சனி, 15 செப்டம்பர், 2012

நம்பினார் கெடுப்பதுவே.. நாடுகளின் தீர்ப்பு

த்தியன் போல்பேசும் கபடனை நம்பின்
சத்தியம் என்றைக்கும் நொண்டியாய்ப் போகும்
சத்தியம் சார்பவர் தோல்விகட் கஞ்சின்
சத்தியம் நிச்சயம் சரிவுறல் நேரும்.

பிறர்சொத்தை உடைமையைத் தேசத்தைக் கொள்ளை
அடிப்பதைக் கொள்கையாய்க் கொண்டவன் என்றும்
பிறர்மனம் பிழையாகப் பொருள்கொள்ளும் வண்ணம்
அடிப்படை உண்மைகள் அறியாமல் செய்வான்.

அன்பென்றும் நட்பென்றும் உறவென்றும் சொல்வான்
அன்புடை உறவுக்குன் இடம்வேண்டும் என்பான்
உன்பலம் சிதையவே தன்னினம் கூட்டி
உன்னினம் என்பதே இலையென்றும் செய்வான்.

மலைப்பாம்பின் தோலது மிருதுதானென்று
கலைமானும் தோள்சாய்த்து துயிலுதல் செய்தால்
விழிக்கின்ற வேளையே இல்லாமல் போகும்
தீயவர் பெரும்பான்மை நட்பதே ஆகும்.

ஒற்றுமை என்பதன் பொருளென்ன வென்றால்
சற்றுமே பலமின்றி வாழ்தலே என்பான்
சற்றுமே தயங்காது உன்சக்தி எல்லாம்
பற்றியே அடக்குவான்நீ கண்மூடி நின்றால்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக