வியாழன், 23 ஜனவரி, 2020

புதியதல்ல...புதுமையுமல்ல...

உங்களுடன் சில நொடிகள்...


பேச்சில் தெளிவும் கருத்தில் ஆழமும் உரையில் இனிமையுமாக இருவர்களுக்கிடையில் உரையாடல் நடைபெற்று அது முடிவுற்ற பின் அடிக்கடி அதுபற்றி நினைவு கொள்கையில்; மனம் நிறைதல் ஒரு பேறு என நினைத்தால் அதில் தவறில்லை என்பது எனது எளிய கருத்து.

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு மலேசியாவிலிருந்து செருமனிக்கு வந்திருந்த பேராசிரியர் இர.ந.வீpரப்பன் ஐயா அவர்களை நான் சந்தித்துப்
பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவர் சில நாட்கள் எனதில்லத்தில் தங்கியிருந்தபோது எங்களுக்கிடையில் நடந்த கலந்துரையாடலகளால் அவரல்ல, நான்தான் அதிகம் பலனடைந்தேன் எனலாம்.

அந்த அறிவுச் சமுத்திரத்தின் பேச்சுக்களில் வழிந்த மனிதாபிமான உணர்வுகள், தமிழனத்தின் மேல் இருந்த ஆழந்த அக்கறையின் வெளிப்பாடுகள், உலக சுற்றுலாக்களால் அவரடைந்த அனுபவங்களின் பாடங்கள் இப்படிப் பலவிதங்களிலும் அவரை மிக மென்மையான ஆனால் வலுமிக்க தங்கக் கம்பியாக நானுணர்ந்து வியந்தேன்.

பேச்சுக்கிடையில் அவர் அடிக்கடி ஒன்றைச் சொன்னார். „எழிலன் நீங்கள் பேசுவதை எல்லாம் எழுத்தில் வடியுங்கள்“ என்றார் அவர். நான் ஏற்கனவே பல ஏடுகளில் எழுதிவருவதையும் பேச்சுக்களில் பங்கேற்பதையும் அவர் அறிந்திருந்தாலும் பேச்சுக்களின் போது நம்மை அறியாமலே நாமுதிர்க்கக் கூடிய நல்ல கருத்துக்களையும் எண்ணஙகளையும் நூல் வடிவில் பதிப்பதையே அவர் அப்படி அறிவுறுத்தினார்.

நான் சலனமின்றி தயங்குவதை உணர்ந்த அவர் என்னை வற்புறுத்தினார்.
அதன் வெளிப்பாடாக நானெழுதிய முதல் நூல்தான் இந்தப் புதியதல்ல...புதுமையுமல்ல..

இது வெளிவந்த ஆண்டு சென்னை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா என்ற
வங்கி நடத்திய சிறந்த நூல்களுக்கான போட்டியில் இதனை, இந்நூலைப் பதிப்பித்து எனக்காக வெளியிட்ட இளம்பிறை பதிப்பக உரிமையாளரும் முன்னாள் இளம்பிறை பத்திரிகையாசிரியருமான எழுத்தாளர் எனது பதிப்புமிகு இளம்பிறை ரகுமான் அவர்களே அனுப்பி பங்கெடுக்க வைத்திருந்தார்.

அங்கே இதற்கு இரண்டாம் பரிசுக்கான தெரிவு கிடைத்தது. நானும் நேரில் பங்கெடுத்தேன். இந்த நூல் பல நல்ல இதயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தினதால் மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் இதை அறிமுகஞ் செய்து வரவேற்றது தமிழ் கூரு நல்லுலகம் என அறிந்து ஆறுதலாக இருந்தது.

இப்போது என் கைவசம் ஒரேயொரு பிரதிதானிருக்கின்றது. ஆகவே உடல் மிகத் தளருமுன் எனது பதிவேடான „எழில்தமிழ்“ வளவில் இதைப் பதிந்திட விரும்புகிறேன்.
என்னை இணையத்தளத்தில் பலரும் அறிய உதவிசெய்த நான் நேருக்கு நேர் ஒரே முறைதான் சந்தித்தவரும் அமரராகி விட்டவருமாகிய எனது இதயம் கொண்ட அமரர் தம்பி இராஜன் முருகவேல் (சோழியான்) அவர்களுக்கும் இதனை இத்தடவை நான் அர்ப்பணிக்கிறேன். அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் கூட இயலாதபடிக்கு நான் உடல்நலம் பாதிக்கப் பட்டிருந்த வேளையில் அவர் மறைந்தமை எனது துரதிட்டம்தான்.

நாட்கணக்கில் மணிக்கணக்கில் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்த எங்களால் ஒருமுறையாவது நேரில் சந்திக்க இயலாதபடிக்கு இயங்கை தடுத்துவிட்ட கொடுமை தரும் மனவலி மிகவும் வேதனையைத் தருகின்றது.

ஆக்கங்களை மட்டுமே இத்துடன் இதில் பதிகிறேன்.

எழிலன்




       சமர்ப்பணம்


எனது இந்த நூலை......

சத்தியத்தை நேசித்தவர்க்கும் நேசிப்பவர்க்கும்
நீதியை மதித்தவர்க்கும் மதிப்பவர்க்கும்
உண்மைக்காய் உழைத்தவர்க்கும் உழைப்பவர்க்கும்
அன்பையே தெய்வமாய் ஏற்றவர்க்கும் ஏற்பவர்க்கும்
மற்றவர்க்காய் வாழ்ந்தவர்க்கும் வாழ்பவர்க்கும்
சுதந்திரத்தை விழைந்தவர்க்கும் விழைபவர்க்கும்
மனிதத்துவத்தை மதித்தவர்க்கும் மதிப்பவர்க்கும்
சிந்தித்துச் செயலாற்ற முனைந்தவர்க்கும் முனைபவர்க்கும்
நடுநிலை பிறழாது வாழ்ந்தவர்க்கும் வாழ்பவர்க்கும்
தமிழன்னைக்குண்மையாய்ப் பணிபுரிந்தார் புரிவார்க்கும்
வாழவைக்க வழிதேடும் உத்தமர்கள் அனைவர்க்கும்
எனதுள்ளத்துள் தமிழுணர்வை ஊட்டிட்ட
என் தாய்க்கும் காணிக்கையாகச் சமர்ப்பிக்கும் அதே வேளையில்
அமரர் ஐயா இர.ந.வீரப்பனார் அவர்களையும்
என்னினிய நண்பர்  அமரர் இராஜன் முருகவேல் (சோழியான்)
இணைத்துக் கொள்கிறேன்.

எழிலன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக