வெள்ளி, 21 செப்டம்பர், 2012

சாவே என் முதலீடு ஐயா! (சிறுகதை)

ந்த மனிதரைச் சுற்றிலும் ஏகப்பட்ட கூட்டம். அவர் ஒரு சிறிய கட்டிடத்தின் படிக்கட்டில் அவர் நின்று கொண்டிருந்தார். சுற்று வித்தியாசமான தோற்றமாக இருந்தது.

பாதையில் அரைவாசியை நிரப்பிக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் தானும் நுழைந்து கொண்டு அந்த மனிதரை நெருங்கினான் அமலன்.

அதென்ன ஒரு சாதாரண ஏழையைச் சுற்றி அத்தனை பெரிய கூட்டம்? ஏன் இப்படி ஒரேயடியாக  கலகலவென
அவர்கள் சிரிக்கிறார்கள்? இவ்வாறு வியந்தவனாக அவன் அவரருகில் சென்றபோது அவர் தலையைக் குனிந்து இலேசாக இருமிக் கொண்டிருந்தார்.
அவரிடம் எதையோ எதிர்பார்த்தபடி மக்கள் கூட்டம் அமைதியாக, ஆனால் ஒருவித பரபரப்புடன் நின்று கொண்டிருந்தது.

'இவர் என்ன செய்யப் போகிறார்?'
அமலன் ஒருவரைக் கேட்டான்.

“அதை நேரிலே பார்த்தால்தான் சுவையாக இருக்கும்.”

பதில் சொன்னவர் ஏதோ 'த்ரில்' வைத்துப் பேசினார். அமலனுக்கு சங்கடமாக இருந்தது. சில நிமிடங்கள் அமைதியின்றி அவனுக்குள் கழிந்தன.

பிறகு அந்த மனிதர் எழுந்து நிமிர்ந்து நின்றார். தனது கைகளைத் தட்டுவது போல அவர் சமிக்ஞை செய்ய, கூட்டம் கரகோஷம் செய்தது.

அதுசரி... அவர் ஏன் பேசாமல் இருக்கிறார்?

அப்போதுதான் அமலன் கவனித்தான். அப்பப்பா!

என்ன பயங்கரமான காட்சி அது!

அந்த மனிதர் ஒரு வெண்சுருட்டைப் பற்ற வைத்து ஆழமாக உள்ளெடுத்து விட்டு, புகையை வெளியில் விட்டுக் கொண்டிருந்தார்.

வாயினாலா.?
அல்ல... அல்ல.

மூக்கினாலா..?
அல்லவே அல்ல.

அப்படியானால்...?

தனது தொண்டைக் குழியினூடாகத் துருத்திக் கொண்டிருந்த ஒரு பிளாஸ்டிக் குழாயினால் வெளியில் விட்டுக் கொண்டிருந்தார். அதற்குத்தான் அத்தனை கரகோஷமும் கலகலப்பும்.

மூக்கிருக்க வேண்டிய இடத்தில் ஒரு பெரிய துவாரம் மட்டுமே இருந்தது. பார்க்கவே பரிதாபமாக இருந்த அந்த மனிதர் ஒரு புற்று நோயாளி என்பதும் அதன் பாதிப்பினால் தமது மூக்கையே இழந்தவர் என்பதும் புரிந்தது.

ஆனால்... இப்படிப்பட்ட நிலையில் புகைப்பிடிப்பது பெரிய உயிர் ஆபத்தான காரியமாயிற்றே! பாவம். கல்வியறிவில்லாமல் அல்லவா இவர் இப்படி நடந்து கொள்கிறார்? இவரிடம் பேசி அதை அறிவுறுத்தினால் என்ன?

இவ்வாறு ஓடியது அமலனின் சிந்தனை.

இரண்டு காட்சிகள் நடந்தன. அதன் பிறகு அவர் அவ்வளவுதான் என்பதாக சைகை காண்பித்துவிட்டு, படியடியில் ஒடுங்கிக் கொண்டார். கலகலத்து நின்ற கூட்டம் கலைந்து போகத் துவங்கியது.

அவருக்கு முன்னால் விரிக்கப்பட்டிருந்த சிறிய துண்டின் மேல் சில சில்லறை நாணயங்களைச் சிலர் போட, மற்றவர்கள் ஓர் இலவசக் காட்சியைப் பார்த்துவிட்ட திருப்தியோடு சும்மா அங்கிருந்து நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

கூட்டம் ஒதுங்கும் மட்டும் காத்திருந்த அமலன் அவரிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தான்.

“ஐயா உங்கள் சுகவீனத்துக்கு நீங்கள் சிகரெட் பற்றுவது பெரிய ஆபத்து என்று உங்களுக்குத் தெரியாதா?”

ஒரு பாழுங்கிணற்றுக்குள்ளிருந்து வரும் எதிரொலிபோல ஏதோ கர்ரோ.. புர்ரோ.. என்ற சப்தம். அந்த மனிதர்தான் அவனது கேள்விக்கு அப்படிப் பதில் சொன்னார்.

பேச்சில்லை. சப்தமில்லை. வெறுமனே ஒருவிதமான உறுமலை ஒப்ப ஒலி மட்டுமே வந்து கொண்டிருந்தது. அமலன் அதிர்ந்து போனான்.

பேசவும் முடியாமல் ஒழுங்காக இயங்கவும் முடியாமல் இருந்த அந்த மனிதரை வேடிக்கை பார்த்து விட்டுச் சென்ற மக்களை அவனால் மக்களாகவே கூட நினைக்க முடியவில்லை. “சண்டாளர்கள்!”  என்று முனக மட்டுமே முடிந்தது.

இந்த இதயமற்ற மக்கள் கூட்டத்தைப் போய் சமுதாயம் என்று கூறிக் கொண்டு அதற்குப் பயந்து கொண்டு நியாயங்களைக் கூட ஒதுக்கி வைத்துவிட்டு ஒதுங்கி நிற்கும் சாதாரணர்களை என்ன செய்தால் சரி? இப்படி எண்ணியது அவனது உள்ளம்.

அந்த ஏழை மனிதர் ஏதேதோ சொல்ல முயன்றார். ஆனால் அவனுக்கு எதுவுமே புரியவில்லை. அவரது உள்ளம் பெரிய கவலையுடன் வாடியிருப்பதை மட்டும் முகத்தில் மிஞ்சியிருந்த உறுப்புக்களின் அசைவின் பாவத்தை வைத்து ஓரளவுக்கு அவன் கணித்துக் கொண்டான்.

ஏனோ அவனால் உடனடியாக அவரை விட்டு அகலவும் இயலவில்லை. நின்று கொண்டே இருந்தான்.

“ஐயா! உங்களுக்குக் குடும்பம் இருக்கிறதா?”

அந்தக் கேள்வி அந்த ஏழையை ஒரு கேள்வியாக அணுகாமல் ஓர் அம்பாகப் பாய்ந்து தாக்கிவிட்டதை அந்த நொந்து தொங்கிய மனித உடல் அதிர்ந்து ஆடிய ஆட்டம் உணர்த்தியது. கண்களிலிருந்து கண்ணீராக ஒரு துயர சமுத்திரமே வழிந்தோடத் துவங்கியது.

அவருக்கு ஏதாவது நடந்து விடுமோ என்ற பயம் வந்துவிட்டது அமலனுக்கு. அவரது தோளைப் பிடித்து, படியோரமாக அமர்த்தியவன் ஏதாவது குடிக்க வாங்கிக் கொடுக்கலாமா என்று நினைத்தபோது ஒரு சிறுவன் அவர்களருகில் வந்தான்.

“அப்பா! அம்மா இன்னிக்கி எதாச்சும் சேந்திச்சான்னு  பாத்துட்டு, கூட்டிட்டு வரச் சொன்னாங்கப்பா!”

அப்பா! அப்படியானால்....
“தம்பி நீங்க எங்கே இருக்கீங்க?”

அந்தச் சிறுவனுக்கு எட்டு வயதிருக்கும். பாடசாலைக்கு உரிய உடை. பழையது என்றாலும் ஓரளவு சுத்தமாகவே இருந்தது.

“கிராண்ட்பாசிலே இருக்கோம். ஏன்?”

“உங்க அப்பா இப்படி சுகமில்லாமே இருக்கும் போது இந்த வெய்யிலிலே இப்படி நின்னா ஆபத்து தம்பி. உன் அம்மாவுக்கு அது தெரியாதா?”

அமலன் கொஞ்சம் கோபமாகவே கேட்டான்.

“அப்பா அப்படி வந்தாத்தானே ஏதாச்சும் கெடைக்கும்? இல்லேன்னா யார் எங்களுக்கு உதவ இருக்காங்க?”

'சுருக்.' 
ஒரு நீளமான ஈட்டி தன்னுள் இறங்குவதை அமலன் உணர்ந்தான்.

அந்த மனிதர் மகனுடன் புறப்பட ஆயத்தமாவது தெரிந்தது. சிறுவன் சில்லறையை எண்ணி எடுத்துக் கொண்டிருந்தான். அமலன் வேகமாக அவன் கூடவே கணக்கெடுத்தான். மூன்று ரூபா எழுபது சதம்.

அந்த மனிதர் போய்விட்டு வருகிறேன் என்பதை ஏதோ ஒருவித குரலொலியில் சொல்லிவிட்டு, மகனின் கையைப் பிடித்தவாறே தள்ளாடிக் கொண்டு நடக்கத் துவங்கினார்.

அமலனுக்கு அப்போதைக்கு வேறு முக்கிய வேலைகளேதும் இருக்கவில்லையாதலால் அவன் அவர்களைப் பின் தொடர்ந்தான்.

இரு தடவைகள் அவனைத் திரும்பிப் பார்த்த அவர்கள், அதன் பிறகு தம் வழியில் போகத் தொடங்கினார்கள். ஒரு பேருந்தில் ஏறிய அவர்கள் ஓரிடத்தில் இறங்கி, மீண்டும் நடந்தார்கள்.

பாலத்துறை என்று தமிழில் அழைக்கப்பட்டு வரும் கிராண்ட்பாஸ் பகுதியில் ஒரு மக்கள் குடியிருப்புத் தோட்டத்துக்குள் அவர்கள் நுழைந்தார்கள்.

கிட்டத்தட்ட ஐம்பது குடும்பங்களாவது அந்தத் தோட்டத்திற்குள் இருந்திருக்கும். அங்குள்ளவை அனைத்துமே ஏழைகளின் குடியிருப்புக்கள் மட்டுமே என்றாலும் இவர்கள் இருந்த வீடுதான் அவை எல்லாவற்றிலும் பார்க்க பரிதாபமாக இருந்தது.

வறுமை என்ற கொடிய அரக்கன் என்றைக்குத்தான் சாகடிக்கப்படுவானோ?

அமலன் தங்களைத் தொடர்வதை அவர்கள் கவனித்திருந்ததைப் போல தங்கள் வீட்டினருகில் நின்று திரும்பிப் பார்த்தனர்.

அமலனுக்குள் ஒரு குற்றவுணர்வு. என்றாலும் அவர்களில் தவறில்லையே! இலேசாக முறுவலித்தவாறே அவன் அந்த வீட்டை நெருங்கினான்.

பக்கத்து வீடுகளிலிருந்த பல மனித பரிதாபங்களும் அவர்களின் வருங்கால பரிதாபங்களான கால், அரை, முக்கால் சின்னஞ்சிறு நிர்வாணங்களும் அவனை ஏதோ வேற்றுக் கிரக வாசியைப் பார்ப்பதுபோல நோக்குவது அமலனைக் கொஞ்சம் நாணப்படவும் வைத்தது.

இறங்கி விட்டாயிற்று. இனி வெளியே ஓடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

அமலன் வாசலை நெருங்கவும் “வாங்க அண்ணன் உள்ளுக்கு” என்று அந்தச் சிறுவன் அழைத்தான். தனது பெற்றோரின் அனுமதியுடன் வேண்டுகோளும் சேர்ந்தே அவனை வரவேற்க வைத்தன என்பது பட்டெனத் தெரிந்தது.

தலையைச் சற்றுக் குனிந்தவாறே அவன் வீட்டிற்குள் நுழைந்தான். வீடா அது? பொந்துகளுக்குள்ளும் மனிதன் வாழலாம் என்பதற்கு நல்ல உதாரணம்.

அந்த மனிதர் ஒரு சிறிய முக்காலியில் அமர்ந்திருந்தார். அவரது மனைவி அவரது அருகில் நின்று ஒரு புனல் மூலம் தேநீரை மெதுவாக அவருடைய தொண்டை வழியாக ஊற்றிக் கொண்டிருந்தார். அதற்காக துருத்திக் கொண்டிருந்த பிளாஸ்டிக் குழாயை அந்த அம்மணி சற்று நகர்த்திக் கொண்டிருந்தார். அதன் வலி தாளாமல் அந்த மனிதர் தடுமாறுவது தெரிந்தது. என்றாலும் அதைத்தவிர வேறு வழி இல்லைப் போல் தெரிந்தது.

மகனிடம் கடைக்குப் போய் ஏதோ வாங்கி வரச் சொன்னார் அந்த அன்னை. சென்ற சிறுவன் திரும்பி வரும்வரை அந்த அன்னையால் அமலனுடன் பேசக் கூட முடியில்லை. அந்த மனிதரின் வாய்க்குள் தேநீரை ஊற்றி முடிப்பது அவ்வளவு சிரமமாகவும் மெதுவாகவும் நடந்து கொண்டு இருந்தது.

அமலன் நின்று கொண்டே இருந்தான். இருக்க ஆசனம் இருந்தாலல்லவா அமர முடியும்?

பையன் திரும்பி வந்தான். ஒரு சிறிய பொட்டலத்தில் சொஞ்சம் அரிசியும் பருப்பும் புளியும் கறிவேப்பிலையும் உப்பும். அத்துடன் கூடவே இரண்டு சிகரெட்டுகளும்.

“சாப்பிடவே வழியில்லை. இதற்குள் இந்த ஆபத்தான சுகவீனத்தையும் பொருட்படுத்தாமல் சிகரெட் வாங்கிக் கொடுக்கிறார்களே! முட்டாள் சென்மங்கள்” என்று மனதிற்குள் திட்டிய அமலன் முதல் தடவையாகத் தன் வாயைத் திறந்தான்.

“அம்மா! இது பெரிய ஆபத்தைத் தரும் தெரியுமா? இவருடைய வியாதிக்கு முதல் எதிரி இந்த சிகரெட்தான். தெரியுமா?”

அமலனை அதிர வைத்தது வந்த பதில்.

“தெரியும் தம்பி. ஆனா இது இல்லேன்னா நாளைக்கு எங்க வீட்டிலே அடுப்பு எரியாதே!”

அடுப்பு எரியாதா? என்ன சொல்கிறார்கள் இவர்கள்?

சிறுவன்தான் முன் வந்து அவனது சந்தேகத்தைத் தீர்த்து வைத்தான்.

“அப்பா நாளைக்கு  இதை வச்சுத்தான் காசு சேர்க்கணும் அண்ணன்.”

மடமடவென்று தனக்குள் கந்தகம்  தீப்பற்றுவதுபோன்ற ஓர் அதிர்வு ஏற்படுவது தெரிந்தது. அப்படியானால் காலையில் அவர் இரண்டு ஷோக்கள் நடத்தித்தான்.......? அதற்காகத்தான்...

தெய்வமே! உனக்குக் கண்ணில்லையா என்று சிலர் கேட்கிறார்களே! அது கூடச் சரிதான் என்று நீயே நிரூபிக்கிறாயே!

தன் குடும்பம் உயிர் வாழ்வதற்காகத் தன் உயிரையே பணயம் வைக்கும் இந்தக் கொடுமையை அனுமதிக்கும் உன் மனதில் இரக்கமிருக்கிறதா? அல்லது...

ஒரு நாத்திகனைப் போல ஆத்திரப்பட்டான் அமலன். நாத்திகனும் நியாயத்துக்காகத்தானே ஆத்திரப்படுகிறான்?

ஆண்டவனையே அவன் மறுப்பதன் அடிப்படையில் அவனின் பெயரால் சமுதாயத்தை வழிபிறழ்த்திக் கொண்டோடும் பாவிகளின் கைங்கர்யங்களின் மேலெழும் அர்த்தமுள்ள ஆத்திரம்தானே இருக்கின்றது?

என்ன சொல்வது, என்ன செய்வது? என்று எதுவுமே புரியாமல் கல்லாய்ச் சமைந்து நின்ற அமலனை அந்த அன்னையின் குரல்தான் மீண்டும் சுய நிலைக்குக் கொண்டு வந்தது.

தம்பி ஒங்களுக்கு தரணும்னா வெறும் பச்சைத் தண்ணி மட்டும்தான் தர முடியும் தம்பி. அதனாலே கோவிச்சுக்காதீங்க. என்னத்துக்காக வந்தீங்க நீங்கன்னு சொல்லலியே தம்பீ?

மனம் நிறைந்த கவலையில் ஆழ்ந்து நிறைந்திருந்த நிலையிலும் தன்னை அடக்கிக் கொண்டு, மிகவும் நிதானமாக அந்தத் தாய் பேசியபோது, அதில் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாத பெருந்தன்மை மிதப்பதை அமலன் உணர்ந்தான். மனதை என்னவோ பிசைந்தெடுத்தது.

தன் சொந்தத் தாயின் மேலுள்ள பாசத்துக்கு ஒப்பான ஓர் உயர்வான பாசம் தன்னுள் எழுவதையும் தனது கண்கள் கலங்குவதையும் அவன் உணர்வுகள் அவனுக்குப் புலப்படுத்தி நின்றன.

"இல்லேம்மா! இந்த ஐயா சிகரெட் ஊதி புகை விட்டதைப் பார்த்த எனக்கு நெஞ்சு கொதிச்சிட்டுது. இந்தப் பழக்கத்துக்கு அவரை விடாதீங்கன்னு உங்க கிட்ட சொல்லத்தான் நான் வந்தேன். இதைப் பார்த்த பிறகும எனக்கு நெஞ்சே அடைக்கிற மாதிரி இருக்குது. என்ன செய்றதின்னே தெரியாமலிருக்கு.”

அமலனின் வார்த்தைகள் தளுதளுத்தன. அழுதே விட்டானவன்.

அந்த அன்னை சொன்னார்:

“ நாங்க யாருமே இல்லாத அனாதைங்க தம்பி. இவங்கதான் எல்லாம். இப்ப இவங்களுக்கும் இப்படி ஒரு பெரிய வருத்தம். வேலையும் போயிட்டுது. ஓண்ணுமே முடியாமத்தான் இப்படிச் செய்தாவது குடும்பத்துக்கு ஒதவ அவங்க முடிவெடுத்தாங்க. நானும் கெஞ்சிப் பாத்தேன். ஏலாதுன்னுட்டாங்க. இன்னும் எத்தன நாளைக்கித்தான் இவங்க கஞ்சி ஊத்தப் போறாங்களோ?”

தனது குடும்பத்தின் எதிர்காலம் பற்றிய அச்சமும் திகைப்பும் அந்த அன்னையை நிலைகுலைய வைத்திருந்தன. மளமளவென்று கண்ணீர் கொட்டியது.

அமலனுக்கு அதற்கு மேல் அங்கே நிற்கவே முடியவில்லை.
“அம்மா நான் இன்னொரு நாளைக்கி வர்றேன் சரியா?” என்று சொல்லிவிட்டு அமலன் புறப்பட்டான்.

வெறும் மாணவனாக மட்டுமே அவனிருந்தபடியால் கையில் காசு எதுவும் பெரிதாக அவனிடம் இருக்கவில்லை கொடுத்துதவுவதற்கு.

வீட்டுக்கு வந்த பின்பும் துயரம் அவனைப் பிழிந்து கொண்டிருந்தது. இருப்பே கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தானவன்.

அமலனின் நடமாட்டத்தில் ஒரு மாற்றமிருப்பதை அவனது தாயார் கவனித்து விட்டார்கள். மெதுவாக அவனை அழைத்து விசாரித்தார்கள்.

அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் முதலில் அமலன் ஓவென்று அழுது விட்டான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவன் தன் தாயிடம் தனது அன்றைய அனுபவத்தை விபரித்தான்.

அவனை அன்போடு அணைத்துக் கொண்ட அவனது அன்னை சொன்னார்கள்:
“அமலா! தர்மம் செய்ய நினைக்கிறதும் கூட தர்மம்தான். உனக்கு உதவி செய்ய எண்ணம் வந்த போதே நீ தர்மம் செய்துவிட்டதாகவே கடவுள் எடுத்துக் கொள்வார். உன்னாலே உதவ முடியாமலிருக்கிறதே என்று கவலைப்படுகிறாயே! அதுகூட ஒருவகையில் புண்ணியந்தான். நாம் கொஞ்சம் முயன்று எதாவது செய்யப் பார்ப்போம். கவலைப்படாதே! “

“அம்மா வெறும் பருப்பையும் சோற்றையும் மட்டுமேகூட வாங்க முடியாமல் அந்த மனிதர் உயிரையே பணயம் வைத்து....
அதை நினைக்கும்போதுதான் நெஞ்சையே அடைக்குதம்மா!”

“இது அந்த ஒரு குடும்பத்திலே மட்டுமில்லை அமலா... எல்லா இடங்களிலுமே பரவலாக இப்படிப் பல குடும்பங்கள் தவித்துக் கொண்டுதான் இருக்கின்றன. எல்லாருக்கும் எல்லாமும் செய்வதும் தொடர்ந்து உதவுவதும் நமக்கு முடியாத காரியம். என்றாலும் நம்மாலே ஆனதைச் செய்வதில் தவறில்லை. நீ போய் ராணி ஆன்ட்டியை நான் கூப்பிட்டேன் என்று சொல்லி அழைத்து வா. போ!”

அமலன் அம்பாகப் பறந்து ராணி மாமி வீட்டுக்கு ஓடினான். ஏதோ நடக்கப் போகிறது என்று தெரிந்த விட்டதே!

ராணி மாமி அம்மாவின் நல்ல தோழி. நல்ல குணமுள்ளவர். அவரது கணவரும் அப்படித்தான். இருவருக்கும் பிள்ளைகள் இல்லை. அதனால் அமலனிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்பவர்கள்.

அம்மாவும் ராணி மாமியும் சேர்ந்து பேசி எடுக்கும் முடிவுகளுக்கேற்ப, பக்கத்து வீட்டுக் குடும்பங்களும் ஒத்துழைத்து, அவர்களின் பகுதியை சுத்தமாக வைத்திருத்தல், தண்ணீர் தேங்காமல் தடுத்தல், ஆபத்து அவசரங்களுக்கு ஒத்துழைத்தல் போன்று சட்டம் வரையறுக்கப்படாத ஒரு சங்கமாகவே அப்பகுதியில் எல்லாரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள்.

ராணி மாமியின் கணவர் வங்கியில் வேலை பார்ப்பவர். அவரால் பல குடும்பங்களுக்கும் பல நன்மைகள் கிடைத்து வந்தன.

எல்லோரும் அமலனின் அம்மாவினதும் ராணி மாமியினதும் பேச்சுக்கு மிகவும் மரியாதை கொடுத்து வந்தனர்.

எந்த சின்னச் சின்னக் குடும்பப் பிரச்சினைகளுக்கும் சுகவீனங்களுக்கும் “பூமாக்கா! பூமாக்கா!” என்று அடிக்கடி அமலனின் வீட்டுக் கதவு தட்டப்படுவதும் புன்னகையுடன் கதவைத் திறந்து அமலனின் தாயார் ஆன உதவிகளைச் செய்வதும் வழக்கம்.

மத்தியானம் கழிந்ததும் பல வீட்டுப் பெண்களும் அமலன் வீட்டுக்கு வந்து சேர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருப்பார்கள்.  அமலனின் தாய் வீட்டை விட்டு வெளியிலே அதிகமாக நடமாடாதவர். ஆனால் எல்லாரும் அவரைத் தேடியே வந்து, தங்கள் கதைகளையெல்லாம் சொல்லி முடிவு கேட்கும் வழக்கத்தினால் அவருக்கு எல்லார் வீட்டுப் பிரச்சினைகளும் நன்றாகத் தெரியும்.

ஓர் அருமையான சின்னஞ்சிறு சமுதாயமாக அப்பகுதிக்குள் அந்தச் சிறு குடும்பங்கள் இருந்து வந்ததைப் பார்த்து அருகிலிருந்த பல வெளிப்பகுதி மக்கள் கூட மூக்கில் விரலை வைத்து வியந்ததுண்டு.

அமலனின் தாயாரின் பெயர் புஷ்பம். அதையே அவனது அப்பா பூவாக மாற்றி, “பூவம்மா” என்று அழைப்பார். அதுவே காலப் போக்கில் பூவம்மா அக்காவாகிப் பிறகு பூமாக்காவாகிவிட்டது.

அடுத்த நாள் அமலன் பள்ளியிலிருந்து திரும்பி வந்த போது, ஓர் இனிய அதிர்ச்சி அவனுக்குக்காகக் காத்திருந்தது.

வீட்டுக்குள் அவன் நுழைகையில் உள்ளறையில் பல பொட்டலங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அரிசி, பருப்பு, உப்பு, மரக்கறி, பால்மா, பால்டின், தேயிலை, காப்பித்தூள், சிறிய சட்டிகள், பானை, ஒரு சிறிய மண் அடுப்பு, சிறுகத்திகள், ஒரு குடம், சில தேநீர்க் கோப்பைகள், அத்துடன் இரு நாற்காலிகள்.

அட... ஒரு சின்ன கடையே வைத்துவிடலாம் போலிருக்கிறதே!

“அம்மா! அம்மா!”

அமலன் கத்தினான் ஆனந்தத்தினால். அவனுக்குப் புரிந்து விட்டது.
சிரித்துக் கொண்டே வந்த அமலனின் தாயார் 'ஜோக்' அடித்தார்கள்.

“வாருமய்யா! கொடை வள்ளலே! உமக்காகத்தான் எல்லா ஆன்ட்டிமாரும் சேர்ந்து, சேர்த்து வைத்திருக்கிறார்கள். தனியாகத் தோளில் சுமந்து கொண்டு கிராண்ட்பாசுக்கு நடவும்.”

“அப்போ நீங்கள் மட்டும் ஒன்றுமே கொடுக்கவில்லையா?”

அமலன் திருப்பி ஜோக் அடித்தான். அடுத்த அறையிலிருந்து ராணி ஆன்டடியின் பலத்த சிரிப்பொலியும் வந்து கலந்து கொண்டது.

அமலன் சொன்ன கதையை ராணி மாமியுடன் கலந்து பேசிய அம்மா, மறு நாள் காலையில் பக்கத்து வீடுகளிலிருந்த அனைவரையும் அழைத்து விஷயத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அதன் பிரதிபலிப்புத்தான் இப்படி வீடு நிரம்பிய பண்டங்களாக ஆகியிருந்தது.

அமலன் தனது தாயின் கழுத்தைப் பிடித்துக் கொண்டு தொங்கினான். ராணி ஆன்ட்டி தான் வந்து அவர்களின் கழுத்து சுளுக்கி விடாமல் காப்பாற்றினார்கள்.

அன்று சாயங்காலம் அப்பா வந்ததும் ராணி ஆன்ட்டியின் கணவர் வந்தார். ஒரு சின்ன வாகனம் வந்திருந்தது. அதில் அனைத்தும் ஏற்றப்பட்டன.

அமலனை முன் ஆசனத்தில்  இருத்திவிட்டு, அப்பா பின்னால் அமர்ந்தார். ஜோன் மாமா (ராணி ஆன்ட்டியின் கணவர்) தான் வாகனத்தை ஓட்டினார்.

அந்தச் சிறிய தோட்டத்துக்குள் நுழைந்த வாகனம் ஏதோ விண்வெளியில் செவ்வாய்க்கிரகத்தில் பயணிப்பதைப் போல அன்ன நடை நடந்து நகர்ந்தது. ஒரே குழிகளும் ஒழுங்கற்ற நிலப்பரப்பும்.

அந்த வீட்டின் வாசலில் வண்டி நிற்கவும் ஒரு பெரிய பட்டாளமே அதைச் சூழ்ந்து கொண்டது. கூட்டத்தை விலக்கிக் கொண்டு மூவரும் வீட்டுக் கதவருகில் வந்து நின்றனர். அமலன் மெதுவாகக் கதவைத் தட்டினான்.

“அம்மா! அம்மா!”
ஒரு மின்மினிப் பூச்சியின் ஒளியளவில் ஒரு விளக்கு நகர்ந்தது தெரிந்தது.

"யாருங்க நீங்க?"

"நான்தாம்மா. நேற்று  உங்களைப் பாத்துவிட்டுப் போனேனே!"

ஏதோ ஒரு விசித்திரமான ஒலி கேட்டது.

அந்த வீட்டின் தலைவர் தமது மனைவியை வந்து அவர்களை வரவேற்கச் சொன்னார் போலும்.

அந்தத் தாய் கதவருகில் வந்தார். அமலனைப் பார்த்ததும் பெரிய வியப்பு அவர் முகத்தில் தெரிந்தது.

ஜோன் மாமா வாகனத்துக்குத் திரும்பிச் சென்று ஒரு டார்ச் விளக்கை எடுத்து வந்தார். அப்பாடா! அந்த இடத்தில் அதுவே பெரிய வெளிச்ச வீடுதான்.

அமலனின் அப்பா வெளியில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தை வேடிக்கை பார்க்காமல் போகும்படி கேட்டுக் கொண்டார். கூட்டம் அரை குறையாகக் கலைந்து போனது.

அமலனின் அப்பாவும் ஜோன் மாமாவும் தாங்கள் வந்திருந்த நோக்கத்தை எடுத்து விளக்கினார்கள். அந்த அம்மாவின் முகம் கண்ணீரில் குளித்தது. நன்றி சொல்ல வார்த்தை தெரியாமல் தத்தளிப்பது புரிந்தது அமலனுக்கு.

அமலன்தான் ஆறுதல் சொன்னான்.

“அம்மா! இனி இவங்களை சிகரெட் குடிக்கவோ அந்த மாதிரி ஷோ நடத்திப் பிச்சை எடுக்கவோ விடாதீங்க! இவங்கள வீட்டிலேயே வச்சு கவனியுங்க. சரியா?”

ஜோன் மாமா அந்த வீட்டுச் சிறுவனை அழைத்தார். அவனையும் கூட்டிக் கொண்டு வெளியே போனார். அப்பா என்னவென்று கேட்க, அவர் கொஞ்சம் பொறுத்திருக்கும்படி கூறிவிட்டுப் புறப்பட்டார்.

கொண்டு இறக்கிய இரு நாற்காலிகளிலும் தந்தையும் மகனும் அமர்ந்து கொண்டார்கள். அப்பா அமலன் வந்து தனது அம்மாவிடம் கூறிய கதையையும் வீட்டார்களின் மாநாட்டுத் தீர்மானங்களையும் அந்தத் தாய்க்கு விபரமாக விளக்கினார்.

அந்த ஏழைத்தாயின் முகத்தில் ஒளிர்ந்த அந்த ஆழமான நன்றியுணர்வும் இதயம் ஒளிர்ந்த ஆசீரும் அமலனின் இதயத்தை ஊடுறுவிக் கொண்டு சென்றன. பேசாமல் தலையைக் குனிந்து கொண்டு இருந்தான்.

வெளியில் சென்றிருந்த ஜோன் மாமா சிறுவனுடன் திரும்பி வந்தார். அவர் கையில் ஒரு அரிக்கேன் விளக்கு. சிறுவன் கையில் ஒரு போத்தல் எண்ணெய். சில விநாடிகளில் அச் சின்னஞ்சிறிய இல்லத்திற்குள் இருளகன்று ஒளி படர்ந்தது.

அந்த வீட்டின் பெரியவரும் இப்போதூன் அமலனின் அப்பாவுக்கும் ஜோன் மாமாவுக்கும் கண்ணில் பட்டார். அதுவரை அவ்வளவு  இருட்டாக இருந்திருந்தது அந்த வீடு.

எல்லாப் பொருட்களின் விபரங்களையும் அப்பா எடுத்துச் சொன்னார். புதிய மண் அடுப்பை மூட்டி அந்த அன்னை தேநீ தயாரித்தார். எப்படியாவது இருந்து அதை அருந்திவிட்டே போகவேண்டும் என்று அவர் விடுத்த வேண்டுகோளை அப்பாவும் ஜோன் மாமாவும் மறுக்க முடியாமல் அமர்ந்திருக்க அமலன் நின்று கொண்டிருந்தான்.

“இந்த சாமான்கள் உங்களுக்கு ஒருமாதத்துக்குப் போதும். அது வரைக்கும் இவரை வெளியிலே அனுப்பவே வேண்டாம். என் மகன் இன்னும் ரெண்டு மூணு நாளிலே வருவான். ஏதாச்சும் தேவைன்னா அவன் கிட்ட சொல்லி அனுப்புங்க. பையனுக்கு உடுப்பெல்லாம் இருக்கா?”

அமலனின் அப்பா ஒரு பிரசங்கமே வைக்கத் தொடங்கிவிட்டாரே! அமலனுக்குப் புல்லரித்தது.

அந்த வீட்டை விட்டு அவர்கள் புறப்பட்டு வருமுன் அப்பாவும் ஜோன் மாமாவும் ஆளுக்கு பத்து ரூபா எடுத்து அந்தப் பெரியவர் கையில் கொடுத்தார்கள். அந்த முகம் காட்ட முடியாத உணர்ச்சிகளைக் கண்ணீரால் காட்டிக் கொண்டிருக்க, மூவரும் விடைபெற்றுக் கொண்டார்கள்.

வீட்டுக்கு வந்தபின் ஒரு பெரிய மாநாடே நடந்தது எனலாம். எல்லா மாமா மாமிகளும் கலந்து கொண்டு... ஏகப்பட்ட பேச்சு வார்த்தைகள்.

“தம்பி அமலா! நாளன்னைக்கு நீ போறப்போ, நான் ரெண்டு சாரி தாரேன் அதையும் எடுத்துட்டுப் போ! சரியா?” ராணி ஆன்ட்டிதான் சொன்னார்கள்.

“சரி.”

“நானும் தாரேன்.”

“நானும் தாரேன்.”

அம்மா குறுக்கிட்டார்கள்.

“படுக்கவே இடமில்லாத வீட்டுக்குள்ளே அளவுக்கதிகமாய் அதை இதைக் கொடுத்துட்டு, அவங்களை வெளியிலே பாதையிலேயா படுக்க வைக்கப் போறீங்க?”

ஒரு பெரிய 'படீர்' சிரிப்பால் முழு வீடுமே அதிர்ந்தது.

மாமாமார்களும் அப்பாவும் தனியாகக் கூடி ஏதோ முடிவெடுத்தார்கள் என்று அமலனுக்குப் புரிந்தது. பெரியவர்கள் மத்தியில் போய் விபரம் கேட்டால் விரட்டப்படும் ஆபத்தும் உண்டு என்பதால் அம்மாவின் குழுவுடன் அவன் இருந்து கொண்டான்.

அடுத்த நாள் அம்மாதான் அவனுக்கு அதைப் பற்றி விளக்கினார்கள்.

“கொட்டாஞ்சேனையில் உன் சித்தப்பா வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு குடும்பத்துக்கு வீட்டு வேலைக்கு ஆள் தேவையாம். வீட்டுத் தோட்டத்திலேயே பின்பக்கமாக ஒரு வீடும் இருக்காம். அங்கே அந்த அம்மாவை வேலைக்கு சேத்திட்டா, புது வீடும் கிடைக்கும். வசதியாகவும் இருக்கும். ஆபத்துக்கும் உதவி கிடைக்குமே என்றுதான் நேற்று பேசிக் கொண்டார்களாம்.”

இது பெரிய விஷயம். இதையெல்லாம் பெரியவர்கள்தான் பேச வேண்டும். நமக்குக் கஷ்டம்.

அமலன் புறப்பட்ட அன்று ஜோன் மாமாவும் கூட வந்தார். பஸ் செலவில்லாமல் ஒசியில் கார் பயணம். சன்னலைத் திறந்து வைத்தவாறே தென்றலை அனுபவித்தபடி அவன் கூடச் சென்றான்.

அந்த வீட்டுக்குள் சென்றதும் அமலன் கவனித்தான். முற்றிலும் மாறுபட்டிருந்தது வீட்டின் உட்புறம். இயன்றவரையில் அழகுபடுத்தி வைத்திருந்தார் அந்த அம்மா. அவர் பாயில் படுத்திருந்தார்.

அமலன் தான் கொண்டு வந்திருந்த சேலைகளைக் கொடுத்தான். ஜோன் மாமா ஒரு சாக்லேட்டைப் பையனிடம் கொடுத்தார். பிறகு அந்த அன்னையுடன் பேசினார். விபரமாக எல்லாவற்றையும் எடுத்துரைத்தவர் உடனே அவசரமில்லையென்றும் நன்றாக யோசித்துவிட்டு சொன்னால் போதும் என்றும் தெரிவித்தார்.

ஒரு மாதத்துக்குள் அந்த ஏழைக்குடும்பம் புதுமனைப் புகுவிழா நடத்தியது. ஆம் வீட்டு வேலைக்கு ஒத்துக் கொண்டு விட்டார்கள்.

அமலனின் அம்மாதான் பால் காய்ச்சினார்கள். அந்த ஏழை வீட்டில் ஒரே கலகலப்பு. அந்தப் பையன் புதிய பாடசாலைக்கு மாறி வந்து விட்டான். காலையில் அந்த அம்மா பெரிய வீட்டு வேலையைக் கவனித்து விட்டு, பத்தரை மணிக் கெல்லாம் தனது வீட்டுக்கு வந்து விடுவதாகவும் அவ்வப்போது தேவை ஏற்படின் அவர்கள் கூப்பிட்டால் போய் உதவிவிட்டு வந்தால் போதும் என்று சொல்லியிருப்பதாகவும் தெரிவித்தபோது எல்லாருக்குமே பெரிய சந்தோஷம்.

எல்லாரும் அமலனைக் கேலியாக “வாருமய்யா வள்ளல்” என்று அழைக்கத் தொடங்கியதில் அமலன் வெட்கத்தால் ஓடி ஒளியவே தொடங்கி விட்டான்.

மூன்று மாதங்கள் கழிந்தன. ஒருநாள் காலையில்....அந்த அன்னை வேலை செய்த வீட்டிலிருந்து ஒரு தொலைபேசி ஜோன் மாமாவுக்கு வந்தது. பெரியவருக்கு மிகவும் வருத்தமாம். அவரது காரில் அமலனும் அமலனின் அம்மாவும் ராணி ஆன்ட்டியும் போனார்கள்.

அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தபோது, அந்த மனிதர் தமக்காக வழங்கப்பட்டிருந்த கட்டிலில் துவண்டு துடித்துக் கொண்டிருந்தார்.

இவர்கள் நழையவும் அவரது கண்கள் பிரகாசிப்பதும்... அமலனுக்குள் ஏதோ செய்வதுபோல இருந்தது. மடமடவென்று அவரருகில் சென்றான். அதையே அவர் எதிர்பார்த்திருந்ததைப் போல தெரிந்தது.

அவனது கையை அவரது வலது கை பிடித்துக் கொண்டது. பலமே இல்லாத வரண்டு போன கரம். ஆனால் அதனூடாக எத்தனையோ செய்திகள் தனக்குள் நுழைந்தோடுவதை அமலனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

ஏதோ சொல்ல அவர் முயன்றார். முடியாமல் தளர்ந்தார். ஒன்று மட்டும் தெட்டத் தெளிவாக அமலனுக்குத் தெரிந்தது. அமலனை அவர் மிகுந்த பாசத்துடன் பிடித்துக் கொண்டிருந்தார்.

“நேத்திலேருந்து அவங்களுக்கு ஒடம்புக்கு நல்லாவே இல்லே. வர வர வருத்தம் கூடிடுச்சு. ஆனா அந்த தம்பி அந்த தம்பி அப்புடீன்னு சொல்லிட்டேருந்தாரு.”

அமலனின் உடம்பில் ஆயிரம் வால்ட் மின்சாரம் பாய்ந்த அதிர்ச்சி.
தன் மனதில் கசிந்த சிறிதளவு ஈரவுணர்வு ஓர் உயர்ந்த உயிரின் அபிமானத்தையும் உண்மையான பாசத்தையும் அள்ளித் தந்து கொண்டிருந்த அந்த அனுபவம் அவனது சிறிய வயது அனுபவத்துக்குப் பெரிய விஷயமாக இருந்தது.

இனந்தெரியாத ஏதேதோ உணர்ச்சிகள் அவனை ஆட்டிப் படைத்தன. தன் தாயாரைத் திரும்பிப் பார்த்தான். வள்ளுவன் குறிப்பிட்ட தாயின் நிலையிலிருந்து தன்னைப் பற்றிய திருப்தி கலந்த, ஆடம்பரமற்ற ஆனால் உண்மையான பெருமிதத்துடன் அவர்கள் பார்ப்பது தெரிந்தது. அந்தக் கண்களிலிருந்தும் கண்ணீர்!

“தம்பி! நீங்க மட்டும் இவங்களப் பாத்திருக்காம இருந்திருந்தா எங்க முழுக் குடும்பமுமே இன்னைக்கி அந்தரப்பட்டுப் போயிருக்கும். இவரு யாருக்குமே கெடுதி செய்தவரில்லை. நல்லா இருந்தப்போ இவர்கிட்ட ஒதவி பெற்றவங்களும் கூட, கஷ்டம் வரேக்க கைகழுவி விட்டதாலேதான் நல்லா வாழ்ந்த நாங்க நடுத்தெருவுக்கே வர நேர்ந்திட்டுது. நீங்க மட்டும் உதவியிருக்காவிட்டா நாங்க என்னாகி இருப்போமோ? உங்களை பெற்றவங்களை கடவுள் ஆசீர்வதிப்பாரு. நீங்க நல்லா இருக்கணும் தம்பி...”

மனம் நெகிழ்ந்த அந்த அன்னை சொல்லச் சொல்ல இயலாத நிலையிலும் அந்த மனிதர் தமது தலையை ஆட்டி ஆட்டி அதை ஆமோதிப்பது தெரிந்தது.

ராணி மாமி அமலனின் அருகில் வந்து அவனது தலையை வருடி விட்டார். அவனது விழிகளிலிருந்து வழிந்து கொண்டிருந்த நீரில் அவரது விரல்களும் நனைந்தன.

“அமலா! அவங்க சொல்லுவதும் சரிதானய்யா! கடவுள் நமக்குள் வைத்திருக்கிற நல்ல குணங்களை நாம் சரியாக கடைப்பிடித்தால் உலகம் எவ்வளவோ நல்லாயிருக்கும் என்பதைத்தான் இப்ப உன் மூலம் காட்டியிருக்கிறார். நீ இப்படியே நல்லவனா என்றைக்குமே இருந்து வரணும். நீ நல்லா இருப்பாய் ராசா!”

பெரியவர் தலை அப்போதும் அசைந்து அதை ஆமோதித்தது தெரிந்தது.

அன்று மாலை அந்த ஏழை இல்லத்தின் பெரிய விளக்கு அமைதியாக அணைந்த போனது. யாருமே அற்ற அனாதைகளாக அல்லல்பட்ட அந்தக் குடும்பத்தின் துயரத்தில் பங்கு கொள்ள அமலனின் அயல் வீட்டு மக்களனைவரும் மனமுவந்து வந்து ஒத்துழைத்தார்கள்.

அவர்கள் முன்பு வசித்த தோட்டத்து மக்களும் வர, ஒரு பெரிய மனிதரின் மறைவுக்குக் கூடிய மாபெரும் கூட்டமாகவே வெளியுலகம் அவரது இறுதிப் பயணத்தை கணிக்கக் கூடியதாக இருந்தது.

இறுதிக் கிரியைகளின் முடிவில் எல்லாரும் விடை பெற்ற போது அமலனின் தாயார் சொன்னார்கள்.

“அம்மா சுந்தரி. யாருமில்லையேன்னு கவலைப் படவேண்டாம். எப்போதும் வந்து போங்கள். மகனின் படிப்புக்கும் நாங்கள் எல்லா உதவியும் செய்வோம். இந்த வீட்டுக்காரர்களும் உங்க மேலே நல்ல அன்பாயும் இரக்கமாயும் இருக்கிறாங்க. அதனாலே கவலைப்படாமே இருங்க.”

அந்த அன்னை அமலனின் அருகில் வந்தார். அவனை அன்போடு அணைத்துக் கொண்டார்.

தம்பி என்றும் நீங்கள் என்றும் அழைப்பதை விட்டு விட்டார். அவர் சொன்னார்:

“என் ஆசை மகனே! எனக்கு இன்னிலேருந்து ரெண்டு பிள்ளைகள். நீதான் எனது மூத்த பிள்ளை. எனக்குன்னு முடிவு வந்தா நீதான் என் மூத்த மகனா முன்னுக்கு நிக்கணும். செய்வியா ஐயா?”

அமலனின் அம்மா குறுக்கிட்டார்கள்.

“அமலனுக்கு கலியாணம் நடக்கிறப்போது வருகிற மருமகளுக்கு ரெண்டு மாமிமார்கள்னு சொல்லுங்க.ஒரு மாமியாராலேயே செல இடங்களிலே பொண்ணுங்க படுகிற கஷ்டத்துக்கு அவள்  “நமக்கு ரெண்டு மாமிமார்களா? அம்மாடியோவ்!அப்போ தொலைஞ்சோம்னு கத்திக்கிட்டு வந்த மறு நாளே ஓடிட்டாலும் ஓடிடுவா!”

துயரம் கலந்திருந்த அந்த நேரத்திலும் அங்கே ஒரு கலகலப்பு படர்ந்தது. அவ்வேளையில் அந்தத் தாயினதும் தம்பியினதும் முகங்களில் நெளிந்த இலேசான புன்முறுவல் இன்று நினைத்தாலும் அப்படியே ஒரு புகைப்படம்போல தெரிவதுபோன்ற உணர்வு தன்னுள் ஏற்படுவதை அமலானல் தவிர்க்கவே முடிவதில்லை. அன்பின் அர்த்தம் இதுதானோ?

                  இரக்க மென்பதில் ஒருசிறு துளிதான்
                      இருக்குமென் றிடில் இகமதில் மலரும்
                  இரக்க மலர்களால் இருளதை உலகம்
                      அகற்றி அகமதில் ஒளிருதல் தெரியும்
                  அரக்க மனமும் இரக்கம் உணரின்
                      அன்பு சுமக்கும் கூடையாய் ஆகும்
                  துறவறம் தேடும் புண்ணியம் கூட
                      இரக்கத்தி னாலே இருமடங் காகும். 

                  திக்குத் திசையெலாம் தெரியும்துயரிருள்
                      தீரசிந்தித்து உதவில் அகன்றிடும்
                  எக்கு றைகளும் எங்கு இருப்பினம்
                      அக்குறை களைத் தீர்க்க வழிவரும்
                  யார்க்கு நோவினும் தமது நோவதாய்
                       பார்க்கும் மக்களே நிறைவ ராகிடின்
                  பார்க்கும் திசையெலாம் தெய்வம் வாழ்வதைப்
                       பார்ப்பதாகுமே! மோட்சம் இறங்குமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக