சனி, 30 ஜூன், 2012

மனிதாபிமானம் மரணித்தபோது... (சிறுகதை)

வானம் நீல சமுத்திரமாகப் படர்ந்திருக்க, அதனூடாக மஞ்சள் கதிரவன் தனது கொதிக்கும் கதிர்களைக் கொட்டிக் கொண்டிருந்தான்.

அந்த இயற்கையின் தாக்கத்துக்குப் போட்டிபோடும் விதத்தில் கொழும்பு மாநகரமும் அப்போது பொங்கி எழுந்து, புகைந்து கொண்டிருந்தது.

பெருந் தீச் சுவாலைகளும் புகைமண்டலமும் நீல வானத்தையே திரைபோட முயன்று கொண்டிருந்தன.

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தைத் தாக்கிவிட்டார்களாம். அதனால் அதன் பிரதிபலிப்பாகப் பதிலடி தமிழர்களுக் கெதிராகக் கொடுக்கப்படத் தொடங்கியிருந்தது.

தமிழர்களின் வாழ்விடங்களும் தொழிலிடங்களும் உடைமைகளும் உயிர்களும்கூட மதிப்பை முற்றாக இழந்த நிலையில் வெறும் விறகுக் கட்டைகளாக எரிந்தழிந்து கொண்டும் கறிக்கறுக்கப்படும் ஆடு, கோழிகள் போல அறுத்தழிக்கப் பட்டுக் கொண்டும் இருந்தன.


ஆம் 1983-ம் ஆண்டில்தான் அந்த அவலமான அத்தியாயம் அவ்வாறு அங்கே எழுதப்பட்டுக் கொண்டிருந்தது. அதன் பிரதிபலிப்புத்தான் அந்த வானத்தை எதிர்த்து நின்ற கரும் புகைமண்டலமாக எழுந்து, அந்தப் பகலை இரவாக்கப் பாடுபட்டுக் கொண்டிருந்தது.

அந்தத் தயரமிகு நாட்களில்தான் அங்கே வாழ்ந்த பல்லாயிரம் பேருக்கு வாழ்நாள் முழுவதுமே அழித்துவிட முடியாத, நிரந்தர வடுக்கள் பல மனிதநேய மறுப்பினரால் ஏற்படுத்தப்பட்டன. பொருள், உடல், உயிர். மானம், மரியாதை என்று அனைத்துமே ஒட்டுமொத்தமாகச் சூறையாடப்பட்ட கருமை படர்ந்த நாட்கள் அவை.

மக்களின் மனங்களிலெல்லாம் இனந்தெரியாத பதற்றமும் பயமும். என்றாலும் தெரிந்த செய்திகளும் தெரியாத வதந்திகளுமாக எவரெவரோ எதையெதையோ பரப்பி விட்டுக் கொண்டு இருந்தனர்.

பதற்றங்களின் பிதற்றல்களால் முழுநாடுமே முழுமையாக, அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது.

பல இடங்களில் இல்லங்களை விட்டுவிட்டு மக்கள் ஓடோடித் திரிந்தனர். கிறிஸ்தவ ஆலயங்களும் இந்துக் கோவில்களும் சிற்சில பொது மண்டபங்களும் அவர்களுக்கு அகதிப் புதுமனைப் புகு விழா நடத்திக் கொண்டிருந்தன.

பல பகுதிகளில் ஓரின மனிதர்கள் வெறிநாய்களாகவும் இன்னோரின மக்கள் ஆட்டுக் குட்டிகளாகவும் காலத் தாக்கத்தின் பலியெடுப்புக்குச் சாட்சியமளித்துக் கொண்டிருந்தனர்.

தமிழரும் சிங்களரும் சேர்ந்து வாழ்வதென்பது இனிக் கனவுதானோ என்று அஞ்சுமளவிற்கு நெஞ்சு துடிக்கும் கொடிய இனக்கலவரத்தால் இலங்கைத் தீவே ஒரு தீக்காடாக ஆகிக் கொண்டிருந்தது, அப்போது.

இராவணன் காலத்தில் அனுமானும் இலங்கைத் தீவை எரித்தானாமே! அதுவும் இப்படியா நடந்திருக்கும்? சே! சே! நிச்சயமாக இப்படி இருந்திருக்க முடியாது. அது ஒரு தனிநபர் நடவடிக்கை.

ஆனால் இதுவோ ஆட்சியும் ஆயுத பலம் மிகுந்த இராணுவமும் இனவெறியால் தம்மை வளர்ப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்து வந்த அரசியல்வாதிகளும் சிந்தையில் சரிபுரியா சிங்களப் பொதுமக்களுமாகச் சேர்ந்து நின்று, கூட்டணியாக நடத்திக் கொண்டிருந்த பயங்கர இனப்படுகொலைகளும் சொத்தழிப்புக்களுமாக அன்று தாண்டவமாடிக்
கொண்டிருந்தது.

திட்டமிட்ட விதத்தில் மக்களைப் பிழைவழியில் உற்சாகப்படுத்தி, அரச இயந்திரமே வழிநடத்திக் கொண்டிருந்ததால் அபயம் என்ற உறுதிக்கு அத்திவாரமே இல்லாமல் மக்களின் ஒரு பகுதி பயந்து, நடுங்கிப் பரிதவித்துக் கொண்டிருந்தது அந்த நாட்களில்.

காக்க வேண்டிய வேலிகளுக்குப் பயிரை மேயும் உரிமை வழங்கப்பட்டது. அதனால் பயிர்களின் தலைவிதி வேலிகளின் தனிப் பொறுப்பில் மட்டுமேதான் என்ற நிலை.

தன் அலுவலகத்துக்குச் சென்றிருந்த அமலன் விரைந்து வீட்டுக்குத் திரும்பிவிட்டான். ஒரு பொதுப்பணிப் பிரியனான அவனுக்குப் பல பணிகள் அப்போது இயல்பாகவே தேடிவந்தன. மக்களைத் திரட்டிப் பொருட்கள் சேகரித்து உதவிடும் ஏற்பாடுகள் துரிதமாக நடந்தன.

எல்லாரும் எல்லாருக்காகவும் என்று பொது மனப்பான்மையுடன் செயல்பட்டார்கள். தர்மம் தனது தனித்துவமான உருவத்தை அங்கே காட்டிக் கொண்டிருந்த விதம் இன்றைக்கும் மறக்க முடியாத அனுபவமாக அவனுக்கு இருக்கின்றது.

எந்த விதமான எதிர்பார்ப்புமே இல்லாமல் மக்கள் ஒருவருக்கொருவர் உதவிட முன்னின்ற அந்த நாட்கள் அமலனுக்கு ஓர் உண்மையை மட்டும் தெளிவாக உணர்த்தின.

மனிதாபிமானம் முதலிடம் கொண்டால் சுயநல எண்ணம் தொலைந்தே போகும் என்ற உண்மைதான் அது.

இதற்கிடையில் திடீரென மக்கள் கலவரப்படுவதாகத் தெரிந்தது.  சில மனிதர்கள்  புறக்கோட்டை என்னும் பகுதியில் சுடப்பட்டு, வீடுகளுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறார்களாம்.

ஒரு மனிதர். ஏழு குழந்தைகளுக்குத் தகப்பன். ஏதாவது குடும்பத்துக்கு வாங்கி வரலாம் என்று போனவர் துப்பாக்கிச் சூடு பட்டு, கண்மூடிக் கிடக்க, அவரது மனைவி என்ன செய்வதென்றே அறியாது கதறி அழ, சுற்றி நின்றவர்கள் கைகளைப் பிசைந்தபடி செய்வதறியாது நின்று கொண்டிருந்தார்கள்.

ஊரே கொதித்துக் குழம்பாகிக் கொண்டிருந்த நேரம்.

யாருக்குமே வைத்தியமனைக்குக் கொண்டு போகும் துணிச்சலில்லை.

பெரிய அரச மருத்துவமனை வெகு தூரத்தில் இருந்ததால் போனால் உயிரோடு திரும்பி வரமுடியுமா என்ற சந்தேகம் எழும் நிலைமை.

ஆஸ்பத்திரி நிர்வாகம்?

சிங்கக் குகைக்குள் ஆடு நுழைகிற கதைதான். அடிபட்ட ஆடுகள் வைத்தியத்துக்குச் சிங்கத்திடம் சென்றால்?

அன்றைய சூழ்நிலை அப்படித்தானிருந்தது.

வாடகை வாகனத்தில் எடுத்துச் செல்வதற்கும் பெருஞ் செலவு செய்ய வேண்டும். மிகச் சாதாரண மக்கள். அச் செலவுக்குத் தாக்குப் பிடிக்க முடியாதவர்கள். அந்த வட்டாரச் சூழ்நிலையும் அதற்கேற்றதாக இருக்கவில்லை.

இந்நிலையில் அமலனின் மனைவி அவனை அழைத்து,  “நீங்களாவது இந்த ஆளை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போங்களேன்? துப்பாக்கிச் சூடுபட்ட மனிதர் வேறெப்படியும் பிழைக்க முடியாதே!” என்று கெஞ்சினாள்.

“ஊர் படும்பாடு தெரியாதவளாக இருக்கிறாளே இவள்” என்ற அமலன் சிறிது தயங்கினான். அதே சமயம் இன்னோர் இளைஞன் அங்கே ஓடி வந்தான்.

“அண்ணன், அண்ணன் எங்கள் அண்ணாவையும் சுட்டு விட்டார்கள். காலில் காயம். ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக வேண்டும். டாக்சியில் போகலாம். எனக்கு சிங்களம் சரியாகப் பேச வராது. தயவு செய்து வருகிறீர்களா?"

அமலன் ஒரு கணம் திகைத்தான். சூழ்நிலை மறந்துவிட்டது அவனுக்கு.

“ தம்பி இங்கேயும் ஒருவர் காயப்பட்டுக் கிடக்கிறார். அவரையும் கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும். ஒன்றாக உங்கள் காரிலேயே எடுத்துச் செல்லலாமா?”

அவன் உடனடியாகவே சம்மதித்தான்.

அடுத்த சில நிமிடங்களில் இருவரையும் ஏற்றிக் கொண்டு, அமலனும் அந்த இளைஞனும் புறப்பட்டார்கள்.

கூடப் போய் ஆபத்தில் மாட்டிக் கொள்ள, மற்றவர்கள் எவருமே தயாராக இல்லை என்பது அவர்களின் முகங்களில் எழுதப்பட்டிருப்பதை அமலன் வாசித்துக் கொண்டான்.

யோசிக்கவும் விவாதிக்கவும் அது ஏற்ற நேரமில்லையே! எனவே உடனே புறப்பட்டுவிட்டார்கள்.

தன் அலுவலகத்தையும் தாண்டி, வண்டி சென்ற போது, அமலன் கவனித்தான்.

காலையில் தான் பார்த்திருந்த முழுக்கடைகளில் நூற்றுக்குத் தொண்ணூறு வீதமானவை இப்போது வெறும் எலும்புக் கூடுகளாக உருமாறி இருந்தன.

அத்தனையும் எரிந்து, கரிந்து, சரிந்து கிடந்தன. புகை இன்னும் அடங்காமல் எழுந்து, நிமிர்ந்து கொண்டு இருந்தது.

தெருத்தெருவாய் எரிந்து கிடந்தன தமிழர் வர்த்தக மையங்கள். நாடு பூராவும் அவர்களின் உயிர்களும் உடைமைகளும் கூட அப்படித்தான்.

வங்கி முதல் புடவைக் கடை வரையிலும் இரசாயனக் கடை முதல் டீக்கடை வரையிலும் எல்லாமே ஏகமும் சாம்பல் மேடாக மட்டும் நின்று சமத்துவ கீதம் பாடிக் கொண்டிருந்தன.

                                            ..........................................

பெரிய மருத்துவ மனைக்குள் நுழைந்த போது ஒரே பரபரப்பு. நாலா பக்கமும் காயப்பட்ட மக்கள் மயம். அவர்களுக்குள்ளும் ஓரிரு முகங்கள் அமலனுக்குத் தெரிந்தவை. அமலன் பெயர்ப் பதிவு போன்ற அத்தியாவசியப் பணிகளை ஓடி, ஓடிச் செய்தான்.

அவன் சிங்களத்திலே பேசினாலும் பதியச் சொன்ன பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் என்பதால் பதிவாளரின் முகம் தீயால் சுடப்பட்ட புழுவைப் போல அடிக்கடி சுருண்டுகொள்வது தெரிந்தது.

அந்த ஆபத்தான நிலைமையிலும் தமிழ் உயிர்கள்பால் இரக்கத்தை விடவும் வெறுப்பே தமக்கு அதிகமாக இருப்பதை அவர் அப்படி அப்பட்டமாகக் காட்டிக் கொண்டிருந்தார்.

அமலனுக்கும் தர்ம சங்கடமாக இருந்தது.

அந்த முகத்தின் வெறுப்புணர்வின் முன் நின்று பேசுவதற்காக செயற்கையாகப் புன்னகைத்துக் கொண்டே இருந்ததில் கொள்ளியின் நெருப்பைக் கையில் வைத்துக் கொண்டு “அது சுடவில்லைப் பார்!” என்று காட்டி ஏமாற்ற முயல்வதைப் போன்ற ஒரு கொடிய, அவமானகரமான
அனுபவத்தை அவன் அனுபவித்தான்.

அவசர சிகிச்சைப் பிரிவில் ஏழு பிள்ளைகளின் தந்தையான அமலன் கொண்டு சென்றிருந்த மனிதர் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மடமடவென்று சிகிச்சைகள் ஆரம்பமாகும் என்று எதிர்பார்த்தவனாக உள்ளே சற்று உற்றுப் பார்த்தான் அமலன்.

என்ன ஆச்சர்யம்! ஒரு சாதாரண காய்ச்சல்காரனைக் கவனிப்பதைப் போல மிகவும் அமைதியாகவே அங்கே வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

மனிதாபிமானத்திற்குத்தான் அப்போது காய்ச்சல் என்று சம்பவங்கள் நிரூபித்துக் கொண்டிருந்தன.

அமலன் தன்னையும் அறியாமல் கடவுளிடம் அந்த உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்று வேண்டிக் கொண்டான். வேறு வழி எதுவுமே இல்லையே!

காலில் சூடுபட்டிருந்தவரை இன்னும் உள்ளே எடுக்கவில்லை. அவரது தம்பி செய்வதறியாது தன்னைத்தான் எல்லாவற்றுக்கும் எதிர்பார்த்து நிற்கிறான் என்பது அமலனுக்குப் புரிந்தது.

அவரது பெயரைப் பதிந்துவிட ஓடினான். பெயரைப் பதிந்துவிட்டுத் திரும்பும் போதுதான் அந்தப் பெரிய அனர்த்தம் நிகழ்ந்தது.

ஒரு நபரைச் சிலர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கொண்டு வந்திருந்தார்கள். ஆபத்தான நிலை. இரண்டு மூன்று இடங்களில் துப்பாக்கி ரவைகள் துளைத்திருந்ததுபோல் தெரிந்தது.

ஆனால் அவர் தமிழரல்லர். அப்படியானால்?

யாரோ சொல்வது கேட்டது.

“இவரைத் தமிழன் ஒருவன் சுட்டுவிட்டானாம்.”

பூகம்பம் ஏதாவது நிகழ்ந்து விட்டதா?

ஏன் முழு ஆஸ்பத்திரியுமே இப்படிக் குலுங்குகின்றது?

ஏன் மக்கள் அங்குமிங்குமாக ஓடுகின்றார்கள்?

“தடீர், தடீர்” என்று யார் யாருக்கோ அடிவிழும் சப்தம் அமலன் நின்று கொண்டிருந்த அறைக்கருகில் கேட்டது.

புரிந்துவிட்டது விஷயம். கலவரம் அங்கும் ஆரம்பமாகிவிட்டது என்று தெரிந்தது.

இனியும் நின்றால்…

அமலனையும் அறியாமலே அவனது உடல் நடுங்கத் துவங்குவதை அவன் உணர்ந்தான்.

மரண பயம்?

வேறென்ன? அதுதான். அது மட்டுமேதான்.

காலில் காயம் பட்டிருந்த நபரின் பக்கத்தில் அவரது தம்பியைக் காணவில்லை.

“அண்ணன் நீங்களும் இப்படி இந்தப் பக்கத்தாலே ஓடிப்போய்விடுங்கள். உயிருக்கு ஆபத்து.”

“எங்கே உங்கள் தம்பி?”

“அவனை நான்தான் ஓடிவிடச் சொன்னேன். அவனுக்குச் சிங்களம் வேறு தெரியாது. எப்படியோ ஓடிவிடுவான்.”

தன்னுயிரே ஆபத்தில் இருந்தபோதும் மற்ற உயிரைக் காக்க விழையும் அந்தச்
சகோதரனைப் பார்க்க நெஞ்சைப் பிழிந்தது அவனுக்கு.

அருகிலே குனிந்து மெல்லிய குரலில் கேட்டான்.

“உங்களுக்கு சிங்களம் தெரியுமா?”

பேசிச் சமாளிக்குமளவிற்குத் தனக்கு முடியும் என்றதும் ஒரு சிறிய ஆறுதல்.

ஆபத்தின் காற்று அவ்வறையையும் நெருங்கி வருவது புரிந்தது.

மடமடவென அவரை அமர்த்தியிருந்த சுழல் வண்டியைத் தள்ளிக் கொண்டு இன்னொரு பக்கமாக ஓடிய அமலன் ஒரு மஙகலாக ஒளி வீசிக்கொண்டிருந்த பகுதிக்குள் வண்டியைக் கொண்டு நிறுத்தினான். அவ்விடத்தில் ஆள் அரவமே இல்லாமலிருந்தது சற்று ஆறு தலை அளித்தது.

அப்பப்பா! மயான அமைதியா அது? இல்லவே இல்லை மரணத்தின் வருகையின் அமைதி.

அப்படி ஒரு கொடுமைமிகுந்த உள்ளத்தையும் உடலையும் ஒருங்கே உலுக்கிவிட்ட பயங்கர அமைதி.

“கையில் காசு ஏதாவது வைத்திருக்கிறீர்களா? “

இல்லையென்றவரின் கைக்குள் தன்னிடமிருந்த ஐம்பது ரூபா தாளைத் திணித்தான் அமலன்.

“கவனமாக வைத்துக் கொள்ளுங்கள். எப்படி சமாளிப்பதென்று தெரியும்தானே?"

ஆஸ்பத்திரிகளில் தொழிலாளர்களுக்கு சம்பளத்தைவிட கிம்பளத்திலேயே அதிக ஆர்வமும் நாட்டமும் உண்டு என்பதை அவனைப் போலவே அவரும் அறிந்து வைத்திருந்தது அந்தச் சமயத்தில் அவனுக்கு ஆறதலை அளித்தது.

அவர் சமாளித்துக் கொள்வார் என்று ஒரு வரட்டு விசுவாசம் அவனுள் எழுந்து வந்து ஆறுதல் சொன்னது.

கணப் பொழுதில் முடிவெடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமான நிலை. சில கணங்கள் அவரையே உற்றுப் பார்த்தான் அமலன்.

இதுதான் கடைசி முறையோ?

மனம் இனந்தெரியாத கவலையால் உயிரைக் குடைந்தது.

இனந்தெரியாத ஒரு பாச உணர்வு. அது அப்படிப்பட்ட அனுபவங்களின்போது மட்டும்தான் எழ முடியும். இரத்தத்தையே உறைய வைக்கும் துயரமான அனுபவம். எழுத்தால் விபரிக்க முடியாதது அது.

அமலனின் கண்கள் பனிப்பதைக் கண்டு, அவர் அவனது கைகளைப் பிடித்துக் கொண்டு கூறினார்.

“ஆண்டவர் உங்களைப் பத்திரமாக வீடு கொண்டு சேர்ப்பார். உடனே புறப்படுங்கள். கண்ட கார்களில் ஏறிவிடாமல் பார்த்து…”

தானே மரணததின் விளிம்பில் இருந்து கொண்டு தனக்கு வழி சொல்லும் அந்த இதயத்தைக் கனத்த மனத்தோடு பார்த்தான் அமலன்.

தீக்குள் விழப்போகும் பஞ்சு மரத்தில் தொங்கும் இலவுக்குப் புத்தி சொல்கிற
கதையல்லவா!

கைகுலுக்கி விடை பெற்றான்.

ஒரு கணம்.

டக்கென்று தான் அனுமதித்திருந்த ஏழு குழந்தைகளின் தகப்பனின் அறைக்குள் ஓடிச் சென்று எட்டிப் பார்த்தான்.

உலகமே அவனது காலடியில் நகர்வது போன்ற ஒரு பிரமை. நாம் இருப்பது நாடா அல்லது காடா? நகரமா அல்லது நரகமா?

அந்த மனிதருக்குப் பொருத்தப்பட்டிருந்த… அவன் மருத்துவம் படித்தவனல்ல. ஆனால் ஆபத்துக்கு உதவும் உபகரணங்கள் அகற்றப்பட்டிருந்தமையைப் புரிந்து கொள்ள அவ்வளவு பெரிய தகைமையொன்றும் தேவையில்லையே!

எத்தொழிலிலும் கொடியவர் இருக்கலாம். இத்தொழிலில்? இதன் அத்திவாரமே
இரக்கம்தானே! மனிதாபிமானம்தானே!

நம்பவே முடியாத அதிர்ச்சி கலந்த ஒருவித பயவுணர்வு அவனைச் சூழ்வதை அவன் உணர்ந்தான். ஊசலாடும் உயிரிடமே இரக்கம் காட்டாதவர்கள் தன்னிடம் எப்படி நடந்து கொள்வார்கள்?

மனம் நம்பவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் தத்தளித்தது. அநேகமாக…. அந்த ஆபத்தான சூழ்நிலையில் அதுபற்றி எவரிடம், என்னத்தை, எப்படி விசாரிப்பது?

“தம். தம்.” அடிவிழும் சப்தம்.

“ஐயோ! ஐயோ! அம்மா! ஐயோ! ஐயா! ஐயா! ” ஒரு தமிழ் அப்பாவியின் மரண ஓலம்.

கால தேவதையின் காலடி ஓசை தானிருந்த அறைப் பக்கம் நெருங்கி வருவதை உணர்ந்தான் அமலன்.

பயம் வந்தால் மனிதன்தான் எப்படி மாறிப் போய் விடுகிறான்! தனது இயல்பையே இழந்துவிடுகிறானே!

விடை கொடுத்தவரின் பக்கம் திரும்பிப் பார்த்தான். அவர் எங்கோ பதுங்குவதற்காக வண்டியை உருட்டிக் கொண்டு, ஓடிக் கொண்டிருந்தது தெரிந்தது.

என்ன செய்கிறோம் என்றே புரியாதவனாக எதிர்ப்பட்ட வழியொன்றினூடாக
ஆஸ்பத்திரியின் உட்பக்கமாக ஓடத் தொடங்கினான் அவன்.

பயம் தன்னைத் தொடும் வரையில் அதை அலட்சியப்படுத்துகின்ற மனிதன் அது தன்னைத் தொடும்போது எப்படியெல்லாம் தடுமாறிப் போய்விடுகின்றான்!

அவன் நடப்பது போல பாவனை செய்து கொண்டு, வேகமாக ஓடிக் கொண்டிருந்த பாதை மிக நீண்டிருந்தது.

ஆனால் அதன் எல்லையில் மறுபக்க வெளிவாசல் இருந்தது. அது அவனுக்கு ஏற்கனவே தெரியும். அதனால் எப்படியும் தப்பித்து விட முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது.

திரும்பிப் பார்க்காமலே அவன் நடந்தான். திடீரென அவனுக்குப் பின்னால் தடதடவென்று சப்தம்.

பொருட்கள் உடைந்து நொறுங்கும் சத்தம் வேறு.

பயமுறுத்தலின் எதிரொலிகள். திரும்பிப் பார்க்கவும் பயம் இடம் கொடுக்கவில்லை.

சாவுக்கும் வாழ்வுக்கும் நடுவில் எந்தப் பக்கம் சாய்வதென்றியாது ஓடுவது போன்ற ஒரு அதிர்ச்சி தரும் பிரமை அவனை அலைக்கழித்தது.

திடீரென அவனது வேகமான நடை, ஓட்டமாக மாறத் தொடங்கியது.

இருபதடி தூரம்தான் ஓடியிருப்பானவன். திடீரென ஓரு வார்டுக்குள்ளிருந்து ஒரு நர்ஸ் பாதைக்குக் குறுக்கே பாய்ந்து வந்து, வழியை மறித்து நின்றாள்.

“நீ தமிழன்தானே?"

அந்தக் குரலில்தான் எத்தனை இகழ்ச்சி! எத்துணை ஆணவம்! எத்துணை அகங்காரம்! எத்துணை வெறுப்பு!

சாதாரண நாளாக இருந்தால் ஏற்ற பதிலை எப்படித் தருவது என்பது அமலனுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இன்று? உயிருக்கே ஆம் இல்லை என்ற நிலை. என்ன செய்ய முடியும்?

"இல்லையில்லை. நான் தமிழனில்லை.”

சொந்த அடையாளத்தையே மறுதலிக்க வைத்த பயத்தின் பிரதிபலிப்பை அவனது முகத்தில் படித்துவிட்ட அந்தப் பெண் அவனது வலக் கரத்தை இறுகப் பற்றியவாறே கத்தினாள்.

திமிறிக் கொண்டு ஓட முயன்றானவன்.

அதற்குள் எங்கிருந்துதான் அத்தனை மிருகங்கள் வந்த குவிந்தனவோ!

கைகளில் கிடைக்கும் எதுவுமே ஆயுதந்தான் என்ற இலக்கணத்துடன் ஒரு சிறிய படையே வந்து அவனைச் சுற்றி அணிவகுத்து நின்று கொண்டது.

கண்ணிமைப்பதற்குள் ஒருவன் அமலனின் தலைமயிரைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக் கொண்டு போகத் தொடங்கினான்.

அவனைத் தொடர்ந்தவர்களின் கைகளிலிருந்த தடிகள், நாற்காலிக் கால்கள் இன்னும் என்னென்னவெல்லாமோ அமலனின் முதுகையும் கால்களையும் பதம் பார்க்கத் துவங்கிவிட்டன.

காதைப் பொத்திச் சேர்த்தாற்போல பலமாக அறைந்தான் ஒரு பலவானான காடையன். காதெல்லாம் குப்பென்று அடைத்துவிட்டது. எதுவுமே கேட்கவில்லை. மேலும் மேலும் அதே விதமான அடிகள்.

ஓர் அறைக்குள் அவனை இழுத்துக் கொண்டு நுழைந்தது கூட்டம். அங்கே ஓர் இளைஞன். சுமார் இருபது இருபத்திரெண்டு வயதிருக்கலாம். நடுங்கியவாறே நின்று கொண்டிருந்தான். ஏற்கனவே அவன் மிகக் கடுமையாக அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறான் என்பதைப் பார்ததுமே அமலன் புரிந்து
கொண்டான்.

அடுத்த சில நிமிடங்கள் அந்த அறைக்குள் பெரும் கொலைக்கள அமர்க்களம்.

எவ்வளவு நேரத்துக்குத்தான் அடி வலிக்கும்?

உடம்பு மரத்துக்கொண்டு வருவதை அமலன் உணர்ந்தான். கண்கள் இருண்டன. வாதைகள் தொடர்வது தெரிந்தது. ஆனால் வலி ஓர் எல்லையைத் தாண்டி விட்டது. மூச்சப் பேச்சு இன்றி விழுந்தபின் என்ன நடந்ததோ?

திடீரெனக் கண் விழித்தான் அமலன்.

எங்கே கிடக்கிறோம்?

அது மிகவும் வித்தியாசமான இடமாகத் தெரிந்தது. மெதுவாக அவன் விழிகள் சுழன்றன. தலையைத் திருப்பிப் பார்த்தான்.

என்ன ஒரே பிணங்களாகக் கிடக்கின்றனவே! ஒருவேளை… ஆம் அதுவேதான். பிணவறையேதான்!

அதிர்ந்து போன அமலன் சட்டென எழுந்துவிட்டான். அவ்வளவு தெம்பு எப்படி வந்தது? அது அவனுக்கே தெரியவில்லை.

தன்னருகே கிடந்த உருவத்தை- அல்ல அல்ல பிணத்தை- அவன் பார்த்தான்.

நெஞ்சை அடைப்பது போலிருந்தது. தன்னுடனே அந்த அறையில் அடிவாங்கிய அந்தச் சின்ன உயிர்தான் சவமாக அங்கே துவண்டு கிடந்தது.

யார் பெற்ற பிள்ளையோ? யாரைக் காப்பாற்ற வந்து, தன் உயிரைக் கொடுத்துவிட்டு, அப்படித் துவண்டுபோய்ப் பிணமாகிக் கிடக்கிறதோ?

அழ முடியவில்லை அமலனால். மரண பயமானது அந்த அளவுக்கு அவனை அழுத்திக் கொண்டிருந்தது அப்போது.

உடல் நடுங்க முடியாதபடிக்கு ஒரே வருத்தம். என்றாலும் உயிர் தப்பும் பேராவல் உடலை இயங்க வைத்ததை அவன் உணர்ந்தான்.

தான் சில மணிகளாக அங்கே கிடப்பதை அங்கே தொங்கிக் கிடந்த கடிகாரம்
உணர்த்தியது. தனது கைக்கடிகாரம் காலமாகிவிட்டதை அதன் உருத்தெரியா உருவம் சொல்லிக் கொண்டிருந்தது.

இனியும் தாமதித்தால் இதர பிணங்களோடு பிணமாகத் தானும்…

பயம் அவனை எழும்ப வைத்துவிட்டது.

மெதுவாக எழுந்தவன் கதவு வரை சென்று பார்த்தான்.

நல்ல வேளை எவரது நடமாட்டமும் இன்றி, அவ்விடம் அமைதியாகவும் வெறிச்சோடியும் கிடந்தது.

அடிமேல் அடி வைத்து நடந்தவன், வாசல் வரை சென்று கேற்றைத் தள்ளிக் கொண்டு வெளியே சென்று நின்றான்.

சிறிது தூரத்தில் ஓர் ஆட்டோ ரி க்ஷா நின்று கொண்டிருந்தது.

“கடவுளே! இவனாவது மனிதாபிமானத்தோடே நடந்து கொள்ள உதவி செய்தருளும்."

அவனது உதடுகள் முணுமுணுத்தன என்பதை விட, துடிதுடித்தன என்பதே சரி.

அமலன் நகருவதற்கு முன்பே அந்த ரிக்ஷா வேகமாக அவன் பக்கம் திரும்பி வந்து நின்றது.

அதிர்ஷ்டம்! அந்த ரிக்ஷாவை ஓட்டி வந்த சாரதி ஒரு முஸ்லீம் இளைஞன்.

அமலனிடமிருந்து ஓர் ஆறுதல் பெருமூச்சு. இறைவன் காப்பாற்றி விட்டார்.

“டக்கெண்டு ஏறுங்க தொரே! நிக்க வேணாம். கண்டா டேஞ்சர்..”

அமலனுக்கு பலம் எப்படி வந்தது? டக் கென்று அவன் சொன்ன மாதிரியே ஏறிக்
கொண்டானே!

உயிராசையா? அப்படித்தான் இருக்க வேண்டும்.

“என்ன தொரே அந்த ஷைத்தானுவ கிட்ட வசமா மாட்டிக்கிட்டீங்களா? ஷேட்டெல்லாம் ரெத்தமா வேறே இருக்கே! மொதல்ல கவர் போடுறேன்.”

மனிதாபிமானமே மரணித்துப் போயிருந்த அந்த நேரத்தில் அந்த மனிதனின் ஆறுதல் வார்த்தைகள் பெரும் மருந்துகளாக அவனுள் செயல்பட்டன. அவை மிக மிக அத்தியாவசியமான தேவைகளாக அப்போது அவனுக்கு இருந்தன.

தனது வீட்டருகில் அமலனை இறக்கி விட்டபோது, அமலன் தன்னைப் பத்திரமாகக் காப்பாற்றி அழைத்து வந்தமைக்காக நன்றி சொன்னான். புறப்படும்போது அந்த முஸ்லீம் சகோதரன் சொன்னான்.

“அல்லா இருப்பது நெசம்னா இந்த ஊரு நாசமாத்தான் போவும். ஏன்னா நல்லது இருக்கச் சில நாசத்தக் கையிலெடுக்கிறது சாப்பாடு இருக்கச்சில நஜீசை எடுக்கிற மாதிரி. கவனமா இருங்க தொரே! முடிஞ்சா நான் இன்னொருக்கா வந்து பாக்கிறேன். சரியா?”

பணம் காசுக்கு மேலேயும் ஒன்று இருக்கிறதே, அதைத்தான் அந்தச் சகோதரன் எடுத்துக் காட்டிவிட்டுப் போனான். மனிதாபிமானத்தின் முன் மதவேறுபாடுகள் அனைத்துமே தூள் தூள்.

வண்டியில் வரும் வழியில் அமலன் தனக்கு நடந்ததை அவனிடம் விபரமாகச் சொல்லி இருந்தான்.

சில வீபரீதமான சந்தர்ப்பங்களில் சில வேடிக்கையான பாடல்கள் நம் மனதில் ஒலித்து புன்னகைக்க வைப்பது உண்டல்லவா! அதைத்தான் அமலனும் அன்று அனுபவித்தான்.

ஒரு பழைய திரைப்படப் பாடல்தான் அது.

தர்மம் தலை காக்கும்..தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிற்கும்… செய்த
தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்.

அட, தர்மம் தலையைக் காக்குமாமே! அது உண்மைதானே! நமது தலை மட்டும் தப்பாமலிருந்தால்…?

ஒரு பயம் கலந்த புன்னகை அமலனின் முகத்தில் நெளிந்தது.

அன்று இரவு பல குழந்தைகளின் தகப்பனான மனிதர் இறந்து விட்டதாக ஆஸ்பத்திரிக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட குடும்பம் அறிந்து கதறிய சப்தத்தால் அந்தப் பகுதியே கண்ணீர் விட்டு அழுதது எனலாம்.

சிரித்த முகத்தோடு காலையில் கடைக்குச் சென்ற தலைவனின் பிணம் கூட பார்க்கக் கிடைக்காமல் அந்த கலவர காலம் சதி செய்தது  பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது அனைவர்க்கும்.

அவ்வளவு பாடுபட்டும் அநியாயமாக அந்த உயிரைப் பலிபோக விட்டு விட்டோமே என்ற கவலை அமலனை மிகவும் வாட்டியது.

சக்திக்கும் மிஞ்சி நடந்துவிடும் சில சம்பவங்களால் நல்லவற்றையும் கூட சந்தேகிக்க வைத்து விடும் விதியின் விளையாட்டை நினைத்து அழுவதா? சிரிப்பதா?

ஆஸ்பத்திரியில் தான் விட்டுவிட்டு வந்த மற்றவரின் கதி என்னவாயிற்றோ என்ற கவலை வேறு எழுந்தது அமலனுக்கு.

சில நாட்கள் கழிந்தன. நிலைமை சீரடைவது தெரிந்தது. ஒரு நாள் மாலை வீட்டு மணி அடித்தது. கதவைத் திறந்த அமலனின் கண்முன் ஓர் ஊன்று தடியுடன் அந்த மனிதர் நின்று கொண்டிருந்தார்.

உள்ளே அழைத்து உபசரித்த அமலனிடம் அவர் சொன்னார்:

“உங்கள் உதவியாலேதான் என் உயிர் தப்பியது. அந்த ஐம்பது ரூபாவை வைத்துத்தான் அந்த இரவு முழுவதும் ஒருவனின் உதவியுடன் பதுங்கி இருக்க முடிந்தது. அடுத்த நாள்தான் எனக்கு ஆபரேஷன் நடந்தது. நல்ல வேளை கொஞ்சம் நல்ல டாக்டர்கள். உங்களுக்கு ரொம்ப நன்றி."

“கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நம் இருவரையுமே காப்பாற்றிவிட்டாரே!”

அப்போது அவர் சொன்னார்: “ நீங்கள் போன பிறகு பலர் அங்கே நடந்த தாக்குதலிலே செத்தே போனார்களாம். பிணங்கள் பதிவு செய்யப்படாமலே மொத்தமாக புல்டோசர்களிலே அள்ளப்பட்டு புதைக்கப்பட்டனவாம். தெரியுமா?"

அமலனுக்குத் திக்கென்றிருந்தது. தான் மட்டும் மயக்கம் தெளியாமல் இன்னும் சிலமணி நேரங்கள் அந்தப் பிணவறைக்குள் கிடந்திருந்தால்?

அவனுடல் இலேசாக நடுங்குவதை அவனே உணர்ந்தான். மீண்டும் அதே தர்மம் தலை காக்கும் பாடல் தலைக்குள் ஒலித்தது. சிரித்துக் கொண்டான்.

நன்றி சொல்ல வந்த அந்த நல்ல உள்ளமும் தன்னைத் தெரியாமலே மறைந்து போன அந்தத் தகப்பனும் தன்னோடேயே அடிபட்டு, அநியாயமாக மாண்டுபோன அந்த இளம் உயிரும் வாகனமோட்டி வந்து உயிர்காத்த அந்த நல்ல சாரதியும் மாறி மாறி அவனுள் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

விபரிக்கவே முடியாத விசித்திரமான பயமும் பயங்கரமும் ஆறுதலும் அமைதியும் கலந்த ஓர் அதிர்ச்சி நிறைந்த அனுபவமாக அமலனுக்குள் என்னென்னவெல்லாமோ நடந்து கொண்டிருப்பதைப் போன்ற ஓர் உணர்வு நுழைந்தோடிக் கொண்டிருந்தது.

அதை அவதானித்த அவர் அமலனிடம் விசாரித்தார். அமலன் தனக்கு நடந்த சம்பவங்களை எடுத்து விளக்கினான். அதைக் கேட்கக் கேட்க அவரது  உடம்பு நடுங்குவது வெளிப்படையாகவே தெரிந்தது.

“கவலைப் படாதீர்கள். எல்லாமே நல்லபடியாக முடிந்து விட்டதே! அதுவே பெரிய ஆறுதலான விஷயமல்லவா?”

அமலன் அவருக்கு ஆறுதல் சொன்னான்.

அவர் அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதார்.

சில நிமிட இடைவெளியின் பிறகு, விடை பெறும் நேரம் வந்தது.

விடைபெற்றுப் புறப்படு முன்னர் அந்த சகோதரன் சொன்னார்:

“ நாம் செய்யும் நன்மையும் தீமையும்தான் நம் கூட கடைசிவரை சாட்சி சொல்ல வரும். மற்ற எல்லாமே தற்காலிகமானவை மட்டுமேதான். உங்களுக்கு மட்டும் ஏதாவது நடந்திருந்தால் நான் கடவுளைக் கும்பிடுவதையே நிறுத்தியிருந்திருப்பேன் தெரியுமா? இப்போது கடவுளை உண்மையாகவே நம்புகிறேன் நான்.”

ஒரு நல்ல உள்ளத்தின் உண்மைப் புலம்பல்தான் அது என்பது அமலனுக்கு மிகவும் நன்றாகவே புரிந்தது.

அதே சமயம் அவனுக்குள் எங்கேயோ இருந்து கொண்டு அதே திரைப்படப்பாடல் மீண்டும் ஒலித்து, ஒலித்துச் சிரிக்கத் தொடங்கியது.

“தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்…”

காலச் சக்கரமே!

மனதார பிறர்க்கு நாம் தீமையே செய்யேல் வருநாளில் அதற்கான நன்மை நமைச் சேரும்
கனவாகிப் போனாலும் நடந்தவைகூட, நாம்செய்யும் நன்மைநமைக் காத்துதுணை நிற்கும்
பிணமாகிப் போகலாம் என நம்மை நெருங்கிடும் பென்னம்பே  ராபத்தில் இருந்துமே காத்திடும்
உணர்ந்திடும் அனுபவம் கிடைத்திடும் போதுதான் புண்ணியம் தனினுண்மை உணரலும் கூடும்

பலன்கரு தாமலே செய்திடும் புண்ணியம் முதலிலே இலகுவாய்ப் புரிவதே இல்லை
கலங்கிடும் மக்களின் தயர்தனைத்துடைத்திடும் கடமையில் புண்ணியம் குறைவதே இல்லை
உலகிலே வாழ்ந்திடும் சின்னஞ்சிறு காலம் உதவிசெய் நல்லுள்ளம் கொண்டுநாம் வாழ்ந்தால்
உலகதில் வாழ்ந்திடும் போது மதன்பின்பும் புண்ணியம் தொடர்வதோ குறைவதே இல்லை.

(- பூவரசு 2005 ஆண்டு மலரில் வெளிவந்தது.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக