வெள்ளி, 17 மே, 2013

குறுமனக் குருவிகள்



                                                                  





வானத்தில் பறப்பவை எவை என்று யாராவது நம்மைக் கேட்டால் உடனே பறவைகள் என்று பதிலளித்து விடுவோம். ஆனால் வெளவாலும் பறக்கிறதே, அதுவும் பறவையா என்று மறு கேள்வி வந்தால் பதிலளிப்பது சற்று சிரமமாகவே இருக்கும். அதற்குக் காரணம்,  வெளவாலுக்கு பறவைகளினின்றும் மாறுபட்ட இயல்புகளே அதிகமாக இருப்பதுதான்.
எல்லாப் பறவைகளுக்கும் சிறகுகளாலான இறக்கைகளே உண்டு. வெளவால்களுக்கு அவை தோலினால் ஆனவையாக இருக்கின்றன.

புறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. இவையோ குட்டிகளை ஈனுகின்றன.

பறவைகள் இரை தேடிக் குஞ்சுகளுக்குக் கொடுக்கும். ஆனால் இவையோ பாலூட்டியே வளர்க்கும். 

பறவைகளுக்குச் சொண்டுகளுண்டு. அவை கொத்தித் தின்னும். இவற்றிற்குப் பற்களுண்டு. கடித்துத்தான் தின்னும்.

சாதாரண பறவைகள் வானத்தில் வெளிச்சத்தில் காற்றில் மிதந்து பறக்கும். இவையோவெனில் இருட்டில் சந்து பொந்துகளுக்குள்ளும் குகைகளுக்குள்ளும் எதிரொலியின் தொல்லியத்தில் “ராடார்” விளையாட்டு செய்து பறக்கும்.

சுருங்கச் சொன்னால் பறத்தல் என்ற ஒன்றைத் தவிர, வேறெதிலுமே ஒத்துவராத பிரத்தியேகத் தன்மையைக் கொண்டதாகவே வெளவால் இருக்கின்றது

ஆதலால்தான் அது ஒரு பறவை என்று பதிலிறுப்பதில் கடினம் இருக்கின்றது.

இதைப் போலவே தோற்றத்திற்கு மனித உடம்பை மட்டும் கொண்டிருந்து, மனிதத்திற்கேற்ற நற்குணங்களிலெதுவுமே அற்றிருக்கும் ஒரு வகை இரண்டுங் கெட்டான் வகையிலான வெளவால் மனிதர்கள் நம்மைச் சூழ இருக்கின்றார்கள்.

இவர்களின் நடவடிக்கைகள் சில சமயங்களில் இவர்கள் எப்படி மனிதர்களாக இருக்க முடியும் என்ற ஆதங்கத்தை எழுப்புவதை வைத்தே இவர்களை நாம் சரியாக அடையாளம் கண்டு கொள்ள முயல்கையில் ஐயமாக இருக்கின்றது.

தான் கள்வனெனின் பிறனை நம்பான் என்று சொல்வார்கள்.

அதாவது ஒருவன் தனது மனவளர்ச்சிக்கு ஏற்பத்தான் மற்றவர்களைக் கணிக்கின்றான்.

ஆனால் இதனை அப்படியே நம்பிக் கொண்டு, சரியாகச் சிந்திக்காமல் பிழைகளைக் கண்டு பிடித்துத் தவிர்க்க வழி சொல்பவர்களையும் பிழையானவர்களைப் பற்றி எச்சரித்து உதவுபவர்களையும் தவறாகக் நாம் கணித்துவிடக் கூடாது.

வள்ளுவன் சொல்லும் மெய்ப் பொருள் காணும் மனப்பக்குவத்தை இதில்தான் சரியாக நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒரு களவை அல்லது கொலையைத் துப்புத் துலக்கிக் குற்றவாளியைக் கைது செய்யும் அதிகாரிக்கு நிச்சயத்திலும் நிச்சயமாகக் குற்றச் செயல்களின் அனைத்துத் திக்குதிசைகளைப் பற்றியும் ஆழமான அறிவு இருந்தாக வேண்டும்.

ஆனால் அதனை ஆதாரமாக வைத்து நாம் அந்த அதிகாரி கள்ளனை விடவும் பெரிய கள்ளன் என்று பொருள் கொண்டுவிட முடியாது.

ஆனால் சாதாரண பொதுமக்களிடையே உணவில் கலந்துள்ள பதார்த்தங்களைப் போலக் கலந்து கிடக்கின்ற இந்தக் குறுமனக் குருவிகளையும் வஞ்சக வெளவால்களையும் அப்படியான அபிப்பிராயத்துக்குள் அடக்கிவிட முடியாது.

உறவுக்கு உதவா கபடர்களையும் நட்புக்கு உதவா வஞ்சகர்களையும் இணைவுக்கு உதவா துரோகிகளையும் சமமாக வைத்து நல்ல சிந்தனையுடனான மக்களைத் தரத்தில் தாழ்த்திவிடக் கூடாது.

ஒரே இனப் பறவைகளுக்குள்ளும் கூட பலவிதமான தனிப்பட்ட அமைவு வித்தியாசங்கள் உண்டு. விலங்குகளுக்குள்ளும் அப்படித்தான்.

பல வகை விலங்குகளும் பறவைகளும் தத்தனது இனத்துக்கு ஒத்த பிற இன விலங்குகளை இனங்கண்டு உணர்ந்து மட்டுமே இணைந்து வாழ்கின்றன என்பதன் இயற்கை அறிவுத் தன்மையை நாம் கவனமாகக் கவனிக்க வேண்டும்.

ஆனால் மிகவும் துரதிர்ஷ்டவசமாக நமது மனித இனத்துக்குத்தான் அனைத்து உயிரனங்களினதும் ஆபத்தான குணநலன்களை மனித நல்ல இயல்புகளுடனே இயற்கை கலந்து விட்டு வேடிக்கை பார்க்கின்றது.

மனிதர்க்குக் கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு. ஆனால் பார்வைகள்? கேள்விகள்? நமக்கே அதிர்ச்சியைத் தருகின்ற ஆச்சர்யங்களல்லவா இவை?

குடும்பங்களுக்குள், அலுவலகங்களுக்குள், நண்பர்களுக்குள், சந்திப்புக்களுக்குள் அத்தனையிலும் நம்பிக்கையின்மையும் உண்மையின்மையும் நேர்மையின்மையும் தூய்மையின்மையும் இப்படி மலிந்து கிடப்பதனால்தானே அமைதியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் கிடைப்பதில் இத்துணை சிரமமாக இருக்கின்றது?

அறிஞன் என்று வருகிறான் ஒருவன். பெரிய பெரிய நூலாசிரியர்களின் உயர்ந்த கருத்துக்களையும் தத்துவங்களையம் அள்ளி அள்ளிக் கொட்டுகிறான். கேட்கின்ற சமுதாயம் தனது மூக்கின் மேல் விரலை வைத்து மலைக்கின்றது.

ஆனால் மற்றவர்களின் அறிவைத்தான் அவன் தனது மூலதனமாக வைத்துத் தன்னை உயர்த்தி நிற்க விழைகின்றான் என்பதை உணர மறந்து விடுகின்றது.

அதனால்தான் கள்ளனும் கபடனும் கைதேர்ந்தவர்களாக நிமிர்ந்து நிற்க, உத்தமர்கள் எழுந்து நிற்கக்கூட முடியாமல் தடுமாறுகின்றார்கள். அல்லவா?

அவனவன் தன்னை உயர்த்திக் கொள்ளத்தான் அந்த ஆண்டவனையும் பயன்படுத்துகின்றான். அந்த அநியாயத்தின் தாக்கத்தின் பிரதிபலிப்பாக எழும் சமுதாய மூடத்தனத்தின் பாலான எதிர்ப்பும் வெறுப்புமே நாத்திகமாக முளைக்கின்றது.

அதில் தவறே கிடையாது. ஆனால் அதனைக் கூடத் தவறான மனிதர்கள் தவறாகப் பயன்படுத்துகையில்தான் அங்கேயும் தவறு விளைகின்றது. ஆக, முள்ளை விதைத்து நெல்லை விழையும் மூடத்தனங்களே எங்கணும் ஞானமென இவர்களால் படந்து கிடக்கின்றது.

இதற்கெல்லாம் அடிப்படையில் மனம் நடு நிலை தவிர்த்து பக்கமெடுத்துச் சார்ந்து நிற்பதுதான் அதிமுக்கிய காரணமாக இருக்க வேண்டும்.

நாம் ஏற்ற, நமக்கு ஏற்ற கருத்துக்களுடன் மட்டுமே நிற்கும்போது, மற்ற கருத்தாளர்களை மதிக்க மறுப்பதும் கேட்க மறுப்பதும் அவர்களின் கருத்துக்களைச் சிந்திக்க மறுப்பதும் கூட மாபெரும் தவறுதான் என்பதை மறந்து விடுவதால்தான் எதையும் விடாப்பிடியாக மறுத்து நிற்கின்ற பலவீனத்துக்கு அடிமைகள் ஆகின்றோம்.

மதவாதிகள் கக்கும் பச்சைப் பொய்களை அதிகம் நம்பும் கண்ணுள்ள குருடர்களைச் சாடி எச்சரிப்பது ஒரு சமுதாயக் கடமையென்றால் நல்ல ஒழுக்கத்தைக் கூட அனாவசியம் என்று அறிவுரைத்து, ஆபத்துக்கு வித்திடுகின்ற அபத்தமான அறிவீனத்திலிருந்து தப்ப எச்சரித்து வழிகாட்டுவதும் கூட சமுதாயக் கடமைதான்.

அனைத்துக்கும் மேலாக மனிதத்தை மதிக்க மறுக்கின்ற கொள்கைகளுக்கு எந்த நிலையிலும் எந்த வடிவிலும் எந்தக் காலத்திலும் எந்த இடத்திலும் அங்கீகாரம் அளித்துவிடக் கூடாது.

அரசியலிலும் சரி, மதத்திலும் சரி, சமுதாயத்திலும் சரி, அறிவியலிலும் சரி, மனிதாபிமானத்தில் பேதம் காண்பவரும் காட்டுபவரும் கண்டிக்கப்பட வேண்டியவரே, தண்டிக்கப்பட வேண்டியவரே!

சுருங்கச் சொன்னால் குறுமனக் குருவிகள் பருந்தென நடிப்பதைத் தடுப்பதே நமது அனைத்துச் சேவைகளிலும் தலையாய சேவை.

அடையாளம் காண்பதும் அடையாளம் காட்டுவதும் மனித அடிப்படையைக் காப்பதற்காக இருந்தால் அதுதான் அறிவுடைமைக்கான சேவை.

தவறாய் அறிவைப் பயன்படுத்தல் அறிவல்ல
தவறை அறிவாய்ப் பயன்படுத்தலும் அறிவல்ல
குறையாய் நிறையைச் சுட்டிடல் அறிவல்ல
குறையை நிறையாயச் சுட்டலும் அறிவல்ல
குறுமனம் பெருமன வேடமிட வந்தால்…
குனிந்தே அதனை அனுமதித்தலும் அறிவல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக