திங்கள், 6 ஆகஸ்ட், 2012

மனதின் நோய்களுக்கு மனமே மருந்தாகும் (கட்டுரை)

னித வாழ்க்கையின் அர்த்தத்தினையும் அதன் பெறுமதியையும் அறுதியிட்டுக் காட்டுவன வாழ்க்கையின் நடவடிக்கைகள்தாம்.

எந்த நடவடிக்கைக்கும அத்திவாரமமைத்துத் தருவது மனம்தான். மனமதன் வழிகாட்டலின் தொடர் பகுதியே சகல சாதனைகளுக்கும் வெற்றிகளுக்கும் முடிவெடுப்புக்களுக்கும் அத்திவாரமாக அமைகின்றது.

அதன் பக்குவத்தின் அளவுக்கும் அனுபவத்துக்கும்
ஆற்றலுக்கும் ஏற்பத்தான் வெற்றிகளினதும் தோல்விகளினதும் சரித்திரங்களின் அத்தியாயங்கள் எழுதப்படுகின்றன.

ஒரு மிகச் சாதாரண நிலைமையிலிருந்த மனிதன் மிக உயர்ந்த நிலைக்கு வருவதும் மிக உயர்ந்த நிலையிலிருந்தவன் கீழ்மட்டத்துக்கு வருவதும் அவனவன் மனவழிகாட்டல்களின் காரணமாகவே நடக்கின்றன.

போர்கள், இயற்கை அழிவுகள், விபத்துக்கள் என்பன தனிமனித சக்தியை மீறி வருவனவென்பதால் அவற்றை இதற்குள் இழுத்துவிடல் தவிர்ப்போம்.

முன்னெடுக்கும் காரியங்கள் சாதகமான பலன்களைத் தருவதாகக் கண்டால் மனமானது மகிழ்ச்சித் துளிர்ப்புடன் துள்ளிச் செயல்படும். அதற்குக் காரணம் சாதக சந்தர்ப்பங்களினால் மனதுக்குள் எழும் திருப்திதான். அதனால்தான் அதே மனம் பாதகமாக ஏதாவது வருவதாகப் பட்டாலும்கூட துடிதுடித்துப் போகின்றது.

ஆக, எதிர்பார்ப்புணர்வுதான் மனித மனத்தின் செயல்வடிவங்களின் தூண்டுகோலாக இருப்பது தெளிவாகின்றது.

மனம் தளர்வடைவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஏமாற்றத்தின் எல்லையை உணராமல் தவிக்கையிலேதான் மனம் உண்மையிலேயே மிகமிகத் தளர்வடைந்து போகின்றது.

ஒரு காரியத்தின் வெற்றியின்மீது நம்பிக்கை வைத்து இயங்கத் தொடங்கும்போது, அக்காரியம் வெல்லப்பட வேண்டிய காரியம்தான் என்கின்ற நம்பிக்கை முதலில் மனதுக்குள் ஆழமாகப் பதிய வேண்டியது முக்கியம்.

முதலில் ஏன் என்றும் பிறகு அது எதற்காக என்றும் தீர முடிவெடுத்த பிறகுதான் எப்படி என்ற பாகத்துக்குள் பிரவேசிக்க வேண்டும். முதல் இரண்டு முடிவெடுப்புக்கான பாகங்களுக்குள் பிரவேசிக்க அறிவுசார் வழிகள் மூலம் இலகுவாக நுழைந்து முடிவெடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் மூன்றாவது பாகமான எப்படி என்ற கேள்விக்கான பாகத்தை நகர்த்தி வெல்வதில்தான் அறிவும் தீர்க்கதரிசனமான சிந்தனையும் விவேகமும் நிதானமும் கடுமையான கவனமிகுந்த முன்னெச்சரிக்கையும் சந்தேகமும் முன் ஐயங்களும் முன் அனுபவங்களின் பாடங்களும் உதவிக்குத் தேவைப்படுகின்றன.

நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் ஒரே உருவில் நடமாடிவருகின்ற இந்த உலகத்திலே..
உண்மையும் பொய்யும் ஒரே விதம் போலவே தென்படுகின்ற இந்த உலகத்திலே..
நண்பரும் விரோதிகளும் ஒரே முகமலர்ச்சியுடன் நடமாடிவருகின்ற இந்த உலகத்திலே..
உற்றவரும் துரோகிகளும் ஒரே நேரத்திலே உடன் சேர்ந்து இயங்குகின்ற இந்த உலகத்திலே..
ஒவ்வொரு மணித்துளியும் தீமையின் கரங்களுக்கு பலம் மிகுந்துவரும் இந்த உலகத்திலே..

நீதியும் நியாயமும் மக்களின் உரிமைகளும் மனிதாபிமானங்களும் மிகமிகத் திட்டமிடப்பட்ட விதங்களிலே மீறப்படுவதும் பறிக்கப்படுவதும் தருகின்ற எமாற்றத்தின் தாக்கம் மிகவும் கடுமையாக இருப்பதனாலேயே மனங்கள் தளர்ந்து ஏமாறி நிற்கும் ஒருவித மயான நிலை உருவாகி வருகின்றது போலத் தெரிகின்றது.

மனம் சரியாகச் செயல்படுவதில் தவறினால் தோல்விகளுக்காான முதல் பச்சைக்கொடி காட்டப்பட்டுவிடும். அதன் தொடர்ச்சியாக தன்னம்பிக்கையின் தளர்வும் தத்தளிக்கும் மனநிலையும் தலைகாட்டத் தொடங்கும். மனம் யாரையாவது நம்பிச் சாதித்துக் கொள்ள முற்படும்.

இப்படியான நிலைமை மனதின் பலமான நிலை தவறித் தளர் நிலை ஏற்படும்போதுதான் மனதை ஆட்டத் தொடங்கும்.

ஒரு தடவை இந்த நிலை உறுதியானால் அதன் பிறகு அதன் தொடர்ச்சியான அழுத்தங்களுக்குள் அமுங்கிவிடுவதை யாராலுமே தவிர்ப்பது இயலாமல் போய்விடும். அதற்கு அடிப்படைக் காரணம் மனம் தனது நம்பிக்கையைத் துளியளவு இழந்தாலும் அதன் பிறகு அது நம்பிக்கையின்மையின்பாலும் அதிலிருந்து தப்பப் பிறர் உதவியில் தங்குவதிலுமே ஈடுபட்டு வரப் பழகிவிடத் தொடங்குவதுதான்.

இதனால்தான் மலையளவு எதிர்பார்ப்புடன் தலைசிறந்த திட்டங்களுடன் இயங்கி வந்த பல இயக்கங்களும் போராட்டங்களும் அரசுகளும்கூட அச்சு தகர்ந்து அடிமட்டத்துக்குள் போய் விழுந்திருக்கின்றன.

தனிமனித மனமும் சமுதாயத்தின் ஒத்த மனஉணர்வும் அடிப்படையில் ஆழமாகப் பதிவு பெறாத பட்சத்தில் இலட்சியங்களில் வெல்வதென்பது இலவு பழுத்த கதையாகவே முடியும்.

ஆகவே வெற்றியை விழையும் மனநிலை இருந்தால் அதனைக் காத்து, வளர்த்து, பயிற்சியளித்து, பக்குவமாகக் காத்து வர வேண்டும்.

அறையில் பழகாமல் அரங்கேற முயற்சித்தால் அசகாய சூரருக்கும் அடி சறுக்கும் ஆபத்து இருப்பதை மறுக்க முடியாது.

வளமான விளைச்சலுக்கு தரமான உரம் வேண்டும்.
வளமான வாழ்க்கைக்கு தரமான சிந்தனை வேண்டும்
தரமான சிந்தனைக்குச் சரியான வழி வேண்டும்
சரியான வழிகளுக்கு அறிவுசார் வழி செல்ல வேண்டும்

அதற்கு..

மனம் உடன்பட்டால், உதவினால், ஒத்துழைத்தால் நம்ப நடக்கவும் நம்பி நடக்காமல் தப்பவும் நிச்சயமாக வழி கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக