ஞாயிறு, 22 ஜூலை, 2012

சொறிச்சலுக்குச் சிகிச்சை தோலை உரிப்பதல்ல (கட்டுரை)

னித பலவீனங்களில் மிகப் பெரிய பலவீனம் விமர்சனங்களுக்கு அஞ்சி ஓடி ஒதுங்குவதும் விமர்சனத்தை விளங்க முனையாமல் பகைக் கண் கொண்டு எதிர்க்க முனைவதுமாகும்.

எந்த மனிதனும் தன்னைப் பிறர் குறை சொன்னால் முதலில் ஆத்திரமடையவே செய்வான். காரணம், அது இயல்பான மனித மனத்தின் முதல் பிரதிபலிப்பு என்பதுதான். ஆதலால் அது தவறே அல்ல.

ஆனால் முதலில் வரும் ஆத்திரத்தையே ஒரு தொடர் கடிவாளமாக அவன் ஏற்றுக் கொண்டு தனது சிந்தனையைக் கட்டுப்படுத்திக் கொள்ளத் தொடங்கினாலோ, தொடர்ந்தாலோ நிச்சயமாகப் பிழையான திசை நோக்கி வழி நடத்தப்படும் போலி மனச்சாட்சிக் கள்ளனிடம் அகப்பட்டுக் கொள்வான். தப்பவே மாட்டான்.

எல்லாக் குணங்களுமே இயற்கையானவைதானென்றாலும் இவையிவை அவையவைதானென்னும் கண்டுபிடிப்புத்தான் நமது அறிவின் வளர்ச்சியின் வடிகாலாக நின்று நமக்கு வழிகாட்டத்தக்கதாக இருக்கின்றது.

இனிக்கின்றதெல்லாமே எல்லாப் பலகாரத்துடனும் சேர்த்துக் கொள்ளத்தக்கனவாக இருப்பதில்லை. சில சேரும். சில சேரா. காரணம், அவை குணத்தை விடவும் மாறுபட்ட இயல்பினையுடையனவாக இயல்பாகவே இருப்பதுதான்.

அன்பை வெளிப்படுத்தும் சிரிப்பினைத்தான் வஞ்சகர்கள் அப்பாவிகளை வசப்படுத்தப் பயன்படுத்துகின்றார்கள். வாழ்வின் உதவிக்காக நடைமுறையில் பயன்படுத்தும் பணத்தைத்தான் தீயவர்கள் கையூட்டாகவும் (இலஞ்சம்) தவறான முதலீடுகளாகவும் பயன்படுத்தி உலக அமைதியை உருக்குலைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

நாம்  நம்மைச் சுயமாகப் புடம் போட்டு, அதில் தேறி, உறுதி கொள்ளும் தகுதியைப் பெற விழைந்தாலன்றி நம்மால் நீதியின்பால் சார்ந்திருப்பது கடினமாகவே இருக்கும். ஏனெனில் இன்றைய உலகின் கண்ணில் தென்படும் பெரும் வெற்றியாளர்களில் பெரும்பாலானோர் பிழைகளைச் சரியென ஏற்று நடந்தவர்களாகவே திரை மறைவில் இருக்கின்றார்கள்.

ஓர் ஏழையின் திறமையை ஏற்கின்ற சமுதாயக் கண்ணோட்டம் நம் மத்தியில் எந்தளவிற்கு வளர்ந்து இருக்கின்றது என்று தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.

வசதியுள்ளவனின் வேடத்துக்குக் கிடைக்கும் மவிசும் வரவேற்பும் உண்மையான திறமைசாலிகளுக்கு எவ்வாறு மறுக்கப்படுகின்றன என்பதை மனசாட்சியை மதித்துச் சற்று ஆழமாக உற்றுப் பாருங்கள்.

அப்போதுதான் கறையான்கள் தேனீக்களாகவும் இலையான்கள் வண்ணத்துப் பூச்சிகளாகவும் வலம் வருகின்ற இந்த வெளிநாட்டு நாடக மேடைகளின் கபட நடிகர்களின் வண்டவாளங்களைக் காண்பீர்கள்.

ஒரு கலைஞனின் இடத்தை வெறும் களிமண்கள் கூட அள்ளி அபகரித்துக் கொண்டு, பணத்தை வைத்து நிமிர்த்தி வைக்கப்பட்ட பிணங்களாக மிளிர்ந்தவாறே நாறிக் கொண்டு இருப்பதை அப்போதுதான் உணர்வீர்கள்.

நல்லவர்களும் கெட்டவர்களும் ஒன்றாகக் கலந்து விட்ட ஒருவிதமான அந்தகாரச் சூழ்நிலையினால் தாமரை இலைகளுக்கிடையிலே சகதிக் குப்பைகளும் மிதந்து கொண்டு தங்களையும் தாமரைகளாக அடையாளம் காட்டிக் கொள்வதற்குக் கங்கணம் கட்டி நிற்பதை அப்போதுதான் நீங்கள் சரியாக உணர்வீர்கள்.

நல்ல மனிதர்கள் பலரும் தங்களின் இடங்களிலே தங்களையே அறியாமல் கெட்டவர்களையும் சேர்த்துக் கொண்டு ஒரு வெறுமையில் பெருமையை விழைந்து கொண்டிருக்கின்ற வெற்றுத்தன நிலையை அப்போதுதான் நீங்கள் நிதர்சனமாகக் காண்பீர்கள்.

மலருடன் சேரும் நாரும் மணம் பெறுமாம் என்று பொன்மொழி புகன்று கொண்டு நார்கள் தாங்களும் மலர்களாக நடிக்கையில் அவற்றுடன் தம்மை உணராமல் இணைந்து கொண்டு தங்களின் மணத்தைப் பகிர்ந்து கொண்டு அந்த நார்களும் தாங்களும் மலர்களே என்று பொய்யுரைத்துத் திரிவதைப் புரிந்து கொள்ளாமல் நிற்கின்ற புலம் பெயர் மண்ணின் நல்லோர் பரிதாபங்களை அப்போதுதான் நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்வீர்கள்.

நல்லவர்கள் தங்களின் தவறுகளை உணர்ந்து, திருந்த முற்படுகையில் தீயவர்கள் தவறுகளை உரைத்து உணர்த்துபவனைப் பழி சொல்லிப் பிழை செய்து, பேர் கெடுக்க அலைகின்ற அக்கிரம வக்கிரங்களை அப்போதுதான் நீங்கள் அறிந்து அதிர்வீர்கள்.

நமது தவறுகளை நாமே உணர்ந்து திருந்தாமல் அல்லது அதற்கு முயலாமல் மற்றவர்களுக்கு வழிகாட்ட நாம் முற்படுவது சேற்றுக்குள் நின்றபடி சுத்தமாகக் குளிப்பது எப்படி என்று போதிப்பதைப் போன்ற கோமாளித்தனமல்லவா?

தயவு செய்து கூர்ந்து கவனித்துப் பாருங்கள். எத்தனையெத்தனை இத்தகைய கோமாளிகள் நம்மைச் சுற்றியலைந்து கொண்டு இருக்கின்றார்கள் என்று உங்களுக்குப் புரியும்.

வியாதிக்கு மருந்து தேவையெனில் வைத்தியரையே நாட வேண்டும். ஒரு நடுத்தெரு நாயகரை நாடினால்? இங்கெல்லாம் பல இடங்களிலும் பெயர்தான் வித்தியாசமாக இருக்குமேயன்றி நடைமுறை எப்படி இருக்கின்றது? சிரிப்பு வரவில்லையா?

நிறைகளைச் சுட்டினால் சிரிப்பவர்களுக்குக் குறைகளைச் சுட்டினால் அலுப்பு ஏன் வருகின்றது? நல்ல நோக்கங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது ஏற்படக்கூடிய தவறுகளை பொறுக்கலாம் கெட்டநோக்கங்களை நடைமுறைப்படுத்தும்போது எதையெதைப் பொறுப்பதாம்?

பசிக்குச் சோறு படைத்தால் அதில் புண்ணியம் இருக்கும். கைக்குள் வைத்துக் காரியம் சாதிக்க விருந்தே வைத்தாலும்கூட அது புண்ணியமாகுமா? அல்லவே! சுயநலமென்றல்லவா ஆகும்? இதைச் சுட்டினால் கோபப்படுவது சரியா? சரி வழி உணர்ந்து திருந்துவது சரியா?

முதுகில் சொறிந்தால் தோலை உரிப்பதல்ல புத்திசாலித்தனம். ஏற்ற மருந்தைப் பயன்படுத்திக் குணம் காண்பதே புத்திசாலித்தனம்.

பச்சைக் குழந்தைக்கூட தன் தாய் தன்னை அடித்தால் அதில் அதற்கு வெறுப்பு வருவதில்லை. ஆனால் இந்தக் கறுப்புக் குழந்தைகளாகிய கிழடுகளுக்கு அது மாறியல்லவா தெரிகின்றது! இது ஏன்?

மனித இனத்துக்கு இன்றைக்கு ஒன்று மட்டும் மிகமிக மிகமிக முக்கியமாகத் தேவைப்படுகின்றது. அதுதான் உண்மையான தன்மான உணர்வு.

அது உண்மையாகவே நம்மிடம் இருந்தால்தான் பகட்டுக்குப் பகடையாடுகின்ற படாடோப பரிசுத்தவான்களை அடையாளங்கண்டு ஒதுங்கிச் சுயமாக உயர்ந்து வளர ஏற்ற வாய்ப்பு நமக்குக் கிடைக்கும்.

செடி அழகுடன் ஆபத்தும் இல்லாததென்றால்தான் அதனை வீட்டுக்குள் அழகுக்காகச் சேர்த்து வைக்கலாம். நச்சுச் செடியும் நஞ்சுநிறை மலர்ச்செடியும் வடிவாக இருக்கின்றதே என்று வீட்டுக்குள் வைக்கப்பட்டால் ஆபத்து அருகிலேயே குடியேறிவிடுவதைத் தவிர்ப்பதற்கு யாரால் இயலும்?

ஒரே காற்றுத்தான் தென்றலாகவும் புயலாகவும் வாசமாகவும் துர்மணமாகவும்  சூழலுக்கு ஏற்ப உருமாறி நிற்கின்றது. மனிதர்களும் அப்படியே தத்தமது இயற்கை இயல்புகளுக்கு ஏற்பவே நல்லதிலும் தீயதிலும் நிரந்தரமாகின்றார்கள்.

நாம் மலரில் படுகின்ற காற்றாகவே இருந்து வருவதும் மலத்தில் படுகின்ற காற்றாகவே இருந்த வருவதும் தனித்துவமான நமது சுதந்திரமாக இயற்கையினால் நமக்கு வழங்கப்பட்டு இருப்பதானால் மணம் வீசி நிற்பதும் அதற்கெதிராக நிற்பதும் நமது முடிவுகளின் விளைவுகளாகவே இருக்க முடியும்.

ஆகவே நாம்தான் எப்போதும் விழிப்பாகவே இருந்த வரவேண்டும். சுதந்திரமாகவே இருந்து வர வேண்டும். இல்லையேல் சொறி வந்தால் மருந்து வராது. உங்களின் தோலை உரிக்கவே அறிவுரைகள் வரும்.

ஜாக்கிரதை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக