சனி, 1 பிப்ரவரி, 2020

புதியதல்ல...புதுமையுமல்ல...,

சூழ்நிலையின் கைதிகள்....

நம்மைச் சுற்றிலும் ஆட்கொண்டுள்ள சூழ்நிலையானது, நம் மன வளர்ச்சியிலும் அறிவு வளர்ச்சியிலும் பெருமளவு பங்கெடுத்து விடுகின்றது.

நமது சிந்தனை ஆழமாக இருக்காவிடில் சூழ்நிலையானது நமது தனித்துவத்தின் உரிமையைப் பறித்துவிடுவதைத் தவிர்க்கவே முடியாது.

சரியாகச் சிந்திக்கும் ஆற்றலில்லாத மனிதன், சூழ்நிலையின் கைதியாகிவிடுகிறான்.

அவனது பக்குவமற்ற மனநிலையானது அவனை „சூழ்நிலைக்கேற்ப ஆடாவிட்டால் வாழ்வது இயலாது“ என்ற பிழையான முடிவிற்கு வர வைத்து விடுகின்றது.

ஆதனால் அவன் சூழ்நிலையை அனுசரித்துப் போவதாக நினைத்துக் கொண்டு, பிழையான வழிமுறைகளைப் பின்பற்றுவதைச் சரி என்று எண்ணி விடுகிறான்.

இந்தப் பக்குவமற்ற நிலைப்பாடு உண்மையில் அனுதாபத்திற்குரியது.

நல்ல மக்கள் பலரும் வறுமையின் கொடுமை தாளாமல் அல்லது தமது எதிர்காலம் தகர்ந்து போய்விடும் என்ற நிலையில் பிழை செய்தாவது தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயல்வதை நாம் அவதானிக்க வேண்டும்.

சமுதாயம் அவர்களைக் காப்பாற்ற வேண்டும். ஓவ்வொரு தனிமனிதனும் தனது அயலானின் வீழ்ச்சியைத் தடுக்க வைராக்கியம் கொண்டால் ஒரு சமுதாயத்தின் வீழ்ச்சியை நிச்சயம் தடுத்துவிட முடியும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

                   …..............................

தன்னம்பிக்கை இல்லாதவன் தன்னிலும் மற்றவன் உயர்கையில் தன்னால் அது சாத்தியம் இல்லை என்ற உள்மன உந்துதல் காரணமாக ஒரு வித எரிச்சலுணர்வைப் பெறுகிறான்.

அதன் அரிப்பானது கூடக்கூட அது அழுக்காறாக ஆழமாக வேர்விடத் தொடங்குகிறது.

அதை விளங்கிக் கொள்ளாமல் அவனது சுயசிந்தனைத் திறனின்மை அவனை அதில் ஊற விட்டுவிடுகிறது. அது, அவனது பலவீனத்தை வளர வைக்கிறது.

இதன் பிரதிபலிப்பாக பகைமை உணர்வு உண்டாகிறது. காரணமற்ற கோபத்துடனே அவன் தனது அயலவனை அவதானிக்கத் துவங்குகிறான்.

அவன் புதுச் சட்டை போட்டால் இவனுக்கு முதுகு எரியும். ஆவனுக்கு ஏதாவது நடக்கக் கூடாதா பிரச்சினைகள் வரக்கூடாதா எனக் காரணமின்றி இவன் ஏங்கத் தொடங்கிவிடுகிறான். இந்த பலவீனமானது நம்மில் இருந்தால் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் அதை எதிhகொண்டு வெல்ல வேண்டும். அதற்கு...

நாம் செய்யும் எதற்கும் பலனை எதிர்பாராத மனப்பக்குவம் நமக்கு வர வேண்டும். உதவி என்பது வேறு, கொடுக்கல் வாங்கல் என்பது வேறு. சரியாகப் புரிந்து கொள்க!









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக