திங்கள், 2 ஜூலை, 2012

பிணமும் கொலை செய்யும் (சிறுகதை)

1983.
ஜூலை மாதத்தில் ஒரு நாள்.

வறுமையின் கொடிமட்டும் பறக்கின்ற ஓர் பரம ஏழையின் வீடு.

மூன்று நாட்களாகக் காய்ச்சலில் படுக்கையில் கிடந்து வாடிக் கொண்டிருந்தான் மாதவன். அவனைச் சற்று எழுப்பி, நிமிர்த்திச் சுவரோடு சாத்தி வைத்தாள் சொர்ணம்.

காலையிலிருந்து தனது கணவனின் நெற்றியில் ஒரு சிறிய பழந்துணித் துண்டை வினாகிரியில் முக்கியெடுத்து விரித்துப் போடுவதும் அது காய்ந்ததும் மீண்டும் முக்கிவிட்டுப் போடுவதுமாக இன்னும் தனது கடமையைச் செய்து கொண்டு இருந்தாள். இருந்தும் காய்ச்சல் குறையும்போல இல்லை.

வைத்தியரிடம் தனது கணவனைக் கொண்டு போவதென்பது அவளைப் பொறுத்தவரையில் ஓர் ஐந்து நட்சத்திர உணவகப் பிரவேசத்துக்கு ஒப்பானது. அதனால்தான் வறியோர் வைத்தியமான வினாகிரி வைத்தியத்தில் அவள் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.

வறுமை என்பதைத் தந்தமைக்காக இறைவனைப் பழிப்பதா அல்லது பணத்தைப் பழிப்பதா அல்லது அதனைப் படைத்த மனிதனைப் பழிப்பதா என்கின்ற வாதமெல்லாம் அவளுக்கு அனாவசியமானவை.

அடுத்த வேளைப் பசிக்குப் புல் பூண்டினைத் தவிர்த்து வேறேதாவது கிடைக்காதா என்று ஏங்கி நிற்கும் வறுமை நிலையில் இந்த அனாவசிய அறிவு பூர்வ சிந்தனைகள் வெறும் ஏட்டுச் சுரைக்காய்கள்தானே!

வறுமையில் பசி என்பது தீக்குழம்பில் பழுக்கக் காய்ச்சிய இரும்பைத் தோளில் சுமக்கின்ற கொடிய நோவுக்கு ஈடானது. அது சொல்லிப் புரியக் கூடியதல்ல. பட்டு அனுபவப்பட்டால் மட்டுமே புரியக் கூடியது.

எவரோ "பசி வந்திடப் பற்றும் பறந்துபோம்" என்று சொன்னமை சும்மா அல்ல. எங்கோ எரிகின்ற வயிற்றுடன் வாய் பிளந்து நிற்க நேர்ந்த அனுபவத்துடன் தான்.

"அம்மா பசி தாங்க முடியவில்லையம்மா."

ஆறு வயதுப் பாலகன் சந்திரனின் மழலை ஒலியுடன் ஓர் ஈட்டி வந்து தன் இருதயத்தைத் துளைப்பதை சொர்ணம் உணர்ந்தாள்.

பசி பினைகின்ற தனது அடிவயிற்றில் அந்த வலியடன் ஒரு தீப்பிழம்பும் வந்து விழுந்ததைப் போன்ற கொடிய வேதனை அவளை ஆட்டியது.

அந்த வலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் துடியாய்த் துடித்தது அந்த ஏழைத் தாயின் உடலம். உடல் சரிந்து சுவரோடு சாய்ந்து விட்டாள் அவள்.

காலையிலிருந்து வெறும் தேனீரை மட்டுமே அவ்வப்போது கொடுத்துச் சமாளித்தவளுக்கு இதற்கு மேலும் குழந்தையை ஏமாற்ற முடியாது என்பது புரிந்து மனம் கலங்கித் தவித்தது..

இருந்தாலும்….

என்ன இருந்தாலும்? எதுவுமே இல்லையே!

வறுமையின் கொடுமை தனது உடலுக்குள் படுத்துகின்ற சித்திரவதையைத் தனது குழந்தையும் சுமக்க நேர்ந்திருக்கின்றதே என்ற கவலையின் தாக்கம் அவளை அப்படியே ஒரு விதமான மன விறைப்புக்குள்  இறக்கிக் கொண்டு போவதை அவள் உணர்ந்தாள்.

காலம் மாறும் என்பார்கள். ஆனால் அவளைப் பொறுத்தவரை அது மாறவே மாறாத கற்பாறையாகி விட்டிருந்ததே உண்மையென அவளது மனதிற்குப் பட்டது.

எட்டிய தூரத்தில் சுவரோடு சாய்ந்தபடி கூரையை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்த தனது கணவனை அவளது விழிகள் அவதானித்தன.

நகரவே முடியாத பள்ளத்துக்குள் வீழ்ந்து விட்ட வாகனத்தை வெளியிலெடுக்க எவரது உதவியுமே இல்லாமல் தனியாக அதனை இழுத்தெடுக்கத் தவிக்கும் ஒரு சாரதியைப் போல ஒருவிதமான திருதிருவென விழிக்கும் போக்கற்ற நிலையில் அவன் தவிப்பது தெரிந்தது.

அவன்தான் என்ன செய்வான்?

அவனுக்குத் தெரிந்த ஒரே தொழில் செருப்பு பழுது பார்க்கின்ற தொழில்தான்.

ஒரு சிறிய பெட்டியில் கொஞ்சம் சிறு ஆணிகளும் இரு சற்று தடிப்பான ஊசிகளும் ஒரு சிறிய சுத்தியல், குறடு, சில துண்டு தோல்கள், சில துண்டு சைக்கிள் டியூப் இரப்பர், ஓர் இரும்புத் தகடு, கொஞ்சம் கனமான நூல் இவைதான் அவனது வர்த்தகத்தின் ஏகபோக சொத்துக்கள்.

அந்த மூலதனத்துடன் எவராவது தனது பிய்ந்த செருப்புடன் வந்து தன் முன் நிற்க மாட்டார்களா என்று காத்திருப்பதும் எப்படியோ ஒன்றிரண்டு வாடிக்கையாளர்கள் கிடைத்து அதன் மூலம் சில ரூபாயகள் உழைப்பதும் அதிஸ்டமிருந்தால் வந்த வாடிக்கையாளர் தமது வீட்டிலிருக்கும் வேறு ஒரு சில செருப்புக்களையும் 'ரிப்பேர்' செய்யக் கொண்டு வருவதும் வருமானத்துக்கு ஏற்றபடி அதை இதைக் கொஞ்சம் கொஞ்சம் வாங்கி வந்து ஏதோ சமையல் என்று செய்து பசியாறிக் கொள்வதும் அதில் மீதம் பிடித்து கொஞ்சத்தை மறுநாள் பகல் வரை வைத்துச் சமாளிப்பதும் பிறகு மாலையில் அதே விதத்தில் ஆரம்பிப்பதும்தான் குடும்ப வாழ்க்கையின் இலக்கணமாக அவர்களுக்கு இருந்தது.

மாதவனின் வேலைத் திறமையோ வறுமைத் தோற்றத்தினால் ஏற்பட்ட அனுதாபமோ சில மனிதர்கள் அவனது வீட்டுக்குச் சில சமயங்களில் தங்களது பழஞ் செருப்புக்களுடன் தரிசனம் தருவதுமுண்டு.

அந்த சமயங்களில் இலட்சுமியே நேரில் வந்துவிட்டதுபோல ஒரு மகிழ்ச்சியும் பெருமையும் மாதவனின் முகத்தில் நிறைந்து வழியும். சொர்ணத்துக்கும் அதுவே பெரிய சங்கதி.

அநேகமாக அன்றைக்கு மாலை வழமையான பருப்புச் சொதியோடு ஒரு சின்ன கருவாட்டுச் சம்பல் அல்லது சில சமயம் சாளை மீன் குழம்பே கூட விருந்தாக அமைந்து விடும்.

மகிழ்ச்சியுடன் இருவருமே நெகிழ்ந்திருப்பார்கள். சில சமயம் பாலகன் சந்திரனுக்கும் ஒரு சின்ன குச்சி மிட்டாய் வழங்கி, அவன் தனது வாய் அகலச் சிரிப்பதைப் பெரிய திரைப்படத்தைப் பார்த்து மகிழும் மகிழ்ச்சியுடன் அந்த இரு பரம ஏழை உள்ளங்களும் இரசித்து மகிழும்.

துயரம் கலந்த அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ள மட்டும் எவருமே அவர்களுக்கு என இல்லாமைதான் பெரிய குறையாக அவர்களுக்கு இருக்கும்.

பணத்துக்கு உறவுகளும் வறுமைக்குத் தனிமைகளும்தானே மனித மனபலவீனம் வகுத்து வைத்திருக்கின்ற சமுதாய இலக்கணமாக இருக்கின்றது?

காரணமில்லாமலா எவளோ ஒருத்தி 'கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவைச் சாத்தடி' என்று பாடி வைத்திருக்கிறாள்?

இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை அத்தி பூத்தாற்போல நடந்தேறும் அந்த சின்னஞ்சிறு மகிழ்ச்சி வாய்ப்புக்காக அந்த ஏழை உள்ளங்களிரண்டும்  நன்றி சொல்லி அந்த வறுமை பங்களாவின் சிறிய சுவரில் பிளாஸ்டிக் கண்ணாடிக்குள் விளக்கு கூட இல்லாத வறுமையின் பிம்பமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் முருகக் கடவுள் முன் நின்றும் கொள்வார்கள்.

அவராலும்தான் என்ன செய்ய முடியும்? அவரும் அவர்களின் வீட்டில் ஏழையாகத்தானே தொங்கிக் கொண்டிருக்கிறார்?

இப்படித்தான் ஒரு நாள் சற்று மகிழ்ச்சியாக இருக்கையில் சொர்ணம் நகைச்சுவையாகச் சொன்னாள்.

"என்னங்க, நம் சாமி படம் ரொம்பவே அழுக்குப் படிந்து போய் இருக்கிறதே! அதற்குள் இருக்கிற சாமிக்கு என்றைக்காவது சுகமில்லாமல் போய், நாம்  அவரைக் கும்பிட்டு வேண்டிக் கொள்கிறபோது, அவர் டாக்டரிடம் தன்னைக் கொண்டு போகச் சொன்னாரென்றால் என்ன செய்வது?"

மாதவன் சிரித்தவாறே பதில் சொன்னான்.

"சொர்ணம், அவர் மட்டும் காய்ச்சலில் படுத்தாரென்றால் நான் அவரை என் செருப்பு ரிப்பேர் பேமண்ட்டிலே கொண்டு போய் கிடத்தி விட்டு, வருபவர்களிடம் 'ஐயாமாரே! இன்றைக்கு ரிப்பேர் ரேட் கொஞ்சம் அதிகம் ஆகும். ஐம்பது சதம் கூட்டிக் கொடுங்கள் ஏனென்றால் எங்கள் அருள் சப்ளை ஆண்டவன் சாமிக்கு எங்கள் வீட்டு சுவரிலே தொங்கி, சுகமில்லாமல் போய் வரந்தர இயலாமல் தவிக்கிறார். அவருக்கு வயசும் அதிகமாகி வருகிறது. அதனாலே டிஸ்ப்பிரின் மருந்தும் ஆர்லிக்சும் வாங்கிக் கொடுக்க வேணும்' என்று சொல்லி, கொஞ்சம் கூடவே வசூலித்து விட்டு, ஐயாவுக்கும் புதுக் கண்ணாடி பிறேம் போட்டு அழகாக்கி விடுவேன். அவர் அதற்குப் பின்னர் 'ஜம்'மென்று ஜாலியாகிவிட மாட்டாரா என்ன?"

சொர்ணம் அப்படியே குலுகுலுவென்று குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க, மாதவன் அதைப் பார்த்துச் சிரிக்க, சாப்பாடு கொஞ்சம் தாமதமாகவே அவர்களின் அலுமினியத் தட்டுக்கு வந்தது.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாமாமே!

இருக்கலாம். ஏனென்றால் அவர்களின் அந்தச் சிரிப்பில்…
பொய் இருக்கவில்லை,
கபடம் இருக்கவில்லை,
களங்கம் இருக்கவில்லை.
இருந்தால் அந்த நிலையிலும் கடவுளை நம்புமா?

கனவுகள். கனவுகள். கனவுகள். அவை மட்டும்தான் அந்த ஏழை இதயங்களின் வறுமைப் பாலை வனத்தில் அடிக்கடி வீசி வந்த ஒரே தென்றல்.

ஆறுதலில்லா இதயங்களுக்கு ஆறுதல் நம்பிக்கையில் எழுகின்ற இத்தகைய கனவுகள்தானே!
+++++++++

னது தாயிடம் சொல்லிப் பலன் கிடைக்காமையை உணர்ந்தோ என்னமோ குழந்தை தனது தந்தையின் பக்கமாகத் திரும்பி நடந்தது. தள்ளாடித் தள்ளாடி அது நடந்த விதத்தைப் பார்த்தால் இதற்குமேலும் தாக்குப் பிடிக்குமோ அல்லது…. என்று சந்தேகமாக இருந்தது, மாதவனுக்கு.

அந்தக் கடும் வருத்தத்துடனும் தன்னைத் திருப்பி அவன் தமது குழந்தையைப் பார்த்தான்.

"அப்பா மிகவும் பசிக்குதப்பா!"

தனது குடிசையே பற்றி எரிவதைப் போன்ற பாசத்தீயின் கனல் தன்னைச் சுடுவதைத் தாங்கிக் கொள்ள இயலாத மாதவன் திடீரென்று எழுந்து நின்றான்.

"ஐயய்யோ,  கீழே உட்காருங்கள். விழுந்து விட்டால் ஆபத்து."

சொர்ணம் பதறிக் கொண்டு ஓடி வந்தாள்.

"சொர்ணம் நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வருகிறேன். ஒரு ஆளை உடனே போய்ப் பார்த்தால்.. ம்… கண்டிப்பாக நடக்கும் என்று நினைக்கிறேன்."

அவன் தனக்குத் தெரிந்த யாரிடமோ கடன் கேட்டு வரத் தீர்மானித்து விட்டான் என்பது சொர்ணத்துக்குப் புரிந்தது. என்றாலும் அந்த நிலையில்…

"வேண்டாம். கொஞ்சம் சுகம் கிடைத்ததும் போகலாம். நான் பிள்ளையை சமாளிக்கிறேன்."

அவள் மாதவனை நெருங்கி, அவனைக் கட்டுப்படுத்த முற்பட்டாள். ஆனால் அவனுக்குள் குழந்தையின் அவலக் குரல் பற்ற வைத்திருந்த நெருப்பு அவனை நிமிர்த்தி விட்டிருந்தது.

" சொர்ணம் நீ பயப்படாதே! இன்னும் அரை மணிக்குள் திரும்பி வந்து விடுகிறேன். எனக்கு ஒருவரைத் தெரியும். நல்ல மனிதர். அவரிடம் கடன் எடுக்கலாம் என்று நம்புகிறேன். முதலில் வழியை மறிக்காமல் விலகு."

மாதவனின் சூடான இடது கரம் சொர்ணத்தை மெதுவாக நகர்த்தியது.

அப்போதைய நிலையில் சொர்ணத்துக்கும் வேறு வழி தெரியவில்லை. தயக்கத்துடன் வழி விட்டு, விலகி நின்றாள்.

அவன் ஒரு விதமான வெறியுடன் வேகமாக நடந்து போய்க் கொண்டிருப்பதைத் தனது குழந்தையைக் கையிலேந்திய வண்ணம் அவள் வெறித்துப் பார்த்தவாறே நின்று கொண்டிருந்தாள்.

வற்றிப் போன அவளது கன்னங்களில் விழிக் குழிகளுக்குள்ளிருந்து வழிந்த நீரைத் துடைக்கக் கூட அவளுக்கு நினைவிருக்கவில்லை.

+++++++++

ந்த மளிகைக் கடையில் சனக் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. இவன் தேடி வந்த முதலாளியும் மிகவும் மும்முரமாக வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

இவனிடத்தில் இருந்தொரு சமயம் அவரது தோல் செருப்பு வருவதுண்டு. வேலைக்காரன்தான் கொண்டு வருவான். அது இன்னாரின் செருப்புத்தான் எனத் தெரிந்ததும் 'எக்ஸ்ட்ரா' வேலை செய்து அவன் அனுப்புவான்.

அவருக்கு திருப்தியென்பதை வேலைக்காரன் கொண்டு வந்து தரும் கூலியுடன் ஒரு ரூபா அல்லது ஒன்றரை ரூபா மேலதிகமாகக் கிடைப்பதிலிருந்து புரிந்து கொள்வான்.

அன்று மாலை அவரது கடைக்கே போய் அரிசி, பருப்பு வாங்குவான். அது அவரை மிகவும் கவர்ந்து விடும். ஒரு விதமான வெளிப்படையில்லாத நட்பாகவே  அது அவனுக்குத் தெரியும்.

எதிலும் கொஞ்சம் அதிகமாக அளந்து கொடுத்திருப்பார் அவர். ஒரு நாள் தனது குழந்தைக்கென்று ஒரு குச்சி மிட்டாயையும் இலவசமாக வைத்து அனுப்பிய நல்ல முதலாளி அவர்.

இன்று?
காசே இல்லாமல் முதல் தடவையாக அவரிடம் கடனுக்குக் கேட்கத்தான் மாதவன் அங்கே போயிருந்தான். அப்போதைய சூழ்நிலையில் அது சாத்தியமா?

விநாடிக்கொரு விதமாக மாறி நிற்கும் இந்த மனிதர்களுக்குள் இவர் எப்படியோ?

நம்பிக்கைதானே வாழ்க்கை! கடவுளை நம்பி, முயற்சித்துப் பார்ப்போம்.

மாதவன் கடைக்கு எதிர்ப்பக்கமாய் இருந்த ஒரு மரநிழலில் அதன் பக்கத்துச் சுவரில் ஒரு பக்கமாக சாய்ந்தவாறு நின்று கடையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

மனதுக்குள் அர்த்தமேயில்லாத ஒரு வகை பயம் கலந்த உணர்வு வந்து வந்து தாக்கிக் கொண்டிருந்தது. ஏன்?

அது அவனுக்கே புரியவிலலை.

அவனுக்கு மிகவும் களைப்பாக வேறு இருந்தது. கொஞ்ச நேரம் கழிந்தது.

திடீரென்று…

"என்ன வேணும்?"

ஒரு குரல் மாதவன் பக்கமாகக் கேட்டது.

திரும்பியவன் பதில் சொல்லத் தெரியாமல் தடுமாறினான்.

"முதலாளி ஐயா கிட்டே கொஞ்சம் பேச வேண்டும்."

அவன் அவனைப் பார்த்த பார்வையில் மாதவன் உறைந்தே போய்விட்டான். எசமான் சும்மா இருந்தாலும் அவன் வீட்டு நாய் சும்மா இருக்காதாமே! அந்த நிலைதான்.

"என்ன பேசணும்?"

மாதவனுக்கு பதில் சொல்லத் தெரியாமல் மௌனம் சாதித்தான். அவனை நோக்கி இன்னொரு சிறுவன் கேட்டான்.

"ராசு அவருக்கு என்ன வேணுமாம்?"

"பெரிய கவுணரு வந்திருக்காரு. மொதலாளியைப் பார்க்கணுமாம் ஒண்ணும் வாங்கிறதுக்கில்லே."

ஏதோ ஒரு பெரிய நகைச்சுவையைச் சொல்லிவிட்டது போல இவன் சொல்ல, மற்றவனும் சிரிக்க….

"அந்த ஓரமா நில்லுய்யா. அவரு வேலை முடிஞ்சப்புறமாப் பாத்துக்கலாம்."

என்னவோ அவன்தான் முதலாளியின் முதுகெலும்பு என்ற திமிருடன் நின்ற அந்த வேலைக்காரனின் கட்டளைக்குப் பணிந்து, பூனைபோல் அடங்கி, ஒதுங்கி, கொஞ்சம் தள்ளி நின்று கொண்டான் மாதவன்.

மற்றவர்களின் தயவை நம்பி வாழும் நிலை வந்தால் மனிதனின்  சுயமரியாதையுடன் சுய தைரியமும் சேர்ந்தே பதுங்கி, ஒளிந்து விடுகின்றன.

சுமார் அரை மணி நேரம் கழிந்திருக்கும். கூட்டம் குறைந்திருந்தது. மாதவனை விரட்டிய வேலைக்காரனுக்கு திடீரென இரக்கம் வந்ததோ அல்லது அவனை அப்போதுதான் ஞாபகம் வந்ததோ தெரியவில்லை.

முதலாளியை நெருங்கி இவனைச் சுட்டியபடி என்னவோ கூறுவது தெரிந்தது.

ஏனோ மாதவன் இலேசாக நடுங்கினான்.

முதலாளியின் கண்கள் அவனை ஒரு கணம் பார்த்துவிட்டு…..

என்ன ஆச்சரியம்?

முதலாளியின் முகம் மலர்கிறதே!

அவரது கை அசைந்தது. வரும்படி சைகை காட்டினார்.

இப்போது ஒரு வித கூச்சம் மாதவனை நடுங்க வைக்கத் தொடங்கியது.

மெதுவாக நகர்ந்து முதலாளியை நெருங்கினான்.

"இல்லைங்க வந்து…உங்களிடம்  கொஞ்சம் பேச வேண்டும். நேரமிருக்கிறதோ தெரியவில்லையே.."

கற்பாறைகள் நிறைந்த மனிதப் பரம்பரைக்குள் ஆங்காங்கே பனிமலைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

"ஏய், கொஞ்ச நேரம் கடையைப் பாத்துக் கொள்."

முதலாளி இவனைப் பார்த்துக் குரைத்தவனைத்தான் சொன்னார். வாலைக் குழைத்தபடி அவன் வழி விட, அவர் மாதவனை கடையின் உட்புறமாய் அழைத்துச் சென்று உள்ளே இருந்த ஒரு வாங்கில் இருக்கச் சொன்னார்.

அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தவர் உடனடியாகவே விடயத்துக்கு வந்தார்.

" என்ன விஷயம்? சுகமில்லை போலத் தெரிகிறதே! மருந்து சாப்பிட்டாயா?"

மனிதாபிமானத்தின் ஒரு சில வார்த்தைகளுக்கும்தான் எத்துணை பெரிய சக்தி!

மாதவன் தன்னையே சில கணங்கள் மறந்து விட்டான். கண்கள் கலங்கத் தொடங்கின. மடமடவென்று அவன் சொன்னான்.

"ஐந்து நாளாக எனக்குக் கடுமையான காய்ச்சலாக இருக்கிறது. அதனாலே தொழிலுக்கும் போக முடியவில்லை. நேற்று வரையில் இருப்பதை வைத்துச் சமாளித்தோம். இப்போது எல்லாமே தீர்ந்து போய் விட்டது. காலையிலேருந்து ஒன்றுமே இல்லை. நாங்களாவது சமாளிப்போம். பச்சைக் குழந்தை. அதுக்கு மிச்சமிருந்த தேயிலையை வெறுந் தேநீர் போட்டுக் கொடுத்துச் சமாளித்தோம். இப்போது அதுவும் முடிந்து விட்டது. காலையிலே இருந்து வெறுந்தேனீரையே குடித்த குழந்தை இப்போது பசி தாங்க முடியாமல் கதறுறதைத் தாங்கிக் கொள்ள முடியாமல்தான் உங்களை நம்பி இங்கே ஓடி வந்தேன். தயவு செய்து…."

அவன் முடிக்க முடியாமல் தடுமாறினான். உண்மையை உரைக்கவும் கூட வறுமை தடை போடுகின்ற கொடுமை அப்பட்டமாகத் தெரிந்தது.

ஆனால்… ஏழைகள் இல்லாமையால் இழிவாக்கப்படுகின்ற மனித சமூகமே தவிர, உண்மையாய் அப்படியல்ல என்பதை உணர்ந்த மனிதராக அந்த முதலாளி இருந்தார்.

வெறும் செருப்புத் தைக்கும் தொழிலையே செய்தாலும் தன்னை நம்பித் தானே உழைத்துத் தனது குடும்பத்தைக் காக்கும் அவனது அந்த உயர் குணத்தை அவர் ஏற்கனவே தனது மனதில் பதித்து வைத்திருந்தார் என்பது தெரிந்தது.

"ஏய்!"

முதலாளியின் சத்தத்தில் திமிர் பிடித்த அந்த ஏவல் நாய் ஓடி வந்து பவ்வியமாக நின்றது.

"என்னங்க மொதலாளி?"

" உடனே போய் ஒரு பாக்கட் டிஸ்பிரினும் ஒரு பால் போடாத காப்பியும் வாங்கிட்டு வா. சீக்கிரம்.."

ஒரு பத்து ரூபா தாளை அவரது விரல்கள் நீட்ட, அதைப் பற்றிக் கொண்டு வேலைக்காரன் பறந்தான்.

"ஒரு ஐந்து நிமிடம் இப்படியே இரு. அவன் வருகிற வரைக்கும் நான் முன்னுக்குப் போகிறேன்."

மாதவனின் தலை தானாகவே ஆடியது.

அவன் தான் ஏதோ சொர்க்கத்தில் இருப்பதாக உணரத் தலைப்பட்டு விட்டான்.

இது கனவா அல்லது….? நம்பவே முடியாத இனிய அனுபவமல்லவா?

கடைக்குப் போன வேலைக்காரன் வந்து முதலாளியின் கட்டளைப்படி டிஸ்பிரின் பெட்டியை மாதவன் முன் வைத்து விட்டு காப்பியை அவனிடம் நீட்டினான்.

அரை மணிக்கு முன் அவனிடம் இருந்த வீராப்பும் வெறித்தனமும் இப்போது தேய்ந்திருப்பது தெரிந்தது.

"இந்தாங்க காப்பி,  குடியுங்கோ.."

முதலாளியின் குரல் வந்தது.

"ஏய் நீ முன்னுக்கு வா!"

அவன் விரைந்து அகல, முதலாளி நுழைந்தார்.

டிஸ்பிரின் பக்கட்டை அவனிடமிருந்து வாங்கி இரண்டு வில்லைகளை அவரே எடுத்து அவனிடம் நீட்டி வாயில் போடச் சொல்லிவிட்டு அருகிலிருந்த கூஜாவிலிருந்த நீரை ஒரு கண்ணாடிக் குவளையில் எடுத்துக் கொடுத்துக் குடிக்கச் சொன்னார்.

"இப்போதைக்கு இது போதும். காப்பியைக் குடி. காய்ச்சல் தொடர்ந்து குறையவில்லையென்றால் மூணு மணி நேரம் கழிச்சு இன்னும் ஒன்று எடு. படிப்படியாகக் குறைந்து விடும். அதுசரி என்ன வேண்டும் உனக்கு?"

மாதவனுக்கு எதுவுமே நினைவுக்கு வரவில்லை. அவன் வேறு எங்கோ ஒரு கனவுலகிற்குள் நுழைந்திருந்தான். தானே ஓர் ஏழையாக இருந்து, சுய உழைப்பால் முன்னேறியவர்தான் அவரும் என்பதை அவன் அறியாதிருந்தான்.

அவருக்கு அவனைப் புரிந்திருந்தது தெரிந்தது.

பெரும்பாலான ஏழைகள் நேர்மையானவர்களாகவே இருக்கின்றார்கள். அவர்களது பாமர நிலைமையைப் பயன்படுத்தி, பாதக, வஞ்சகர்கள்தான் அவர்களைக் கெடுத்து விடுகின்றார்கள்.

சரியாக வழிகாட்டி, வழிப்படுத்தி, வழி நடத்தினால் பல நூறு மகான்களை அவர்களின் மத்தியிலிருந்து உருவாக்குவது மிகவும் எளிது. ஆனால் அதைத்தான் எதிர் மாறான விதத்தில் தீயவர்கள் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

முதலாளியே அவனது சார்பாகப் பேசுவது போல ஆரம்பித்தார்.

"முதலில் உனக்கு சமைக்கிறதுக்கு ஏதாகிலும் கடனாக வேண்டும் அவ்வளவுதானே! என்ன வேண்டும்?"

மாதவன் ஊமையாகவே ஆகிவிட்டான்.

என்ன சொல்லுவதென்றே தெரியாமல் தடுமாறினான் அவன்.

அவன் சரியாக பதில் சொல்ல மாட்டான் என்பது புரிந்ததும். முதலாளியே வேலைக்காரனிடம் சொல்லத் தொடங்கி விட்டார்.

பத்து நிமிடத்துக்குள் ஒரு பெரிய பார்சல் தயாராகி விட்டது தெரிந்தது.

"முதலாளி நான் சுகப்பட்டதும் மடமடவென்று கடனைக் கட்டிவிடுகிறேன், ஐயா.."

"அது எனக்குத் தெரியும்."

முதலாளியின் குரலின் இதத்தில் மாதவன் நெகிழ்ந்து உருகத் தொடங்கி விட்டான்.

என்ன செய்வது என்றே தெரியாமல் அவன் அவரது காலடியில் வீழ்ந்து கும்பிடத் தொடங்கி விட்டான். தான் இதுவரைகாலமும் நேரில் காணாமல் கும்பிட்டு வந்த தெய்வமாகவே அவன் கண்களுக்கு அவர் தெரிந்தார்.

அவர் சொன்னார்.

"இதிலே எல்லாம் இருக்குது. சும்மா தந்தால் அது பிச்சை மாதிரி. அது சரியில்லை. ஏனென்றால் நீயும் ஒரு சொந்தத் தொழில் செய்கிறவன். உனக்கு அது சரிப்படாது. இதுக்கு விலை இருபத்தி ஆறு ரூபா ஆகும். ஆனால் நீ இருபது ரூபா கொடுத்தால் போதும். இந்தா இந்த ஐம்பது ரூபாவையும் சேர்த்து எழுபது ரூபா. சுகப்பட்ட பிறகு தொழிலை ஆரம்பித்த பிறகு தந்தால் போதும். ஆனால் கண்டிப்பாகத் திருப்பித் தரவேண்டும். ஏனென்றால் இது கடன். தருமமில்லை.  புரிகிறதா?"

ஏதோ ஆசிரியர் விரிவுரை போல முதலாளி சொல்ல மாதவன்  தன்னையே மறந்து நின்று கொண்டிருந்தான்.

நான் நிற்பது உலகத்திலா? சொர்க்கத்திலா?

அழுது கொண்டே நின்ற மாதவனை அவர்தான் சுயநினைவுக்கு இழுத்தார்.

"வீட்டுக்கு உடனே போய்த் தாயையும் குழந்தையையும் பார். உன்னை எதிர்பார்த்து அவர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்."

அவரது சிரித்த முகத்தில் அவன் வணங்கும் முருகனைத்தான் உணர்ந்தானவன்.

இரு கரங்களையும் கூப்பிக் கும்பிட்டான்.

ஓர் ஏழையை ஒரு பணக்காரன் மதிப்பதென்பது இந்தத் தமிழ்ச் சமுதாயத்தில் ஓர் அதிசயமல்லவா?

பொருட்களைச் சுமக்கும் பலம் மாதவனிடம் இல்லையென்பது புரிந்தது.

மாதவனின் குடிசை கடைக்கு அதிக தூரத்தில் இருக்கவில்லை.

எனவே வேலைக்காரனை அதை எடுத்துச் சென்று ஒப்படைத்துவிட்டு வரப் பணித்த முதலாளி கடைசியாக ஒரு சிறிய பொட்டலத்தை மாதவன் கைகளில் திணித்தார்.

"இது உனது குழந்தைக்கு. சீக்கிரமாக வீட்டுக்குப் போ."

புன்னகையுடன் அவர் கடைக்குள் திரும்பிக் கொண்டு தமது வாடிக்கையாளர்களுடன் கலந்து கொள்ள, இவன் வேலைக்காரன் பின் தொடர வீடு நோக்கி நடக்கத் தொடங்கினான்.

தனது வாழ்க்கை முற்றாகவே மாறிவிட்டதைப் போன்ற ஒரு பிரமை, திருப்தி, மகிழ்ச்சி, நெகிழ்ச்சி.

ஆனால்…..

இன்னும் ஓரிரு தினங்களுக்குள் காலதேவனின் கொடிய கரங்கள் அவனது குடும்பத்துக்குள் வீச இருக்கும் பேரிடியைப் பற்றி அவன் அறிந்திருக்கவில்லை
+++++++++++

னது குடும்ப வரலாற்றிலேயே முதல் தடவையாகத் தன் கணவன் இவ்வளவு மகிழ்ச்சியாக வீடு திரும்பியதைக் கண்ட சொர்ணம் மலைப்பால் திகைத்துப் போனாள்.

பொதியைக் கொணர்ந்த வேலைக்காரன் அதை இறக்கி விட்டு "போயிட்டு வாறேன்" என்று விடைபெற்றுச் சென்றமை அவளுக்கு ஒரு வரலாற்றுச் சாதனையாகவே தெரிந்தது.

"என்னங்க இது. நம்பவே முடியவில்லையே! காய்ச்சலையும் காணோம். நடுக்கத்தையும் காணோம். இவ்வளவு சந்தோசமாக நீங்கள் என்றைக்குமே இருந்ததில்லையே, என்னங்க நடந்தது?"

அவளது முகத்தின் மலர்ச்சியில் மாதவனே சொக்கிப் போனான்.

இப்படியொரு மகிழ்ச்சியை அவள் முகத்தில் காண எத்தனை நாட்கள் கனவில் அவன் தவமிருந்திருப்பான் என்பது அவனுக்குத்தானே தெரியும்?

"இன்றைக்குத்தான் கடவுளை நேரிலே பார்த்தேன் சொர்ணம். முதலிலே சமையலைத் தொடங்கு. எனக்கும் மிகவும் பசியாக இருக்கிறது. இதைப் பாப்பா கிட்டே கொடு."

பொட்டலத்தை சொர்ணம் பிரித்தாள். பத்துப் பதினைந்து பிஸ்கெட்டுக்களும் மிட்டாய் வகையராக்களும்.

ஹையா!

"சொர்ணம் நீயும் ரெண்டு விசுக்கோத்து சாப்பிட்டுக்கொள் உனக்கும்  பசி கொஞ்சம் குறையுமல்லவா!"

மாதவன் இரண்டை எடுத்துக் கொடுக்க, அவள் வாங்கிக் கொண்டாள். பாப்பா கையில் இரண்டைக் கொடுக்க, அது ஆவலுடன் கடித்து விழுங்க, மாதவனும் ஒன்றை எடுத்துக் கொண்டான்.

நான்கைந்து நாட்களுக்குப் பிரச்சினையே இல்லையெனும் அளவிற்கு அனைத்தையுமே முதலாளி வைத்து அனுப்பியிருந்தார்.

சொர்ணம் சமையலை முடிக்கும் வரைக்கும் மாதவன் சுவரில் தொங்கிய முருகன் படத்தின் முன்பே நின்று கொண்டிருந்தான். அதில் கடவுளும் முதலாளியும் மாறி மாறி வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

+++++++++

மாதவன் நன்கு குணமடைந்து விட்டான். அன்று பின்னேர இளம் வெய்யில் சூடு தவழ்கையிலேயே அவனுக்கு வெந்நீர் வைத்து சொர்ணம் குளிக்க வைத்தாள்.

நாளைக் காலையில் தொழிலை ஆரம்பித்து விட வேண்டும். முதல் வேலையாக, கிடைப்பதில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு முதலாளியின் கடனின் முதல் தவணையாகக் கட்டி விட வேண்டும். வாங்குவதை விடவும் வாங்கியதைத் திருப்பிக் கொடுப்பதில்தான் முழு மரியாதையும் தங்கியிருக்கிறது.

மாதவனின் முழுச் சிந்தனையும் முதலாளி தன்னிடம் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பதில் மட்டுமே சுழன்று கொண்டு இருந்தது.

பொழுது விடிந்து மணி ஏழரையைக் கடக்கத் துவங்கியிருந்தது.

"சொர்ணம் நான் புறப்படுகிறேன். இன்றைக்கு நான் கொஞ்சம் முன்னைப் பின்னை வரப் பிந்தலாம். முதலாளியின் கடனைக் கட்டுவதற்காகக் கொஞ்சம் கூடுதலாக வேலை செய்தால் நல்லதென்று நினைக்கிறேன். அதனால் வரும் வரையில் கவலைப்படாமல் இரு. சரியா?"

தனது மனைவி தன்மேல் வைத்திருக்கும் அக்கறையானது அவனுக்குள் அவள் மேலான அக்கறையையும் வளர்த்து விட:டிருந்தது.

"கொஞ்சம் இருங்கள்.."

சொர்ணம் உள்ளே ஓடினாள். திரும்பி வந்தபோது அவள் கையில் ஒரு சின்ன சுருள். பழைய தினசரித் தாளில் எதையோ சுற்றிக் கொண்டு வந்திருந்தாள்.

"பகலைக்குப் பசிக்கு இதைச் சாபபிடுங்கள். சாயங்காலமாக வருவதற்கு முன் நான் சமைத்து வைக்கிறேன்."

அவன் அவளது கன்னத்தை இலேசாக வருடினான். நாணம் அவளைத் தலைகுனிய வைத்ததை இரசித்துப் பார்த்தான். இரு ஏழை உள்ளங்களும் குதூகலிப்பதை அவர்களின் முறுவல்கள் வெளிப்படுத்த, மாதவன் விடைபெற்றுக் கொண்டான்.

"பாப்பாவைப் பார்த்துக் கொள். அதற்கு இன்றைக்கு ஒரு குச்சி மிட்டாய் கிடைக்கும் என்று சொல்லி வை."

தரையில் பழம்பாயில் துயின்று கொண்டிருந்த பாப்பாவை ஒரு தரம் பார்த்து புன்னகைத்துவிட்டு, மாதவன் புறப்பட்டான்.
++++++++++

ழமையாகத் தான் தொழில் நடத்தும் பேருந்துத் தரிப்பிடத்தில் ஓர் ஓரமாக அவன் தனது செருப்பு பழுது பார்க்கும் சிறு சிறு உபகரணப் பொருட்களை பரப்பி வைத்துக் கொண்டிருக்கையில் சுற்றிலும் இயல்பாகப் பரந்து படிந்த அவன் பார்வையில் ஏனோ அன்றைய சூழ்நிலை வித்தியாசமாக இருப்பதாகப் பட்டது.

எப்போதுமே  பரபரப்பாக, சனநாடமாட்டம் நிறைந்து காணப்படும் அந்த இடத்தில்  அதிக மக்கள் நடமாட்டம் இருக்கவில்லை.

மாதவனின் மனதில் அது ஏன் என்ற ஐயம் எழுந்த போதும் அதை அவன் அலட்சியப் படுத்த முனைந்தான்.

ஏன் இந்த முதல் நாளிலேயே இப்படி ஊர் காய்ந்து போய்க் கிடக்கின்றது?

வானொலிப் பெட்டி இருந்தாலாவது செய்தி கேட்டு என்னென்று தெரிந்திருக்கலாம்.

வானொலிப் பெட்டி? அது இந்தப் பிறவியில் சாத்தியப்பட முடியாத விடயம்.

பத்திரிகை வாங்கினாலாவது….

 ஹு...  ஹு..ம்!!

அந்தச் செலவுக்கு சாப்பிட ஏதாவது வாங்கினால் பசியாவது சற்று தணியுமே!

தனது வறுமை நிலை தரும் வாதப் பிரதிவாத உணர்வுக் கனவுக் காட்சிகள் மாதவனை இலேசாகச் சிரிக்க வைத்தன. அதுவும் மிக வரண்ட சிரிப்பு.

கடவுள் பாவிகளைத் தண்டிப்பாராம். சரிதான். ஆனால் அப்பாவிகளை ஏன் இப்படி…..?

தனது மனதுக்குள் முளைத்த புதுக் கேள்விக்கு பதில் தேட அவனுக்கு நேரமில்லை. கவனத்தைத் தொழிலில் செலுத்த வேண்டும்.

சுமார் அரை மணிநேரம் கழிந்தது. அவனது பேருந்துத் தரிப்பிடத்தின் பக்கமாக யாருமே வருவதாகத் தெரியவில்லை. தூரமாக ஆங்காங்கே சில மனிதர்கள் ஒருவிதமான விசேட சுறுசுறுப்புடன் நடந்து செல்வதுதான் தெரிந்தது.

"ஏன் இன்றைக்கு பஸ் ஸ்டாண்ட் பக்கம் யாருமே வரவில்லை? ஒருவேளை ஸ்ட்ரைக் கிரைக் பண்ணுகிறார்களோ?"

மாதவன் சற்று உரக்கவே தனக்குள் கேட்டுக் கொண்டான்.

அது சரி, ஏன் எதிர்ப்பக்க கடைகளெல்லாம் முழுமையாகத் திறக்கப்படாமல் இருக்கின்றன? தெரியவில்லையே!

எழுந்து போய் விசாரித்து விபரமறிய எண்ணம் வந்தாலும் போய் வருவதற்குள் யாராவது வந்தால்? வருகிற சீதேவியை இழந்து விட முடியாதே! இன்னும் ஒரு மணித்தியாலம் பொறுத்துப் பார்ப்போம். அதற்குள் யாராவது இந்தப் பக்கமாகப் போகாமலா போவார்கள்? பார்ப்போம்..

பதினொன்றரை மணியிருக்கும் ஒருவர் அவனது பக்கமாக சற்று தொலைவில் கடந்து கொண்டு இருந்தார்.

"ஐயா! ஐயா! ஒரு நிமிடம். ஒரு நிமிடம்.."

மாதவன் எழுந்தோடி அவரருகில் சென்றான்.

"ஐயா, இன்றைக்கு சி.டி.பி. ஸ்ட்ரைக்கர்? ஏன் சனங்களே இல்லாமல் பாதை இப்படி வெறிச்சோடிப் போய்க் கிடக்கிறது?"

அந்த நபர் அவனுக்குத் தமிழல் பதில் சொல்லவில்லை. தெமலவில் பதில் சொன்னார்.

" உம்ப தெமலத? ஒடனே ஊட்டுக்கு பலயங். இன்னிக்கி சரியான கொலப்பங். சிங்ஹல  தெமல கொலப்பங். எல்லாங் கடைங்க நெருப்பு வக்கிறது. ஆலுங்கள் சாவடிக்கிறது. கொலம்பேங் எல்லா எடங்கல் சரியான கொலப்பங். நிக்க வானாங். சிங்ஹலவங் கண்டா நீ சாவிறது. ஆமி வந்தா ஒன்னைத் தாங் சுடறாங். நிக்க வாணாங். ரேடியோ கேக்க இல்லயா. ஓ….. நீ சரியான மோடையங். கெதரட்ட துவப்பாங்."

மாதவன் அறிந்திருக்காத ஜூலை இனவெறியின் ஆரம்ப தினமே அதுவென்பதைத்தான் அந்தச் சிங்களவர் அவனிடம் சொல்லி விட்டு மறைந்தார்.

சிங்களவரான அந்த மனிதர் அந்த ஏழையை எச்சரித்ததில் மனிதாபிமானம் தெரிந்தது. ஆனால் அந்த வேளையின் இனவாத வெறிக்கடலில் அது ஒரு சிறு கடதாசித் துண்டாக அல்லவா மிதந்து கொண்டிருந்தது? என்ன பயன்?

மாதவனுக்கு 'பக்' கென நெஞ்சை அடைப்பதுபோல பயம் வந்து அச்சுறுத்தியது.

கலவரமாமே!

'ஐயய்யோ! நமக்குத் தெரியாமல் போச்சே!'

மடமடவெனத் திரும்பி வந்தவனுக்கு அதற்குள்ளும் ஒரு நப்பாசை. இந்தப் பக்கம் இன்னும் ஒன்றுமே நடக்கவில்லைத்தானே! எதற்கும் இன்னும் ஒரேயொரு மணி நேரம் மட்டும் இருந்து பார்ப்போம். பிறகு புறப்பட்டு விடுவோம்.

ஆனால் அந்த ஒரு மணி நேரத்துக்குள் அவனைத் தேடி மரணம் விரைந்து வந்து கொண்டு இருந்ததை அவன் எப்படி அறிவான்?

அடுத்த ஒவ்வொரு ஒவ்வொரு விநாடியும் பதற்றத்தோடு கழிந்து கொண்டு இருந்தாலும் தொழில் நப்பாசை அவனைப் போக விடாமல் இருத்திக் கொண்டே இருந்தது.

வறுமையின் கடுங்கொடுமை சில சமயங்களில் ஆபத்துக்களைக் கூட நப்பாசைகளினால் ஏற்றுக் கொள்ள வைத்து விடுகின்றன.

திடீரென தூரத்தில் கரும்புகை ஒரு பெரிய கார்மேகம் போல எழும்பி, வானத்தை மறைப்பதைக் கண்ட மாதவன் எழுந்து நின்றான்.

எங்கேயோ ஒரு கடைக்கு நெருப்பு வைத்து விட்டார்கள் போலும். இருந்தாலும் அது தூரத்தில்தான் என்று தெரிந்ததால் இன்னும் கொஞ்சம் பொறுத்துப் பார்க்க அவனது உள்மனம் அவனைத் தூண்டியது.

இன்னும் கால் மணிநேரம் கழிந்திருக்கும்.

சொர்ணம் கொடுத்தனுப்பியிருந்த சுருளை மாதவன் திறந்து பார்த்தான். இரண்டு ரொட்டித் துண்டுகள் தேங்காய்ச் சம்பலில் சுற்றி வைக்கப்பட்டு…

ஒன்றை எடுத்துக் கடித்தான். அதன் சுவை அருமையாக இருந்தது. மெதுவாக அவன் இரசித்து உருசித்துச் சுவைத்து, மகிழ்ந்தவாறே பாதையை மீண்டும் யாராவது வரமாட்டார்களா என்று எதிர்பார்த்து…

'படீர், படீர்' என்று பரவலாகப் பெருஞ்சத்தங்கள். என்னென்று பார்க்க அவன் நிமிர்ந்தான். தூரத்தில் …

புத்த பகவான் தமது போதனைகள் உரித்தெறியப்பட்ட நிலையில் தனதுடையில் தன் பெயரில் ஒரு மாபாவி வருவதைக் கண்டு, பயத்தில் நீதி தேவதையைத் தேடியோ என்னவோ அம்மணமாக அங்கலாய்த்தபடியே ஓடிக் கொண்டிருந்தார்.

அவருக்குப் பின்னாலே அவரது மஞ்சள் காவியுடையை அணிந்தவாறு ஒரு மொட்டைக் காடையன் தானே அவரது பிரதிநிதியான சத்தியத் துறவியெனத் தன்னை அடையாளங் காட்டியவாறே கடும் சிங்களத் தொனியில் தமிழரைக் கீழ்த்தரமாக ஏசிக் கத்திக் கொண்டு வர, ஒரு பெரிய காடையர் கூட்டம் அவனைத் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தது தெரிந்தது.

'படார், படார்' எனக் கடைக்கதவுகள் உடைக்கப்படுவதும் பொருட்கள் அள்ளி வீசப்படுவதும் தெருக்கூட்டம் அள்ளியள்ளி எடுத்துக் கொண்டிருப்பதும் மாதவனின் நெஞ்சில் புளியைக் கரைக்கத் தொடங்கி விட்டன. அவனது உடல் அவனையும் அறியாமல் நடுநடுங்கத் தொடங்கிவிட்டது.

நூற்றுக் கணக்கான கண்ணாடி போத்தல்கள் தெருவெங்கும் வீசியெறியப்பட்டு, உடைந்து நொருங்கும் சத்தம் காதை அடைத்தது.

மடமடவென்று தனது கடையை ஒதுக்கத் தொடங்கினான்.

தனது சிறிய துணி முடிப்பை அவன் கட்டி முடித்து விட்டு நிமிர்கையில் சற்று தொலைவில் இருந்து சிலர் கத்திக் கூச்சலிடுவது கேட்டது.

பெருந்திகிலுடன் மாதவன் நிமிர்ந்து பார்த்தான்.

"தெமல பல்லேக். தெமல பல்லேக்" (தமிழ் நாயொன்று. தமிழ் நாயொன்று)

"மறப்பாங். மறப்பாங்"  (கொலை செய். கொலை செய்)

கண்ணிமைக்கும் இடைவெளிக்குள் மாதவனைச் சுற்றிச் சூழ்ந்து நின்றன பல இனவெறி ஓநாய்கள். சகிக்கவே முடியாத படுகேவலமான கடும் வார்த்தைப் பிரயோகங்கள். எச்சில் அபிஷேகங்கள் ஆரம்பமாகின.

"ஐயா நான் மிகவும் எழை ஐயா. நான் யாருக்கும் எதுவுமே தீமையாகச் செய்ததில்லை ஐயா. பிள்ளைக் குட்டிக்காரன். தயவு செய்து அடிக்காதீர்கள்."

மாதவனின் ஓலம் எவருக்குமே கேட்டதாகத் தெரியவில்லை.

அடிமேல் விழ்ந்த அடிகளும் உதைகளும் அவனை உருட்டிப் புரட்டியெடுத்தன. அவனது துடிதுடிப்பை இரசித்து, இரசித்து வெறிநாய்கள் வேகத்தை மேலும் மேலும் அதிகரித்தன.

முற்று முழுதாகவே மாதவன் மயங்கி விட்டான். இறந்து விட்டானோ என்னுமளவிற்கு உடலில் அசைவே இருக்கவில்லை. ஆனால் அத்தோடே அந்த விலங்குகள் அவனை விட்டால்தானே!

ஒரு கடையிலிருந்த ஒரு பெரிய எண்ணெய்க் காவியை (பெரலை) இரு மிருகங்கள் சிரமத்துடன் எடுத்து வந்தன. அதனைக் கண்ட ஒன்றிரண்டு அவர்களுக்கு அருகில் சென்று ஒத்தாசை செய்து தூக்கி வர உதவி செய்தன.

மனிதாபிமானம் அப்படித்தான் அவ்விடத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்தது அப்போது.

மாதவனின் சுருண்டு கிடந்த உடலருகில் நெருங்கியதும் நான்கு பேர் ஒருவருக்கொருவர் ஒத்தாசை செய்து அதிலிருந்த எண்ணெய்யை மளமளவென்று அதன்மேல் ஊற்றத் தொடங்கினார்கள்.

இதர விலங்குகள் தாங்களாக விலகி நின்றதுடன் மற்றவர்களுக்கும் தீ பட்டு விடாமல் ஒதுங்கச் செய்து ஒழுங்கு செய்தன.

எல்லாரும் மாதவனின் உடலைச் சூழ ஒதுங்கி நின்றதும் ஒரு விலங்கு தனது சுருட்டுப் பற்றியை (லைற்றரை) எரிய வைத்து விட்டு உரத்துச் சிரித்தது.

"சிங்கள இனத்தின் எதிரி நாயொன்று எரியப் போகின்றது. ஹஹஹா!"

சுற்றி நின்ற இதர விலங்குகளும் சேர்ந்து கத்திக் கும்மாளமிட நெருப்பு எரியும் அந்தச் சிறிய பந்தம் சுருண்டு கிடந்த அந்த ஏழையின் மேல் எறியப்பட்டது.

அவ்வளவுதான்.

பகபகவென்று தீ கொழுந்து விட்டு எழுந்தது. மாதவனது உடல் எரிந்ததால் எழுந்த புகை மண்டலத்தில் மயங்கிய உடலம் தீச்சூட்டின் கொடூரத்தைத் தாளாது துடிப்பது கூட மிகவும் மங்கலாகவே தெரிந்தது.

விலங்கைக் கொன்று அதைத் தீயில் வாட விட்டுக் கொண்டு, அதைச்சுற்றிலும் ஆடிக் கொண்டாடும் காட்டு மனிதர்களைப் போல, தங்களை புத்தரின் புத்திரர்களென்று அழைத்துக் கொண்டு, பித்தர்களாக அந்த வெறியர்கள் கொண்டாடிக் கொண்டு நின்றார்கள்.

சில நிமிட இடைவெளிக்குள் ஒரு ஏழைக் குடும்பத் தலைவன் ஒரு சிறிய கரித்துண்டு போலக் கரிந்து, சிதைந்து போனான்.

அவனது உருவம் ஒரு சிறிய உணவுப் பொட்டலத்தைப் போல அடையாளமே தெரியாதபடிக்கு உருக்குலைந்து போய், இலேசாகப் புகையை வெளிப்படுத்திக் கொண்டு நடுத் தெருவில் நிர்க்கதியாய்க் கிடக்க, ஓர் இனவெறி நாய் ஓரு புதிய உத்தியை வெளிப்படுத்தித் தனது பேரறிவுக்கு ஏகபபட்ட ஆமோதிப்பையும் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டது.

"இந்தப் பிணத்தை நாம் ஒரு துணியில் சுற்றியெடுத்து எல்லா இடங்களிலும் இது சிங்களவனின் பிணமென்றும் தமிழர்கள் நம்மவர் ஒருவரை அடித்துச் சித்திரவதை செய்து, உயிரோடே எரித்து விட்டதாகவும் நம்மில் ஒருவர் அதைக் கண்டும் காப்பாற்ற முடியாமல் நம்மிடம் வந்து உதவி கேட்டதாகவும் சொல்லி, அந்தச் செய்தியைப் பரப்பினால் ஏனைய பறைத் தமிழ் நாய்களை ஒழிப்பது இலகுவாகி விடுமே!"

அடுத்த சில நிமிடங்களில் கரிந்து கிடந்த பிணத்தின் மீது தண்ணீர் கொட்டப்பட்டு, தீ அணைக்கப்பட்டு, அந்த உடல் என்ற சதைக்குவியல் ஒரு பெரிய துணியால் சுற்றப்பட்டு, ஒரு திறந்த வாகனத்துக்குள் வைக்கப்பட்டது.

ஒரு கும்பல் அந்த வாகனது;துடன் வேறொரு திசையை நோக்கிப் பயணிக்க, மிகுதிக் கொலைஞர் பட்டாளம் தனது தொடர் கைவரிசைகளைத் தொடர்வதற்காக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

மாதவனின் குடும்பத்தைப் போலவே அவனது தொழில் கருவிகளின் பொதி ஒரு ஓரத்தில் அனாதையாகக் கிடக்க, சொர்ணம் அனுப்பியிருந்த ரொட்டிகளில் மிஞ்சிய ஒன்றையும் ஒரு காகம் கொலைகார இனவாதிகளைப் போலவே மிகுந்த மகிழ்ச்சியுடன் கொத்திக் காவிக் கொண்டு பறந்து மறைந்தது.
++++++++

சொர்ணம் சமயைலை முடித்து விட்டு, குழந்தையையும் துயில வைத்த பின் சாப்பிடாமல் காத்துக் கொண்டிருந்தாள். கலவரச் செய்தி அவளுக்கும் தெரிய வந்திருந்ததால் முருகன் படத்தினருகில் அடிக்கடி சென்று அடிக்கடி மன்றாடுவதும் நேரம் பிந்தினாலும் கவலைப்பட வேண்டாம் என்ற மாதவனின் சொல் எப்படியாவது நிறைவேறும் என்ற நம்பிக்கையிலும் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு காத்திருக்க…..

மாதவனின் சவம் தமிழர் சிங்களவர் கலந்து வாழும் பகுதிகளுக்குள் கொண்டு செல்லப்பட்டு, சிங்களவர்களின் இரத்தங்களைக் கொதிப்படைய வைத்துத் தமிழர்களைக் கொலை செய்யத்  தூண்டிக் கொண்டிருந்தது.

தமிழனாகப் பிறந்து, தமிழனாகவே வளர்ந்து, தமிழனாகவே இருந்தும் விட்டு, பிணமான பிறகு சிங்களவனாக உருமாற்றப்பட்டு, ஓர் அதி சிறந்த கொலைக் கருவியாக இனவெறி படமெடுத்தாட ஊர்வலம் வந்து சிங்களவரை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்க, 1983ன் ஜூலை இன சங்காரம் திபு திபுவெனப் பற்றியெரிந்து கொண்டிருந்தது.

அதனோடே ஓர் ஏழைக் குடும்பத்தின் எதிர்காலமும் அதன் மனிதமும் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருந்தன.

அந்த நெருப்பிற்கு நடுவிலே நின்று மனிதாபிமானம் கதறி ஒப்பாரி வைத்து உரத்துச் சொல்லிக் கொண்டிருந்தது.

பௌத்தத்தில் பாவத்தைக் கலந்து பருகிடும் பாதகப் பதர் மன விலங்குகளே! என்றைக்கு நீங்கள் மனிதர்களாவீர்களோ, மனிதத்தை அத்தீவில் காப்பீர்களோ! தெய்வமே! நீ எங்கே மறைந்தாய்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக