ஞாயிறு, 5 ஜனவரி, 2020

இவன் தமிழனல்லன்...கொச்சியன்




1958ம் ஆண்டில் இலங்கைத் தீவில் தமிழர்க்கெதிரான சிங்கள வெறியாட்டம் தலைதூக்கிய காலகட்டம். இனப்பகைமையை வளர்க்கும் தீய பிரச்சாரங்களும் தீப்பிழம்புகளும் இணைந்து கொழும்பில் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தன. அதற்கிடையில்...

கொழும்பு மாநகரின்; ஒரு பகுதிpயில் சிங்கள தமிழ் ஈரின மக்களும் இசுலாமியர்களும் மிகமிக அன்பாகவும் ஒற்றுமையுடனும் ஒத்துழைப்புடன் நெருங்கி வாழ்ந்து வந்த அதிசயமும் நடக்கத்தான் செய்தது.

தமிழர் நிறைந்த  அந்தப் பகுதிக்குள் கலவர செய்திகள் பரவினவே தவிர தவறான எதுவுமே இடம் பெறாதிருந்தமை பலருக்கும் பெரிய ஆறதலாக இருந்த நேரமது.

இனவெறுப்புக்கு இடம் கொடுக்கா உயர்ந்த தரம் அங்குவாழ்ந்த மிகமிகச்
சாதாரண ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களிடமிருந்தமை சிறப்பு.

ஆனால் படித்த பட்டம் பெற்ற மற்றும் பணபலத்தால் மட்டுமே உயர்ந்திருந்த அரசியல்வாதிகளின் சுயநலங்களோ இனத்துவேச பற்றைக்குள் தீவைத்து சுகந்தேடிக் கொண்டிருந்தன.

கலவரம் துவங்குவதற்குச் சில மாதங்கள் முன்பிலிருந்து அமலனின் தந்தையாரின் தொழிலகமும் வேலைநிறுத்தத்தில் இதர பல நிறுனங்களுடன் சேர்ந்து கலந்து கொண்டிருந்ததால் பல குடும்பங்களின் பொருளாதார நிலை நலிவடையத் தொடங்கியிருந்த நேரமது.

இந்த நிலையில்தான் ஒருநாள்...

„பூூவம்மா! பூூவம்மா! நீங்க இருக்குதா?“

எதிர்த்த தோட்டத்தில் வசிக்கும் ரிச்சர்ட் ஐயாதான் அழைக்கிறார் எனத் தெரிந்த அமலனின் தாயார் அவனிடம் கதவைத் திறந்துவிடப் பணித்தார்.

உள்ளே வந்த ரிச்சர்ட் ஐயா மடமடவென்று தமக்கே தெரிந்த தனித்தமிழில் செய்தியை உதிர்த்து விட்டார்.

„பூவம்மா நம்மோடே பொம்பளை புள்ளைய வெளிக்கு வீசிப்போட்டது. ஆம்பள புள்ளே“

அமலனின் அம்மா பதறிவிட்டார். படுபாவி மனுஷா! குழந்தையை அவள் வீசினாள் என்று சிரித்துக் கொண்டே சொல்கிறாரே!

„எப்போ நடந்தது இது?“

„நேத்து சாமங் டைம் ஆஸ்பத்திரியிலேதாங் போட்டது!“

அம்மாவின் தலை ஒரு விநாடி கிரகம்போல சுற்றி நின்றது. புpறகு நிதானம்.

இவர் தனது மனைவிக்குக் குழந்தை பிறந்ததைத்தான் சொல்கிறார் என்று உணர்ந்தவர் விழுந்து விழுந்து சிரித்தார்.

அவரும் தனது பல்வரிசையைக் காட்டிக் கொண்டார். அவர்களின் குடும்ப நண்பரான சிங்களவர் அவர். தமது தாய் மொழியை விடவும் தமிழிலும் செய்தி பேச முயன்றமை அமலனையும் நன்கு இரசிக்க வைத்தது.

„ரிச்சர்ட் ஐயா உங்களுக்குப் பிள்ளை பிறந்திருக்குன்னு சொல்லுங்க“

„நாங் இல்லே நம்மட பொண்டாட்டிதாங் போட்டது“

இவருக்கு தமிழ் இலக்கண விளக்கம் கொடுத்து மூளையைக் கலக்கிக் கொள்ள அஞ்சியவறாக அமலனின் தாயார் அவரை அமரச் சொல்லி தேநீர் தயாரிக்க ஆரம்பித்தார்.

சிங்;களத்தில் ஐயா என்றால் அண்ணன் எனறர்த்தம். ரிச்சர்ட் ஐயா அமலனின் தந்தையுடன் வேலை செய்பவர்.

„தோமாஸ் எல்லாரோட இஸட்ரைக் எடம் போனதா?“

„ இங்கே வழமைபோல எல்லாரும் வந்தாங்க. உங்களை எங்கே என்று தேடினாங்க.பிறகு அவங்கள்ளாம் சேந்தே போனாங்க“

„நாங் விடிங்க விடிங்க அங்கே வார்ட்டிலேதாங் நின்னது. இன்னும் தூங்க கூட இல்லே. நாங் பிந்தி வந்து தோமாசுக்கு சொல்லறது“

„மொதல்ல குடும்பம் பிறகுதான் மத்ததெல்லாம்“ அம்மா சொல்ல ரிச்சர்ட் ஐயா முறுவலித்துக் கொண்டார்.

அமலன் தேநீரை அவர் கைகளில் நீட்டியபோது ரிச்சர்ட் ஐயா கேட்டார்:

„நாங் ஒன்னு கேக்கிறது. இந்த பொடியங் பொறந்தா என்ன குடுக்குறது?

ஓகோ! ஐயா நம்ம சம்பிரதாயத்தை; கேக்கிறார்....

அம்மா சொன்னார். „கல்கண்டுதான் கொடுப்பாங்க“

அமலனை அருகே அழைத்தவர் சொன்னார்; „மவன் இந்தா இந்த ரெண்டு ரூவாவுக்கு கலுகுண்டு வாங்கிட்டு வாறது. ஓடு!“

„கலுகுண்டு இல்ல கல்கண்டு“

„ஏதுசரி வாங:கிட்டு வாடா படுவா“ அன்பு தொனிக்க அவர் கத்த அமலன் கடைக்கு ஓடினான்.

அமலன் திரும்பி வந்ததும் கற்கண்டுப் பொட்டலத்தைத் திறந்து அள்ளி அமலனின் தாயாரிடம் கொடுத்து விட்டு மீதியைத் தம் வீட்டருகில் இருப்பவர்களுக்குப் பகிர்வதாகச் சொன்னவர் நன்றி சொல்லிப் புறப்பட்டார்.

             …...............................................................


அமலனின் அந்தச் சிறிய வீட்டின் வரவேற்பறையில் நீளமாகப் பாய்கள் விரிக்கப்பட்டு அவற்றில் அருகருகாக சுமார் எட்டுப் அல்லது ஒன்பது பேர் வரிசையாக சம்மணமிட்டு அமர்ந்திருந்தனர்.

எல்லார் முகங்களிலும் கவலையும் ஏக்கமும் ஒருவித தடுமாற்றமும் பூசப்பட்டு இருந்தாலும் ஏதோ கலகலப்பாகப் பேசி ஆக வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்குள் இருந்தது தெரிந்தது.

அவர்களில் ஒரேயொரு தமிழர் வீரய்யா. இந்திய வம்சாவழி வந்தவர். பஞ்சுபோல் நரைத்த தலையும் முறுக்கு மீசையுமாக கம்பீரமாக அவர் இருந்தாலும் பார்க்கும் எவரிடமும் நன்மதிப்பு பெறத்தக்க கண்ணியமான தோற்றம். மற்ற அனைவரும் சிங்களர்கள். அவரின் பெயரில் ஐயா என்பதும் சேர்ந்திருந்ததால் அவரைத் தனியாக மேலதிக ஐயா அதாவது அண்ணன் என்று இரட்டை ஐயா சேர்த்தழைப்பது அவசியமில்லை எனக் கருதிய அந்த சிங்கள நல்லிதயங்கள் அவரை வீரய்யா என்றே அழைத்தனவென்றாலும் அதில் அண்ணா என்ற மரியாதை இருந்தது.

அவர்களுக்கிடையில் இருந்த ரிச்சர்ட் ஐயா தானே குழுவின் தலைவர்போல பேச்சுக்களில் முதன்மை வகிப்பதும் ஏனையவர்கள் அமைதி காப்பதும் அவர் கேலியாக எதையாவது உதிர்;;த்தால் மற்ற அனைவருமே இணைந்து சப்தமாகச் சிரிப்பதும் அந்த வீட்டைக் கலகலப்பாக வைத்துக் கொண்டிருந்தமையை அமலன் ஓர் ஓரமாக நின்றவாறே இரசித்துக் கொண்டிருந்தான்.

அந்த வேளையில்....
விட்டின் உள்ளறைக்குள் அமலனின் பெற்றோருக்கிடையில் குசுகுசு ஒலியில் தர்க்கம் நடந்து கொண்டிருந்தது. அமலனின் சகோதரிகள் ஓர் ஓரமாக நின்று கொண்டிருந்தார்கள். அமலனின் தம்பி எங்கோ வெளியெ விளையாடப் போயிருந்தான்.

அமலனின் அப்பா அம்மாவிடம் நகையொன்றை அடகுவைக்க தேவை என்று கேட்பதும் அம்மா அதனைக் கவலையுடன் மறுப்பதும் பட்டும் படாமலும் கேட்கவே அவன் மெதுவாக அறையை நெருங்கியவாறே வெளியிலிருந்து உற்றுக் கேட்டான்.

„பூமா இந்த சனங்கள் நம்மை நம்பித்தான் இங்கே வருகிறார்கள். தினந்தோரும் நாம் கொடுக்கும் ரொட்டியும் டீயும்தான் அவர்களுக்கே முழுநாள் உணவு. அப்படி இருக்கிறது நிலைமை. நமது சேமிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நானெடுத்துக் கொடுத்து வந்த கடன்தான் அந்தக் குடும்பங்களும் பசியாற உதவி வந்தது. இப்போது அதுவும் கரைந்து வருகிறது. அதனால் சில நகைகளை அடகு வைத்து உதவினால் வேலை தொடங்கியதும் அவர்கள் திருப்பித்தர மீட்டுவிடலாம் பயப்படாதே!“

அம்மா விம்முவது கேட்டது. „மூத்த பிள்ளைக்காக சேர்த்த அந்த நகைகளில் கைவைத்தால் அவளது எதிர்காலமே பாதிப்படையக் கூடுமே! அதை யோசித்தீர்களா? நம்மிடம் இல்லையென்றால் அவர்கள் வேறு வழிகளில் தேடிக் கொள்ள மாட்டார்களா?“

„பூமா! அவர்களும் நம்மைப் போன்ற ஏழைகள்தாம் ஆனால் நேர்மையான ஏழைகள். அவர்களுக்கு உதவாவிட்டால் கடவுளே நம்மை மன்னிக்க மாட்டார்“

விவாதம் கடுமையாவதும் அதற்கு அடிப்படை உணவுக்கான சிக்கலை வந்திருப்பவர்களின் குடும்பங்கள் எதிh நோக்குவதும்தான் என்பது அமலனுக்குப் புரிந்தது.

சிறிது நேரம் ஆழ்ந்து யோசித்தவனுக்குள் „பளிச்“ சென்று ஓர் எண்ணம் தோன்றியது. முன்பின் யோசிக்காமலே தனது பெற்றோர் பேசிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைநதானவன்.

„டேய் வெளியே போ! பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்கும் இடத்தில்...“ அப்பா முடிக்கவில்லை.

„ பிரச்சினைக்குத் தீர்வு கிட்டுமென்றால் வந்து நுழைவதில் என்ன தவறு?“

அப்பாவின் முகத்தில் கோபம் தெரிந்தாலும் அம்மாவின் முகத்தில் ஏதோ ஏக்கமிகு எதிர்பார்ப்பு தெரிந்ததும் அமலனுக்கு தைரியம் தானாகவே வந்தது.

„அப்பா“ நான் சொல்கிறபடி செய்தால் அக்காவின் நகைகளை அடகு வைக்காமலே பிரச்சினையைத் தீர்க்கலாம் என்று நினைக்கிறேன்“

பெற்றோரின் முகங்களில் ஏதோவோர் ஒளி படர்வது அமலனுக்குப் புரிந்தது.

„ என்னடா சொல்கிறாய்?“ அப்பாதான் விளித்தார்.
அப்பாடா! அப்பா சரி வந்து விட்டார்.

அமைதியாகவும் தெளிவாகவும் மற்றவர்களுக்குக் கேட்டுவிடாதபடி மிக மிக மெல்லிய குரலில் தெளிவாகவும் அமலன் விளக்கினான்.

„அப்பா இந்தக் கடினமான நேரத்தில் நமது உணவுத் தேவைகளையெல்லாம் தீர்த்து வருவது உங்கள் நானா கடைக்காரர்தானே! அதே நானாவிடம் நீங்கள் சிபாரிசு செய்தால் அவரால் இவர்களுக்கும் கடனுக்குப் பொருள் கிடைக்க உதவலாமே!

அவருடனிருக்கும் உங்களின் நட்பு நன்றாக இருப்பதால் அவர் உதவ மாட்டாரென்று எப்படி நம்ப முடியும்? ஏதற்கும் முதலில் அவருடன் நீங்களே பேசிப் பார்த்தால் என்ன?

துள்ளி விட்டார் அப்பா. இருவர் முகங்களிலும் ரோசாப்பூ மலர்ச்சி.

„பூமா! நும்ம பயல் சொல்வது சரிவரும் என்றுதான் நினைக்கிறேன்.“ அமலனிடம் திரும்பி „நல்ல பிள்ளைடா நீ“ என்று தலையைத்தடவியவர் அடுத்த விநாடியே
முன்னறைக்குள் நுழைந்து எல்லாரையும் அரைமணி நேரம் அப்படியே இருக்கும் படியும் தாம் அவசரமாக வெளியே போக வேண்டுமென்றும் வந்ததும் சொல்வதாகவும் சொல்லிவிட்டு அமலனையும் அழைத்துக் கொண்டே நானா கடைக்குகு விரைந்தார்.

உசைன் நானா அப்பாவின் நெடுநாளைய நல்ல நண்பர். சொந்த சகோதரமாகவே ஒருவரையொருவர் நேசித்துப் பழகி வந்தார்கள். வேலை நிறுத்தம் தந்த பளு காரணமாக சில சிக்கல்கள் ஏற்பட்ட போது தானே முன்வந்து வேலைநிறுத்தம் முடியும் வரை கடனுக்கு பொருள் எடுத்துக் கொள்ளவும் பிறகு மெதுவாகக் கடனை அடைக்கவும் முன்மொழிந்த நல்ல மனிதரவர்.

அவரைச் சந்தித்ததும் அமலனின் அப்பா நிலைமையை மனந்திறந்து விளக்கியதுடன் அமலனின் முன்மொழிவைப் பற்றியும் சொல்லி அவரது கருத்தைக் கேட்டார்.

என்ன ஆச்சரியம்!
!           
„தோமஸ் சாச்சா! நீங்கள் சொன்னால் சரி. அத்தனை பேர் பெயரிலும் புஸ்தகம் போடுகிறேன். அவரவர் புத்தகத்துடன் வந்து வாஙகிச் செல்லட்டும். எனது கணக்கு அவர்களின் புத்தகத்தில் பதிந்திருக்கும். அதன்படி அவர்கள் கடனைக் கட்டி முடிக்கட்டும்.“

அப்பா மகிழ்ச்சியில் ஆடிப்போய்விட்டார். “அதுசரி எனக்கு நீங்கள் இன்னும் புத்தகம் போடவில்லையே! ஏன்?“


„மற்றவர்கள் கடன் திரும்பத் தராமல் போனால் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு புத்தகத்தை உங்களுக்குத் தருகிறேன். சரியா?“

இரு அன்புள்ளங்களும் இணைந்தே சிரித்துக் கொண்டன.

நானா அமலன் கைக்குள் சில இனிப்புக்களை வைக்கவும் உள்ளங்கையை மூடிக்கொண்டே அப்பாவுடன் விடைபெற்றான் அமலன். 

வுPடு திரும்பியதும் அமலனின் அப்பா திட்டத்தைப் பற்றி விளக்கினார். தமக்கேற்பட்ட பணநெருக்கடிதான் அதற்குக் காரணமென்றும் இனி பணத்தட்டுப்பாடு பற்றிய கவலையை விடும்படியும் தமது நண்பரிடம் அனைவரையும் அழைத்துச் சென்று ஆவன செய்வது பற்றியும் இதற்கு முக்கிய காரணம் தமது மகன் அமலனின் „ஐடியா“தான் என்றும் விபரித்தபோது அத்தனை குடும்பத் தலைவர்களும் நன்றியுணர்வுடன் அமலனைப் பார்க்க ரிச்சர்ட் ஐயா சொன்னார்:

„தோமாஸ் ஒன்ட ஆம்பள புள்ளக்கு கலுகுண்டு குடு! நாங் எங்கட புள்ளைக்கு குடுத்தது? அதுமாதிரி“

„அங்க்கிள் அது கல்கண்டு“ அமலன் சிரித்துக் கொண்டே திருத்தினான். அப்பா ரிச்சர்ட் ஐயா அம்மாவிடம் சொன்ன கதையை சிங்களத்தில் விளக்கவும் முழு அவையுமே நகைச்சுவை அலையால் கலகலத்தது.

பிறகு ஒருவர் ஒருவர் அமலனிடம் அவனுக்கு எஎன்ன பரிசு வேண்டும் எனக்கேட்டார். அமலன் சொன்னான். „தேன் டொபி“

அது  பத்து சதம். அப்போதைக்கு அது விலைகூடிய மிட்டாய். அதற்குள் தேன் அடக்கப்பட்டிருக்கும். அனைவரும் இணைந்து இரண்டு ரூபா சேர்த்து அமலனிடம் தர அவன் மகிழ்ச்சின் உச்சத்தில் திளைத்தான். பிறகு அதில் பங்கு கேட்ட சகோதரிகளுடான சிறிய சண்டை நடந்தமை வேறு கதை.

             ….................................................
                   
காலை ஏழு மணி.

கொழும்பு நகரின் நாலாபக்கங்களிலும் தமிழப் பொதுமக்கள் மீதும் அவர்களின் கடைகள் உடைமைகள் மீதும் கடுமையான தாக்குதல்களும் அவதூறுகளும்
பாதிப்புக்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தமை பற்றிய செய்திகள் பலவும் பலரையும் பதட்டப்பட வைத்துக் கொண்டிருக்க அமலனின் தந்தை தோமாஸ் நெற்றியில் இடக் கை ஆள்காட்டி விரல் அழுத்த ஆ;ழந்த சிந்தனையில் இருந்தார். அவர் முன்னாலிருந்த தேநீர் ஆறிக் கொண்டிருப்பதை அதன் ஆவிக் கீற்றுக்கள் அறிவித்துக் கொண்டிருந்தன.

ஆபத்தான செய்திகள் வதந்திகளாகப் பரவி வந்தமை பெரிய கொடுமை!

நாசஞ் செய்வதே நல்லெண்ணம் என்னுமளவுக்கு கறை நிறைந்த அரசியல் ஆட்டங்கள் நாட்டை அலைக்கழிப்பதை அலட்சியப்படுத்திவிட முடியாமை அவரது நிம்மதியை வெகுவாகக் குலக்கிக் கொண்டிருந்தது.

அந்தக் காலைநேரத்தில். நாட்டின் ஆபத்தான  சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாமலோ என்னவோ வேலைநிறுத்த ஆர்ப்;பாட்டத்துக்கு அழைப்பு அனுப்பப்பட்டிந்தது.

போக வேண்டிய சூழல் போக முடியாத சூழல் இரண்டும் மோதிக் கொண்டிருக்க தோமாஸ் தடுமாறிக் கொண்டிருந்தார்.

முன் கதவு தட்டுப்படும் சப்தம் கேட்டவர் எழுமுன்பே அமலன் திறந்து விட்டான். வுழமையாக வருபவர்கள்தாம். அனைவரும் ஒன்றாகவே வந்து நுழைந்தார்கள்.

ரோட்டிகள் சிறுமீன் குழம்புடன் பரிமாறப்பட அமலனும் அவனது அக்காவும் உதவிக் கொண்டிருக்கையில் ஒரு அன்பர் சிங்களத்தில் கேட்டார்.

„தோமஸ் கலவரம் பெரிதாகி வருவதாகத் தெரிகிறதே! இன்றைக்குப் போகாவிட்டால் என்ன?“

„இதற்கான திகதி முன்னமே குறிப்பிடப்பட்டாயிற்று. ஆகவே நாம் தவிர்த்தால் நமது கம்பெனியின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்பபடும் அதனால் பிரச்சினைகள் வரலாம்“ தோமாஸ்தான் சொன்னார். பேச்சில் அவரே அரைகுறை மனதோடேதான் பேசுகிறார் என்பது தெரிந்தது.

சிறிது நேரம் கலந்துரையாடல். புpறகு முடிவெடுக்க இயலா நிலையில் புது முடிவெடுத்தார்கள். தோமாஸ் ரிச்சர்ட் ஐயாவிடம் கட்சித் தலைமையகத்துக்குப் பக்கத்திலிருந்த பொதுத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி இன்று மட்டும் தவிர்க்க அனுமதி கேட்டுப் பார்க்கப் பணித்தார்.

ரிச்சர்ட் ஐயா டக்கென்று பதிலளித்தார். „நீயும் வந்தால்தான் நல்லது. நீதான் நமது குழுவுக்கு லீடர். அவர்கள் ஏதாவது கேட்க நான் தவறாக எதையாவது சொல்லிட்டால் நல்லதல்ல“

தொலைபேசி எடு;க்கச் சென்றவர்கள் இருவரும் ஒரு நல்ல செய்தியுடன் திரும்பி வந்தார்கள். முதலில் வந்து ஆhப்பாட்டத்தில் பங்கேற்கும்படியும் பிறகு பிரச்சினையான சூழல் வந்தால் தனியான கட்சி வாகனத்தில் வீடு திரும்ப வசதி செய்வதாகவும் தலைமையாகம் உறுதியளித்தது.

தோமாஸ் சிங்களத்தில் நன்கு பயிற்சி பெற்றவர் என்பதால் சலனமற்றவராக ஆயத்தமாகத் தொடங்கினார். ஆனால் வீரய்யா முகத்தில் கலவரம் தெரிந்தது.
சிங்களமே தெரியாத அவருக்கு ஆபத்து தலைமேல் தொங்குவதை அனைவருமே உணர்ந்திருந்தனர்.
ஆனால் பெரும்பான்மையாக தாங்களே இருப்பதால் எவராலும் ஆபத்து வராதபடிக்கு பார்த்துக் கொள்ளலாம் என அந்த சிங்கள உள்ளங்கள் முழுமையாக நம்பின.

„வீரய்யா நீங்க எங்க கூட வாறது. பயம் வாணாம். எங்கட உசுறு குடுத்துசரி ஒங்களை காப்பாத்துறது.“

வீரய்யா பயம் பரவிய முறுவலுடன் தோமாசைப் பார்த்தார். பூனையிடமிருந்து தப்பிக்க ஒரு சுண்டெலியிடம் உத்தரவாதம் கேட்கும் மற்றோர் எலியின் கதைதான்.

             ….............................................................

பதினொரு பேரடங்கிய வேலைநிறுத்தக்குழு வீரய்யாவை நடுவில் விட்டு சூழ சுற்றிப் படாந்தவாறு நகர்ந்து கொண்டிந்தது. நானா கடையைக் கடக்கும் பொது சிலர் அவரிடம் வெண்சுருட்டு(சிகரெட்) வெற்றிலை சிலர் சில இனிப்புக்கள் என வாங்கிக் கொண்டார்கள்.

தோமாஸ் நானாவிடம் மெதுவாகக் கேட்டார். „சாச்சா! உங்ககிட்டே எக்ஸ்ட்ரா தொப்பி ஒன்று இருக்கிறதா“

„எதுக்கு?“

„வீரய்யாவுக்குப் போட்டால் பாதுகாப்பாக இருக்கலாமே!“

நானா மறுக்காமல் ஒன்றைக் கொடுத்தார். „அடி கிடி விழுந்தா அல்லான்னுதான் கத்தணும். அம்மான்னு கத்திடக்கூடாதுன்னு சொல்லிவைங்க“ நகைச்சுவை போல எச்சரித்தார் நானா. நியாயங்தானே!

               ….........................................

கொள்ளுப்பிட்டி என்ற இடத்தில் கூட விருந்ததால் அனைவரும் குழுவாகவே வேகமாக நடந்து கொண்டிருந்தாhகள். வுழிநெடுக பாதைகளெல்லாம் வெறிச்சோடிக் கிடந்தனவே தவிர கலவரமாக எதுவும் தென்படாமை அனைவர்க்கும் ஆறுதலைத்தர அவர்கள் கால்பேஸ் என்ற பாராளுமன்றமிருந்த கடற்கரை வழியாக நடந்து கொண்டிருந்தார்கள்.

கடற்கரை எல்லையை நெருங்கிக் கொண்டிருந்தவர்கள் இன்னும் ஒரு மைலுக்குள் சேர வேண்டிய இடம் வந்துவிடும் என விரைகையில் ஓர் அதிர்ச்சி தரும் சம்பவம் நிகழ்ந்தது.

சுமார் ஏழுபேர் கொண்ட கும்பலொன்று ஆயுதஙகளுடன் அவர்களைச் சுற்றிவளைக்கவும் சிங்களவர்களான இவர்களின் குழுவுக்கே ஒருவிதமான பதட்டும் வந்துவிட்டது.
அந்தளவுக்கு பயந்தரும் கூச்சலும் கெட்ட வார்த்தைகளுமாக காடையர்கள் சூழவும் அனைவரும் இறுக்கமாக இணைந்து நின்றார்கள். வுந்தவர்கள் இவர்களுக்குள் தமிழர் யார் தமிழர் யார் எனக்கத்தினார்கள்.

அமலனின் தந்தை சிங்களத்தில் நன்கு பரிச்சயமுள்ளவர் என்றாலும் அந்தச் சூழ்நிலையில் செயலிழந்தே விட்டாரவர் எனலாம்.

அவர்களில ஒருவன் நடுவில் நின்றிருந்த வீரய்யாவை அடையாளம் கண்டு கொண்டான். மற்றவர்களைத் தள்ளிக் கொண்டு உள்ளே பாய்ந்த அவன் அவரைச் சட்டையைப்பிடித்து இழுத்து „இதோ ஒரு பறைத் தமிழன்! கொல்லுங்களடா!“ என்றவறே வீரய்யாவின் முகத்தில் குத்தவும் அவர் ஆவென்று அலறியவாறே விழுந்துவிட்டார்.

அவர்களின் அதிர்ச்சியான நிலையைச் சுதாகரிப்பதில் இந்தத் திடீர்ப் பதற்றத்தினால் தாமதம் ஏற்பட்டது. அத்துணை வேகமாகவும் ஆத்திரத்துடனும் வெறியுடனும் இயங்கிய கலகக் கும்பல் கொலை செய்வதில் அதிக இன்பம் காண்பது போல் தெரிந்தது.

ஓரு வெறியன் ஒரு பாரமான கல்லைத் தூக்கிக் கொண்டு ஓடிவர மற்றர்கள் „மறப்பாங்! மறப்பாங்! (கொலை செய்! கொலை செய்!) என்று கூச்சலிட அந்த அனைவரும் அதிர்ந்த வேளையில் ரிச்சர்ட் ஐயா தைரியமாக முன் வந்து கல்லோடு வந்தவனை வழி மறித்து நிறுத்தினார்.

„அறிவிக்கிறதாடா உனக்கு? நாங்களும் நல்ல பௌத்த சிங்கவர்கள்தான். உன்னை விட எனக்கு பௌத்தம் பற்றித் தெரியும். முதலில் சொல் ஏனடா அந்த மனிதன் தலைமேல் கல்லைப்போட்டுக் கொல்ல நினைக்கிறாய்?“

கல்லைக் கையிருந்து இறக்காமலே அவன் அதே வெறியுடன்
„அவன் ஒரு தமிழன் அவனைக் கொல்ல வேண்டாமென்று சொல்ல உனக்கு வெட்கமில்லையா?

ரிச்சர்ட் ஐயா திமிறி நின்றார். „அவர் தமிழரல்ல என்று கூடத் தெரியாத நீ எப்படி சரியாய் வேலை செய்வாய்?

கலகக்கும்பல் ஐயத்துடன் தயங்கியதும் கடுமையான தொனியில் ஆனால் பக்குவமான சிங்களத்தில் ரிச்சர்ட் ஐயா சொன்னார்:

„இவர் தமிழரல்ல கொச்சியன்! உங்களுக்குக் கொச்சியனகளைத் தெரியுமா?“
கூட்டம் விழித்தது.

„கொழுமபிலும் நீர்கொழும்பிலும் இரண்டு இ;டங்கள் கொச்சிக்கடை என்று இருப்பது தெரியுமா? உங்கள் தாத்தாவுக்கும் தாத்தா பிறந்த காலத்தில் கடைவைத்து சோறு சமைத்துக் கொடுத்து உதவின சனம்தான் கொச்சியன்கள்.


இவர்களின் மொழி என்ன என்று பக்குவமாகக் கேட்டான் ஒருவன்.

„அப்படிக் கேளு அது நியாயம். இவர்கள் பேசுவது இந்தி. திலிப்குமார் படம் பார். தெரியும்“

தாங்கள் பிழையாக அடித்துவிட்டதாகச் சொன்ன ஒருவன் அவனே அவரைத் தூக்கிவிட ,சரியான ஆட்களப்பா நீங்கள்!“ என்பதுபோல ஒருவித சிலேடையுடன் கையை அசைத்து விட்டு அவர்கள் பதற்றமில்லாதவர்கள் போல தொடர்ந்து நடந்தார்கள்.

கோஞ்ச தூரம் கடந்ததும் தோமாஸ் ரிச்சர்ட் ஐயாவிடம் சொன்னார்.

„; ரிச்சர்ட்! நுP இவ்வளவு தைரியமாகவும் சமயோசிதமாகவும் நடந்து கொண்டதால்தான் ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பினோம். ரொம்ப நன்றி.  சரி..கொச்சியான்கள் பேசுவது என்ன பாஷையென்று சொன்னாய்?“

தோமாஸ்! எனக்கே தெரியர்துதான் என்றாலும் டக்கென்று பதில் சொல்லாட்டி ஆபத்து வீரய்யாவுக்கு வருமே! இதுதான் இந்தி என்றேன். அதுசரி கொச்சியான் பாஷை என்னது தோமாஸ்?“

„அதுக்குப் பேர் மலையாளம்“

„மலைபாலம்?“

„மூக்கிலே குத்துவேன். மலையாளம்“  தோமாஸ் கேலியாக முறைக்க மற்ற அனைவருமே (வீரய்யா உட்பட) கலகலத்தவாறே நகர்ந்தார்கள்.

திரும்பிச் செல்ல வாகனம் கிடைக்கவிருப்பது பெரிய ஆறுதல் அனைவருக்கும்.

இனப் பகைமையால் ஊரெரிய இனஇணைவால் இனிமையுணர்வுடன் நகர்ந்தது
அச்சிறிய மக்கள் கூட்டம்.

இலங்கைத்தாய் இதயம் கனத்து அழுதிருப்பாள்!


                                         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக