ஞாயிறு, 5 ஜனவரி, 2020

தடங்களில் திரும்பினால்....04.



சத்திய அனுபவம்


ஓரு பொருளை உருவாக்குகையில் எப்படிப்பட்ட கவனம் அவசியமோ அதையொப்ப கவனமும் கரிசனையும் குழந்தைகளை வளர்ப்பதிலும் பெற்றவர்க்கு உண்மையாக இருக்க வேண்டும்.

எனது தாயார் எங்களிடம் பேசிக் கொண்டிருக்கும் வேளைகளில் அடிக்கடி அறத்தை அதாவது ஈகையைப் பற்றி குறிப்பிடுவது வழக்கம். எங்கள் சூழலில் ஏகப்பட்ட ஏழைகளே இருந்த காரணத்தினாலோ என்னவோ இரக்கத்தின் அவசியமும் ஈகையுணர்வின் முக்கியமும் அங்கிருந்த நல்ல பெரியவர்களிடம் நன்கு உணரப்பட்டு இருந்தமையை நானும் கவனித்ததுண்டு.

ஓரு நாள் எங்களிடம் „பகிர்ந்து உண்டால் பசியாறும்“  என எதற்காகவோ எங்கள் அம்மா சொல்ல நான் சிரித்தேன்.

„அம்மா! ஓரு இறாத்தல் பாணை (வெதுப்பி என்பது நல்ல தமிழ்ச் சொல் அப்போது தெரியாது) (டீசநயன) எட்டு பேருக்குப் பகிர்ந்தால் அத்தனை பேரும் பட்டினிதானே என்று ஆடினேன் நான். ஏனென்றால் அக்காவுக்கும் எனக்கும் பாணை வெட்டுகையில் நீளத்தை வைத்து சிறுசிறு சண்டைகள் அடிக்கடி வருவதுண்டு.

அம்மா சிரிக்காமல் அமைதியாக விளக்கினார்.“வயிறு நிரம்புவதல்ல திருப்தி. மனம் நிறைவதுதான் திருப்தி. அப்பாவைப் பாருங்கள் காலை ஏழு மணிக்கே புறப்பட்டுப் போகிறவர் மாலை இருட்டாகும்போதுதான் வருகிறார். ஏனென்று கேட்டால் ஓவர் டைம் வேலை பார்த்தேன் எனகிறார்.
பகலில் கூட சாப்பிட வராமல் அங்கேயே எதையோ தின்று சமாளிக்கிறார்.

ஆனால் மாதம் முடிய முழுச் சம்பளத்தையும் அப்படியே கொண்டு வந்து தந்து விடுகிறாரே! ஆது மட்டும் இல்லையென்றால் நாமென்ன செய்ய முடியும்? எப்படி வாழ முடியும்? நமக்காக இப்படிக் கடினப்படும் அப்பாவுக்கு இதனால் என்ன இலாபம்? அத்தனை துயரத்தையும் தாங்கினாலும் நாமெல்லாரும் மகிழ்ச்சியாக வாழுவதில் கிடைக்கும் மனதிருப்தியைத் தவிர அவருக்கு என்னதான் கிடைக்கிறது?“

அம்மாவின் கண்கள் கலங்குவது தெரிந்தது. சம்மட்டியால் அடிமேல் அடிபட்ட அதிர்ச்சி எனக்கு.

சீரிய கருத்துக்களின் ஆழம் தலைக்குள் இறங்கும்போது தானே அறிவில் தெளிவு வருகிறது!

அம்மா இன்னும் தெளிவு படுத்தினார்.

„நம்மிடமிருப்பதில மிச்சத்தை மற்றவர்க்குக் கொடுப்பதல்ல தர்மம்.
நல்லதைக் கொடுத்து பெறுபவரின் மகிழ்ச்சியில் மனம் நிறைந்தால் அதுவே தர்மம்-ஈகை. நாம் செய்யும் அத்தகைய நன்மைக்கான பலனை ஆண்டவன் நிச்சயம் நமக்குப் பலமடங்காகத் தருவான் என்பதை நீங்கள் எப்போதும் மறக்கவே கூடாது.

அம்மாவிடம் நான் கண்ட சிறப்பு என்னதென்றால்  கேள்வி கேட்க அனுமதிப்பதும் புரியும் வரை அமைதியாக விளக்கும் பண்பும்தான்.

பிழை செய்து அடிவாங்கிய வேளைகளில் சிறிது கழித்து ஏன் அடிவாங்க நேர்ந்தது என்பதை என்னிடமே விளக்கக் கேட்பார். கடினமாக இருக்கும் ஆனால் தவறை உணரவும் நியாயத்துக்குக் கட்டுப்படவும் வேண்டிய
மனப்பக்குவம் கிடைக்கும். அப்போது சிறிதான ஆனால் பெரியகொடை 
இது எனக்கு.

சில மாதங்கள் கழிந்திருக்கும். ஓருநாள்... பகலுணவு நேரம். வழக்கமாக எல்லாரின் தட்டுக்களிலும் உணவு பரிமாறப்பட்டு எங்களிலொருவர் இருவர் குசினியிலிருக்கும் அம்மாவிடமிருந்து வாங்கி வர பிறகு ஒன்றாயமர்ந்தே
வட்டமாக உணவருந்துவோம்.

அன்று எங்களையெல்லாம் சாப்பிடச் சொல்லியவர் தாம் சற்று தாமதமாகவே வருவதாகவும் தமக்காகக் காத்திராமல் சாப்பிட்டுவிடவும் பணித்தார்.

எதிர்த்துப் பேசும் வழக்கம் இல்லாதபடியால் அம்மா வர மிகத் தாமதித்ததும் எனது அக்கா மெதுவாகக் குசினிக்குள் எட்டிப் பார்க்கத்து விடச் சொன்னாள். நானும் கதவிடுக்கினால் அவதானித்தபோது அதிர்ச்சியாக இருந்தது எனக்கு.

அங்கே.. அம்மா ஒர் ஏழைத் தாத்தாவுக்குத் தமது தட்டிலிருந்த உணவை ஒரு தட்டில் வைத்து வழங்கிக் கொண்டிருக்க அவர் அருந்த...

எனக்குத் தலையைச் சுற்றியது. உடனே பின் நகர்ந்து எனது சகோதரிகள் மூவரிடமும் ஒரே தம்பியிடமும் கண்ட காட்சியைக் குசுகுசுத்தேன்.

உள்மேசையில் அப்பாவுக்கான உணவை ஒரு தட்டில் வைத்து இன்னொரு தட்டினால் மூடியிருந்தார்கள் அம்மா. அக்கா சொன்னபடி நான் அந்த மூடியிருந்த தட்டை எடுத்து வர ஆளாளுக்கு ஓரிரு பிடிகளாக புதுத்தட்டில்
உணவைச் சேர்த்து ஒரு தட்டுணவை தயார் செய்து விட்டுக் காத்திருந்தோம். பெரியவர் விடைபெறும் சப்தம் கேட்டது. நாங்கள் உண்ணாமல் காத்திருக்க அம்மா உள்நுழைந்தவர்கள் நாங்கள் உண்ணாமல் காத்திருப்பதைக் கண்டு சற்று அதிர்வது தெரிந்தது.

நாங்கள் நடந்ததை விளக்கினோம். அம்மா உடனே கண்கலங்கிவிட்டது. புpறகு சொன்னார்கள்:

„பார்த்த்தீர்களா குழந்தைகளே! நாம் செய்யும் தருமம் நமக்கு இருமடங்கான பலனை இறைவனிடமிருந்து பெற்றுத் தரும் என்று அடிக்கடி சொல்வேனே! அதை கடவுள் இப்படி என் பிள்ளைகளைக் கொண்டே இன்றைக்குச் செய்து காட்டிவிட்டாரே!“

எல்லாரும் கடவுளுக்கு நன்றி சொல்லி செபித்தோம்.
பிறகு?
பிறகென்ன அன்று எவருமே சாப்பிடவில்லை அத்தனை பேருக்கும் அம்மாதான் ஊட்டி விட்டார்கள்.

தட்டில் சோறாக இருந்த உணவு அம்மா கையினால் அமுதமாக சுவை தந்;த அந்த அனுபவத்தை இன்றும் கூட உணர முடிகிறதே!


நல்லதைச் செய்யுமெண்ணம் நமக்குள் வளர விட்டால்
நல்லதை மட்டுமெண்ணும் பக்குவம் வளர விட்டால்
நல்லரோ கெட்டரோ நம் நன்மையில் பயனடைந்தால்
நல்லதைச் செய் காரணம்தான் புண்ணியம் ஆகவரும்

நல்விதை விதைப்பவர்க்கே நல்லுணவு பின்புசேரும்
நல்லதைச் செய்பவர்க்கே நிம்மதி தொடர்ந்துசேரும்
நல்லதைச் செய்பவர்க்கும் தீமைகள் செய்வர்கூட
நல்லதை உணர்ந்து உள்ளால் உருகலும் நடத்தல்கூடும்









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக