சனி, 7 ஜூலை, 2012

சும்மாவும் பாவம் வேண்டாம் (சிறுகதை)

கொழும்பு மாநகரம் தகதகவென எரிய, புகை மண்டல மணம் கமழ, இனவெறி மரண விழாக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தது.

காலம் அது ஜூலை 1983 என்று சொல்லிக் கொண்டிருக்க, காலன் திக்கு முக்கெல்லாம் ஓடியோடிக் களைத்துக் கொண்டிருந்தான்.
 அவனால் எடுத்துச் செல்ல முடியாதபடிக்குத் தமிழ் உயிர்களைச் சிங்கள இனவெறிக் காடையர்கள் நாலா திசைகளிலும் மிக மிக வேகமாகப் பறித்துப் பறித்துக் குவித்துக் கொண்டிருந்தார்கள்.
பிணங்களாகப் பல தமிழர்கள் சரிய, நடைப்பிணங்களாக மிஞ்சிய பலரும் பதைபதைத்துக் கொண்டு இருந்தார்கள். காரணம், தங்களின் உயிர்களுக்குக் காவலர்களான சட்டத்தின் தொண்டர்களே அன்று அவர்களைக் காவு எடுப்பவர்களுக்குக் கங்காணிகளாக இயங்கிக் கொண்டு இருந்தமைதான்.

வானொலியில் மிகவும் அடிக்கடி துட்டகைமுனுதான் வந்து கொண்டிருந்தான். அதுவும் அன்றைய மந்திரிகளின் வாய்களிலிருந்து. தேசத் தலைவர்களின் வாய்கள் அன்று வானொலிகளில் நாசகார நடவடிக்கைகளுக்குச் சிங்களவர்களுக்கு ஊக்க உரைகளை நிகழ்த்திக் கொண்டு இருந்தன.

அரசியலை அறியாத, தங்களின் அன்றாட உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்த  அப்பாவி   ஏழைகளும்கூட அவர்கள் வெறும் 'தெமல' என்பதற்காகச் செத்துக் குவிந்து கொண்டிருந்தார்கள்.

சில தமிழ்க் காற்சட்டைத் துரைமார் தங்களின் பாதுகாப்புக் கவசமாக சிங்களத் தினசரிகளைப் பெரிதாக மடித்து எடுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். என்றாலும் முகமும் உடல் நடுக்கமும் அவர்களைப் பல இடங்களில் மாட்டிக் கொண்டு விழிக்க வைத்ததும் நடக்கத்தான் செய்தது.

கொட்டாஞ்சேனை என்ற இடத்தில் ஒரு பெரிய மாரியம்மன் கோவிலிருக்கின்றது. அதனருகிலிருக்கும் வீதி வழியாக ஒரு தமிழ்த்துரை சிங்களப் பத்திரிகையுடன் அன்று நடந்து கொண்டிருந்தார்.

தூரத்தில் சிங்கள ரவுடிக் கும்பலொன்று நிற்பதைக் கண்டதும் திரும்பி நடக்க முதலில நினைத்தாலும் திரும்பி நடந்தால் சந்தேகித்துத் துரத்தி வந்து வெளுக்கக் கூடுமே என்ற பயத்தில் சாதாரண சிங்களவரைப் போல அவர்களைக் கடந்து சொன்றார் அவர்.

அவர்களைத் தாண்டிச் சில மீற்றர் சென்றதும்தான் அவருக்கு நிம்மதி வந்தது. அப்பாடா!
அவர் மூச்சு விட அப்போதுதான் தொடங்கினார். அதற்குள்…

பின்னாலிருந்து ஒரு குரல் அதட்டியது:

"ஹேய்! உம்ப தெமல நெத்த?" ( ஏய், நீ தமிழனல்லவா? )

உதறலெடுத்த துரை உடனடியாய்ச் சிங்களத்தில் திருவாய் மலர்ந்தருளினார்.

"நே ஐயே மம 'சிங்களவன்' ஐயே!" (இல்லை அண்ணா, நான் சிங்களவன் அண்ணா.)

"சிங்களவங்? அடோ மூ தெமலயெக். அல்லபாங்."

சிங்களத்தில் 'சிங்ஹல' என்பது தெரிந்திராதபடியால் நடந்த அனர்த்தம் இது.

டேய் அவன் தமிழன். பிடிங்களடா என்று கத்தியவனைத் தொடர்ந்த கூட்டம் அவரைச் சுற்றி வளைத்து, வெளுத்து வாங்கியது.

தனது உடையுடன் கையிலிருந்த சிங்களப் பத்திரிகையும் சுக்கு நூறாகக் கிழிந்து கந்தலாக, அவர் வந்த வழியே வீடு நோக்கி திரும்பி ஓடித் தப்பினார். அவரது அதிர்ஷ்டம், அந்தக் கூட்டம் அவரது ஓட்டத்தை இரசித்ததோடே நின்று விட்டது.

சந்திரன் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பொருள் சேகரிக்க முனைந்து கொண்டிருந்த வேளையில் அவரை சந்தித்தான்.

"என்ன நாதன் சேர். காலையில் நீங்களும் மாட்டிக் கொண்டீர்களாமே?"

" என்ன செய்வது தம்பி ஒஃபீசுக்குப் போகவிருந்ததாலே ஒரு சிங்களப் பேப்பருடன் போனேன். யார் நீ என்று கேட்டான்கள். நான் சிங்களவன்தானென்று சொன்னேன். எப்படியோ கண்டு பிடித்து சாத்து சாத்து என்று சாத்திப் போட்டான்கள். இனி கலவரம் முடியும் மட்டும் வேலைக்குப் போவதில்லையென்று முடிவெடுத்து விட்டேன்."

அவர் சிங்களத்தில் எப்படிச் சொன்னார் என்பதைக் கேட்ட சந்திரனுக்குக் காரணம் ஒரே வினாடியில் புரிந்து விட்டது. அவருக்கு ஆறுதல் சொல்லி விட்டு, சிறிய முறுவலோடே விடைபெற்றுக் கொண்டு தனது பணியைத் தொடாந்தானவன்.
++++++++

பிற்பகல் இரண்டு மணியிருக்கும். சந்திரன் இருந்த பக்கமாக சற்று சலசலப்புக் கேட்டது. ஆட்கள் சிலர் அந்தப் பக்கமாக ஓடுவது தெரிந்தது. அவனும் நகர்ந்தவாறே ஒருவரை அணுகி விபரம் கேட்டான்.

"தங்க நகைகள் எல்லாம் மிக மலிவாக விற்கிறார்களாம். "
சொன்னவர் சொன்ன வேகத்திலேயே நாகர்ந்து விட்டார். இந்தக் கலவர நேரத்திலே நகை விற்பனையா? அதுவும் தெருவிலேயா?

யாராவது நகைக் கடைக்காரர்கள் அவசர அவசரமாக விற்றுவிட்டு வீட்டுக்குத் தப்பியோட முனைகிறார்களா? அப்படி நடப்பது சாத்தியமே இல்லையே!

சந்திரன் வேகமாக ஓடி, அங்கே போனான். ஒருவன் தனது இடது கையிலே கொத்துக் கொத்தாகத் தங்க நகைகளைத் தொங்க விட்டுக் கொண்டு விற்றுக் கொண்டிருந்தான்.

சந்திரன் நெருங்கியதும் அவன் சொன்னான். "தொரே! இது பத்து பவுனுக்கு மேலே. ஐநூறு ரூபா தாங்க."

அதை சந்திரன் வாங்கிப் பார்த்தான். அது ஒரு பென்னம் பெரிய  சங்கிலி.
நிச்சயத்திலும் நிச்சயமாக அது ஒரு தாலி என்று தெரிந்தது. யாரோ ஒரு பணக்காரத் தமிழரின் வீட்டில் கொள்ளையடித்த நகை அது என்பது புரிந்தது.

அட தெய்வமே!

"இது எங்கே எடுத்தது?"

"அது ஒங்களுக்கு எதுக்கு தொரே! மலிவாக கெடைக்கச்சிலே வாங்கிட்டுப் போவாமே, சும்மா பொலீஸ் வேலை ஏன் பாக்க வாறீங்க? இஷ்டம்னா வாங்குங்க. இல்லாட்டி நவண்டு போங்க"

நகை கொள்ளையடித்தது என்று தெரிந்தது. என்றாலும் இவன் தமிழ் பேசுகிறானே!

"இதை நீயா கொள்ளையடித்தாய்?"

அவனுடைய முகம் சிவந்து விட்டது.

"ஐயா சும்மா தேவையில்லாமே பேசாதீங்க. இது சிறிசேன முதலாளியுடையது. அந்தா தூரத்திலே நிக்கிற சார்ஜனுக்கும் இதிலே பங்கிருக்கு. நான் விக்க மட்டும்தான். சிறிசேன கேட்டா உங்களுக்குத்தான் டேஞ்சர். அதாலே வாங்காட்டி மெதுவா நைசா மாறிப் போங்க. வாயைக் கொடுத்து சும்மா 'லெடையிலே' (தொல்லையில்) மாட்டிக் கொள்ளாதீங்க. "

கொள்ளையரோடே சேர்ந்து நிற்கும் தன்னினத்தை உணராத பலிக்கடா!

சிறிசேன அவ்வட்டார சண்டியன். அவனுடன் போலீசும் சேர்ந்து என்றதுதான் பெரிய அதிர்ச்சியைச் சந்திரனுக்குத் தந்தது.

நகை விற்றுக் கொண்டிருந்தவன் ஏதோ காரணத்தால் சந்திரனுக்குத் தீமை வருவதைத் தவிர்க்க முனைவது தெரிந்தது. எதுவுமே செய்யத் -தோன்றாத நிலையில் சந்திரன் அங்கிருந்து அகன்று தனது இடத்துக்குத் திரும்பினான்.

வருகிற வழியில் ஓர் அம்மா அவனை மறித்தார்.

"சந்திரன் தம்பி, சந்திரன் தம்பி! அங்கே யாரோ மலிவா தங்கம் விக்கிறாங்களாமே! பவுன் அம்பது அறுபது ரூபாவுக்கு கிடைக்குதாமே!"

ஆவலும் ஏக்கமுமாக அந்தத் தாய் தொடர்ந்து சொன்னார்.

"தம்பி, எனது மகளிடம் ஒரு பொட்டுத் தங்கம்கூட இல்லை. குமர்ப் பெண். எஙகளாலே தங்கம் வாங்குவது எனறைக்குமே முடியாது. இந்த சந்தர்ப்பம் ஒரு கடவுள் தந்த வரம் மாதிரி. தயவு செய்து என் கூட வந்து கொஞ்சம் பேசி இன்னும் குறைத்து வாங்கித் தாருங்கள் தம்பி."

சந்திரனுக்கு நெஞ்சை அடைத்தது. அந்த எழைக்கு அப்போதைய அந்த மலிவு விலைக்கான காரணம் புரிந்திருந்த மாதிரியே தெரியவில்லை. மலிவாகக் கிடைப்பதால் மகளுக்கு வாங்கி அவளது கலியாணத்துக்கு சேர்க்க நினைத்திருக்கிறார் என்பது நன்றாகவே புரிந்தது.

தயக்கத்துடன் சந்திரன் சொன்னான். "அம்மா அதை வாங்காதீர்கள். அவர்கள் பல குடும்பங்களை அடித்து விரட்டிக் கொள்ளையடித்துப் பறித்த நகைகள் அவை. அந்தப் பாவம் பொல்லாதது. வேண்டாம்."

அந்தத்தாயின் முகத்தில் பெரிய ஏமாற்றமும் சோகமும் அதே சமயத்தில் ஏகப்பட்ட எரிச்சலும் நெளிந்தன.

ஏதோ தவறான நபரை அணுகி விட்ட கவலை அவரது முகத்தில் தெரிந்தது.
"தம்பி நாம் வாங்காவிட்டால் வேறு எவராவது வாங்கத்தானே போகிறார்கள்?"

வறுமையும் தவிப்பும் சகோதரர்கள் என்பதும் அந்தத் தாயின் ஏக்கத்தில் நியாயமிருப்பதும் சந்திரனுக்குப் புரிந்தது. என்றாலும் நியாயத்தை விளங்கிக் கொள்ள வைப்பதுகூட ஒரு கடமைதானே! சொல்லிப் பார்ப்போம்!

"அம்மா, தயவு செய்து நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். அவற்றைக் கொள்ளையடித்தவர்கள் அவற்றைக் கஷ்டப்பட்டுச் சம்பாதித்துச் சிறுகச் சிறுகச் சேர்த்த குடும்பங்களை ஈவு இரக்கமில்லாமல் அடித்து, மிரட்டி, விரட்டி விட்டுத்தான் எடுத்திருக்கிறார்கள். உங்கள் மகளைப் போன்ற இன்னோர் ஏழைப் பிள்ளையின் இரத்தம் கொதிக்கக் கொதிக்கக் கொள்ளையிடப்பட்ட அந்தப் பாவத்தில் நீங்களும் பங்கேற்பது நியாயமா அல்லது சரியா என்று நீங்களே சிந்தித்துப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள். இதே உங்களுக்கு நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை யோசித்துவிட்டுச் சொல்லுங்கள். உங்களுக்குச் சரியென்றால் நான் வருகிறேன்."

என்ன ஆச்சர்யம்! சில விநாடிகள் விக்கித்துப்போய் நின்ற அந்த முகத்தில் ஏதோ ஒருவித தெளிவு தெரியத் தொடங்கியது. சில விநாடிகள் கழிந்தன.

"தம்பி, நீங்கள் சொல்வதுதான் நியாயம். அவர்களும் நம் சனங்கள். அவர்களுக்கு நடந்தது நமக்கும் நடக்கலாம்தானே? நமக்கு அந்தப் பாவம் வேண்டாம் தம்பி."

அந்தத் தாய் ஏதோ ஒரு திருப்தியுடன் திரும்பி நடந்தார்.

"அம்மா என்மேலே கோபமில்லையே!"

"இல்லவே இல்லை தம்பி. கடவுள்தான் ஒரு பெரிய பாவத்திலேயிருந்து உங்களை வைத்து காப்பாற்றயிருக்கிறார். நீங்கள் கவனமாகப் பார்த்து வீட்டுக்குப் போங்கள் தம்பி."

இனந்தெரியாத ஒரு பெருமிதமும் தைரியமும் தன்னைச் சுற்றுவதைச் சந்திரன் உணர்ந்தான். உண்மையை உண்மையாக உணர்த்தினால் கல்லும் கரையும் என்பது புரிந்தது அவனுக்கு.

எதையோ நினைத்தவனாக அவன் நகை விற்றவனிருந்த பக்கமாக மீண்டும் போய்ப் பார்க்க விழைந்தான்.

அந்த மனிதனின் கையிலிருந்த மாலைகளில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை அனைத்தும் விற்றுத் தீர்ந்திருந்தன. பலர் கைகளில் மூன்று நான்கு என்று நிறைய, அவர்கள் பெரிய மனதிருப்தியுடன் நகைகளை எடுத்துக் கொண்டு தங்கள் வீடுகளுக்கு விரைந்து கொண்டிருந்தார்கள்.

அவனது கையிலிருந்து பெருந்தொகைப் பணத்தைச் சண்டியன் சிறிசேன எடுத்துக் கொண்டு ஒரு சிறு கட்டுப் பணத்தை அவனிடம் கொடுக்க, அதை அவன் தனது இடைக்குள் சொருகி விட்டு, மீதி நகையை விற்பதில் முனைந்து கொண்டிருந்தான்.

சந்திரன் கவனித்துப் பார்த்தான். நகைகளை வாங்கிச் சென்றவர்களில் ஒருவர் கூட சிங்களவரில்லை. அத்தனை பேருமே பச்சைத் தமிழர்கள்தான். அடிபட்ட சகோதர சொத்தை அடைந்ததில் ஆனந்தமாக நடந்து கொண்டு இருந்தார்கள்.

அந்தத் தாய்க்குச் சொன்ன அறிவுரையை அவர்களுக்குச் சொல்ல முயல்வதும் பன்றிகளின் முன் முத்தை எறிவதும் ஒன்றுதான் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது அவனுக்கு. அத்தனை பேர் முகங்களிலும் ஏகப்பட்ட மலர்ச்சி.

தமிழனென்று சொல்லடா, தலை குனிந்து நில்லடா!

ஒரு வாரம் கழிந்திருக்கும். நிலைமைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பிக் கொண்டு இருந்தன. ஒரு நாள் பகல் தெருவிலே பெருஞ்சத்தமாக இருந்தது.

சந்திரன் தனது வீட்டிலிருந்து வெளியே வந்து எட்டிப் பார்த்தான். ஒரு பொலீஸ் ஜீப் நகர்ந்து வர, அதன் பின்னால் ஒரு வானமும் வர, ஒருவனை இழுத்து வந்து கொண்டிருந்தார்கள் ஓர் இனஸ்பெக்டரும் இரு பொலீஸ்காரர்களும்.

'தடீர் தடீர்' என்று பயங்கரமாக அடி விழ, அவன் கதறிக் குழறிக் கொண்டிருந்தான்.

"மஹாத்தயா கா ண்ட எப்பா மஹாத்தையா! ஐயோ, ஐயோ.."

"பென்னப்பாங். வென காட்டத விக்கே? " (காட்டு. வேறு யாருக்கு விற்றாய்?)

அன்று நகை விற்ற தமிழன்தான் பொலீஸ் பொல்லடியால் துடித்துக் கொண்டிருந்தான்.

பட்டென்று விளங்கியது விடயம். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்கும் பணியில் பொலீஸ்.

பின் வாகனத்திற்குள் ஏகப்பட்ட நெரிசல். எல்லாரும் கைவிலங்கிடப்பட்ட நிலையில். அவர்களுக்குள்... அவன் அன்று கண்ட நகை அள்ளிக் கட்டிய சிலர் இருப்பது தெரிந்தது.

கலவரத்தின் பின்னாட்களில் பலர் கைது செய்யப்பட்டு பல கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்கும் பணி நடைபெறுவதாகவும் அடிவாங்கும் கள்ளனும் ஒரு கொள்ளையன் என்றும் செய்தி அடிபட்டது.

சந்திரனுக்கு அதிர்ச்சி. இவன் நகை விற்றது சரி. ஆனால் அவற்றை விற்கக் கொடுத்த சிறிசேன அல்லவா உண்மையான கொள்ளைக்காரன். அவன் என்னானான்? அதற்கு யாரோ சார்ஜன்ற் ஒத்துழைப்பு நல்கியதாக இவன் காட்டிச் சொன்னானே! அவர் எங்கே? இவன் ஏன் அவர்களைக் காட்டிக் கொடுக்காமல் அடி வாங்குகின்றான்?

விடை காணக் கடினமான கேள்விகள். பணபல ஏற்றத் தாழ்வுகளின் சில பக்கங்கள் இப்படித்தான் எழுதப்பட்டு இருக்கின்றன போலும்

சட்டத்துக்கு ஒருவன் சாகுமுன் அவனைக் காப்பாற்றத் தெரியாது. செத்துக் கிடந்தால் அதன்பின் பிணத்துக்குக் காவல் போடும்.

சந்திரன் மெதுவாக நகை வாங்க முயன்று, தன்னால் வாங்காமல் திரும்பிய தாயின் வீட்டுப்பக்கம் போனான். அவன் நெருங்குமுன் அந்த அம்மாவே ஓடிவந்தார்.

"தம்பி, நல்ல வேளை அன்றைக்குப் கடவுள் மாதிரி வந்து கண்ணைத் திறந்து என்னைக் காப்பாற்றினீர்கள். இல்லையென்றால் நானும் இப்படிக் கைவிலங்கோடே … மானம் போய்… என் குடும்பமே தூக்குப் போட்டுச் செத்திருக்கும் தம்பி. நன்றி தம்பி. நன்றி."

"நன்றியைக் கடவுளுக்குச் சொல்லுங்கள் அம்மா. நல்ல பழம் நல்லதைச் செய்யும். கெடட பழம் கெடுதியைத்தான் செய்யும். நமது செயல்களும் அப்படித்தான். புரிகிறதா அம்மா? தகுதி என்பது நகையிலே அல்ல, நம் மனசாட்சியின் மதிப்பிலேதான் இருக்கிறது."

சந்திரன் சிரித்துக் கொண்டே புறப்பட்டுத் திரும்பி போது ஒன்றைக் கவனித்தான். அந்த ஏழை வீட்டின் ஒற்றை சன்னலின் வழியாகக் களங்கமற்ற ஒரு தங்கையின் அன்பு முகம் புன்னகைத்துக் கொண்டிருந்தது.

நகை என்றால் இதுவல்லவா நகை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக