வெள்ளி, 21 செப்டம்பர், 2012

புரியாமலும் புரியும் (சிறுகதை)

ரு கிராமத்தில் ஒரு பிறவிச் செவிடரிருந்தார். அவரால் எதையும் கேட்க முடியாதிருந்தாலும் பிறரின் உதட்டசைவை வைத்து ஓரளவிற்குப் புரிந்து கொள்ளும் ஆற்றல் அவரிடம் இருந்தது. ஊரில் பலருக்கும் அவரது இயல்பு நிலை தெரிந்திருந்தாலும் இவர் எதையும் புரிந்து கொள்ளக் கூடியவர் என்று கருதிப் பழகியதால் நாளடைவில் அவர் செவிடர் என்ற கருத்தும் கிட்டத்தட்ட மறைந்தே போயிருந்தது எனலாம்.

ஒரு நாள் அந்தக் கிராமத்துக்கு தனது உறவினரைப் பார்க்கவென்று
இன்னொரு செவிடர் வந்திருந்தார்.

வெளியூர் வாசியாதலால் நெடுந்தூரம் நடந்தே தமது உறவினரோடு அவர்
பேருந்து நிலையத்திலிருந்து அந்தக் கிராமத்தை நோக்கி வந்துகொண்டு இருந்தார்.

நமது பிறவிச் செவிடர் அப்போது தமது  வீட்டுத் திண்ணையிலமர்ந்து என்னவோ செய்து கொண்டிருந்தார். வந்தவரும் அவரை அழைத்துவந்த ஊர்வாசியும் இவரது வீட்டைத் தாண்டிய போது  ஊர்வாசி அவருக்குத் தமது உறவினரை அறிமுகப்படுத்திவிட நினைத்தார்.

ஆனால் ஒன்று. கிராமத்தில் செய்வதுபோல வணக்கம் சொல்லாது. கைகுலுக்கித் தமது உறவினரின நகர்வாச உயர்ச்சியைக் காட்டிவிட வேண்டும் என்றும் வருபவர் செவிடர் என்பதைக் காட்டிக் கொள்வது தேவையற்றது என்றும் நினைத்தார்.  உறவினருக்கும் தம்மைச் செவிடராகக் காட்டிக் கொள்வதில் விருப்பமிருக்கவில்லை.

அறிமுகப் படலம் ஆரம்பமானது.

தமது உறவினர் நகரவாசி என்பதைக் காட்டுவதற்காகவும் அதிஅதி உயர்ந்த நாகரீக மனிதர் என்று உணர்த்துவதற்காகவும் ஊர்வாசி வலிந்து வந்து நம்மவரின் கையை ஒரு குலுக்கு குலுக்கி வணக்கம் தெரிவிததார்.

நமது  ஆளுக்கு உடம்பே புல்லரித்து அதிர்ந்தது. என்னடா இது! ஒரு நாளுமில்லாமல்... கைகுலுக்கி வணக்கம் சொல்கிறாரே என்று மனதுக்குள்
சொறிந்து கொண்டு நின்றார்.

தமது உறவினரின் பெயரைச் சொல்லி அவர் அறிமுகப்படுத்த அவர் தமது கை நீட்டினார்.இவருக்குத்தான் காது கேட்காதே!

அதனால் "ஆகா மிகவும் அழகான மிகவும் அழகான நல்ல பெயர்" என்று சொல்லிவிட்டு, தனது பெயரையும் சொல்லி குலுகுலுவென்று அவரது கையைக் குலுக்கினார்.

ஆனால் இவர் பெயர் மற்றவருக்கு எப்படிக் கேட்டிருக்க முடியும்? ஆனால் அவர் இவருக்கு அண்ணனாக இருந்தார் உண்மையை மறைத்து நடிப்பதில்.

எனவே அப்படியா” உங்கள் பெயரும்கூட நன்றாகத்தான் இருக்கின்றது " என்று முறுவலித்து விட்டு நிற்க நேரமில்லை அவசர வேலையொன்று காத்திருக்கிறது. அடுத்த முறை சாவகாசமாகப் பேசுவோம் என்று விட்டு நகர இருவரும் நாசூக்காக நழுவினார்கள். நமது நண்பருக்கு அன்றிரவு முழுக்க அரைத் தூக்கம்தான்.

மறுநாள் காலையில் புதிய விருந்தாளி ஊர்ப் பொதுக் கிணற்றில் குளிக்க டவலைத் தோளில் போட்டுக் கொண்டு கையில் வாளியுடன் இவரது வீட்டைத் தாண்டிச் செல்வது தெரிந்தது.

உடனே கிராமத்துச் செவிடர் சப்தமாகக் கேட்டார்.

„ எங்கே இப்படி அதிகாலையில். கிணற்றுக்குக் குளிக்கவா போகிறீர்கள்?“

புதுச் செவிடருக்குச் சுருக்கென்றிருந்தது.

என்னமோ  கேட்கிறானே பாவி? டாய்லெட்டுக்குப் போவதாக நினைக்கிறான் போலிருக்கிறதே! சமாளிக்கணுமே!

„இல்லையில்லை. சும்மா கிணற்றடிக்குக் குளிக்கப் போகிறேன். குளிக்கப் போகிறேன். டாய்லெட்டுக்கு அல்ல.“

கிராமச் செவிடருக்கு இப்போது சுருக்.

என்ன சொல்கிறான் பாவி? டாய்லெட்டுக்குப் போவதாகச் சொல்கிறான் போலிருக்கிறதே! சமாளிக்கணுமே!

„அப்படியா! நான் நினைத்தேன். நீங்கள் குளிக்கப் போகிறீர்களென்று. சென்று ஒழுங்காக எல்லாவற்றையும் முடித்துவிட்டு வாருங்கள்“                                      

இருவருமேஒருவரையொருவர் புரிந்துகொள்ளாமலே புரிந்து கொண்டவர்களாய்க் கையசைத்து விடைபெற்றுக் கொண்டார்கள். நட்பு மலர்களாக இருவர் முகங்களும் இளித்து மலர்ந்துவாறே இருந்தன.
அகங்கள்? உண்மையின் கானலாகப் படாந்து நின்றன.


உண்மையில் உள்ளதை உள்ளம் ஏற்க வேண்டும்
உண்மையில் லாததெவ் வண்ணுண்மை ஆகும்?
பண்படும் தன்மையை வளர்க்கத் தவறுங் கால்
எண்ணத்துள் பொய்யே குடிகொண்டு வாழும்.

கலக்காத வரையில்தான் நீர்பெயர் தண்ணீர்
கலப்புறின் அதன் பெயர்  அதன்சார்பு  என்பீர்
பலமென்ப துநமது  சுயம்விட்டு நின்றால்
பலவீனம் மட்டுமே நமையென்றும் சேரும்.

தெரியாது என்பது தெரிந்தபின் இல்லை
தெரியாது  என்பதை மறைப்பதே தொல்லை
புரியாது பிழை செய்யின் தவறென்று ஆகும்
புரிந்து பிழைசெய்யினது  குற்றமாய் மாறும்.

வெளியாரின் முன்புநாம் பெரியாரைப்போலே
வெளிவேடம் போடுதல் வெளியாகும்; தோற்கும்
தனித்துவம் தனையுணர்ந்து  நிமிர்ந்திடும் போதே
பனித்துளி முத்தாகும் தகைமைநமைச் சேரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக