்களின் அறிவைத்தான் அவன் தனது மூலதனமாக வைத்துத் தன்னை உயர்த்தி நிற்க விழைகின்றான் என்பதை உணர மறந்து விடுகின்றது.

அதனால்தான் கள்ளனும் கபடனும் கைதேர்ந்தவர்களாக நிமிர்ந்து நிற்க, உத்தமர்கள் எழுந்து நிற்கக்கூட முடியாமல் தடுமாறுகின்றார்கள். அல்லவா?

அவனவன் தன்னை உயர்த்திக் கொள்ளத்தான் அந்த ஆண்டவனையும் பயன்படுத்துகின்றான். அந்த அநியாயத்தின் தாக்கத்தின் பிரதிபலிப்பாக எழும் சமுதாய மூடத்தனத்தின் பாலான எதிர்ப்பும் வெறுப்புமே நாத்திகமாக முளைக்கின்றது.

அதில் தவறே கிடையாது. ஆனால் அதனைக் கூடத் தவறான மனிதர்கள் தவறாகப் பயன்படுத்துகையில்தான் அங்கேயும் தவறு விளைகின்றது. ஆக, முள்ளை விதைத்து நெல்லை விழையும் மூடத்தனங்களே எங்கணும் ஞானமென இவர்களால் படந்து கிடக்கின்றது.

இதற்கெல்லாம் அடிப்படையில் மனம் நடு நிலை தவிர்த்து பக்கமெடுத்துச் சார்ந்து நிற்பதுதான் அதிமுக்கிய காரணமாக இருக்க வேண்டும்.

நாம் ஏற்ற, நமக்கு ஏற்ற கருத்துக்களுடன் மட்டுமே நிற்கும்போது, மற்ற கருத்தாளர்களை மதிக்க மறுப்பதும் கேட்க மறுப்பதும் அவர்களின் கருத்துக்களைச் சிந்திக்க மறுப்பதும் கூட மாபெரும் தவறுதான் என்பதை மறந்து விடுவதால்தான் எதையும் விடாப்பிடியாக மறுத்து நிற்கின்ற பலவீனத்துக்கு அடிமைகள் ஆகின்றோம்.

மதவாதிகள் கக்கும் பச்சைப் பொய்களை அதிகம் நம்பும் கண்ணுள்ள குருடர்களைச் சாடி எச்சரிப்பது ஒரு சமுதாயக் கடமையென்றால் நல்ல ஒழுக்கத்தைக் கூட அனாவசியம் என்று அறிவுரைத்து, ஆபத்துக்கு வித்திடுகின்ற அபத்தமான அறிவீனத்திலிருந்து தப்ப எச்சரித்து வழிகாட்டுவதும் கூட சமுதாயக் கடமைதான்.

அனைத்துக்கும் மேலாக மனிதத்தை மதிக்க மறுக்கின்ற கொள்கைகளுக்கு எந்த நிலையிலும் எந்த வடிவிலும் எந்தக் காலத்திலும் எந்த இடத்திலும் அங்கீகாரம் அளித்துவிடக் கூடாது.

அரசியலிலும் சரி, மதத்திலும் சரி, சமுதாயத்திலும் சரி, அறிவியலிலும் சரி, மனிதாபிமானத்தில் பேதம் காண்பவரும் காட்டுபவரும் கண்டிக்கப்பட வேண்டியவரே, தண்டிக்கப்பட வேண்டியவரே!

சுருங்கச் சொன்னால் குறுமனக் குருவிகள் பருந்தென நடிப்பதைத் தடுப்பதே நமது அனைத்துச் சேவைகளிலும் தலையாய சேவை.

அடையாளம் காண்பதும் அடையாளம் காட்டுவதும் மனித அடிப்படையைக் காப்பதற்காக இருந்தால் அதுதான் அறிவுடைமைக்கான சேவை.

தவறாய் அறிவைப் பயன்படுத்தல் அறிவல்ல
தவறை அறிவாய்ப் பயன்படுத்தலும் அறிவல்ல
குறையாய் நிறையைச் சுட்டிடல் அறிவல்ல
குறையை நிறையாயச் சுட்டலும் அறிவல்ல
குறுமனம் பெருமன வேடமிட வந்தால்…
குனிந்தே அதனை அனுமதித்தலும் அறிவல்ல.

புதன், 15 மே, 2013

சிந்தனைக் கூறுகாய் 15

                                                         


141.துயிலுமுன் பஞ்சணை தரும்சுகம் துயின்றதும் நமைவிட்ட கன்றுபோகும்
இதயத்து ஆசைகள் காலத்தின் மாற்றத்தால் இல்லாமல் மறைந்துபோகும்

142.இருக்கையில் பிரிவதன் துயர்தரும் பாரங்கள் இறந்தபின் மறைந்துபோகும்
இழப்பதே இறுதியில் எவருக்கும் நிரந்தரம் என்பதேஅதன் உண்மையாகும்

143.ஒழுக்கத்தில் மிகநல்ல ஒழுக்கமாய் உள்ளது எதுவென்று சொல்ல வந்தால்
அழுக்கறவே இல்லாது அன்பினைத் தொடருதல் மட்டுமே என்று சொல்வேன்

144.கழுகொன்றின் முட்டையில் கிளிக்குஞ்சு பொரிந்திடல் என்றைக்கும் நடந்திடாது
ஒழுக்கத்தின் விரோதிகள் விதிக்கின்ற பாதைகள் விடிவினைக் காட்டிடாது

145.வள்ளுவர், ஒளவையார் வழிநூறு ஆயிரம் அறிவுரை குவிந்தபோதும்
கள்வரே பெரும்பாலும் அவைவைத்து வளர்வதால் பயனின்றிக் காலம்போகும்

146.மெதுவாகச் செய்தாலும் ஒருநாளில் ஒரு நன்மை ஒருகோவில் கட்ட லாகும்
பதமாகச் செய்தாலும் சதிசெய்து உயர்வாயேல் பாதகம் பதிவிலாகும்

147.நோக்கத்தில் பிழைவைத்துக் குறைதேடி அலைபவன் சமுதாயக் கழிவுக்கூடம்
ஆக்கத்தை விழைந்துநல் மனத்தோடு சுட்டுவன் தனிமனித அறிவுக்கூடம்

148.வாழ்வதற்காகவே உண்பரும் உண்பதற் காகவே வாழ்வரும் யார்?
வாழ்கின்ற மக்களுள் மனிதரும் மக்கள்போல் கலந்துள்ள மாக்களும்தான்.

149.பேய்களைக் கண்டுநான் அஞ்சவே அஞசிடேன் ஏனெனில் பேய்களென்னைச்
சூழவே நின்றாடும் வாழ்க்கையை அனுபவம் தந்ததால் கற்ற உண்மை

150.நாய் ஓட, மாடோட, மக்களுடன் நானோட,படர்தூசி  உணரவில்லை
தாய்:நாட்டில் சில நாட்கள் நடக்கையிலே நானடைந்த மகிழ்ச்சியிங்  கெனக்கு இல்லை



வெள்ளி, 12 ஏப்ரல், 2013

ஈரமிருந்தால் போதுமே!

 தவ வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே.... அதுவும் புண்ணியம்தான்.

பலன் கருதா நற்பணிகள்
பயன் தராவிடினும் புண்ணியம்தான்.

பிறர் நன்மை விழைவதனால் வரும் துன்பம்கூட புண்ணியம்தான்.

கோவில்களும் யாத்திரைகளும் வழிகாட்டிகளேயன்றி வாழ்க்கையல்ல. இறைவனைத் தேடிப்போக கோவிலை நாடினால் சிலையாகக் காணும் நம் கண்களுக்கு.... அவனே நேரில் காட்சி தருவது நமது மற்றவர்களுக்கான நேர்மையான சேவைகளில் தான்.

பெரிய தவமோ ஒறுத்தலோ உபவாசமோ செய்து தரமுடியாத பெரும்பலனை ஓர் ஏழையின் உய்வுக்காய் உண்மையாய் உதவிடுதல் பெற்றுத் தந்துவிடும்.

இது வேதப் புத்தகத்தைக் கையிலெடுத்துக் கொண்டு ஓதும் ஒருவனது பிரசங்கமல்ல. அந்தப் புண்ணியத்தின் பலனை அனுபவித்த உண்மையைச் சத்தியமாய் சொல்பவனின் வார்த்தைகள்.

மதம் மாறிப் பயனில்லை. மனம் மாற வேண்டும். மனிதம் வாழ வேண்டும். அதைச் செய்யும் கலையே மதமாக வேண்டும்.

சில சமயங்களில் நாம் செய்யும் மிகச் சிறிய உதவியேகூட பெரிய சாதனையாக அல்லது அதனைப் போல அமைந்து விட இடமுண்டு.

சுமார் இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னால்  நடந்த  சம்பவம் இது. அப்போது நான் இலங்கையின் தலைநகர் கொழும்பு மாநகரில் வசித்து வந்தேன்.

ஓவ்வொரு வெள்ளியன்றும் கடை கடையாக எறும்பு வரிசைபோல பிச்சைக்காரர்கள் படையெடுப்பதும் அவர்களுக்கு சில்லறை போடுவதே அன்றைய முக்கிய வேலைகளிலொன்றாக இருப்பதும் வழமை அப்போது.

நான் பணி புரிந்த அலுவலகத்திற்கும் இப்படையெடுப்பு தொடரும்.
அன்றொரு நாள் வெள்ளியன்று நான் சில்லறையை எடுத்து வழங்கிக் கொண்டு இருந்தேன்.
அப்போது..

பலராகத் தெரிந்த பிச்சைக்காரர் கூட்டத்துக்கு நடுவே சற்று.. அல்ல அல்ல முற்றிலுமே வித்தியாசமான உருவம் ஒன்று நின்று கொண்டிருந்ததை நான் அவதானிக்க நேர்ந்தது. வாடி நிற்கும் வாழையாக ஒரு பெண்மணி தலைகுனிந்தவாறு நின்று கொண்டிருந்தார்.

அந்தப் பெண்மணியின் உருவத்தில் பிச்சைக்காரத் தோற்றமிருக்கவில்லை. ஏழ்மையான ஆனால் கண்ணியமான பெண்மணியாக அவர் தெரிந்தார்.

முகத்தில் ஏதோ தாங்கிக் கொள்ளவே முடியாத வேதனையும் ஏதோ அவமானப்படுவது போன்ற திகைப்புணர்வும்  சித்திரவதை உணர்வும்  புலப்பட்டுக் கொண்டிருந்தன.

ஏனோ அவருடன் பேச வேண்டும் போல் தோன்றவே அவரை விடுத்து மற்றவர்களுக்கெல்லாம் சில்லறையை வழங்கிக் கொண்டிருந்தேன்.

கூட்டத்தோடே நின்ற போதும் அவர் என்னை நெருங்கி வரத் தயங்குவது எனக்குப் புரிந்தது.

வேகமாக நகர்ந்து கொண்டிருந்த கூட்டத்தின் நடுவில் நின்ற அந்த அம்மாவைப் பார்த்து

 «  அம்மா நீங்கள் கொஞ்சம் தள்ளி அந்தப் பக்கமாக வந்து நில்லுங்கள் »; என்றேன்.

ஏனைய பிச்சைக்காரர்களுக்கு நான் ஏதோ அவருக்கு அதிகமாகப் போடப் போகிறோனாக்கும் என்ற நினைப்பு எழுந்ததை அவர்களின் முகங்களில் எழுதிக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

கொழும்பு நகரத் தெருவோரங்களில் சின்னச் சின்ன டீக்கடைகள் அப்போது நிறைய இருக்கும். இப்போது எப்படியோ தெரியவில்லை. என் அலுவலகத்துக்கு அருகிலும் அப்படியொன்று இருந்தது.

நான் திரும்பி அக்கடைக்காரருக்கு சைகை காட்டினேன். அவர் அந்த அம்மாவை அவரது பெட்டிக்கடைக்குள் அழைத்து இருக்கச் சொல்லிவிட்டார்.

தமக்குக் கிடைக்கவேண்டியது கிடைத்துவிட்டாலும் மற்றவர்க்குக் கிடைப்பதில் மனம் கொதிக்கும் சாதாரண ஏழைகளின் மன பலவீனத்தை நகர்ந்து கொண்டிருந்த இதர பிச்சைக்காரர்களின் முகங்களில் வாசித்துவிட்டு அவர்கள் அகன்றதும் அந்த அம்மாளின் அருகில் சென்றேன்.

அந்தத் தாய் என்னைக் கண்டதும் கூனிக் குறுகி நிற்பதைக் காண எனக்குக் கவலையாக இருந்தது.
« ஏனம்மா இதுநாள்வரைக்கும் நீங்கள் இப்பிடி இந்தப்  பக்கம் வந்ததாகவே தெரியல்லையே இன்னிக்கித்தான் மொதத் தடவையா வாறீங்களா.. அல்லது ... ? »

நான் முடிக்குமுன் அந்தத் தாய் விக்கி விக்கி அழத் தொடங்கிவிட்டார். நான் சட்டென்று அலுவலகத்துள் சென்று பதினைந்து நிமிட விடுதலை கேட்டுவிட்டு மீண்டும் திரும்பி வந்தேன்.

அந்த அம்மா சொன்ன கதையில் நமது சமுதாயத்தின் பலவீனமும் திமிரும் மதமும் பேதைமையும் பொய்மையும் வெள்ளைச் சேலையில் கொட்டிய கறுப்பு மைச் சிதறலைப் போல பளிச்சென்று தெரிந்தன.

கதை இதுதான் :
அந்தம்மாவின் கணவர் ஒரு வெற்றிலை வியாபாரி. மிகச் சிறிய தொழில் மிக அளவான வருமானம். மூன்று பிள்ளைகள். இரு சிறுமியர். ஒரு மகன். மூவருக்குமே வயது எட்டுக்கும் குறைவு.

இந்நிலையில் அந்த ஏழைத் தகப்பன் மூன்று மாதங்களுக்கு முன்பாக வெற்றிலையை விற்பனைக்காக வாங்கிக் கொண்டு வரும் வழியில் பின்னோக்கித் திரும்பிய ஒரு லாரியினடியில் சிக்கிச் சிதைந்து போனார்.

அவரது திடீர் மறைவினால் குடும்பம் அல்லோலகல்லோலப்பட்டது. அந்த அம்மா அதிகம் படிக்காதவர். எந்த உலக அனுபவமும் இல்லாதவர். தலைவன் இறந்ததும் தான் ஏழ்மையின் தாக்கத்தையே சரியாக அவர் உணர்ந்தார்.

சவ அடக்கத்துக்கும் கூட செப்புக் காசில்லாத கொடிய நிலை. ஓருவர் கொடுத்துதவிய கடனால்தான்  ஏதோ செய்ய முடிந்;திருக்கிறது.

அதன் பிறகு ஊரே விலகிக் கொண்டது.
கைம்பெண் அல்லவா ! அதனால் உறவுகளும் விலகிக் கொண்டன.
ஓரிரு பக்கத்துக் குடும்பங்கள் ஓரிருநாள் கஞ்சிக்குக் கடன் கொடுத்துவிட்டு அவையும்  கையை விரித்துவிட்டன.

இந்நிலையில் பிள்ளைகளின் பசியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்தத் தாய் தன் கணவரின் அடக்கத்துக்குக் கடன் தந்தவரிடமே கொஞ்சம் மேலதிகக்கடன் கேட்டிருக்கிறார்.

இந்த இடத்தில்தான் இடி விழுந்த அந்தக் கதையைச் சொன்னார் அந்தத் தாய்.
காசு இல்லையென்று சொல்லலாம். பரவாயில்லை. ஆனால் அவன் என்ன சொல்லியிருக்கிறான் தெரியுமா ?

« இனியும் காசு தேவையென்றால் மருதானைக்குப்போய் நில்லு. நன்றாய் சம்பாதிக்கலாம். அல்லது பிச்சையெடு »  என்றிருக்கிறான் அந்தப் பாவி.

மருதானை ?
அது விபச்சாரிகள் தெருவோரம் நின்று வாடிக்கைதேடும் கொழும்பு நகரின் ஒருபகுதியாகக் கணிக்கப்பட்டுவந்த காலமது.

இந்த அன்னை அப்படியே துடிதுடித்துப் போயிருக்கிறார்.கேட்கவே எனது இரத்தம் கொதித்தது. நான் கேட்டேன்.                    

 „இது எப்போ நடந்தது அம்மா ?“

அந்த அன்னையின் பதறும் உதடுகள் உதிர்ந்தன. பதிலிறுத்தார் :

“நேற்றுதாங்க.”

நேற்றுக் கேட்ட அந்த வார்த்தைகள் ஒரு கண்ணியமிக்க குடும்பப் பெண்ணை இன்றைக்குப் பிச்சையெடுக்க வைத்துவிட்ட அந்தக் கொடுமையை இன்று எழுதும்போதுகூட என் இரத்தம் கொதிப்பதை உணர்கிறேன்.

“என்ன செய்யலாம்?” என்று நினைத்தவன் அந்த அம்மாவைக் கடைக்குள்ளேயே இருக்கும்படி சொல்லிவிட்டு டீக்கடைக்காரரிடம் அவருக்குப் பலகாரமும் டீயும் கொடுக்கச் சொன்னேன்.

அடுத்து என் அலுவலகத்துக்குள் சென்று எனது சக ஊழியர்களிடம் விஷயத்தை விளக்கினேன்.

முதலில் அவர்கள் சிரித்தார்கள்.

“ஊரெல்லாம் ஆயிரம் இப்படித்தானிருக்கும். எல்லாருக்கும் கொடுக்க நாம் எங்கே போவது?”
எங்கள் கேஷியர் தத்துவம் கக்கினார்.

“ஏன் மிஸ்டர் பிள்ளை! இதுவரை ஒருத்தருக்காவது இப்படி நீங்கள் ஏதாவது செய்ததுண்டா? செய்யாவிட்டால் சும்மா ஒதுங்கியிருங்கள். மற்றவர்கள் மனதைக் கெடுத்து பாவத்தைக் கட்டிக் கொள்ளாதீர்கள். நாளைக்கு உங்கள் மகளுக்கும் கூட காலம் மாறி இது மாதிரி ஏதாவது நடக்கலாமில்லையா!?”

அவர் அத்துடன் கப்சிப்.

நான் அந்த அம்மாவுக்கான உதவித் திட்டத்தைச் சொன்னேன். உதவி தற்காலிகமானதாக இல்லாமல் நிரந்தரமாகப் பயன்தர வேண்டுமென்றால் அப்பெண்மணி தன்காலில் நிற்கும் தகுதி முக்கியம் என்பதை விளக்கிச் சொன்னேன். ஏற்கனவே ஓர் ஏழைக்கு உதவியது நற்பலனளித்ததைக் கண்ட அனுபவம் எனக்கிருந்தது.

சில நிமிட கலந்துரையாடலின் பின் எல்லாரும் சேர்ந்து ஒத்துழைப்பதாக வாக்களித்தார்கள் எங்கள் காஷியரைத் தவிர. ஒரே எரிச்சல் அவர்மேல் எனக்கு. இருந்தாலும் பொறுத்துக் கொண்டேன்.

நான் மீண்டும் வெளியே வந்து அந்த அம்மாவிடம் அவர்களின் விலாசத்தைக் கேட்டேன். அவர் மிகவும் தயங்கினார். அதன் அர்த்தம் எனக்குப் புரிந்தது.

எலும்பில்லா நாக்குகள் எதையும் பேசும் ஆனால் அதையே உண்மையென்று தொற்றிக் கொண்டு பாடும் சமூகமல்லவா நமது சமூகம்! தன் மானம் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற அந்தப் பயந்தான் அவரைத் தடுமாற வைக்கின்றது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

நல்லதைச் செய்யக்கூட அஞ்சி அஞ்சித் தடுமாறும் ஒரு நிலைமையா?
வேடிக்கை மிகுந்த சமுதாயச் சம்பிரதாயங்கள்!

எனது மனம் கனத்தது.
நான் சொன்னேன்.

“அம்மா இந்த டீக்கடை நானாவும் நானும் இன்று மாலை வந்து பார்க்கிறோம். நீங்கள் இனி பிச்சை எடுக்க வேண்டாம். நீங்கள் சம்மதித்து சரி என்றால் உங்கள் கணவரின் கடையை நீங்களே நடத்த ஏற்பாடு செய்ய முடியுமா என்ற பார்க்கிறோம். என்ன சொல்கிறீர்கள்?”

மகிழ்ச்சியா?

அதிர்ச்சியா?

வியப்பா?
எதுவென்றே சொல்லவியலாதவொரு உணர்ச்சியுடன் நன்றி கலந்த பார்வை. எனது உள்ளம் நெகிழ்ந்து விட்டது.

அந்த அம்மா ஒரு பலகாரப் பொட்டலத்துடனும் ஐந்து ரூபா காசுடனும் வீட்டுக்குத் திரும்பிப்போனார்.  நான் மாலை எப்போது வரும் என்று காத்திருந்தேன்.

மாலை வந்ததும் டீக்கடை ரகீம் நானா சொன்னபடி வந்து நின்றார். பேசிக் கொண்டே போகையில் அவர்  சொன்னார் :

“சாச்சா! நானும் ஏழைதான் ஆனா நீங்க நடந்துக்கிட்டதைப் பாத்த பொறவு பொறந்தும் பயனில்லாமல் மவுத் ஆவுறதவிட நல்லத செஞ்ச திருப்தியோட ஒண்ணுமே இல்லாம மவுத் ஆனாலும் அல்லா கைவிடமாட்டான்னு நல்லாவே புரிஞ்சுது. நானும் உதவி செய்கிறேன் சரியா?” என்றாரே பார்க்கலாம்.

நான் எவரெஸ்ட்டின் உச்சிக்கே போய்விட்டேன்.

சுடர்விளக்குகள் பலவும் தூண்டுகோல் இல்லாமல்தான் ஒளிராமல் இருக்கின்றனவோ?

புன்முறுவலுடன் ஆமோதித்தவாறே நான் நடந்தேன்.

அந்த அம்மாவின் வீட்டைச் சென்றடைந்தோம்.

அந்தச் சின்னஞ் சிறிய வீட்டின் மின்மினி விளக்கொளியில் மூன்று பிஞ்சு விளக்குகள் மின்னிக் கொண்டிருந்தன.

எனக்கும் சொல்லாமல் டீக்கடை நானா தான் ஒளித்துக் கொண்டுவந்திருந்த மிட்டாய்ப் பொட்டலத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டுச் சிரித்துக் கொண்டார். வெறுங்கையுடன் சென்ற எனக்கே பெரிய வெட்கமாய்ப் போய்விட்டது.

“என்ன நானா! என்னையே தோக்கடிச்சிட்டீங்களே!” என்று நான் ஜோக்கடித்தேன்.

அவர் என்ன சொன்னார் தெரியுமா?

“சாச்சா! இது நான்  கொடுத்ததில்ல நாம கொடுக்கிறது. இந்த நாடு உருப்பட வேணும்னா நல்ல மனங்கள்ளாம் முன்னுக்கு வரணும். அதுக ஒதுங்கி இருக்கிற வரைக்கும் லாம்பை குழிக்குள்ள பொதைச்சு வச்சுப்போட்டு  வெளிச்சத்துக்காக இருட்டிலே சந்திரனைத் தேடுறதுபோலத்தான் இருப்பாங்க. அல்லாட கண்முன்னுக்கு எல்லாரும் ஒண்ணுதானே!”

அடி சக்கை!
நல்ல தத்துவமொன்றைச் சொல்லிவிட்ட திருப்தியில் நானாவின் பல்லெல்லாம் சினிமாஸ்கோப் திரைவடிவில் ஒரே..
“டூத்பேஸ்ட் விளம்பர பளீச்.”

எனக்கும் பெரிய மகிழ்ச்சியும் பரம திருப்தியுமாக இருந்தது.

எனது திட்டத்துக்கு எதிர்பார்த்ததற்கும் மேலாகவே நிதி சேர்ந்துவிட்டதால் மீதியை அந்த அம்மாவிடம் கொடுத்து அதிமுக்கிய தேவையான சிறிய மண்ணெண்ணெய் குக்கர் ஒன்றை வாங்க வைத்தேன்.

மூன்று கல் வைத்து பொறுக்கிய விறகையும் பேப்பரையும் நம்பி சமைத்தது போதும்.

சவஅடக்கக் கடன் மட்டும் ரூயா 500ற்கும் மேல். எப்படி சமாளிப்பார் இந்த அம்மா என்று தலையைக் குடைந்தது.

அடுத்த நாள் காலை ஆபீசில் நிலைமையை விபரித்தேன். உடனடியாக எதுவும் நடக்கும்போல் இல்லை. எல்லாருமே மாதச் சம்பளக்காரர்தானே!

ஆனால் பிற்பகல் மூன்று மணியளவில் காஷியர் பிள்ளை என்னைத் திடீரென அழைத்துக் காதில் குசுகுசுத்தார்.

“தம்பி நான் 500 ரூபா தர்றேன். மாசம் மாசமா வட்டியில்லாமே திருப்பித் தந்திடச் சொல்லு. முன்னப்பின்னே பிந்தினாலும் பரவாயில்ல. முடியாமலே போயிட்டின்னாலும் பரவாயில்ல. எதுக்கும் அப்படிச் சொல்லிக் குடுக்கிறதுதான் நல்லது பாரு!”

அட மனித மனங்களுக்குள் தெய்வம்தான் எப்படியெல்லாம் குடி கொண்டிருக்கின்றது ! 
புதையுண்டிருக்கும் நல்ல எண்ணங்களை நல்ல சந்தர்ப்பங்களல்லவா வெளியிலெடுத்துப் போடுகின்றன!

யாருக்கு நன்றி சொல்ல? கடவுளுக்கா அல்லது திருவாளர் பிள்ளைக்கா? தெரியவில்லை எனக்கு.
“மிஸ்டர் பிள்ளை உங்களுக்கே பெரிய சம்பளம் இல்லியே..இதிலே..இவ்வளவு பெரிய தொகையை எப்படி...”
நான் இழுத்தேன்.

அவரே விளக்கினார்.
„தம்பி நான் காலையிலே மொதலாளிய சந்திச்சி என் பேரிலே இதுக்காக லோன் கேட்டேன். அவரு சரின்னுட்டார்.“

„ஓதவி செய்யன்னு சொல்லியா கேட்டீங்க?“

„சே..சே.. செய்றது தர்மம். அத பறையடிச்சிக்கிட்டா செய்வாங்க? என் தேவைக்குன்னுதான் கேட்டேன்“
அந்த நல்ல உள்ளத்தின் தூய வார்த்தைகளால் நான் தூசியாகி உதிர்ந்தே போனேன். எனது மனம் நெகிழ்ந்தே போனது.

நன்றி சொல்ல வார்த்தையின்றி நான் தடுமாறுவதை அவர் உணர்ந்திருப்பார் போலும். ஒரே புன்னகை மூலம் « ஓகே » பண்ணிவிட்டாh.;

இந்த நல்ல உள்ளங்களின் முன் நான் எம்மாத்திரம்? வெறும் தூசு மட்டுமே! அல்லவா?
என்னையே நான் உணர்ந்து கொண்டேன்.

இரு நாட்கள் கழித்து அந்த அம்மாவையும் அழைத்துக் கொண்டு வெற்றிலைக் கடை பசாருக்குப் போனேன். பலர் அத்தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். எல்லாருமே ஏழைகள்தாம். ஆனால் அந்த அம்மாவின் நிலைமையை நன்றாகவே உணர்ந்திருந்தர்கள்.

என் திட்டத்தை சொன்னதும் அவர்களே ஆன உதவிகளைச் செய்வதாகவும் காலையில் கடைக்கு வந்து அமர்ந்திருந்தாலே போதுமென்றும் தங்களுக்கு வெற்றிலை வாங்கிவரும்போது தாங்களே அவர்களுக்கும் வாங்கி வந்து கொடுப்பதாகவும் தாங்களே இயன்ற விதத்தில் ஒத்துழைத்து விற்றுக் கொடுத்து உதவுவதாகவும் சொன்னார்கள்.

இந்த சமுதாயத்தில் எல்லாத் திசைகளிலும் சம்மனசுக்களே நிறைந்திருக்கின்றன. ஒரு சில பசாசுகளால்தான் அவை தம் சுயநிலையை உணராமல் இருக்கின்றன என்று என் மனது எனக்குத் தெளிவுபடுத்தியது அப்போது.

அதன்பிறகு அடிக்கடி விஜயம் செய்து அந்த அம்மாவின் வர்த்தக முன்னேற்றத்தை அவதானித்து வந்தேன்.

படிப்படியாகக் கடனில்லாமல் முன்னேறிய அவர் இயன்றவிதத்தில் தமக்குதவிய இதர வியாபாரிகளுக்குச் சிறுசிறு கடன்கள் வழங்கும் அளவுக்கு முன்னேறியிருந்தார்.

அவ்வப்போது கொஞ்சம் வெற்றிலை வாங்கப் போவதாகக் காட்டிக் கொண்டு அந்தத் தாயின் முன்னேற்றத்தை அவதானித்து வந்தேன்.

எங்கள் பக்கத்து வீட்டுப் பாட்டிக்கும் இதனால் பெரிய லாட்டரிச் சீட்டு விழுந்து விட்ட மகிழ்ச்சி. இரண்டு நாளைக்கொருதடவை பெரிய கட்டு வெற்றிலை வீடு தேடி வருகிறதென்றால் சும்மாவா!
„மவராசன்..என் தங்கம்“; என்று ஒரு ஐஸ்கட்டியை அவ்வப்போது என் தலையில் வைத்து „அடே பயலே! இதை ஏன் சொல்கிறேனென்றால் நீ வெற்றிலை சப்ளையை திடீரென்று நிறுத்திவிடக் கூடாதென்பதற்காகவாக்கும்“ என்று மறைமுகமாக எச்சரித்துக் கொண்டிருந்தார்.

ஒருபக்கம் புண்ணியம். மறுபக்கம் பாட்டியிடம் ஒரு மாட்டு. என்றாலும் அதிலிருந்த சந்தோஷம் மகத்தானதாக இருந்தது எனக்கு. இப்போதும் கூட அந்த மகிழ்ச்சியின் ஆழத்தை உணர்ந்து மகிழ்கிறேன்.

நாம் செய்தது சிறிய தர்மம்தான் என்றாலும் பெரிய சாதனையல்லவா!? எனது சின்ன மனம் என்னைப் பாராட்டிக் கொண்டிருந்தது.

இன்றைக்கும் எனது சின்ன நல்லெண்ணத்தினால் ஒரு நல்ல ஏழைக் குடும்பத்தைக் காப்பாற்றிய செயலில் எனது மனம் நிறைகின்றது. நிறைந்து கொண்டே இருக்கின்றது.

இதை வாசிக்கும் என் அன்புச் சகோதரரே! சகோதரியரே!
உங்களுக்குள் இருக்கும் சுடர்விளக்கை தயவு செய்து எடுத்து வெளியே வையுங்கள்.

அதன் ஒளி அதற்குரிய அளவுக்குள் இந்தப் பாழ்பட்டுப் போயிருக்கும் சமுதாயத்துக்கு உதவினாலே போதும். எத்தனையோ புத்தம் புது விளக்குள் ஒளிரத் துவங்கிவிடும் நல்ல காலம் பிறந்துவிடும்.

இருளுக்குள் கிடக்கும் மனங்களை ஒளிர வைக்க நீங்கள்தான் முடிவெடுத்து முன்னுக்கு வர வேண்டும்.
இதற்கு சாதனையல்ல முக்கியம். தயங்காது ஒத்துழைக்க நினைக்கும் நல்ல மனந்தான் முக்கியம்.

அது உங்களிடமும் அப்படியே இருக்கின்றது. உங்கள் ஒவ்வொரு சின்ன நல்ல செயலும் ஒரு மலையொப்ப கட்டிடத்தை அமைக்கப் பதிக்கப்படும் அடிக்கற்கள் என்பதை தயவு செய்து மறந்து விடாதீர்கள்.

நாளைய நல்லுலகமே இன்றைய கனவாக நமக்கிருந்தால்தான் நம்மாலே நன்மைக்கான சுடர்களை ஏற்றிவிடல் சாத்தியமாயிருக்கும்.  தயவு செய்து.. ..  தயவு செய்யுங்கள்.

இதுபோல எத்தனை இதயங்கள் எங்கெல்லாமோ சொல்ல முடியாக் கதைகளைச் சுமந்து கொண்டிருக்கின்றனவோ!
கண்டு உதவ முடிந்தால் அதைவிடவும் புண்ணியந்தரும் அதிர்ஷ்டம் உண்டா?

இதற்கெல்லாம் தேவை ஒரேயொரு தகுதி மட்டும்தான். உங்கள்; உள்ளங்களில் சிறிதளவு….

              ஈ ர மிரு ந் தா ல் போ து மே !



            காரிருளும் தனைத் துறக்கும் கையிலொரு விளக் கெரிந்தால்!
             பாரினிலே துயர் மறையும் பரந்த மனம் நமக்கிருந்தால்!
             போரிடையும் பகை இருவர் உயிர் பிரியும் நிலை இருந்தால்
             ஒரு குவளைத் தண்ணீரை அருந்தி இணைந் திறந்திடலாம்
             பாரினிலே நல்லவையும் நல்லவரும் நிறைந்திருந்தும்
             பார்ப்பதற்கு யாருமின்றி அன்பு சோர்ந்து சாயுதென்றால்
             நேர்மையுடன் மற்றவரை நினைப்பதையே செய்வதற்கு
             நேர்மையுடன் வழியுணர்த்தத் தவறியதே காரணமாம்!

ஞாயிறு, 31 மார்ச், 2013

கூடாத கூட்டங்கள் கூட வேணாம்! கூடங்கள் மாடங்கள் கட்ட வேணாம்!






வானத்திலேருக்கிற நட்சத்திரத்தைத்தான் இங்கிலீசுக்காரங்க இஸ்டாரு அப்புடீம்பாங்க. ஆனா இந்த சினிமாக்காரங்களையும் இஸ்டாருங்கிறாங்களே அது ஏன்? அப்புடீன்னு நான் மாசக்கணக்கா என் மூளையைப் போட்டுக் கொழப்பிட்டே இருந்தேன்.

 பதிலே கெடைக்கல்லே. அப்பாக்கிட்டே அதைப்பத்திக் கேக்கப் போனா “ஏண்டா ஒனக்கு அது?“ன்னு என்னையே திருப்பிக் கேட்டுட்டு தப்பிச்சோடிருவாரு. அந்தாளுக்கு வெவரம் போறாதுன்னு அடிக்கடி எல்லாருமே சொல்லிக்குவாங்கல்லியா? கேட்டிருக்கேனே!

 பொதுவா  மனுசன் கிட்டே இருக்கிற பலவீனம் என்னதுன்னா…எதையும் சட்டுபுட்டுன்னு கேட்டுத் தெரிஞ்சிக்கிறதுக்கு தயங்கிக் கிட்டே இருக்கிறதுதான். எல்லாருமே அநேகமா தங்களை எல்லாந் தெரிஞ்ச மேதாவிங்கன்னு காட்டிக்கிறதுக்குத்தான் அதிகமா அலட்டிக்கிறாங்களே தவிர, தெரியலைன்னு காட்டிக்கிறாங்களே இல்லை. ஏன்னா, அதனாலே அவங்க மவிசு கொஞ்சம் கொறைஞ்சி போயிடும்னு நெனைக்கிறாங்க. இது பெரிய தப்புங்க.

 கேக்கத் தயங்குறவன் முட்டாள்னு செர்மனி டிவியிலே கொழைந்தைங்க சீரியல் காட்டப்ப ஒரு பாட்டே போடுறாங்களாம்.

எதையும் கேட்டுக்கிட்டாத்தான் தெரிஞ்சிக்கிடலாம்.      தெரிஞ்சிக்கிட்டாத்தான் படிச்சிக்கிடலாம்.                                 படிச்சிக்கிட்டாத்தான் புடிச்சிக்கிடலாம்.                                            புடிச்சிக்கிட்டாத்தான் ஒசந்துக்கிடலாம்.       இல்லீங்களா?

 நானு மெதுவா என் அம்மா கிட்டே போய் கேட்டேன். அவங்க சிரிச்சாங்க. „எலே அப்பாசாமி, ஒனக்கு இப்பவே சினிமா இஸ்டாரு ஆவுறதுக்கு ஆசை வந்திடுச்சா?“ அப்புடீன்னுட்டு,

 „ போய் பாட்டி கிட்டே கேளு. அவுகதான் படிச்சவுக. எதையும் சரியா சொல்லிக் குடுக்க அவுகளாலேதான் முடியும். போ“ இன்னாக.

அட, நம்ம பாட்டி இருக்கச்சே மத்தவங்களைப் பத்தியெல்லாம் யோசிச்சி டைம்மை வேஸ்ட் பண்ணிட்டோமேன்னு அப்பத்தான் என் மூளையிலே தட்டிச்சிது.

ஒடனே பாட்டி கிட்டே ஓடினேன். மொதல்ல.. கொஞ்சம் ஐஸ் வைப்போம்.

„ பாட்டி, பாட்டி நீங்க ஒரு இஸ்டாரு“

அதைக் கேட்டதும் பாட்டிக்கே கொஞ்ச வயசுப் பொண்ணுகளோடே ரெண்டாம் குணம் அதான் நாணம் வந்துட்டுது.  வெக்கப்பட்டுட்டாக.

நம்ம சிவாசி மவன் பெரபு சிரிச்சதும் வெக்கி நெளியிற குசுப்பு மாதிரி வளைஞ்சிக்கிட்டே…

„ என்னடா சொல்றே நீ அப்பாசாமி? நானு  இஸ்டாரா? நக்கலா அடிக்கிறே?“ அப்புடீன்னு கொழைஞ்சாக.

கெழடுக்கும் புகழாசை இருக்கும்னு புரிஞ்சுது எனக்கு. மெதுவா என் சந்தேகத்தை எடுத்துப் போட்டேன்.

 கெழவி கம்பூட்டர் மாதிரி டக்குன்னு சொன்னாக.

„மேலே அண்ணாந்து பாக்க வைச்சாத்தான் எதுக்கும்  மவுசு இருக்குன்னு அர்த்தம். நட்சத்திரத்தை அண்ணாந்துதான் பாக்கணும். சினிமாக்காரங்களும் தெரையிலே மேலேதான் இருந்து நம்மையெல்லாம் அண்ணாந்து பாக்க வைக்கிறாங்க. அது மட்டுமில்லே ஏங்கவும் வைக்கிறாங்க. புரியுதாடா?“

இனியும் புரியல்லேன்னா பாட்டி என்னையும் அப்பாரு மாதிரின்னு சொல்லிப்புடலாமில்லியா? அதனாலே புரிஞ்சிட்டுதுன்னு சொல்லிப்புட்டு ஓடிப் போயிட்டேன்.

                                                               .........................

ஒரு வாட்டி எங்க பக்கத்து வூட்டுப் பனியம்மா பாட்டியோடே பேசிட்டிருக்கச்சிலே என்னதுக்காகவோ „ எப்பவுமே நாலு பேரு கூட்டு சேர்ந்தாக்கா வம்புதான் வரும்“ னு என் பாட்டி சொன்னாக.

நான் கேட்டேன் „ஏம்பாட்டி நாலு பேரு சேந்தாத்தானே வம்புங்கிறீங்க. அஞ்சு பேரோ ஆறு பேரோ சேந்தா வம்பே வராதா?“

பொக்கு பொக்கு பொக்குன்னு பாட்டி குலுங்கிக் குலுங்கிச் சிரிச்சாக. அவுக காதிலேருந்த பாம்படம் ஆடி ஆடிக் குலுங்கிச்சுது.

„அடேய் அப்பாசாமி. ஓன் அப்பாவை அப்புடியே உரிச்சி வச்சிரிக்கேடா? அவனுக்கும் மூளையில்லே. ஒனக்கும் மூளையில்லே. முட்டாப் பய மவனே!“

எனக்கு கறுப்புத்துண்டு தோளிலே இல்லாமலே சுருக்குன்னு சுயமருவாதி ஒணர்வு குத்திச்சிது. ஆனாலும் பாட்டி சிரிச்சதைப் பாத்ததும் கோபம் வரலை. நானும் சும்மா சிரிச்சிக்கிட்டேன்.

அம்மா குசினிக்குள்ளாற இருந்துக்கிட்டு, „இந்தக் கெழவிக்கி எப்பவுமே ஊர் வம்பையெல்லாம் வலிய இழுத்துக்கிற வேலைதான்“ னு முணுங்கினது கேட்டுது.

ஆனா பாட்டிக் கெழவிக்கு அறிவும் அனுபவமும் அதிகம்னு அம்மாவுக்கு நல்லாவே தெரியும்கிறதாலே ஏதாச்சும் நாயம் இல்லாமே பாட்டி பேசாதுங்கிறதும் அவுகளுக்கு தெரிஞ்சுதானிருந்திச்சுது. பொறவு பாட்டி நாலுபேருங்கிறது வெவரம் இல்லாமே, சும்மா கூட்டம் சேர்றதைத்தான்னு வெவரமா சொன்னாக. புரிஞ்சிக்கிட்டேன்.

எனக்கும் நாலைஞ்சு பேர் கூட்டாளிங்க இருந்தாங்க. இருந்தாலும் லேசில வம்பு வந்த மாதிரி தெரியலை. ஒரே ஒத்துமை. அதாலே என்னாலே பாட்டி சொன்னதை முழுக்கவும் சரிதான்னு ஏத்துக்க முடியலை. ஓத்துமையா சண்டை போட்டுக்காமே சிரிச்சிட்டே இருந்தா ஏன் சண்டை வருது? வம்பு வருது?  என்னாலே நம்ப முடியலை.


                                                                ..............................

ஒரு நாள் நானும் எங் கூட்டாளிங்களுமா சேந்து சுப்புப் பாட்டிக்கிட்டே சுடச்சுட வடை வாங்கித் தின்னுக்கிட்டே பேசிட்டிருந்தோம். திடீர்னு அண்ணா புட்பால் சங்கம்னு ஒண்ணை ஆரம்பிச்சா என்னான்னு ஒரு ஐடியா பொறந்துது. உடனே அதுக்காவ திட்டம் போட்டோம்.


ஐடியா என்னமோ அருமையாத்தான் பட்டுது. ஆனா அந்த ஐடியாவை பாட்டிக்கிட்ட சொல்றதா அம்மாகிட்டே சொல்றதான்னு ஒரே ரோசனை எனக்கு. ஏன்னா சங்கம் வச்சப்புறம் லெட்டர் பேடொண்ணு அச்சடிச்சு எல்லாரோடே பேரையும் போட்டுக்கலாம். பதவி கெடைச்ச மாதிர இருக்கும். வீரகேசரி பேப்பர்லே அதை செய்தியா போடுறக்குன்னு எங்க அடுத்த தெரு ரிப்போட்டர் மாமா பிச்சையா கிட்டே குடுத்தா அவரே ஒடனே வால் தலை எல்லாம் வைச்சு எழுதி செய்தியாப் போட்டுடுவார். பொறவு பெரிசா பேர் வந்துடும். ஆனா…. கதை மாறி எதாச்சும் வம்பு தும்பும்புன்னு வந்துட்டுதுன்னா பாதுகாப்பு வேணாம்? அதுக்காவத்தான் நானு அப்புடி யோசிச்சிட்டிருந்தேன்.

ஏன்னா… என் தாத்தா ஒரு வாட்டி என் அப்பாகிட்டே எதுக்காவவோ சொன்னாரு: “ எலே மாடசாமி! எதையுமே செய்றதுக்குத் தொடங்குறதுக்கு முன்னாடி நல்லா ரோசிச்சிப் பாத்துக்க. பின்னாலே என்ன வரும்னு ரோசிக்காமே சட்டுப்புட்டுனு எதையாச்சும் செஞ்சியோ…? அம்புடுதான்.

ஓனக்கு நெனைவிருக்கா? ரோசனையே பண்ணிக்காமே காலிலே ரப்பர் சிலிப்பரு செருப்பை மாட்டிக்கிட்டு, நம்ம ராமையா எண்ணைக் கடைக்கி முன்னாடி தீவாளி அன்னிக்கி  டுவிசு டான்சு ஆடப்போயி, காஞ்ச எண்ணெய்யிலே பொதக்குன்னு கால் வழுக்கிக் கீழே உழுந்துட்டு, பொறவு சிலிப்பரையும் அறுத்துக்கிட்டு, ஆரை, எப்புடி குத்தவாளிங்கிறதுன்னு தெரியாமே தவிச்சானில்லே ஒன் பெரியப்பா முனுசாமி? அது மாதிரித்தான் நீயும் தடுமாற வேண்டி வரும். சாக்கிரதை” அப்புடீன்னாரு.

இந்த முனுசாமித் தாத்தா ஒரு படுகெழம். தொண்ணூறு வயசு வரைக்கும் அச்சு தேஞ்ச மாட்டு வண்டியாட்டம் இழுஇழுன்னு உசிரை இழுத்திட்டே இருந்திட்டு, நானு பொறக்குறதுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடி குழிக்குள்ளாற பூந்து ஆண்டவனை தேடிக்கிட்டு போயிட்டவருன்னுதான் எனக்குத் தெரியும். பட்டாசு போட்டுப் போட்டு எடுத்திட்டுப் போயி கொண்டாடிக்கிட்டுத்தான் பொதைச்சாங்களாம். எல்லாருக்கும் „ அப்பாடா, தொணதொணப்பு போச்சே“ன்னு ஒரே சந்தோசம் போல.

எனக்கு அவரப் பத்தி வேறே எதுவுமே வெவரமா  தெரியாது. ஆனாலும் ஏதாச்சும் ஒரு சம்பவத்திலேருந்து பாடம் படிச்சிக்கிறதுக்கு வழி கெடைக்கும்னா அது நல்லதுதானேன்னு நானும் அவதானமா தாத்தா சொல்றதைக் கேட்டுட்டிருந்தேன்.

அப்பத்தான் தாத்தா ஒரு பெரிய பழமொழிய சினிமா டாக்கீஸ் போஸ்டரை சைவக்கடை செவுத்திலேருந்து உரிக்கிற மாதிரி பரபரன்னு மூளையிலேருந்து உரிச்சி எடுத்து உட்டாரு. “எலே மாடசாமி! வருமுன் காப்போன் மதியூகின்னு ஒரு பழமொழி இருக்குதே! அது ஓனக்குத் தெரியுமாடா?”

என் அப்பாரு மொதல்லே வாயைத் தொறக்காமே தலையை சொறிஞ்சாரு. கொஞ்சம் பொறுத்து, வாயைத் தொறந்தாரு. வெத்தலக் காவி படிஞ்ச பல்லெல்லாம் என்னமோ பூமி நடுக்கத்திலே இடிஞ்சு உழுந்து கெடக்கிற பில்டிங் துண்டுங்க மாதிரி அவரு ஈஈஈன்னு இளிச்சப்போ ஒரே மேடு பள்ளமா, ஒரே இருட்டா மட்டும் தெரிஞ்சுது.

தாத்தாவுக்கு வாலிலே மிதிபட்ட பூனைக்குட்டியாட்டம் பெரிய கோவம் வந்திட்டுது. ஒரே சத்தமா கத்தினாரு. “ஏண்டா டேய்! நாலாங் கிளாசு வரைக்கும் நல்லாத்தானேடா  படிச்சிருக்க? அவ்வளவு நாளும் இதப்பத்தி ஒன் வாத்தியாரு ஒனக்கு ஒண்ணுமே சொல்லிக் குடுக்கலையா?”

அப்பா டக்குன்னு சொன்னாரு: “ அப்பா அவருக்கு ஒங்களவுக்கு அறிவு இருந்திருந்தாத்தானே சொல்லிக் குடுக்க முடியும்? அவருக்கு அடிக்கடி வெத்தல போடவும் சைடுக்குப் போயி பீடி அடிக்கவும்தானே ரொம்ப நேரம் தேவையாயிருந்துது. படிச்சா குடுத்தாரு அவரு? சும்ம்ம்ம்மா தம்முதானே அடிச்சிட்டிருந்தாரு”

தாத்தாவுக்கு தன்னோடே மவனே தனக்கு அறிவாளின்னு சட்டிப்பிகேட்டு குடுத்திட்ட மாதிரி ஒரு பெருமை. சிரிச்சுக்கிட்டே கேட்டாரு. “ மதியூகின்னா என்னான்னாவது தெரியுமா ஒனக்கு?”

அப்பா திரும்பவும் தலையச் சொறிஞ்சாரு.

“எலே தெரியல்லேன்னா டபக்குன்னு சொல்லிடணும். அத உட்டுட்டு சும்மா பேன், கரப்பாம்பூச்சி கடிக்கிற மாதிரி சொறியிற சொறிச்சல் வேலை வேணாம்”

“சரீப்பா”

அப்பாவோட இடிஞ்ச பல்லு திரும்பவும் தெரிய ஆரம்பிச்சுது. அதான் அசடா இளிச்சாரு.

தாத்தா சொன்னாரு:

“மாடசாமி! மதியூகின்னா அறிவாளின்னு அர்த்தம். எதுவுமே வர்றதுக்கு முன்னாடியே எச்சரிக்கையா நடந்துக்கணும். அப்புடி சரியா ரோசிச்சி நடந்துக்கிறவன்தான் அறிவாளின்னு அருத்தம். அப்படியில்லேன்னா....”

“ நானுன்னு அருத்தம்”
அப்பா முடிச்சாரு. தாத்தா லொபக்கு லொபக்குன்னு சிரிச்சாரு.

“மடப்பயலே!”

இப்ப நானு அதைத்தான் நெனைச்சுப் பாத்தேன். நாமளும் சங்கத்தை தொவக்கிறதுக்கு முன்னாடி மதியூகியா நடந்துக்கிடணுமில்லியா?

அன்னிக்கி சாயங்காலமா நைஸ்ஸா… அம்மா கிட்டே மெதுவாப் போனேன். அவங்க டின்னருக்கு என்னமோ சமைச்சுக்கிட்டு இருந்தாக.

“அம்மா... நாங்க ஒரு புட்டுபால் சங்கம் தொடங்கப் போறோம்மா? அண்ணா புட்டுபால் கிளப்னா நல்லாருக்குமா அண்ணா புட்டுபால் சங்கம்னா நல்லாருக்குமா?”

அம்புட்டுதான்!
கீரியை வெறட்ற பாம்பு மாதிரி அம்மா „சுர்ர்ர்ர்“னு சீறிப்புட்டாக.

“எலே சும்மா பாடம் படிக்காமே பந்தடிச்சிப் பெயிலாவவா திட்டம் போடறே? பேசாமே பந்தைத் தூக்கி மொதல்ல பொந்துக்குள்ளே போட்டுட்டு ஒழுங்காப் படி. படிச்சதுக்கப்புறமா பந்தடிக்கிறதை பாத்துக்கலாம்.”

எனக்கு சப்புன்னு ஆயிட்டுது. இந்தம்மா என்னா ஏதுன்னு வெவரம் கேட்டு நம்மள உற்சாகப்படுத்துவாகன்னு நெனச்சிப்போனா இப்புடிச் சொல்லிட்டாகளே!” அப்புடீன்னு ஒரே கவலையாயிருந்துது.

இவுகளுக்கு பாட்டி தேவலை. அவுககிட்டே போவோம்னு நெனச்சிக்கிட்டு மெதுவா வாசலுக்கு…. அவுக பக்கமா நவந்தேன்.

பாட்டி வெத்தலக் கொழவியிலே டக்கு டக்குன்னு பாக்கு போட்டு இடிச்சிட்டிருந்தாக. பக்குவமா கிட்டே போயி பாட்டி கிட்டேருந்து கொழவிய நான் வாங்கி இடிச்சேன்.

கெழவிக்கி என்னமோ புரிஞ்சிட்டுது. “என்னடா அப்பாசாமி! ஏதாச்சும் சில்லறை கில்லறைக்கி அடிபோடுறியா?”

சீ! என்னா ஒலகம் இது? எதுக்கெடுத்தாலும் ஒரே லஞ்சம் ஊழல்னு எல்லா எடமும் பரவிக் கெடக்கிற சனியன் இப்போ நம்ம வூட்டுக்குள்ளாறவும் வந்திட்ட மாதிரி இருக்கே!“ ன்னு கோவம் வந்துது எனக்கு.

இருந்தாலும்… இப்ப காரியம் நடக்கணுமே! அதுக்காக பொறுமையா அரசியல்காரங்களைப் போல பொறுமையா இருந்துக்கிட்டேன்.

“இல்லே பாட்டி! வந்து....நாங்க ஒரு புடடு பால் சங்கம் தொவங்கலாம்னு நெனைக்கிறோம். அதான் ஒங்க ஐடியாவையும் ஒத்துழைப்பையும் கேக்க வந்தேன்”

பாட்டி ஒரு வாட்டி நம்ம கே.ஆர். விஜயா மாதிரி சிரிச்சாக. ஒரு வித்தியாசம். அந்தம்மா சிரிச்சா வெள்ள வெளேர்னு பல்லு வரிசையா அழகாத் தெரியும். எம் பாட்டி சிரிச்சப்போ ஒரு பெரிய கொகை மாதிரி இருந்திச்சி. அம்புடுதான்”

ரெண்டு செக்கண்டு கழிச்சு பாட்டி கேட்டாக:

“எலே அப்பாசாமி! யார் யாரெல்லாம் ஒங்க சங்கத்திலே இருக்கீங்க?”
அட பாட்டி நம்ம கைக்குள்ள வந்துட்டாக போலிருக்கே!

“ நம்ம ராமசாமி  சின்னசாமி அருமைசாமி முத்துசாமி கண்ணுசாமி அந்தோனிசாமி  கருணைசாமி, நானு….”


“எலே எலே போறும்டா. எல்லாருமே சாமிங்கன்னா அது ஆண்டிங்க கூடி கட்டுற மடம் மாதிரித்தாண்டா இருக்கும். ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க: கூடாத கூட்டங்கள் கூட வேணாம். கூடங்கள் மாடங்கள் கட்ட வேணாம்”

இதென்னடாது! கெழவி ஒரே ணாம்ணாம்னு பாட்டுப் பாடுது?
எனக்குப் புரியலை.

பாட்டி சிரிச்சிக்கிட்டே சொன்னாக: அடேய் திட்டம் போட்றது பெரிசில்லே. அதை சரியா  செம்மையா செய்யவும் வேணும். மொதல்ல வேணும்னா எல்லாருமா சேந்து காசு சேத்து ஒரு பந்தை வாங்கிக்கிட்டு வெளையாடுங்க. அதுக்கப்புறமா பாத்து சங்கம் போடுங்க. ஏன்னா.... எதையும் தொவங்கச்சிலே கூடுற கூட்டம் தொடர்ந்து இருக்கும்னு நம்ப முடியாது. சொல்லிப்புட்டேன்”

எனக்கு சப்புன்னு ஆயிட்டுது. இருந்தாலும் அடுத்த நாள் எல்லாரும் சந்திச்சப்போ ஆளுக்குக் கொஞ்சம் காசு போட்டு மொதல்ல ஒரு புதுப் பந்து வாங்குவோம்னு பாட்டியோட ஐடியாவை  எனது ஐடியாவாச் சொன்னேன்.

அப்பத்தான் தெரிஞ்சிது எல்லாப் பயலுவளுமே சும்மா ஓசியிலே வெளையாடற படுவாக்கள்னு. ஓரு பயலுமே காசு தர முன்வரலை. “ அடேய் அப்பாசாமி, நீ ஒன் அப்பாரு கிட்டே கேட்டு மொதல்ல பந்தை வாங்கு. பின்னாடி நாங்க கொஞ்சம் கொஞ்சமா தர்றோம்”னு கதை உட்டானுவ. நான் என் தாத்தாவை நெனைச்சுக்கிட்டேன். வருமுன் காத்துக்கணும். அப்பத்தான் நாமளும் அறிவாளின்னு ஒரு வாட்டி எனக்குள்ளாற நெனைச்சிக்கிட்டேன். அதுக்கப்புறம் புட்பால் கிளப் அப்புடீயே சுனாமியிலே பொதைஞ்சு போன சட்டி பானையாட்டம் பொதைஞ்சி போச்சுது.

இப்ப வளந்து பெரிய மனுசனாகி வெளிநாட்டுக்கும் வந்தப்புறம்தான் பழைய கால புத்தியிருக்கிற அதே சனங்க இங்கேயும் அப்புடியே இருக்கிறது தெரியுது.

எல்லா எடத்திலேயும் சங்கம்னு ஒண்ணை தொவங்குறதுக்குன்னே ஒரு கூட்டம் சுத்திட்டு இருக்குது. உள்ளாற ஒரு ஐடியாவோடே ஸ்டாட் பண்ணுவாங்க. ஆனா ஊருக்கு உபதேசமும் சேவையும் செய்றதுக்குன்னுதான் ஒண்ணுக்கு இருந்து முன்னுக்கு வருவோம்னு சங்கம் போடுறோம்னு சொல்லிக்குவாங்க.

பொறவு பாத்தா படிப்படியா, உருப்படியானவங்கள்ளாம்  கழந்துடுவாங்க. அவங்களா கழறல்லேன்னா இவங்களே பெரேரணை அது இதுன்னு அவங்களுக்கு எதிரா எடுத்துவுட்டு, கழட்டிப்புடுவாங்க.

கடைசியிலே கொஞ்சம் மிச்ச சொச்சங்க மட்டும் கொடி புடிச்சிக்கிட்டே சங்கம் நடத்தும்.

மனசார சேவைன்னு இல்லாமே அவனவன் தன்னை வளக்க மட்டும் பக்குவமா சதி செய்திட்டே இருப்பான்.

எனக்கென்னமோ இதுகளுக்குள்ளாற புவுந்துகிட்டு அப்புறம் எறும்புக் குழிக்குள்ளே கையை உட்டுட்டு, சொறியிற வேலை அனாவசியம்னு பட்றதாலே ஒதுங்கி இருந்துக்குவேன். ஆனா அதுக்காவ நல்ல சங்கமே இல்லேன்னும் அர்த்தமில்லே.

கருவாட்டுக் கடையிலே துணி வித்தா எப்புடி இருக்கும்? கருவாடும் நாத்தமடிக்கும். அதுக்குள்ளே இருக்கிறதாலே துணியும் நாறும். இல்லீங்களா?

இதை வச்சுத்தான் நம்மாளுங்க நம்மை எச்சரிச்சு „கூடாத கூட்டங்கள் கூட வேணாம். கூடங்கள் மாடங்கள் கட்ட வேணாம்“ அப்புடீன்னு சொல்லியிருக்கிறாங்கன்னு நெனைக்கிறேன்.

நல்ல நண்பர்கள்னும் கெட்ட நண்பர்கள்னும் ரெண்டு கிளாஸ் இருக்கிறதை நாம மறந்திடக் கூடாதுங்க. ஏன்னா நல்ல நண்பர்கள் கெடைக்கிறதுங்கிறது ஒரு அதிர்ஸ்டம் பாருங்க.

தன்னோடே நண்பனுக்காக நல்லதை நெனைக்கிற எவராவது இருந்தா அவங்க இருக்கிற எடத்திலே தெய்வம் இருக்குன்னு நம்பிக்கலாம். „கடவுள் இல்லே! கடவுள் இல்லே“ன்னு கத்துறாங்களே, அது ஏன்னு புரிஞ்சிருக்குமே!

ஒங்களோடே கூட்டாளின்னுக்கிட்டு யாராவது ஒட்டிக்க வந்தாங்கன்னா „டக்“குன்னு நம்பிடாதீங்க. நல்லாருக்கச்சிலே பாசமா நடக்கிறவங்க ஒங்களுக்கு ஏதாச்சும் எடைஞ்சலோ துன்பமோ பொருளாதாரக் கஷ்டமோ வரும் நேரத்திலே எப்படி நடந்துக்கிறாங்கன்னு அவதானமா பார்த்துக்குங்க.

பக்குவமாக சாட்டு சொல்லித் தப்பிக்கிட்டே ஒதவாமே நழுவிக்கிற நைஸ் வியாபாரிங்களும் ஒங்க நெலைமையை புரிஞ்சுக்கிறாத மாதிரி காட்டிக்கிட்டே ஒதுங்கிக்கிற ஓப்புக்காரங்களும் ஒங்க பலம் கொறைஞ்ச நெலைமையை ஊர் பூராவும் பரப்பி விட்டுட்டு, சிரிச்சிக்கிட்டே ஒட்டிட்டிருக்கவங்களும் ஒங்க கூட்டாளிங்க இல்லை.


ஒங்களுக்கு ஒண்ணுண்ணா தனக்கு நடந்தாப்போலே நெனைக்கிறவங்களும் ஏலாமே இருந்தாலும் எப்படியாவது ஒதவ முடியாதான்னு நெனைக்கிறவங்களும் யாரோ அவங்களைத்தான் நம்புங்க.

ஏன்னா செய்றதும் செய்யணும்னு மனசார நெனைக்கிறதும் புண்ணியத்தோடே எலக்கணத்திலே ஒண்ணுதான். நல்லதுகளுக்குத்தான் நல்ல நெனைப்புக்களும் வரும்.                                                                                                
 காத்துக்கு வாசமும் நாத்தமும் சேர்க்கையை பொருத்துத்தான் இல்லீங்களா?

 செலாளுங்க ரொம்பவும் பக்குவமாவும் பவ்வியமாவும் பரிசுத்தமான தேவதைங்களாட்டம் தெறமையா பேசிப் பழகுவாங்க. ஆனா உள்ளாடி வெறும் கருமிசமும் வைராக்கியமும் பகையும்தானிருக்கும். பழகினீங்கன்னா ஏதோ ஒலக சாதனையெல்லாமே அவங்களாலேதான் நடக்கிற மாதிரி கதையடிப்பாங்க. ஆனா அவங்க கிட்டேயே ஒங்களுக்கு இருக்கிற ஒயர்வான ஆசைன்னு எதையாவது சொல்லி ஒதவி செய்யக் கேட்டுப் பாருங்க.

அப்பத்தான் எப்படிப் பக்குவமாவும் தெறமையாவும் அவங்க ஒங்க ஆசையை தட்டிவிட்டு ஒங்களை தடுக்கிறாங்கங்கிறதை நீங்க சரியா அடையாளம் காணுவீங்க. அவங்களை நம்பவே நம்பாமே, ஏதோ அவங்களை நம்பறாப்பலே நீங்களும் சும்மா புது நடிகராட்டம் கொஞ்சம் நடிச்சுப் பாருங்க. அப்பத் தெரியும் அவங்களோடே நெஜமான நெறம். முள்ளை முள்ளாலேயே எடுக்கிற மாதிரித்தான் இதுவும். புரிஞ்சுதா?


நட்பா பழகுறது வேறே, நண்பரா ஏத்துக்கிறது வேறே! ரெண்டுக்கும் டிப்பெரண்ட்டு இருக்குது.

நண்பரா ஏத்துக்கிறதுக்கு முந்தி சந்தேகத்தோடேதான் பழகணும். சரியான ஆளுன்னு கண்டு பிடிச்சி நட்பு வச்சோமோ, அதுக்குப் பின்னாடி சந்தேகமே வரக்கூடாதுன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க. ஏன் தெரியுமா?

ஆளைக் கண்டு மயங்காதே! நம்பவே நம்பாதே! மூளையை சரியா ரோசிக்காமே வித்துட்டமோ நட்பே நஞ்சாயிடும்னு நம்மை எச்சரிச்சு வைக்கத்தான்.

சொந்தம் பந்தம் கூட செல சமயங்களிலே தீப்பந்தங்களாகி விடுறதுண்டு. நல்ல கொணம், நல்ல புத்தி, நல்ல பழக்க வழக்கங்க எல்லாம் நாம எப்பவும் பொடம் போட்டுப் போட்டுப் பாலிஷ்; பண்ணி வைச்சுட்டே வர வேண்டிய வெசயங்கள். சும்மா மேடையிலே பேசிட்டு நடையை மாத்தி நடந்துக்கிற சமாச்சாரங்களில்லை.

எவனாவது பேச்சு வேறே வாழ்க்கை வேறேன்னு இருந்தான்னா, அவன் ஒழுக்கமில்லாத ஆள்னுதான் அர்த்தம். அவனோடே சேர்றதும் அவனைப் போல ஆளுங்களா இருந்தாத்தான் அவங்க தொடர்பு நெலைச்சிருக்கும். ஒரு சாதிப் பறவைகள்தானுங்களே ஒண்ணாப் பறந்து போவும்?

ஆந்தையும் வாத்தும் காக்காவும் புறாவும் ஒண்ணாப் பறந்து என்னிக்காவது பார்த்திருக்கோமா?

யார் கூடயாவது சேரணும்னு நீங்க நெனைச்சா, மொதல்ல ஆளைப் படியுங்க. ஆழந் தெரியாமே காலை உட்டா மூழ்கிச் சாகணும். ஆளையறியாமே சிநேகம் வைச்சா அவதிப் பட்டே ஆவணும்.


நீங்கள்ளாம் என் முனுசாமித் தாத்தா மாதிரி ரோசிக்காமே நம்பி நடந்துட்டுப் பொறவு தடுமாறக் கூடாதேன்னுதான் ஒங்களுக்கு இப்போ இதைச் சொல்லி வைக்கிறேன்.

தயவு செஞ்சி…

கூடாத கூட்டங்கள் கூட வேணாம். (வீணா மனசுக்குள்ளே) கூடங்கள் மாடங்கள் கட்ட வேணாம்.



மறக்க மாட்டீங்கதானே!

போயிட்டு வாறேன்.

அடுத்த வாட்டி சந்திக்கிற வரைக்கும்,

 ஒங்க அப்பாசாமி