ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

படிக்கத் தெரியாமல் படித்துவிட முடியாது படிப்பிக்கப் படிக்காமல் படிப்பிக்கவும் முடியாது (கட்டுரை)


டிப்படையை அறியாத அறிவு அடிப்படையில் அறிவன்று.
சிந்திக்கத் தெரியாத சிந்தனை என்றைக்கும் சிந்தனை அன்று. நட்பினைத் தெரியாதவரின் நட்புறவு நட்பன்று.
உண்மையை உணராதவரின் உண்மை உண்மையில் உண்மை அன்று.
தூய்மையின் தன்மை உணரார் தூய்மையை அறிந்தவர் அல்லர்
அழகை உணரார் கண்ணில் அழகென்பது எதுவுமே அல்ல

ஆக-
வாசிப்பு என்பதும்  படிப்புஏன்பதும் இரு வேறுபட்ட விடயங்கள்.

கல்வி என்பதும்   தகைமை என்பதும் இரு வேறுபட்ட விடயங்கள்.
படிப்பது என்பதும்  படிப்பிப்பதும் இரு வேறுபட்ட விடயங்கள்.
அறிவது என்பதும்  அறிவு என்பதும் இரு வேறுபட்ட விடயங்கள்.

வாழ்க்கைப் புத்தகத்தின் அத்தியாயங்களைப் படிக்கப் படிக்கத்தான் அனுபவம் என்ற உண்மையை அறிந்து கொள்ள முடிகின்றது.
அந்த உண்மையை ஆய்ந்து வரும்போதுதான் அனுபவத்தின் பாடம் தெரிகின்றது. அதனை சமுதாய  வட்டத்தில் சுற்ற விட்டு   ஒப்பிட்டொப்பிட்டுப் படித்திட முனையும்போதுதான் அறிவு கிட்டுகின்றது.
அதற்கும் எப்படி என்ற ஓர்  இடைப்பாடம் இருக்கவே செய்கின்றது. ஆக எதையும் அதற்குரிய விதத்தில் அணுகிப் பயிலாமல் எதிலும் வெற்றி அசாத்தியம் என்பதே  இறுதி உண்மையாகின்றது.

சேர்க்கையைச் சரியாய்ச் செய்யாமல் எப்பொருளினதும் பலனைப் பெற்றுவிட முடியவே முடியாது. ஏற்ற அளவினதாய் வண்ணங்களைக் கலந்து குழைக்காமல் ஓவியம் முழுமை பெறாது. சமையல் நிறைவு பெறாது. கட்டிடம் அமைவு பெறாது. எதற்குமே வரைமுறை அமைமுறை என்பவைதான் அதிமுக்கியமானவை.

இன்றைய உலக அமைதியின்மைகள்  அசம்பாவிதங்கள்  அநியாயங்கள்  அதிர்ச்சிகள் அனைத்திலும் அடிப்படையில் ஆழமுணராக் கால்வைப்புக்களின்
பிரதிபலனே நெளிவதைச் சரியாகவும் பொறுமையாகவும் நிதானம் தவறாமலும் சிந்தித்துப் பார்த்தால் நிச்சயமாகப் புரிந்து கொள்வது கடினமல்ல.

நம்மில் பலரும் படிப்பதிலும் அறிவதிலும் அனுபவத்தில் உணர்வதிலும் அடிப்படை உணராது திருப்திகாண முற்பட்டுவிடுகிறார்கள். அதனால்தான் அற்ப ஆணவ உணர்வுகளும் தலைக்கனங்களும் அவமரியாதையில் உயர்வு விழைகின்றமையும் பொது மனித பட்டங்களாகத் தலைவிரித்து ஆடி வருகின்றன.

ஆழம் கூடக்கூட நதியதன் மேல் நிலையில் அமைதி தெரியும். அதுவே குறையக் குறைய சலசலப்பும் அலைக்கழிப்பும் அதிகரித்து நதியின் மேல்புறம் அல்லாடும். அதுவேதான் நமது வாழ்க்கைத் தகைமைகளிலும் இயல்பாகப் பிரதிபலிக்கின்றது.

நம் முன்னோர்கள் நிதானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள். நிதானம் என்பது மனம் பக்குவபபட்டாலன்றி கடைப்பிடிக்கப்படுவது மிகமிகக் கடினமாகும்.

எதிரியக்க இயல்பு நிலை என்பதுதான் இயற்கையின் நிலையான தன்மையின் வெற்றியின் இரகசியம்.

எதைச் செய்தாலும் அதற்கொரு எதிர்விளைவை அது நிர்ணயித்தே இயங்குகின்றது. செயல் சரியாக இயங்குவதாக இருப்பின் பலன்களும் அதற்கேற்பவே அமையும். இதர உயிர்கள் பலவும் இயங்கு பொருள் இயங்காப் பொருள் அனைத்துமே இந்த நியதியையே சரியாகக் கடைப்பிடிப்பதால்தான் அவற்றுக்கு நம்மைப்போல பிரச்சினைகள் வருவதில்லை. இயற்கையாய் தமக்கு நடப்பவற்றை அவை ஏற்று நடக்கின்றபடியினால்தான் அனைத்தும் ஒரு கிரமப்படி நடந்து கொண்டிருக்கின்றன.

எங்கே மனிதன் தனது அறிவை அதை  அதாவது அந்த இயற்கை வழியை மீறி வென்றுவிடும் நோக்கத்தோடே செயல்படுத்தத் தொடங்குகின்றானோ அங்கெல்லாம் ஆரம்பத்தில் வெற்றியாகத் தெரிகின்ற அனைத்துமே கால ஓட்டத்தில் மாற்றப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் குற்றங்களாகவே முடிவுகளைக் காட்டுகின்றன.

தன் முடிவையே தெரிய முடியாத மனிதன் தனது முயற்சிகளின் பலன்களுக்கு என்ன உத்தரவாதத்தை என்ன அடிப்படையில் அளித்தாலும் அது நிரந்தரமாகச் சரிவராது  அதன் எதிர்நிலையான பலன்களைக் காலகதழயில் நிச்சயமாக அளித்தே தீரும் என்பதைத்தான் இன்றைய  சூழல் பாதிப்புக்கள் மருத்துவ முன்னேற்றங்கள் அனைத்துமே உத்தரவாதப் படுத்தி வருகின்றன.

கிருமிகளுக்கு எதிராக மனிதன் உருவாக்கிய மருந்துகளை விஞ்சும் புதிய அதே கிருமிகளை  இன்று இயற்கை உருவாக்கி நமக்கு எச்சரிக்கை விடுப்பதைக் கூட நாம் கண்டு கொள்வதில்லை.

இதிலெல்லாம்  இருந்து விடுபடும் பாடத்தை நாம் சரியாகத் தேட வேண்டும்.
என்றிலிருந்து நாம் இயற்கையின் வழிகளை அனுசரித்து நடக்க முன்வருகின்றோமோ அன்றிலிருந்துதான் உலக அமைதிக்கான ஒளி படரத் தொடங்கும்.

இயற்கை அனுமதித்தாலன்றி நமக்கு என்றைக்குமே அமைதி கிட்டாது. நிம்மதி கிட்டாது.

ஆகவே இயற்கையை நமக்கு நண்பனாக்க நாம் முதலில் படிக்க வேண்டும். அதை அணுகி அதனோடு இணைந்து இயங்கி முன்னேறக் கற்க வேண்டும்.
மாறாக அதை  அடக்கி மடக்கி வெல்லும் உள்ளுணர்வோடு இயங்கினால்
வெல்ல மாட்டோம். வெம்பி வெந்து போவோம்.

நமது சரியான முன்னெடுப்புத்தான் நமது சந்ததிகளின் வாழ்வையும் அழிவையும் நிச்சயிக்கப் போகின்றன.

புரிந்து கொள்வோமா? இயங்கி நிற்போமா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக