புதன், 1 ஆகஸ்ட், 2012

சற்றாவது கேட்டால் நல்லதப்பா!

நீதியின் பாதை நிரந்தரமானது
  சத்தியத்தை நீ நம்பு!
பாதியே வாழ்க்கை முழுமையென்றில்லை
  உண்மையை நீ நம்பு!
ஊதிடும் செல்வம் நிரந்தரமில்லை
  உணர்ந்திருத் தல்நன்று
வாதிடும் சரிபிழை எதனிலும் ஒன்றே
  உண்மையில் இணைந்திருக்கும்.

கண்களை மூடிசெபிப்பதில் மட்டும்
  காரியம் நடப்பதில்லை
மண்கொத்தி விதையைப் புதைத்திடுஅதிலே
  பயிர்வரும் பொய்யுமில்லை
விண்ணகம் செல்லப் புண்ணியம் செய்தால்
  விழலது தெரிந்து இரு
விண்ணகம் நீசெய் நன்மைகள் பிறர்க்கு
  என்பதைப் புரிந்துஇரு.

கற்றதனாலே பெற்றநற் பயனை
  மற்றரும் பகிரக் கொடு
உற்றவராயின் உன்மத்த ரென்றால்
  ஒதுக்கியே தள்ளிவிடு
இற்றரைமேலே மற்றவ ராலே
  உயர்வரே பெருமளவு
மற்றவர் ஏறிடும் வழிவகை காட்டும்
  நல்லவர் மிகக் குறைவு.

தூங்கிடும் ஏழை நிம்மதியாகத்
  துயின்றிடும் நிலைவளரேல்
தாங்கிடும் பாவம் உன்னையும் சாரும்
  உன்மனம் உணர்ந்திடட்டும்
ஏழ்மையை நாட்டில் ஆக்குவர் நாமே
  சுயநலம் ஏற்றிருந்தால்
தாழ்நிலை மாற்றும் நற்பணி புரிந்தால்
  தரணியுன் பெயர் சுமக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக