சனி, 15 செப்டம்பர், 2012

கல்லுக்குள் ஈரம் (கட்டுரை)


ரமுள்ள இதயங்கள் மிகுந்திடலே நடந்துவிடின்
இகம் பரமே ஆகிவிடும் புதுமையதும் நடந்து விடும்
பாரும் தன்னிடையில் படர்கொடிக்கு இடம் கொடுத்தே
பல்லுயிரைக் காத்திடலும் சாத்தியமாய் ஆகிவிடும்.

அந்த நதியோரத்தில் அமர்ந்து
இரசித்துக் கொண்டிருந்தார் ஒரு கவிஞர். ஆழமான அந்த நதியின் மேல்
பரப்பில் அழகாக நீந்திக் கொண்டிருந்தன வெள்ளை அன்னங்கள். அவற்றினிடையே ஆங்காங்கே தாமரை மலர்கள் மிதந்து மெருகூட்டிக் கொண்டிருந்தன.
அந்த ஆற்றோரத்தில் இருந்தது ஒரு பெரிய பாறை. அது கரையோரத்தில் பாதியும் ஆற்றில் பாதியுமாக இருந்ததால் அதிலமர்ந்து இரசிப்பது மிகவும் இரம்மியமாக இருந்தது அறிஞருக்கு. கரையோர நீரின் கலங்கலற்ற தெளிவில் சின்னஞ்சிறு மீன்கள் நுழைந்து, புகுந்து, சுதந்திரமாக ஓடியாடி நீந்திக் கொண்டிருந்தன. எனினும் அந்தப் பாறையின் அடிப்பக்கம் மண்டிக்கிடந்த சிறு கொடிகளால் அம்மீன்களுக்கு அதனடியில் நுழைந்து கொள்ள சிரமமாக இருப்பதுபோல கவிஞருக்குத் தெரிந்தது.

„இந்தக்கல் ஈரமுள்ள ஈரமில்லாத கல். உருவளவில்தான் ஈரமாகி இருக்கின்றதே தவிர, உள்ளளவிலல்ல“ என்று கவிஞர் தமக்குள் சொல்லிக் கொண்டார்.

அந்த அழகிய மீன்களின் நீச்சலழகை இரசித்துக் கொண்டிருந்தவர் கண்களுக்குத் திடீரென ஓர் அதிர்ச்சி. நீந்திக் கொண்டிருந்த சிறு மீன்களைக் காணவில்லை. அதெப்படி நடந்தது என்று அவர் யோசிப்பதற்குள் நீருக்குள் மீன் பிடிக்கக் குதித்த பறவையொன்று, அது கிடைக்காமல் வெறும் சொண்டுடன் எழுந்து, பறந்து போவதைக் கண்டார். பறவை மறைந்த மறுகணமே மீன்கள் மீண்டும் தென்பட்டன.

கவிஞருக்கு அதிர்ச்சி. என்றாலும் அவதானித்தார். ஒரு சிறு குச்சியைக் கொண்டு அவை நீந்திக்  கொண்டிருந்த நீர் பரப்பில் சற்று தட்டினார். என்ன ஆச்சர்யம்! எல்லா மீன்களுமே சட்டென்று பாறைக்கடியில் - அதைச் சுற்றிலுமிருந்த கொடிகளுக்கூடாகப் புகுந்து மறைந்து விட்டன.

கவிஞருக்குக் கண் திறந்தது. படைப்பில் பல இடங்களில் தோற்றத்துக்கும் நோக்கத்துக்குமிடையில் பலத்த வேறுபாடு இருப்பதுண்டு என்பதை உணர்ந்தார்.

அவரது எழுதுகோல் ஏட்டில் கிறுக்கித் தள்ளியது.

ஈரமே இல்லாத இதயங்கள் நம்முன் ஈரமுள் உருவாகத் தோன்றிடக் கூடும்
பாரமே வேண்டாத பொறுப்பற்ற தோற்றம் பரமனின் பிள்ளையாய் இருந்திடக் கூடும்
யாருமே தேவையே அற்றராய் இல்லை யாராலும் யாருக்கும் நன்மையே சேரின்.
பாருக்குள் மாந்தரில் இவ்வெண்ணம் இன்றேல் மானுடம் மாளுமே! ஏன் நினைப் பில்லை?

பாறைக்குள் ஈரமிருந்ததால்தான் அதனைச் சுற்றிலும் கொடிபடரல் முடிந்தது. கொடி படர்ந்து இருந்ததால்தான் மீன்களின் உயிர்கள் தப்பின. பாறை அதை மறுக்கும் நிலை இருந்திருந்தால் அந்த சின்னஞ்சிறு உயிர்களின் பாதுகாப்பு உத்தரவாதமின்றிப் போயிருக்குமே!

மனிதருக்குள்ளும் மனம் இசைந்து, பிறர் நன்மைக்காகத் தமக்குத் துயர் ஏற்படினும் பொறுத்து, அயலவர் பால் இரக்கமும் மனித அபிமானமும் கொண்ட ஈரம் சுரந்தால் தம்மை அறியாமலே புண்ணியம் தம்மைத் தேடி வரும் தகுதியுடையராய் அனைவரும் இருப்பரே!

பண்பாடும் கலாச்சாரங்களும் தீமையை ஊக்குவித்தால், அதைத் தவிர்த்து நன்மை செய்ய எண்ணம் வந்தால், மனித பேதம் என்ற மாபாதகத்தை மாந்தர் தவிர்த்திடலாமே!

நமது உள்ளம் என்னும் கல்லுக்குள் ஈரம் என்பது சுரந்தால் இந்த இகமே பரமாவதையும் நாமே இறைவன்  ஆவதையும் அவனே மனமுவந்து அளித்திடுவானே!

ஈரம் என்ற நல்ல குணம் சமுதாயத்தில் ஊன்றி;ப் பரவினால் பழிகளும் பாவங்களும் மனித பேதங்களும் மத பேதங்களும் மரியாதை பேதங்களும் நீங்கி, ஏற்புடையார்க்கு ஏற்றதை அளித்தல் என்னும் அறிவின் தெளிவு பிறப்பதும் சரியைச் சரியாய்க் கணிக்கும் தகைமை கிடைப்பதும் சத்தியமாக சாத்தியமாகிவிடுமே!

நன்றி: வெற்றிமணி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக