வியாழன், 12 ஜூலை, 2012

வடிகட்டத் தவறினால் வழிகெட்டுப் போய்விடும் (கட்டுரை)

டையில் தூய்மை அழகைக் கூட்டும்,
உணவில் தூய்மை சுகத்தைக் காக்கும்,
அறிவில் தூய்மை ஒழுங்கை வளர்க்கும்,
நடத்தையில் தூய்மை நல்வழி காட்டும்,
மனமதன் தூய்மை மனிதனை ஆக்கும்,
இதயத்தின் தூய்மை இகத்தையே மாற்றும்.

ஏழ்மை மிகுந்திருந்த முன்னைய ஒரு காலத்திலே கூட தூய்மையின் முக்கியத்துவத்தினை உணர்ந்திருந்த மக்கள் வாழ்ந்திருந்து வழி காட்டியிருக்கின்றார்கள். அவர்களில் ஒருவர்தான் "கந்தையானாலும் கசக்கிக் கட்டு" என்று அறிவுறுத்தி வைத்திருக்கின்றார்.

தூய்மை என்பது மனித குலத்தின் நிரந்தர பாதுகாப்புக்கு அத்துணை அவசியமானது என்பதையே அது அறிவுறுத்துகின்றது.

அந்தத் தூய்மையை சும்மா உடலிலும் உடையிலும் சூழலிலும் மட்டுமே வைத்துக் கொண்டு, உள்ளத்தில் வைத்துக் காக்க மறுத்த அல்லது மறுக்கின்ற மனிதர்களால்தான் சமுதாயங்களில் அவலங்களுக்கு அத்திவாரங்கள் அமைக்கப்பட்டு வந்தன, வருகின்றன, வரவும் போகின்றன.

எங்கே தூய்மை கெடுகின்றதோ, அங்கே உடனடியாகவே தீமை பாய்ந்து, நுழைந்திட முயலத் தொடங்கிவிடுகின்றது. காரணம், ஓரிடத்தில் பலவீனமிருந்தால் மட்டுமே அதனால் அந்த இடத்தினை ஆட்கொண்டுவிட முடிகின்றது என்பதுதான்.

இறை நம்பிக்கையை ஒழுங்கான மனிதர்கள் கைக் கொள்ளும்போது, அதனால் உள்ளத் தூய்மைக்கு அடிப்படையான தன்னம்பிக்கை நிரம்பி வழிகின்ற அமுத சுரபிக் கிண்ணங்களாகவே அவர்களின் உள்ளங்கள் மாறிவிடுகின்றன. அவர்களின் இதயங்கள் இறைவன் வதிகின்ற ஆலயங்களாக இருப்பதனால் அவர்கள் வழிபடும் ஆலயங்களிலும் தூய்மை நிறை இறை இருப்பான்.

ஆனால் அதே நம்பிக்கையை ஒழுங்கற்ற மனிதர்கள் கைக்கெடுக்கும் போதுதான் அங்கே அவநம்பிக்கைகளுக்கும் ஊழல்களுக்கும் தந்திரங்களுக்கும் பணம் பண்ணல்களுக்கும் ஏமாற்றுக்களுக்கும் பொய்மைகளுக்கும் வேறுபாட்டு வெறியுணர்வுகளுக்கும் குழிகள்
தோண்டப்படும் பரிதாபத்துக்குரிய பாதகங்களுக்கு அத்திவாரங்கள் போடப்படுகின்றன. அதனால் அவர்களின் கைகளுக்குள் சிக்கும் ஆலயங்களும் கூட ஆண்டவனை விரட்டிவிட்டு, பேயைக் குடியிருக்க அழைக்கின்ற பேய்க்கூட அமைப்புக்களாகி விடுகின்றன.

அவ்வாறே அரசியலிலும் அறிவியலிலும் விஞ்ஞானத்திலும் ஒழுங்கின்மை குடி கொண்டு, தூய்மை கலைந்தால், நன்மைகளின் இடங்களைத் தீமைகளே ஆட்கொள்ளத் தொடங்கிவிடுகின்றன.

இன்றைய உலக அமைதியின்மைகளின் அடிப்படையில் அரசியல்வாதிகளே இருப்பதன் காரணம் அரசியலில் வெற்றி வஞ்சகத்துக்கே என்னும் அவர்களின் சுயநல இலக்கணம் வென்று நிற்பதுதானே!

இதே நிலைதான் இலக்கியங்களுக்கும் அதிலும் விசேஷமாகப் புலம் பெயர் இலக்கியங்களுக்கும் நேரத் தொடங்கியிருக்கின்றது. நல்ல எண்ணங்களும் நல்ல சிந்தனைகளும் நல்ல விதமாக வளர்க்கப்படுவதற்கு நல்ல
ஒழுக்கத்தில் நம்பிக்கையுள்ள நல்லொழுக்க விரும்பிகளே பரிசுத்தமாக வைக்கப்பட வேண்டிய இவ்வட்டத்திற்குள்ளிருந்து ஏதாவதொரு விதத்தில் நற்பணி ஆற்ற முடியும். இங்கு ஆற்றலல்ல, அறிவல்ல, சத்தியம் சார்ந்த உத்தமமே முழுமுதல் தகைமையாகும்.

காரணம் அறிவு சேர்க்கப்படக் கூடியது. ஒழுக்கமும் உத்தமமும் உள்ளமென்ற ஊற்றிலிருந்து உருவாக வேண்டியன. அவை சரியாக இருந்தால்தான் படைப்பென்ற அரிய நன்னீர் கிடைத்துச் சமுதாயத்தின் தாகந் தீர வழி கிடைக்கும். அது நிறைந்து வந்தாலும் சொட்டுச் சொட்டாய்த்தான் வந்தாலும் அதில் நன்மை மட்டுமே கிடைக்கும் என்பதால் அடிப்படை சரியான எவருக்கும் திறமை முக்கியமல்ல என்பதே தெளிபு.

மற்றவர்கள், அதாவது அதற்கு எதிரானவர்கள் இதற்குள் இருந்தால் அல்லது நுழைந்தால் அவர்கள் நற்பணி செய்வதை விடுத்து விட்டு, அந்தப் போர்வைக்குள் நுழைந்து கொண்டு பொய்ப்பணியே ஆற்ற விழைவார்கள். காரணம், ஒன்றுக்கு நேர்மையும் இன்னொன்றுக்கு வேடமுமே தேவைகளாக இருப்பதுதான்.

பொய்காரர்களும் ஏமாற்றிகளும் முடிச்சு மாறிகளும் கொள்கைக்காரர்களும் கள்ளர்களும் கயவர்களும் கடமைக் கள்ளர்களும் குறுக்குவழிக் குள்ளர்களும் தங்களின் குணங்களை ஜனநாயக உரிமைகளாக அனுபவிக்கச் சந்தர்ப்பம் கிடைத்து, பள்ளி நடத்தக் கூடுமென்றால் என்ன நடக்குமென்று தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.

அதே சமயம் அதற்கு, அவர்களுக்கு வாய்ப்பில்லாமலிருப்பது ஏனென்றும் அதற்காக அவர்கள் ஏன் வெளிப்படையாகக் கிளர்ந்து எழாமல் இருந்து வருகின்றார்கள் என்றும் சிந்தித்துப் பாருங்கள்.

அப்படிச் சிந்தித்தால்தான் நமக்கு ஓர் உண்மை தெரிய வரும். அதுதான் பாவங்கள் இரகசியமாகவும் கள்ளமாகவும் இயங்குபவவை. நேர்மைகள் வெளிப்படையாக தூய்மையாக இயங்குபவை என்ற உண்மையாகும்.

நேர்மையை நம்புபவர்கள் தோல்விகளுக்கு அஞ்சாதவர்களாகவும் வெற்றியை வேண்டி மனசாட்சியை விற்க மறுப்பவர்களாகவும் இருப்பவர்கள். அவர்களின் எதிர்பார்ப்பு சமுதாயத்தின் முன்னேற்றமாக மட்டுமே இருக்குமே தவிர, சமுதாயத்தை வைத்து தங்களை
முன்னேற்றிக் கொள்ளும் குறுக்கு வழித் திட்டமாக என்றைக்குமே இருக்காது.

சுருங்கச் சொன்னால் நேர்மை ஒளியாகவும் நேர்மையின்மை நிழலான இருளாகவுமே என்றைக்கும் இருக்கும். ஓளி நேராகவும் பரவக் கூடிய இடத்தில் மட்டுமே பரவியும் நிற்கும். இருளோ ஒளியின்றேல் எல்லா இடங்களிலும் கேட்காமலே புகுந்து, நிறைந்துவிடும்.

இதனர்த்தம் இருள் பலமானதென்பதன்று. ஏனெனில் மீண்டும் ஒளி வந்தால் சொல்லாமல் கொள்ளாமல் சுருண்டோடி மறைந்தொளிவது இருள்தானேயன்றி, இருள் வந்து என்றைக்குமே ஒளியை விரட்ட முடிவதில்லை.

ஆகவே நல்லவைகளையும் உண்மைகளையும் கட்டிக் காக்கவென்று நாம் நமது உளமார நினைத்து, உண்மையாக நடக்க முனையும்போது இந்தச் சவடால் சில்லறைகளின் அட்டகாசமான ஆட்டங்களுக்கெல்லாம் அஞசிடவோ கலங்கிடவோ அவசியமே இல்லை.

ஆனால் நேர்மையில்லாத அவர்கள் நேர்மையைப் போன்ற கவசங்களை அணிந்து கொண்டே தங்களின் சதிகளை மேற்கொள்ளுகின்றார்களாதலால் நமக்கு அவர்களைப் பற்றிய எச்சரிக்கையான கண்ணோட்டம் மிக மிக அவசியம்.

அதில் நாம் தளர்ந்தால் கருங்கல்லை வைரமென்றும் களிமண்ணைச் சீமெந்து என்றும் சுண்ணாம்பைத் தயிர் என்றும் தவறாக் கணித்துப் பயன்படுத்த முயன்று பலன் கெட்ட ஏமாளிகளாக மாறுவதே தலைவிதியாகி விடும்.

இந்த இலக்கிய வட்டத்தை இது விடயத்தில் அக்கறையுடன் அணுகக் காரணமிருக்கின்றது. காரணம், அதுதான் எதிர்காலத்தில் இன்றைய சரித்திரத்தின் அடிச்சுவடாக நின்று நிலைமையை உலகுக்கு அறியத் தரவிருப்பது.

அதனை ஏமாற்றிகள் கையிலெடுத்து ஆடவிட அனுமதிக்கும் மதிகெட்ட கோமாளிகளாக இன்றைய சமுதாயம் இருந்து விட வேண்டுமென்றுதான் பொய்மையின் பிரதிநிதிகள் விரும்புவார்கள்.

அவர்களை இப்போதே சரியாக அறிந்து, உணர்ந்து, அவதானித்து, வடிகட்டிக் கொட்டிவிடத் தவறினால் பூச்சிகளும் பூரான்களும் விழுந்து கிடக்கும் நீரை, இருட்டில் இருக்கையில் வடிகட்டாமல் குடித்துவிட்டு, வாந்தி பேதி வந்து துடிதுடிக்கும் பரிதாப நிலைமையே ஏற்படும்.

ஆகவே எழுத்துலகின் தூய்மையை உறுதி செய்யும் வண்ணம் பொது மக்களாகிய நாம் சரியான வடிகட்டியான கணிக்கின்ற திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அந்த வடிகட்டியின் அடையாளங்கள் இவைதான்:

எங்கே எழுதுபவரிடம் எளிமை இல்லையோ,
எங்கே எழுதுபவரிடம் நேர்மை இல்லையோ,
எங்கே எழுதுபவரிடம் உண்மை இல்லையோ,
எங்கே எழுதுபவரிடம் ஒழுக்கம் இல்லையோ,
எங்கே எழுதுபவரிடம் அகந்தை உள்ளதோ,
எங்கே எழுதுபவரிடம் பிரித்துயர் குணமுள்ளதோ,
எங்கே எழுதுபவரிடம் பிரதேச வெறியுணர்வு உள்ளதோ,
எங்கே எழுதுபவரிடம் பிறர் உயர் ஆர்வமில்லையோ,
எங்கே எழுதுபவரிடம் தற்பெருமை உள்ளதோ,
எங்கே எழுதுபவரிடம் சுயநலமே உள்ளதோ,
எங்கே எழுதுபவரிடம் சாதி, மத வெறியுணர்வே ஊறியுள்ளதோ
அவர்களெல்லாம் வடிகட்டி வீசியெறியப்பட வேண்டிய கழிவுகளும் பூச்சிகளும் பூரான்களும் வண்டுகளும் தூசுகளுமேயென்று இலக்கிய வட்டமும் அதை வளர்க்கின்ற வாசகர் வட்டமும் உறுதியுடன் இறுதியாக அறுதியிட்டு இலக்கணம் அமைத்து விட வேண்டும்.

அதை மிஞ்சி நடக்க முனையும் சக்திகளை மறுத்து (வெறுத்தல்ல) ஒதுக்க வேண்டும். அப்போதுதான் களங்கமில்லாத சரித்திரமாக இலக்கியங்கள் உயிர் பெறுகின்ற உயர்ந்த காலம் பிறக்கும்.

அது பிறந்தால்தான் இலக்கியங்கள் பிழைக்கும். ஏனெனில் சோலைகளில் களை நிறைந்தால் அதன் சோபை மட்டுமல்ல, அதன் பெயரும் கெட்;டு, சோலை காடாய் மதிக்கப்படும் காலமே பிறக்கும்.

சோலை காடாவதைப் பார்ப்பதை விட, பாலையே மேலென்று போய்விடலாமே!

மெய்யாய் எழுத முனைந்து அனுபவக் குறைவினால் படைப்பில் ஈர்ப்பு குறைந்தால் அவர்களை ஊக்குவித்து வளர்ப்பதும் திறமையாக எழுதும் ஆற்றலைத் தந்திரமாகப் பயன்படுத்தும் சுயநல நரிகளைக் கட்டுப் படுத்துவதும் தற்போதைய காலத்தின் கடமைகளாக இருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக