செவ்வாய், 13 நவம்பர், 2018

கொஞ்சம் செவிமடப்பா!



அறிவதன் ஆழம் குறைந்திடும்போது
அழிவதில் ஆடும் திசைமனம் நாடும்
புரிதலில் ஆழமும் தெளிவதும் காணின்
சரிபோல் வலம்வரும் பிழைதெளி வாகும்

கரங்களுள் பொருள்பணம் திணிப்பவர் கூட்டம்
ஏய்ப்பதில் திருடிடும் கயமையில் நாட்டம்
பரமனின் பெயரிலும் பாவத்தைச் செய்தே
நெய்பூசி நஞ்சூட்டும் அரசியல் கூட்டம்

கள்வரைப் பொய்யரைக் கபடரைச் சேர்த்தே
கள்ளமாய்ப் பணம்வீசி வாக்குகள் கொய்தே
வெள்ளமாய்க் கண்ணீரை ஏழைகள் கொட்ட
ஆள்பவர் மட்டுமே வாழ்கிறார் நன்றே!

இல்லாத கதைகளால் வெறியூட்டும் தீயர்
இல்லாத கட்சிகள் இல்லாத நாடு
இல்லையே எனவாடி எதும் காணல் ஏது
பொல்லாமை தனைமனம் மறுத்தலென் றின்றி?

அற்பங்கள் மக்கள்முன் முக்கியம் பெற்றால்
அற்பர்கள் ஆள்கின்றார் எனஅறி.  நன்று!
செய்திகள் கவர்ச்சிக்கே முக்கியம் தந்தால்
பொய்சொல்லித் திசைமாற்றும் தந்திரம்உண்டு!

மக்களின் நலம்விழை நல்லவர் தம்மை
மக்களின் முன்பரப்பப் பயப்படும் ஏடுகள்
மக்களின் எதிரியாய் இயங்கிடும் ஆட்சியை
மக்களின் நன்மையாய்க் காட்டிடல் கேவலம்

அத்தியா வசியங்கள் அநியாய மாக
அலட்சியப் படுத்தலும் அகற்றலும்தானே
பத்திரிகை தர்மமாய்ப் பதிந்திடும் காலை
சத்தியம் வாழுமா தேறுமா? கூறு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக