ஞாயிறு, 8 ஜூலை, 2012

அக்கரை மாந்தர்களே! கவனம்! இக்கரை பச்சையில்லை! (கட்டுரை)

தூரத்துக்கு அழகாகத் தெரிவது நெருங்கிடின் எதிர்மாறாக, அசிங்கமாக இருப்பதுண்டு.

விமானத்தில் பறக்கையிலே கீழே வடிவாகவும் நேர்த்தியாகவும் தெரிகின்ற நிலப்பரப்பு, இறங்கிப் பார்த்தால் கரடுமுரடான பாதைகளாகவும் மேடு பள்ளங்களாகவும் இருக்கக் கூடும்.

ஆகவே கற்பனைக்குக் குளிர்ச்சி அனுபவத்திலும் குளிர்ச்சியாய் இருக்கும் என நம்பிவிடுவது தவறாகிவிடவும் வாய்ப்பிருக்கின்றது. வெளிநாட்டு வாழ்க்கை சம்பந்தப்பட்ட கற்பனைகளும் அப்படித்தான்.

இலங்கையிலும் இந்தியாவிலும் மக்களில் பலர் இந்த  வெளிநாட்டு வாழ்க்கையை  ஏதோ சொர்க்க சுகம் என நினைத்துக் கொண்டு, ஏங்குபவர்களாகவும் அதற்காக எதையும் செய்திட ஆயத்தமாக இருப்பதாகவும் இருப்பது ஒரு பெரிய கவலை தரும் விடயமாக இருக்கின்றது.

தகுந்த கல்வித் தகைமைகளுடன் தொழில் தேடி முறையாக வந்தவர்களும் உண்மையான அகதிகளும் தவிர்ந்த பொருள், விழை அகதிகள்தான் வெளிநாடுகளில் பெருமளவில் பிரச்சினையாக இருக்கின்றார்கள் என்கின்ற ஒரு பரவலான கருத்து ஐரோப்பாவில் இருப்பதைக் கவனிக்க வேண்டும்.

இதன் உள் சற்று ஆழ்ந்து அவதானித்தால் இந்த கடைசி ரக மனிதர்கள் தாங்கள் ஏன் நாடு விட்டு நாடு கடந்து அகதி அந்தஸ்துக்காகக் கெஞ்சுவதாக  வெள்ளைக்காரன் மனம் கரையும் வண்ணம் நாக்கூசாத தங்களின் மஞ்சள் பொய்களால் இங்குள்ள சட்டபலவீனங்களைப் பயன்படுத்தி இடம் பிடித்துக் கொண்டார்களோ அதையே மறந்துவிட்டு ஓர் இனந்தெரியாத ஆடம்பர நாயகர்களாய்க் காலங் கடந்து நடந்து காட்டுவதுதான் இப்புதுப் பிரச்சினைக்கு உரம் போட்டு வளர்க்கத் தொடங்கியிருக்கின்றது என்பது ஓர் இலைமறை காயொப்ப உண்மையாகும்.

இங்கெல்லாம் இவர்களைப் போன்று முன்பே வந்திறங்காத ஒரே துரதிர்ஷ்டம் காரணமாக, இப்போது திருப்பியனுப்பப்படுகின்ற பல ஏழை, அப்பாவி சனங்கள் பலரும் திருப்பியனுப்பப்படும் போது அதே விமானங்களில் இந்த பொய்யால் அகதி அந்தஸ்தும் பிரசா உரிமையும் பெற்றுக் கொண்ட அகதி சங்கரர்களும் கூடவே பயணித்து, எந்த ஊரில் பிரச்சினையென்றும் உயிருக்கு ஆபத்து என்றும் வந்தார்களோ அங்கேயே உல்லாசப் பயணிகளாகச் செல்லும்போதுதான் கண் மூடியிருந்த வெள்ளையரின் கண்களும் ஞானமும் விழிப்படைகின்றன.

இங்கிருந்து உல்லாசப் பயணம் போகும் இவர்கள் சும்மா போவதில்லை. பெரும்பாலும் அங்கே இங்கே என்று இங்குள்ள பலரிடமும் கடன் புரட்டிக் கொண்டுதான் அநேகமாகச் செல்லுகின்றார்கள்.

ஆனால் அக்கரை மண்ணில் கால் பதித்ததும் அங்கிருக்கும் அவல நிலைமை இவர்களுக்கு அவல்போல இனிக்கின்றது. அவர்களின் முன்பாக ஏதோ அரச கிரீடம் அணிவிக்கப்பட்ட அனுமார்களாக ஆடம்பர நாடகம் ஆடிக் காட்டுகின்றார்கள்.

இங்கேயிருந்து செல்லும் ஒரு சாதாரண உணவகத்  “தட்டு கழுவி”, அங்கே தான் ஐரோப்பாவின் ஐந்து நட்சத்திர ஓட்டலொனறில், மெனேஜர் என்று கதையளந்தாலும் கூட அங்குள்ள அப்பாவிகள் நம்பிவிடும்படிக்கு இருக்கின்றன இவர்களின் நாடகங்கள்.

அந்நாளைய படலையோரக் கழிவுசாமியும் இப்போது அங்கே கிராமத்தில் குந்தக் “கொமோடு” (அதுதான் இங்குள்ள கழிவாசனம்) தேடியலைந்தால் அந்த சனங்களுக்குப் பொறாமையும் ஏக்கமும் வராதா என்ன? ஆனால் அதனைத் தானே இரசித்துச் சிரிக்க விழைகின்றன இந்த அகதிச் "சிம்பான்சி"கள்!

எவரும் நன்றாக வாழ்வதில் தீமையில்லை. அதுதான் நல்லது. ஆனால் மற்றவர்களை ஏங்க வைப்பதற்கு ஏதுவான சூழ்நிலைகளை உருவாக்கும் வண்ணம் நடக்கும்போதுதான் பிரச்சினைகளுக்குப் பிள்ளையார் சுழிகள் போடப்படுகின்றன. அல்லவா?

இங்கே வாழ்பவர்கள் ஏதோ இலகுவாகவும் சகல வசதிகளுடனும் வாழ்வதாக அங்கிருக்கின்ற அப்பாவி ஏழைகள் மட்டுமல்ல, நடுத்தர மற்றும் ஓரளவுக்கு வசதியுள்ளவர்களும்கூடக் கனவு காணுகின்றார்கள்.

அதனால் என்ன நடக்கின்றது என்றால் ஒருவரை,வருவாயை நம்பி வெளிநாட்டுக்கு  அனுப்பிவிட்டு, முழுக் குடும்பமுமே பரிதவித்து நிற்கும் பரிதாப நிலை உருவாகுகின்றது.

கடல் கடந்து கனவுகளுடன் வந்த சிலர் இன்றைக்கும் இங்கே அழுது அரற்றிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். சிலர் இருக்கவே முடியாமல் மீண்டும் தாங்களாகவே திரும்பிச் சென்றும் இருக்கின்றார்கள்.

தாய் மண்ணில் காத்திருந்து குடித்து மகிழ்ந்த சுதந்திரமான, சொந்தமான கூழுக்கும் இங்கே அரச உதவி என்ற விலங்குக் குறிக்குள் கிடைக்கும் கௌரவப் பிச்சையை ஏற்று வாழ்வதற்குமிடையில் தன்மான உணர்வு தலையிட்டு, அதை ஏற்றுக் கொள்ள மனசாட்சி இடந்தராமையால் “நான் போகின்றேன்” என்று வலிந்து சென்று எழுதிக் கொடுத்துவிட்டு,
அங்கே சென்று துன்பத்திலும் இன்பமாக வாழத் துணிந்த நல்ல தன்மானச் சிகரத்தை நான் மிக மிக அண்மையில் அறிந்த அனுபவமும் எனக்கிருக்கின்றது. இவ் ஆக்கத்துக்கும் அதுவே தூண்டுகோல்.

நான் அவரை நேரில் சந்தித்ததே இல்லை. தொலைபேசியிலேயே தொடர்பிருந்தது. அவரது ஆழமான கருத்தில் இங்கெல்லாம் நம்மவர்கள் இந்நாட்டவர்களை மட்டுமல்ல,  நம்மவர்களையே ஏய்த்து, எமாற்றி வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் தொடர்பை விடவும் தாய் மண்ணின் காய்வு மேல் என்றிருந்தது.

இந்த நிலைமையை நம் நாடுகளில் வாழும் மக்கள் உணராதபடியினால்தான் புரியாமல் பரபரக்கின்றார்கள்.

வறுமையின் தாக்கம் காரணமாக அவர்கள் பணத்தை மட்டுமே முன்னிருத்திச் சிந்திக்கின்றார்கள். அவர்களைச் சரியாக அடையாளங் காணவும் உணரவும் வைத்து, இந்த அயல் மண் ஆசையிலிருந்து அவர்களை மீட்பது கூட ஒரு வகையில் பெரிய சேவைதான்.

சில வருடங்களுக்கு முன்னால் ஒரு பரிசளிப்பில் கலந்து கொள்ளவென நான் தமிழகம் சென்றிருந்த போது, ஒரு வங்கியின் மிக முக்கியமான பதவியிலிருந்த பெரியவர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின் அவர் தனது நெடுநாள் கனவாக இருந்த ஆவலை வெளியிட்டார்.

"எனக்கு ஜெர்மனியில் ஏதாவது ஒரு சான்ஸ் எடுத்துத் தர முடியுமா, சார்?  முன்பணம் ஏதாகிலும் கட்ட வேண்டுமென்றாலும் பரவாயில்லை."

"ஏன் சார், உங்கள் ஊர் உங்களுக்குப் பிடிக்கவில்லையா அல்லது ஏதாவது ஆபத்து கீபத்து...?"

"சே! சே! அப்படியொன்றுமில்லை! இங்கே முன்னேற ஒரு வழியுமே இல்லை பாருங்கள். இரவு பகலாகப் பாடுபட்டும் போதவில்லை. வெளிநாடு என்றால் கை நிறைய சம்பாதிக்கலாமல்லவா?"

அவரைப் பார்க்க உண்மையில் பரிதாபமாகவே இருந்தது எனக்கு. பாவம்! குறிப்பிடுமளவிற்குப் பொருளாதார வறுமை இல்லாதவர், மன வறுமை காரணமாக வாடிக் கொண்டிருந்தார். 

அருகிலே குளிக்க குளம் இருக்க, நீந்தி மகிழ, நீச்சல் குளம் கட்டப்பட்ட இடம் தேடி அலையும் ஓர் அப்பாவியாகவே அவர் எனக்குள் அப்போது உருவகமெடுத்து நின்றார்.

அவருடன் தொடர்ந்த உரையாடல் இங்கே அவசியமில்லை. ஆனால் அவருடனான கலந்துரையாடலிலிருந்து நான் கண்டு கொள்ள முடிந்தது இதுதான்:

அவரது முழுக் கனவும் இந்தப் புலம் பெயர்ந்து வந்த புண்ணியவான்களின் பொய் நாடக நடிப்புக்களினால்தான் உருவாகியிருந்தது. 

கல்வியறிவு அறவே அற்ற அல்லது போதிய அளவுக்கேனும் அற்ற வெறும்  மொக்கு மாமாக்களும் கூட கோட்டும் சூட்டும், வீடீயோவுமாக வெளிநாட்டிலிருந்து அங்கே வலம் வந்து அடிக்கின்ற சவடால்களினால் அவர் மிகவும் மனப் பாதிப்படைந்திருந்தார்.

பணக்கார வேடங்கள் பக்குவமான மனிதர்களையும் கூட சலனப்பட வைப்பது எனக்குப் புரிந்தது. நீண்ட உரையாடலின் பிற்பாடு, கடைசியாக நான் சொன்னேன், "சார், எத்தனையோ ஆண்டுகள் அங்கிருந்து விட்டு இங்கே வந்தும் இந்தத் தூசி பறக்கும் தெருக்களில் நிற்கையில்தான் எனக்கு உண்மையில் பெரிய சுதந்திரமான ஆனந்தமாக இருக்கின்றது. ஒருவகையில் உங்களையெல்லாம் பார்க்க எனக்குப் பொறாமையாகக் கூட இருக்கிறது."

கடவுளே! இந்தக் கணத்தில் இணைய வலயத்தில் அந்த அன்பர் இந்தக் கட்டுரையை வாசிக்க வேண்டுமே என்று நான் மனதார ஏங்குகின்றேன்.

ஆனால் அந்தக் கணத்தில் அவர் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார்?
நிச்சயமாக, "இவன் ஒரு சரியான மாடு. அதனால்தான் அக்கரையிலிருந்து கொண்டு இக்கரை பச்சை என நம்புகின்றான்" என்றுதான் நினைத்திருப்பார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது சொந்தத்  தாய் நாடும் அம்மண்ணின் வீடும்தான் உண்மையான சொர்க்கம்.

பெரிய புயல் ஒன்று வரப் போகின்றது என்ற செய்தி கிடைத்து, ஊர் சனங்களெல்லாம் ஓடிப் பதுங்க விழைந்தால் குடிசை வாழ் ஏழையொருவன் எங்கு ஓடுவான்? தனது குடிசைக்குள்தான் ஓடிப் பதுங்குவான். ஏனென்றால் அதுதான் அவனுடைய சொந்த அரண், பாதுகாப்பு எல்லாம். அல்லவா?

அவனை மடையனென்று சொல்லிவிடுவது இலகு. ஆனால் அவனது தனித்துவத்தைக் கணித்து, மதிப்பது இலகுவல்ல.

சாவு வருகின்றதென்று தெரிந்தும் துணிந்து முகம் கொடுக்கும் சுத்த வீரன் சாதாரண கோழையின் கருத்துக்கு வாழத் தெரியாத, வலிந்து சாவைத் தேடிப் போகின்ற  முட்டாள்தான். ஆனால் அதுவா உண்மை?

இன்னொரு அனுபவத்தைக் கேளுங்கள்.
பதினைந்தாண்டுக் கால அயல் வாசத்தின் பின் ஒரு மரணச் சடங்கிற்காகத் தவிர்க்க இயலாத நிலைமையில் இலங்கைக்குப் போய் விட்டுத் திரும்பிய நேரம். கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்துக்குள் நுழைந்த போது, நீண்ட காலம் சிங்கள மொழி பேசாதிருந்த எனக்கு சிங்களத்தில் உரையாடிட ஆவலாக இருந்தது. எனவே அங்குள்ள அலுவலர்கள் சிலருடன் சிங்களத்தில் கதைத்துக் கொண்டிருந்தேன்.

சிறிது நேரம் சென்ற பின் ஒரு அதிகாரி வந்து  தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். எனது விமானம் வந்து நான் ஏறும் வரைக்கும் எனக்கும் துணை வேண்டுமே!

ஆகவே நானும் கதை கொடுத்தேன். ஐந்து, பத்து நிமிடங்கள் கழிந்ததும் ஜெர்மனியில் நான் தொழில் பார்க்கும் நிறுவனத்தில் ஒரு 'சான்ஸ்' கிடைக்குமா என மெதுவாக வினவினார்.

ஒரு பொறுப்புள்ள பதவி வகிப்பவர். நல்ல சம்பளம் நிச்சயமிருக்கும். இருந்தாலும் அற்ப ஆசை.

நான் கேட்டேன் "என்ன வேலை?"

"ஏதாவது! கழிவறை கழுவ வேண்டுமென்றாலும் பரவாயில்லை. இந்த நாட்டை விட ஜெர்மனி எவ்வளவோ மேல்."

எனது ஜெர்மன் பாஸ்போர்ட்டும் தொழிலக அட்டையும் அவரை அப்படி ஏமாற வைத்தது. அவரது விபரங்களைக் கேட்டேன். உடனடியாகவே கையில் தந்தார்.

எப்படி முன்கூட்டியே இவர் தயாராக நான் கேட்ட விபரங்களை வைத்திருந்தார் என்று யோசித்தேன். உண்மை ஓரளவிற்குப் புரிந்தது.

ஐயா என்னைப் போலவே வந்து போகின்றவர்கள் பலரிடமும் இப்படிக் கொடுத்துக் கொடுத்து ஒரு அதிர்ஷ்ட சீட்டு விளையாட்டு நடத்திக் கொண்டிருக்கின்றார் போலும்.

கோபப்படுவதா? ஆத்திரப்படுவதா? அனுதாபப்படுவதா?
மூன்றாவதுதான் சரி. அல்லவா?

தமிழ்  நாட்டிலும் சரி, தமிழீழத்திலும் சரி, பொய்யை நம்பிக் கனவுகாணும் இழிநிலை இனியும் தொடரல் நல்லதல்ல. நல்ல முறையான தகைமையுடன் தொழில் தேடிப் பெற்றுச் செல்ல முடியாதவர்கள், அதற்காக வீணாகக் கவலைப்படுவது தவறு.

நமது நாடுகளில் அரசியல்வாதிகளின் தவறுகளினால் சிரமங்கள் பல இருப்பது உண்மைதான். ஆனால் இப்படி இங்கிருந்து வரும் சில்லறை வேடதாரிகளைப் பார்த்து ஏமாந்து மட்டும் வெளிநாடு வரக் கனவிலும் நினைக்காதீர்கள். ஏனெனில் எப்படியும் வாழ்ந்தால் போதும் என்பது வாழ்க்கையல்ல. அது தரம் குறைந்த தடுமாற்றம். தயவு செய்து மறந்து விடாதீர்கள்.

உங்களிடம் வறுமை இருக்கலாம். ஆனால் நீங்கள் உயர்ந்திருக்கிறீர்கள். இங்கு பலரிடம் பணமிருக்கிறது. ஆனால் தாழ்ந்து, மிக மிகத் தாழ்ந்து இருக்கிறார்கள்.

தங்கக் குடம் வெறுங் குடமாயின் என்ன பயன்? தாகம் தீருமா?
வாழ்க்கை வேறு.  வேடம் வேறு. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

பணத்தை விட தன்மானத்தை மதிப்பவர்களை மதிப்பவர்கள் குறைவாக இருக்கின்ற இந்தச் சூழ்நிலையால் இரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டு சில நூற்றுக்கணக்கான நல்ல இதயங்கள் மட்டுமே இருக்கின்றன. அவர்களை எள்ளி நகையாடும் அடுத்த கூட்டமே ஆயிரக்கணக்கில் அதிகமாக இருக்கின்றது.

இந்த வெளிநாட்டு வாழ்க்கை இருக்கிறதே! இது ஒரு நாடக வாழ்க்கை. இங்கே எல்லாருமே நடிக்கத்தான் செய்கின்றார்கள்.

பணம் இல்லாதவன் அது இருப்பதுபோல நடிக்கின்றான்.
தரமில்லாதவன் அது இருப்பதுபோல் நடிக்கின்றான்.
மொழி தெரியாதவனும் மொழி வளர்க்கின்றான்.
ஒழுக்கத்தையே இழிவு செய்பவன் நல்லொழுக்க உபதேசம் செய்கின்றான்.
கழுதைகள் கர்ச்சிக்கின்றன.
ஓநாய்கள் முறுவலிக்கின்றன.
சிங்கங்களின் தொப்பிகளுடன் நரிகள் நடந்து, நம்பச் சொல்கின்றன.
ஊரில் பிச்சைசாமி, இங்கே பெரியய்யா பிள்ளை!
கள்ளை மட்டுமே அறிந்தவனுக்கு விஸ்கியின்றி பசிக்காதாம். நடிக்கின்றான்.
தண்ணீர் குடித்தால் வாய் கசக்குமாம். கோலா குடித்தாலே தாகம் தீருமாம்.

இப்படியெல்லாம் அடையாளம் காணமுடியாத அடையாளங்களினால் நிறைந்து வழியும்  கடல் கடந்து வந்து திரவியம் தேடும் இந்த தங்க முலாம் பூசப்பட்ட பிததளைகளை விட வறுமையிலும் பெருமையாக வாழும் தாயக மக்களே உயர்ந்திருக்கின்றார்கள் என்பதே அனுபவம் காட்டும் உண்மையாக இருக்கின்றது.     

தங்கக் கம்மல் சேற்றில் புதைந்து, தரம் தெரியாமல் கிடப்பதுபோல் பல நல்ல, கண்ணியமான, ஒழுக்கமுள்ள, தரமான நல்ல மனிதச் சிறுபான்மைப் பிரிவொன்று நிமிரத் தெரியாமல் பரவலாக அயல் தேசங்களில் தத்தளித்துக் கொண்டும் கிடக்கத்தான் செய்கின்றது.

வெறும் அரச உதவியில் வாழும் குடும்பங்கள் ஆடம்பர வேடம் போடுவதும் உழைத்து வாழும் குடும்பங்கள் திண்டாடிக் கொண்டிருப்பதும் இந்த வெளி நாடுகளில் நடக்கின்ற கேலிக் கூத்து நாடகங்கள்.

கடல் கடந்து வந்தவுடன் காற்றில் பணம் பிடிப்பதாய்க் கனவு காணும் சொந்த ஊர்ச் சொந்தங்களுக்கு எந்த உண்மையைச் சொல்லியும் எடுபடாது என்பதும் உண்மையைச் சொன்னால் அதைப் பொய்யென்றே அவர்கள் கருதுவார்கள் என்பதும் கடுக்காயை வாய்க்குள் வைத்துக் கடிக்க முடியாமல் தடுமாறுகின்ற அனுபவம் போன்றது.  கடித்தால் கசக்கும். கடிக்க முடியாவிட்டால் வாய் வலிக்கும்.

தாயக உறவுகளே! என்றைக்கு நீங்கள் இந்த எல்லாமிருக்கும், ஒன்றுமில்லாத வெளிநாட்டு ஏழைகளைச் சரியாகப் புரிந்து கொள்வீர்கள்?

இங்கெல்லாம் ஏமாற்றுக்கள் கொடி கட்டி நிற்பதும் நேர்மை கைகட்டி நிற்பதும் பொய்மைகள் தலை நிமிர்ந்து நிற்பதும் உங்களுக்கு எப்படி, எப்போது தெரியப் போகின்றது?

அமர்ந்திருந்தே உலக வலம் வரத்தக்க இந்த இணைய வலய அறிமுகத்தால் இணைந்திருக்கும் தாய் நாட்டுச் சகோதரர்கள் இனியாவது உண்மையை உணர்ந்து தமது மக்களுக்குத் தெரியப்படுத்த முன் வர வேண்டும்.

புத்திஜீவிகள் இந்த பொய்ப் புத்திப் புகழேந்திகளைச் சரியாக உணர்ந்து
மக்களை எச்சரித்து வழிகாட்ட முன்வர வேண்டும்.

பொறாமைக்காரன் பொதுநலம் விழைந்தால் அதில் நுரையினால் தாகந் தீர்க்கும் முயற்சிகளே இருக்கும் என்பதை தயவு செய்து சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.

இக்கரை மாடுகள் பச்சைத் துண்டை விரித்துக் காட்டித் தாங்கள் புல்வெளியில் நிற்பதாக ஏமாற்றுகின்றன. நீங்களோ புல் வெளியில் நின்று கொண்டு இங்கே புல்லைத் தேடி வர முனைகின்றீர்கள்.

அக்கரை மானிடர்களே! இக்கரை பச்சையில்லை!
தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

காற்றிலே மலரிணைந்தால் மணம் சேர்ந்து கமகமக்கும்
ஊற்றிலே ஒளி இணைந்தால் எழில்கூடி மனம் நிறையும்
காற்றிலே கழிவும் சேற்று நாற்றமும் கலந்து விட்டால்
நாற்றமே காற்றாய் மாறும் உண்மையை உணர வேண்டும்.

சோற்றுக்கும் உடைக்கும்என்று வெளிநாட்டை நம்பி வந்தால்
காற்றுக்கும் நஞ்சிணைக்கும் கயவரால் வாட நேரும்.
வேற்றுமை வாழ்விலல்ல,வாழ்கின்ற விதமதில்தான்!
ஏற்றிடில் இந்த உண்மை, தனித்துவம் உயர்ந்திடும். காண்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக