வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

புதியதல்ல...புதுமையுமல்ல...

சிந்தனையும் நமது பங்களிப்பும்

நமது மனங்களுக்குள் சிக்கியுள்ள சிந்தனைக்குரிய உண்மைகளை உணர்ந்து கொள்ள வேண்டும்.

நமது சிந்தனையைச் சோர்வடைய விட்டுவிடக்கூடாது. உடல் சோர்ந்தால் எழுந்துவிடலாம். உளம் சோர்ந்தால்?

படித்தவர்களெல்லாம் சிந்திக்கத் தக்கவர்களென்றில்லை.மாபெரும் மேதைகளில் பலர் பள்ளிக்கூட  நிழலைக்கூட மிதிக்காதவர்களாக இருந்திருக்கிறார்கள்.

ஆகவே...நீங்கள் ஒவ்வொருவருமே மேதைகள்தாம்  அறிஞர்கள்தாம்.
ஆனால் தீட்டப்படாத வைரங்களாகப் பொலிவற்றிருப்பதால் அதாவது உங்களை நீங்களே உணர்ந்துஇ தெளிவு பெறாதிருப்பதால்தான் சாதாரணமானவர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.அந்த நிலை மாற வேண்டும் நீங்களதை மாற்ற வேண்டும்.


                  …............................................

எப்படியும் வாழலாம் என்பவர்கள் காக்கைக் கொப்பானவர்கள்.
இப்படியும் வாழலாம் என்பவர்கள் பாம்பைப் போன்றவர்கள்.
இப்படித்தான் வாழ வேண்டும் என்பவர்களே மனிதர்கள். வாழ்க்கையின் இலக்கணமே இவர்களால்தான் எழுதப்படுகிறது.

மங்கிய மனங்களைத் துலக்கிடுங்கள். அதைச் செய்ய விடாமல் தங்கள் சுயநலத்திற்காகப் பிழைவழி நடத்தும் சமுதாய சந்தர்ப்பவாத சர்ப்பங்களை அடையாளங்கண்டு தப்பி நின்று தனித்துவம் காத்து சிறந்து உயர்ந்து வாழுங்கள்.

                 ….........................................

சிந்தித்தல் என்பது ஓர் அரிய கலை. அதனைச் சரியாகச் செய்யத் தெரிந்து கொள்வதோ அதைவிடப் பெரிய கலை.

அதனை நாம் சரியாகப் பழகிக் கொண்டால்தான் நம் கண்முன்னே நடமாடும் போலித்தனத்தின் பிரதிபலிப்புக்களை நம்மால் சரியாக அடையாளம் கண்டு கொள்ள உதவியாக இருக்கும்.

                  …......................................

குயில் வேடம் போடும் காகங்கள் -  மயில் நடை போடும் வாத்துக்கள்- சீவகாருண்யம் பற்றிப் போதிக்கும் சிறுத்தைகள் - பொதுநலப் பூச்சுடன் நடமாடி வரும் சுயநலம்- பாசத்தைப் பணத்திற்காகவும் வீண் சொகுசிற்காகவும் விற்றுவைக்கும் பண்பின்மை இவை மனித உருவில் நம்மைச் சுற்றி வளைத்து நமது வாழ்க்கையின் நிம்மதியையும் அமைதியையும் கலைத்து- சமுதாயத்தையே ஒருவித கொந்தளிப்பில் நிரந்தரமாக வைத்திருக்கின்றன.

அவற்றை நாம் நமது சுயசிந்தனையால் சரியாக அடையாளம் கண்டுவிட்டால் மட்டுமே நமது தகுதியை நாம் உணர்ந்து- சமுதாயத்திற்கு நமது பங்களிப்பை ஏற்ற விதத்தில் நல்க முடியும். 
                  …..........................................
                  
தன்னைப் படித்தவனாக மற்றவர்கள் முன் காட்டிக் கொள்வதற்காகப் பட்டங்களைச் சுமந்து திரிபவனும் சுமக்க அலைபவனும் பயன்தரத்தக்க மரங்களல்லர்.சமுதாயம் காய்கையிலே நிழல் தரப் பயன்படாமல் சமுதாயக் குடைக்கு உள்ளே சுகம் தேடும் சந்தர்ப்பவாதிகள் அவர்கள்.     


சனி, 1 பிப்ரவரி, 2020

புதியதல்ல...புதுமையுமல்ல...,

சூழ்நிலையின் கைதிகள்....

நம்மைச் சுற்றிலும் ஆட்கொண்டுள்ள சூழ்நிலையானது, நம் மன வளர்ச்சியிலும் அறிவு வளர்ச்சியிலும் பெருமளவு பங்கெடுத்து விடுகின்றது.

நமது சிந்தனை ஆழமாக இருக்காவிடில் சூழ்நிலையானது நமது தனித்துவத்தின் உரிமையைப் பறித்துவிடுவதைத் தவிர்க்கவே முடியாது.

சரியாகச் சிந்திக்கும் ஆற்றலில்லாத மனிதன், சூழ்நிலையின் கைதியாகிவிடுகிறான்.

அவனது பக்குவமற்ற மனநிலையானது அவனை „சூழ்நிலைக்கேற்ப ஆடாவிட்டால் வாழ்வது இயலாது“ என்ற பிழையான முடிவிற்கு வர வைத்து விடுகின்றது.

ஆதனால் அவன் சூழ்நிலையை அனுசரித்துப் போவதாக நினைத்துக் கொண்டு, பிழையான வழிமுறைகளைப் பின்பற்றுவதைச் சரி என்று எண்ணி விடுகிறான்.

இந்தப் பக்குவமற்ற நிலைப்பாடு உண்மையில் அனுதாபத்திற்குரியது.

நல்ல மக்கள் பலரும் வறுமையின் கொடுமை தாளாமல் அல்லது தமது எதிர்காலம் தகர்ந்து போய்விடும் என்ற நிலையில் பிழை செய்தாவது தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயல்வதை நாம் அவதானிக்க வேண்டும்.

சமுதாயம் அவர்களைக் காப்பாற்ற வேண்டும். ஓவ்வொரு தனிமனிதனும் தனது அயலானின் வீழ்ச்சியைத் தடுக்க வைராக்கியம் கொண்டால் ஒரு சமுதாயத்தின் வீழ்ச்சியை நிச்சயம் தடுத்துவிட முடியும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

                   …..............................

தன்னம்பிக்கை இல்லாதவன் தன்னிலும் மற்றவன் உயர்கையில் தன்னால் அது சாத்தியம் இல்லை என்ற உள்மன உந்துதல் காரணமாக ஒரு வித எரிச்சலுணர்வைப் பெறுகிறான்.

அதன் அரிப்பானது கூடக்கூட அது அழுக்காறாக ஆழமாக வேர்விடத் தொடங்குகிறது.

அதை விளங்கிக் கொள்ளாமல் அவனது சுயசிந்தனைத் திறனின்மை அவனை அதில் ஊற விட்டுவிடுகிறது. அது, அவனது பலவீனத்தை வளர வைக்கிறது.

இதன் பிரதிபலிப்பாக பகைமை உணர்வு உண்டாகிறது. காரணமற்ற கோபத்துடனே அவன் தனது அயலவனை அவதானிக்கத் துவங்குகிறான்.

அவன் புதுச் சட்டை போட்டால் இவனுக்கு முதுகு எரியும். ஆவனுக்கு ஏதாவது நடக்கக் கூடாதா பிரச்சினைகள் வரக்கூடாதா எனக் காரணமின்றி இவன் ஏங்கத் தொடங்கிவிடுகிறான். இந்த பலவீனமானது நம்மில் இருந்தால் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் அதை எதிhகொண்டு வெல்ல வேண்டும். அதற்கு...

நாம் செய்யும் எதற்கும் பலனை எதிர்பாராத மனப்பக்குவம் நமக்கு வர வேண்டும். உதவி என்பது வேறு, கொடுக்கல் வாங்கல் என்பது வேறு. சரியாகப் புரிந்து கொள்க!