வியாழன், 19 டிசம்பர், 2019

தடங்களில் திரும்பினால....03.


„பஞ்ச்“ புலவர்


எழுத்துலக நண்பர் வட்டத்துக்குள்ளும் இரசிகர் வட்டத்திற்குள்ளும் சில வேடிக்கையான நிகழ்வுகள் நடப்பதுண்டு.

செருமனிக்குத் தமிழ்நாட்டிலிருந்து ஒரு கவிஞர் வந்திருந்தார்.ஓரு நண்பர் நானிருந்த இடத்திலிருந்து வெகு தொலைவிலிருந்த இன்னொரு நகரில் நடக்கவிருந்த ஒரு தமிழ் விழாவில் உரையாற்ற எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். கிட்டத்தட்ட நான்கு மணிநேரப் பயணம்.பணச் செலவும் நேரச் செலவும்தான். ஏன்றாலும் காலத்தின் அழுத்தமது.

புறப்பட ஒரு நாள் முன்னதாக ஒரு நண்பரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. „எழிலன் நீ;ங்கள் நாளைக்கு எத்தனை மணியளவில் புறப்படுகிறீர்கள்? “  எனக் கேட்டார். நான் சொன்னேன்.

„நாங்களிருக்கும் நகரைத் தாண்டித்தானே போகிறீர்கள்?“

அவரது பேச்சில் தந்திரம் மிதப்பது சட:;டெனப் புரிந்தது எனக்கு.
காரணம் இப்படி நபர்கள் சிலரை நான் ஏற்கனவே சந்தித்திருந்த அனுபவம்தான். சிறுவட்டர் சிந்தனைகள் அப்படித்தானிருக்கும்.

நீங்களும் எங்களுடன் வர நினைக்கிறீர்களா?“ என்றபோது ஒரு வகையான சிரிப்பொலி மறுபக்கத்தில் கேட்டது. அது ஒரு நரியின் ஊளை போலவே எனக்குக் கேட்டது. சுயநலக்கார பாவி! இடம் பார்த்து மடம் அமைப்பவர்!

நான் சுதாகரிப்பதற்குள் அடுத்த குண்டைப் போட்டார் அவர்.

„என்னுடன் புலவர் ஐயாவும் இன்னும் இருவரும் நிற்கிறார்கள். உங்கள் காரில் சேர்ந்தே போகலாமே என்று அவர்களும் நினைக்கிறார்கள். உங்கள்  விருப்பம் எப்படி?“

கேள்வியா இது!

கோபத்தில் எனது உடல் தகதகத்தது. ஆனாலும் நாகரீகம் கருதி அடக்கி வாசிக்க வேண்டிய கட்டாயம். நம்மில் எதிர்த்தடக்கும் தெம்பு குறைந்தால் இளிச்ச வாயர்களும் இரும்பு மனிதர்களாகி விடுகிறார்களே!

எங்கும் நாங்கள் இருவருமே இணைந்து போவதுதான் வழக்கம். அந்த முறை என் மனைவியை வீட்டில் தங்கியிருக்கச் சொல்லிவிட்டு நான் தனியாகப் புறப்பட்டேன். வேறு வழி அப்போதைக்கு எனக்குத் தெரியவில்லை.

அவர்களைச் சந்தித்தபோது புலவரும் அந்த நண்பரும் வந்து வரவேற்றனர். முன்பின் கண்டிராத மற்ற இருவரும் விறகுக் கட்டைகள் போல நின்றார்கள். ஓரு வணக்கம் சொல்லக்கூட தெரியாதா என்ன?

மரக்கட்டைகள்.

என் மனைவியை விட்டுவிட்டுத் தனியே வர வைத்ததில் உள்ளுக்குள் இருந்த என் கோபம் அப்படி.

கண்ட பாவத்துக்காக நான் அந்த இருவரையும் பார்த்து இலேசாக முறுவலித்தேன். அவ்வளவுதான் இரண்டிலொன்றின் திருவாய் பட்டென்று மலர்ந்தது.

„நாங்கள் ரெயினிலே போகலாம் எண்டுதானிருந்த நாங்கள். அண்ணன்தான்
ஏனடா ஓசிப் பயணம் கிடைக்கையிலே காசை வீணாக்கிறீங்கோ நான் பேசி சரிப்படுத்தி சும்மா கொண்டு போறன் என்றவர்“

கையிலே ஒரு கோடரி இல்லையே!

ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்று யாரோ சொல்லிக் கேட்ட ஞாபகம் வந்து  தலைக்குள் முட்டி மூளையைக் கலக்க முயல்வது புரிந்தது. மூளை குழம்பும் முன் வண்டியை எடுத்துவிடுவதே நல்லது.

„எல்லாரும் டக்கென்று ஏறிக் கொள்ளுங்கள். போய்ச் சேர நேரம் காணாது. வேகமாகப் போக வேண்டும்“

எனது வலப்புறமாக நரி நண்பரும் அவருக்குப் பின்புறமாகப் புலவரும் அவரருகில் அந்த வாயுடைந்த மேதாவிகளுமாக அமர புறப்பட்டோம்.

ஆறு ஏழு கிலோ மீற்றர் கடந்த பின் வெகுவேக நெடுவழிப் பாதைக்குள் நுழைந்தோம். வேகக் கட்டுப்பாடு தவிர்ந்த இடங்களில் கடும் வேகத்தில் போய்க் கொண்டிருந்தோம். 120ல் செல்ல வேண்டி வேகத்துக்குரிய பாதையில் வாகனங்களே இல்லை. ஆகவே இப்போது 170ல் பறந்து கொண்டிருந்தேன்.

திடீரென எனது நண்பர் ஏதோ குசுகுசுத்தார்.

„சத்தமாகச் சொல்லுங்கள். கவனம் பிசகாமல் ஓட்ட வேண்டும்.“

வேகத்தின் ஆபத்தை என் குரலை உயர்த்தி நானுணர்த்தினேன்.

„ஒரு விண்ணப்பமாம் புலவர் கேட்கிறார்“

எனக்கு அது தெளிவாகக் கேட்கவில்லை.
„ஆப்பமோ ஊத்தப்பமோ சத்தமாய் கேட்கச் சொல்லுங்கள்“

நண்பர் புலவரிடம் உரத்து கேட்கும்படி உரத்த குரலில் திரும்பிச் சொல்ல புலவர் உடனடியாகவே இயங்கினார்.

„ஐயா ஒரு விண்ணப்பமுங்க“

„என்னது? டக்குனு சொல்லுங்க“

„மோளணுமே!“

ஒரு சில விநாடிகள் அதிர்ச்சியில் ஸ்டியரிங்ஙை அங்குமிங்குமாகத் திருப்பியதில் வண்டி தடுமாறிவிட்டது.

சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.
„கொஞ்சம் பொறுங்கள் பத்து நிமிடத்தில் ஒரு பெட்ரோல் நிலையம் வரும். அங்கே நிறுத்துகிறேன் போகலாம்“

புலவர் கொதித்தார்.
„இம்மüpடியேட்டுங்க. .இல்லேன்னா ..“
;ஆங்கில வார்த்தை இப்படி முடிவுற்றது.
„ இங்கேயே இருந்துடுவேன்“

தீச்சுட்ட அதிhச்சியுடன் வேகமாகத் திருப்பி  பாதையோரத்தை நெருங்கினேன். நரி நண்பர் அறிவுறுத்தினார்.

„கப்புத்து லைற்றைப் போட்டு விடுங்கள்..கல்லது“ 

ஜெர்மனில் கப்புட் என்றொரு சொல்லுண்டு உடைவு களைப்பு இப்படி கருத்துக்களுள் வருமது. அதையே நமது செந்தமிழ்த் தேன் மொழியார் கப்புத்து எனத் தமிழாக்கி வாகனம் பழுதாகியிருப்பதாகக் காட்டிக் கொள்ள அந்த விளக்கைப் போட அறிவுறுத்தினார். ஜெர்மன் கப்புட்டுக்குத் தமிழ் கப்புத்து. அப்பப்பா!

சமாளித்து ஓர் ஓரமாக நிறுத்தினதுதான் தாமதம் பாதையோரச் சிறு நெடுமதிலை வேட்டியைத் தூக்கியவாறே தாண்டிக் குதித்தோடி அருகிலிருந்த மரத்தடியில் நின்று சுர்ர்ர்ர்ர் அடித்தார் கவிஞர்.

அவர் திரும்பு முன் அவரருகிலிருந்த இருவரும் „நாங்களும் போட்டு வாறோம்“ என்று பதிலுக்கும் காத்திராமல் இறங்கிப் போனார்கள்.

தலையை ஆட்டாமல் என்ன செய்ய?

புலவர் திரும்பியதும் நான் சிரித்துக் கொண்டே கேட்டேன்.
„ஏன்  அப்படிக் கேட்டீங்க?“ ஒரு மடையனுக்கு விளக்கமளிக்கும் விதத்தில் புலவர் விளக்கினார்.

„உங்களுக்குப் புரியலையா?“ அப்படீன்னா சிறுநீர் கழிக்கணுமேன்னு சொன்னேன்.“

நாளாந்த அனுபவசாலி நமக்கே புரியலையாம் என்ன சொல்லலாம்.....?

„சிறுநீர் கழித்தால் நீங்க சொன்னது சரி. ஆனா நீங்க கழித்தது பெரு நீரல்லவா! அஞ்சு நிமிடமாக நின்னிட்டேருந்தீங்களே அதெப்படி...?

ஒரு சிம்பன்சி குரங்கு பின்னால் சிரித்துக் கொண்டிருப்பது கண்ணாடியில் தெரிந்தது. தலைவிதியை நொந்தபடி எனது சிற்றுந்து நகர்ந்து கொண்டிருந்தது.

வருவாய்க்கு வருகின்ற வெளிநாட்டு வாய்கள்
தருகின்ற தமிழ்வார்த்தை சமயத்தில் காய்கள்
சிரமீது விழுகின்ற வருத்தத்தி னோடே
சிரித்திடா திருப்பதோ பெரும் பாடே!

பண்பான வார்த்தைகள் பகர்கின்ற வாயும்
திண்டாடும்  சூழ்நிலை திடீரென்று ஆகின்
மன்றாடும் நிலைநோக்கி எழுந்திடல்வந்தால்
பந்தாடும் தமிழ்ச்சொல்லை! கண்டேனே ஐயா!



புதன், 18 டிசம்பர், 2019

தடங்களில் திரும்பினால்.....02


 அமலதாச

இளவயதில் எனக்கு ஒரு இளைஞன் நண்பனாகி இருந்தான். ஏனது அப்பாவின் தொழிலகமான அச்சகத்தில் அவனும் பணி செய்து வந்தன்;.

தனது குடம்பத்தின் கடும் வறுமை காரணமாக சில வகுப்புக்களே படித்துவிட்டு ஒதுங்கியவனாக இருந்ததுடன ஆங்கில அறிவு மிகக் குறைவு என்பதால் தனது கடமையைச் செய்வதில் அதாவது ஆங்கில அச்செழுத்து கோர்ப்பதில் அந்த பலவீனம் மிக அதிக சிரமத்தைத் தந்து வந்ததால் தொழிலக அழுத்தமும் வேகக் குறைவுக் கண்டனங்களுமாக மனத்தளவில் மிகமிகத் தளர்ந்தவனாக அவன் எப்போதுமே சோர்வுடi; காணப்பட்டு வந்தான்.

கிட்டத்தட்ட அவன் வயதில் நாங்களுமிருந்தபடியால் ஒரு தந்தைக்குரிய கரிசனையுடன் அப்பா அம்மாவுடன் அவனைப்பற்றிக் குறிப்பிட்டு அடிக்கடி பேசியதைக்  கேட்க நேர்ந்தது.

வேலை பயிலுபவன் இடத்தில் அவனை வைத்;து நடத்தியதால் மிக மிகக் குறைந்த ஊதியத்தில் அவன் மிகவும் சிரமப்படுவதாகவும் தெரிந்தது.

நான் அந்நாட்களில் சிறு குழந்தைகளுக்காக மாலை பாடத் துணை
வகுப்பொன்றை நடத்திக் கொண்டிருந்தேன். சில அயல்வீட்டுப் பெற்றோர்களின் வேண்டுகோள் காரணமாகவே அதில் இறங்கியிருந்தேன்.

ஓரு வகையில் பொழுதுபோக்கும் அதற்கு மாதவருமானமும் கிடைத்து வந்தது. மலர்ச்சிகரமான மாலை வகுப்பும் கவர்ச்சிகரமான வருமானமும் நல்லதுதானே!

ஓரு நாள் அப்பாவிடம் அவன்பற்றி விசாரித்த நான் அவன் எதுவித கöட்டணமுமின்றி ஆங்கிலம் படிக்க உதவ தயாராயிருப்பதாக நான் தெரிவித்தேன். அவனாக விரும்பி வந்து பார்த்து செல்லட்டும் என்றும் நான் கேட்டுக் கொணடேன்

புதிய அறிமுகத்துடன் சின்னஞ்சிறிய குழந்தைகளுடன் அமரத்தக்க வயதுமில்லையாதலால் தனது வேலை முடிய திரும்பி வரும் அந்த இளைஞன் நான் படிப்பிப்பதை ஒருவித ஏக்கத்துடன் கவனித்ததை நான் அவதானிக்க முடிந்தது.

அவனுடன் தனிமையில் பேசுகையில் துயரத்தின் ஆழம் புரிந்தது.

தான் ஐந்தாவது வகுப்பு வரைக்குமே பள்ளிக்கு சென்றதாகவும் வறுமை நிலையால் அதன் பிறகு ஒரு சிறிய மளிகைக் கடையில் வேலை செய்து வீட்டுக்குதவும் கட்டாயம் ஏற்பட்டதாகவும் வளர்ந்த பின் இருந்த சொற்ப அறிவோடேயே கொழும்புக்கு வந்ததாகவும் ஒருவரின் உதவியின் மூலமே தற்போதைய தொழிலைக் கற்றதாகவும் அரைகுறை அறிவோடே பணி செய்வதால் எதிர்கொள்ளும் தினசரி கெடுபிடிகள் தாங்க முடியாதவையாக இருப்பதாகவும் அதனால் இன்னும் கொஞ்சம் நன்றாகப் படித்துவிட ஏங்குவதாகவும் மனந்திறந்து கவலை ததும்ப விளக்கினானவன்

தனது படிப்புக் குறைவு காரணமாக எதிர்காலமே கேள்விக்குறியாய் இருப்பதாக அவன் கவலைப்படுவது தெரிந்தது. இருபது வயதைக் கடந்துவிட்ட அவனின் மனக்கவலை எனக்கும் கிட்டத்தட்ட அதே வயதுதானென்பதால் புரியக்கூடியதாய் இருந்தது.

அன்றிரவு அது பற்றி நீண்ட நேரமாக சிந்தித்ததில் எனக்கு ஒரு புதிய வழி புலப்பட்டது. அதாவது பத்தாம் வகுப்புக்கான அரசாங்க பரீட்சைக்குத் தனியாரும் தோற்றலாமே! இவனேன் அதை முயற்சிக்கக் கூடாது?

அது வருட ஆரம்ப காலம். எனவே மறுநாள் அவனை சந்தித்தபோது அவனை அந்தப் பரீட்சை எழுதினால் பத்தாவது வகுப்புத் தேர்ச்சிச் சான்றிதழைப் பெற்று விடலாம் என்று அறிவித்து முயன்று படித்தால் வென்று விடலாம் என்றும் எனது பங்குக்கு என்னாலான சகல உதவிகளையும் செய்வேன் என்றும் வாக்களித்தேன்.

நடுநடுங்காத குறையாக அவன் அவன் தயங்குவது தெரிந்தது.

இயலாமையாய் உணர்ந்தால் எதிலும் தயக்கமே முன்னிற்கும் என்பது இயல்புதானே!

„நேற்று என்னிடம் சொன்ன உனது எதிர்காலம் பற்றிய உனது கவலை உண்மையென்றால் நீ படகு கவிழ்ந்து நட்டாற்றில் விழுந்து தவிக்கிறாய் என்றே பொருள். விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ எதையாவது செய்து நீ கரையேற முயல்வதே சரி அல்லது மூழ்கிச் சாக வேண்டியதுதான். நான் சொல்கிறது புரிகிறதா இல்லையா?“

சற்றுக் கடினமாகவே நான் பேசினேன். ஆனால் அது அவனை வழிக்குக் கொணர செய்த தந்திரம்தான்

„முதலில் சரியென்று முடிவெடு! மற்றதை நான் கவனிக்கிறேன். பாசானாலும் பெயிலானாலும் புதிதாக நட்டப்பட எதுவுமே இல்லையே!“

மூழ்க இருந்தவனுக்கு ஒரு பலகை கிடைத்தைப்போல அவன் எனது உத்தரவாதத்தை நம்பி நிமிர்வது தெரிந்தது.

„நீங்கள் இருக்கிற தைரியத்தில் நான் இறங்குகிறேன்“

„ஆனால் நீதான் தைரியமாக நீந்திக் கரை ஏறவேண்டும்.புரிகிறதா?“

மறுநாள் பக்கத்துத் தொலைவிலிருந்த ராஜன் இன்ஸ்ட்டிடியூட் என்ற மாலை வகுப்புப் பள்ளி தலைமை ஆசிரியரைச் சந்தித்தேன். அவர் எனது நல்ல நண்பர் என்றாலும் ஒருபோதும் உதவி கேட்டு நான் நெருங்க முயலாத நபர். கண்டபோது நின்று பேசுவார்.ஆனால் அழுத்தமில்லாமலே நகர்ந்து விடுவார். அத்தகையவர் அவர்.

பக்குவமாக எப்படிப் பேசலாம் என்று திட்டமிட்டுச் செயலில் இறங்கினேன்.
என் நண்பனின் நிலைமையை மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துச் சொல்லி அவரது திறமைக்கு ஒரு சவாலாக அதைச் செயல்படுத்த முடிந்தால் மட்டுமே இறங்குங்கள் அல்லது வேறொருவரிடம் நான் செல்கிறேன் என்ற விதத்தில் முடித்தேன்.

அவனுக்கான கல்விக் கட்டணைத்தை உடனடியாகக் கேட்கக் கூடாது என்றும் இறுதிமுடிவு  வந்ததும் மொத்தமாகவே அதைக் கட்டிவிட ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தேன். குறைந்த பட்சம் பத்து மாதங்கள் கடும் பயிற்சி.

அவர் மிகவும் கண்ணியமாக உடன்பட்டார். முக்கியமான நான்கு பாடங்களுக்கான பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டார். அடுத்த தினம் சற்று தொலைவிலிருந்த விகாரையின் அதிபதியான பிக்குவைப் போய்ப் பார்த்தோம்.

விபரங்களைக் கேட்டறிந்த விகாராதிபதி சிங்கள மொழி மற்றும் பௌத்தம் சார்ந்த பாடங்களுக்குத் தானே இலவசமாக ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார். ஓரு நல்ல நோக்கம் தடங்கலின்றி நகர்ந்தமை மிகவும் ஆறுதலைத் தந்தது எனக்கு. அன்றுபோல் இன்றும் ஆட்கள் கிடைப்பார்களா?

எனக்கென்னவோ சந்தேகந்தான்.

இங்லிஷ் வித் எ ஸ்மைல் என்ற நூலே அவனுக்காக நானெடுத்த அன்றைய பாடநூல். தனது அத்தனை பொழுதுபோக்குகளையும் உதறிவிட்டு விடாப்பிடியாகவும் கண்ணுங்கருத்துமாகவும் அவன் தனது படிப்பில் ஊன்றி நின்றமை என்னை பிரமிக்க வைத்தது.

ஓரு நாள் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவத்தை வாங்கக் கல்வித் திணைக்களத்துக்கு அவனையும் அழைத்துச் சென்றபோது அவன் நிமிர்ந்து நடந்தமையைக் காண எனக்கே பெருமையாகவிருந்தது. தன்னம்பிக்கை துளிர்விடும்போது படவிருக்கும் மரமும் நிமிர்ந்துவிடும் போலும்.

என்னிடம் தவிர்த்து இதர நாட்களில் அவனைக் காண்பதே அரிதாகவிருந்தமை அவனது கடமையுணர்வையும் விடாப்பிடியான உத்வேகத்தையும் உறுதிப்படுத்தி வந்தன.

பரீட:சைக்கான நாள் நெருங்க ஒரு சில நாட்களிருக்கையில் அவன் ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டான்.அதை வழங்குவதில் அவனது அலுவலகத்தில் பெரும் கெடுபிடிகளை அவன் மிஞ்ச இருந்ததாகவும் ஒருவேளை வேலையிலிருந்து நிறுத்திவிடுவார்களோ என்று கூட அஞ்சுவதாகவும் தெரிவித்தபோது எனக்குக் கவலையாக இருந்தது.

திடீரென்று அவன் என்னிடம் கேட்டான்:
„இருவரும் கோவிலுக்குப் போய்வருவோமா?“
எனக்கு அதிர்ச்சியாயிருந்தது.

„நீ பௌத்த மதத்தவன். பன்சலைக்கல்லவா போகவேண்டும்?“

„உங்களை எனக்குக் காட்டியது உங்கள் கடவுள்தானே! அதனால் உங்கள் கடவுளிடமே முதலில் போவோம்“

சிரிப்புத்தான் வருகுதையா!

எங்கள் வீட்டருகில் இருந்த புனித அந்தோனியார் ஆலயத்துள் இருவரும் நுழைந்தோம். கோவில் நடுவில் இருந்த பெரிய சொரூபத்தைக் காட்டி அவரா கடவுள் என விசாரித்தான். அவர் கடவுளை விசுவாசித்த புனிதர் என்றும் கடவுளை வலப்பக்கமாக இருக்கும் பீடத்திலுள்ள சிறு அறைக்குள் இருக்கிறதாக நம்புகிறோம் வா என நற்கருணை இருக்கிற பீடத்தின் பக்கம் அழைத்துச் சென்றேன்.

நான் என்னென்ன செய்தேனோ அவற்றை அவனும் அப்படியே பின்பற்றினான். முழங்காலில் முதல்தடவையாக இருக்கக் கடினம் தெரிந்தது. இருந்தாலும் சமாளித்து இருந்தான்.

„கண்ணை மூடிக்கொண்டு உன் கவலைகளையெல்லாம் அவரிடம் அமைதியாகச் சொல்லி அவரது உதவியைக் கேள். உறுதியான நம்பிக்கையுடன் கேள். நிச்சயம் நடக்கும்.“

சிறிது நேரம் செபித்தபின் நான் அவனைப் பார்த்தேன். மூடிய கண்களுடன் அப்படியே இருந்தான். நான் மெதுவாக எழுந்து பின்னால் நின்று கொண்டிருந்தேன்.

சில மணித்துளிகள் அவன் அப்படியே இருந்தான். புpறகு எழ முயன்றவன் அடுத்து என்ன செய்வதென கண்களாலேயே வினவினான். நான் வலது முழங்காலை மடித்து எழுந்து காட்டினேன். அவனும் செய்தான்.

இருவரும் கோவிலை விட்டு வெளியே வந்ததும் எல்லாக் குறைகளையும்
தேவைகளையும: சொல்லிக் கேட்டாயா எனக்கேட்டபோது என்னையே குப்புற விழச் செய்யும் ஒரு பதிலை அவன் தந்தான்.

„எல்லாம் தெரிந்த கடவுளுக்கு நாம் சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன? அதனால் கடவுளே எனது கவலைகள் அனைத்தையும் முழுமையாகத் தெரிந்த நீர் அவற்றிலிருந்து மீள நானெடுக்கும் முயற்சிகளை வெற்றிபெறச் செய்தால் மிகவும் நன்றியுடையவனாயிருப்பேன் என்றுவிட்டு அவரது அருளுக்காகக் கண்ணை மூடிக் காத்திருந்தேன்“

ஒரு நிமிடம் அவனிடமிருந்து சம்பிரதாய விசுவாசத்திற்கும் உண்மை விசுவாசத்திற்குமிடையிலான சரியான வித்தியாசத்தைப் பாடம் படிப்பதுபோல இருந்தது. சத்தியமாக அவனது பதிலால் என் மனம் மிகவும் படபடத்தது என்பேன்.

சிறிது கழித்து....
„அதுசரி அதிக நேரமாக கண்ணை மூடியபடியே இருந்தாயே!“ என அரைக் கேள்வியாக நான் துவங்க அவன் புன்கைத்தான்.

„நான் இன்று இங்கே வருவதற்கும் பரீட்சை எழுதித் தகைமை பெற உதவுவதற்கும் உங்களை எனக்குத் தந்த அவரிடம் உங்களுக்கு எல்லா விதத்திலும் உதவவேண்டும் என்று கேட்டதில்தான் சிறிது தாமதமானது“

சிரிப்பதா? அழுவதா?

„அவ்வளவு நேரமாக?“

„அவ்வளவு கேட்டேன். எல்லாவற்றையும் நீங்கள் கேட்டால்? சொல்லமாட்டேன்“ ஒரு வெட்கம் கலந்த சிரிப்புடன் நிறுத்திக் கொண்டான்.

மார்கழி மாதம் பரீட்சையி;ல் தோற்றினான். அவன் மிகவும் இயல்பாக இருந்தான். நான்மட்டும் உள்ளுக்குள் படபடத்துக் கொண்டிருந்தேன்

பரீட்சை முடிவு வெளிவந்த நாள்.

அன்று மாலை அவன் அஞ்சலில் வந்த கடித உறையுடன் வந்தான்.
எனக்குப் புரிந்தது. பரீட்சைப் பெறுபேறு வந்திருக்கிறது. நம்மிடம் காட்ட வந்திருக்கிறான். பலே!

கொஞ்சம் வாருங்கள் என என்னை அழைத்தான். மேற்கொண்டு எதுவும் கேட்காதே என்பதுபோல இருந்தது அவனது தொனி. கூடச் சென்றேன்.

அவன் நேராகவே தேவாலயத்துக்குள் சென்றான். நற்கருணை பீடத்தின் முன் நான் முதல்நாள் காட்டிய விதத்திலே அவனே செய்து விட்டு கிராதியில் முழங்கைகளை ஊன்றியாறு செபித்தான். அவனது கையிலிருந்த கடிதம்? அது திறக்கப்படாமல் அப்படியே இருந்தது. நான் அவனைப் பின்பற்றினேன்.

„ஆண்டவரே! தப்பித்தவறி...“ நான் மனதுக்குள் தடுமாறினேன். அவன் எழுந்ததும் என்னிடம் அந்த உறையைத் தந்து திறக்கும்படி சொன்னான். எனக்குக் கை இலேசாக நடுங்கியது.

ரிpசல்ட் எப்படியோ?

அவன் முகமோ புன்னகையால் நிறைந்திருந்தது. ஏன்? புரியாத புதிரது.
திறந்தேன்.

ஆங்கிலத்தில் விசேட சித்தி சிங்கள மொழியில் விசேட சித்தி பௌத்தத்தில் விசேட சித்தி கணிதம் உட்பட இதர மூன்று பாடங்களிலும் சாதாரண சித்தி அதாவது அத்தனை பாடங்களிலும் அவன் பாஸ். அசாதரண வெற்றி. அவனது அந்த வயதில் அந்த நிலையில் அசாத்தியமானது சாத்தியமானது சாதாரண வெற்றியல்லவே!
நான் ஆனந்த அதிர்ச்சியில் ஆடிப்போய்விட்டேன்

அவனைக் கட்டியணைத்து வாழ்த்தினேன். அவனது கண்ணீர் எனது தோளை நனைத்தது தெரி;ந்தது. அவனைச் சற்று முன் தள்ளி உற்றுப் பார்த்தேன்.

மனநிறைவு கண்ணீர் வழிந்த கண்களில் முகத்தில் மிளிர்வது தெரிந்தது.

கோவிலை விட்டு வெளிவருகையில் வாசலில் வைத்து நான் கேட்டேன்.
„அதுசரி ரிசல்ற் கடிதத்தை திறக்காமல் ஏன் கோவிலுக்கு கொண்டு வந்து என்னிடம் தந்து திறக்கச் சொன்னாய்?“

„எனக்கு நம்பிக்கை இருந்தது. ஏனென்றால் முதல் நாள் நாம் வந்தபோது நீங்கள் சொன்னதை அப்படியே செய்தேனே! பிறகு எப்படி ரிசல்ற் பிழையாக வர முடியும்?“

„அப்படியே என்றால்?“

„முழு நம்பிக்கையுடன் கேள். நிச்சயம் கிடைக்கும் என்றீர்களே! அது     பொய்யா?“

கடுகளவு விசுவாசம் உன்னில் உண்மையாக இருந்தால் மலையைக் கூட நகர்த்தலாம் என்ற தேவ வார்த்தை நினைவுக்கு வந்தது. நான் சொன்னேன். அவன்தான் அதை நிரூபித்திருக்கிறான்.

உண்மை விசுவாசத்தில் அவன் மலையாகவும் நான் பள்ளமாகவும் இருந்தது புரிந்தது. அந்த மடலை அவன் ஏன் தானே திறக்காமல் கடவுள் பாதத்தில் முதலில் நன்றி செலுத்திவிட்டு என்னைக் கொண்டு திறக்க வைத்துவிட்டுப் பொறுமையுடன் காத்திருந்தானென்பது புரிந்தது. சாதாரணமாக இப்படி நடக்காதே!

இதைத்தான் கனியைக் காட்டு மரத்தைச் சொல்கிறேன் என்பதா?

காலதூதன் காய் நகர்த்திடும் நேரம் வந்தது. அந்த நண்பன் தனது சொந்த ஊருக்குப் புறப்பட நேர்ந்தது.. கவலையுடன் விடைபெற்றுச் சென்றானவன்.
             
சில வருடங்கள் கழித்து புனித அந்தோனியார் திருவிழா  தினத்தன்று அவன் என் வீட்டுக்கு வந்திருப்பதாக அக்கா சொல்லியனுப்ப கோவிலில் பொதுப்பணியிலிருந்த நான் திரும்பி வந்து சந்தித்தேன்.

திருமணமாகி இரு குழந்தைகளுடன் வந்திருந்த அவன் தனது மனைவியிடம் ஏதோ சொல்லியிருப்பான் போலும். அவனுக்கு முன் அவள் எழுந்து கும்பிட்டு வணக்கம் தெரிவித்தாள்.

பகலுணவு வேளையில் முன்னறையில் பேசிக் கொண்டிருக்கையில்
நான் அவனை இலேசாகக் கேலியாகச் சீண்டினேன்.

கொழும்பை விட்டுப் போனபின் அப்படியே மறந்து விட்டாய். அப்படித்தானே!“

„ஒரு நாள் கூட உங்களையோ உங்கள் நட்பையோ நான் மறந்ததே இல்லை அண்ணா. எனது திருமணத்துக்கு உங்களை அழைக்க இயலவில்லை ஏனென்றால்...“

„காதல் திருமணமா? ம்ம்“ அவனது மனைவி தலை குவிந்தாள். நான் சிரித்தேன்.

„ எனக்குத் தெரிவித்திருந்தால் கொழும்பிலேயே நடத்தியிருக்கலாமே!“

;பெரிய தகராறின் பிறகு இரு குடும்பமும் சேர்ந்துதான் நடத்தி வைத்தார்கள்“

„நான் சும்மா கேலிக்குச் சொன்னேன்“ நான் மழுப்பினேன்..

நண்பன் சொன்னான்.  „உங்களை நாங்கள் மறக்கவே இல்லை“

நாங்கள்?
ஓருமை எப்படி பன்மையானது?

அவனே எனது ஐயத்தைத் தீர்த்து வைத்தான்.. எனது மூத்த மகனுக்குப் பெயர் அமலதாச. ஏன் தெரியுமா? உங்கள் பெயரை நான் மறக்காததால்தான்“

எனது இயற்பெயரில் ஒன்று அமலேந்திரன். அதையே இணைத்து அமலதாச என்று தனது முதல் மகனுக்கு வைத்து இருக்கிறான். பாராட்டுவதா நன்றி சொல்வதா? புரியவில்லை எனக்கு.

„உங்களைப் பற்றி இவளிடம் நான் அடிக்கடி பேசியிருக்கிறேன்: மகன் பிறந்ததும் இவள்தான் அந்தப் பெயரை சொல்லி வைக்கச் சொன்னாள். நான் இப்போது நடத்திக் கொண்டிருக்கும் சிறிய அச்சகத்தின் பெயரும் அதுதான். அதுவும் என் மனவி சொல்லித்தான். உங்களை எப்போதுமே எங்களுடன் வைத்துக் கொண்டிருக்கிறோம். மறக்கவே மாட்டோம்“ உணர்ச்சி அவன் முகத்தில் கொப்புளித்தது.

நன்றியுணர்வினாலும் ஒருவித பாசப் பிணைப்பினாலும் என் மனமும் உடம்பும் அதிர்ந்து கொண்டிருந்தன. கண்கலங்கி விட்டேன் நான்:
அவன் கண்களிலும் கலக்கம். மூன்றாவதாக இணைந்த புது உயிரின் கண்களிலும் கலக்கம். ஆகனில் மகிழ்ச்சி மட்டும் கலந்து இருந்தது.

உண்மை அன்புக்கு உருவமுமுண்டு என்று புரிந்தது எனக்கு.

சுpறிது கழித்து என் வீட்டு வாசலில் ஒரு குரல் ஒலித்தது.
„அண்ணன்! ஃபாதர் உங்களைத் தேடுகிறார்கள். உடனே வந்தால் நல்லது“

எனது கடிகாரத்தைப் பார்த்தேன். மணி மூன்று இருபது. சரியாக ஆறு மணிக்குத் திருச்சுரூப பவனி ஆரம்பமாகிவிடும். உடனே புறப்பட்டாக வேண்டியிருந்தது..

„ வீட்டிலிருந்தே ஓhவலத்தைப் பாருங்கள். இன்னும் இரண்டு மூன்று நாட்கள் தங்கித்தான் போகவேண்டும் „ என்று அன்புக் கட்டளையிட்டுவிட்டு அழைக்க வந்தவருடன் புறப்பட தயாரானேன்
மலர்ந்த இரு முகங்களும் குழந்தை மலர்களும் விடை தர விரைந்து திரும்பினேன் கோவிலுக்கு.

புனித அந்தோனியார் என்னைப் பார்த்து முறுவலித்துக் கொண்டிருந்தார்.

திருவிழா நிறைவடைந்து இருநாட்கள் அங்கிருந்த யாத்திரிகர் தங்குமிடத்தில் தங்கியிருந்த அவர்கள் புறப்பட்டார்கள்

விடைபெற்றுக் கொண்ட அன்று அந்தச் சிறிய குடும்பம் என்னுடன் ஆலயத்துக்கு வந்தது. எனது நண்பன் பழைய சம்பவங்கள் நடந்த இடங்களைக் காட்டித் தன் மனைவிக்கு விளக்கி வந்தான்.

நற்கருணை பீடத்தின் முன் அந்த தம்பதி முழந்தாட்படியிட்டு கண்மூடி செபித்தமை என்னைப் புல்லரிக்க வைத்தது. ஓரு பௌத்த குடும்பம் அணுவளவும் மனக்கலக்கமோ தயக்கமோ இன்றி இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு எழுந்து நிற்கையில் பேதங்களைப் பேணுவதால் எழுந்துவிடும் பாதகங்களை மனத்தெளிவு எப்படி தகர்த்துவிடும் என என் மனதுக்குள் ஒலிப்பதுபோலொரு....பிரமை..? உணர்வு...? பாடம்...? அப்பப்பா!

அன்பே தெய்வம் என்ற நம் முன்னோர்கள் சும்மா சொல்லவில்லை!

உண்மையும் நேர்மையும் உடனிருக்கு மென்றால்
எண்ணமும் செய்கையும் சத்தியம் சார்ந்து
திண்ணமும் திமிர்தரு உறுதியும் சேர்ந்து
விண்ணையும் தொட்டிடும் உந்துதல் சார்க்கும்

நல்லதும் கெட்டதும் சேர்பவர் உள்ளம்
நல்லதோ கெட்டதோ அதற்கேற்ப ஆகும்
நல்லவர் நன்மைக்குச் செய்சிறு சேவை
நல்விதை சில தரும் பெருநன்மை ஆகும்

மரங்களை வைத்துநாம் கனிகளைச் சொல்வோம்
மரங்களின் தரங்களைக் கனிவைத்துக் காண்போம்
மனிதரும் மனிதருள் தெய்வமும் எவ்வண்
புனிதமாய் உள்ளதென அனுபவம் காட்டும்.

மனம்வைத்து உண்மையாய் உதவியாய்ச் செய்தால்
தினம்ஒரு நல்விதை விதைப்பதாய் ஆகும்
மனம்ஒப்பிச் செய்திடும் சிறுநல்ல செயலும்
தினம்தினம் புண்ணியத் துளிசேர்த்தல் ஆகும்.

புதன், 11 டிசம்பர், 2019

ஒளவையார் இரும்புக்கடை வைத்திருந்தாரா?

தடங்களில் திரும்பினால்......01.

ஒளவையார் இரும்புக்கடை வைத்திருந்தாரா?

எனது தாத்தா எனக்கு அடிக்கடி அறிவுறுத்திய் ஒரு விடயம்: „சந்தேகத்தை மனதுக்குள் புதைத்து வைத்துவிடக்கூடாது. உடனடியாக அல்லது விடாப்பிடியாக அதற்கான விடையைத்தேடி கண்டு பிடித்து விட வேண்டும்.“
என்பதாகும்.

நான் மழலையர் பூங்கா சென்றவனல்லன். எனது தாத்தாதான் (நாங்கள் சீயான் என அழைப்போம்) எனக்குத் தமிழ் ஆங்கிலம் உட்பட இதர நல் வழிப்போதனைகளுக்கும் முன்னோடி.

மிகச் சிறிய வயது வகுப்பிலென்று ஞாபகம்.
எனது வகுப்பாசிரியர் மிக நல்ல மனிதர் ஆனால் எப்போதும் ஒரு பிரம்பைக் கையில் பிடித்துக் கொண்டே பாடம் நடத்தும் பழக்கமுள்ளவர்.

ஓரு சிறு பிழைக்கும் ஒரு சின்ன „சுளீர்“ கிடைக்கும் என்ற அச்சம் வகுப்பில் நிறைந்திருந்தது. மாணவர்களை ஒருவித பதட்டத்துடனேயே வைத்திருப்பதில் ஏனோ தமக்கு ஒருவித முக்கிய அக்கறை இருந்தது போலவே நடந்து வந்தாரவர்.

அவர் எங்கள் கண்ணுக்கு அப்போது ஒரு முரட்டு போலீஸ்காரர். அவ்வளவுதான். அன்பிலும் அச்சமே அதிக சக்தி வாய்ந்தது என அவர் நினைத்திருந்தாரோ தெரியாது.

ஆத்திச்சூடி கொன்றைவேந்தன் என்று மனப்பாடம் செய்யும் காலமது. எனக்கு அறம் செய விரும்பு என்ற வார்த்தைகளினர்த்தம் புரியிவில்லை. அவரோ அறம் செய்ய நாம் விரும்ப வேண்டும் என்று மட்டும் வலியுறுத்தி   பாடத்தை நடத்தினார்.

எனக்குத் தெரிந்ததெல்லாம் வீட்டில் இருந்த இரும்பு அறம் என்ற கருவிதான்.

இதென்னடா ஒளவை ஒரு புலவராம் பிறகு அவர் ஏன் அறம் செய்யச் சொன்னார்? எனது பக்கத்திலிருந்த என்போன்ற அறிவாளிகளையும் கலந்து பேசியதில் எல்லாருமே நானறிந்த அறத்தை மட்டுமே தெரிந்த பேரறிஞர்களாயிருந்தமையால் சந்தேகம் மிகவும் வலுத்தது.

எனது சீயானின் இதன் ஆரம்பத்தில் நானெழுதியபடி தந்திருந்த அறிவுரையின் அடிப்படையில் ஒளவையார் ஏதோ காரணத்தோடுதான்
சொல்லியிருப்பார். எனவே கேட்டுத் தெளிவு பெறுவோம் என அவர் மீண்டும் ஒருமுறை தமது திருவாயைத் திறந்து மொழியும் வரை காத்திருந்தேன்.

பல நிமிட இதர விளக்கங்களுக்கிடையில் ஒரு தடவை அவர் இதழ்கள் கதையோடு கதையாக அறம் செய விரும்பு என எதையோ விளக்க வந்தபோது நான் எழுந்து குறுக்கிட்டேன்.

„ஏன் சேர்! ஓளவையார் இரும்புக்கடை வைத்திருந்தாரா?“

„சுளீர்“ என் இடது தோள்படஇடையி;ல் வலி பற்றி எரிந்தது..

அவரைக் கேலி செய்ததாக நினைத்தாரோ தெரியாது. அடி சற்று பலமாகவே விழுந்தது.

„ஐயோ அம்மா!“

„நக்கலா? என்னடா கேள்வி இது?“

„சேர்  இரும்பு தேய்க்கிற அறம்தானே அவர் சொன்னது? அதை ஏன் நம்மைச் செய்யச் சொன்னார் ஒளவையார்?“

மிகவும் மெதுவாகத் தாழ்ந்த குரலில் நான் சொன்னேன். மறுபடியும் அடி விழுமோ எனப் பெரும் பயத்தில் சற்று அதிர்ந்தவாறே நின்றேன் நான்.

சுடுகுழம்பில் காலைவிட்ட பூனையாக அவர் சிலிர்ந்து விட்டார். ஓரு கணம் அவரே விழித்ததை உணர முடிந்தது. புpறகு சுதாரித்தவராக முழு வகுப்பையும் நோக்கிக்; கேட்டார்.

„அறம் என்றால் என்னவென்று உங்களில் ஒருவர் விளக்க முடியுமா?“

„கறல் அல்லது கோணல் தேய்க்கிற இரும்புக் கருவிதானே அது“ யாரோ ஒருவன் குரலெழுப்ப முழு அவையுமே ஆமொதித்தது.

அப்பாடா!

முதல்தடவையாக மாஸ்டர் மின்னதிர்ச்சியால் உறைந்தது தெரிந்தது.

„அதற்கு வேறு அர்த்தம் இருப்பது உங்களில் எவருக்குமே தெரியாதா?“

முழு வகுப்புமே இல்லையெனக் குரலாட்டித் தெரிவித்தது.

அவரது ஆசனம் ஒரு சிறிய மேடையில் அமைந்திருந்தது. நடை தளர்ந்தவராக அவர் அதிலேறித் தமது ஆசனத்தில் அமர்ந்தார்.

கைப்பிரம்பு மேசை மேல் முதல் தடவையாக தனியாகக் கிடக்க இரு கை விரல்களையும் கும்பிடு பாவனையில் நாடிக்குக் கீழ் வைத்தபடி சில விநாடிகள் மௌனமாக யோசித்தவாறே இருந்தார்.

அடுத்த நடவடிக்கை என்னவாயிருக்குமோ என்ற அச்சம் வகுப்பறையில் சூழ பயங்கலந்த முழு அமைதி படர்ந்துகொண்டிருந்தது.

பல விநாடிகள் கடந்த பின் அவரிடமிருந்து ஒரு குரல் வந்தது.

அறம் என்பது என்ன தெரியுமா? எவருக்கும் எந்த நிலையிலும் தீங்கோ பாதகமோ நிகழ்ந்துவிடாமல் நல் வகையில் மட்டுமே செய்கின்ற காரியமும் அதன் வழியில் நடப்பதும்தான் அறம் என்பது. புரிகிறதா?

இரண்டு மூன்று தடவைகள் தெளிவாக விளக்கினார்.எல்லார் முகங்களும் ஒரே குளத்துத் தாமரைகளாக விளக்கத்தை உணர்ந்து மலர்ந்தன. அவர் தொடர்ந்தார்.

„;இனிமேல் யாராவது கேள்வி கேட்க இருந்தால் கையை மட்டும் உயர்த்துங்கள். பிறகு ஒரு சந்தேகம் என்றுமட்டும் சொல்லுங்கள். சரியா? டக்கென்று ஆத்திரம் வரும்படி கேட்காதீர்கள்“

எனக்கு „பக்“கென்றிருந்தது. புரியவில்லை.

தமது சைகையால் அவர் என்னை அழைத்தது தெரிந்தது. சற்று நடுங்கியவாறே அவர்முன் சென்று நின்றேன். எனக்கு அடி விழுந்த இடது தோளை அவர் வருடிவிட்டார்.

„நீ கேள்வி கேட்டதை நான் தவறாகப் புரிந்து கொண்டேனடா. (ஆங்கிலத்தில); „ஐ ஆம் சாரி“ என்றார். உண்மையான கனிவைத் தமது கண்களிலும் பார்வையிலும் குழைத்து என்னை நிலைகுலைய வைத்து    விட்டாரவர்..

„என்னை மன்னித்துவிடுங்கள் மாஸ்டர்“
கண் கலங்க நான் மன்னிப்பு கேட்டேன். முழு வகுப்பும் உணர்ச்சி கொண்டு நின்றது.

இதில் பெரிய விடயம் என்னவென்றால் அவர் அன்றிலிருந்து பிரம்பைக் கொண்டு வருவதையே தவிர்த்துவிட்டிரு;தார்..

ஓரு கேள்வி-
அதைக் கேட்ட தவறான விதம்.
அது பிரதிபலிக்க வைத்த ஆத்திரம்.
அதை உணர்ந்ததும் உடனடியாகவே திருத்திக் கொண்ட ஆசிரியரின் உயர் தரம். அவர் அக்கணத்திலிருந்தே பின்பற்றிய அறம் அத்தனையும் இன்றைக்கும் எனக்கு..........

பசுமரத்தாணிகள். பசுமரத்தாணிகள்.

மனனம் செய்வது மறக்கா திருந்திடச்
     செய்யும் ஒருசிறு பயிற்சியல்ல
மனனம் செய்வது  மனத்தினுள் கருத்தினைக்
     கற்றுப் பதித்திடல் வேறு அல்ல
மனமும் கருத்தும் உணர்வதும் வளர்வதும்
     ஆசான் தரும்வழி வேறு அல்ல
மனமதன் உயர்நிலை சுயதரம் உணர்ந்ததில்
      அறவழி ஒழுகுதல் வேறு அல்ல.
    





செவ்வாய், 10 டிசம்பர், 2019

தடங்களில் திரும்பினால்...



கானலான  வாழ்வின் சில நினைவுகள்

வாழ்க்கையின் சின்னச்சின்ன சம்பவங்களுள்ளும் சில பல பெரிய அனுபவங்களும் ஆதங்கங்களும் அற்புதமான உணர்வுகளும் ஆற்றொண்ணாத் துயரங்களும்
அகம் நிறைக்கும் மகிழ்ச்சிகளும் ஆழ் இருட்டில் மின்மினிபோல் வந்துவந்து போகும் அனுபவம் முதுமை சூழ்கையில்தான் உணரக் கூடியது என அனுபவம் உரைப்பதை உணர்கிறேன்.

காலம் தனது சக்தியைக் காட்ட விழையும்போதுதான் வாழ்க்கையின் பாதையை அசைபோடும் ஆர்வம் வருகின்றது.

மொட்டையாகிவரும் மரத்தில் தொங்கும்; சில பச்சை இலைகளைப் போல அவ்வப்போது இதயத்துள் எழுந்து எழுந்து அசையும் பழமைத் துளிகளை மனம் நினைவுபடுத்திச் சிறிது சபலப்படுத்துவதையும் அவற்றுள் கவலையும் மகிழ்ச்சியும் பெருமையும் பெருமிதமும் நம்மீதே நமக்கு அனுதாபமும் மிதப்பதையும் அவற்றை இரசித்து அனுபவிப்பதென்பதுவும் அவ்வளவு எளிதல்லவென்றாலும் சற்று அசைபோட்டுப் பார்த்தால் ஓர் அற்புதமான அனுபவ உணர்வை அவற்றிலிருந்து நம்மால் உணர முடிகிறதென்பதைத் தவிர்க்க முடியாதிருப்பது தெரிகின்றது. புரிகின்றது.

காரணம் கடந்த காலம் சுமந்த அனுபவங்களே நமது அடிப்படை நிலைகளுக்கு வழியமைத்த படிக்கட்டுக்கள் என்பதும் அந்த வழித்தடங்களே நம்மைப் புடம் போட்டு வளர்த்தவை என்பதுவும்தான்.அல்லவா?

வெறும் சம்பவங்கள் ஆனால் வெறுமையில்லாதவையாக இருந்தவை. அதனால்தான் அவற்றின் நினைவுகள் சில சமயங்களில் மிக ஆழமாக மனதுள் நுழைந்து நம்மை நெருடுகின்றனவென்பேன்.

எனது கருத்தை இன்னும் எளிதாகச் சொல்வதற்காக ஒரு இளம் வயது சம்பவத்தை அதாவது அனுபவத்தை உதாரணமாக இப்போது சொல்கிறேன்.கொஞ்சம் கேளுங்கள்.

எனது இரண்டு மூன்று வயதிலிருந்தே நெருக்கமாக ஒரு நண்பனிருந்தான். நான் வீட்டிலில்லாத சமயங்களிலெல்லாம் அவன் வீட்டில்தானிருப்பேன். அவன் தனது பாட்டியாரோடும் தாத்தாவோடும் இருந்தான். அம்மா இல்லை அப்பா கேரளாவிலிருந்து
வருடத்துக்கு இருமுறையோ மும்முறையோ வந்துவிட்டுப் போய்விடுவார்.

தாத்தா முழு ஓய்விலிருக்க பாட்டி தினசரி மத்தியானம் சில மைல்களுக்கப்பாலிருந்த கடற்கரைக்குப் போய்விட்டு மாலையளவில் திரும்புவார். சொந்த வலை வைத்து இருந்ததால் தொழிலாளர்களை வைத்து தொழில் செய்து வந்தாரவர்.

மாலையில் வீடு திரும்பும்போது அவர் வரும் ரிக்ஷா மணியொலிக்கும் உடனே இதர நண்பர்களையெல்லாம் விரட்டிவிட்டு என்னை மட்டுமே வைத்துக் கொண்டு எதையாவது விளையாடுவதுபோல காட்டிக் கொள்வான்.

பாட்டி வருகையில் பலகாரங்கள் பல கூடவே வரும். நானும் அவனும் மட்டுமே! பிறகென்ன? ஓரே வேட்டைதான். என்னைத் தவிர வேறு எவரையும் வீட்டுக்குள் எடுக்கக்கூடாது என்பது பாட்டியின் கட்டளை. என்றாலும் வயதுக்கோளாறினால் இதரர்களை அழைத்துக் கொள்வதும் நேரம் பார்த்து வெளியேற்றிவிடுவதும் வழக்கம்.

இதற்குள் பாட்டி பல சமயங்களில் கையில் காசு கொடுத்துவிட்டுச் செல்வதுண்டு. அதனை வைதது இதர நண்பர்களை விட்டு பக்கத்து சைவ உணவகத்திலிருந்து உணவு வகையராக்களை வரவழைத்து „பார்ட்டி“ நடத்துவோம்.

இதற்காகவே பாட்டி புறப்பட்டு மறைந்ததும் இதரர் கூட்டம் தினசரி குவியும். அதில் ஏற்பு தவிhப்பு வட்டங்களுக்கேற்ப ஆள் தெரிவு நடத்தப்பட்டு மிகுதிப் பேர் வெளியேற்றப்படுவார்கள்.

வெளியில் விளையாடக் கூடும்போது மட்டும் அனைவரும் கூடிவிடுவோம். நானும் அவனும் மட்டும் எப்போதும் நகமும் விரலுமாகவே ஒட்டிப் பழகிவந்தோம்.

சற்று வளர்ந்த பருவத்தில் எங்களுக்குள்ளிருந்த ஒருவன் பொறாமையினால் அடிக்கடி என்னைப்பற்றித் தவறாக அவனிடம் எதையோ எவற்றையோ ஊதி வந்திருக்கிறான்.

அவற்றை முதலில் அலட்சியப்படுத்திய என் நண்பன் மனம் பொறுக்காமலோ என்னவோ என்னிடம் ஒரு நாள் நான் அவனைப்பற்றிச் சொன்னதாக அந்தப் பாவிப்பயல் சொன்னதைச் சொல்லி அது உண்மையா எனக் கேட்டான்.

வாழ்க்கையில் எந்த அனுபவமுமில்லாத வயது. கொதித்து எழுந்தேன் நான்.

.“நம்முடைய நல்ல நட்பைவிட தெருவில் நின்றவனை மேலாக நீ நினைத்ததால்தானே
அவன் பேச்சை நம்பினாய்? இன்றுடன் நான் நமது நட்பை முறித்துக் கொள்கிறேன். உனது நட்பு பொய்யானது. ஆகவே சாகுமட்டும் நீ என்னிடம் பேசவே கூடாது. நான் மாட்டேன். மாட்டவே மாட்டேன்.  இது சத்தியம்“

அவன் மன்னிப்பு கேட்டான். நான் வீட்டுக்கே ஓடிவிட்டேன். ஓரு திக்குச்சி பற்றிய நட்பு நாடா அன்றுடன் அத்துடன் அறுந்தே போனது. சில நாட்கள் கண்ணீpல் கரைந்தன. ஆனால் நட்பை மீட்டிட மனம் ஒப்ப முற்றாகவே மறுத்தது.

கையிலிருந்த உணவு கீழே சிதறிக் குப்பையான அனுபவமது. கொடுமை.

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் கடந்து ஒரு சவ அடக்கத்தில் பங்கேற்கவென கொழும்புக்கு சென்ற நான் என் மகளுடனும் மகனுடனும் சில உறவினர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென ஒரு கை எனது தோளில் அழுத்தியது.

திரும்பிய நான் அதிர்ந்தே போனேன். அந்த அரிய நணபன் அதே பழைய புன்னகையுடன் நின்றான். வயதில் உடல் உருவம் மாறலாம். மனதின்; உண்மை உருவம் மாறாதல்லவா?

என் தவறை உணர்ந்து நான் வெட்கி நின்றேன். என் பிள்ளைகளிடம் எங்கள் புனித நட்பையும் அது முறிந்த கதையையும் விளக்கியபோது அவன் எங்கள் நல்ல நட்பையும் பழைய இனிய அனுபவங்களையும் அவர்களிடம் மனம்விட்டுச் சொன்னான். அவன் குரலில் தளதளப்பு தெரிந்தது. நான் இளகிப்போன பாறையாக உருகிப் போனேன்.

நானும் அவ்வப்போது அவன் நினைவுகளில் கவலைப்பட்டதுண்டு. ஆனால மீண்டும் சேர நினைத்ததே இல்லை. ஆனால்...ஆனால்.. நான் தோற்றுவிட்டேன். நான் தோற்றுவிட்டேன். ஜெர்மனி திரும்பிய நான் மீண்டும் என் வாழ்க்கையில் அவனைக் காண்பேனோ என்பது சந்தேகந்தான். நள்ளிரவு நெருங்குகையில் கணனி முன்னமர்ந்து இதை எழுதுகையில் வழியும் சுடுநீரை யார் துடைப்பது?

இப்போது புரிகிறதா ஒரு சிறிய சம்பவத்தின் பெரிய தாக்கம்?

இவைபோன்ற நினைவுகளையே நான் உங்களுடன் பகிர விழைகிறேன்.

காலம் உதவுமா?

நம்புகிறேன் „ஆம்“ என்று.

பார்ப்போம்

எழிலன்








ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

கண்திறப்பாய்! எச்சரிக்கை! கண்திறப்பாய்!




பலவீனம் ஆனகூட்டம்கூடி வந்து நின்று
பலவீனன் என்று உன்னை அச்சுறுத் தலாம்
பலகாலம் பழகினவர் என்று சொல்லிக் கொண்டு
பலம்காட்டி உன்னுரிமை பறிக்க முயலலாம்

எதன்மீதும் ஆதாரம் உள்ளதென்ப தாய்
எதையெதையோ தனதேயென்றும் கூவிநிற்கலாம்
எதனையுமே புரிந்திடாமல் தயங்கிநின்றையேல்
பதைபதைக்க வைத்துஉன்னை வெளியில் துரத்தலாம்

உன்னை வைத்துன் கண்ணைக்குத்தும் தந்திரர்களை
உன்மனமே தெய்வர்போல எண்ண வைக்கலாம்
உன்மனதில் தெளிவுவரா விதத்தில் அனைத்திலும்
உன்இனத்தைப் பலவிதமாய்ப் பிரித்துச் சிதைக்கலாம்

கண்ணிருந்தும் இருளில்நின்று என்ன காணுவாய்?
கண்திறந்து ஒளிபிறக்க வழியைத் தேடுவாய்!
புண்படுத்திப் பிறரில்உன்னை உயர்த்தத ;தேடினால்
கண்ணிருந்தும் குருடனாகி அழிவில் சேருவாய்!

இறைவன் செய்ததாகமக்கள் நெஞ்சில் நாசத்தை
அறைந்துவைத்த அன்னியனே இன்றும் ஆள்கிறான்
பறையுமவன் வேதம்சொல்லும் பேதம் காணலேல்
உறையும்பனி எரியும்என்றும் நம்பச் செய்குவான்

ஏழைகளை எழும்பிடாமல் அடக்கும் பாதைகள்
கோழைகளாய் அவரைஆக்கி அடக்கச்செய்த தில்
ஆளைப்பார்த்து பதவி சேர்க்கும் கள்ளஞானிகள்
ஆளும்நிலை மாறவேண்டும் தெளிந்துநிமிருவாய்!

போட்டிபோட்டு வெல்லஇயலா போலியர்களே
போட்டி தவிர்த்து வெல்லபல சதியும் செய்குவார்
உழைத்திடாமல் பிறரின் உழைப்பில் வாழநினைப்பரே
உழைப்பர் கற்கத் தடைவிதித்தல் வேதம் என்னுவார்

பெரியகப்பல் மூழ்கலுக்குச் சிறிய ஓட்டைகள்
பெரியதேசம் வறுமைசூழ சிறியசாதிகள்
வறியவரை அடிமைகொண்டு வாழும்பாவிகள்
பெரியவராய்க் கருதினையோ நாடு மூழ்கிடும்








செவ்வாய், 21 மே, 2019

வலியுணரா சிந்தனை வலி வழியை விழைந்து நிற்கும்




எல்லாரும் வாழ வேண்டும். எல்லாரும் நன்றாக வாழ வேண்டும்
எல்லாரும் உயர வேண்டும் எல்லாரும் எந்நிலையிலும் உயர வேண்டும்
எல்லாரும் கற்க வேண்டும் எல்லாரும் சரியைச் சரியாகக் கற்க வேண்டும்
எல்லாரும் வாழ வேண்டும் எல்லாரும் பேதம்தவிர்த்திணைந்து வாழ வேண்டும்

என்றாலும் இதற்குள்ளே ஒன்று உண்டு என்பதை எல்லாரும் தெரிய வேண்டும்
ஒன்றென்று எதுவுமில்லை ஒன்றுக்கொன் றெதிராக உண்டென் றுணரவேண்டும்
நன்றென்கின்தீதுண்டு ஒளியென்கின்இருளுண்டு ஒருபாதைக் கிருதிசை தெரியவேண்டும்
நன்மக்கள் எங்கணும் நல்லவர்போலவே தீயரும் எங்கும்என தெரியவேண்டும்.

உள்ளத்துள் வஞ்சகமும் கள்ளமும் நிறைந்தவர் நாடாளக் கூடுகின்றார்
பள்ளத்துள் என்றைக்கும் எழையை வைப்பதை பக்குவம் ஆய்வகுத்தார்
கீழ்சாதி மேல்சாதி எனப்பிரிப் பவர்தம்மின் சுயபலம் கோர்க்க நிற்பார்
பாழ்செய்யும் மதவெறித் தீயூட்டி பயமூட்டிப் பணம்வீசிப் படிஉயர்வார்

நல்லவர் பயங்களும் ஒதுங்கிடும் குணங்களும் நாட்டுக்கு நாசம் சேர்க்கும்
வல்லவர் ஆகவே தீயவர் எழுந்திடின் நாடெங்கும் சாபம் சூழும்
எல்லாரும் எல்லாமும் பெறுவண்ணம் இல்லாமல் வறுமையில் தேசம் சாயும்
கல்லாராய் ஏழைகள் உருவாகும் வழிவந்து எல்லாமே நாசமாகும்

சனி, 18 மே, 2019

உயிர்த்தெழத் தயங்கிடும் நடைப்பிணங்கள்




எங்கணும் மக்களுள் அமைதிக்காய் வழிவிழை இதயங்கள் கோடிகோடி
எங்கணும் கண்ணீரும் செந்நீரும் வழிவண்ணம் அலைகிறார் ஓடிஓடி
தங்களை விட்டிடில் எங்கணும் எவருமே தலைதாங்க இல்லைபோலே
எங்களை அடக்கியே ஆள்கின்ற நிலைமாறஇயலாதா எனதவிப்பர் கோடிகோடி

எழும்பாத நிலைதனில் ஏழ்மையில் அமுக்குவார் எங்கணும் ஆளுகின்றார்
ஏழும்பிடும் பெரும்சக்தி ஆகவேவருகையில் பணம்வீசி அதைத் தடுப்பார்
சனநாய கம்என்று உரிமையைப் பணம்கொட்டிப் பறித்திடும் பாதகர்க்கே
சனங்களும் அறியாமல்புரியாமல் உடன்சென்று வெற்றிக்கு வழிசமைத்தார்

கற்றவர் பண்புள்ள கொள்கையைச் சொல்லிடும் உயர்ந்தரைத் தவிரவைத்து
கெட்டவர் பண்பற்ற காடையர் கூட்டமே மக்களை ஆளுமொரு சூழல் வந்தால்
சுற்றிலும் கொள்ளைசெய் காடையர் கூட்டமும் இவரோடு கூட்டுசெய்யும்
சுற்றுச்சூ ழல்கெட்டு விவசாயம் அழிவுற பிணங்களில் வீடுகட்டும்

கொள்கையைத் தெளிவாக தேர்வாக எழுதிப்பின் தேர்தலில் நிற்கச் செய்யும்
கொள்கைகள் என்பன எவையென்று சொல்தக்க அறிஞர்கள்அவை அமைத்து
அவர்கையில் எவரெவர் தேர்தலில் நிற்கலாம் எனும்தகுதி வரையறுத்தால்
சுவருறுதி வீட்டுக்கு அவசியம் என்பதாய் நாட்டுநலன் முன்னில் நிற்கும்

பிறன்ஏழுதும் வசனமதைப் பேசுபவன் பேச்சுதனைத் தன்னதுபோல் பகடங்காட்டி
பிறன் மனதுள் உயர்ந்தவனாய் பதிவதது பாமரர்கள் கருத்தின் போக்கு
புறம்அழைத்தே பரீட்சை வைத்துப் புட்டுப்புட்டுச் சரியாகத் தரமுணர்ந்தால்
அறம்காக்கும் அரசமையும் அரசியலின் நாகரீகம் அனைவர்க்கும் விரைந்து கி;ட்டும்.

கிழவர்கள் கூட்டம் அரசியல் வாழ்வில்; எங்கணும் இன்றைய பெருஞ்சாபம்
கிழவர்கள் ஓடவும் நாளையசந்ததி வாழவும் இளைஞர்கள் வரவே இனிலாபம்
பழம்மதம் பேசி வெறிகளை ஊட்டும் பலனற்ற அரசியற் கிழகுணங்கள்
இளந்தலை யினரின் கரம் படத்ததவறின் இவரும் சந்ததி நடைப்பிணங்கள்



ஞாயிறு, 12 மே, 2019

அன்னை தினம

       

அம்மா!

அன்னை உனை நினைத்து அனுதினமும் சில மணித்துளிகள்
கண்கலக்கிக் கரையுதம்மா!
அன்பின் நினைவுகளை அனுதினமும் உன்நினைவில்
அரிதரிதாய் உணர்வதனால்
என்முன் அனுதினமும் அயராது தொடருணர்வால்
கண்கலங்கல் தொடருதம்மா!
என்னதான் என்மனமும் ஆறுதலை விழைந்தாலும்
ஏக்கமதாய் முடியுதம்மா!

எவ்வளவோ உயர்ந்தாலும் எழுந்தெழுந்து நின்றாலும்
அவ்வளவும் உனக்குக் கீழ்தான்
அன்பதுவே இறைவனென அறிந்தாலும் அவனும்கூட
நீ சொல்லி அறிந்ததுதான்
கண்மூடும் நிலைநெருங்க கண்கலங்கி நீநோக்க
தாலாட்டு பாடினேன் நீஉறங்க
பாலூட்டி எனைவளர்;த்த தாயேநீ அதன்பின்பே
கண்மூடிப் பிரிந்தனை மறப்பதென்றோ?

கண்போல நற்பண்பைக் காக்கும்படி சொன்னவள்நீ
கண்மறைந்தும் நிலைக்குதது!
புண்படநீ உன்பேச்சில் வசைசேர்க்காய் எனச் சொன்னாய்
இன்றுமது என்னின் வழி
கோபமது கெட்டவனாய்க் காட்டுமதை விட்டுவிடு
கேட்கவில்லை பட்டுணர்ந்தேன்
அனுபவமே நல்லபள்ளி நீவிளித்தாய் நான்விழித்தேன்
அதுசரிதான் இன்றுணர்ந்தேன்

பன்னூறு உறவுகள்என் புடைசூழ இருந்தாலும்
உன்உறவுக் கீடுஇல்லை
பன்னாடு கடந்தாலும் பலவிதங்கள் அறிந்தாலும்
உன்னீடாய் எதுவுமில்லை
கண்ணீரால் கவிவடித்தே உன்னைநான் நினைவுறுதல்
என்வகையில் சுயநலந்தான்
என்இயக்கம் அத்தனையும் உன்னறிவின் உந்துதலால்
என்மனம்சொல் உண்மைஅதுதான்!




உன் அன்பால் உருகி நிற்கும் உன் மகன்

வெள்ளி, 8 மார்ச், 2019

நோக்கம் சரியெனில் சிறிதும் பெரிதேயாகும்!




உள்ளத்துள் துளிர்க்கின்ற உண்மையான எண்ணங்கள்
உள்ளத்துள் நன்மைக்காய் உருவாகும் உருவங்கள்
கள்ளமில் லாதுநம் மனம் காட்டும் பாதைகள்
நல்லவற் றின்விதை விதைப்பதாய்  அமைபவை

செல்வம்எனும் சொல்சொல்லும் செல்வோம்நாம் என்பதாய்!
தரித்திரம் சொல் பொருளோ  தரித்திரோம் என்பதாய்!
சிறுதுளியே ஆனாலும் மருந்தெனில் நன்மைபோல்
சிறுசெயலே ஆனாலும் நற்செயலேல் நன்மையே!

ஏதாகில் சிறியதாய் ஏழைக்கு உதவிடல்
ஏதாகில் இயன்றதாய் நற்செய்தி பகிர்ந்திடல்
ஏதாகில் நன்மையாய் எவருக்கும் செய்திடில்
ஏதாகில் புண்யமாய் எல்லார்க்கும் சேர்க்குமே!

பார்காண பேர்சேர்க்க புண்ணியம் செய்திடேல்!
யார்கண்ணும் காணாமல் உண்மையாய் நன்மையே
யார்எங்கு எவர்கட்கும் எளிமையாய்ச் செய்திடில்
பார்செய்த பரமனுக் கதுஇன்பம் செய்யுமே!

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

பசப்பு வார்த்தைகளைப் பாசமென நம்பாதே!




கரையான்கள் அயர்ந்திருந்தால் பாம்பின்புற்று  ஆகிவிடும்
தலைமைகள் பலம்குறைந்தால் அந்நியர்கள் பலம் பரவும்
முறையில்லா விதமமைந்தால் சோலைபுதர்க் காடாகும்
வரைவகுக்கும் அறம் சோர்ந்தால் அநநியர்வசம் நாடாகும்

கண்திறந்தே துயிலுபவர் பொதுமக்கள் எனஇருந்தால்
மண்பறிக்கும் தீயவர்கள் அடக்கியாள மனம்வகுப்பார்
மண்சாரா வெளிமகனை மரியாதைக் கிழுத்துநின்றால்
மண்பிடித்து நினையாண்டு உன்மண்ணைப் பறித்திடுவான்

பொதுமக்கள் சேவையினைப் பணம்பண்ணும் கயவரிடம்
பொதுமக்கள் தற்காலச் சிறுவுதவிக் கடகுவைத்தால்
பொதுமக்கள் எந்நாளும் பொறுக்குவராய் ஆகிடுவார்
பொதுமக்கட்: குரிதனைததும் அவர்பறித்தே உயர்ந்திடுவார்

ஆட்சியொன்றை அமைப்பதிலே அறிந்துணர்ந்து செயல்படலே
மாட்சிமைக்கு வழியமைக்கும் மக்களாட்சி மலரவைக்கும்
காட்சிவைத்துக் கவர்ச்சிசெய்தும் கலகம்செய்தும் வெல்லவரின்
வீழ்ச்சிக்கான வழியுனக்கு வருகுதென்று தெளிந்திருப்பாய்!

அள்ளியள்ளித் தருவதுபோல் அரசுபணம் தருவதுவும்
அள்ளியதைக் கொண்டதிகம் செய்கிறதாய் எண்ணுவதும்
நஞ்சுணரா துணவருந்தும் நமையிழக்கும் மூடத்தனம்
பஞ்சுபோன்ற பசப்புவாhத்தை பாசமன்று – கயமைத்தனம்

புதன், 13 பிப்ரவரி, 2019

கண்ணுறங்கில் கல் நசுக்கும்! கவனம்!





உலகைச் சூழ்கிற அத்தனையும் வருமொருகாலம் கற்பனைதான்!
உலகைச் சூழ்கிறஆபத்துக்கள்  காலத்தின்பக்கத்தில் கற்பனைதான்!
உலகைப் படைத்த சக்தியெதோ அதுவும் ஒருநாள் கற்பனைதான்!
உலகை அழிக்கும் மனிதகுல விஞ்ஞானம்அதும்; கற்பனைதான்!

கனவுஎன்னும் ஒன்றினையன்றி உற்றதுணைநமக் கெதுவுமில்லை
கனவுகள்கண்ட மனிதர்கள்வாழ்வே வரலாறாயின வேறுஇல்லை
கனவுகள்என்பன கற்பனைச்சிதறல்கள் படைக்கும் ஒருவித ஓவியம்தான்!
கனவுஎன்பது இல்;லையென்றே லிந்த வையகமே வெறும் பூச்சியம்தான்!

இறைவன் வீட்டில் இடம்பிடித்திடவே இருக்கும்வீட்டை இடிப்பவர்தாம்
இறைவன் பேரில் மதம் பலபிடித்தே ஒற்றுமைதடுத்திட மோதுகின்றார்
இறைவன் உண்டு இல்லை என்று கானலில் தாகம் தீர்;ப்பவரோ
இறைவன் பற்றிய பயன்இல் கதைகளால் காலம்கரைக்கும் கயவர்களோ?

மாபெரும் மந்தை சிறுவெடிக்கஞ்சிப் பதறிச் சிதறிடும் காட்சியதாய்
மாபெரும் உலகம் பாதகர் சொற்பதம் கேட்டே அஞ்சும் அவலமதாய்
மாபெரும் உண்மைகள் நீதிகள்கழுமரம்ஏறுதல் கண்டும் தளர்ந்திருந்தால்
மாபெரும் அழிவும் தீமையும் உலகின் நியதியாய் மாறிடும்! விழித்திருப்பாய்!

மனமே வாழ்வின் ஆணிவேர்!





மனதில் அமைதி வேண்டுமென்றால் தனிமைதனை நீ நாடு!
மனதில் அமைதி கெடுவதற்கும் தனிமைதனை நீ நாடு!
மனதில் நன்மைக் கிடம்கிடைக்கத் தனிமைதனை நீ நாடு!
மனதில் தீமைகூடவேண்டின் அதற்கும் தனிமையை நீ நாடு!

மனதில் தோன்றும் கோடிகளில் தேடிஒன்றை நீ நாடு!
மனதில் தோன்றும் அத்தனையிலும் தேர்ந்தெடுத்து நீ நாடு!
மனதில் தோன்றும் நல்லவையில் சிறந்ததையே நீ தேடு!
மனதில் பக்குவம் வந்ததன்பின் எந்நிலையிலும் அதை நாடு

மனதில் நலனாய் இல்லாமல் நல்லவன்போல்நீ நடிப்பவனா?
மனதில் தெளிந்த நல்லவன்தான் எனநினைஉணர்நதே இருப்பவனா?
மனதில் பிறரை மன்னிப்பனாய் மனிதம் பேணும் நல்லவனா?
மனதில் பிழையைப் படரவிடாது நேர்மை உறுதியைக் கொண்:டவனா?

மனதிpல் எதுவும் தோன்றுகையில்; சோர்வுடனே தளர்ந்திருந்தால்
மனதில் கறைகள் படிந்துன் நிழலும் அச்சம்தரல் நடந்திடலாம்
மனதில் உறுதி ;படிப்படியாய் வளர்க்கும் விதத்தில் முயன்றுவரின்
மனதில் தளர்நிலை மறைந்து ;ஒளிபடரல் உணர்ந்திடலாம்.