புதன், 18 டிசம்பர், 2019

தடங்களில் திரும்பினால்.....02


 அமலதாச

இளவயதில் எனக்கு ஒரு இளைஞன் நண்பனாகி இருந்தான். ஏனது அப்பாவின் தொழிலகமான அச்சகத்தில் அவனும் பணி செய்து வந்தன்;.

தனது குடம்பத்தின் கடும் வறுமை காரணமாக சில வகுப்புக்களே படித்துவிட்டு ஒதுங்கியவனாக இருந்ததுடன ஆங்கில அறிவு மிகக் குறைவு என்பதால் தனது கடமையைச் செய்வதில் அதாவது ஆங்கில அச்செழுத்து கோர்ப்பதில் அந்த பலவீனம் மிக அதிக சிரமத்தைத் தந்து வந்ததால் தொழிலக அழுத்தமும் வேகக் குறைவுக் கண்டனங்களுமாக மனத்தளவில் மிகமிகத் தளர்ந்தவனாக அவன் எப்போதுமே சோர்வுடi; காணப்பட்டு வந்தான்.

கிட்டத்தட்ட அவன் வயதில் நாங்களுமிருந்தபடியால் ஒரு தந்தைக்குரிய கரிசனையுடன் அப்பா அம்மாவுடன் அவனைப்பற்றிக் குறிப்பிட்டு அடிக்கடி பேசியதைக்  கேட்க நேர்ந்தது.

வேலை பயிலுபவன் இடத்தில் அவனை வைத்;து நடத்தியதால் மிக மிகக் குறைந்த ஊதியத்தில் அவன் மிகவும் சிரமப்படுவதாகவும் தெரிந்தது.

நான் அந்நாட்களில் சிறு குழந்தைகளுக்காக மாலை பாடத் துணை
வகுப்பொன்றை நடத்திக் கொண்டிருந்தேன். சில அயல்வீட்டுப் பெற்றோர்களின் வேண்டுகோள் காரணமாகவே அதில் இறங்கியிருந்தேன்.

ஓரு வகையில் பொழுதுபோக்கும் அதற்கு மாதவருமானமும் கிடைத்து வந்தது. மலர்ச்சிகரமான மாலை வகுப்பும் கவர்ச்சிகரமான வருமானமும் நல்லதுதானே!

ஓரு நாள் அப்பாவிடம் அவன்பற்றி விசாரித்த நான் அவன் எதுவித கöட்டணமுமின்றி ஆங்கிலம் படிக்க உதவ தயாராயிருப்பதாக நான் தெரிவித்தேன். அவனாக விரும்பி வந்து பார்த்து செல்லட்டும் என்றும் நான் கேட்டுக் கொணடேன்

புதிய அறிமுகத்துடன் சின்னஞ்சிறிய குழந்தைகளுடன் அமரத்தக்க வயதுமில்லையாதலால் தனது வேலை முடிய திரும்பி வரும் அந்த இளைஞன் நான் படிப்பிப்பதை ஒருவித ஏக்கத்துடன் கவனித்ததை நான் அவதானிக்க முடிந்தது.

அவனுடன் தனிமையில் பேசுகையில் துயரத்தின் ஆழம் புரிந்தது.

தான் ஐந்தாவது வகுப்பு வரைக்குமே பள்ளிக்கு சென்றதாகவும் வறுமை நிலையால் அதன் பிறகு ஒரு சிறிய மளிகைக் கடையில் வேலை செய்து வீட்டுக்குதவும் கட்டாயம் ஏற்பட்டதாகவும் வளர்ந்த பின் இருந்த சொற்ப அறிவோடேயே கொழும்புக்கு வந்ததாகவும் ஒருவரின் உதவியின் மூலமே தற்போதைய தொழிலைக் கற்றதாகவும் அரைகுறை அறிவோடே பணி செய்வதால் எதிர்கொள்ளும் தினசரி கெடுபிடிகள் தாங்க முடியாதவையாக இருப்பதாகவும் அதனால் இன்னும் கொஞ்சம் நன்றாகப் படித்துவிட ஏங்குவதாகவும் மனந்திறந்து கவலை ததும்ப விளக்கினானவன்

தனது படிப்புக் குறைவு காரணமாக எதிர்காலமே கேள்விக்குறியாய் இருப்பதாக அவன் கவலைப்படுவது தெரிந்தது. இருபது வயதைக் கடந்துவிட்ட அவனின் மனக்கவலை எனக்கும் கிட்டத்தட்ட அதே வயதுதானென்பதால் புரியக்கூடியதாய் இருந்தது.

அன்றிரவு அது பற்றி நீண்ட நேரமாக சிந்தித்ததில் எனக்கு ஒரு புதிய வழி புலப்பட்டது. அதாவது பத்தாம் வகுப்புக்கான அரசாங்க பரீட்சைக்குத் தனியாரும் தோற்றலாமே! இவனேன் அதை முயற்சிக்கக் கூடாது?

அது வருட ஆரம்ப காலம். எனவே மறுநாள் அவனை சந்தித்தபோது அவனை அந்தப் பரீட்சை எழுதினால் பத்தாவது வகுப்புத் தேர்ச்சிச் சான்றிதழைப் பெற்று விடலாம் என்று அறிவித்து முயன்று படித்தால் வென்று விடலாம் என்றும் எனது பங்குக்கு என்னாலான சகல உதவிகளையும் செய்வேன் என்றும் வாக்களித்தேன்.

நடுநடுங்காத குறையாக அவன் அவன் தயங்குவது தெரிந்தது.

இயலாமையாய் உணர்ந்தால் எதிலும் தயக்கமே முன்னிற்கும் என்பது இயல்புதானே!

„நேற்று என்னிடம் சொன்ன உனது எதிர்காலம் பற்றிய உனது கவலை உண்மையென்றால் நீ படகு கவிழ்ந்து நட்டாற்றில் விழுந்து தவிக்கிறாய் என்றே பொருள். விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ எதையாவது செய்து நீ கரையேற முயல்வதே சரி அல்லது மூழ்கிச் சாக வேண்டியதுதான். நான் சொல்கிறது புரிகிறதா இல்லையா?“

சற்றுக் கடினமாகவே நான் பேசினேன். ஆனால் அது அவனை வழிக்குக் கொணர செய்த தந்திரம்தான்

„முதலில் சரியென்று முடிவெடு! மற்றதை நான் கவனிக்கிறேன். பாசானாலும் பெயிலானாலும் புதிதாக நட்டப்பட எதுவுமே இல்லையே!“

மூழ்க இருந்தவனுக்கு ஒரு பலகை கிடைத்தைப்போல அவன் எனது உத்தரவாதத்தை நம்பி நிமிர்வது தெரிந்தது.

„நீங்கள் இருக்கிற தைரியத்தில் நான் இறங்குகிறேன்“

„ஆனால் நீதான் தைரியமாக நீந்திக் கரை ஏறவேண்டும்.புரிகிறதா?“

மறுநாள் பக்கத்துத் தொலைவிலிருந்த ராஜன் இன்ஸ்ட்டிடியூட் என்ற மாலை வகுப்புப் பள்ளி தலைமை ஆசிரியரைச் சந்தித்தேன். அவர் எனது நல்ல நண்பர் என்றாலும் ஒருபோதும் உதவி கேட்டு நான் நெருங்க முயலாத நபர். கண்டபோது நின்று பேசுவார்.ஆனால் அழுத்தமில்லாமலே நகர்ந்து விடுவார். அத்தகையவர் அவர்.

பக்குவமாக எப்படிப் பேசலாம் என்று திட்டமிட்டுச் செயலில் இறங்கினேன்.
என் நண்பனின் நிலைமையை மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் எடுத்துச் சொல்லி அவரது திறமைக்கு ஒரு சவாலாக அதைச் செயல்படுத்த முடிந்தால் மட்டுமே இறங்குங்கள் அல்லது வேறொருவரிடம் நான் செல்கிறேன் என்ற விதத்தில் முடித்தேன்.

அவனுக்கான கல்விக் கட்டணைத்தை உடனடியாகக் கேட்கக் கூடாது என்றும் இறுதிமுடிவு  வந்ததும் மொத்தமாகவே அதைக் கட்டிவிட ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தேன். குறைந்த பட்சம் பத்து மாதங்கள் கடும் பயிற்சி.

அவர் மிகவும் கண்ணியமாக உடன்பட்டார். முக்கியமான நான்கு பாடங்களுக்கான பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டார். அடுத்த தினம் சற்று தொலைவிலிருந்த விகாரையின் அதிபதியான பிக்குவைப் போய்ப் பார்த்தோம்.

விபரங்களைக் கேட்டறிந்த விகாராதிபதி சிங்கள மொழி மற்றும் பௌத்தம் சார்ந்த பாடங்களுக்குத் தானே இலவசமாக ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார். ஓரு நல்ல நோக்கம் தடங்கலின்றி நகர்ந்தமை மிகவும் ஆறுதலைத் தந்தது எனக்கு. அன்றுபோல் இன்றும் ஆட்கள் கிடைப்பார்களா?

எனக்கென்னவோ சந்தேகந்தான்.

இங்லிஷ் வித் எ ஸ்மைல் என்ற நூலே அவனுக்காக நானெடுத்த அன்றைய பாடநூல். தனது அத்தனை பொழுதுபோக்குகளையும் உதறிவிட்டு விடாப்பிடியாகவும் கண்ணுங்கருத்துமாகவும் அவன் தனது படிப்பில் ஊன்றி நின்றமை என்னை பிரமிக்க வைத்தது.

ஓரு நாள் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவத்தை வாங்கக் கல்வித் திணைக்களத்துக்கு அவனையும் அழைத்துச் சென்றபோது அவன் நிமிர்ந்து நடந்தமையைக் காண எனக்கே பெருமையாகவிருந்தது. தன்னம்பிக்கை துளிர்விடும்போது படவிருக்கும் மரமும் நிமிர்ந்துவிடும் போலும்.

என்னிடம் தவிர்த்து இதர நாட்களில் அவனைக் காண்பதே அரிதாகவிருந்தமை அவனது கடமையுணர்வையும் விடாப்பிடியான உத்வேகத்தையும் உறுதிப்படுத்தி வந்தன.

பரீட:சைக்கான நாள் நெருங்க ஒரு சில நாட்களிருக்கையில் அவன் ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டான்.அதை வழங்குவதில் அவனது அலுவலகத்தில் பெரும் கெடுபிடிகளை அவன் மிஞ்ச இருந்ததாகவும் ஒருவேளை வேலையிலிருந்து நிறுத்திவிடுவார்களோ என்று கூட அஞ்சுவதாகவும் தெரிவித்தபோது எனக்குக் கவலையாக இருந்தது.

திடீரென்று அவன் என்னிடம் கேட்டான்:
„இருவரும் கோவிலுக்குப் போய்வருவோமா?“
எனக்கு அதிர்ச்சியாயிருந்தது.

„நீ பௌத்த மதத்தவன். பன்சலைக்கல்லவா போகவேண்டும்?“

„உங்களை எனக்குக் காட்டியது உங்கள் கடவுள்தானே! அதனால் உங்கள் கடவுளிடமே முதலில் போவோம்“

சிரிப்புத்தான் வருகுதையா!

எங்கள் வீட்டருகில் இருந்த புனித அந்தோனியார் ஆலயத்துள் இருவரும் நுழைந்தோம். கோவில் நடுவில் இருந்த பெரிய சொரூபத்தைக் காட்டி அவரா கடவுள் என விசாரித்தான். அவர் கடவுளை விசுவாசித்த புனிதர் என்றும் கடவுளை வலப்பக்கமாக இருக்கும் பீடத்திலுள்ள சிறு அறைக்குள் இருக்கிறதாக நம்புகிறோம் வா என நற்கருணை இருக்கிற பீடத்தின் பக்கம் அழைத்துச் சென்றேன்.

நான் என்னென்ன செய்தேனோ அவற்றை அவனும் அப்படியே பின்பற்றினான். முழங்காலில் முதல்தடவையாக இருக்கக் கடினம் தெரிந்தது. இருந்தாலும் சமாளித்து இருந்தான்.

„கண்ணை மூடிக்கொண்டு உன் கவலைகளையெல்லாம் அவரிடம் அமைதியாகச் சொல்லி அவரது உதவியைக் கேள். உறுதியான நம்பிக்கையுடன் கேள். நிச்சயம் நடக்கும்.“

சிறிது நேரம் செபித்தபின் நான் அவனைப் பார்த்தேன். மூடிய கண்களுடன் அப்படியே இருந்தான். நான் மெதுவாக எழுந்து பின்னால் நின்று கொண்டிருந்தேன்.

சில மணித்துளிகள் அவன் அப்படியே இருந்தான். புpறகு எழ முயன்றவன் அடுத்து என்ன செய்வதென கண்களாலேயே வினவினான். நான் வலது முழங்காலை மடித்து எழுந்து காட்டினேன். அவனும் செய்தான்.

இருவரும் கோவிலை விட்டு வெளியே வந்ததும் எல்லாக் குறைகளையும்
தேவைகளையும: சொல்லிக் கேட்டாயா எனக்கேட்டபோது என்னையே குப்புற விழச் செய்யும் ஒரு பதிலை அவன் தந்தான்.

„எல்லாம் தெரிந்த கடவுளுக்கு நாம் சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன? அதனால் கடவுளே எனது கவலைகள் அனைத்தையும் முழுமையாகத் தெரிந்த நீர் அவற்றிலிருந்து மீள நானெடுக்கும் முயற்சிகளை வெற்றிபெறச் செய்தால் மிகவும் நன்றியுடையவனாயிருப்பேன் என்றுவிட்டு அவரது அருளுக்காகக் கண்ணை மூடிக் காத்திருந்தேன்“

ஒரு நிமிடம் அவனிடமிருந்து சம்பிரதாய விசுவாசத்திற்கும் உண்மை விசுவாசத்திற்குமிடையிலான சரியான வித்தியாசத்தைப் பாடம் படிப்பதுபோல இருந்தது. சத்தியமாக அவனது பதிலால் என் மனம் மிகவும் படபடத்தது என்பேன்.

சிறிது கழித்து....
„அதுசரி அதிக நேரமாக கண்ணை மூடியபடியே இருந்தாயே!“ என அரைக் கேள்வியாக நான் துவங்க அவன் புன்கைத்தான்.

„நான் இன்று இங்கே வருவதற்கும் பரீட்சை எழுதித் தகைமை பெற உதவுவதற்கும் உங்களை எனக்குத் தந்த அவரிடம் உங்களுக்கு எல்லா விதத்திலும் உதவவேண்டும் என்று கேட்டதில்தான் சிறிது தாமதமானது“

சிரிப்பதா? அழுவதா?

„அவ்வளவு நேரமாக?“

„அவ்வளவு கேட்டேன். எல்லாவற்றையும் நீங்கள் கேட்டால்? சொல்லமாட்டேன்“ ஒரு வெட்கம் கலந்த சிரிப்புடன் நிறுத்திக் கொண்டான்.

மார்கழி மாதம் பரீட்சையி;ல் தோற்றினான். அவன் மிகவும் இயல்பாக இருந்தான். நான்மட்டும் உள்ளுக்குள் படபடத்துக் கொண்டிருந்தேன்

பரீட்சை முடிவு வெளிவந்த நாள்.

அன்று மாலை அவன் அஞ்சலில் வந்த கடித உறையுடன் வந்தான்.
எனக்குப் புரிந்தது. பரீட்சைப் பெறுபேறு வந்திருக்கிறது. நம்மிடம் காட்ட வந்திருக்கிறான். பலே!

கொஞ்சம் வாருங்கள் என என்னை அழைத்தான். மேற்கொண்டு எதுவும் கேட்காதே என்பதுபோல இருந்தது அவனது தொனி. கூடச் சென்றேன்.

அவன் நேராகவே தேவாலயத்துக்குள் சென்றான். நற்கருணை பீடத்தின் முன் நான் முதல்நாள் காட்டிய விதத்திலே அவனே செய்து விட்டு கிராதியில் முழங்கைகளை ஊன்றியாறு செபித்தான். அவனது கையிலிருந்த கடிதம்? அது திறக்கப்படாமல் அப்படியே இருந்தது. நான் அவனைப் பின்பற்றினேன்.

„ஆண்டவரே! தப்பித்தவறி...“ நான் மனதுக்குள் தடுமாறினேன். அவன் எழுந்ததும் என்னிடம் அந்த உறையைத் தந்து திறக்கும்படி சொன்னான். எனக்குக் கை இலேசாக நடுங்கியது.

ரிpசல்ட் எப்படியோ?

அவன் முகமோ புன்னகையால் நிறைந்திருந்தது. ஏன்? புரியாத புதிரது.
திறந்தேன்.

ஆங்கிலத்தில் விசேட சித்தி சிங்கள மொழியில் விசேட சித்தி பௌத்தத்தில் விசேட சித்தி கணிதம் உட்பட இதர மூன்று பாடங்களிலும் சாதாரண சித்தி அதாவது அத்தனை பாடங்களிலும் அவன் பாஸ். அசாதரண வெற்றி. அவனது அந்த வயதில் அந்த நிலையில் அசாத்தியமானது சாத்தியமானது சாதாரண வெற்றியல்லவே!
நான் ஆனந்த அதிர்ச்சியில் ஆடிப்போய்விட்டேன்

அவனைக் கட்டியணைத்து வாழ்த்தினேன். அவனது கண்ணீர் எனது தோளை நனைத்தது தெரி;ந்தது. அவனைச் சற்று முன் தள்ளி உற்றுப் பார்த்தேன்.

மனநிறைவு கண்ணீர் வழிந்த கண்களில் முகத்தில் மிளிர்வது தெரிந்தது.

கோவிலை விட்டு வெளிவருகையில் வாசலில் வைத்து நான் கேட்டேன்.
„அதுசரி ரிசல்ற் கடிதத்தை திறக்காமல் ஏன் கோவிலுக்கு கொண்டு வந்து என்னிடம் தந்து திறக்கச் சொன்னாய்?“

„எனக்கு நம்பிக்கை இருந்தது. ஏனென்றால் முதல் நாள் நாம் வந்தபோது நீங்கள் சொன்னதை அப்படியே செய்தேனே! பிறகு எப்படி ரிசல்ற் பிழையாக வர முடியும்?“

„அப்படியே என்றால்?“

„முழு நம்பிக்கையுடன் கேள். நிச்சயம் கிடைக்கும் என்றீர்களே! அது     பொய்யா?“

கடுகளவு விசுவாசம் உன்னில் உண்மையாக இருந்தால் மலையைக் கூட நகர்த்தலாம் என்ற தேவ வார்த்தை நினைவுக்கு வந்தது. நான் சொன்னேன். அவன்தான் அதை நிரூபித்திருக்கிறான்.

உண்மை விசுவாசத்தில் அவன் மலையாகவும் நான் பள்ளமாகவும் இருந்தது புரிந்தது. அந்த மடலை அவன் ஏன் தானே திறக்காமல் கடவுள் பாதத்தில் முதலில் நன்றி செலுத்திவிட்டு என்னைக் கொண்டு திறக்க வைத்துவிட்டுப் பொறுமையுடன் காத்திருந்தானென்பது புரிந்தது. சாதாரணமாக இப்படி நடக்காதே!

இதைத்தான் கனியைக் காட்டு மரத்தைச் சொல்கிறேன் என்பதா?

காலதூதன் காய் நகர்த்திடும் நேரம் வந்தது. அந்த நண்பன் தனது சொந்த ஊருக்குப் புறப்பட நேர்ந்தது.. கவலையுடன் விடைபெற்றுச் சென்றானவன்.
             
சில வருடங்கள் கழித்து புனித அந்தோனியார் திருவிழா  தினத்தன்று அவன் என் வீட்டுக்கு வந்திருப்பதாக அக்கா சொல்லியனுப்ப கோவிலில் பொதுப்பணியிலிருந்த நான் திரும்பி வந்து சந்தித்தேன்.

திருமணமாகி இரு குழந்தைகளுடன் வந்திருந்த அவன் தனது மனைவியிடம் ஏதோ சொல்லியிருப்பான் போலும். அவனுக்கு முன் அவள் எழுந்து கும்பிட்டு வணக்கம் தெரிவித்தாள்.

பகலுணவு வேளையில் முன்னறையில் பேசிக் கொண்டிருக்கையில்
நான் அவனை இலேசாகக் கேலியாகச் சீண்டினேன்.

கொழும்பை விட்டுப் போனபின் அப்படியே மறந்து விட்டாய். அப்படித்தானே!“

„ஒரு நாள் கூட உங்களையோ உங்கள் நட்பையோ நான் மறந்ததே இல்லை அண்ணா. எனது திருமணத்துக்கு உங்களை அழைக்க இயலவில்லை ஏனென்றால்...“

„காதல் திருமணமா? ம்ம்“ அவனது மனைவி தலை குவிந்தாள். நான் சிரித்தேன்.

„ எனக்குத் தெரிவித்திருந்தால் கொழும்பிலேயே நடத்தியிருக்கலாமே!“

;பெரிய தகராறின் பிறகு இரு குடும்பமும் சேர்ந்துதான் நடத்தி வைத்தார்கள்“

„நான் சும்மா கேலிக்குச் சொன்னேன்“ நான் மழுப்பினேன்..

நண்பன் சொன்னான்.  „உங்களை நாங்கள் மறக்கவே இல்லை“

நாங்கள்?
ஓருமை எப்படி பன்மையானது?

அவனே எனது ஐயத்தைத் தீர்த்து வைத்தான்.. எனது மூத்த மகனுக்குப் பெயர் அமலதாச. ஏன் தெரியுமா? உங்கள் பெயரை நான் மறக்காததால்தான்“

எனது இயற்பெயரில் ஒன்று அமலேந்திரன். அதையே இணைத்து அமலதாச என்று தனது முதல் மகனுக்கு வைத்து இருக்கிறான். பாராட்டுவதா நன்றி சொல்வதா? புரியவில்லை எனக்கு.

„உங்களைப் பற்றி இவளிடம் நான் அடிக்கடி பேசியிருக்கிறேன்: மகன் பிறந்ததும் இவள்தான் அந்தப் பெயரை சொல்லி வைக்கச் சொன்னாள். நான் இப்போது நடத்திக் கொண்டிருக்கும் சிறிய அச்சகத்தின் பெயரும் அதுதான். அதுவும் என் மனவி சொல்லித்தான். உங்களை எப்போதுமே எங்களுடன் வைத்துக் கொண்டிருக்கிறோம். மறக்கவே மாட்டோம்“ உணர்ச்சி அவன் முகத்தில் கொப்புளித்தது.

நன்றியுணர்வினாலும் ஒருவித பாசப் பிணைப்பினாலும் என் மனமும் உடம்பும் அதிர்ந்து கொண்டிருந்தன. கண்கலங்கி விட்டேன் நான்:
அவன் கண்களிலும் கலக்கம். மூன்றாவதாக இணைந்த புது உயிரின் கண்களிலும் கலக்கம். ஆகனில் மகிழ்ச்சி மட்டும் கலந்து இருந்தது.

உண்மை அன்புக்கு உருவமுமுண்டு என்று புரிந்தது எனக்கு.

சுpறிது கழித்து என் வீட்டு வாசலில் ஒரு குரல் ஒலித்தது.
„அண்ணன்! ஃபாதர் உங்களைத் தேடுகிறார்கள். உடனே வந்தால் நல்லது“

எனது கடிகாரத்தைப் பார்த்தேன். மணி மூன்று இருபது. சரியாக ஆறு மணிக்குத் திருச்சுரூப பவனி ஆரம்பமாகிவிடும். உடனே புறப்பட்டாக வேண்டியிருந்தது..

„ வீட்டிலிருந்தே ஓhவலத்தைப் பாருங்கள். இன்னும் இரண்டு மூன்று நாட்கள் தங்கித்தான் போகவேண்டும் „ என்று அன்புக் கட்டளையிட்டுவிட்டு அழைக்க வந்தவருடன் புறப்பட தயாரானேன்
மலர்ந்த இரு முகங்களும் குழந்தை மலர்களும் விடை தர விரைந்து திரும்பினேன் கோவிலுக்கு.

புனித அந்தோனியார் என்னைப் பார்த்து முறுவலித்துக் கொண்டிருந்தார்.

திருவிழா நிறைவடைந்து இருநாட்கள் அங்கிருந்த யாத்திரிகர் தங்குமிடத்தில் தங்கியிருந்த அவர்கள் புறப்பட்டார்கள்

விடைபெற்றுக் கொண்ட அன்று அந்தச் சிறிய குடும்பம் என்னுடன் ஆலயத்துக்கு வந்தது. எனது நண்பன் பழைய சம்பவங்கள் நடந்த இடங்களைக் காட்டித் தன் மனைவிக்கு விளக்கி வந்தான்.

நற்கருணை பீடத்தின் முன் அந்த தம்பதி முழந்தாட்படியிட்டு கண்மூடி செபித்தமை என்னைப் புல்லரிக்க வைத்தது. ஓரு பௌத்த குடும்பம் அணுவளவும் மனக்கலக்கமோ தயக்கமோ இன்றி இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு எழுந்து நிற்கையில் பேதங்களைப் பேணுவதால் எழுந்துவிடும் பாதகங்களை மனத்தெளிவு எப்படி தகர்த்துவிடும் என என் மனதுக்குள் ஒலிப்பதுபோலொரு....பிரமை..? உணர்வு...? பாடம்...? அப்பப்பா!

அன்பே தெய்வம் என்ற நம் முன்னோர்கள் சும்மா சொல்லவில்லை!

உண்மையும் நேர்மையும் உடனிருக்கு மென்றால்
எண்ணமும் செய்கையும் சத்தியம் சார்ந்து
திண்ணமும் திமிர்தரு உறுதியும் சேர்ந்து
விண்ணையும் தொட்டிடும் உந்துதல் சார்க்கும்

நல்லதும் கெட்டதும் சேர்பவர் உள்ளம்
நல்லதோ கெட்டதோ அதற்கேற்ப ஆகும்
நல்லவர் நன்மைக்குச் செய்சிறு சேவை
நல்விதை சில தரும் பெருநன்மை ஆகும்

மரங்களை வைத்துநாம் கனிகளைச் சொல்வோம்
மரங்களின் தரங்களைக் கனிவைத்துக் காண்போம்
மனிதரும் மனிதருள் தெய்வமும் எவ்வண்
புனிதமாய் உள்ளதென அனுபவம் காட்டும்.

மனம்வைத்து உண்மையாய் உதவியாய்ச் செய்தால்
தினம்ஒரு நல்விதை விதைப்பதாய் ஆகும்
மனம்ஒப்பிச் செய்திடும் சிறுநல்ல செயலும்
தினம்தினம் புண்ணியத் துளிசேர்த்தல் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக