வியாழன், 23 ஜனவரி, 2020

புதியதல்ல..புதுமையுமல்ல..

    பொறுக்கிப் பார்த்தால்.......

கருத்துக்கள் சிந்தனைக் கிணற்றினின்று – சொந்த
விருப்பத்தை மீறியும் உண்மை சொல்லும்.

விருப்பில் லையென்ற காரணத்தால் - நல்ல
கருத்தினை மறுத்திடல் நல்லதல்ல.

தருணத்திற் கேற்பவே உருவைமாற்றும் - பொய்சொல்
திருடனே உண்மையை எதிர்த்து நிற்பான்.

பிறப்பதும் இறப்பதும் ஒருமுறைதான் - அதனைச்
சிறப்பாக்கும் நேர்மையும் ஒழுக்கமும்தான்.

விரும்பிடும் அனைத்தையும் அனுபவித்தார் – என்றும்
திருப்தியாய் வாழ்ந்தவர் என்றுமுண்டா?

ஆழுக்காறு இதயத்தில் ஒட்டிக்கொண்டால் - என்றும்
பழுக்காத இலவதாய் இதயம் மாறும்.

எழுத்தாளன் என்றுநீ ஆகவேண்டின் - உண்மை
எழுத்ததன் ஆளுமை உணர வேண்டும்.

பணம் என்ற ஒன்றையே பெரிது என்பார் – அந்தப்
பணத்தையே பசித்திடில் புசிப்பராமோ?

கணப்பொழுதே காணுமுன்றன் வாழ்க்கை ஓய!  - அந்தக்
கணப்பொழுதுள் ஒருநன்மைசெய்து பாரேன்!

துன்பத்தைக் கண்டுநீ துவண்டுவிட்டால் - என்றும்
இன்பத்தில் நிமிர்ந்துநீ நிற்க மாட்டாய்.

கண்ணியம் தெரியாத மக்களுக்கு – எந்தப்
புண்ணியம் சொல்லினும் புரிந்திடாது.

நல்லதை அள்ளிநாம் கொட்டினாலும் - என்றும்
நல்லவர்க் கில்லையேல் தீமை கிட்டும்

கறி ஆக்க உதவிற்றே என்பதற்காய் - நீயும்
எரிகின்ற பிழம்பினை விழுங்குவாயோ?

எல்லாரும் நல்லவர் என்று கொண்டால் - கொடிய
வல்லூறும் கிளியென்று கூறிக் கொள்ளும்

„கல்லிலே கடவுளைக் காணல் நன்று“  - அர்த்தம்
கல்லையே கடவுளாய்க் காணல் அன்று!







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக