வியாழன், 19 டிசம்பர், 2019

தடங்களில் திரும்பினால....03.


„பஞ்ச்“ புலவர்


எழுத்துலக நண்பர் வட்டத்துக்குள்ளும் இரசிகர் வட்டத்திற்குள்ளும் சில வேடிக்கையான நிகழ்வுகள் நடப்பதுண்டு.

செருமனிக்குத் தமிழ்நாட்டிலிருந்து ஒரு கவிஞர் வந்திருந்தார்.ஓரு நண்பர் நானிருந்த இடத்திலிருந்து வெகு தொலைவிலிருந்த இன்னொரு நகரில் நடக்கவிருந்த ஒரு தமிழ் விழாவில் உரையாற்ற எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். கிட்டத்தட்ட நான்கு மணிநேரப் பயணம்.பணச் செலவும் நேரச் செலவும்தான். ஏன்றாலும் காலத்தின் அழுத்தமது.

புறப்பட ஒரு நாள் முன்னதாக ஒரு நண்பரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. „எழிலன் நீ;ங்கள் நாளைக்கு எத்தனை மணியளவில் புறப்படுகிறீர்கள்? “  எனக் கேட்டார். நான் சொன்னேன்.

„நாங்களிருக்கும் நகரைத் தாண்டித்தானே போகிறீர்கள்?“

அவரது பேச்சில் தந்திரம் மிதப்பது சட:;டெனப் புரிந்தது எனக்கு.
காரணம் இப்படி நபர்கள் சிலரை நான் ஏற்கனவே சந்தித்திருந்த அனுபவம்தான். சிறுவட்டர் சிந்தனைகள் அப்படித்தானிருக்கும்.

நீங்களும் எங்களுடன் வர நினைக்கிறீர்களா?“ என்றபோது ஒரு வகையான சிரிப்பொலி மறுபக்கத்தில் கேட்டது. அது ஒரு நரியின் ஊளை போலவே எனக்குக் கேட்டது. சுயநலக்கார பாவி! இடம் பார்த்து மடம் அமைப்பவர்!

நான் சுதாகரிப்பதற்குள் அடுத்த குண்டைப் போட்டார் அவர்.

„என்னுடன் புலவர் ஐயாவும் இன்னும் இருவரும் நிற்கிறார்கள். உங்கள் காரில் சேர்ந்தே போகலாமே என்று அவர்களும் நினைக்கிறார்கள். உங்கள்  விருப்பம் எப்படி?“

கேள்வியா இது!

கோபத்தில் எனது உடல் தகதகத்தது. ஆனாலும் நாகரீகம் கருதி அடக்கி வாசிக்க வேண்டிய கட்டாயம். நம்மில் எதிர்த்தடக்கும் தெம்பு குறைந்தால் இளிச்ச வாயர்களும் இரும்பு மனிதர்களாகி விடுகிறார்களே!

எங்கும் நாங்கள் இருவருமே இணைந்து போவதுதான் வழக்கம். அந்த முறை என் மனைவியை வீட்டில் தங்கியிருக்கச் சொல்லிவிட்டு நான் தனியாகப் புறப்பட்டேன். வேறு வழி அப்போதைக்கு எனக்குத் தெரியவில்லை.

அவர்களைச் சந்தித்தபோது புலவரும் அந்த நண்பரும் வந்து வரவேற்றனர். முன்பின் கண்டிராத மற்ற இருவரும் விறகுக் கட்டைகள் போல நின்றார்கள். ஓரு வணக்கம் சொல்லக்கூட தெரியாதா என்ன?

மரக்கட்டைகள்.

என் மனைவியை விட்டுவிட்டுத் தனியே வர வைத்ததில் உள்ளுக்குள் இருந்த என் கோபம் அப்படி.

கண்ட பாவத்துக்காக நான் அந்த இருவரையும் பார்த்து இலேசாக முறுவலித்தேன். அவ்வளவுதான் இரண்டிலொன்றின் திருவாய் பட்டென்று மலர்ந்தது.

„நாங்கள் ரெயினிலே போகலாம் எண்டுதானிருந்த நாங்கள். அண்ணன்தான்
ஏனடா ஓசிப் பயணம் கிடைக்கையிலே காசை வீணாக்கிறீங்கோ நான் பேசி சரிப்படுத்தி சும்மா கொண்டு போறன் என்றவர்“

கையிலே ஒரு கோடரி இல்லையே!

ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்று யாரோ சொல்லிக் கேட்ட ஞாபகம் வந்து  தலைக்குள் முட்டி மூளையைக் கலக்க முயல்வது புரிந்தது. மூளை குழம்பும் முன் வண்டியை எடுத்துவிடுவதே நல்லது.

„எல்லாரும் டக்கென்று ஏறிக் கொள்ளுங்கள். போய்ச் சேர நேரம் காணாது. வேகமாகப் போக வேண்டும்“

எனது வலப்புறமாக நரி நண்பரும் அவருக்குப் பின்புறமாகப் புலவரும் அவரருகில் அந்த வாயுடைந்த மேதாவிகளுமாக அமர புறப்பட்டோம்.

ஆறு ஏழு கிலோ மீற்றர் கடந்த பின் வெகுவேக நெடுவழிப் பாதைக்குள் நுழைந்தோம். வேகக் கட்டுப்பாடு தவிர்ந்த இடங்களில் கடும் வேகத்தில் போய்க் கொண்டிருந்தோம். 120ல் செல்ல வேண்டி வேகத்துக்குரிய பாதையில் வாகனங்களே இல்லை. ஆகவே இப்போது 170ல் பறந்து கொண்டிருந்தேன்.

திடீரென எனது நண்பர் ஏதோ குசுகுசுத்தார்.

„சத்தமாகச் சொல்லுங்கள். கவனம் பிசகாமல் ஓட்ட வேண்டும்.“

வேகத்தின் ஆபத்தை என் குரலை உயர்த்தி நானுணர்த்தினேன்.

„ஒரு விண்ணப்பமாம் புலவர் கேட்கிறார்“

எனக்கு அது தெளிவாகக் கேட்கவில்லை.
„ஆப்பமோ ஊத்தப்பமோ சத்தமாய் கேட்கச் சொல்லுங்கள்“

நண்பர் புலவரிடம் உரத்து கேட்கும்படி உரத்த குரலில் திரும்பிச் சொல்ல புலவர் உடனடியாகவே இயங்கினார்.

„ஐயா ஒரு விண்ணப்பமுங்க“

„என்னது? டக்குனு சொல்லுங்க“

„மோளணுமே!“

ஒரு சில விநாடிகள் அதிர்ச்சியில் ஸ்டியரிங்ஙை அங்குமிங்குமாகத் திருப்பியதில் வண்டி தடுமாறிவிட்டது.

சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.
„கொஞ்சம் பொறுங்கள் பத்து நிமிடத்தில் ஒரு பெட்ரோல் நிலையம் வரும். அங்கே நிறுத்துகிறேன் போகலாம்“

புலவர் கொதித்தார்.
„இம்மüpடியேட்டுங்க. .இல்லேன்னா ..“
;ஆங்கில வார்த்தை இப்படி முடிவுற்றது.
„ இங்கேயே இருந்துடுவேன்“

தீச்சுட்ட அதிhச்சியுடன் வேகமாகத் திருப்பி  பாதையோரத்தை நெருங்கினேன். நரி நண்பர் அறிவுறுத்தினார்.

„கப்புத்து லைற்றைப் போட்டு விடுங்கள்..கல்லது“ 

ஜெர்மனில் கப்புட் என்றொரு சொல்லுண்டு உடைவு களைப்பு இப்படி கருத்துக்களுள் வருமது. அதையே நமது செந்தமிழ்த் தேன் மொழியார் கப்புத்து எனத் தமிழாக்கி வாகனம் பழுதாகியிருப்பதாகக் காட்டிக் கொள்ள அந்த விளக்கைப் போட அறிவுறுத்தினார். ஜெர்மன் கப்புட்டுக்குத் தமிழ் கப்புத்து. அப்பப்பா!

சமாளித்து ஓர் ஓரமாக நிறுத்தினதுதான் தாமதம் பாதையோரச் சிறு நெடுமதிலை வேட்டியைத் தூக்கியவாறே தாண்டிக் குதித்தோடி அருகிலிருந்த மரத்தடியில் நின்று சுர்ர்ர்ர்ர் அடித்தார் கவிஞர்.

அவர் திரும்பு முன் அவரருகிலிருந்த இருவரும் „நாங்களும் போட்டு வாறோம்“ என்று பதிலுக்கும் காத்திராமல் இறங்கிப் போனார்கள்.

தலையை ஆட்டாமல் என்ன செய்ய?

புலவர் திரும்பியதும் நான் சிரித்துக் கொண்டே கேட்டேன்.
„ஏன்  அப்படிக் கேட்டீங்க?“ ஒரு மடையனுக்கு விளக்கமளிக்கும் விதத்தில் புலவர் விளக்கினார்.

„உங்களுக்குப் புரியலையா?“ அப்படீன்னா சிறுநீர் கழிக்கணுமேன்னு சொன்னேன்.“

நாளாந்த அனுபவசாலி நமக்கே புரியலையாம் என்ன சொல்லலாம்.....?

„சிறுநீர் கழித்தால் நீங்க சொன்னது சரி. ஆனா நீங்க கழித்தது பெரு நீரல்லவா! அஞ்சு நிமிடமாக நின்னிட்டேருந்தீங்களே அதெப்படி...?

ஒரு சிம்பன்சி குரங்கு பின்னால் சிரித்துக் கொண்டிருப்பது கண்ணாடியில் தெரிந்தது. தலைவிதியை நொந்தபடி எனது சிற்றுந்து நகர்ந்து கொண்டிருந்தது.

வருவாய்க்கு வருகின்ற வெளிநாட்டு வாய்கள்
தருகின்ற தமிழ்வார்த்தை சமயத்தில் காய்கள்
சிரமீது விழுகின்ற வருத்தத்தி னோடே
சிரித்திடா திருப்பதோ பெரும் பாடே!

பண்பான வார்த்தைகள் பகர்கின்ற வாயும்
திண்டாடும்  சூழ்நிலை திடீரென்று ஆகின்
மன்றாடும் நிலைநோக்கி எழுந்திடல்வந்தால்
பந்தாடும் தமிழ்ச்சொல்லை! கண்டேனே ஐயா!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக