புதன், 5 செப்டம்பர், 2012

தகரம் வெள்ளியென்றால் பித்தளை தங்கமாகும்


நேர்மையைக் கொண்டிலார் அறிவுரை கள்
நேர்மைபோல் பொய்சொல்லும். புரிதல் நன்று
பார்வையில் புண்ணியர் போ லியங்கும்
போர்வையர் புவியிலே அதிகம் உண்டு.

மொழிதனை வளர்த்தவர் என்று சொல்வார்
மொழிவைத்து வளர்ந்தவர் ஆய் இருப்பார்
வழிகாட்டும் தலைவர்தான் என்று நிற்பார்
வழிவைத்து பொருள்தேடி உயர்ந் திருப்பார்.

இனிமையாய்ச் சுவைக்கின்ற பானம்கூட
இதயத்தை நிறுத்திடும் நஞ்சிருப் பின்
இனிமையாய்க் கவிபாடும் கலைஞன்கூட
இருக்கலாம் தீயனால் சுயநலத் தில்.

அதிகாரம், மேடைகள், சூழல்கள் தாம்
அநியாயம் செய்வரை உயர்த்திக் காட்டும்
அதிகாரம் தனிலேற்றும் மக்களுள் ளம்
அறிவுடன் செயல்படின் தீமை தேயும்.

அழகாகப் பேசுவார் பேச்சை நம்பல்
அறிவிலார் தமக்கென்றே குழிபறித் தல்
எவரெதைச் சொன்னாலும் உற்று சிந்தி
உருவாகும் உனக்குள்ளே உந்து சக்தி.

பொருள்சுவை கண்டவன் ஏறும் பாதை
பொருளிலார் புரியாமல் ஏய்த்திடல் தான்
பெரியனாய் உயர்பவன் தேடும் பாதை
பெரியவன் போல்பிறன் ஏய்த்திடல் தான்.

நீதியைச் சாராதான் தகிடு தத்தம்
நீதிக்கு உறைபோடப் பொய்யைத் தேடும்
நீதிசார் மக்களின் இதயம் வென்றால்
நீதிகொல் பாவியர் ஓட நேரும்.

அடையாளம் காண்பதில்  தவறு செய்தால்
கடையரைத் தலைவராய் ஏற்க நேரும்
கருங்கல்லும் வைரமும் கற்கள் என்றால்
தகரமும் பித்தளையும் என்னவாமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக