சனி, 21 ஜூலை, 2012

வெய்யிலும் முறுவலிப்பும்

வெறுங்காலுடன் நடக்கின்றேன்
எனது அன்னை வந்து தடுக்கின்றாள்
வெய்யிலாம். செருப்பணிந்துதான் நடக்க வேண்டுமாம்
பணிவதுதான் பண்பென்று நான் ஏற்றுக் கொள்கின்றேன்.
செருப்புடன் நடந்து நடந்து எனது கால்கள் வலிக்கின்றன
நடந்தால் கால் வலிக்குமென்று அம்மா சொல்லவில்லை.
வெக்கை வாட்டுகிறது.நிழலைத் தேடுகின்றேன்.
அது எங்கேயோ ஓடி ஒளிந்து கொண்டுவிட்டது
வெய்யில் படர்ந்து கிடப்பதால் பயந்துவிட்டது.
அது எனது மனம் சொல்லும் விளக்கம்.
ஆனால் மனசாட்சி அதை மறுத்துக் கொதிக்கின்றது
"குற்றம் வெய்யிலிலில்லை.
ஒரு மரமில்லாமையில்தான் இருக்கின்றது"
அப்படியென்றால்? சிந்திக்கின்றேன்.
நிழல் தானாக வராது. அதற்கான சூழல் வேண்டும்.
அது வேண்டுமென்றால்அதை அமைக்க வேண்டும்.
இப்போது புரிகின்றது எனக்கு.
துன்பங்கள் தாமாகத் தீராது.
துன்பத்தைத் தள்ளினால் இன்பம் வரும்.
இன்பத்தைத் தள்ளினால் துன்பம் வரும்.
ஒரு சிறு பொறிதான். என்றாலும்
அதுதான் அறிவின் அத்திவாரமோ?
எனது இதழ்கள் விரிகின்றன. ஏன்?
நான் முறுவலிக்கிறேனா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக