ஞாயிறு, 8 ஜூலை, 2012

நீதிக்கு இனபேதமில்லை (சிறுகதை)

ந்த நீண்ட பாதையில் இரண்டு பேருந்துகள் மிக வேகமாக ஊர்ந்து கொண்டிருந்தன.

8ம் வகுப்பு மாணவ மாணவியரின் கூச்சலும் கும்மாளமுமாக வண்டிகள் அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தன.

கண்டி நகரிலிருந்து சீகிரியா குன்றினைப் பார்க்கவே உற்சாகமாகப் பிள்ளைகளெல்லாரும் பறந்து கொண்டிருந்தார்கள்.

சரித்திரக் கதையைப் படித்தபோது ஏற்பட்ட ஆர்வம் இப்போது இருமடங்காக ஆகிக் களிப்பில் அனைவரையும் ஆழ்த்த, கந்தையா மாஸ்டரை அந்த மாணவன் அரசன் கேட்டான்.

"சேர்! சிகிரியா குன்றின் மேலே இந்தக் காசியப்பனின் அரண்மனையைக் கட்ட தமிழர்களும் 'ஹெல்ப் ஹில்ப்' பண்ணியிருப்பாங்களோ?"

மாணவர்களின் கூச்சலுடன் கொதிக்கும் வெய்யிலின் அகோரத்தினால் வியர்வை வழிய  சோர்ந்தமர்ந்திருந்த, கந்தையா மாஸ்டர் தீப்பிழம்பானார்.

"அதைப் போய் அந்த மலைக்கிட்டே நிற்கிற வழிகாட்டி கிட்ட கேளும். ஏற்கனவே எவனோ அதிலிருக்கிற ஓவியத்தை அழித்திருக்கிறான். அதுவும் தமிழன்தானெண்டு சொல்லி உமக்கும் ரெண்டு தருவான்."

அந்த மாணவனுக்கு ஆசிரியர் சொன்ன பதில் வேறு அர்த்தத்தைச் சொல்லியது.

இந்தச் சிங்களவனுக்கு எல்லா பிழைகளுக்கும் தமிழனைத்தான் குறை சொல்லத் தெரியுமோ என உள்ளுக்குள் குமைந்தானவன்.

அவனது ஆத்திரம் விபரம் புரியாத அந்த வயதில் அவனை சிங்களவனை வெறுப்பதே தனது கடமை என்பது போல நினைக்க வைத்தது.

ஊர்ந்தோடிக் கொண்டு இருந்த பஸ் ஓரிடத்தில் நின்றது.

ஒரு சிறு குடிசை. பஸ் பொறுப்பாளர் இறங்கி அதன் முன்பாக நின்று கொண்டிருந்த மனிதரிடம் சென்றார்.

ஆர்வத்துடன் அந்தப் பக்க வரிசையிலமர்ந்திருந்த மாணவர்கள் எட்டிப் பார்க்க, மறு வரிசை மாணவர்களும் எழுந்து ஓடிவந்து சேர்ந்து பார்க்க முயன்றார்கள்.  ஒரேயடியாகப் பலரும் கத்திக் கொண்டு எழும்பியதில் பஸ்ஸுக்குள் திடீரெனப் பெரும்  இரைச்சல். கந்தையா மாஸ்டர் திரும்பவும் தீப்பிழம்பாகிக் கத்தினார்;.

"எல்லாரும் அவனவன் இடங்களில் அமைதியாக இருங்களடா! எழும்பினீங்களெண்டால் எலும்பு முறியும்" என்றவரின் வாய் சலிப்புடன் முணுமுணுத்தது.

"இந்தக் குரங்குகளுக்கு தாய் தகப்பன் ஒரு நல்லதைக் கூட சொல்லிக் கொடுப்பதில்லை. எல்லாவற்றையும் மாஸ்டரேதான் செய்ய வேண்டும் போலும். மாஸ்டர் அடித்து கொஞ்சம் வலித்தது என்று பிள்ளை போய்ச் சொன்னால் மட்டும் படையெடுத்து வந்து விடுகிறார்கள்."

பக்கத்தில் இருந்த இன்னோர் ஆசிரியர் அவரைச் சமாதானப் படுத்தினார்.
"பிள்ளைகளென்றால் அப்படித்தான் கந்தையா. அதுவும் அதுகள் பிக்னிக் குஷியில் இருக்கும்போது இப்படிக் குறும்புகளெல்லாம் சாதாரணம். நாம்தான் சற்றுப் பொறுத்துக் கொள்ள வேண்டும்."

"இவனாரடா எனக்குப் பத்தி சொல்கிறவன்?" என்பது போன்ற முறைப்புடன் திரும்பிய கந்தையா மாஸ்டரின் தோளில் தனது கையை வைத்தார் அந்த ஆசிரியர்.

தங்களின் பக்கத்துக்குச் சார்பாகப் பேசுவதற்கு ஓர் ஆசிரியர் இருப்பதைக்கண்டு மகிழ்ச்சி கொண்ட மாணவர் பட்டாளம் கலகலத்தது.

"வில்மட் மாஸ்டர்தான் நல்ல மாஸ்டர்."

ஒரு மாணவக் குஞ்சு கூவியது. அவ்வளவுதான். உடனே ஒரு பெரிய ஆரவார கோரஸ் எழும்பிவிட்டது.

"வில்மட் மாஸ்டர்" ஒரு குரல் சொல்லி முடிய,
"நல்ல மாஸ்டர்" முழு பஸ்ஸும் பதிலால் அதிர்ந்தது.

ஓரிரு தடவைகள் கோரஸ் தொடர்ந்ததும் கந்தையா மாஸ்டருக்கு ரோஷம் வந்துவிட்டது.

"ஓமடா! நான்தான் கெட்டவன். உங்களின் நல்ல வில்மட் மாஸ்டர் கிட்டே பகலைக்கு சாப்பாடு கேளுங்கள். இன்றைக்கு ஐந்து மணிக்கு பஸ் வீட்டுக்குத் திரும்பிப் போன பிறகுதான் உங்களுக்கு சாப்பாடு கிடைக்கும. அதுவரைக்கும் பட்டினி கிடந்து சாகுங்கள்."

வில்மட் மாஸ்டர் முறுவலித்தவாறே பிள்ளைகளைப் பார்த்தார்;.

உடனடியாகவே அடுத்த கோரஸ் ஆரம்பமாகிவிட்டது.

"கந்தையா மாஸ்டர்"
"நல்ல மாஸ்டர்!!"
"கந்தையா மாஸ்டர்"
"நல்ல மாஸ்டர்!!"

கந்தையா மாஸ்டருக்கே சிரிப்பு வந்து விட்டது.

"போதும் போதும்! நிறுத்துங்களடா! சின்னக் குரங்குகளும் பெரிய குரங்குகளும்.."

"அப்போ யார் கந்தையா பெரியதுகள்? நாமா?"
வில்மட் மாஸ்டர் சிரித்துக் கொண்டே கேட்டார்.

ஏனைய, உடன் வந்திருந்த ஆசிரியர்கள் அனைவருமே சிரிக்க மாணவர்களும் சேர, முழு பஸ்ஸுமே சிரிப்பலையதிர்வால் குலுங்கியது.

இதற்கிடையில் வாகன ஓட்டுநரும் இறங்கச் சென்று, அங்கே நின்று கொண்டிருந்த மனிதருடன் சிங்களத்தில் பேசிக் கொண்டிருந்தார்.

பெரிய பேச்சு வார்த்தை எதற்காகவோ நடந்து கொண்டிருந்தது. அது நிறைவெய்த கொஞ்சம் நேரமெடுக்கலாம் என ஆசிரியர்கள் நினைத்தார்கள்.
அதுவரைக்கும் குட்டிப் பட்டாளத்துக்குச் சிறிது சுதந்திரமளித்து வெளியில் விட்டால் தங்களுக்கும் கொஞ்சம் நிம்மதியாயிருக்கும் என நினைத்தது பெரியவர்கள் குழு.

கந்தையா மாஸ்டர் எல்லாரையும் கீழே இறங்கி, குடிசையைச் சுற்றியிருந்த சிறிய, ஆனால் அழகாகவிருந்த தோட்டத்தில் பத்து நிமிட நேரம் உரத்துப் பேசக்கூடாது என்ற கண்டிப்புடன் ஓய்வெடுக்கும்படி பணித்தார்.

சின்னஞ் சிறிய தோப்பு. தென்றல் காற்றின்  இதம் புதுத் தெம்பூட்ட, எல்லாச் சிறுவர்களும் மடமடவென்று இறங்கி ஓடினார்கள்.

குழந்தைகளாவது ஓய்வெடுப்பதாவது! அவர்களின் அகராதியில் ஓய்வு என்பதே ஓடி விளையாடுவதுதானே!

அவர்கள் ஓடியாடி ஓய்வெடுத்தார்கள். ஆனால் அதிக சத்தமில்லாமல். கந்தையா மாஸ்டருக்கு டிமிக்கி கொடுக்கத்தான் அப்படி.

அப்போது…

ஒருவனைத் துரத்திப் பிடிக்கவென்று ஒரு பக்கமாக ஓடிக் கொண்டிருந்த அரசனின் கண்ணில் சற்றுத் தள்ளி அக்குடிசையின் பின்பக்கமாக இருந்த கிணறு தென்பட்டது.

'பளிச்'
அரசனின் மனதில் ஒரு ஐடியா!

இந்த வீட்டுக்காரனும் சிங்களவன்தான். அல்லவா!

நமது எதிரி இவனுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும். தமிழனுக்குத் தீங்கு செய்பவனுக்கு நாமும்...

கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல்.

பச்சைக் குழந்தைகளின் மனங்கள்தான் எவ்வளவு இலகுவாகப் பாதிக்கப்பட்டு விடுகின்றன!

இலங்கை அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதங்களால் எதிர்காலச் சந்ததிகள் இப்பொழுதே பகைமையில் விழுந்திடுகின்றமை எத்துணை கொடுமையானது?

அரசனின் பலவீனமான மனமானது படு வேகமாகத் திட்டம் தீட்டியது. அடுத்த சில கணங்களுக்குள் சைகை மூலம் சப்தமிடாமல் வரும்படி கூறி, அவர்களில் அநேகர் வந்ததும் தனது சக மாணவர்களின் காதுகளில் எதையோ ஓதினானவன் அரசன்.

அவ்வளவுதான்.

எல்லாரும் கூட்டமாக குடிசைக்குப் பின்புறமாக இருந்த கிணற்றடிக்கு ஓடினார்கள்.

அங்குமிங்கும் பார்த்துவிட்டு, யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்த பின், மாறி மாறிக் கிணற்றிற்குள் காறி, உமிழ்ந்து மகிழ்ந்தார்கள். அவர்கள் மீண்டும் வந்து சேர, பஸ் புறப்பட, எல்லாமே சுபமாக நடந்து விட்ட திருப்தி அரசனுக்கும் அவனது குழுவினர்க்கும். சிரித்தவாறே, பஸ்ஸிற்குள் குதித்தேறிக் கொண்டு புறப்பட்டது மாணவர் படை.

ஆசிரியர்களிடம் ஒரு வார்த்தை நடந்த சம்பவத்தைப் பற்றி?   ஹு ஹும். அனைவரும் கப்சிப்.
++++++++

ன்னந்தனியாகப் பெருங் கம்பீரத்துடன் நின்று கொண்டிருந்தது சிகிரியா.
இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் மக்கள் ஊருலா ஈர்ப்பியுமாகிய அக்குன்று பள்ளிப் பாடத்திலும்கூட  இடம் பெறும் பெருமையை உடையது.

முன்னாள் சிங்கள மன்னனொருவனின் முறையற்ற பெண் சேர்க்கையின் பாவத்தின் பின் விளைவின் சின்னமாக இருந்த அதன் வரலாறு, சிங்களவர்களின் பெருமைக்குரிய சின்னமாகவும் வரலாற்று உறுதியாகவும் இருந்து வருகின்றது. அந்தக் குன்றில் இருக்கும் ஓவியங்களுக்கு உலகப் புகழ் உண்டு.

அதன் மீது ஏறி உச்சிக்குச் செல்வதே முற்றிலும் புதுமையான சுகமான அனுபவந்தான்.  பிள்ளைகள் எல்லாரும் அதனுச்சியை வந்து அடைந்ததும் கந்தையா மாஸ்டரின் பாட விளக்கங்களுடன் சிறிது நேரம் கழிந்தது. அதன் பின்னர் சிலர் அக்கால அரச கற்பனையுடன் வாட்சண்டை போடுவது போல ஓடியாடி நடிக்க, எல்லாரும் அதை இரசிக்க பொழுதும் இனிமையாகக் கழிந்தது.

சீகிரியா குன்றின் மேல் சென்று, பார்த்து அனுபவித்து விட்டுக் கீழே இறங்கி வருகையில்தான் களைப்பின் தாக்கத்தை அனைவரும் உணரத் தொடங்கினார்கள். உச்சி வெய்யில் உச்சியைப் பிளந்தது. சில பிள்ளைகள் மட்டும் தண்ணீர்ப் போத்தல்களுடன் வந்திருந்தார்கள். அந்தச் சில நிமிட நேரத்திற்குள் அவர்களுக்குள் ஒரு குழந்தைத்தனமான ஆடம்பரம். சிலர் தனியாகத் தாங்கள் மட்டும் அருந்திக் கொண்டார்கள். சிலர் தமது நெருங்கிய நண்பருடன் மட்டும் பகிர்ந்து கொண்டார்கள்.

பல இரண்டுங் கெட்டான்கள் வெறுமனே நெற்றிகளை வழித்துக் கொண்டே இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

பசியோ பசி. அகோரப் பசி.
எல்லாருக்குமே அகோரப் பசி.

பக்கத்தில் கடைகள் ஏதாவதுண்டா என்று பார்த்தால்… வெறும் பாசிமாலை வியாபாரிகள் மட்டும்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கடை விரித்திருந்தார்கள்.

மாணவர்களின் சார்பில் அரசன் விண்ணப்பம் விடுத்தான்.

"மாஸ்டர்! எல்லார்க்கும் சரியான பசியாயிருக்கிறது! எப்போ, எங்கே சாப்பிடப் போகிறோம்?"

பதில் உடனே வந்தது.

"பயப்படாதேயுங்கோ! இன்னும் பத்துப் பதினைந்து நிமிடத்தில் சாப்பாடு தயாராகிவிடும். பஸ் அங்கேதான் போகிறது. உடனே ஓடிப் போய் ஏறுங்கள்."

மாணவர் பட்டாளம் மகிழ்ச்சிக் கடலில் குளித்தவாறே வண்டிக்குள் குதித்து ஏறிக் கொண்டது. சும்மா சொல்லக்கூடாது, வண்டியும் மிக மிக வேகமாகத்தான் ஓடிற்று. அதற்கு அகோரப்பசியா அல்லது அதன் ஓட்டுனருக்கா என்பது தெரியவில்லை.

"டேய் டிரைவருக்கும் பஸ்ஸுக்கும் கூட கடும் பசி போலிருக்கிறதடா!"

யாரோ ஒரு மினி நாகேஷ் நக்கல் அடித்தான். முழு வண்டியும் சிரிப்பில் குலுங்கிக் குலுங்கிக் கொண்டே ஓடிச் சென்று ஓரிடத்தில் நின்றது.

"என்ட மஹாத்தையோ!" என வரவேற்றார் ஒருவர். யார் என்று பார்த்தார்கள் மாணவர்கள்.

வரும் வழியில் டிரைவர் நின்று பேசினாரே!

அதே சிங்களவர்தான். அவரது அதே குடிசைதான்.

"பிள்ளைகள்! எல்லாரும் இறங்குங்கோ! இங்கேதான் சாப்பாடு".

தோப்பில் பரந்தமர்ந்த அனைவர்க்கும் தாமரை இலையில் சாதம் பரிமாறப்பட்டது.

தனித் தமிழ்க் குழந்தைகளுக்குத் தனிச்சிங்களச் சாப்பாடு. அதில் மொழி பேதமோ, வெறுப்புணர்வோ இல்லவே இல்லை. ஏனென்றால் அதுவும் மிக மிகச் சுவையாகவே இருந்தது.

அரசன் வெட்டு வெட்டு என்று வெட்டியவாறே சொன்னான்.

"இவர்களுடைய சாப்பாடு நல்ல ருசியாக இருக்கின்றது. இதைப் போலவே இந்த மனிதர்களும் நல்லவர்களாக இருந்தால் ஏன் தமிழ், சிங்கள சண்டை சச்சரவு வருகின்றது? இல்லையா?"

அவனது அரைகுறை அரசியல் ஞானத்துக்கு அமோக வரவேற்பு.

ஒருவன் மெதுவாகக் கேட்டான்.

"அரசன், உனக்கு சிங்களம் பேச வருமா?"

உணவுக்குக் குனிந்த அரசனின் முதுகு வெளிச்ச வீடாக நிமிர்ந்து கொண்டது.

ஓகோ! இங்கே ஒரு பயலுக்கும் சிங்களமே தெரியாது போலும். கந்தையா மாஸ்டருக்கும் தெரியாதே! ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா!

ஒருவித ஆணவத்துடன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான அரசன்;.

"ஓ.. எனக்கு நன்றாக சிங்களம் பேச வரும். ஏன், என்ன வேண்டும்?"

“தண்ணீர் வேண்டும்.”

"அவ்வளவுதானா!" என்று கேட்ட அரசன் குடிசைக்காரரைப் பார்த்துக் கத்தினான்.

"அப்பிற்ற பொண்ட வத்துர ஓன." (எங்களுக்குக் குடிக்க தண்ணீர் வேண்டும்.)

பதிலாக ஓர் அதிர் குண்டு விழுந்து வெடித்தது!

"ஏ லிந்தே அறங் பொன்ன." (அந்தக் கிணற்றிலிருந்து எடுத்து அருந்துங்கள்.)

அந்தப் பெரியவர் சொன்னார்.

எந்தக் கிணற்றிலிருந்து?

எந்தக் கிணற்றில் துப்பி, மகிழ்ந்து, கொண்டாடினார்களோ, அதே கிணற்றிலிருந்துதான்.

நெஞ்சை அடைத்தது எல்லோருக்கும். என்றாலும் மாற்று வழி?  உண்மையைச் சொல்லத்தானும் முடியுமோ?

கந்தையா மாஸ்டர் அழைத்தார்.
"டேய் தம்பி எங்களுக்கும் ஐந்து கிளாசிலே எடுத்து வாருங்கள்."

பிழை ஒன்றேயானாலும் அதற்கான தண்டனை பன்மையான பலனையே பெற்றுத்தரும் என்பதும் நாம் செய்யும் சில பிழைகளுக்காக அப்பாவிகளும் கூட தண்டிக்கப்படும் ஆபத்துண்டு என்றும் அப்போதுதான் புரிந்தது அரசனுக்கு.

எதிரிக்குமேகூட நீ தீமையைத் தெரிந்து செய்தால் அந்தப் பாவம் உன்னை விட்டு அகலாது; தண்டனை எப்படியும் உன்னை ஒட்டி நின்று உதைத்துத் தள்ளும் என்ற புதிய பாடத்தை அமலனுக்கும் அவனது சொல் கேட்டுப் பிழை செய்த அத்தனை மாணவ செல்வங்களுக்கும் அச்சம்பவம் அன்று உணர்த்தி, அனுபவப்படச் செய்தது.

நன்மையும் தீமையும் பிறர் தந்து வருவதில்லை. விதைப்பதே அறுக்கப்படும்.  நீதிக்கு முன் இனபேதமாவது மதபேதமாவது?

மண்ணாங்கட்டி!

சின்னஞ்சிறு செயலிலும் சத்தியத்தை மீறாத நற் குணம் வளர வேண்டும்
அன்றாட வாழ்க்கையின் நன்னடத்தை, அனைத்துமே வழிபாடென்றுணர             வேண்டும்.
ஆண்டவன் உள்ளனோ இல்லையோ, செய்வதற் கெதிர்விளைவு இருக்குமென்னும்
மீண்டுவந்தே நன்மை தீமை தாக்கும் இயற்கையை உணர்ந்துநாம் நடக்க வேண்டும்
தெரியாமல் செய்தே தப்பிடலாமென்றே எண்ணிடல் மறுக்கவேண்டும்
சரியாக மட்டும் வாழ்வதை நம்பும் பழக்கம்நம் பண்பாக ஆகவேண்டும்
குறியாக என்று சரியானதொன்றே பணியாக மதித்திடல் மனதில் வந்தால்
சரிபோலப் பழிசெய்யும் பாதகர் மனம்கூடப் பதப்படும் சூழல் கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக