வியாழன், 2 ஆகஸ்ட், 2012

அநீதியே! உனக்குத்தான் சொல்கிறேன்! (கட்டுரை)

நீதியே! அழிவைச் செய்யும் தீயே! உன்னைக் கண்டு நான் அஞ்சவில்லை.ஆனால் பதறுகிறேன். உன்னை என்னால் ஏற்கவோ அங்கீகரிக்கவோ முடியவில்லை. என்னை, எனது மக்களை, எனது உலகத்தை நீ வதைத்துத் துவைத்துத் துவம்சம் பண்ணிக் கொண்டே அதை ஏதோ நீதிக்காகவே செய்வதாகப் பாசாங்கு பண்ணுகின்ற உனது கொடுமையை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

மனதாரப் பிழை செய்யும் பாதகர்களைத்தான் நீ மக்களை ஆள்வதற்கு அனுப்புகின்றாய். பொய்களால் பாமரர் மனங்களைக் கெடுத்து,
அவர்களின் வாக்குரிமையை அவர்களைக் கொண்டே துர்ப்பிரயோகஞ் செய்துவிட்டு, நாடுகளை வளைத்துக் கொண்டு அதற்கு நீ சனநாயகம் என்னுகின்றாய்.

பேதங்கள் மட்டுமே வேதங்கள் என்பதாய் அரசியல் காட்டுகின்றாய். நன்மையை, நீதியைச் சொல்லிச் சொல்லியே உன்னை நீ வளர்க்கின்றாய். சமத்துவம் என்கின்றாய்.ஆனால் சட்டத்தில் நீ அதையே தடுக்கின்றாய்.

உரிமைகள் மறுப்பதை  எதிர்ப்பாரை பயங்கரவாதியென்றும் உயிர்களைப் பறிப்பவர்  ஆள்வராய் இருந்திடின் அது மக்கள் தேவையென்றும் உலகத்தை ஏய்ப்பதும் ஏமாற்றி உயர்வதும் நிரந்தரம் ஆகுமென்றா கள்வர்கள் பலமதைக் கூட்டி நீ அவர்களை வல்லரசு ஆக்குகின்றாய்?

இயற்கையின் அனர்த்தங்கள் சூழ்ந்திடும் வேளையும் பேதங்கள் காட்டுகின்றார். புத்தனின் புனிதமே தங்களின் கொள்கையாய் நாடகமும் ஆடுகின்றார். அறிந்துமே அவர்களுக் காயுதம் விற்பவர் சனநாயகத் தலைவரென்றும் உலகத்தில் உரிமையைக் காத்திடும் செம்மல்கள், இரட்சகர் என்றும் சொல்லி ஏமாற்ற வழி செய்து நிலையாக நீ நிற்க முயலுகின்றாய்.

படைத்தவன் உள்ளனன் என்கின்ற எண்ணத்தைப் பணம் பண்ணும் வழிகளுக்குள் பக்குவம் ஆகவே பாதகர் இணைத்திட நீதானே உறுதுணை? மக்களின் மனங்களில் தெளிவாக சிந்தனை படராமல் செய்பவர்க்கு நீதானே வழித்துணை?

சாதிகளாய், சமயங்களாய், சம்பிரதாயங்களாய், சட்டங்களாய், கொள்கைகளாய், சமுதாய முக்கியங்களாய் நீதானே படர்ந்து, கிடந்து மக்கள் நிம்மதியைக் குலைத்து வருகின்றாய்?

ஆக்கத்துக்கே நீதியென்ற நிலையை மாற்றி, அழிவொன்றே நீதியென அநியாயக்காரர்கள் கைதட்டிப் பழிசெய்ய அனுமதித்த வருவது யார்? நீதானே! பெரும்பான்மைப் பொதுமக்கள் கைகட்டிப் பதைத்து நிற்க நீதானே வழி செய்தாய்?

நான் நேசிக்கும் நீதியைப் பார். அது உனது கொடு நெருப்பில் சுடுபட்டுச் சுடுபட்டு, கொதித்துக் கொண்டே இருக்கின்றது. ஆனால் ஒன்றைக் கவனித்தாயா?

அது தளரவே இல்லை. அப்படியே நின்று பிடித்து, படிப்படியாக உன்பக்கமாகத் திரும்பத் தொடங்கி வருகின்றது. எப்படித் தெரியுமா?  நீ அதீத ஆயுத பலம் பொருந்தியவனாக இருக்கலாம். ஆனால் உன்னிடம் ஆன்ம பலமில்லையாதலால் உனது கை சோர்ந்ததும் நீ தளர்ந்துவிடுவாய்.

நீதியிடம் உன்னளவு ஆயுத பலம் இல்லாமலிருக்கலாம். ஆனால் அதனிடமிருக்கின்ற அந்த ஆன்ம பலமிருக்கிறதே, அது தளர்ந்து விடவே விடாத நித்திய பலம். அது உனது நடவடிக்கைகளுக்கு எதிராக நிரந்தரமாக நின்று பிடிக்கும். மறந்து விடாதே!

கள்வர்களை அரசில் ஏற்றும் உன்னைக் கழுவில் ஏற்றவே சுதந்திர உணர்வாக நீதி மருவுருவெடுத்து வருகின்றது என்பதை நீ உணரவில்லையா?

நீ உனது கள்வர்களைக் காப்பாற்ற ஆயுதத்தையும் கபடத்தனத்தையும்  மட்டுமே நம்பி இருக்கின்றாய். ஆனால் நீதியோ மனசாட்சியை மதிப்பவர்களின் துணையோடு உன் ஆயுதத்தையே உன்னிடமிருந்து பறித்தெடுத்து உன்னையே துவம்சம் பண்ணவும் துரத்தியடிக்கவும் தயங்காது என்பதை நீ சரியாகப் புரிந்து கொள். காலதேவனின் உறுதுணையோடு உனது கபடத் தோலினை உரித்துக் காட்டிடப் பின் நிற்காது என்பதைத் தெரிந்து கொள்.

பாதகங்களும் பாவங்களும் நீருக்குள் பதுக்கப்படும் பந்துகளுக் கொப்பானவை. அவற்றின் நீருக்குள் ஒளிந்து கொள்ளும் நாடகம் நிரந்தரமல்ல. சிறிது தளர்ந்தாலும் பந்து அப்படியே பாய்ந்து மேலே வந்துவிடுவதைப் போல சந்தர்ப்பம் வரும்போது அவற்றின் பட்டிகள் கிழிந்தே தீரும். அவை கிழிபடுகையில் அவற்றின் அப்பனான உன் கதி என்னாகும்? நினைத்துப் பார்த்தாயா?

இன்றைக்குச் சரியாக அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களை, குழந்தைகளை, தாய்மார்களை, வயோதிபர்களை, வைத்தியர்களை மட்டுமல்ல, அவர்களின் அனைத் உடைமைகளையும் கலைச் செல்வங்களையும் அப்படியே கூண்டோடு அழித்து நாசமாக்கிய அணுகுண்டுகளைப் பயன்படுத்தி உலக வரலாற்றிலேயே மிக ஆபத்துமிக்க ஆயுதத்தைப் பயன்படுத்திய பாதகத்தின் தாக்கங்களை உலகிடமிருந்து மறைத்துத் தங்களை சமாதானக் காவலர்களாக அடையாளம் காட்டிக் கொண்டவர்களும் இன்றைக்கு உலகிலேயே அதற்குப் பின்னால் அதிகமான அணுகுண்டுப் பரிசோதனைகளைச் செய்தவர்களும் இன்றைக்கும் உலகின் மிக அதிக அணுகுண்டுகளின் உரிமையாளர்களுமாக இருப்பவர்கள்தான் உலகிலிருந்து அணுவாயுதம் களையப்படுவதற்காகக் கடும் பிரயத்தனம் செய்பவர்களாம்.

எவ்வளவு தந்திரமாக நியாயத்தின் முகமூடிக்குள் நீ மறைந்து நின்று இதனைச் செய்கின்றாய்? உன்னுடன் ஒத்துப் போகும் மாபாவிகளின் ஆட்சிக்கு முண்டு கொடுக்கும் உனது கொள்கை உன்னைப் பகைத்தவர்களுக்கு மாற்றிக் காட்டப்படுவதும் நீ செய்யும் பயங்கரவாதம் புண்ணியம் என்றும் அதன் எதிர்ப்புக்களெல்லாம் பயங்கரவாதம் என்;றும் நீ நடத்தும் நாடகம் நிரந்தரமாக வென்று நிற்கும் என்றா நம்புகின்றாய்?

நான் நம்பவில்லை. ஏன் தெரியுமா? நீ வெறும் இரும்பு மட்டுமே! நீதியின் சுவாலை உன்னை உருக்கி விடும். எதிர்பார்த்து இரு.

அமைதியைக் கெடுப்பதே உனது அடிப்படையாக இருப்பதை நான் அறிந்திருக்கிறேன். குடும்பங்களுக்குள், நட்புகளுக்குள், கடமைகளுக்குள், மக்கள் சேவைகளுக்குள், ஆன்மீக வழிகளுக்குள் என்று எல்லா இடங்களிலும் நீ இருள் போல நிறைந்து கொண்டு, செய்து வருகின்ற பிழைகளைச் சரிப்படுத்த முடியாமல்தானே அவற்றுக்கெல்லாம் நியாயங்கள் என்ற நல்ல போர்வையைப் பொய்யாகவும் கபடமாகவும் போர்த்துகின்றாய்?

உனது முதலெழுத்தை மட்டும் நீ களைந்து விட்டால் உலகம் பிழைத்துவிடுமே! அதை ஏன் செய்யாமல் இருக்கிறாய்?

நான் சொல்லட்டுமா?

வேகமாக மேலே செல்லும் கல் அதைவிட விரைவாக வந்து கீழே வீழ்ந்துவிடும் என்பதை நீ இன்னும் உணராமல் இருக்கிறாய்.

எந்தச் செயலுக்கும் ஓர் எதிர் விளைவு உண்டு. அதுதான் நியதி. அதுதான் இயற்கை. அதுதான் இயற்கையாக நிற்கும் இறைவனின் வழியமைப்பு. எண்ணெய்க் குழிக்குள் நின்று கொண்டு, தீயை அணைக்க அதை எடுத்துப் பாய்ச்சுகின்ற நீ அதிலேயே விழுந்து அழிவதே உனது விதியாகப் போகின்றது என்று உன்னை நான் எச்சரிக்க விரும்பவில்லை. புரிந்து கொள் என்று அறிவுரைக்கவே விரும்புகின்றேன்.

இதை நீ ஏற்க மாட்டாய். கேட்க மாட்டாய். ஏனென்றால் இருள் திருந்தி ஒளியோடு இணைந்ததாய்ச் சரித்திரத்தில் இல்லை. ஒளியினால் அது விரட்டியடிக்கப்பட்டாகவே சரித்திரம் இன்றைக்கும் உண்டு.

ஆகவே உனக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக