செவ்வாய், 10 டிசம்பர், 2019

தடங்களில் திரும்பினால்...



கானலான  வாழ்வின் சில நினைவுகள்

வாழ்க்கையின் சின்னச்சின்ன சம்பவங்களுள்ளும் சில பல பெரிய அனுபவங்களும் ஆதங்கங்களும் அற்புதமான உணர்வுகளும் ஆற்றொண்ணாத் துயரங்களும்
அகம் நிறைக்கும் மகிழ்ச்சிகளும் ஆழ் இருட்டில் மின்மினிபோல் வந்துவந்து போகும் அனுபவம் முதுமை சூழ்கையில்தான் உணரக் கூடியது என அனுபவம் உரைப்பதை உணர்கிறேன்.

காலம் தனது சக்தியைக் காட்ட விழையும்போதுதான் வாழ்க்கையின் பாதையை அசைபோடும் ஆர்வம் வருகின்றது.

மொட்டையாகிவரும் மரத்தில் தொங்கும்; சில பச்சை இலைகளைப் போல அவ்வப்போது இதயத்துள் எழுந்து எழுந்து அசையும் பழமைத் துளிகளை மனம் நினைவுபடுத்திச் சிறிது சபலப்படுத்துவதையும் அவற்றுள் கவலையும் மகிழ்ச்சியும் பெருமையும் பெருமிதமும் நம்மீதே நமக்கு அனுதாபமும் மிதப்பதையும் அவற்றை இரசித்து அனுபவிப்பதென்பதுவும் அவ்வளவு எளிதல்லவென்றாலும் சற்று அசைபோட்டுப் பார்த்தால் ஓர் அற்புதமான அனுபவ உணர்வை அவற்றிலிருந்து நம்மால் உணர முடிகிறதென்பதைத் தவிர்க்க முடியாதிருப்பது தெரிகின்றது. புரிகின்றது.

காரணம் கடந்த காலம் சுமந்த அனுபவங்களே நமது அடிப்படை நிலைகளுக்கு வழியமைத்த படிக்கட்டுக்கள் என்பதும் அந்த வழித்தடங்களே நம்மைப் புடம் போட்டு வளர்த்தவை என்பதுவும்தான்.அல்லவா?

வெறும் சம்பவங்கள் ஆனால் வெறுமையில்லாதவையாக இருந்தவை. அதனால்தான் அவற்றின் நினைவுகள் சில சமயங்களில் மிக ஆழமாக மனதுள் நுழைந்து நம்மை நெருடுகின்றனவென்பேன்.

எனது கருத்தை இன்னும் எளிதாகச் சொல்வதற்காக ஒரு இளம் வயது சம்பவத்தை அதாவது அனுபவத்தை உதாரணமாக இப்போது சொல்கிறேன்.கொஞ்சம் கேளுங்கள்.

எனது இரண்டு மூன்று வயதிலிருந்தே நெருக்கமாக ஒரு நண்பனிருந்தான். நான் வீட்டிலில்லாத சமயங்களிலெல்லாம் அவன் வீட்டில்தானிருப்பேன். அவன் தனது பாட்டியாரோடும் தாத்தாவோடும் இருந்தான். அம்மா இல்லை அப்பா கேரளாவிலிருந்து
வருடத்துக்கு இருமுறையோ மும்முறையோ வந்துவிட்டுப் போய்விடுவார்.

தாத்தா முழு ஓய்விலிருக்க பாட்டி தினசரி மத்தியானம் சில மைல்களுக்கப்பாலிருந்த கடற்கரைக்குப் போய்விட்டு மாலையளவில் திரும்புவார். சொந்த வலை வைத்து இருந்ததால் தொழிலாளர்களை வைத்து தொழில் செய்து வந்தாரவர்.

மாலையில் வீடு திரும்பும்போது அவர் வரும் ரிக்ஷா மணியொலிக்கும் உடனே இதர நண்பர்களையெல்லாம் விரட்டிவிட்டு என்னை மட்டுமே வைத்துக் கொண்டு எதையாவது விளையாடுவதுபோல காட்டிக் கொள்வான்.

பாட்டி வருகையில் பலகாரங்கள் பல கூடவே வரும். நானும் அவனும் மட்டுமே! பிறகென்ன? ஓரே வேட்டைதான். என்னைத் தவிர வேறு எவரையும் வீட்டுக்குள் எடுக்கக்கூடாது என்பது பாட்டியின் கட்டளை. என்றாலும் வயதுக்கோளாறினால் இதரர்களை அழைத்துக் கொள்வதும் நேரம் பார்த்து வெளியேற்றிவிடுவதும் வழக்கம்.

இதற்குள் பாட்டி பல சமயங்களில் கையில் காசு கொடுத்துவிட்டுச் செல்வதுண்டு. அதனை வைதது இதர நண்பர்களை விட்டு பக்கத்து சைவ உணவகத்திலிருந்து உணவு வகையராக்களை வரவழைத்து „பார்ட்டி“ நடத்துவோம்.

இதற்காகவே பாட்டி புறப்பட்டு மறைந்ததும் இதரர் கூட்டம் தினசரி குவியும். அதில் ஏற்பு தவிhப்பு வட்டங்களுக்கேற்ப ஆள் தெரிவு நடத்தப்பட்டு மிகுதிப் பேர் வெளியேற்றப்படுவார்கள்.

வெளியில் விளையாடக் கூடும்போது மட்டும் அனைவரும் கூடிவிடுவோம். நானும் அவனும் மட்டும் எப்போதும் நகமும் விரலுமாகவே ஒட்டிப் பழகிவந்தோம்.

சற்று வளர்ந்த பருவத்தில் எங்களுக்குள்ளிருந்த ஒருவன் பொறாமையினால் அடிக்கடி என்னைப்பற்றித் தவறாக அவனிடம் எதையோ எவற்றையோ ஊதி வந்திருக்கிறான்.

அவற்றை முதலில் அலட்சியப்படுத்திய என் நண்பன் மனம் பொறுக்காமலோ என்னவோ என்னிடம் ஒரு நாள் நான் அவனைப்பற்றிச் சொன்னதாக அந்தப் பாவிப்பயல் சொன்னதைச் சொல்லி அது உண்மையா எனக் கேட்டான்.

வாழ்க்கையில் எந்த அனுபவமுமில்லாத வயது. கொதித்து எழுந்தேன் நான்.

.“நம்முடைய நல்ல நட்பைவிட தெருவில் நின்றவனை மேலாக நீ நினைத்ததால்தானே
அவன் பேச்சை நம்பினாய்? இன்றுடன் நான் நமது நட்பை முறித்துக் கொள்கிறேன். உனது நட்பு பொய்யானது. ஆகவே சாகுமட்டும் நீ என்னிடம் பேசவே கூடாது. நான் மாட்டேன். மாட்டவே மாட்டேன்.  இது சத்தியம்“

அவன் மன்னிப்பு கேட்டான். நான் வீட்டுக்கே ஓடிவிட்டேன். ஓரு திக்குச்சி பற்றிய நட்பு நாடா அன்றுடன் அத்துடன் அறுந்தே போனது. சில நாட்கள் கண்ணீpல் கரைந்தன. ஆனால் நட்பை மீட்டிட மனம் ஒப்ப முற்றாகவே மறுத்தது.

கையிலிருந்த உணவு கீழே சிதறிக் குப்பையான அனுபவமது. கொடுமை.

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் கடந்து ஒரு சவ அடக்கத்தில் பங்கேற்கவென கொழும்புக்கு சென்ற நான் என் மகளுடனும் மகனுடனும் சில உறவினர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென ஒரு கை எனது தோளில் அழுத்தியது.

திரும்பிய நான் அதிர்ந்தே போனேன். அந்த அரிய நணபன் அதே பழைய புன்னகையுடன் நின்றான். வயதில் உடல் உருவம் மாறலாம். மனதின்; உண்மை உருவம் மாறாதல்லவா?

என் தவறை உணர்ந்து நான் வெட்கி நின்றேன். என் பிள்ளைகளிடம் எங்கள் புனித நட்பையும் அது முறிந்த கதையையும் விளக்கியபோது அவன் எங்கள் நல்ல நட்பையும் பழைய இனிய அனுபவங்களையும் அவர்களிடம் மனம்விட்டுச் சொன்னான். அவன் குரலில் தளதளப்பு தெரிந்தது. நான் இளகிப்போன பாறையாக உருகிப் போனேன்.

நானும் அவ்வப்போது அவன் நினைவுகளில் கவலைப்பட்டதுண்டு. ஆனால மீண்டும் சேர நினைத்ததே இல்லை. ஆனால்...ஆனால்.. நான் தோற்றுவிட்டேன். நான் தோற்றுவிட்டேன். ஜெர்மனி திரும்பிய நான் மீண்டும் என் வாழ்க்கையில் அவனைக் காண்பேனோ என்பது சந்தேகந்தான். நள்ளிரவு நெருங்குகையில் கணனி முன்னமர்ந்து இதை எழுதுகையில் வழியும் சுடுநீரை யார் துடைப்பது?

இப்போது புரிகிறதா ஒரு சிறிய சம்பவத்தின் பெரிய தாக்கம்?

இவைபோன்ற நினைவுகளையே நான் உங்களுடன் பகிர விழைகிறேன்.

காலம் உதவுமா?

நம்புகிறேன் „ஆம்“ என்று.

பார்ப்போம்

எழிலன்








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக