புதன், 18 ஜூலை, 2012

மனிதன் படைத்த கொடிய மிருகமே, நீ என்றைக்குச் சாவாய்? (கட்டுரை)

ரு தெருவோரமாக நான் நடந்து கொண்டு இருக்கின்றேன். ஒரு குப்பைத் தொட்டிக்குள் கைவிட்டு ஒரு குழந்தை எச்சில் உணவு மிகுதி இருந்த பொட்டலத்தை எடுத்து அதை நக்குகின்றது. எனக்கு ஒரே அருவருப்பாக இருக்கின்றது. "சீ! என்ன கெட்ட பழக்கம் இந்தச் சின்னக் குழந்தைக்கு? இந்தச் சின்ன வயதிலேயே இப்படிப் பொறுக்கித் தின்ன விட்டுவிட்டு, இதன் பெற்றோர்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள்?

அதனருகில் நெருங்குகின்றேன்.
"ஏய்! எனன் செய்கிறாய் நீ ? இப்படி எச்சிலையா பொறுக்கித் தின்பது? உன் அம்மா, அப்பாகிட்டே கேட்டு சாப்பிடாமல் தெருவிலிருப்பதைச் சாப்பிடுகிறாயே! இதில் ருசி அதிகம் என்றா இப்படிச் செய்கிறாய்?"

எனது பேச்சில் இருந்த ஆணவமும் திமிரும் அகங்காரமும் அடக்கி வைக்க முனையும் மமதையும் எனது பேச்சுக்களினால் துப்பாக்கிக் குண்டுகளாய் அந்தப் பிஞ்சுக் குழந்தையைத் தாக்கி அதை வதைப்படுத்துமே என்பதை நான் உணராமல் இருக்கிறேன்.

ஆனால் அந்தக் குழந்தைக்கு அது...

"என் அம்மா அப்பாவும் நானும் தம்பியும் இரண்டு நாட்களாக சாப்பிடவே இல்லை மாமா!. நான்தான் பசி பொறுக்க முடியாமல் வெளியிலே ஓடி வந்து ஏதாவது கிடைக்குமா என்று தேடிப் பார்த்தேன். இதை அந்த வீட்டிலிருந்து யாரோ கொண்டு வந்து வீசியதைக் கண்டுவிட்டுத்தான் ஒடி வந்தேன். எனக்கு வேறு வழி தெரியவில்லையே, மாமா!"

எட்டு வயதிருக்கத்தக்க அந்தப் பாலகன் எனது படித்த, திமிர் பிடித்த, பணவெறியைத் தனது கள்ளங் கபடமற்ற விளக்கத்தினால் செருப்பாலடித்து உணர்த்துவதை அப்போதுதான் நான் சரியாக உணர்கிறேன்.

எனது கைகால்களே தடுமாறுகின்றன. ஆத்திரம் அன்பாக மாற, நான் அதனிடம் கேட்கிறேன்.

"நீ இப்படி வந்தது உன் அம்மா, அப்பாவுக்குத் தெரியுமா?"

"இல்லை மாமா! அவர்களுக்குத் தெரியாது. எல்லாரும் சுருண்டு படுத்துத் தூங்குகிறார்கள். என்னாலே முடியாமல்தான் நான் தெருவுக்கு ஓடி வந்தேன்"

"ஏன் அவர்கள் தூங்குகின்றார்கள்?"

"யாரிடமும் சென்று கேட்கத் தெரியாமல்தான் மாமா."

தனது பெற்றோர் தங்களுக்கிடையில் பேசிக் கொண்டதையே அது தனது கருத்தாகத் தெரிவிக்கின்றது என்று புரிகின்றது எனக்கு.

கடவுளே! தனக்குக் கிடைத்த உணவு சரியில்லையென்று வீசியெறியும் குழந்தை ஒரு வீட்டில் இருக்க, எவரோ தின்று விட்டு வேண்டாமென்று வீசியெறிந்த மிகுதி எச்சிலை விரும்பித் தின்னத் தேடியலையுமளவிற்கு இன்னுமொரு குழந்தையை நடுத்தெருவில் அலையவிட்டிருக்கின்றாயே! இது நியாயமா? இது நீதியா? இது முறையா? இது சரியா?

நான் என்னையும் அறியாமல் முணுமுணுக்கிறேன். எனது மனக்குழப்பத்தை அந்தக் குழந்தையே உடைக்கின்றது.

"மாமா எனக்கு ரொம்பவும் பசியாக இருக்கின்றது. நான்..."

நான் பாய்ந்து அதன் கைகளைப் பிடித்துத் தடுக்கிறேன்.

"அதை வீசிவிடு. நான் உனக்கு சாப்பாடு வாங்கித் தருகிறேன்."

அக்குழந்தை என்னை நம்பி அப்படியே நடந்து கொள்கின்றது.

குழந்தையுடன் நான் நடக்கையிலே எனது மனம் சொல்லுகின்றது.

" இந்தக் குழந்தைக்கு வாங்கும்போது அதன் பெற்றோருக்கும் தம்பிக்கும் சேர்த்தே வாங்கிக் கொடுத்து அதை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்த வேண்டும்."

நான் திருந்தி விட்டா அப்படி நினைக்கிறேன்? அல்லவே அல்ல. எனது பைக்குள் காசு இருக்கின்றதே! அதனால். அந்த அறிமுகப்படுத்திக் கொள்ளாமலே எனக்குள் பதுங்கியிருந்த ஆணவத்தினால்.

குழந்தை எனது அபாரமான காருண்யத்தினால் குளிர்ந்து போய்விடுகின்றது. இப்போதுதான் எனக்குள்ளும் மனிதாபிமான உணர்வின் அருமை ஒரு பனித்துளிபோலப் பட்டு எனக்குக் குளிரூட்டுகின்றதை உணர்ந்து கொள்ள முடிகின்றது என்னால்.

"வா, நானே உன்னை உனது வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டு விட்டுப் போகிறேன்."

அந்தப் பச்சைப் பாலகனின் முகம்...சூரியனுக்குத்தான் அதிக ஒளியுள்ளதாமே! அது பச்சைப் பொய்.

நடந்து கொண்டிருக்கையில் ஒரு நல்ல வாசகம் எனக்குள் கேட்கின்றது.

"தர்மங்களை பிரபலப்படுத்திக் கொண்டு செய்தால் அவை தர்மங்களல்ல. வலக் கரம் செய்வதை இடக் கரம் அறிந்திடாதிருக்க வேண்டும்."

அப்படியென்றால்....?
பிள்ளையை அதன் வீட்டு வாசலில் விட்டு விட்டு, நாம் யாரென்று காட்டிக் கொள்ளாமல் போய்விடுவோம். அதுதான் சரி.

அந்தக் குழந்தையின் எளிய வீட்டின் வாசலில் வைத்து, அதனிடம் விடைபெற்றுக் கொள்கிறேன்.
அது கையை ஆட்டி விடை தருமுன் கேட்கிறது.

"மாமா இது போல நாளைக்கும் யாராவது ஒரு மாமா வந்து உதவுவாரா, மாமா?
ஏன் ஒரு பக்கம் எல்லாரும் சந்தோஷமாக இருக்க, நாங்கள் இப்படிக் கஷ்டப்படுகிறோம்? அம்மா நேற்று இரவு பசி தாங்காமல் "கடவுளே உமக்குக் கண்ணில்லையா?" என்று அழுதார்களே, அந்தக் கடவுள் எங்கே இருக்கிறார் மாமா?"

எப்படி இதற்கு பதில் சொல்வது என்று புரியாமல் என்னையும் அறியாமல் நான் மேலே பார்க்கிறேன். அது சொல்கிறது.

"அம்மாவும் மேலேதான்  பார்த்துச் சொன்னார்கள். அவர் மிகவும்
உயரத்திலிருப்பதால்தான் சரியாகப் பார்க்கவும் கேட்கவும் அவரால் முடியவில்லை போல. அவராக இறங்கி வந்து பார்த்தால் என்ன? அவருக்கும் பசி வந்தால் ஒன்றும் கிடைக்காது என்று பயமா?"

குழந்தையின் பேச்சில் வரட்டு குதர்க்கமில்லை. அதன் மனதில் பட்ட உண்மையின் பட்டவர்த்தனமே இருந்தது.

எனது பதில்?  அதற்கு எனக்குத் திராணியே இல்லாமல் நான் கையை அசைத்து விட்டு நகர்கிறேன். பாம்புக்கு அஞ்சி விலகி ஓடுகின்ற அச்சம் என்னில். ஆம், உண்மையின் பலமான அடியை என்னால் தாங்கிக் கொள்ள முடியாமலே நான் விலகி ஓடுகின்றேன். எரிக்கும் உணர்வுகளுடன் என் உள்ளம் உரைக்கின்றது.

இறைவா! வறுமை உனது தவறல்ல என்றும் இந்த மனிதர்கள் விதைத்து வளர்த்துவிட்ட பாதக அமைப்பு என்றும் எப்படி என்னால் அக்குழந்தைக்கு விளக்கிப் புரிய வைக்க முடியும்.

நீ புதுமைகள் செய்வதாய் மதவாதிகள் ஏகப்பட்ட கதைகளைச் சொல்லிக் கொண்டு, தமது மதங்களைப் பரப்பி வளர்த்திட முயன்று கொண்டு இருக்கிறார்களே, நீ ஒரே ஒரு புதுமையைமட்டும் செய்து காட்டினால் என்ன?

இந்த மனிதன் படைத்துவிட்டிருக்கும் துர்ப்பாக்கிய மிருகமான வறுமையை மட்டும் நீ வந்து கொன்றுவிடேன். உனது படைப்புகளுக்கு விரோதமாக நடந்தால் அழிவுகளைச் செய்யும் உன்னால் இந்த வறுமை விலங்கை விரட்டியடிக்க ஒரு வழி செய்ய இயலாதா?"

நான் என்ன செபிக்கிறேனா? இல்லை.
உளறுகிறேனா? இல்லவே இல்லை.
அப்படியானால்...?
கோடான கோடி வறிய மக்களின் அழுகுரலை மட்டுமே உச்சரித்துக் கொண்டிருக்கிறேன்.

வறுமையே! மனிதன் படைத்த கொடிய மிருகமே! நீ என்றைக்குச் சாவாய்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக