புதன், 11 டிசம்பர், 2019

ஒளவையார் இரும்புக்கடை வைத்திருந்தாரா?

தடங்களில் திரும்பினால்......01.

ஒளவையார் இரும்புக்கடை வைத்திருந்தாரா?

எனது தாத்தா எனக்கு அடிக்கடி அறிவுறுத்திய் ஒரு விடயம்: „சந்தேகத்தை மனதுக்குள் புதைத்து வைத்துவிடக்கூடாது. உடனடியாக அல்லது விடாப்பிடியாக அதற்கான விடையைத்தேடி கண்டு பிடித்து விட வேண்டும்.“
என்பதாகும்.

நான் மழலையர் பூங்கா சென்றவனல்லன். எனது தாத்தாதான் (நாங்கள் சீயான் என அழைப்போம்) எனக்குத் தமிழ் ஆங்கிலம் உட்பட இதர நல் வழிப்போதனைகளுக்கும் முன்னோடி.

மிகச் சிறிய வயது வகுப்பிலென்று ஞாபகம்.
எனது வகுப்பாசிரியர் மிக நல்ல மனிதர் ஆனால் எப்போதும் ஒரு பிரம்பைக் கையில் பிடித்துக் கொண்டே பாடம் நடத்தும் பழக்கமுள்ளவர்.

ஓரு சிறு பிழைக்கும் ஒரு சின்ன „சுளீர்“ கிடைக்கும் என்ற அச்சம் வகுப்பில் நிறைந்திருந்தது. மாணவர்களை ஒருவித பதட்டத்துடனேயே வைத்திருப்பதில் ஏனோ தமக்கு ஒருவித முக்கிய அக்கறை இருந்தது போலவே நடந்து வந்தாரவர்.

அவர் எங்கள் கண்ணுக்கு அப்போது ஒரு முரட்டு போலீஸ்காரர். அவ்வளவுதான். அன்பிலும் அச்சமே அதிக சக்தி வாய்ந்தது என அவர் நினைத்திருந்தாரோ தெரியாது.

ஆத்திச்சூடி கொன்றைவேந்தன் என்று மனப்பாடம் செய்யும் காலமது. எனக்கு அறம் செய விரும்பு என்ற வார்த்தைகளினர்த்தம் புரியிவில்லை. அவரோ அறம் செய்ய நாம் விரும்ப வேண்டும் என்று மட்டும் வலியுறுத்தி   பாடத்தை நடத்தினார்.

எனக்குத் தெரிந்ததெல்லாம் வீட்டில் இருந்த இரும்பு அறம் என்ற கருவிதான்.

இதென்னடா ஒளவை ஒரு புலவராம் பிறகு அவர் ஏன் அறம் செய்யச் சொன்னார்? எனது பக்கத்திலிருந்த என்போன்ற அறிவாளிகளையும் கலந்து பேசியதில் எல்லாருமே நானறிந்த அறத்தை மட்டுமே தெரிந்த பேரறிஞர்களாயிருந்தமையால் சந்தேகம் மிகவும் வலுத்தது.

எனது சீயானின் இதன் ஆரம்பத்தில் நானெழுதியபடி தந்திருந்த அறிவுரையின் அடிப்படையில் ஒளவையார் ஏதோ காரணத்தோடுதான்
சொல்லியிருப்பார். எனவே கேட்டுத் தெளிவு பெறுவோம் என அவர் மீண்டும் ஒருமுறை தமது திருவாயைத் திறந்து மொழியும் வரை காத்திருந்தேன்.

பல நிமிட இதர விளக்கங்களுக்கிடையில் ஒரு தடவை அவர் இதழ்கள் கதையோடு கதையாக அறம் செய விரும்பு என எதையோ விளக்க வந்தபோது நான் எழுந்து குறுக்கிட்டேன்.

„ஏன் சேர்! ஓளவையார் இரும்புக்கடை வைத்திருந்தாரா?“

„சுளீர்“ என் இடது தோள்படஇடையி;ல் வலி பற்றி எரிந்தது..

அவரைக் கேலி செய்ததாக நினைத்தாரோ தெரியாது. அடி சற்று பலமாகவே விழுந்தது.

„ஐயோ அம்மா!“

„நக்கலா? என்னடா கேள்வி இது?“

„சேர்  இரும்பு தேய்க்கிற அறம்தானே அவர் சொன்னது? அதை ஏன் நம்மைச் செய்யச் சொன்னார் ஒளவையார்?“

மிகவும் மெதுவாகத் தாழ்ந்த குரலில் நான் சொன்னேன். மறுபடியும் அடி விழுமோ எனப் பெரும் பயத்தில் சற்று அதிர்ந்தவாறே நின்றேன் நான்.

சுடுகுழம்பில் காலைவிட்ட பூனையாக அவர் சிலிர்ந்து விட்டார். ஓரு கணம் அவரே விழித்ததை உணர முடிந்தது. புpறகு சுதாரித்தவராக முழு வகுப்பையும் நோக்கிக்; கேட்டார்.

„அறம் என்றால் என்னவென்று உங்களில் ஒருவர் விளக்க முடியுமா?“

„கறல் அல்லது கோணல் தேய்க்கிற இரும்புக் கருவிதானே அது“ யாரோ ஒருவன் குரலெழுப்ப முழு அவையுமே ஆமொதித்தது.

அப்பாடா!

முதல்தடவையாக மாஸ்டர் மின்னதிர்ச்சியால் உறைந்தது தெரிந்தது.

„அதற்கு வேறு அர்த்தம் இருப்பது உங்களில் எவருக்குமே தெரியாதா?“

முழு வகுப்புமே இல்லையெனக் குரலாட்டித் தெரிவித்தது.

அவரது ஆசனம் ஒரு சிறிய மேடையில் அமைந்திருந்தது. நடை தளர்ந்தவராக அவர் அதிலேறித் தமது ஆசனத்தில் அமர்ந்தார்.

கைப்பிரம்பு மேசை மேல் முதல் தடவையாக தனியாகக் கிடக்க இரு கை விரல்களையும் கும்பிடு பாவனையில் நாடிக்குக் கீழ் வைத்தபடி சில விநாடிகள் மௌனமாக யோசித்தவாறே இருந்தார்.

அடுத்த நடவடிக்கை என்னவாயிருக்குமோ என்ற அச்சம் வகுப்பறையில் சூழ பயங்கலந்த முழு அமைதி படர்ந்துகொண்டிருந்தது.

பல விநாடிகள் கடந்த பின் அவரிடமிருந்து ஒரு குரல் வந்தது.

அறம் என்பது என்ன தெரியுமா? எவருக்கும் எந்த நிலையிலும் தீங்கோ பாதகமோ நிகழ்ந்துவிடாமல் நல் வகையில் மட்டுமே செய்கின்ற காரியமும் அதன் வழியில் நடப்பதும்தான் அறம் என்பது. புரிகிறதா?

இரண்டு மூன்று தடவைகள் தெளிவாக விளக்கினார்.எல்லார் முகங்களும் ஒரே குளத்துத் தாமரைகளாக விளக்கத்தை உணர்ந்து மலர்ந்தன. அவர் தொடர்ந்தார்.

„;இனிமேல் யாராவது கேள்வி கேட்க இருந்தால் கையை மட்டும் உயர்த்துங்கள். பிறகு ஒரு சந்தேகம் என்றுமட்டும் சொல்லுங்கள். சரியா? டக்கென்று ஆத்திரம் வரும்படி கேட்காதீர்கள்“

எனக்கு „பக்“கென்றிருந்தது. புரியவில்லை.

தமது சைகையால் அவர் என்னை அழைத்தது தெரிந்தது. சற்று நடுங்கியவாறே அவர்முன் சென்று நின்றேன். எனக்கு அடி விழுந்த இடது தோளை அவர் வருடிவிட்டார்.

„நீ கேள்வி கேட்டதை நான் தவறாகப் புரிந்து கொண்டேனடா. (ஆங்கிலத்தில); „ஐ ஆம் சாரி“ என்றார். உண்மையான கனிவைத் தமது கண்களிலும் பார்வையிலும் குழைத்து என்னை நிலைகுலைய வைத்து    விட்டாரவர்..

„என்னை மன்னித்துவிடுங்கள் மாஸ்டர்“
கண் கலங்க நான் மன்னிப்பு கேட்டேன். முழு வகுப்பும் உணர்ச்சி கொண்டு நின்றது.

இதில் பெரிய விடயம் என்னவென்றால் அவர் அன்றிலிருந்து பிரம்பைக் கொண்டு வருவதையே தவிர்த்துவிட்டிரு;தார்..

ஓரு கேள்வி-
அதைக் கேட்ட தவறான விதம்.
அது பிரதிபலிக்க வைத்த ஆத்திரம்.
அதை உணர்ந்ததும் உடனடியாகவே திருத்திக் கொண்ட ஆசிரியரின் உயர் தரம். அவர் அக்கணத்திலிருந்தே பின்பற்றிய அறம் அத்தனையும் இன்றைக்கும் எனக்கு..........

பசுமரத்தாணிகள். பசுமரத்தாணிகள்.

மனனம் செய்வது மறக்கா திருந்திடச்
     செய்யும் ஒருசிறு பயிற்சியல்ல
மனனம் செய்வது  மனத்தினுள் கருத்தினைக்
     கற்றுப் பதித்திடல் வேறு அல்ல
மனமும் கருத்தும் உணர்வதும் வளர்வதும்
     ஆசான் தரும்வழி வேறு அல்ல
மனமதன் உயர்நிலை சுயதரம் உணர்ந்ததில்
      அறவழி ஒழுகுதல் வேறு அல்ல.
    





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக