திங்கள், 24 செப்டம்பர், 2012

துறவறத் தொழிலாளர்! ஜாக்கிரதை (கட்டுரை)

னித சக்திகளை வீணாக்கி வைத்து அதனடிப்படையில் உயர்வை விழையும் அற்புதமான ஆனால் ஆபத்தான அறிவாளிகளாக மதாபிமானிகளும் அவர்களின் வழிநடத்தலில் அவர்களின் பந்தங்களும் திட்டமிட்டுப் பரவி வைத்துவரும் நஞ்சானது  மனிதாபிமானத்தை ஒரேயடியாகக் கொல்லாது கொஞ்சம் கொஞ்சமாகவே கொலை செய்து கொண்டு வருகினமை ஒரு பெரிய கொடுமையாகும்.

எண் திசைகளிலும் தனிமனிதனின் அடையாளத்தையே மதம்தான் நிர்ணயிக்கின்றதோ என்னுமளவிற்கு ஊழல் புரையோடிப் போய்க் கிடக்கின்றது.

தெய்வத்தை மதித்து நிற்கும் மனங்கள் அவைகள் தொற்றிக் கொண்டிருக்கும் மத நம்பிக்கைகளினால் மனிதத்தை மிதிப்பதை தர்மமாகத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளதுடன் அதையே பாடமாக ஏற்று  நடைமுறைப்படுத்தவும் முனைகின்றமை  ஒரு பரவலாகும் புற்றுநோயகிக் கொண்டு வருகின்றது.

குருவியையும் பூச்சியையும் கொல்வது பாவம் எனப் போதிக்கும் மதவாதம் தனது மதத்துக்காக சகோதர மனிதனைக் கொலை செய்வதும் வதை செய்வதும் சரியென உணர்ர்த்த விழைவதைப் போலவே உலக நடப்புக்கள் நினைக்க வைக்கின்றன. நம்ப வைக்கின்றன.

இது பிழையென்று கூடப் புரியாமல் இருக்கிறதே என்ற நியாயமான ஆதங்கத்தைச் சொல்லி  மக்களைத் தெளிவு படுத்த முனையும் மனிதாபிமான உணர்வுகளைக் கூட நாத்திகம் என்ற கொடியைப் போட்டு மூடி மறைத்துவிட்டு  பொதுமக்களை இருட்டிலேயே இருத்தி வைத்துக் கொண்டிருக்கிறான் மதவாதி.

இதுதான் இன்றைய உலக  அனைத்து அமைதியின்மைகளினதும்  அடிப்படை  வியாதியாகி நிற்கின்றது..

தெய்வம் இருப்பதை நம்புபவனுக்கு  அதை எப்படி உறுதி செய்வது என்பதற்குத்தான்  வழி சொல்கிறார்களாம். இந்தக் கதைவிடு கபோதிகள்.

“மதமாகவல்ல  நல்ல மார்க்கமாக மட்டுமே பார். அதுவே போதும். அதன் வழிகள் சொல்லும் நியாயத்தை உணர்ந்து நட. இப்படி நடந்தால்தான் நீ மனிதனாக வாழ்வதில் வெறுமதியுண்டு” என்று வழிகாட்டலை விடுத்துவிட்டு “இங்கே வா. இப்படிச் செய். நீ மோட்சத்துக்குப் போகலாம்” என்று அல்லவா இவர்கள் சாதாரண மக்களை அல்லவா கொடுத்து இழுக்கிறார்கள்?

இருக்கும் உலகத்தில் இருப்பவர்களுக்கு வாழ வழியில்லை. அனுபவிக்க உரிமையில்லை. மானத்தோடு வாழும்படியாக  சமூகத்தில் மனிதனுக்குரிய அந்தஸ்தே இல்லை. ஆனால் அடுத்த உலகத்துக்குப் போய் சுகமாக வாழ வா என்று அழைப்பு விடுக்கிறார்கள்  இந்த மதவெறிச் சொர்க்கலோகக் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள்.

போதனைவாதிகளை அவதானித்துப் பாருங்கள். தாங்கள் சார்ந்த சாதியையும் தங்களைச் சார்ந்தவர்களையும் செல்வந்தர்களையும் ஒட்டி நிற்பதே நடைமுறையிலும் கோவில் மண்டபங்களில் மட்டும் ஏழ்மையும் தாழ்மையும் சகோதரத்துவமும் என்று போதிப்பதுமாகப் பல இடங்களில் சொல்லிலும் செயலிலும் மாறுபட்டே வாழ்கிறார்கள் என்பது தெரியும்.

வெறும் சம்பளத்துக்குத் தொழில் புரியும் இந்த மனிதர்கள் துறவறத் தொழிலாளர்களாக மட்டுமே இருப்பதால்  “உலகாயத விடயங்களை விட்டு விட்டு  இறைவனுக்காக எல்லாம் துறந்தவர்கள் நாங்கள்” என்று பெயருக்குத்தான் சொல்லிக் கொள்கிறார்களே தவிரஇ உண்மையில் அவற்றிலேதான் அளவுக்கும் அதிகமாக நாட்டங் கொண்டவர்களாய் ஒட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்.ஆங்காங்கே இருக்கும் உண்மைத்துறவிகளையும்  கூட சமுதாயங்கள் இதனால்தான் மதிப்பது படிப்படியாகக் குறைந்து வருகின்றது.

இந்த நாட்களில் பல சாதாரண மனிதர்களுக்கு சொகுசான வாழ்க்கைக்கு ஏற்ற தளமாகவே துறவற இயல் இருந்து  உதவி வருவது அப்பட்டமான பச்சையான துயரத்துக்குரிய உண்மையேயன்றி வேறில்லை.

அமெரிக்காவில் பாஸ்டன் என்ற நகரத்தில் துறவறம் நாறிய செய்தி மறையுமுன்பே தமிழ் நாட்டில் திருவாவடுதுறையில் புது நாற்றம் வீசுகிறது. இந்தத் துறவற விளையாட்டு வீரர்கள் அகப்பட்டதனால்தான் தெரிந்தார்கள். இன்னும் அகப்படாத பரிசுத்த பாவிகள் எத்தனையோ ஆயிரங்கள் ஆங்காங்கே ஆண்டனின் பிரதிநிதிகளாக இருக்கத்தானே செய்கிறார்கள்?

பிடிக்க வேண்டிய பொதுசனமே பலியாடுகளாய்ப் பின்னோடுவது புத்திசாலித்தனமா அல்லது....?

மதிப்புக்கும் புனிதத்துக்கும் வழிகாட்டலுக்கும் பொறுப்புடைய இந்த வேலையில்  தன்னை ஒறுத்து பிறர்க்கு உழைக்கும் உண்மையான உத்தமர்கள் எத்தனை பேருண்டு என்று கணக் கெடுத்துப் பார்க்க மட்டும் முடியுமென்றால் ஒன்றிரண்டைத் தவிர மீதி அத்தனையையும் குப்பைக் கூடைக்;குள்தான் போட வருமோ என்ற அச்சம் கூட நியாயமானதுதான் போலும்.

தாழ்ச்சியையும் அடக்கத்தையும் பணிவையும் பரிசுத்தத்தையும் போதிக்கும் மதவாதப் புண்ணியர்களான துறவறர்கள் பலரும் பாமர மக்களை அடக்கிக் கட்டுப்படுத்துபவர்களாகவும் அவர்களை அதிகாரம் செய்து  ஒரு வகையில் பயமிக்க மதிப்புணர்வுக்குள் இருத்தி வைப்பவர்களாகவுமே இருக்கிறார்கள்.

நாத்திக எண்ணத்தோடோ தனிப்பட்ட வஞ்சத்தோடோ இதை நான் சொல்லவில்லை. பார்த்துப்  பழகிக்  கலந்துரையாடி  அவதானித்து அனுபவப்பட்டதை வைத்தே சொல்லுகிறேன்.

உண்மையான துறவறவுணர்வுடைய இளம் குருக்களையும் சந்தித்திருக்கிறேன். இருமன வழிகாட்டிகளான கிழ (ம்) குருக்களையும் சந்தித்திருக்கிறேன்.

தமக்கு சாதாரண வாழ்வில் இருக்கும் சாதாரண நாட்டத்தை மனதாரச் சொல்லி   “நாங்களும் மனிதர்கள்தானே எங்களுக்கும் ஆசாபாசங்கள் இருப்பதில் தவறில்லை தானே” என்று மனந்திறந்து  தங்களை உண்மையாக வெளிப்படுத்திய நல்ல இதயங்களையும்கூட நான் சந்தித்தது உண்டு.

“ஆழ்ந்த துறவறத்தில் மூழ்கிய துறவறன் நான்” என்று கூறிவிட்டு  ஊர் ஆழ்ந்து உறங்குகையில் தொலைக் காட்சிகளில் கூர்ந்து  ஈர்ந்திருந்த பொய்மை கொள் இதயங்களும் உண்டு. நானே கண்டு அதிர்ந்திருக்கிறேன்.

துறவற வாழ்க்கைக்குத் தன்னை அர்ப்பணித்தவராகக் கூறிக் கொண்ட ஒரு துறவி; துறவறத்துக்கு வந்த இன்னொருவர் தனக்குப் பிடிக்காதவர் என்பதால் அவர் வரவே முடியாதபடிக்குச் சதி செய்து விரட்டிய கொடுமையைக் கூட நான் கண்டிருக்கிறேன்.

ஆலயத்தைத் தனது சொந்த விருப்பு  வெறுப்புகளுக்கேற்ப ஆட்டி வைத்து  மக்களை ஒரு விதமான பயவுணர்வில் நடத்திக் கொண்டு  நினைத்தபடி அட்டகாசம் புரிந்த ஒரு துறவறப் புலியை எதிர்க்கத் தெரியாத துணிவற்ற மக்கள் மந்தையொன்றை  ( அந்த நல்ல ஆயரின் கண்களுக்கு மக்கள் அப்படித்தான் தெரிந்தார்கள்) நானே முன்னின்று பிழை உணர்த்தித் துணிவுள்ள நல்லவர்கள் துணையோடு  மேலிடத்துக்கே புரியவைத்து  அடக்கி  அனுப்பி வைத்த அனுபவமும் எனக்குண்டு.

சமுதாயத்துக்கு எது தேவையோ அதைத் தராமல் எதையோ சொல்லி  எதையோ எடுக்கும் தந்திரசாலிகளின் நிர்வாகத்தில் துறவறத் தொண்டு பரவலாகப் பிடிபட்டு இருப்பதால்தான் உண்மையான துறவிகளும் மதிப்பிழந்து நிற்கின்றார்கள் இன்று.

சில தீயவரால் பல நல்லவர்கள் பாதிக்கப்படுவது பொது மக்கள் வட்டத்தில் என்றால்  பல தீயவரால் சில நல்லவர்கள் பாதிக்கப்படுவது துறவறர் வட்டத்தில். இது உண்மையாகவே கசப்பு மிகுந்த உண்மையல்லவா?

மக்களுடன் மக்களாய்  மக்களுக்குத் தொண்டராய்   மக்களின் நல்வாழ்வுக்கான நல்ல நோக்கம் உள்ளம் நிறையக் கொண்டவராய்  மகேசன் பணி செய்யும் மார்க்கமாகத் துறவறத்தைத் தெரிவு செய்பவர்களால் சமுதாயத்துக்கு நிச்சயம் நன்மை உண்டு. அவர்களின் சேவையே தேசத்தின் தேவை.

அவர்களால்தான்; மக்களைச் சரியாக வழி நடத்த முடியும். ஏனெனில் அவர்கள் நேர்மையாக இருப்பவர்கள்; நேர்மையாக நடப்பவர்கள்.

ஆனால் தம்மைக் கல்வியில் மேம்படுத்திக் கொள்ளவும் சமுதாயத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்தைத் தேடிக் கொள்ளவும் இலகுவான  வாழ ஏற்ற வழியாகக் கண்டு கொண்டு  இந்தப் புனிதமான நோக்கத்துக்குரிய பாதைக்குள் நுழைபவர்கள் நேர்மையாக நடக்க மாட்டார்கள். அவர்களை நம்பிப் பின் செல்பவர்கள் கண்களைக் கட்டிக் கொண்டு  காட்டிலே நடப்பவர்களாகவே இருப்பார்கள்.

அவர்கள் தம்மையும் தம்மைச் சார்ந்தவர்களையும் தமக்கானவர்களையும் உயர்த்திக் கொண்டு  யாருக்காக உழைக்க வேண்டுமோ  அவர்களை வைத்தே தங்களை உயர்த்திக் கொண்டிருப்பார்கள்.


அவர்களின் பக்தியும் யுக்தியும் நேர்மையீனத்தின் கருவிகளாகவே இருந்து கொண்டிருக்குமாதலால் தெய்வம் அவர்களை விட்டுவிட்டுத் தூரவே ஓடிக் கொண்டிருக்கும்.

இப்படிப்பட்டவர்களுக்கும் சமுதாயத்தில் வெறியுணர்வைத் தூண்டி விட்டுச் சாதியின் பேராலும் மொழியின் பேராலும் மக்களைத் துண்டாடி  வளர்ச்சி தேடுபவர்களுக்குமிடையில் என்ன வித்தியாசமிருக்க முடியும்?

அவர்கள் வெளிப்படையாக சமுதாயத்தின் கழுத்தை அறுக்கிறார்கள். இவர்கள் தலையத் துணி போர்த்தி மறைத்துக் கொண்டு அறுக்கிறார்கள். அவ்வளவுதானே!

பொது மக்கள் நாம்தான் விழிப்பாயிருக்க வேண்டும். எவரும் சொல்வதைக் கேட்கலாம். ஆனால் அதன்படி நடப்பதுபற்றி  சுயமாக யோசித்த பின்பே முடிவெடுக்க வேண்டும்.

கண் தெரியாதவன் மட்டுமல்ல  கண்ணை மூடிக் கொண்டோடுபவனும் கபோதிதான்.

ஆண்டவனை நம்புங்கள். ஆலயத்துக்குச் செல்லுங்கள். ஆனால் அவன் பெயரில் உங்களை ஏமாற்றக் கூடியவர்களைப் பற்றி எப்போதுமே மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

ஏனெனில் ஆண்டவன் இவர்களை அமைக்கவில்லை. இவர்கள்தான் அவன் பெயரால் தங்களை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவனுக்கான பக்தி உங்களின் சொந்த கடமையும் அர்ப்பணிப்புமேயன்றி இன்னொருவர் தந்து அடையும் உபகாரம் அல்ல.

உங்களைப் புரிந்து கொள்ளாமல் நீங்கள் இறைவனைப் புரிந்து கொள்ள முடியாது. போதனைகள் உங்கள் அனுபவங்களில்தான் உள்ளத்தை உறுதியாக்க முடியும்.

அதற்கு என்ன செய்வது சரி?

எப்போதும்   எங்கும்  எதையும் நாம் மனத்துணிவுடன் சிந்தித்து  சிந்தித்துத் தெளிவு பெற முயல வேண்டும். அதுதான் சரி.

இல்லையேல்....

இல்லாத ஒன்றை நம்பி  எதன் பின்னோ ஓடிவிட்டு  இல்லையே என்று ஏமாந்துதான் நிற்போம்;.


         இறைவனைத் தேடியெங்கும் இடமிடமாய் அலைபவர்கள்
         இதயத்துள் அவனை வைக்க  இடமமைத்துப் பார்க்க வேண்டும்
         இருந்திலேல் நல்ல எண்ணம் இறைவனைக் காண மாட்டோம்
         வருந்துவோர் துயரம் கேட்டால் வருவதை இறைவன் காண்போம். 
         
         ஆண்டவன்; இல்லமென்றும் ஆலயம் மட்டுமல்ல
         ஆண்டவன் இல்லையென்பார் ஆண்டவன் எதிரியல்லர்
         தோண்டியே உள்ளம் தன்னை நீதியை  நேர்மையைக் கேள்
         ஆண்டவன் உண்மை எங்கோ அங்குதான் என்று காண்பாய்

         புத்தகம் படித்துவிட்டு  அதைச் சொல்லும் போதகர்கள்
         புத்தகம் மூடிவிட்டுத் தம்பாதை வாழுகின்றார்
         எத்தனை ஆண்டுஅந்தப் போதனை கேட்டபோதும்
         சட்டென மறந்துபோதல் நேர்மைஇல் காரணத் தால் 

         படித்ததில் பட்டம் சேர்த்துப் பரமனைக் காட்டுபவர்
         படிக்கவே வேண்டும் ஏழை  மீளவே வழிகள் காட்ட
        படிக்காத மக்கள் கூட பரமனின் பிள்ளை யென்றால்
         படித்தவர் போதனையைச் சாதனையில் காட்ட வேண்டும்.  

         படமொன்றைத் தீட்டிவைத்து எவரையும் பார்க்கவைத்தால்
         படமென்று சொல்லமாட்டார் வரைபட்டார் பெயரைச் சொல்வார்
         இடம்வைத்து ஆண்டவன்தன் வரலாறு சொல்லுவோர்கள்
         தடம்மட்டும் சரியில்வைத்தால் இறைஅவர் உருவில் காண்பார்
          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக