செவ்வாய், 31 ஜூலை, 2012

பதார்த்தமும் யதார்த்தமும் (கட்டுரை)

முதாயத்தில் ஒளியுடன் நிழல் போல நல்ல மனிதர்களுடன் இணைந்து, எத்தர்களும் ஏமாற்றுக்காரர்களும் கள்ளக் குணாளர்களும் கபட நாயகர்களும் கடற்கரையோர மணல் கற்துளிகளாய் அளவுக்கு அதிகமாகவே பரந்து கிடந்து வதைகளையும் வாதைகளையும் விதைத்துக் கொண்டு, மிகவும் இலகுவான வழிகளில் வளர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

இவர்களாகத் திருந்துவதும் இவர்களைத் திருத்துவதும் கடினமாக இருப்பதன் அடிப்படைக் காரணம் இவர்கள் இயல்பாகவே இத்தகைய குணங்களின்
இருப்பிடங்களாக இருப்பதுதான். இவர்களின் உருவங்களை வைத்து இவர்களை நம்பி விட்டு, அதனால் அடிபட்டு வருந்தும் கொடுமை நல்லவர்களுக்கிடையில் தொடர்வதும் இதனால்தான்.

இவர்களிடம் காணப்படுகின்ற பொதுவான நல்ல குணங்களும் கூட அவர்களின் இயற்கையான இலக்கணத்துக்குள்ளே மட்டுமேதான் அமைந்து செயற்படுகின்றதையும் நாம் அவதானிக்க வேண்டும்.

உதாரணமாக, கழுகு தனது குஞ்சிடம் காட்டுகின்ற அன்பானது அதற்கென உள்ள இனக் குணம்மட்டுமே என்பதும் அது தனது அன்பை வெளிப்படுத்தவும் தனது குஞ்சுகுக்கு உணவூட்டவும் வேளைவரும்போது, அந்த அன்பை எலிக்குஞ்சிடமோ சிறிய பறவைகளிடமோ காட்டப் போவதே இல்லையென்பதும் அங்கே அது ஈவிரக்கம் இல்லாமலே நடந்து கொள்ளும் என்பதும் அதுவே அதன் இயல்பு என்பதும் நமக்குப் புரிந்திருக்க வேண்டும்.

இதை அனுபவித்துக் கற்ற தங்களின் பாடத்தைத்தான் "ஆற்றிலே கொட்டினாலும் அளந்து கொட்டு" என்றும் "பாத்திரம் அறிந்தே பிச்சை இடு" என்றும் நமக்கு வழிகாட்டிய மூத்தவர்கள் முன்னுரைத்திருக்கின்றார்கள்.

இக்கட்டுரையை வாசிக்கின்ற நீங்களே கூட இதுபற்றிய அனுபவங்களைக் கண்டிருக்கலாம்.

நன்மையைச் செய்துவிட்டுக் கெட்ட பெயர் வாங்குபவரும் நன்மைக்காகச் செய்து விட்டுப் பழிகளைத் தாங்குபவர்களும் ஊருக்காக உழைத்து விட்டு உதாசீனஞ் செய்யப்பட்டவர்களுமாக உங்களில் எத்தனையோ நல்லவர்கள் இருந்திருப்பீர்கள். இருந்து கொண்டும் இருப்பீர்கள்.

ஆனால் உங்களாலே உயர்ந்து விட்டு, உங்களையே உதைத்துத் தள்ளியும் விட்டு, ஊருக்குள் உத்தமர்கள் போலச் சுற்றிக் கொண்டிருக்கும் உள்ளங்கெட்ட உன்மத்தர்களையும் கண்டிருப்பீர்கள்.

நீங்கள் நல்லிதயத்தினராக இந்த அனுபவத்தினைப் பெற்றிருந்தால் நிச்சயமாக மனம் நொந்து உள்ளுக்குள் அழுதிருப்பீர்கள். வேறெதுவுமே செய்யத் தெரியாது திகைத்திருப்பீர்கள்.

ஆனால் செய்தவர்கள்? பரிசுத்தத்தின் வசிப்பிடங்களாக வலம் வந்து கொண்டிருப்பார்கள். இதற்கெல்லாம் மருந்து பாத்திரம் அறிந்து கொட்டுவதன்றி கண்டமாதிரி கொட்டுவதில்லை என்கின்ற மனவுறுதியைக் கையிலெடுத்துக் கொள்வதுதான்.

ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதிலும் சிக்கலுண்டு. அதாவது நமது சில தவறுகளினால் நல்லவர்களையும் மறுத்துவிடும் மாபெரும் பிழையை நாம் செய்துவிட வாய்ப்புண்டு என்பதுதான் அது.

இதற்குள் ஓர் உண்மை பொதிந்து இருக்கின்றது. அதாவது அதிகமாக ஏமாறுபவர் நல்லவராகவும் முழுமையாக ஏமாற்றுபவர் தீயவராகவும் இருப்பதுதான்.

ஆனால் ஒரு பரீட்சையில் தோற்றுவிட்டால் அதற்காகப் பரீட்சையையே மறுப்பதல்ல, மீண்டும் கலந்து அதில் சித்தி எய்துவதே சரியாகும், அறிவுடைமையாகும் என்பதை மட்டும் நினைவில் இருத்திவர மறந்திடக் கூடாது.

மனித குலத்தின் மாண்பே மனித சேவையில்தான் தங்கியிருக்கின்றது. ஆகவே நாம் அதனை வஞ்சகத்துக்குப் பயந்து கைகழுவி விடுதல் மாபெரும் தவறாகும்.

உலகின் எந்த ஒரு செயற்பாட்டின் அடிப்டையிலும் ஆர்வம் என்கின்ற ஓர் அரிய தூண்டுகோல் இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஆர்வம் எழுப்பப்படுகின்ற அடிப்படையைப் பொறுத்துத்தான் நம்முடைய ஒழுக்கங்களை நிர்ணயிக்க நம்மால் முடியும்.

ஒரு தாயின் ஆர்வத்தையும் ஒரு தாதியின் ஆர்வத்தையும் சமப்படுத்திப் பார்த்திடல் சரிவராது. இருவருமே குழந்தையைப் பராமரிப்பதுதான் உண்மையென்றாலும் ஒரு பாராமரிப்புக்குள் வருமான ஆர்வமும் மற்றதிற்குள் தன்னலமற்ற பாசமும் இரு வேறு துருவங்களாக இருப்பதைக் கவனிக்க வேண்டும்.

இதை இவ்வளவு தூரத்திற்கு வலியுறுத்துவதற்குக் காரணம் சமுதாயங்களின் தாழ்வுகளுக்கு இந்தத் தாதி நிலைப் பொதுத் தொண்டின் பங்களிப்பே அதி முக்கிய காரணமாகவும் அடிவேறாகவும் இருந்து வருவதைச் சுட்டிடுவதே ஆகும்.

எவ்வளவுதான் அழகாகக் கட்டப்பட்ட கட்டிடமாக இருந்தாலும் அது உளுத்துவிடத்தக்கதான சூழ்நிலை கரையான்களினால் அல்லது அதையொப்ப கிருமிகளினால் உருவாகித் தொடருமானால் கட்டிடத்துக்கு மட்டுமல்ல, அதில் வதிபவர்களுக்கும் ஆபத்தாகவே அது முடிந்து விடும்.

எத்தனை நன்னெறி நூல்கள் வந்தும் பழமொழிகள் மலிந்தும் அறிவுரைகள் நிறைந்து வழிந்தும் வழிகாட்டிகள் தோன்றியும் உலகம் திருந்தாமலே இருந்த வருவதற்கு உண்மையில் அதற்குள் இந்தத் தீமை செய் தீவிர இதயத்தினர்கள் தந்திரமாகப் புகுந்து கொண்டு, ஒழுக்கங்களையும் சமூக நன்மைக்கான நியதிகளையும் தங்களுக்கேற்ப, அதாவது தங்களின் சுயநல வெற்றித்திசைகளுக்கான நோக்கங்களுக்கேற்ப திசை மாற்றி நடத்தி வருவதுதான் காரணமாகும்.

இவர்கள் நுழைந்து இருக்கும் அனைத்து மார்க்கங்களிலும் தீமைகளே இவர்களால் கட்டிக் காக்கப்படுகின்றனவென்றாலும் இவர்கள் அவற்றைப் பொதுமக்கள் கண்டு கொள்ளாதபடிக்குத் தந்திரமாக மறைத்து விடுகின்றார்கள்.

உலக மாந்தர்களனைவரும் இறைவனின் முன் சமம் எனவுரைக்கும் மதங்களின் உள்ளுக்குள் பெண்களை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தி அவர்களை நிரந்தரக் கீழ்மையில் வைத்து வர வலியுறுத்தும் சட்டங்கள் பல ஆதியிலிருந்தே தந்திரமாகப் புகுத்தப்பட்டு பகிரங்கப்படுத்தப்படாமல் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

அப்படிச் செய்தவர்கள் வேறு யாருமல்லர், மதத் தலைவர்களாகத் தங்களைத் தக்க வைத்தக் கொண்ட கள்வர்கள்தாம். அவர்களின் நிலைமைகளை நிரந்தரமாகத் தக்க வைத்துக் கொள்வதற்காக அவர்கள் மனிதரைப் பிரிவுபடுத்திச் சாதிகளாகவும் விலங்கு சார்ந்த வடிவங்களாகவும் உருவகப்படுத்தி, இறைவன் மனிதனைப் படைக்கும் போதே கீழிறக்கவே முடியாத மேல் சாதியாகவும் மேலெழும்ப உரிமையே அற்ற கீழ் சாதிகளாகவும் பிரித்தே படைத்துவிட்டதாகக் கதையளந்து, போதாக் குறைக்குக் கீழ் சாதிகாளாகத் தாங்கள் குறித்துள்ள வறிய, தொழிலாள, விவசாய வர்க்க மனிதர்களை அடிமைகளாக அல்லது அதனிலும் கீழவர்களாகவே வைத்து வரவேண்டும் என்றும் அதுவே அவர்களின் தலைவிதியென்றும் வேதமெழுதிப் பாவப் புண்ணுக்குப் பொய்ப் புனுகைப் பூசி, வாசமடிக்கும் நன்நியதிகளாகக் காட்டி, ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். புனுகை வழித்துவிட்டு, புண்ணை அறுத்து, நோயைக் குணப்படுத்தும் வக்கற்ற போக்கிரிகளே அவர்களுக்க வக்காலத்து வாங்கி வயிறு வளர்க்கும் வக்கிரர்களாக வளர்ந்து நிற்கின்றார்கள்.

புலம் பெயர் மண்ணில்கூடப் பெண்ணுரிமைக்காகக் குரல் எழுப்பும் அறிஞர்கள் அதனைப் பெரிது படுத்திப் போராடி மாற்றம் வர வழி செய்யாமல் மதத் தலைவர்களோடு இணைந்து, புகழ் தேடப் பொது இடங்களை நிறைக்கின்ற அளவிற்கு, அவர்களுடன் வாதாடி நீதியைக் காக்க முனையாமல் இருப்பதைப் பார்த்தால் இந்தத் தாதி சேவையை ஒப்ப பொதுச் சேவையையே அவர்கள் செய்பவர்கள் என்பது தெரியும்.

தனக்கு நலம் வரும் என்றால் அதற்காக நாசத்துக்குத் தலைவணங்குவது நல்லொழுக்கமென்றால் சரிதான். ஆனால் அது தீய ஒழுக்கமல்லவா?

மதவாதிகளில் பலருக்கு மதத்தின் உட்புறங்கள் தெரியாமல் இருக்கக் கூடும். ஆனால் தெரிந்தவர்கள் அதை அலட்சியப்படுத்திவிட்டுத் தங்களைக் கொடிக்குஞ்சான்களாகக் காட்டிக் கொள்ள விடுவதால் கடவுள் நம்பிக்கைக்கே ஒரு நிரந்தரச் சாவு மணியடிக்கும் சூழ்நிலையல்லவா எழுந்து விடும்?

மதத்துக்கும் மேலாக நல்ல நம்பிக்கைகளை வளர்ப்பது என்றால் சுயநலக் கள்ளர்களைக் களையாமல்,  ஆட்கள் வேண்டுமேயென்று அருகில் இழுத்து வளர்த்தால் பால் கடைக்குள் பூனைக்கூட்டத்தை நிறைத்து வைத்துக் கடையைப் பாதுகாக்க முனைவதைப் போன்ற படுமுட்டாள்தனமல்லவா?

பெண்ணுரிமைக்குக் குரல் கொடுக்கும் பெரியவர்களுக்கிடையிலே போக்கிரிகளை வைத்துக் கொண்டு படமெடுத்து ஆடினால் பெண்ணுரிமை வாழுமா அல்லது இருப்பதும் பறிபோகுமா?

தமிழகத்தில் சாமிகள் ஆசாமிகளாகி அவமானப்படும் நிலை எழ என்ன காரணம்? கண்ணை மூடிக் கொண்டு கடவுளை நம்புவதாக நினைத்துக் கொண்டு கயவர்களை அரங்கேற்றி வைத்த அறியாமைதானே!

அந்த அநியாயத்தைத் தண்டிக்க விழைவதைச் சுனாமியுடன் ஒப்பிட்டு அதைச் செய்தமைக்காகவே கடவுள் சுனாமியை அனுப்பித் தண்டித்ததாகக் கூட ஒரு குரங்கு கூக்குரலிட்டதே! பக்தி இங்கே எங்கே இருக்கின்றது? புத்திதான் எங்கே இருக்கின்றது?

ஆக, யதார்த்தம் எதுவென்று சரியாக உணராத நிலையினால்தான் பதார்த்தங்களின் தரம் புரியாத நிலை எழுந்து, வளர்ந்து, உயர்ந்து வருகின்றது என்பது நடைமுறை யதார்த்தமாகி வருகின்றது என்பதுதானே உண்மை?

மனித பலவீனத்தை மதவாதிகள் எந்தளவிற்கு துர்ப்பிரயோகஞ் செய்கின்றார்கள் என்றால் மத பலவீனங்களைச் சுட்டி வாதிடுவதைக் கூட மக்களை ஆண்டவனுக்கெதிராகத் தூண்டுகின்ற நாத்திகமாக நம்பும்படி தூண்ட முனைகின்றார்கள்.

புண்ணைப் புண்ணென்று காட்டாமல் பொய்யாய்ப் பூவென்று கூறுவதைப் பொறுத்துக் கொண்டிருந்தால் பார்வை குறைந்தவன் அதைப் பூவென்று நம்பிக் கண்ணில் ஒற்றிக் கொள்வானேல் பூ மணக்குமா புண் பரவுமா?

புலம் பெயர் மண்ணின் புண்ணிய பரப்பிகளுக்கு இதிலாவது தெளிவு வந்தால்தானே நல்லது? இதைச் சொன்னால் இதைக் கூட இடவாத, மதவாத, பிரதேசவாதக் கறையைப் பூசி அலட்சியப்படுத்த வற்புறுத்தும் திரைமறைவுக் கரையான்களை எவர் எப்படி அடையாளம் காணுவர் என்று சொல்லவே கடினமாக இருக்கின்றதே!

இந்த இலட்சணத்தில் இலக்கியம், மொழி வளர்ப்பு என்று கோழி வளர்ப்பு நாடகக் கூட்டங்களும் எழுந்து நிற்கின்றன. வளர்ப்பது என்றால் அது சமுதாயத்தை வளர்ப்பதாகப் பரந்த மனத்தோடே நடக்காமல் கூடாரக் கம்பளங்களை செங்கம்பளங்களாகக் காட்ட முயன்றால் சமுதாயம் அதனால் எத்தகைய நன்மையையும் அடைய முடியாதே!

ஆகவே யதார்த்தத்தை உணராமல் பதார்த்தத்தை ஏற்பதைப் பற்றி எச்சரிக்கையுடன் இருப்பதை நாம் ஓர் அவசரகாலச் சட்டமாகவே நமக்குள் ஏற்று நடந்தவருவதுதான் பொது சனங்களாகிய நம்மையும் நமது வருங்கால சந்ததியையும் காப்பாற்றும் என்று நம்புவோம்.

கொடிகள் ஆயிரம் பறக்கலாம். பறக்கட்டும். ஆனால் அவற்றிற்கெல்லாம் சம மதிப்பும் மரியாதையும் கொடுப்பது இயலாது.

மகிழ்ச்சிக்கு ஒரு கொடி, கவர்ச்சிக்கு ஒரு கொடி, துக்கத்துக்கு ஒரு கொடி, தூய்மைக்கு ஒரு கொடி என்று பல கொடி வகைகளுண்டு. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலான ஒரு கொடி உண்டு. அதுதான் தேசியக் கொடி. கொடிதானே என்று அதை எதனுடனும் ஒப்பிட்டுவிட முடியவே முடியாது.

கொடி கட்டிப் பறக்க முயலும் புலம் பெயர் "கிபீர்" விமானங்கள் எமது தொப்பூழ் கொடி உறவுகளின் எதிர்காலத்தை உண்மையில் இருத்தி வைக்க உறுதியெடுத்துக் கொண்டால்தான் உயர்ந்து உயர்ந்து உண்மையாகவே பறக்கலாம்.

இல்லையேல் எதிர்கால இலக்கிய, சமூக ஏவுகணைகளால் வீழ்ந்து சிதறுவதே நடக்கும்.

பதார்த்தத்தின் தரமதனை உணரவேண்டு மென்றால்
யதார்த்தத்தில் அதைத்தேடுதல் அறிவுடைமை என்பேன்
சமத்துவமோ பொதுமொழியில் ஒன்றுபோலத் தோன்றும்
சமத்துவத்தை எதனெதனில் என்று பார்க்க வேண்டும்.

எப்பொருளும் பொதுமொழியில் ஒன்றுஎன்ற போதும்
எப்பொழுதம் எப்பொருளும் ஒன்று என்று இல்லை
மனிதரெனச் சமத்துவமாய்ப் பொதுவில் கண்டபோதும்
தனிக்குணத்தில் மனிதரவர் தரமுணரல் வேண்டும்.

உயர்த்துவதும் தாழ்த்துவதும் மனிதம் சேர்ப்ப தில்லை
உயர்வும்தாழ்வும் குணமதனின் தரத்தில், வேறில் இல்லை
தரமுணரா விதம்நடக்கும் தரங்குறைந்தோர் தம்மை
தரமுணரா துயர்த்திவிடல் தரத்தில் தாழ்த்தும் நம்மை.

சுவையதற்காய் மட்டு முண்ணும் பழக்கம் நல்ல தல்ல
அவைக்குதவார் தமை உயர்த்தல் அறிவுடைமை அல்ல
பணம், பெருமை எதற்குமன்றி நல்லிதயம் தன்னை
குணம் உணர்ந்து உயர்த்திடலே உதவும், வேறு அல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக