வெள்ளி, 13 செப்டம்பர், 2013

இனிக்கும் கடுக்காய


                                                                         




கேட்கும் போது கடுமையாக இருக்கும் சில விடயங்களைப் பற்றி நாம் நிதானமாக சிந்திக்கும் போது, அவை அவசியமானவையாகப் படுவதுண்டு.

சில உண்மைகள் நம்மிடம் சுட்டிக் காட்டப்படும்போது அவை நம்மைச் சுடுவதுபோல் இருந்தால் நமக்குள் ஆத்திரம் எழுவது இயற்கைதான்.

சில விடயங்களை யாராவது சுட்டிச் சொல்லும்போது, கேட்கும்  நமக்குக் கோபம் வருவதுண்டு. ஆனால் சிறிது பொறுமையாக, தாமதமாக, ஆறுதலாக சிந்தித்துப் பார்த்தால், அதுவும் நியாயந்தானே  என்ற விதமாக நமது மனதுக்குப்படும்.

அப்போது நமக்குள் எழுந்திருந்த ஆத்திர உணர்வும் கோபமும் அடங்கி வருவதும் மனம் தணிவடைவதும் புரியும்.

இந்த அனுபவம் நம் தினசரி வாழ்க்கையில் மிக மிக அடிக்கடி வருவதுதான் என்றாலும் நாம் இதைப்பற்றி அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் விட்டு விடுவதால்தான் அடிக்கடி நமக்கு “டென்ஷன்”ஏறுவதும் இறங்குவதும் ஓர் இயல்பான வழக்கம் போலவே இருந்து வருகின்றது எனலாம்.

அனாவசியமான தற்பெருமை என்ற குணம் பொதுவாக குடும்பத் தலைவர்கள் பலரிடமும் பரந்து காணப்படுவதால் அடிக்கடி பல குடும்பங்களில் சிறு சிறு பட்டாசுகளாகப் பிரச்சினைகள் வெடித்து வெடித்து இந்த “டென்ஷன் மாமா” பெருங்குதிகுதித்துக் கொண்டிருப்பது கவனிக்கப்பட வேண்டும்.

“இவள் யார் எனக்குச் சொல்ல?” என்று தலைவரும் “இவர் சொல்லி நானென்ன கேட்பது?”என்று தலைவியும் அவசியமற்றதோர் அதிகாரக் கேள்வியைத் தமக்குள் தேவையில்லாமல் நினைத்துக் கொள்வதனால் அடம் பிடிப்பதில் ஏதோ வெற்றி இருப்பதாகத் தப்புக் கணக்குப் போட்டுக் கொள்கிறார்கள்.

இந்த வேடிக்கையான அனுபவம் எனக்கும் நிறைய உண்டு என்பதாலும் நீங்களும் அதை அனுபவித்துத்தானிருப்பீர்கள் என்று நம்புவதாலுமே உங்களுடன் மனம் விட்டு இதைச் சொல்கிறேன்.

கோபப்படுங்கள். ஆனால் சரியான காரணத்துக்காகக் கோபப்படுங்கள். எதிர்த்து நில்லுங்கள். ஆனால் நியாயமான காரியத்தைச் சார்ந்தே எதிர்த்து நில்லுங்கள்.

நம் உடலை ஒருவர் தொடும்போது நொந்தால், தொட்டவர் மேல் ஆத்திரப்படலைத் தவிர்த்து, தொட்டதும் வலிக்கும்படியாக நமது உடம்பில் ஏதோ தவறிருக்கிறதே என்று உணர்ந்து, அதை நிவர்த்திப்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அப்போது நிச்சயமாக நமக்கு நாமே பாதி மருந்து வழங்கிவிட்டதாக ஆகிவிடும்.

அதனால் ஆத்திரமும் கோபமும் தங்களுடன் கூடவே கூட்டிக் கொண்டு வரும் கெட்ட நண்பனான பகைமையின் அறிமுகத்துக்கு இடமே இல்லாமல் போய்விடும்.

குடும்பங்கள் பலவற்றுக்குள்ளும் இருக்கும் மிகச் சாதாரணமான உட்சச்சரவுகளும்கூட சில கெட்ட மனிதர்களுக்கு முழுநேர உணவாகப் பயன்பட்டு விடுவதுண்டு. ஜாக்கிரதை!

உங்களின் குடும்பத்துக்குள் இருக்கும் பிரச்சினைகளை ஆளை அறியாமல், ஆறுதலை விழைந்து அவிழ்த்துவிட்டீர்களோ, பிறகு ஆழமறியாமல் சேற்றுக் குழிக்குள் இறங்கி விட்டுத் தத்தளிக்கும் நிலைதான் தோன்றும். பட்டாசுக்களை வெடி குண்டுகளாக மாற்றி, வெடிக்க வைத்துக் குடும்பங்களைச் சிதற வைப்பதில் சுகம் அனுபவிக்கும் ஜாம்பவான்கள் பலர் நம்மைச் சூழவும் இருக்கிறார்கள். ஜாக்கிரதை!

பசாசுகள் எங்கேயும் மறைந்திருந்து கொண்டு, இரவில் மட்டும் நடமாடுபவை என்று நம்பாதீர்கள். பட்டப்பகலிலும் கூட, அவைதான் பெரும்பாலும் நம்மைச் சுற்றிலும் நமது நண்பர்கள் போலவும் உறவினர்கள் போலவும் அயலவர்கள் போலவும் மிக மிக அதிகமாகவே எங்கணும் பரவலாக நிறைந்திருக்கின்றன.

நம்மிடையிலே அவைகளின் இருப்பின் தொகையைப் பார்த்து அவை இருக்க வேண்டிய நரகமே இப்போது வெறுமையாகிப் போய் இருக்குமோ என எனக்கு அச்சமாயிருக்கிறது. தீயதுகளின் புகை மண்டலம் அப்படி மண்டிக் கிடக்கின்றது எங்கும்.

அந்தளவுக்கு அவற்றை  என் வாழ்வில் புற்றுக்குள் நிறைந்து வழியும் கறையான்களாகச் சந்தித்தும் சந்தித்துக் கொண்டும் இருக்கிறவன் நான். அவற்றின் ஆற்றலை இலேசாக எடை போட்டு, ஏமாந்து உதை பல பட்டு பாடம் படித்தவன் நான்.

பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்றதேனென்று நினைக்கிறீர்கள்? பிழையாகப் பிச்சை போட்டால் வாங்கிய பேய் பிச்சைப் பாத்திரத்தாலேயே உன்னை அடித்துவிட்டுப் போய்விடும் என்று எச்சரிக்கத்தான்.

நாகத்துக்கு ஏன் நல்ல பாம்பென்று பெயர் வைத்தார்கள்? நிச்சயமாக இவர்களை அடையாளமாக அனுபவித்தபடியினால்தான் என்பேன் நான்.

பார்க்கவும் கேட்கவும் இனிப்பவைகளில் பல நஞ்சுள்ளவை என்பதை மறக்காமல் நினைவில் வைத்து வந்தாலொழிய, அடிபட்டு வருந்த நேருவதை அந்த ஆண்டவனாலேயே கூட தவிர்த்துக் கொள்ள இயலாது. ஏனெனில் அவனை வைத்தே ஏமாற்றும் பட்டாளமும் இவர்களுக்குள்தான் இருக்கின்றது.

சமுதாயத்தில் நம்மை நாம் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு நம் முன்னோர்கள் சொல்லித் தந்த அறிவுரைகள், பழமொழிகள், கட்டளைகள், சட்டங்கள் எல்லாமே இன்று வரைக்கும் தொடர் தேவைகளாக இருந்து வருவதன் பின்னணியில் நல்லவர்களில் பெரும்பாலானோர் ஏமாளிகளாக இருப்பதுவே காரணமாக இருந்து வருகின்றது எனலாம்.

கெட்டவர்கள் திருந்தமாட்டார்கள். கெட்டுப் போனவர்களே திருந்த முடியும். அதாவது தீமையின் தன்மை தெரியாமல் அல்லது புரியாமல் அதனை ஏற்றுப் பிழை வழியில் நடப்பவர்கள் சரியை உணர்ந்தால் திருந்துவது சாத்தியம்.ஆனால் தீமையே தன்மையானவர்கள் அவர்களாகவே இருப்பார்கள். காரணம்,அது அவர்களின் இயற்கை நிலை.

இதையேதான் முன்னொரு தடவை என் நூலொன்றில் வெள்ளையைக் கறுப்பாக மாற்றலாம். ஆனால் கறுப்பை வெள்ளையாக மாற்றல் முடியாது என்று நான் குறிப்பிட்டிருந்தேன்.

ஒழுக்கம் தவறிவிட்ட ஒரு நல்ல பெண், அதை உணர்ந்து, வருந்தி, உள்ளத்தால் திருந்துவது சாத்தியம். ஆனால் அதனை விரும்பி உழைப்பில் பயன்படுத்தும் ஒரு விபச்சாரி அதனை நியாயப் படுத்தத்தான் பல்வேறு காரணங்களை முன்வைப்பாளே தவிர,திருந்த முயலமாட்டாள். காரணம், அதைத்தொழிலாய்க் கொள்ள அவள் அதைச் சரியாய் ஏற்றமையே ஆகும். அல்லவா?

வறுமையால் பிள்ளையை விற்றுவிடும் ஒரு தாயின் உள்ளம் படக்கூடிய கடுந்துயரைச் சொல்லி விளக்க முடியாது. அவளது தாங்காமையை அவள் தான் படும் கஷ்டமின்றித் தன் பிள்ளையாவது வாழுமே என்றுதான் தனக்குள் சொல்லி ஆறுதலடையப் பார்ப்பாள். ஆனால் அது தற்காலிக ஆறுதலாக மட்டுமே இருந்து வரும். தாய்மையின் தூய்மை அத்தகையது.

ஆனால் தான் பெற்ற மகளையே தன் தொழிலுக்குள் தள்ளிப் பணம் படைக்க முற்படும் ஒரு பேயும் தாய்தானே என்றால்?

இவ்விடத்தில்தான் நியாயத்தையும் நீதியையும் மதிக்க வேண்டிய கடமையை நாம் முன்வைத்து சிந்திக்க வேண்டும். அப்படிச் சிந்திக்க மனம் வைத்தால் தான் நாம் பார்க்கும் அல்லது கேட்கும் செய்திகளில் மருந்துடன் குத்தப்படும் ஊசி எது, நஞ்சு தடவிக் குத்தப்பட பயன்படுத்தும் கத்தி எது என்பது நமக்குப் புரியும்.

நீரானது தனது தனித்துவத்தை இழந்து விடாமல் இருந்து வர வேண்டும் என்றால் நீரானது தன்னைத் தனிப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். மாறாக, தீயுடன் அது கூட்டு சேர நேர்ந்தால் படிப்படியாக அதுவும் தீயை ஏற்று, சூடாகி தீ செய்யும் அதே செயலான சுட்டுவிடும் நிலைக்கு அது மாறிவிடும்.

சட்டிக்குள் நீர் இருந்தால்தான் தீயினால் அதனைச் சூடாக்கி அதனைத் தனது நிலைக்கே மாற்றிவிட முடிகின்றது. அதுவே தொடர அனுமதித்தால் நீரானது தன்னையே இழந்ததாகி, வற்றி வற்றி  இறுதியில் இல்லாமலே அழிந்தும் போகும்.

ஆனால்...  அந்தச் சூடான நிலையிலும் அதைத் தீயின் மேல் ஊற்றினாலோ அது அந்தத் தீயை அணைத்துப் போடுமே தவிர தீயோடு தீயாகச் சேர்ந்து எரிந்து போகாது.

இந்த நிலையைத் தான் தீயவர்களிலும் தீயவர்களின் நட்புக்களினால் கெட்டுப்போகின்ற நல்லவர்களிலும் நாம் கண்டு கொள்ள முயல வேண்டும்.
தீயவர்களால் கெட்டுப் போன எத்தனையோ நல்ல உள்ளங்கள் நமது மத்தியில் இந்த கொதிக்கும் நீர் போல சுயநிலை இழந்தவர்களாக இருந்து கொண்டிருக்கின்றன.

அவற்றைக் கண்டு பிடிக்கவும்  மீட்டெடுக்கவும் நல்லவர்கள் தயங்கக் கூடாது. இதில் தவறிழைத்தால் தீயவர்களே நிறைந்த நிரந்தரமான ஒரு நரகமாக உலகம் உருவாகி விடுவதைத் தவிர்க்க இயலாமலே போய்விடலாம்.

துணிந்து சரி பிழைகளைச் சிந்திக்கத் துணியாத மனிதர்களால் இதனைச் செய்யவே முடியாது. சமுதாய நன்மையை விழைபவர்கள் இதனைச் செய்யாதபடியினால்தான் நல்ல நோக்கங்களுக்கென இணைந்து சங்கங்கள் அமைத்து நாசக்காரர்களின் நடவடிக்கைகளால் மனமுடைந்து போகிறார்கள்.

ஆசிரியமும் ஆலயமும் இயக்கங்கள் பலவும் கூட இந்த மாதிரி தீயொப்ப ஆசாமிகளால்தான் அர்த்தமிழந்து போய்க் கொண்டிருக்கின்றன.

இதனை அலட்சியப்படுத்தாமல் அமைதியாக ஆய்ந்து, உணர்ந்து சிந்திப்பவருக்கு சரியான பாதையை மலைமேலிருந்து காண்பதுபோலத் தெளிவாக அனைத்தும் விளங்கும்.

அப்போதுதான் நமக்கு, கல்வி வேறு அறிவதென்பது வேறு,அறிந்திருப்பது வேறு புரிந்து கொள்வதென்பது வேறு என்பது தெளிவாகும் சாத்தியம் உருவாகும்.

தனிப்பட்ட வாழ்க்கையும் பொது வாழ்க்கையும் வெவ்வேறானவையாக ஒழுக்கத்தில் இருந்தால் அவ்விடத்தில் மனித உருவில் ஒரு விலங்குதான் இருக்கும். படித்துப் புலமை பெற்றுத் தேறிய பெருமனிதனாக இருந்தாலும் வெறும் உக்கி நிற்கும் மரமாகவே அவனிருப்பான்.

இதைத் தெளிந்து கொண்டு, பொறுமையுடன், எவர் சொன்னாலும் அதை ஆராய்ந்து பார்த்துவரும் பழக்கத்தைக் கடைப்பிடிப்பது மட்டும்தான் கண் விழித்த குருடர்களுக்கும் நமக்கும் இடையிலே இருக்கிற வித்தியாசத்தை நாமே கண்டு பிடித்துக் கொள்ளப் பயன்படும் பூதக்கண்ணாடியாக நமக்கு உதவி செய்யும்.

செலவில்லாத, சிரமமில்லாத இதைச் செய்துவர இனியும் ஏன் தயக்கம்?

கடுக்காய் துவர்க்கும் என்பார்க்கும் அதுவே இனிக்கும் என்பார்க்குமிடையிலான அடிப்படை வித்;தியாசம் இதுதான்.

கசடன் கடிதலை வெறுப்பான்.
கண்ணியன் திருத்தலை ஏற்பான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக