வெள்ளி, 20 ஜூலை, 2012

தெரிந்ததும் தெரிவதும்

தெரிந்துபிழை செய்கிறவன் ஒருபோதும் திருந்திவிடான்
தெரிந்துபிறர் கொல்கிறவன் ஒருபோதும் நீதி தரான்
தெரிந்துரிமை மறுக்கிறவன் நியாயத்தை மிதித்திடுவான்
தெரிந்துபொய் சொல்கிறவன் பழிபாவம் விரும்பிடுவான்.

தெரிந்துபிழை சுட்டுபவன் திருத்துதலை முதல்நினைப்பான்
தெரிந்துபிழை இழைக்கிறவன் பிறர்இகழ்ந்து மகிழ்ந்திடுவான்
தெரிந்துபிழை உணர்கிறவன் திருந்துதலை விரும்பிடுவான்
தெரிந்துஅதைச் செய்கிறவன் மனிதமதைக் காத்திடுவான்.

தெரிந்துறவைப் பேணுபவன் நட்பிலுண்மை பேணுபவன்
தெரிந்துபகை பேணுபவன் தாழ்மனதில் வாழுபவன்
தெரிந்துபணி செய்கிறவன் சமூகத்திற் குதவுபவன்
தெரிந்துவழி செல்கிறவன் தீமைதப்பும் வாய்ப்புடையன்.

தெரிந்தவற்றில் தெளிவுடையோன் அறிஞனாகும் தரமுடையோன்
தெரிந்தவற்றில் படித்துணர்வோன் அனுபவத்தை உணர்ந்திடுவோன்
தெரிந்தவற்றில் திருப்தியுறான் அறிவுத்தாக உணர்வுடையான்
தெரிந்தவற்றில் திமிருடையான் நிமிர்ந்திடாத மரக்கிளையான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக